மனம் வருந்துகிறது..
தமிழன்..தமிழன்..என்று விட்டால் படம் ஹிட் ஆகிவிடும் என முருகதாஸிற்கு யார் கூறியது.
படத்தின் முதல் 20 நிமிடங்கள்..
ஒரு காலத்தில்..ஒவ்வொரு திரையரங்கிலும்...செய்தித் தொகுப்பு படம் ஆரம்பிக்கும் முன் போட வேண்டும் என்று கட்டாயம் இருந்தது.அந்த காலத்தை நினைவூட்டியது அந்த இருபது நிமிடங்கள்.குரல் கொடுத்தவரும் அதே போல ..'பீகாரில் வெள்ளம்' குரல் கொடுத்தார்.
போதிதர்மனை மன்னன் சைனாவிற்கு அனுப்பினாராம்..அங்கு அவர் அவர்களுக்கு வந்த மர்ம நோயைப் போக்கினாராம்..விரோதிகளிடமிருந்து காப்பாற்றினாராம்..பின் அந்த மக்கள் அவருக்கே விஷம் இட்டு..அவர் அதை அறிந்திருந்தும் உண்டு அங்கேயே இறந்தாராம்..இந்த இடத்தில் தமிழன் இ.வா., ஆகிறான்.
காலங்கள் கடந்து..இப்போது அதே மர்மக்காய்ச்சலை இங்கு பரப்ப..தமிழ்நாட்டிற்கு (??!!!) வில்லன் வந்தானாம்..ஆண்டவா தலை சுத்துது.ஆமாம் அருங்காட்சியகத்தில் உள்ள போதி தர்மனின் குறிப்பேடு இம் மர்மக்காய்ச்சல் பற்றி ஏதும் சொல்லவில்லையா?மர்மக்காய்ச்சலுக்கு போதியின் பச்சிலை வைத்தியம் மட்டுமே இன்று போதுமா?ஆயிரக்கணக்கான இழப்பை பச்சிலை சரி செய்து விடுமா?
ஆமாம் அரவிந்தன் (சூர்யா) ஏன் சர்க்கஸ் தொழிலாளி ஆக்கினார்.குங்க்ஃபூ ஒரு கலை என்பதால்....அந்த போதி தர்மனின் டிஎன்ஏ 80 விழுக்கட்டுக்குமேல் ஒத்துப்போகும் அரவிந்தனையும் ஒரு கலைனாக சித்தரிக்க வேண்டும் என எண்ணி..அப்படி ஆக்கிவிட்டாரோ..முருகதாஸ்..
திரைக்கதையை ..முதல் இருபது நிமிடம் கழித்து எப்படி அமைக்கலாம் என்பதில் குழப்பமே அவருக்கு ஏற்பட்டிருக்கும் என எண்ணுகிறேன்.
போதி குதிரையில் போவதால் அரவிந்தனை யானையில் போக வைத்தார் போலும்.
சூர்யா..இப்படத்திற்காக உழைத்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள்..கஜினியை விடவா? இன்னும் சொல்லப் போனால் அவருக்கு இதில் அதிக வேலையே இல்லை எனலாம்.
ஸ்ருதி ஹாசன்..பல காட்சிகளில் நன்றாகத் தெரிகிறார்..சில காட்சிகளில்..ஏன் இப்படி?
விஞ்ஞானிகள் கூட்டத்தில் தமிழில் பேசுபவரை சாடுவதை சாடுகிறார் தமிழில்..ஒருவேளை இவர் பேசும் தமிழை அவர்கள் சாடி இருப்பார்களோ என்று தோன்றுகிறது.
பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ்..படத்தி பார்ப்பதை விட வெளியில் கேட்க நன்றாய் இருக்கிறது.
ஆமாம்..அதெப்படி பார்வையாலேயே வில்லன்..போலீஸ் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லவைப்பாராம்..போலீஸ் அதிகாரிகள் மௌனமாய் இருப்பர்களாம்.இதைவிட காவல்துறையைக் கேவலமாய் வேறெந்த படத்திலும் காட்டவில்லை எனலாம்.
அளவிற்கு அதிகமாய்..பார்வையாலேயே..தெருவில் நடக்கும் ஆக்ஸிடெண்ட்கள்...மரணங்கள்...(வழக்கம்போல கதாநாயகனும்,நாயகிக்கும் சில முகக் கீறல்கள் மட்டுமே)
ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்...அல்ல அல்ல கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்.
பல இடங்களில் ஒளிப்பதிவு..ஆகா..என சொல்ல வைப்பதை பாராட்டத்தான் வேண்டும்.
கைதட்டல் வரவேண்டும் என்றே மஞ்சள், வீட்டு வாசல் கோலம்.,துரோகம்.என நுழைக்கப்பட்டுள்ள வசனங்கள்.
தமிழன் உணர்ச்சிவசப்படுபவன் தான்...அவனைப் பற்றியும்..தமிழைப் பற்றியும் கூறினால் மகிழ்ச்சியுடன் கைதட்டுவான்..
ஆனால்..வியாபார யுக்தி என்றால்..அதையும் புரிந்துக் கொள்வான்.
மொத்தத்தில்..படம் முடிந்து திரையரங்கு விட்டு வெளியே வருகையில்..தமிழன்..தமிழ் என தலை நிமிர்ந்து வருவான் என இயக்குநர் கூறியுள்ளது போல நடக்கவில்லை.வெளியே வருபவன்..முழம் முழமாய் காதில் சுற்றியுள்ள பூவை கழட்டி எறிந்து விட்டுத்தான் வருகிறான்.
டிஸ்கி-
புரஃபசர் ஆட்டோவில் ஏறியதும் மீட்டர் போடப்படுகிறது..இயக்குநர் எந்த காலத்தில் இருக்கிறார்..ஆட்டோ மீட்டர் போட்டு ஓட்டிய நாளெல்லாம் எப்போதோ ஓடிவிட்டது.
ஆமாம்..இப்படம் தெலுங்கு டப்பிங்கில் தமிழன் என்று வருமிடமெல்லாம் இந்தியன் என்று மாற்றிவிட்டாராமே..உண்மையா..
அப்படியாயின்...தமிழனுக்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு அல்ல..தமிழகத்தில் மட்டுமே சிறப்பு என்கிறாரா இயக்குநர்..
இந்த ஒரு செயலே இயக்குநரின் தமிழ் பற்றை சந்தேகிக்க வைக்கிறது.