Thursday, August 9, 2018

நாடகபப்ணியில் நான் - 23

எனது அம்பத்தூர் கல்சுரல் அகடெமி சபா மூடுவிழாவிற்குப் பிறகு..சில காலம் எதிலும் ஈடுபடவில்லை.

அந்தக் காலகட்டத்தில் என் தந்தையும், தாயும் ஒருவர்பின் ஒருவராக மரணத்தைத் தழுவினர்.
தன் வாழ்நாளில் அம்பத்தூரைவிட்டு வர மறுத்தவர் என் தந்தை.

அவரது மறைவிற்குப் பின் நான் மைலாப்பூர்வாசி ஆனேன்.
என் நண்பன் கணேஷ் பிரியதரிசினி என்ற நாடகக் குழுவை தன் நண்பர் பிரசன்னாவுடன் இணைந்து நடத்தி வந்தார்.
அவர் குழுவிற்கு கணேஷ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவ்வப்போது சென்று வந்தேன்.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸில் என் நாடகவுலக ஆசான் அமரர் ராஜகோபால் கேட்டுக்கொண்டதன் பெயரில் அங்கத்தினர் ஆனேன்.

என்னுடன் வங்கியில் திரு டி வி ஸ்ரீனிவாசன் என்பவர் அதிகாரியாய் இருந்தார்.அவரும் கார்த்திக்கில் அங்கத்தினர்.

ராஜகோபாலிடம் ஒருநாள், சென்னையில் மீண்டும் ஒரு சபா ஆரம்பிக்கும் எண்ணம் இருப்பதை ஒருநாள் தெரிவித்தேன்.

அதற்கு அவர்"உனக்குப் பைத்தியமா? ஏற்கனவே 150க்கும் மேல் சபாக்கள் இருக்கிறது..நாடகக்குழுக்கள் அதற்கேற்ற அளவிற்கு இல்லை..நீயே ஒரு குழு ஆரம்பித்து நாடகங்களை அரங்கேற்றம் செய்யேன்" என்றார். 
ஒருநாள் ராஜகோபால் என்னிடம் "ஏன்டா..உனக்குத்தான் நாடக அனுபவம் இருக்கிறதே, ஒரு நாடகக் குழுவை ஆரம்பியேன்" என்றார்.

அப்போது ஸ்ரீனிவாசனும் உடன் இருந்தார்.இருவரும் சேர்ந்து "சௌம்யா தியேட்டர்ஸ்:" என்னும் நாடகக் குழு ஒன்றினை ஆரம்பிக்க முடிவெடுத்தோம்.

முதல் நாடகம் யாரேனும் பிரபல எழுத்தாளருடையதாக இருந்தால் சிறப்பாய் இருக்கும் என எண்ணினோம்.அப்போது கே கே ராமன் எங்களுக்கு அறிமுகமானார்.

சிச்சுவேஷன் காமெடி எழுதுவதில் அரசனாய் இருந்த அவர் எங்களுக்கு ஒரு ஸ்கிரிப்ட் கொடுக்க இசைந்தார்.

ஆனால் கொடுப்பதாகச் சொன்ன ஸ்கிரிப்ட் கேட்டு நாங்கள் அதிர்ந்தோம்.

ஏன்? அடுத்த பதிவில்

(தொடரும்) 

No comments: