Monday, July 7, 2014

கேபிள் நீ ஜெயிச்சுட்டேடா....



ஒரு குறிக்கோளுடன்..அயராது உழைத்தால்...வெற்றிக்கனி நமது கைகளில்..வெற்றியை தொட்டுவிட்டால்..அது தொடரும்..

அதற்கான உதாரணம் "கேபிள் சங்கர்"

அவரது லட்சியம் ஒரு திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்பது.அதற்காக நான் அறிந்த நாள் முதல் அவரிடம் இருந்த உழைப்பைக் கண்டு வியந்துள்ளேன்.

அதற்காக, அவர் எடுத்த முயற்சிகள் எவ்வளவு என்பதை..அவருடன் இருந்த, இருக்கும் நண்பர்கள் அறிவர்.

சாதாரணமாக...திரைப்படம் பற்றிய ஆனந்த விகடன் விமரிசனத்தை..திரையுலகம் இன்றி, சராசரி ரசிகன் கூட எதிர்பார்ப்பதுண்டு.

அதுபோல, ஒரு படத்தின் விமரிசனத்தை, இணையத்தில் கேபிள் சங்கர் எப்படி விமரிசித்துள்ளார் என வலைப்பதிவர் மட்டுமின்றி, திரியுலகத்தினரே எதிர்பார்த்ததும் உண்டு.ஒவ்வொரு படத்தை எடுக்க பாடுபடும் குழுவை, தானும் திரையுலகில் நுழைய விரும்பும் இவர் இப்படி தெள்ளத் தெளிவாய் விமரிசிக்கிறாரே..இதனால் பலர் விரோதம் சம்பாதிக்க நேருமே எப்படி? என நான் வியந்தது உண்டு.

அதற்கான ஒரே பதில்...இவரிடம் இருந்த நம்பிக்கை, தவறு எனில் யார் செய்திருந்தாலும் தைரியமாய் சுட்டிக்காட்டும் திறன்.

சினிமா என்ற மீடியத்தை நன்கு புரிந்து கொண்ட விக்ரமாதித்தனான அவர்..கூறிய சரியான பதில்களைக் கண்டு...கட்டவிழ்த்து தப்பித்த சினிமா வேதாளத்தை, மீண்டும் மீண்டும் தளரா உழைப்பாலும், திறமையாலும் கட்டிப்போட்டு வெற்றிகரமாக சினி ராஜ்ஜியத்தை பிடித்துள்ளார்.

ஆமாம்...இப்படிப்பட்டவர்..குறையே இல்லா படம் எடுப்பாரா? என்ற வினா தோன்றுவோர்க்கு...மாட்டார் என்று நான் அல்ல அவரே பதில் கூறக்கூடும்.

ஏனெனில்...ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது..

ஆனால்..ஒன்று மட்டும் நிச்சயம்...கண்டிப்பாக வெற்றிப் படத்தை அவர் தருவார்.அதற்கான ஆதாரங்கள்..பட டீசரும், பாடல்களும்..

கேபிள்...தளாரா உழைப்பாளியே...நீ ஜெயிச்சுட்டேடா..

(நான் அவரை ஏன் "டா" போட்டு விளிக்கிறேன் தெரியுமா? அதற்கான உரிமை எனக்குள்ளது.அதை அவரே அறிவார்)

குறுந்தொகை - 33



காதலுக்குத் தூதாக அன்னத்தை அனுப்புவது அக்கால மங்கையர் வழக்கம்.அதே போன்று தோழியரும் தூதாக செல்வர்.ஆனால் இப்பாடலில் தலைவனிடமிருந்து அவனது தலைமையை ஏற்றுக் கொண்ட பாணன் ஒருவன் வருகிறான்.அவன் சொல்வன்மையை பாராட்டுவதன் மூலம் தலைவி தன் தலைவனின் திறமையைப் பாராட்டுகிறாள்.இனி அத் தலைவியின் கூற்று..

(தலைவனுக்குத் தூதாக வந்த பாணனை ஏற்றுக் கொண்ட தலைவி, “இவன் நன்றாகப் பேசுகின்றான்; இங்கே விருந்து பெறுவான்” என்று உணர்த்தியது).

மருதம் திணை= பாடலாசிரியர் படுமத்து மோசிகீரன்


   
அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
   
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
   
இரந்தூ ணிரம்பா மேனியொடு
   
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.

                      - படுமத்து மோசிகீரன்

(தலைவனுக்குத் தூதாக வருகிறான் பாணன் ஒருவன்.அவனைப் பற்றி தலைவி தோழியிடம் உரைக்கின்றாள்}

உரை -


பெரும் தலைமையை (தன் தலைவன்) உடைய இப்பாணன் (என் தலைவனுக்கு) ஓர் இளைய மாணாக்கன்.என்னிடமே இவ்வளவு (சாதூர்யமாக) பேசுபவன் பொதுச் சபையில் எவ்வளவு பேசுவானோ? இரந்து உண்ணும் உணவினால் முற்ற வளராத மேனியனான இவன்  புதிதாக விருந்தும் பெறுவான்.

Sunday, July 6, 2014

குறுந்தொகை - 32




தலைவன் கூற்று
(தலைவியின் பிரிவை தாங்க முடியவில்லை.அவளை அடையும் பொருட்டு மடலேறினால் தலைவியின் மீது பழி உண்டாகும்.அன்றி, நான் சும்மா இருந்தாலும் அவளுக்குப் பழியாகும்.ஆகவே நீ என் குறையை அவளுக்குத் தெரிவி என தோழியினிடம் தெரிவிக்கிறான்)

 குறிஞ்சி திணை . பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லையார்.


காலையும் பகலுங் கையறு மாலையும்
   
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
   
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
   
மாவென மடலொடு மறுகிற் றோன்றித்
5
தெற்றெனத் தூற்றலும் பழியே
   
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

                             -  அள்ளூர் நன்முல்லையார்.



உரை-

காலைப்பொழுதும், உச்சிப் பொழுதும்,பிரிவதற்கான மாலைப் பொழுதும், ஊர் உறங்கும் இரவும், விடியற்காலமும் ஆகிய இச் சிறு பொழுதுகள் இடையே காமம் தோன்றில், அத்தகையோர் காமம் பொய்யானது.தலைவனிடம் பிரிவு வருமாயின்.பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து தெருவில்வந்து இவளால் இவன் இச்செயல் செய்தானென்று அனைவரும் அறியுமாறு தலைவி செய்த துயரை பலர் அறியச் செய்தலும் பழி வாங்கும் செயலாகும். அப்படியின்றி உயிருடன் இருத்தலும் பழிக்குக் காரணமாகும். (என தன்னிலைப் பற்றி தோழியிடம் கூறுகிரான் தலைவன்)

(நான் தலைவியைப் பிரிந்திருக்க ஆற்றேன். நீ என் குறையை மறுத்தாயாயின் மடலேறித் தலைவியைப் பெறலாகும். ஆயினும் அது தலைவிக்குப் பழி தருவதாதலின் அது செய்யத் துணிந்தேனல்லன்; அது செய்யாது உயிர் வைத்துக் கொண்டு வாழ்தலும் எனக்கு அரிது; ஆதலின் உயிர் நீத்தலே நன்று’ என்று தலைவன் தோழிக்கு இரக்கம் உண்டாகும்படி கூறினான்).






Friday, July 4, 2014

குறுந்தொகை - 31




ஒருத்தி ஒருவனைக் காதலிக்கிறாள்.ஆனால் வீட்டில் பெற்றோரிடம் சொல்ல பயம். ஆனால். பெற்றோர் இவளுக்கான துணையைத் தேடுகின்றனர்.ஒருவனைத் தேர்ந்துமெடுக்கின்றனர்.இனியும் வாளாயிருந்தால் பயனில்லை என , அவள் தான் ஒருவனை விரும்புவதைத் தெரிவிக்கிறாள்.

இப்படி நடப்பது...இன்றைய காலத்தில் மட்டுமல்ல, சங்க காலத்திலும் நடந்துள்ளது கீழ் கண்ட பாடல் மூலம் அறியமுடிகிறது.

( தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் ஆடும் அணங்கு. உடன் ஆடுபவனுடன் நட்பு கொண்டிருந்தேன்.இப்போது அவனுடன் ஆன; என்னோடு நட்பு பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் . அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).

மருதம் திணை-  பாடலாசிரியர்

இனி பாடல் -
 
மள்ளர் குழீஇய விழவி னானும்
 
மகளிர் தழீஇய துணங்கை யானும்
 
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
 
யானுமோ ராடுகள மகளே யென்கைக்

கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
 
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

                              -ஆதிமந்தியார்

உரை-

வீரர் கூடியுள்ள விழாவிலும், மகளிர் தங்களுக்குள் தழுவி ஆடும் கூத்து, ஆகிய எவ்விடத்தும் மாட்சிமை பொருந்திய தகுதியை உடைய அவனை நான் (இப்போது பிரிந்துள்ளேன்) காணவில்லை...நான் ஒரு ஆடுகளத்தில் ஆடும் பெண்ணாயிருந்தும்.என் கையில் உள்ள சங்கை அறுத்து செய்யும் வளையல்களை நெகிழச்செய்த  பெருமை பொருந்திய என் தலைவனும் ஆடுகளத்தில் உள்ள ஒருவனே

(இப்பாடலில் துணங்கை என்பது ஒருவகைக் கூத்து.மகளிர்
 ஆடும் இதில் முதற்கை கொடுப்பது ஆண்கள்.இப்பாடலில் ஆடும்மகளான தலைவிக்கு முதற்கை கொடுத்த தலைவனும் ஆடும் மகன் என்பது மறைந்து நிற்கும் செய்தி)

(இப்படிப்பட்ட தலைவன் இருப்பதால்..மணத்திற்குரிய பரிசத்துடன் வேறு ஒருவர்  அறன் ஆகாது என தோழியிடம் சொல்கிறாள்)

Thursday, July 3, 2014

குறுந்தொகை - 30



நாம் காணும் கனவுகள்..சில வேளைகளில் உண்மையைப் போல இருப்பதுண்டு.கண்டது கனவா..அல்லது உண்மை நிகழ்வா என ஆச்சரியப் பட்டதுண்டு.அது போன்ற ஒரு நிகழ்வு குறுந்தொகையில் தலைவிக்கு உண்டானது.

தலைவன் தலையைப் பிரிந்து பொருளீட்ட வெளியே சென்றுள்ளான்.அவனது பிரிவால்...வாடும் தலைவி..அவன் தன்னுடன் இருப்பதை போல கனவு காண்கிறாள்.

தோழி தலைவியின் ஆற்றாமைக்கான காரணம் கேட்க தலைவிஉரைக்கிறாள்.


இனி பாடல்

பாலை திணை - பாடலாசிரியர் கச்சிப் பேட்டு நன்னாகையார்.
   
கேட்டிசின் வாழி தோழி யல்கற்
   
பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய
   
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
   
தமளி தைவந் தனனே குவளை

வண்டுபடு மலரிற் சா அய்த்
   
தமியேன் மன்ற வளியேன் யானே,

                     - கச்சிப் பேட்டு நன்னாகையார்.

உரை -
 தோழி (என் ஆற்றாமை காரணத்தை) கேட்பாயாக! பொய் கூறுவதில் வன்மை உடைய தலைவன், என் உடலை உண்மையாக அணைத்தாற்போல பொய்யாகிய கனவு உண்டாக..உண்மை யென எழுந்து..தலைவன் உள்ளான் என படுக்கையைத் தடவினேன்.வண்டுகள் அமர்ந்து (தேனருந்தி சென்ற குவளை) சென்ற குவளை மலரைப் போல நான் உண்மையாகவே மெலிந்து தனித்தவளாயினேன் .

வண்டுகள் அமர்ந்து சென்ற குவளை மலரைப் போல....உவமை எப்படி?

   


Wednesday, July 2, 2014

குறுந்தொகை -29



அவன் காதலிக்கிறான். தன் காதலியை வழக்கம் போல இரவில் சந்திக்க விரும்புவதாகக் கூறி..அச் செய்தியை அவளது சிநேகிதி மூலம் காதலியிடம் சொல்லச் சொல்கிறான்.அவளோ, அதெல்லாம் முடியாது என மறுக்கிறாள்.இவனோ..நம் ஆசையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே...என் காதலுக்கு ஆதரவானவர் யாரும் இல்லையே என மன வேதனைப்படுகிறான்.இதையே சொல்கிறது கீழே சொல்லியுள்ள பாடல்..

காதலியை இரவு சந்திக்க விரும்புவதாக வரச்சொல்லச் சொல்லி தோழியிடம் சொல்கிறான்.அவளோ மறுக்கிறாள்.அதனால்...தலைவன், தன் நெஞ்சிற்கே ஆறுதல் சொல்லிக் கொள்கிறானாம்.

 குறிஞ்சிதிணை  - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-

 
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
 
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
 
உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
 
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
 
மகவுடை மந்தி போல
 
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

                       - ஔவையார்

உரை -

தன் விருப்பப்படி இரவில் வராது மறுப்பது, பெய்யும் மழையின் நீரை ஏற்றுக் கொண்ட சுடப்படாத பசு மண்ணாலாகிய பாண்டத்தை போல. உள்ளத்தால் பொறுக்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தாமல் நின்று, பெருதற்கரியதை பெற விரும்புகிறாய்.உயர்ந்த மரக்கிளையில் பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல உன் கருத்தை ஏற்று,உன் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாரைப் பெறின் உன் போராட்டமும் நன்றாயும், பெருமையாயும் அமையும்.
 (என தன் நெஞ்சிற்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறான்)

(தலைவியை இரவில் காண்பது இனி அரிது என்பதால் மனம் வருந்தி இப்பாடல்)  

பசு மண்ணாலாகிய பாண்டத்தைப் போல  ,பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல....உவமைகளைப் பாருங்கள்..

Tuesday, July 1, 2014

.குறுந்தொகை - 28



நமக்கு ஒரு கவலை எனில் அதை பங்கு பெற யாரும் வரமாட்டார்.ஆனால், நம் மனமோ...ஆறுதலை எதிர்ப்பார்க்கும்.இன்னும் சிலர் உள்ளனர்...நாம் வேதனைப் பட்டாலும் பரவாயில்லை, நமக்கு வேண்டாதவன் இரட்டிப்பு வேதனைப் பட வேண்டும் என நினைப்பர்.

அதாவது எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என நினைப்பர்

தனக்குத் தூக்கம் வராமல் இருந்தால், பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப் பார்த்து, "எப்படி தூங்குகிறான் பார்" என பொறாமைப் படுவார்கள்.

இந்த பாடலின் தலைவியும், கிட்டத்தட்ட அதே நிலையில் இருக்கிறாள்.தலைவனைப் பிரிந்து, அவன் வராததை எண்ணி தூக்கம் இன்றி இருக்கிறாள். ஆனால், ஊர் உறங்குகிறதே என கோபப்படுகிறாளாம்.

இனி பாடல்-

பாலை திணை -  பாடலாசிரியர் ஔவையார்


முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
 
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
 
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
 
அலமர லசைவளி யலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.

                       -ஔவையார்

உரை-

சுழன்று அசைந்து வரும் தென்றல் காற்று வருத்தாது நிற்க,, என் தலைவனை நான் பிரிந்து வருந்துவதை உணராமல், தூங்கும் இந்த் ஊரில் உள்ளோரை நான்(சுவர் முதலியவற்றில்) முட்டுவேனா?(ஏதேனும் கருவி கொண்டு) தாக்குவேனா? ஓலமிட்டு கூப்பிடுவேனா? என்ன செய்வேன் என தெரியவில்லையே!

Monday, June 30, 2014

குறுந்தொகை - 27

ஒரு அழகிய பெண்..தன் அழகை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என மேலும் செயற்கையாகவும் அழகு செய்து கொள்வாள்.அதுவும் கணவனின் பாராட்டை..அவள் அதிகம் எதிர்பார்ப்பாள்.அப்படிப்பட்ட ஒரு பெண்..கணவனை சிறிது காலம் பிரிய நேரிடுகிறது.அந்நிலையில்..தன் அழகு கணவன் இல்லாமல் வீணாகிறது என வருந்துவாளாம்.இப்பாடல் அதையேக் குறிக்கின்றது
 

(தலைவன் பிரிவினை தலைவியால் தாங்கமுடியாது என கவலை அடைந்த தோழியிடம் தன் அழகு வீணாவதை தலைவி உரைப்பது)

பாலை திணை - பாடலாசிரியர் வெள்ளிவீதியார்

பாடல்=
 
கன்று முண்ணாது கலத்தினும் படாது
   
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
   
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
   
பசலை யுணீஇயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமைக் கவினே.

                                -வெள்ளிவீதியார்


உரை-

நல்ல பசுவின் இனிமையான பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல்,கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போல,எனது மாந்தளிர் போன்ற பேரழகு எனக்கு பயந்து நிற்பதாகாமலும், என் தலைவனுக்கு இன்பம் தராமலும் பசலை படர்ந்து ரசிக்கப்படாமல் இருக்கும்.


(தலைவன் பிரிந்து சென்றதால் தலைவியின் மாந்தளிர் உடலழகு பசலைப் படர்ந்து நிறம் இழந்தது)

பசுவின் பால் கன்றும் உண்ணாது..கறக்கும் பாத்திரத்திலும் விழாது..தரையில் வீணாவது போல அழகு யாருக்கும் பயனின்றி வீணாகிறதாம்.எப்படிப்பட்ட ஒரு உவமை

Sunday, June 29, 2014

குறுந்தொகை -26



தோழி கூற்று
(தலைவி பித்து பிடித்தது போல இருக்கிறாள்.அதற்குக் காரணம் தெய்வக்குற்றம் என கட்டுவிச்சி(குறி சொல்பவள்) சொன்னாலும், உண்மைக் காரணம் அவளது காதல்.அவளது தலைவனோடு ந்ட்புடன் இருந்தால்..இதற்கு அந்த இடத்தில் இருந்த ஆண்குரங்கு சாட்சி )

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெள்ளி வீதியார்.

இனி பாடல் -
 
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
 
மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை
 
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
 
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
 
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
 
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
 
கடுவனு மறியுமக் கொடியோ னையே.

                     -வெள்ளி வீதியார்.

உரை-

அரும்புகள் இல்லாமல் மலரும் கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது, அதன் மலரைப் பறிக்கும் மகளிரைப் போல தோன்றுவதற்கு இடமான நாட்டை உடைய தலைவன், இவளுக்கு தகுதியானவன் அல்ல என்பதுபோல கட்டுவிச்சி(குறி சொல்பவள்) தீது கூறினும், தேமாவின் கனியை உண்ணும் . முள்ளைப் போன்ற கூறிய பற்களையும், சிவந்த வாயையும் உடைய, மலைகளில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையான ஆண் குரங்கும் அந்த கொடியவனான தலைவனை அறியும்.அது தனது கண்ணால் கண்டதை பொய் என சொல்லாது.(என்கிறாள் தோழி)
(ஆகவே தலைவியின் நோய்க்குக் காரணம் ஒரு தலைவனோடு செய்த நட்பே ஆகும்.

இப்பாடலில் தலைவியின் நோய்க்குக் காரணம் ஒன்றிருக்க , அது அறியாமல் தாய் குறி கேட்டு, குறி சொல்பவளும் இது தெய்வக்குற்றம் என சொல்வது...இன்றும் பல குடும்பங்களிடேயே காணப்படும், ஜோதிடம் பார்த்தல், குறி சொல்லுதல் ஆகியவற்றைக் காண்கையில்...மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை மாறவில்லை என்பது ஆச்சரியத்தைக் குறிக்கிறது

Saturday, June 28, 2014

குறுந்தொகை -25




(தலைவன் தலைவியை மணம்செய்து கொள்ளாமல் இருக்கிறான்.இதனால் வருந்திய தலைவி தோழியிடம் முறையிடுவது)


இப்போதெல்லாம் லிவிங்  டுகெதெர் என்று திருமணத்திற்கு முன் ஒன்றாக வசிக்கும் கலாச்சாரம் சிறிது சிறிதாக பரவி வருகிறது.அப்படி ஒன்றாக வாழ்ந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்தால்...பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்.ஒன்றாக வாழ்ந்ததற்கு சான்றோர் யாருக்கும் தெரியவும் தெரியாது எனில் நிலைமை இன்னும் மோசம்.இதேநிலைதான் இன்றைய குறுந்தொகை பாடலில் காண்பது.

தலைவி கூற்று -  குறிஞ்சி திணை பாடலாசிரியர் கபிலர்

பாடல் -
 
யாரு மில்லைத் தானே கள்வன்
 
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
 
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
 
ஒழுகுநீ ராரல் பார்க்கும்

குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.

                              -கபிலர்.

    உரை -
தலைவன் என்னை களவில் மணந்த போது பெரியவர்கள்(சாட்சிகள்) யாரும் இல்லை. ஒடும் நீரில் உண்ண ஆரல் மீனின் வரவை எதிர்நோக்கி தினையின் அடியைப் போன்ற சிறு பசும்காலை உடைய நாரையைத்தவிர,..அப்போது அவன் கூறிய உறுதிமொழி(மணப்பேன் என்னும் உறுதிமொழி)யிலிருந்து தப்பப்பார்த்தால் என்னால் என்ன செய்யமுடியும்? ’

Friday, June 27, 2014

குறுந்தொகை - 24



மனைவியை விட்டு கணவன் பிரிந்து செல்கிறான்.மீண்டும் அவன் சொன்ன காலத்தில் திரும்பி வரவில்லை.இனி வருவானா? மாட்டானா? எனத் தெரியாது.உலகம் அம்
மனைவி மீது பழி போடுகிறது.அவளை வாழாவெட்டி என்கிறது.எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும்...ஆணாதிக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை எல்லாயிடத்தும்.இதே போன்ற நிகழ்ச்சிகள் சங்க காலத்திலிருந்து நடந்து வந்துள்ளதை இப்பாடல் தெரிவிக்கிறது.

 முல்லை திணை -  பாடலாசிரியர்- பரணர்

பாடல்-    

கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
   
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
   
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்

குழையக் கொடியோர் நாவே
   
காதல ரகலக் கல்லென் றவ்வே.

                            -  பரணர்.

உரை-


கரிய தாளை உடைய வேப்பமரத்தின் பூவின் வருகையானது(இளவேனில் காலம்)என் தலைவன் வராமல் சென்றுவிடுமோ!கொடிய வம்பு பேசும் அயலாரின் நாக்குகள், ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெள்ளிய கிளைகளை உடைய அத்தி மரத்தின் உண்ண விரும்பும் பழத்தின் மீது ஏழு நண்டுகளால் மிதிபட்டு குழைந்தது போல நான் வருந்தும் படி பேசுகின்றனவே!
 .
(பழிபேசும் ஊரார் அன்றிலிருந்து, இன்றுவரை அடங்கவில்லை)

Thursday, June 26, 2014

குறுந்தொகை - 23



நம் மக்கள் ஜோசியத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள்.ஜாதகத்தை எடுத்துக் கொண்டு..எனக்கு எப்போது வேலை கிடைக்கும், வெளிநாடு செல்லும் சான்ஸ் இருக்கிறதா, திருமணம் எப்போது...என எப்போது இறப்பு என அறிவது வரை பல வினாக்களுக்கு விடையை ஜோதிடர் மூலம் அறிய விரும்புவர்.தவிர்த்து, கிளி ஜோசியம், கோல் வைத்துக் கொண்டு பாடும் குறி சொல்லுபவர் ஜோசியம் என பலவகை உண்டு.அதற்கு பரிகாரங்களும் சொல்வர்.

வெளிநாட்டிலும், குறிப்பாக உலக கால்பந்து போட்டியில் எந்த அணி வெல்லும் என ஆமை ஜோசியம் கூட நாம் அறி
வோம்.

இது சங்ககாலத்திலும் உண்டு.

தலைவனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடால்..தலைவி பிரம்மை பிடித்தது போல இருக்கிறாளாம்.அவள் நிலை எப்போது சரியாகும் என நெற்குறி பார்ப்பவள் மூலம் பார்க்கிறார்களாம்.
இனி செய்யுள் -

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஔவையார்


அகவன் மகளே யகவன் மகளே
 
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
 
அகவன் மகளே பாடுக பாட்டே
 
இன்னும் பாடுக பாட்டே, அவர்

நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

                   -ஒளவையார்.

உரை-

தெய்வங்களை அழைத்துப் பாடும் குறி சொல்லும் மகளே , சங்கு மணியினால் ஆன கோவையைப் போன்ற வெண்மையாகிய கூந்தலை உடைய  அகவல் மகளே!பாட்டுகளைப் பாடுவாயாக.(நீ பாடிய) தலைவனது நெடிய குன்றத்தை புகழ்ந்துபாடிய பாட்டை மீண்டும் பாடுவாயாக (என தோழி உரைக்கிறாள்)


(குறிப்பு-  (அகவல் மகள் - கட்டுவிச்சி -முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வங்களைப் பாடி எண்ணிப் பார்த்துக் காணும் குறி).இவளைப் பிற்காலத்தார் குறத்தி என்று கூறுவர்




தலைவனால் வேறுபாடு என்பதால்..அவன் சார்ந்த மலை பற்றி பாடச் சொல்வதாகக் கொள்ளலாம்)

Wednesday, June 25, 2014

குறுந்தொகை - 22



குடும்ப பட்ஜெட் பற்றாக்குறை. செலவை ஈடுகட்ட வெளியூரிலோ, வெளிநாட்டிலோ வேலை கிடைக்கிறது.மனைவியை விட்டு அந்த ஊருக்குச் செல்ல வேண்டும்.கணவன், மனைவி இருவரும் இதுநாள் வரை ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்ததில்லை.தன்னையும் அவர் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என மனைவி நினைக்கிறாள்.இது, இன்று பல இல்லங்களில் நடந்து வரும் நிகழ்ச்சி.இதுபோல அந்த காலத்திலும் நடந்துள்ளதை இப்பாடல் நூலம் தெரியவருகிறது.

தலைவன் தன்னை பிரிந்து செல்லப்போகிறான் என்பதை முன்னரே உணர்ந்துவிட்டாள் தலைவி..அதனால் கண்ணீர் சிந்துகிறாள்.அதைக்கண்ட தோழி, வருந்தாதே..அவர் உன்னையும் உடன் அழைத்துச் செல்வார் என ஆறுதல் கூறுகிறாள்

இனி பாடல்-

 பாலைத் திணை -  பாடலாசிரியர்- சேரமானெந்தை


 
நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய
   
யாரோ பிரிகிற் பவரே சாரற்
   
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
   
வேனி லஞ்சினை கமழும்

தேமூ ரொண்ணுத னின்னொடுஞ் செலவே.

                              -  சேரமானெந்தை



இனி உரை -

மலைப்பிரதேசமானது ,வேனிற் காலத்தில் தனக்கு அழகாக இருக்கும் அழகிய வெண் கடப்ப மலரை உடைய அழகிய மரத்தின் கிளைகளிடத்தில் பரப்புகின்ற மணத்தை விளக்குவது போன்ற நெற்றியை உடைய  (தலைவன் பிரிவதால்)
துயரத்தால் கண்ணீர் விடும் கண்ணை உடைய உன்னை தனியாகத் தங்க பிரிந்து செல்லும் ஆற்றல் உடையவர் யார்?
(தலைவன் உன்னையும் அழைத்தேச் செல்வான்.)

Tuesday, June 24, 2014

குறுந்தொகை - 21



சாதாரணமாக பெண்கள் ஒருவனை எளிதில் நம்பமாட்டார்கள்.ஆனால்..நம்பிவிட்டால், அவனே "நான் செய்தது தப்பு "என்று சொன்னாலும் அதை நம்பமாட்டார்கள்.அப்படிப்பட்ட மென்மையான மனம் கொண்டவர்கள். இந்த குணத்தில் சங்ககால பெண்கள் முதல்..இன்றைய தலைமுறை பெண்கள் வரை ஒன்றுதான்.

அப்படி தன் தலைவனை நம்பிய சங்ககால பெண் பற்றிய பாடல் இது.கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லை.ஆனால் அதை நம்ப மறுக்கிறது பெண் உள்ளம்.அதனால் இயற்கையே கார்காலத்தை மாற்றிவிட்டது என உரைக்கிறாள்.

இனி பாடல்...

முல்லை திணை - பாடலாசிரியர் ஓதலாந்தையார்

வண்டு படத் ததைந்த, கொடி இணர் இடை இடுபு,
பொன் செய், புனை இழை, கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், ”கார்” எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே

                         - ஓதலாந்தையார்


வண்டு வந்து அமரும் பூங்கொத்தின் இடையிடையே கட்டிய பொன் இழையால் ஆன தலை அணியை சேர்த்து தலையில் சூடியிருக்கும் பெண் , கார்காலம் வந்தும், அதற்கான கொன்றைப் பூ பூத்து குலுங்கி இருந்தும், கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லையெனில், அவர் பொய் சொல்லமாட்டார்.. இன்னும் கார் காலம் வரவில்லை இது இயற்கையின் மாற்றம் (என்கிறாள்)

(அந்த அளவு இயற்கையின் பருவ காலங்களைவிட தலைவன் வார்த்தைகளை நம்புகிறாள்)

Monday, June 23, 2014

குறுந்தொகை - 20



மனைவியை விட்டு பிரிந்து வெளியூரில் குடும்ப பொருளாதாரத்திற்காக வேலை செய்யும் கணவர்மார்கள் இன்று ஏராளம். தனியாக என்னை விட்டு செல்ல வேண்டாம்..நானும் உங்களுடன் தான் இருப்பேன் என் அடம் பிடிக்கும் மனைவியரும் உண்டு.
இது போன்ற பிரிவுகள் இப்போது மட்டுமல்ல சங்க காலத்திலும் உண்டு.அப்படி பிரிந்து சென்ற கணவன் குறித்து தலைவி சொல்வது போல அமைந்த பாடல் இது.

இனி பாடல்-

பாலை திணை- ஆசிரியர் கோப்பெருஞ் சோழன்


அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,

பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,

உரவோர் உரவோர் ஆக!

மடவம் ஆக, மடந்தை, நாமே!

              -கோப்பெருஞ் சோழன்

உரை-

அருளும் அன்பும் ஒதுக்கி, த்னது துணையைவிட்டு, பொருள் ஈட்டும் முயற்சியில் பிரிந்து சென்றுள்ள தலைவன், அறிவுடையவனாயின், அதுபோல பிரிபவர் அறிவுடையவராகவே இருக்கட்டும்..ஆனால்..அப்பிரிவை துறக்க முடியாத நாம்(பெண்கள்) அறிவில்லாதவராகவே இருந்துவிட்டு போவோம் தோழியே!

(மனைவியை விட்டு பிரிந்து செல்வது அறிவுடையார் செயல் அல்ல)

Sunday, June 22, 2014

குறுந்தொகை - 19



மருதம் திணை - பாடலாசிரியர் பரணர்

(தலைவன் தன் நெஞ்சிற்குரைத்தது-
விலைமகளுடன் வாழ்ந்தவன் இல்லம் மீண்டான். தலைவி ஊடினாள். தலைவன் ஏதேதோ சொல்லி உணர்த்திப் பார்த்தான். அவளது ஊடல் தணிந்தபாடில்லை. இவள் என்னை விட்டு பிரிந்து விடுவாளோ? என வருந்துகிறான்)

பாடல்-

எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்

பூவில் வறுந்தலை போலப் புல்லென்

றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்

தெல்லுறு மௌவ னாறும்

பல்லிருங்கூந்தல் யாரளோ நமக்கே.

                        பரணர்



(எவ்வி என்பவன் பாணர்களைப் பேணும் சிறந்த வள்ளல். அவன் இறந்தபோது பாணர் மகளிர் பூச்சூடாமல் இருந்து தம் இரங்கலைத் தெரிவித்தனர். மனைவியை அடையமுடியாத கணவன் நெஞ்சம் எவ்வியை இழந்த பாணர் நெஞ்சம் போலக் கலங்கிற்றாம்)


செய்யுள் உரை -


பாணர்களைப் பேணும் எவ்வியை இழந்ததும் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்க பூச்சூட மறுத்த பெண்டிரைப் போல,என் நெஞ்சே!மனை எனும்மரத்தின் மீது படர்ந்த ஒளியை உடைய முல்லை மலர்கள் மணம் வீசுவதற்கிடமான கரிய கூந்தலை உடைய இவள், இனி எனக்கு உறவில்லாமல் போய் விடுவாளோ..(என தலைவன் வருந்துகிறான்)

Saturday, June 21, 2014

குறுந்தொகை - 18



குறிஞ்சித்திணை - பாடலாசிரியர் கபிலர்

(இரவுப் பொழுதில் தலைவனும் தலைவியும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள இடத்தில். தலைவியைச் சந்தித்துப் பிரியும் தலைவனிடம்,  தலைவியின் வருத்த நிலையைச் சொல்லி அவளை விரைந்து மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றாள் தோழி)

வேரல் வேலி வேர்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி
யார்அஃது அறிந்திசினோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!

                         - கபிலர்



செய்யுள் உரை-

மூங்கில்களை வேலியாகக் கொண்ட,   வேரில் குலைகளையுடைய பலா மரங்கள் நிறைந்திருக்கும் மலைப்பக்கத்து நாடனே!  மலைச் சாரலில் வளரும் மரத்தின் சிறிய கொம்பில், பெரிய பழம் தொங்குவது போல,  இவளது உயிர் ஆகிய கொம்பு வலிமையற்றுச் சிறியதாய் உள்ளது;  ஆனால் இவளின் காமநோய் என்னும் பழமோ மிகவும் பெரியதாய் உள்ளது. இவ்வுண்மையை உன்னையன்றி வேறு யார் அறிவார்?


சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவது போல..தலைவியின் உயிர்  சிறிய கொம்பாம்(வலிமையில்லாததாம்).பெரிய பழம் போல காமநோய் உள்ளதாம்.உவமைகளை ரசிப்போமாக

Friday, June 20, 2014

குறுந்தொகை - 17



பாலைத் திணை - பாடலாசிரியர் பேரெயி முறுவலார்

மாவென மடலு மூர்ப பூவெனக்
   
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
   
மறுகி னார்க்கவும் படுப
   
பிறிது மாகுப காமங் காழ்க் கொளினே.

                        - பெரெயி முறுவலார்


(தலைவியிடம் சொல்லி அழைத்துவா என்று அவன் தோழியிடம் கூறும்போது தோழி மறுக்காமல் இருக்க இச் செய்தியைச் சொல்கிறான். அழைத்துவராவிட்டால் மடலேறுதல் ஊர்வழக்கம் என்று சொல்லி அச்சுறுத்துகிறான்.)

உரை-
காமநோயானது முத்ர்வுற்றால், பனைமடலையும் ,குதிரை எனக் கொண்டு ஆடவர் அதில் ஏறுவர்.குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும் அடையாள மாலையைப் போல தலையில் அணிந்து கொள்வர்.வீதியில் இதைக் காணும் பெரியோர் அவனுக்கு அவளை மணம் முடிக்குமாறு அவள் பெற்றோரிடம் கூறுவர்.

(மடலேறுதல்; மடல் என்பது இங்குப் பனைமட்டையைக் குறிக்கும். பனைமட்டைகள் கறுக்குகள் கொண்டவை. பல்லுப் பலாக இருக்கும் அந்தக் கறுக்குகள் உடம்பில் படும்போது கிழித்து இரத்தம் வரும். இந்தப் பனைமட்டைகளால் குதிரை உருவம் செய்வர். அதில் தலைவன் ஏறிக்கொள்வான். தோழர் குதிரையை இழுத்துக்கண்டு தலைவி வாழும் ஊரில் தெருத்தெருவாகச் செல்வர். தலைவன் தான் விரும்பும் தலைவியின் பெயர் எழுதிய ஓவியம் ஒன்றை வைத்திருப்பான். அதனைப் பார்த்த ஊர்மக்கள் தலைவன் தலைவி உறவைப் பற்றிப் பேசுவர். அவனுக்கு அவளை மணம் முடிக்குமாறு அவளது பெற்றோரிடம் கூறுவர்.

Thursday, June 19, 2014

குறுந்தொகை -16



பாலைத் திணை - பாடலாசிரியர் பெருங்கடுங்கோ

தோழி கூற்று
(பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்’’என்று தோழி கூறி ஆறுதல் அளித்தது)

செய்யுள்-

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்
   
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
   
உகிர் நுதி புரட்டு மோசை போலச்
   
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்

அங்காற் கள்ளியங் காடிறந் தோரே.

                        பெருங்கடுங்கோ

 உரை -

கள்வர்கள் .இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை, நகனியிலே புரட்டும் ஒலியைப்போல், செம்மையான கால்களை உடைய ஆண் பல்லியானது, தன் துணையாகிய பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய கள்ளிகளை உடைய பாலையைக் கடந்து பொருள் ஈட்ட சென்ற தலைவன் உன்னை நினைக்காமல் இருப்பாரா? திரும்பி வருவார் (என ஆறுதல் சொல்கிறாள் தோழி)_

(பொருள் ஈட்ட தலைவன் சென்றுள்ளான்..அவளில்லா நிலையில் தலைவன் அவளை நினைப்பாரோ..மாட்டாரோ என கலையுற்றவளிடம்...ஆண் பல்லி பெண்பல்லியை அழைக்கும் ஒலி கேட்டு உன்னை நினைத்து உடன் திரும்பி வருவார் (என்கிறாள் தோழி)
.

Wednesday, June 18, 2014

குறுந்தொகை - 15



பாலை திணை  - பாடியவர் ஔவையார்

பாடல் -

பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

                          -ஔவையார்
உரை-

ஆண்களின் காலில் அணியும் அணியான கழல் அணிந்த, சிவந்த இலை போன்ற , வெள்ளி போன்ற வேலையும் உடைய தலைவனுடன், வரிசையாய் முன் கையில் வளையல்கள் அணிந்த பருவப்பெண்ணின் நட்பு.(எப்படிப்பட்டதாம் தெய்யுமா?)

பறைகள் ஒலிக்கவும் சங்குகள் ஊதவும், பழைய முதிய ஆல மரத்தடியில் கூடிய பொதுமன்றத்தில் நான்கு
பேர் கூடியிருக்கையில் கோசர்கள் உரைத்த சூளுரையை நிறைவேற்றியது  போன்றதாம்.


(மோகூர் பழையன் என்பானுக்கு மோரியர்களுடனான போரில் உதவுவோம் என உறுதி கொடுத்து கோசர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றினார்களாம்  - அதுவே சொல்லப்பட்டுள்ளது)

உவமை இல்லாத குறுந்தொகை பாடல்களே கிடையாது.

Tuesday, June 17, 2014

குறுந்தொகை - 14



குறிஞ்சித் திணை- ஆசிரியர்- தொல் கபிலர்

(தலைவன் சொல்வதுபோல அமைந்த பாடல்)

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்...இப்பாடலில் தலைவன் தனக்கு அமைந்த மனைவி குறித்து நாணுகிறானாம்...அதற்கு என்ன காரணம்? பாடலாசிரியர் என்ன் அசொல்கிறார்...பார்ப்போம்.. 

 அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
 வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அறிவையைப்
 பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
 அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்,
 நல்லோள் கணவன் இவன் எனப்
 பல்லோர் கூற, யாஅம் நாணுக சிறிதே.
                                 
                                -தொல் கபிலர்
    

பாடல் உரை-

சிவந்த நாக்கு, பயப்படும்படியான அழகிய சிறிய பற்கள், குறைந்த பேச்சு இவை அமைந்த இந்தப் பெண்ணை நான் அடைந்த போது, இந்த ஊரே என்னை இந்த நல்லவன்தான் இவள் கணவன் என்னும் போது கொஞ்சம் வெட்கம் ஏற்படுகிறது

Monday, June 16, 2014

குறுந்தொகை- 13




குறிஞ்சித் திணை - பாடலாசிரியர்  கபிலர்

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்
பைத லொருகலை சேக்கு நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தநங் குவளையங் கண்ணே.

                               =கபிலர்

தலைவி, ,தலைவன் பிரிந்தமையைத் தோழியிடம் கூறல்

உரை=

அழுக்கு நீங்கக் குளிப்பாட்டிவிட்ட யானையைப் போல இணைந்திருக்கும் பெரிய மலைப்பாறை மழையில் நனைந்திருக்கையில்,அதில் கலைமான் ஏறி படுத்திருக்கும்.நாட்டுக்காரன் அவன்.அவன் அவளிடம் நன்றாக பசப்பு மொழிகளைப் பேசிவிட்டு பிரிந்து சென்றான்.அதை எண்ணுகையில் அவளது கண்கள் ஒளி மங்கிப் பசலை பாய்ந்து அவனைத் தேடுகின்றன.(என்கிறாள் தலைவி)

Sunday, June 15, 2014

குறுந்தொகை - 12



செய்யுள் ஆசிரியர்  - ஓதலாந்தையார் (பாலைத் திணை)

(தலைவன் வெளியூர் சென்றுள்ளான்..அவன் போகும் பாதை குறித்து , பயணம் குறித்து தலைவி கவலைப் படுகிறாளாம்.ஆனால் அவள் தலைவனை நினைத்து வருந்துவதாக ஊர் கூறுவது பேதமையாம்.தோழியிடம் இதை தலைவி சொல்கிறாளாம்)

இனி செய்யுள்  -


   
  எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
   
  உலைக்க லன்ன பாறை யேறிக்
   
  கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
   
 கவலைத் தென்பவவர் சென்ற வாறே

 அதுமற் றவலங் கொள்ளாது
   
 நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.

                            -ஓதலாந்தையார்.


தலைவன் சென்ற வழி, எறும்பு புற்றுகள் போல சின்ன சின்னதாய் இருக்கும் சுனைகள்.உலையில் வைத்த கல் போல வெயிலில் கொதிக்கும் பாறை. அதில் ஏறி செல்ல வேண்டும்.கொடிய வில்லை ஏந்திய அம்பு எய்பவர்கள் வழியில் உண்டு.
அதனால் என் கவலை அவர் சென்ற வழி குறித்துத்தான்.அதை உணராது, உதாசீனமாக தலைவனை பிரிந்ததால் வருந்துவதாக ஊர் என்னன்னவோ சொல்லி கஷ்டத்தைத் தருகிறது.

(எறுப்பு புற்று போல சுனைகள்
உலையில் வைத்த கல் போல பாறை 
உவமைகளை ரசியுங்கள்)

Saturday, June 14, 2014

குறுந்தொகை - 11

(தலைவன் அருகில் இல்லை.வேறு மொழி வழங்கும் வடநாட்டில் அ வன் இருப்பினும் அவன் இருக்கும் இடத்திலேயே நான் இருக்க விரும்புகிறேன்....என தன் நெஞ்சினிடத்தில் உரைப்பதுபோல தோழியிடம் தலைவி கூறுகிறாள்)



 பாடியவர்:  மாமூலனார் (பாலைத் திணை)



கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்

பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,

ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே

எழு, இனி வாழி, என் நெஞ்சே! -  முனாது

குல்லைக்கண்ணி வடுகர் முனையது

வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!

                                                  _மாமூலனார்

செய்யுள் உரை-

முன்கையில் அணிந்துள்ள வளையல்கள் அவிழ்ந்து விழுமாறு ஒவ்வொரு நாளும் உறங்காமல்,அழுத கண்களுடன் புலம்பி,இவ்விடத்திலேயே வாழ்ந்து வருவதில் இருந்து இப்போதே தப்புவோம் .அதற்காக இப்போதே கிளம்பச் சொல்லும் என் நெஞ்சே நீ வாழ்க.குல்லை மலரை தலையில் சூடிய வடுகரின் பகைப்புலதே வலிய வேலினை உடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கு அப்பால் வேற்று  மொழி  புழங்கும் நாட்டில் அவர் இருப்பினும்.

குல்லை மலர் வெண்மையானது. கோடைக்காலத்தில் பூக்கும். ஆண்களும் பெண்களும் இதனைத் தனியாகக் கட்டியும் வேறு சில மலர்களோடு சேர்த்துக் கட்டிடியும் அணிந்துகொள்வர் என்கின்றன சங்ககாலப் பாடல்கள்)

 

Thursday, June 12, 2014

குறுந்தொகை - 10




மருதம் திணை...- பாடலாசிரியர்- ஓரம்போகியர்


யாய் ஆகியளே விழவு முதலாட்டி;

பயறு போல் இணர பைந் தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.

                      - ஓரம்போகியர்


( தோழி  நேர்மையற்ற தலைவன் பற்றி உரைத்தது).
                 
                                 
தலைவனுக்கு சந்தோஷத்தையும், செல்வத்தையும் கொணர்ந்த தலைவி, உழவர்கள் தங்கள் வயலில் விளைந்த பயற்றின் கொத்தைப் போன்ற பூங்கொத்தில் உள்ளன வாகிய பசிய பூந்தாதுக்கள், தங்கள் மேலே படும்படி உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களை உடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட, காஞ்சி  ஊரைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமையை பிறரிடம் உரைத்தால் அவனுக்கு அவமானம் என மறைத்தாள்.(மறைமுகமாக தலைவன் பரத்தையிடம் செல்வதையே கொடுமை என சொல்லப்பட்டதாக கொள்ள வேண்டும்)

Wednesday, June 11, 2014

குறுந்தொகை _ ஒன்பதாம் பாடல்



செய்யுள் ஆசிரியர் - கயமனார் (நெய்தல் திணை)

யாய் ஆகியளே மாஅயோளே-

மடை மாண் செப்பில் தமிய வைகிய

பெய்யாப் பூவின் மெய் சாயினளே;

பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்

இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும்

கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்

தண்ணம் துறைவன் கொடுமை

நம் முன் நாணிக் கரப்பாடும்மே.

                 - கயமனார்
(தோழி, நேர்மையற்ற தலைவனிடம் தலைவி பற்றி உரைத்தது)

மாந்தளிர் நிறத்தினளான தலைவி, அலங்கார  பூச்சடியில். வைத்துள்ள யாரும் சூடா பூ போல மெலிந்து வாடினாள்.பசுமை இலைகள் உள்ள தண்டுடைய நெய்தல் மலர்கள்,பல மீன் இனங்கள் உடைய பெரிய உப்பங்கழியின் அலைநீர் பெருகுகையில் குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்கள் போல தோன்றும் குளிர்ந்த நீர்த்துறைக்கு உரிய தலைவனின் கொடுஞ்செயலை மற்றவரிடம் சொல்லாமல் மறைத்துவைப்பாள்.

Tuesday, June 10, 2014

குறுந்தொகை - எட்டாம் பாடல்



விலைமகள் ஒருத்தியிடம் சென்று வந்தவனைக் குறித்து..அவள் இகழ்ச்சியாகக் கூறுகிறாள்..

செய்யுள் ஆசிரியர் - ஆலங்குடி வங்கனார். _(மருதம் திணை)

செய்யுள்_

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம் இல் பெருமொழி கூறி, தம் இல்,

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல,

மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.

             - ஆலங்குடி வங்கனார்


செய்யுள் கூற வருவது_

(பரத்தை ஒருவள் தன்னை நாடி வருபவன் வீரம் பற்றி உரைப்பது)

செய்யுள் உரை=

மாம்பழங்கள் விளையும் நிலத்தையும், ஏரியில் வலை மீன்கள் பிடித்து உண்ணும் மக்களையும் கொண்ட ஊரைச் சேர்ந்த அவன், என்னிடம் பிரமாதமாக பேசுவான்,ஆனால், தன் வீட்டி.லோ, தாய் சொல்படி கேட்டு, பொம்மலாட்டத்த்தில், கையையும், காலையும் ஆட்டும் பொம்மையைப் போன்றவன்.

Monday, June 9, 2014

குறுந்தொகை - ஏழாம் பாடல்



(பாலைத் திணை)



வில்லோன் காலன கழலே; தொடியோள்

மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்

யார்கொல்? அளியர்தாமே-ஆரியர்

கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,

வாகை வெண் நெற்று ஒலிக்கும்

வேய் பயில் அழுவம் முன்னியோரே.


எழுதியவர் - பெரும்பதுமனார்,
(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)


வாகை மரங்களின் முதிர்ந்த காய்கள் நிறைந்த பாலைவனப் பகுதி ,அதில் நடக்கையில் அந்த முதிர்ந்த காய்கள் (நெற்றுகள்)உடைந்து சபதம் எழுப்புகின்றன.அந்த ஓசையானது கழைக் கூத்தாடி, கயிற்றில் நடக்கையில் அடிக்கும் பறையைப் போன்று உள்ளது.அப்பகுதியில் தலைவி, தலைவனுடன் நடக்கிறாள்.ஆனால் அவர்களுக்கு மணமாகவில்லை என்பதை தலைவியின் பெற்றோர் அணிவித்த காற்சிலம்பை அவள் கழற்றாமல் இருப்பதிலிருந்து தெரிகிறது.தலைவனோ வில்லை உடைய வீரக்கழல் அணிந்தவன்.தலைவி மென்மையான அடி வைத்து நடப்பவள்.அவளால் இப்பகுதியில் எப்படி நடந்து செல்ல முடியும் என அவர்களைப் பார்க்கும் நல்லோர், இவர்கள் யாரோ என இரங்குகின்றனர்.
(பின் குறிப்பு:
மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்;)

Sunday, June 8, 2014

குறுந்தொகை - ஆறாம் பாடல்


தலைவன், பரிசப் பொருளை ஈட்ட தலைவியை பிரிந்து செல்கிறான்.இரவு நேரம்.ஊரே உறங்குகிறது.தோழியும் உறங்குகிறாள். ஆனால்..தலைவனை எண்ணி தலைவி சற்றும் கண் அயராது இருக்கிறாள்.அதை அடுத்த நாள் தோழியிடம் உரைப்பது போல பாடல் அமைந்துள்ளது.. இப்பாடலை எழுதியவர் பதுமனார்.

இனி அச் செய்யுள். (நெய்தல் திணை)
   
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
   
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
   
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
   
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

உரை -

பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்து ஆற்றாளாகிய தலைவி,நள்ளிரவில் உலகம் முழுதும் உறங்க நான் ஒருத்தி மட்டும் உறங்கவில்லை என தோழி உறங்கியதையும் சுட்டிக்காட்டி தோழியிடம் உரைக்கிறாள். 

Saturday, June 7, 2014

குறுந்தொகை -ஐந்தாம் பாடல்



நெய்தல் திணை

குறுந்தொகை ஐந்தாம் பாடலை எழுதியவர் நரிவெரூ உத்தலையார்


அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.

தலைவனைப் பிரிந்த தோழியை காம நோய் வாட்டுகிறதாம்.அதைச் சொல்லும்போதும் அவனது நாட்டுச் சிறப்பைச் சொல்லி சொல்லுகிறாள்.

புன்னை மரங்கள் நிறைந்த இடம்.நீர்ப்பரப்பான பிரதேசம்.அதனால் நாரைகள் அலைமோதும் இடம்.கரையை மோதும் அலைகள்.அந்த அலை அடிக்கையில் அதனால் சிறப்புறும் நீர்ப்பரப்பு நிறைந்த கடற்கரையாம்.கற்பனையைப் பாருங்கள்.

இனி செய்யுளுக்கான பொருள்

நாரைகள் உறங்கும் இடமாகிய இனிய நிழலையுடைய புன்னை மரங்களை கொண்டவனும், கரையை அலைகள்மோதும்போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணுக்கு இனிதாகியநீர்ப்பரப்பையுடைய மெல்லிய கடற்கரையையுடைய எம் தலைவன் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என்கண்கள் காம நோயால் வாடுகிறது (என் தோழியே )

குருகு-நாரை

Friday, June 6, 2014

குறுந்தொகை - நான்காம் பாடல்




காமஞ்சேர் குளத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.  குறுந்தொகை 4 எண் கொண்ட பாடல் இவரது ஒரே ஒரு பாடல்.. பாடலால் பெயர் பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர்.

கண்ணைக் காமக் கண்ணீர் நிறைந்த குளமாக்கிக் காட்டிய புதுமையால் இவர் இப் பெயர் பெற்றார்.

நான் கண்ணீருடன் வாழவேண்டும் என்பதற்காகவே எனது அன்புக்குரியவர் அமைந்துள்ளார்.ஆனால்...நான் இல்லாமல் அவருக்கு அப்படி அமையும் என அவர் நினைக்கவில்லை..என்று..காதலனை எண்ணி வருந்துகிறாளாம் காதலி.

சுருங்கச் சொல்லின்....தான் அவன் மீது கொண்ட அன்பை..அவன் தன் மீது கொள்ளவில்லை என எண்ணுகிறாள்.

பாடல்[---
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

பாடல் செய்தி-

கண் ஒரு குளம். அதில் காமக்கண்ணீர் நிறைந்திருக்கிறது.  கண்ணில் தேங்கும் காமக் கண்ணீர் கண் குளத்துக் கரையாகிய இமையைத் தீய்த்துச் சுட்டெரிக்கும்.(சாதாரணமாக குளத்து நீர் கரையை செம்மைப் படுத்தும்.ஆனால்...காமக்கண்ணீரோ இமை எனும் கரையை சுட்டெரிக்கும்)

இந்தக் கண்ணீரொடு வாழ்வதற்காகவே என் காதலர் எனக்கு அமைந்துள்ளார். ஆனால் அவருக்கு அந்தக் காமக்கண்ணீர்க் குளம் அமையவில்லை.

நெஞ்சே! நொந்து தொலைந்து போ!
நெஞ்சே! நொந்து தொலைந்து போ.
நெஞ்சே! நொந்து தொலைந்து போ.!

Thursday, June 5, 2014

குறுந்தொகை --- மூன்றாம் பாடல்




குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார் என்று பாருங்கள்,

(குறிஞ்சி)

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

காதலைப் பாடாத இலக்கியங்கள் இல்லை.இன்றுவரை காதல் பல வடிவெடுத்து பாடப்பட்டுள்ளது.ஆனால்..அதை வடிவப்படுத்த முடியுமா? முடியும் என்கிறார் இப்பாடலை எழுதியுள்ள புலவர்.

தலைவியிடம் தோழி சீண்டிப் பார்க்க எண்ணி..அவனைப் பற்றி இழிவாகக் கூறுகிறாளாம்.அதனை ஏற்காத தலைவி தங்கள் காதல் எத்தகையது எனக் கூறுகிறாள்.அதுவே இப்பாடல்.

பாடலின் பொருள்

குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு, மலைப்பகுதியில் பெரிய தேனை வண்டுகள் தொகுத்தற்கு இடனாகிய நாட்டையுடைய தலைவனோடு நான் கொண்ட நட்பு,
சொல்லப்புகுங்கால் நிலத்தைவிட அகலமானது,
நினையப் புகுங்கால் வானத்தைவிட உயரமானது,
உள்புகுந்து எல்லை காணப்புகுங்கால் கடலைவிட ஆழமானது. என்பதே இப்பாடலின் பொருளாகும்.

சுருங்கச் சொல்லின்.....

காதலின் அகலம் நிலத்தின் அளவு.
காதலின் உயரம் வானத்தின் அளவு.
காதலின் ஆழம் கடலின் அளவு.
ஆகுமாம்.

குறுந்தொகை ---- இரண்டாம் பாடல்



'கொங்குதேர் வாழ்க்கை' என்றதும் நமக்கு நினைவில் வருபவர்கள் நாகேஷூம், சிவாஜியும் தான்..

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா..இல்லையா என்ற சந்தேகம் மன்னனுக்குவர..தன் மனதில் உள்ள சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என மன்னன் அறிவிக்க..ஏழ்மையில் இருந்த தருமி என்னும் புலவன்..அது தனக்கில்லை என புலம்ப..சிவ பெருமான் வந்து..பாட்டு எழுதித்தர..அதை தருமி கொண்டுவந்து தான் எழுதியது என மன்னனிடம் தர..அதை எழுதியவர் அவர் இல்லை என தருமி எழுதியவரை வரச் சொல்ல..சிவ பெருமான் நேரில் வந்து..'தன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்தது யார்?' என வினவ..நக்கீரன் தான் தான் என்றும்..'நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே' என உரைக்க..பின் நடந்ததை நாம் அறிவோம்..

அந்த 'கொங்குதேர் வாழ்க்கை' பாடல் குறுந்தொகையில் வருகிறது.அதை எழுதியவர் ,'இறையனார்' என்று போடப்பட்டிருக்கிறது.இனி அப்பாடல்...

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

இதற்கான அர்த்தம்

பூக்களை தேர்ந்து ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே சிறையாதலையும் இயல்பாய் கொண்ட வண்டே..நீ சொல்வாயாக...நீ எனது நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுக...மயிலின் மெல்லிய இயல்பும்..செறிவான பற்களும்..எழு பிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ?

(இல்லை ..என அர்த்தம்)

Wednesday, June 4, 2014

குறுந்தொகை.......'முதல் பாடல்



குறிஞ்சி - தோழி தலைவனிடம் கூறுதல்


செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

(தோழி கையுறை மறுத்தது. - இதை எழுதியவர் -திப்புத்தோளார்)

குறிஞ்சித் திணை...(மலையும், மலை சார் இடமும்)


(குறிப்பு-
தலைவியை அணுக முதலில் அவளது தோழியை தன் வசம் கொணர்தல் அவசியம் என உணர்ந்த தலைவன்,  தோழியிடம் செங்காந்தள் பூவைக் கொடுத்து, தலைவியைக் காணமுடியாத தனது மனக்குறையைத் தெரிவிக்கையில், தோழியோ, இங்கு மலையில்  மலையைக்காட்டிலும் காந்தள் பூக்கள் அதிகம் உள்ளன என்கிறாளாம்).இதை குறிப்பில் சொன்னாலும்...

செய்யுளின் உரை:-

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி, பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/ வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களை உடைய யானையையும், இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையிலே செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்து உள்ளன.

என்பதே ஆகும்.

Tuesday, June 3, 2014

குறுந்தொகை......




தமிழ்க்கடலில் மூழ்கினால் கிடைக்கும் முத்துகள் சொல்லிடங்கா.
கற்றது கை மண்ணளவு என்பர்...
அக் கைமண்ணளவு இல்லையெனினும்...நான் அறிந்தவற்றை....நான் படித்ததை...நான் கேட்டதைக் கொண்டு குறுந்தொகைப் பாடல்களை அனைவரும் ரசிக்கும் வண்ணம்
இலக்கியச் சுவையை சுவைக்கும் வண்ணம் எளிமைப்படுத்தி எழுத இருக்கிறேன்...

குறுந்தொகை ....................

நான்கு முதல் எட்டு வரையிலான அடிகளைக் கொண்ட ..கடவுள் வாழ்த்து நீங்களாக 400 பாடல்களைக் கொண்டது குறுந்தொகை.இதில் 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் யாரெனத் தெரியவில்லை.கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெருந்தேவனார்.கடவுள் வாழ்த்து..முருகப்பெருமானைக் குறித்து..அதைப் பார்ப்போம்..

தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே

இதற்கு அர்த்தம்..

தாமரை மலரைப் போன்ற சிவந்த காலடிகள்.பவழம் போல சிவந்த உடல்..உடலிலிருந்து பரவித் திகழும் ஒளி..குன்றிமணி போல சிவந்த ஆடை..குன்றை இரண்டாய் பிளக்குமாறு நெடிய வேல்படை.இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களை பெற்று விளங்குகிறது.

அடுத்த பதிவில் அடுத்த பாடலைப் பார்ப்போம்..

Sunday, March 2, 2014

கேபிள் நீங்கள் தொட்டால்...தொடரும்



மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணா யினார் ( 53)

ஒருவன் தன் கடமை மட்டிலும் கவனம் செலுத்தி வருவானால் அவன் வாழ்வில் வெற்றி அடைந்தவன் ஆகிறான்.
அவனது தன்மை எத்தகையதாயிருக்கும் என இப்பாடல் காட்டுகிறது. தன உடல் சுகதிற்கு முன்னுரிமை வழங்கான்;
பசி அறியும் தன்மை அதிகம் இல்லாதவன்; உறங்கும் வேளை சொற்பமே உடையவன்; யாரெவர் எத்தகு தீங்கு செய்யினும் அதை
ஒரு பொருட்டாகக் கொள்ளான்; தன்னை பாராட்டிச் சொல்லப்படும் உரைகளிலோ, விமரிசித்து சொல்லப்படும் அவமதிப்பிலோ
மனம் செலுத்தி உழலமாட்டான்; தன் கடமை எது, அதை செயலாற்றும் சிந்தை எது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவான்.

.....குமரகுருபரர்

மேற்கண்ட பாடலுக்கு உதாரணமாகக் கூற வேண்டுமாயின்..என் முன்னே முதலில் இருப்பவர் கேபிள் சங்கர்.
எனக்கு அவரை கடந்த ஆறு ஆண்டுகளாகத் தெரியும்.பார்த்த நேரங்களில் எல்லாம், கதைகள் பற்றியும், திரைப்படங்கள் பற்றியும்,இயக்குநர் ஆக விரும்பும் அவாவினைப் பற்றியும் மட்டுமே பேசுவார்.அவர் நினைவுகளிலும் சரி, கனவுகளிலும் சரி..இதையேத்தான் அவர் நினைந்திருந்தார்.
காலம் கனிந்தது..
அவரது ஆசை நிறைவேறியுள்ளது.
படம் நன்றாகவே வந்திருக்கும் என்பது நிச்சயம்.
அவர் திரைப்பட இயக்கத்தைத் தொட்டுவிட்டார்..இனி அது தொடரும்.
கடின உழைப்புக்கும், தனது குறிக்கோள் நிறைவேறவும் தளராது உழைத்தால்..வெற்றி நிச்சயம்.
கேபிள் உங்கள் வெற்றி நிச்சயம்.
முன்னதாகவே எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்.
கார்க்கிக்கும் சேர்த்துதான் வாழ்த்து.


Thursday, December 5, 2013

சிவராமனின் கவசம்..




நண்பர் பைத்தியக்காரர் சிவராமின் 'கர்ணனின் கவசம்' அமானுஷ்யத் தொடர்..குங்குமத்தில் தொடராக வந்து இந்த வாரத்துடன் நிறைவுபெறுகிறது.

என்ன ஒரு இடியாப்பச் சிக்கல் கதை..

எந்த ஒரு தொடரிலும்,  அந்தந்த பாத்திரங்களை நினைவு வைத்திருக்க முடிந்த நம்மால்...இந்தத் தொடரில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் நினைவு கூற முடியுமா? என்பது சந்தேகமே...

ஒரு வாரம் படிக்கும் போதே...முந்தைய சில வாரத்து புத்தகம் எடுத்து, மீண்டும் பழைய அத்தியாயத்தை நினைவில் கொண்டுவர வேண்டி இருந்தது.

இதையெல்லாம், பல வேலைகளிடையே, நினைவில் நிறுத்தி மிக அற்புதத் தொடரை அளித்த சிவராமன் பாராட்டுக்குரியவர்.

அவரிடம் ஒரே ஒரு கேள்வி..

முழுத் தொடரையும் முதலிலேயே எழுதி விட்டாரா? அல்லது...அந்தந்த வாரத்திற்கான சினாப்சிசை முதலிலேயே குறித்துக் கொண்டு எழுதினாரா?

நான் ஒரு துணுக்கு எழுதி இருந்தேன் முன் ஒருமுறை..

ஒரு மெகாசீரியல் இயக்குநரைச் சுற்றி..ஒரே காகிதக் குப்பைகள்..அவர் என்ன செய்கிறார்..

தன் தொடரில் எந்தெந்த பாத்திரங்களை எங்கு விட்டார் எனத் தேடிக்கொண்டிருக்கிறார் என..

அந்த துணுக்கு இப்போது ஞாபகம் வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு அற்புதத் தொடரை அளித்ததுடன் மட்டுமல்லாது, இத் தொடரால் பிற சில வாரப்பத்திரிகைகளும் தொடர்கதைகளை வெளியிடும் போக்கை மீண்டும் ஆரம்பிக்க காரணமாய் இருந்த சிவராமனுக்கு மீண்டும் பாராட்டுகள்.

ஹேட்ஸ் ஆஃப் சிவராமன்.

Tuesday, November 19, 2013

பொங்கல் நாளில் படம் வந்தால் அள்ளலாம் வசூலை...



பொங்கலுக்கு வெளிவரும் பட வரிசைகளில் முக்கிய நடிகர் நடிக்கும், நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படமும் உள்ளது.முக்கியமாக இந்நாளில் படத்தை வெளியிட பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்பது ஏன்?

இப்போதெல்லாம், பெரிய பட்ஜெட் படங்கள் சென்னை போன்ற நகரங்களில் மட்டும் ஒரே நாளில் 300 காட்சிகளுக்கு மேல் நடைபெறும் வண்ணம் திரையிடப்படுகின்றன.படம் தோல்வியடைந்தாலும், வசூலைக் குறி வைத்தே இப்படி நடக்கின்றன.

பொங்கல் சமயம் வந்தால்...

ஜனவரி 10ஆம் நாள் வெளிவரும் பட மென்றால், அன்று வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு அரங்கம் நிறைவது 'டப்பா' படத்திற்கும் நிச்சயம்.

தவிர்த்து, 13 நாம் நாள் போகி, அடுத்து மூன்று நாட்கள் பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல்...ஆகக் கூடி படம் வெளியாகி ஏழு நாட்கள் அரங்கு நிறைவது நிச்சயம்.

சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட பிரபல நடிகர் படம் என்றால் 2100 காட்சிகள்.வசூல் வேட்டை அபாரமாய் இருக்கும்.பிறகு பட வசூல் பற்றி , கவலை இல்லை..படம் ஓடினாலும், ஓடாவிடினும்.

பார்ப்போம்...இந்த ரேசில் யார் யார் ஜெயித்து படத்தை வெளியிடுகிறார்கள் என்று.

Monday, October 21, 2013

வாய் விட்டு சிரிங்க...



1) இன்னிக்கு இன்டெர்வியூ போன கம்பெனியில என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருந்தாங்க...
   ஏன்..
   நேர்முகத்தேர்வாம்..

2)அரபு நாட்டிலே போய் ஃபோட்டோ எடுத்தியே..என்ன ஆச்சு?
  எல்லாம் ஷேக் காயிடுச்சு

3)எங்கப்பா 40 திருடர்களை அவர் சர்வீஸ்ல புடிச்சிருக்கார்?
 உங்கப்பா பேரு என்ன?
 அலிபாபா

4)வெயிட்டே இல்லாம கட்டப்பட்ட கட்டிடம் எது தெரியுமா?
  எது?
  லைட் ஹவுஸ்

5)சட்டை புதுசா இருக்கே! தீபாவளிக்கு எடுத்ததா?
  இல்லை....எனக்கு எடுத்தது

6)உங்க படத்துலே வசனம் எல்லாம் கிணத்திலே இருந்து பேசுகிறாப் போல இருக்கே...ஏன்?
  அவ்வளவு டீப் பான வசனங்கள்


Thursday, October 17, 2013

கொள்ளுத்தாத்தா வழியில் பேரன்....



சாதாரணமாக...தாத்தாக்குரிய சில குணாதிசியங்கள்..பேரனுக்கும் சில ஏற்படும் எனப்படுவது இயற்கையிலேயே அமைந்தது.

அப்படி ஒன்று, இன்று கொள்ளுத்தாத்தா வழியில் பேரனுக்கும் வந்துள்ளது.

பாரதப் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது, தி.மு.க., பற்றி நேரு ஒருசமயத்தில், "நான்சென்ஸ்" என்று கமெண்ட் அடித்தார்.

அதை அப்படியே கிண்டல் செய்து, கலைஞர் கதை வசனம் எழுதிய 'திரும்பிப்பார்' படத்தில், சிவாஜி கணேசன் பாத்திரம், நேருவைப்போல கறுப்புக்கண்ணாடி அணிந்து, 'நான்சென்ஸ்' என்று அடிக்கடி கூறுவது போல படைத்திருந்தார் கலைஞர்.

இன்று....

நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல், தன் கட்சி கொண்டுவர இருந்த அவசரச் சட்டத்தையே கடைசி நிமிடம் வரை வாளாயிருந்துவிட்டு, பின்.."நான்சென்ஸ்' என்றுள்ளார்.

இதை கலைஞர் எழுதிய அன்றைய வசனத்துடன் மனம் ஒப்பிடுகிறது.ஆனால் இன்று இதை நையாண்டி செய்பவர் யாருமில்லை.

தாத்தா வழியில் பேரன் சென்றது..சரியான வாரிசு அரசியல் என்பது இதுதான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, October 15, 2013

தமிழ் சினிமா நூற்றாண்டு விழா..கலைஞர் தலைமையில்..



சமீபத்தில் இந்திய சினிமா நூற்றாண்டுவிழா..தமிழக அரசுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.

ஆனால். இதில், பல பிரபலங்கள் கௌரவிக்கப் படவில்லை..என்று பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ளன.தவிர்த்து, நடிகர்,நடிகைகள் கௌரவிக்கப்பட்டது போல, மற்ற திரைக்குப் பின் இயங்கும் கலைஞர்கள் கௌரவிக்கப்படவில்லை.

குறிப்பாக, கலைஞரை கௌரவிக்காதது பெரும் தவறென்றே தோன்றுகிறது.

அரசியலைத் தவிர்த்துப் பார்த்தாலும்...1947 முதல், அறுபத்தி ஆறு ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் ஒன்றிணைந்தவர் கலைஞர்.கிட்டத்தட்ட 75 படங்களில், கதை,வசனகர்த்தாவாகவோ, படலாசிரியராகவோ,தயாரி[ப்பாளராகவோ...கலைஞர் செயல்பட்டிருக்கிறார்.வாழும் வரலாறான அவரை விடுத்து ஒரு தமிழ் சினிமா விழாவா?

தி.மு.க., கட்சியைச் சார்ந்தவராய் இல்லாதாரும்...கலைஞரின், திரையுலக சேவையை மனதாரப் பாராட்டுவர்.

அப்படிப்பட்டவர்கள் துயரப்பட வேண்டாம்...

தமிழின் முதல் சினிமா, "கீசகவதம்" 1916ஆண்டுதான் வெளியானது.அதை வைத்துப் பார்த்தால், 2016 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு.

அவ்விழா, கலைஞர் தலைமையில் கண்டிப்பாக நடைபெறும்.

விருப்பு, வெறுப்பு இன்று அவ்விழாவில், உண்மையில் கௌரவிக்கப் பட வேண்டிய அனைத்து கலைஞர்களும் கௌரவிக்கப்படுவர்.

Friday, October 11, 2013

மெகா பட்ஜெட் படங்களும், ஏமாற்றப்படும் ரசிகனும்...



சிவாஜிகணேசன் நடித்து வெற்றி பெற்ற பல படங்கள் சென்னையில் 3 அல்லது 4 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும்..வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்தால்..அப்படம் நூறு நாட்கள் ஓடும் படம் என வெற்றி பட வரிசையில் சேர்ந்து விடும்..உதாரணத்திற்கு அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திருசூலம் பட விவரத்தைப் பாருங்கள்

'திரிசூலம் மாபெரும் வெற்றி படமாகும்.வெள்ளிவிழா படம்.சென்னையில் வெளியான சாந்தி ,கிரௌன்,புவனேஸ்வரி திரை அரங்குகளில் தொடர்ச்சியாக முறையே 315,313,318 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகும்(100 நாட்களுக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகள்)மதுரை சிந்தாமணியில் 401 அரங்கு நிறைந்த காட்சிகள்.மேலும் 20 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.இச்சாதனை முறியடிக்க முடியா சாதனை.இப்படம் சிவாஜியின் 200 ஆவது படம்..அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 26 மட்டுமே.8 திரை அரங்குகளில் வெள்ளிவிழா.இலங்கையிலும் இரு திரை அரங்குகளில் வெள்ளிவிழா.அந்த நாட்களிலேயே முதன் முதலாய் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூல் ஆகி சாதனை புரிந்த படம்.'

இரண்டு கோடிகள் வசூலே பெரும் சாதனை என்றால்..படத்திற்கான தயாரிப்பு செலவு எவ்வளவு குறைவாய் இருந்திருக்கும்...நடிகர்கள் சம்பளம் எவ்வளவு இருந்திருக்கும்..

ஆனால்..இன்று வரும் மெகா பட்ஜெட் படங்கள் எல்லாம் குறைந்தது 100 கோடிகளை தாண்டும் படங்கள்..

இன்றைய தயாரிப்பாளர்கள் படங்கள் நூற்றுக் கணக்கில் பிரிண்ட் போடப்படுகின்றன.ஒரு நாளில் 150 காட்சிகள் (சென்னையில் மட்டும்)திரையிடப் படுகின்றன.இது போலவே பிற மாவட்டங்களிலும்.

தவிர்த்து, தமிழகம் முழுவதும்..மற்ற மாநிலங்கள்..உலக மார்க்கெட் எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்..சராசரியாக 3000 முதல் 6000 காட்சிகள் வரை ஒரே நாளில் நடைபெறுகிறது.மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தபட்சக் கட்டணமே 120 ரூபாய்.நாள் வசூலே கோடிக்கணக்கில்.

படத்தைப் பற்றி விமரிசனம் வரும் முன், ரசிகனை ஏமாற்றி வசூலை அடைந்து விடுகின்றன.

இது ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் தான் செத்துட்டான்..என்பது போல..(படம் வசூலாகிவிட்டது ஆனால் ஓடத்தான் இல்லை.)

போலிகளை விற்று வியாபாரம் செய்வதற்கும், இதற்கும் அதிக வித்தியாசமில்லை.

ஆனால் அதே நேரம் 40 அல்லது 50 பிரிண்டுகள் மட்டுமே போடப்பட்டு..கிடைத்த தியேட்டர்களில் வெளியாகி..குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில்..கதாநாயகர்கள் சம்பளம் குறைய வேண்டும்..தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலுத்தப் பட வேண்டும் இல்லையேல்...தோல்வி..தோல்வி..என தியேட்டர்காரர்கள் புலம்பலும்,விநியோகஸ்தர் கதறலும்..தயாரிப்பாளர் தலையில் போட்டுக் கொள்ளும் துண்டுகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்.


Thursday, October 10, 2013

காதலாவது...கத்திரிக்காயாவது..(ஒரு பக்கக் கதை)



தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களுக்கு அவரவர்கள் எதிர்காலம்தான் முக்கியம்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளிச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

Wednesday, October 9, 2013

வாய் விட்டு சிரிங்க....



1)ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?

உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.

2)என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...

நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!


3)நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை

குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

4)நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?

டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க பிழைச்சுடுவீங்க

5.)தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட ஐந்து ரூபாய் காயின் ஒன்று கொடுத்தேனே!

மகன்-ஆமாம்..ஆனா..பஸ்ல கண்டக்டர்...ஐந்து ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.

6.)கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..

அப்போ நீங்க லேசி மோகன்னு சொல்லுங்க.



Tuesday, October 8, 2013

அட்டை படும் பாடு...



அந்த வீட்டில் எல்லா முடிவையும் அம்மாதான் எடுப்பார்.ஆனால் அப்பா முடிவெடுப்பது போல தோன்றும்.அம்மாவும், ஊரில் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்.தவிர்த்து, இக் குடும்பத்தில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் உச்ச முடிவு அப்பாவையேச் சேரும் என்றும் ஒரு மாயத் தோற்றம்.

அவர்களது மகனுக்கான அத்தியாவசிய செலவுகளில் ஏற்றம் காரணமாக அவனுக்கு விழும் பற்றாக்குறையை அம்மா தருவார்.திடீரென அம்மாவிற்கு, தான் கொடுக்கும் பற்றாக்குறையை மகன் நேரில் வாங்கக் கூடாது எனக் கருதி மகன் பெயருக்கு ஒரு அட்டையை வழங்கி, மகனிடம் அவ்வட்டையைக் காட்டி வங்கி ஒன்றில் கணக்கு ஆரம்பிக்கும் படியும், அவனது பற்றாக்குறை பணத்தை தான் நேரிடையாக வங்கியில் செலுத்தி விடுவதாகவும், இது கட்டாயம் என்றும் கூறினார்.

உடன், மகன் அப்பாவிடம் இதை எடுத்துச் சென்றார்.

அப்பா , அம்மாவிடம் சொன்னார், 'அவன் நம் மகன்.அவனுக்காகத் தான் நாம் இருக்கிறோம், அவனிடமிருந்தே பெற்ற அவன் பணத்தில், அவனுக்கு பற்றாக்குறை ஏற்படுகையில் நாம் கொடுக்க வேண்டியது கடமை.இதற்கு அட்டையெல்லாம் ஏன்? வீண் செலவு..தவிர்த்து, பணம் பெற வேண்டியது அவன் உரிமை..அதற்கு கண்டிஷன்ஸ் ஏன்? ஆகவே அட்டையே  தேவையில்லை என்றார்?'

மகனுக்கோ அப்பா இப்படி சொன்னது ஒரே சந்தோஷம்.

ஆனால், அம்மாவோ, இந்த வீட்டில் நான் வைத்ததுதான் சட்டம்..ஆகவே அட்டை அவசியம் என தனது வீடோ பவரை உபயோகித்தார்.

அப்பாவிற்கும், மகனுக்கும் வாய் பேச வார்த்தையில்லை.


Monday, October 7, 2013

தாமதமாய் ஒரு விமரிசனம்...



இந்த படத்திற்கு மிகவும் தாமதித்து விமரிசிக்கக் காரணம்..

ஒரு வாரப் பத்திரிகை மதிப்பெண் குறைவாகப் போட்டதால் அவ்விதழ் அலுவலகத்திற்கே போய் நீதி கேட்டதால் ,சற்றே இப்படத்தை என் வலைப்பூவில் விமரிசிக்க பயம்..

இனி..பல இடங்களில் படத்தைப் பார்த்து விட்டதாலும்..சில இடங்களில் படத்தை எடுத்து விட்டதாலும் , இனி எழுதலாம் என்று எழுதியுள்ளேன்.

மகள்..படிப்பில் சற்று திறமைக் குறைவு...அதற்குக் காரணம் ஆசிரியையும், பள்ளி நிர்வாகத்தின் அடாவடி செயல்களும் என்கிறார்கள், சரி .

பள்ளியில் பணத்தைக் கட்ட, தந்தை தயாராய் இருந்தும், அப்பணத்தை வாங்க மறுக்கும் நாயகன்..மகளின் மீது அதீத பாசம் கொண்டவனா?

சம்பளம் கிடைக்கவில்லை என்பதால்...குடும்பத்தை விரோதித்துக் கொண்டு அண்டை மாநிலம் சென்று அங்கு வேலை செய்கிறானாம்...மகள்..ஆசைப்பட்டுக் கேட்ட நாய்குட்டிக்காக..ரைன்மேகர்..என்னும் ஆதிமக்கள் பயன்படுத்தும் கருவி தேடி..நாய் வாங்க 25000 ரூபாய்க்காக (??!!)  செல்கிறானாம்.அவர்கள் அதைக் கொடுக்க மறுக்க ..அந்த ஆதிவாசியின் காலில் விழுகிறானாம்.

தந்தையிடம் போலி கௌரவம், பள்ளி முதல்வரிடம் போலிகௌரவம், ஆசிரியரிடம் போலி கௌரவம்...ஆனால்..சற்றும் தேவையில்லாத நாய்குட்டிக்கு தகுதிக்கு மீறி செலவு செய்வது என்ன நியாயம்.அதுவும் முன்பின் தெரியாதவர் காலில் விழுந்து கௌரவத்தை இழப்பானேன்.அதுதான் மகள் மீது பாசம் என்றால், அந்த தப்பான பாசம் தேவையில்லையே.

கடைசியில்...செய்தி சொல்ல வேண்டும் என்பதற்காக....அரசு பள்ளியில் படித்தாலேயே சிறக்கலாம்...எனகிறார்.இந்த ஞானோதயத்தை முதலிலேயே செயல் படுத்தியிருந்தால் பல அவமானங்களைத் தவிர்த்திருக்கலாமே.

ஒன்றே ஒன்று எனக்கு புரிந்தது...

வண்ணதாசன் மீது அளவற்ற பற்று கொண்டதால் நாயகனுக்கு படத்தில் 'கல்யாணி;' என்ற பெயர் என்று.

(பி.கு. படத்தின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்றால்..என் வீட்டிற்கு வந்து விமரிசனத்திற்கு தகராறு செய்தால் என்ன செய்வது? எளியோன் தாங்க மாட்டேன். அதனால்தான்.)  

மிஷ்கினும்...ராஜாவும்..

               

ஓநாயும்..ஆட்டுக்குட்டியும்..

இந்த படத்தைப் பற்றி விமரிசிக்க என்ன இருக்கிறது.

தமிழ்ப் படங்களின் தரம் மாஸ் ஹீரோக்களால் மாறாமலேயே இருக்கிறதே என வருந்தும் ரசிகர்களுக்கு ஆறுதலாக பல லோ பட்ஜெட் படங்கள் மிகவும் தரத்துடன் வந்துக் கொண்டிருக்கும் வேளையில்..

'முகமூடி' போடாமல் வந்திருக்கிறது மிஷ்கினின் படம்...

இப்படத்தைப் பற்றி என்னத்த சொல்ல..?

மிஷ்கின் சார்..உங்களுக்கு தமிழ்ப்பட ரசிகர்கள் சார்பில்..ஒரு பெரிய சல்யூட்...

உலகத் தரத்தில் ஒரு படம்..

ஆரம்பக் காட்சியிலே இருந்தே..நாற்காலியில் ரசிகனைக் கட்டிப் போட்டு விட்டு...கடைசியில் தான் அவிழ்த்து விடுகிறீர்கள்..

படத்தில், ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் அளவில் யாரும் இல்லை, கதாநாயகி இல்லை, டூயட் இல்லை...இது தமிழ்ப்படமா? வியக்கவைக்கிரது.

ஆனால்...இவர்கள் யாரும் தேவையில்லை..

நல்ல கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, யதார்த்தம் ..இவை இருந்தால் போதும்..அது வெற்றிப்பட ஃபார்முலா..என உணரவைத்து விட்டீர்கள்.

அதே சமயம் சில லாஜிக் மீறல்களும் உண்டு, சில காம்பரமைஸ்களும் உண்டு.

ஆனால் எல்லவற்ரையும் மறக்க வைத்து விடுகிறது படம்.

அட..அட..அட..இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு.

அட்டகாசம் மிஸ்கின்...

அதே சமயம் இளையராஜா...

என்ன சொல்ல... ஒரே வார்த்தை...

ராஜா ராஜா தான்.. (இது போதும் என எண்ணுகிறேன்). படத்தின் வெற்றியில் கணிசமான பங்கு ராஜாவிற்கு.

மிஷ்கின்...ரொம்பவே வுல்ஃப் வேடத்திற்கு பொருந்துகிறார்.இரட்டைநாடியாயும் இருப்பதால்.

ஸ்ரீ யும் பாத்திரம் உணர்ந்து அசத்தியுள்ளார்.

திருட்டி டிவிடி யில் பார்க்காமல், மக்கள் அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்தால்..படம் இமாலய வெற்றி அடையும்.

மக்கள் செய்வார்களா?


Monday, September 30, 2013

நீரிழிவு நோயால் அவதிப்படும் தமிழ் இதழ்கள்..



ஒருவர் திடீரென காரணமில்லாமல் இளைத்து விட்டால், சாதாரணமாக, "உங்களுக்கு சுகர் இருக்கிறதா?" என விசாரிப்போம்..

அதுபோல தமிழ் இதழ்களும் இன்று இளைத்து விட்டன..

தமிழ் வார இதழ்கள், தங்களுக்கே உரிய அளவுடன்..அதிகப் பக்கத்துடன், நிறைய கதைகள், தொடர்கதைகள், அரசியல், சினிமா, இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் என அனைத்தையும் தாங்கி வந்து, வாசகர்களை அவை என்று வருகிறது என ஆவலுடன் எதிர்ப்பார்க்க வைத்த காலங்கள் உண்டு.

ஆனால்...என்று விகடன், தன் அளவை அதிகரித்தானோ, அன்றே தரத்திலும் சற்று குறைந்து விட்டது. ஆனாலும் சில இலக்கியத் தரம் வாய்ந்த கட்டுரைகள், விமரிசனம் என சுவாரஸ்யம் சற்று இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.ஆனால்..144 பக்கங்கள் வரை வந்த அது, இன்று மிகவும் இளைத்து விட்டது.

அடுத்து அதிகம் வருத்தப்பட வைத்துள்ளது கல்கி. நல்ல பாரம்பரியத்துடன், ஜன ரஞ்சகப் பத்திரிகையா அல்லது இலக்கியமா அல்லது பொது அறிவா என்று அதிசியப்படும் அளவிற்கு வந்த பத்திரிகை.இன்று மிகவும் இளைத்து 48 பக்கங்களே தாங்கி வருகிறது.இப்படியே போனல், கல்கி..வரும் தலைமுறையினரிடம் ஒரு காலத்தில் வந்த பத்திரிகை என்ற பெயர் எடுத்துவிடுமோ என அஞ்சப்பட வேண்டியுள்ளது.

தன் பங்குக்கு கலைமகளும், அமுதசுரபியும் கூட இளைத்து விட்டன.

ஓரளவு, குமுதமும், குங்குமமுமே இன்று சிறப்பாக வருகிறது எனலாம்.(குமுதத்தில் இன்று வரும் செய்திகளில் நாம் உடன்படுகிறோமா , இல்லையா இன்பது வேறு விஷயம்)

இதற்குக் காரணம் என்ன? சர்குலேஷன் குறைந்து விட்டதா? என்றால், அப்படியும் சொல்ல முடியாது.

வேறு என்ன காரணம்..

நான் அறிந்த வரை..அவற்றில் வரும் விளம்பரங்கள் தான் காரணமாய் இருக்கக் கூடும்.

முன்பெல்லாம் இதழுக்கு, இருபது , முப்பது பக்கங்கள் விளம்பரம் வரும்.அதனால் விஷயங்களும் அதிகப் பக்கங்கள் வந்தன.இன்றோ வார இதழ்களில் விளம்பரங்களை அதிகம் காணமுடிவதில்லை.

சென்ற வார 'கல்கி' யில், வெளியார் விளம்பரம் என மூன்று பக்கங்கள் தான் வந்துள்ளது.தவிர்த்து, விளம்பரங்கள் இல்லாததாலும்,காகித விலை உயர்வு, நிர்வாகச் செலவு என கட்டுக்கடங்காத செலவுகள் அதிகரித்ததாலும் இந்நிலை என நிர்வாகிகள் கூறக்கூடும்.

ஆனால்

இனி பழைய தரத்தில் கல்கியையோ, விகடனையோ பார்க்க முடியாதா..என..தமிழ் வாசகர்கள் வருத்தமே அடைகின்றனர்.

Sunday, September 22, 2013

தவறு செய்பவரா நீங்கள்...



மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா?

வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.

ஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..

நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.

சில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.

வாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.

நான்..ஒரு சமயம்...ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.

ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.

தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.


Friday, September 20, 2013

அண்ணா....



பல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.

அப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.

படிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.

படிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.

எப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.

சந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.

இடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.

1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.

17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.

நாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.

அண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது எனலாம்.அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.

அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.

எதையும்..தாங்கும் இதயம்..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!

ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.

Tuesday, September 17, 2013

அவரவர் பார்வையில்... (சிறுகதை)



அவள்:-

நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.

எனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.

ஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம்.

அம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று.

அவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.

இன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

ரவியின் தாயார்:-
-----------------
என் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த பெண்ணை திருமணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கிடணும்.

அவன்:-
----------
நான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28 வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.

திடீரென ஒருநாள் இரவு 9 மணிக்கு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால் அமர வைத்துவிட்டு 'இந்த தொடரை கொஞ்சம் பாரேன்'என்றாள்.
நானும் பார்த்தேன்.
பாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம் குடிகொண்டிருந்தது.
அம்மா கேட்டாள் 'டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம் வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி முடித்து விடலாமா?'

'வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால் இந்த பெண் எனக்கு வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.

Sunday, September 15, 2013

எல்லாம் இன்ப மயம்..(ஒரு பக்கக் கட்டுரை)


நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்...பின்  .........பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

Thursday, September 12, 2013

ஆதலால் அன்புடன் இருப்பீர்..



காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு (79)

அன்பு எனும் அகத்துறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாய் இருந்து என்ன பயன்?

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (80)

அன்பு நெஞ்சகத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்.இல்லையேல் அது எலும்புத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்

Tuesday, September 10, 2013

வாய் விட்டு சிரிங்க...



சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.



Monday, September 9, 2013

நலம்..நலம் அறிய ஆவல்...




பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகள்லே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்தோட நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா.


Thursday, September 5, 2013

உண்மையும்...பொய்யும்...


எல்லோரும் ஊழல்வாதிகள்...உண்மையாய் நாட்டுக்கு உழைப்பவர் இன்று யாரும் இல்லை..இப்படி
பல விஷயங்களில்..நாட்டு நடப்புக்களைப் பார்த்து நாம் சொல்லும் வார்த்தைகளே இவை.
இன்று...உண்மை மட்டுமே பேசுவேன்..என்று ஒருவன் சொல்வானானால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.
பொய் பேசாதவர்களே இன்று இருக்க முடியாது.
அலுவலகத்தில் விடுமுறை தேவையானால்..எற்கனவே செத்துவிட்ட நம் தாத்தா,பாட்டிகள் உதவிக்கு வந்து..அன்றுதான் மீண்டும் சாகிறார்கள்.
தான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.
5000 ரூபாய்க்கு ஒரு புடவையை வாங்கிவிட்டு அத விலை 3000 என்று சொல்லாத மனைவிகள் இருக்கிறார்களா?
தன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர்,
சுருங்கச் சொன்னால்..பொய் ..நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்டது.
நாம் பேசுவது பொய் என்று தெரிந்துவிட்டால்...
தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறான் வள்ளுவன்.,'பொய்மையும் வாய்மை இடத்தே என்று வள்ளுவனே சொல்லி இருக்கார்'என அவரை துணைக்கு இழுத்து விடுவோம்.

ஒரு சமயம்..அக்பர்..பீர்பாலிடம் 'உண்மைக்கும் பொய்க்கும் அப்படி என்ன வித்தியாசம் என்றார்.
உடனே பீர்பால்'நான்கு விரற்கடை வித்தியாசம்'என்றாராம்.
நான்கு விரல்களை காதுக்கும்,கண்ணுக்கும் இடையில் வைத்து'காதால் கேட்பதெல்லாம் உண்மையாகி விடாது..ஆனால் கண்ணால் காண்பது நிஜம்.அதனால் காதுகளால் கேட்பதை வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது..கண்ணால் பார்த்து தீர விசாரித்தே உண்மையை நிர்ணயிக்க முடியும்'என்றார்.
அதனால் காதிலே கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது.
ஆமாம் கண்ணால் பார்த்தால் அது நிஜமா...தெரியவில்லையே..
'கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்..'என ஒரு கவிஞன் சொல்லி இருக்கானே!!!!

Wednesday, September 4, 2013

கனிப்பேச்சு SPB..


 சூபர் சிங்கர் 4..
இதைப் பற்றி பேசாதவர்களோ..நிகழ்ச்சியைப் பாராதவர்களோ மிகச் சிலரே இருப்பர் என எண்ணுகிறேன்.
என்னமாய் பாடுகிறார்கள் இளைஞர்கள்.
கடந்த மூன்று நாட்களாக சிறப்பு விருந்தினராக பிரபல பாடகர் , இசையப்பாளர் S.P.பாலசுப்பிரமணியம் பங்கேற்றார்.
பெருக்கத்து வேண்டும் பணிவு என்பார் வள்ளுவர்.
பாலசுப்பிரமணியிடம், அது காணப்பட்டது.
சில பாடகர்கள் பாடியதில் உள்ள சிறு குறைகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டிய போதும், இவர்," சூப்பரா பாடின தம்பி.நாங்க எல்லாம் பாடினபோது கூட பல டேக்குகள் வாங்கிய பாடல்களை நீங்க எல்லாம் சுருதி சுத்தமா லைவ்வா எப்படி பாடறீங்க..' என்று வியந்தார்.
எந்த ஒரு போட்டியாளரையும், கடுமையாய் விமரிசித்து...மன வேதனை அடையச் செய்யவில்லை.
சிறு வயதில் தான் செய்த தவறுகளையும் சொன்னார்.
அவர் சிறப்பு விருந்தினராய் இருந்தாலும், போட்டியாளர்களிடம் ஒரு தந்தைக்குறிய பாசத்துடன் செயல்பட்டார்.
காய் கவராத கனியாய் இருந்தது அவர் பேச்சு.
மற்ற நீதிபதிகளும்..போட்டியாளர்களிடம் இவர் காட்டிய மனித நேயத்தைக் காட்டுவார்களா? 

Tuesday, September 3, 2013

வாய் விட்டு சிரிங்க...



1.நேற்று டைபிஸ்ட் நளினி ஏன் உன்னை திட்டினாள்?
அவளோட மாமியார் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு'உன் மகிழ்ச்சியில்
பங்குக் கொள்கிறேன்' என்று சொன்னேன் அதனால்தான்..

2.கோட்டையை கைப்பற்றுவோம்னு தலைவர் பேசினாரே..என்னாச்சு
கோட்டையை கோட்டை விட்டுட்டார்.

3.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை சிம்பாலிக்கா எப்படி தெரிவிச்சிருக்கார்
தெரியுமா?
எப்படி
மகாநாட்டிற்கு தொண்டர்கள் பிணி பிணியாய் வருக என்று..

4.நேற்று என் மாமியார் என்னை கட்டிப்பிடிச்சு ஆனந்தக்கண்ணீர் விட்டாங்க
அப்படி என்ன பண்ணினே?
அவங்களுக்கு சமமா நானும் சண்டை போடறேனாம்..

5.முதல் நாளே நீங்க எடுத்த படம் நொண்டுதே
அதனால்தான் படத்துக்கு சுளுக்கு என்று பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

6.எங்க வீட்ல ஒரே நேரத்திலே எங்க பாட்டி,எங்க அம்மா,என் பொண்ணு வாந்தி
கங்கிராட்ஸ்..உங்களுக்கு சித்தப்பா,தம்பி,பேரன் எல்லாம் பிறக்கப்போறாங்களா?


உடல், மனம் ஆரோக்கியம் அடைய நினைக்க வேண்டியன - பாரதியார்




நான் நோயில்லாதவன்... நான் வலிமையுடையவன்.என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகசக்தியின் வீடுகளாயின.

என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.

நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.

நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..

என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.

நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.

தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.

எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.

நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்

(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)

Monday, September 2, 2013

மிருகங்களே...மனித ஆசை தவிர்...



நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

Friday, August 30, 2013

பொன்மொழிகள் ஐந்து...




..1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது

2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இல்லாதவன் எல்லாப் பொருளிலும் தாழ்ந்தவனே
என்பதில் ஐயம் இல்லை.

3.பயம் நம் எதிரே வராத வரைக்கும்
பயந்துக்கொண்டே இரு.அது வந்து விட்டால் கண்டதுமே
அதனை சந்தேகப்படாமல் அடித்து தொலைத்துவிடு.

4.மன அமைதியைவிட உயர்ந்த தவம் வேறில்லை.மகிழ்ச்சியை விட
உயர்ந்த இன்பம் வேறீல்லை.ஆசையைவிட உயர்ந்த நோய் ஒன்றுமில்லை.
கருணையைவிட உயர்ந்த தருமம் வேறில்லை

5.வெட்டி நறுக்கப்பட்டாலும் சந்தனமரம் நறுமணம் இழக்காது.முதுமை எய்தினும் கூட
யானை தன் விளையாட்டை விடாது.ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் கரும்பு
இனிமையை விடாது.நற்குடிப் பிறந்தோர் வறுமையால் கெட்டழிந்தாலும்
ஒழுக்க குணங்களைக் கைவிட மாட்டார்கள்.

Sunday, August 25, 2013

கொஞ்சி விளையாடும் தமிழ்..- 27




காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் "வெறியாட்டு' என்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், "இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? (அஞ்சுமா?) இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்த தலைவனுக்கு எட்டுமா?' என்னும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் "பத்தொன்பது மா' (19 மா 5+6+8=19) என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது "மா' என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் "வெறிவிலக்கு' என்ற துறையில் பாடியுள்ளார்.
இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்"மை'உமை இம்மைஐயோ என்செய்த(து)-அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.
வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா - தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.


ஒரு தினசரியில், திரு இரா.ராமமூர்த்தி எழுதியது இது.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.ஆகவே இப்பதிவு.

Thursday, August 22, 2013

வாய் விட்டு சிரிங்க... தலைவர் ஜோக்ஸ்..



1) எதிர்க்கட்சித் தலைவருக்கு என்னைப் பார்த்தால் பயம்....நான் என்ன சிங்கமா அல்லது புலியா
  சேச்சே...அது எல்லாம் எவ்வளவு சாதுவான மிருகங்கள்...

2)தலைவர் இன்று வாரிசு அரசியலை எதிர்த்து பேசப்போறாராம்...
 யார் தலைமை..? யார் முன்னிலை..??
 அவர் மச்சான் தலைமையிலே..மாமா முன்னிலையிலே..அவர் மகன் வரவேற்புரை நிகழ்த்தியதும்..பேசுவார்

3)தலைவர் ஏன் எப்பவும் கைகளில் 'கிளவ்ஸ்' போட்டுக்கிட்டு இருக்கார்?
  தன் கை அவ்வளவு சுத்தம்னு சிம்பாலிக்கா சொல்றாராம்.

4)நம்ம தலைவர் டிபாசிட் இழந்துட்டார்??
 எந்தத் தொகுதியில் போட்டியிட்டு..?
 நான் சொல்றது..அவர் டிபாசிட் போட்டு வைத்திருந்த ஃபைனான்ஸ் கம்பெனியை மூடிட்டதால..

5)குறவர்கள்கிட்ட ஓட்டுக் கேட்கப் போன தலைவர், 'அவர்கள் முதாதையர்கள் தமிழுக்குச் செய்த சேவைக்கு பாராட்டு தெரிவித்தாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை இவர்கள்தான்னு தப்பா நினைச்சுட்டார்..

6)தலைவா! உங்கப் பெயர் குற்றப்பத்திரிகையிலே வந்திருக்கு..
 அந்தப்பத்திரிகை சர்குலேஷன் எவ்வளவு.


Tuesday, August 20, 2013

குறள் போற்றுவோம் -5



ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்.அதாவது உணவைக் குறை என்று பொருள். (புலன் -வாய்)

கண் போன போக்கில் எல்லாம் மனிதன் போகலாமா? என்று ஒரு பாடல் உண்டு.அதாவது, நம் கண்கள் பார்த்து, ஆசைப்பட்டு அதன் வழியில் எல்லாம் நடந்தால், அது சிக்கலில்தான் கொண்டு விடும். கண்கள் பார்த்தாலும், மனம் சிந்தித்து நல்லது, கெட்டது உணர்ந்து செயல் பட வேண்டும்.(புலன் - கண்)

நம்மில் கோபம் ஏற்பட்டால் , இடம் மறந்து..வாயில் வந்ததை எல்லாம் உரக்கக் கூறி, அதுவரை நம்மைப் பற்றி நல்லபடியே நினைப்பவர்கள் எண்ணங்களை மாற்றி விடுவோம்.அது சரியா? பிறர் பற்றி புறம் கூறுவோம்..அது சரியா(புலன்-மெய்)

கெட்டவற்றைக் கேட்காத செவி வெண்டும்.நல்லவற்றையே நாளும் கேட்க வேண்டும்.(புலன்-செவி)

வாசனையைத் தரும் பொருள்கள், உணவு போன்றவைக்கூட ஆசையைத் தூண்டும்.ஆனால் அவை உடலுக்கும், உள்ளத்திற்கும் கேடு விளைவிப்பவை என உணர வேண்டும். (மூக்கு -புலன்)

நமக்கு புலனடக்கம் இல்லாவிடில், நம் பெயர், புகழ், வாழ்வு எல்லாம் கெடும்.மனிதனாய் பிறந்தோர் அனைவருமே..தங்கள் ஐம்புலன்களை அடக்கினால், வையத்தில் சந்தோசமாக வாழ்வாங்கு வாழலாம்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான கருத்தை..ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவனைத் தவிர வேறு யாரால் தரமுடியும்?

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு    (28)

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கி ஆளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும் .

சிரிப்போம்..சிந்திப்போம்...




வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

Wednesday, August 14, 2013

சுதந்திரம் எப்போ கிடைச்சது?! வாய் விட்டு சிரிங்க..



1) அப்பா..நாளையிலிருந்து நாம பணக்காரரா ஆயிடலாம்
   எப்படி
  நாளைக்கு எங்க கணக்கு வாத்தியார் பைசாவை எப்படி ரூபாயா மாத்தறதுன்னு சொல்லிக்கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்

2)இன்னிக்கு தலைவருக்கு எடைக்கு எடை பேனா கொடுக்கிறார்களாம்
 ஏன்...
 பிரதமருக்கு அப்பப்ப கடிதம் எழுத பேனா வேண்டியிருக்குமே

3)நீங்க நடிச்சப்படம்..வெற்றியடையணும்னு நாமே முயற்சி செய்யணுமா? புரியலையே..
 படம் வெளிவரும் நாள் அன்று ஏதெனும் கிளர்ச்சி பண்ணவைச்சு படம் வெளிவராம தடுக்கணும்

4)சுதந்திரம் எப்ப கிடைச்சுது
 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி
 என்ன சொல்ற
 அன்னிக்குத்தானே என் மனைவி கோச்சுண்டு பிறந்த வீடு போனா

5)வர வர ஆஃபீஸிலிருந்து ஏன் லேட்டா வரீங்க
  எந்த பயலும் கிளம்பும்போது எழுப்பாமல் போயிடறான்

6)உன்னைவிட உன் பையன் தைரியசாலியா? எப்படி சொல்ற
  என் மனைவியை எதிர்த்து பேசறானே

  (பதிவர்கள் அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துகள்)


Tuesday, August 13, 2013

சூரியனுக்கே டார்ச்...



(வண்ணதாசனின் கவிதை ஒன்றை பாராட்டி என் கவிதை)


வண்ணத்துப் பூச்சி
விரலிடுக்கில்
வண்ணத்தை
விட்டுச் செல்லல் போல்
வண்ணதாசா..
உன் எழுத்தின்
வண்ணம்..மனதில்..
வன்மையாய் ஒட்டிக்கொள்ளும்
வண்ணம்..கோலில்..
விடுப்பது என்ன மை..