Saturday, August 18, 2018

நாடகப்பணியில் நான் - 32

ஒரு நாடகக்குழு நாடகம் போடுவது எனில், அக்குழுவினருக்கு பல பல விதத்தில் .ஒவ்வொரு காட்சியின் போதும் சிறு சிறு சோதனைகள் வந்துக் கொண்டுதான் இருக்கும்.

ஒவ்வொரு தயாரிப்பளரும் ,இயக்குநரும், நடிகர்களும், டெக்னீஷியன்ஸ்களும் அவற்றை அவரவர் திறமைக்கு ஏற்ப சமாளித்துவிடுவார்கள்.

ஆனால்..இப்போது நான் சொல்லப்போகும் சோதனை ஒன்று, படிப்பதற்கு பெரிய சோதனையாய் தெரியும்.ஆனால் நாடகக் குழுக்களைப் பொறுத்தவரை இதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.இல்லவிடின், குழுவினை நடத்தவே தகுதியற்றவர் ஆகிவிடுவோம்.

எங்களது "புதியதோர் உலகம் செய்வோம்" நாடகம் திருப்பத்தூர் (N A DT) மேகாலயா சபாவில் நடைபெற இருந்தது.

அனைத்து செட் property, Light and Mike எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆகவே, ஒரு தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்தேன்.அனைத்துப் பொருள்களையும் பேருந்தின் மேல் ஏற்றிவிட்டு பயணித்தோம்.

ஆனால், பேருந்தோ சரியான பாதையில் போகாது சுற்றிப் போவதை உணர்ந்தேன்.ஓட்டுநரிடம் கேட்ட போது "நீங்க ஏன் கவலைப்படறீங்க! உங்களை 5 மணிக்கு கொண்டு போய் சேர்த்துவிடுகிறேன் "என்றார்.

ஆனால் 5 மணிவாக்கில் திருப்பத்தூர் செல்ல மேலும் 10 கிலோமீட்டர் இருந்தது.

அப்போதுதான் வந்தது சோதனை.

சில அதிகாரிகள் பேருந்தை நிறுத்தினர்.ஓட்டுநரிடம் பர்மிட் இருக்கா என்றனர்.ஓட்டுநர் விழித்ததுடன் அல்லாது, தான் நெல்லூரிலிருந்து வருவதாக பொய் சொன்னார்.

அந்த அதிகாரி என்னிடம் வந்து கேட்டபோது நான் உண்மையைச் சொன்னேன்.உடன் அந்த அதிகாரி பேருந்தை பறிமுதல் செய்வதாகக் கூறினார்.

அவரிடம் நான் திருப்பத்தூரில் 7 மணிக்கு நாடகம் இருப்பதாகக் கூறி..அதற்கு போகவேண்டும் என கெஞ்சினேன்.

அதனால் இரக்கப்பட்ட அதிகாரி, "உங்களை திருப்பத்தூரில் இறக்கிவிட்டு விட்டு பேருந்தை எடுத்து சென்று விடுவேன்" என்றார்.

தலைக்கு வந்தது தலைப்பாகையுட போன கதையாக நானும் இசைந்தேன்.

நாடகம் முடிந்ததும், அத்தனை செட் பொருள்களை எப்படி சென்னைக்கு எடுத்துப் போவது எனத் தெரியாது விழித்தேன்

பிறகு விடியலில் பெருந்து நிலையம் சென்று சென்னை செல்லும் பேருந்தைத் தேடிச் சென்று, அந்த ஓட்டுநர், நடத்துநரிடம் விஷயத்தைச் சொன்னேன்.அவர்கள், அரங்கத்திற்கு வந்து அவற்றை ஏற்றிச் செல்வதாகவும், பேருந்து பிராட்வே செல்ல இருப்பதால் அண்ணாமலை மன்றத்தில் அவற்றை இறக்கி விடவேண்டும் என்றும் சொன்னார்.

நல்லவேளை.எங்களுக்கும் அந்த வாரம் மன்றத்தில் நாடகம் இருந்தது வசதியாய் போய்விட்டது.

என்ன! இதைப் போய் சின்ன சோதனை என சொல்கிறேனேஎன்கிறீர்களா? ஆமாம்..இரு கோடுகள் தத்துவம்தான்.இதைவிட பெரிய சோதனைகளைப் பார்த்து விட்டதால் இது சிறிய சோதனையாகவே பட்டது

No comments: