
சரிதா,ஊர்வசி,சுகன்யா,சொர்ணமால்யா,ரேவதி,பிரகாஷ்ராஜ்,பிரசாந்த்...ஒரே சினிமா நடிகர்கள் பட்டியலாய் இருக்கிறதே என்கிறீர்களா? எல்லாம் விவாகரத்து வாங்கிய..அல்லது கேட்டு வரிசையில் நிற்போர் பட்டியல்.இவர்கள் திரை நட்சத்திரங்களாய் இருப்பதால்..நமக்குத் தெரிகிறது..ஆனால் சாமான்யர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி காத்திருக்கிறார்கள் தெரியுமா?இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர் பார்த்து நடத்திய திருமணங்கள்.
விவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும் இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்.அந்த எதிர்ப்பார்ப்பில் சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படுகிறது.நாளடைவில் அந்த ஏமாற்றமே ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.
சரியான புரிதலில்தான் வாழ்க்கை இன்பமயமாகிறது..அடுத்து விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்.இது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என எண்ண வேண்டாம்..ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம் கூடாது.நம்மை நம்பி வந்தவள் அவள்..அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது...அவள் உறவையெல்லாம் விட்டு..நம்முடன் ஏற்பட்ட உறவை பிரதானமாக்கி நம்முடன் வருகிறாள்..என்பதை எல்லாம் உணர்ந்து..அவளை நடத்த வேண்டும்..அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..பணம் மட்டுமே வாழ்வில் பிரதானமில்லை..பணம் சம்பாதிக்க வேண்டும்தான்..ஆனால் வாழ்வில் மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போதுதான் இல்லறம் நல்லறமாகிறது.
அதற்கு..நம் நேரத்தை குடும்பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க வேண்டும்..மனைவி,மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனைக் கேட்க வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் ..எப்போது பார்த்தாலும் பணம்..பணம் ..என அலைபவர்..தனது இருபது வயது மகளுக்கு திருமணம் செய்து வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்றார்..நான் அவரிடம்'அவளை நன்கு படிக்க வையுங்கள்.திருமணத்திற்கு அவசரம் இல்லை' என்றேன்..நண்பரோ பிடிவாதமாக இருந்தார்.அவர் மனைவியிடம் நான் பேசினேன்..அவர்'எனக்கும் என் மகள் படிக்க வேண்டும்..நல்ல வேலையில் சேர வேண்டும்..என்றெல்லாம் ஆசை இருக்கிறது..ஆனால் அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக்கூடாது.அவர் நினைப்பதுதான் எங்க குடும்பத்தில் நடக்கும்' என்றார்.அந்த அம்மாளின் வாயிலிருந்து சாதாரணமாக அந்த வார்த்தைகள் வந்தாலும்..அதில் தோய்ந்திருந்த வேதனையை உணர்ந்தேன்.
ஆணின் துணையின்றி பெண்ணும்..பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது அல்ல.ஆனால் அது இயற்கைக்கு முரணானது.ஒன்று மட்டும் போதும் என்பதல்ல..இயற்கை தருவது எல்லாமே இரண்டு..இரண்டுதான்.
இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,பிறப்பு-இறப்பு,சிரிப்பு-அழுகை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண்.இந்த இரண்டின் இணைப்பிலேயே ஒன்று உருவாகமுடியும்.கணவன் ,மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு மட்டுமல்ல..உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்து விடும்.
தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும்.
அமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே!
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
(நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது)
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
(நற்பண்பு பெற்றவனைக் கணவனாக பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்)