Sunday, August 5, 2018

நாடகப்பணியில் நான் - 21

இயக்குநர் ஸ்ரீதரின் "வெண்ணிறஆடை " திரைப்படம் மூலம் பல நடிகர்கள் அறிமுகமானார்கள்.

ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி (இதில் நிர்மலாவிற்கும், மூர்த்திக்கும் வெண்ணிறஆடை என்பது பெயருக்கு முன்னால் சேர்ந்தது பின்னாளில்) மற்றும் பிரபல நாடகநடிகர் டி எஸ் சேஷாத்திரி ஆகியோர் அறிமுகம்

இதில் சேஷாத்திரி அவர்கள் சாந்திநிகேதன் என்ற நாடகக்குழுவினை நடத்தி வந்தார்.

பிலஹரி என்னும் எழுத்தாளர் ஆனந்தவிகடனில் "நெஞ்சே நீ வாழ்க" என்று சிறுகதை ஒன்றை எழுதினார்.அச்சிறுகதையை முழுநேர நாடகமாக்கி அதற்கு "ஆலமரம்" என்று பெயரிட்டு அரங்கேற்றினார் சேஷாத்திரி.இந்நாடகம் மூலமே கோபு என்ற நடிகர் டைபிஸ்ட் கோபு என்று பிரபலம் அடைந்தவர்.

அந்நாடகம் "ஆலயம்" என்ற பெயரில் திரைப்படம் ஆயிற்று.மேடையில் சேஷாத்திரி ஏற்ற வேடத்தை திரையில் மேஜர் சுந்தரராஜன் ஏற்றார்.

நான் வேலை செய்து வந்த பேங்க் கட்டடத்திற்கு அடுத்த கட்டடத்தில்தான் சேஷாத்திரி வேலை செய்து வந்தார்.(அவர் குழுவில் நடித்து வந்த சைமன் என்னும் நடிகரும் அந்தக் கட்டிடத்தில் லிஃப்ட் மேனாக இருந்தவர்).அவரை மதிய உணவு இடைவேளையில் நான் அவ்வப்போது சந்தித்து பேசுவேன்.அக்கலைஞனுக்கு தான் ஏற்ற வேடத்தைத் தன்னால் திரையில் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் கடைசி வரை இருந்து வந்தது.இதை பலமுறை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டதுண்டு.

சேஷாத்திரி , நடிகர் ஏ வி ஏம் ராஜன், புஷ்பலதா நடிக்க பல நாடகங்களை மேடையேற்றினார்.அவர் நாடகங்களை நான் என் சபாவில் தொடர்ந்து நடத்தினேன்.

பின்னாளில் நான் சௌம்யா நாடகக்குழுவினை தொடங்கியபோது சேஷாத்திரி எனக்கு உதவினார்.அது எப்படி என பின்னர் சொல்கிறேன்.

இக்கலைஞனின் நட்பு  எனக்கு அவர் இறுதிகாலம் வரை தொடர்ந்தது

(தொடரும்)


No comments: