Friday, August 17, 2018

நாடகப்பணியில் நான் - 31

உயிருள்ள இறந்த காலங்கள் நாடகத்திற்குப் பின் அடுத்த நாடகம் பற்றி ஆலோசிக்கையில் எனக்கு ஒரு சிறுஅதிர்ச்சி ஏற்பட்டது.

தொடர்ந்து எங்கள் குழுவினருக்கு 3 வெற்றி நாடகங்களை எழுதிக் கொடுத்த பரத் அவர்களுக்கு வேறு குழுக்களுக்காக ஸ்கிரிப்ட் எழுத வேண்டிய நிலை உருவானது.தவிர்த்து பரத் அவர்களும் ராஜ சேகர் நடிக்க ஒரு புதுக் குழுவினைத் தொடங்கினார்.

இந்நிலையில் அடுத்த நாடகம் எங்களது எது? என ஆலோசித்தோம்.

எற்கனவே, சபா நடத்தும் போது "தேவை ஒரு மாப்பிள்ளை" என்ற நாடகத்தை எழுதிய அனுபவமும் எனக்கு இருந்ததால், இனி சௌம்யாவிற்காக நாமே நாடகங்களை எழுதலாம் என தீர்மானித்து எழுதுகோலை கையில் எடுத்தேன்.

"புயல் கடந்த பூமி" என்ற நாடகம் உருவானது.மணிபாரதி, ரமேஷ்,ஓமகுச்சி நரசிம்மன் ஆகியோருடன் சுமதி என்பவரும் நடித்தார் .

நாடகம் வெற்றி நாடகமாகி 100 க்கும் மேல் காட்சிகள் நடந்தது.

இந்நாடகத்திலும் மறக்கமுடியா ஒரு நிகழ்வு நடந்தது.
கலைவாணர் அரங்கில் நாடகம்.5-30வரை சுமதி வரவில்லை.தொலைபேசியபோது, தனக்கு திடீர் என உடல்நிலை சரியில்லை,ஆகவே வர இயலாது என்றிட்டார்.

என்ன செய்வது? எனத் தெரியவில்லை.

அந்த நேரத்தில் அகஸ்டோ நாடகங்களில் சுவர்ணலதா என்ற நடிகை நடித்து வந்தார்.அவரைத் தொடர்பு கொண்டு உடனே அரங்கிற்கு வரச் சொன்னோம்.

அவரும் வந்தார்.நாடகத்தின் அனைத்துக் காட்சிகளிலும் அவரை அரங்கின் வலது பக்கமே நிற்கச் சொல்லி, அவர் பேச வேண்டிய வசனங்களை prompt பண்ணினோம்.அவர் அதை வாங்கி பேசினார்.

யாருக்குமே அன்று திடீரென அவர் நடிக்க வந்தார் என அறியாது, நாடக அரங்கேற்றம் முதல் அப்பாத்திரத்தில் அவரே நடித்து வந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் அவர்.

அந்த நாட்களில் அனைவரிடமுமே தொழில் பக்தி இருந்தது.

சௌம்யாவிற்காக நான் எழுதிய முதல் நாடகமே வெற்றி நாடகமாக அமைந்த போது, 25க்கும் மேற்பட்ட நாடகங்கள் நான் மேடையேற்றப் போகிறேன் என நான் அறியவில்லை.

அடுத்த நாடகம் பற்றி அடுத்த பதிவில்..

(தொடரும்)  

No comments: