ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Thursday, October 30, 2014
குறுந்தொகை -145
தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்ட பிரிந்து சென்றது நீடிக்க அதனால் துன்பமுற்ற தலைவி தோழியை நோக்கி, “என்துன்பத்தை அறியாமல் துயிலுகின்ற மாக்களை யுடைமையால் இச்சிறுகுடி எனக்கு தங்குமிடமில்லை” எனக் கூறித் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தியது.)
குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கொல்லனழிசி
இனி பாடல்-
.
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி
கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாட்
டுஞ்சா துறைநரொ டுசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே.
=கொல்லனழிசி.
உரை-
கடல் துறை பொருந்திய இந்தச் சிற்றூர் , கடற்கரையையுடைய சேர்ப்பனது கொடுமையை நினைந்து மிகுகின்ற துன்பத்தோடு துயரமுற்று நடுநிசியில் துயிலாமல் தங்குவாரை..ஏன்? எனக் கேட்காத துயிலுதல் பொருந்திய கண்களையுடைய மாக்களோடு நெடிய இரவை உடையது.அதனால் இது நாம் தங்கியிருக்கும் ஊர் அன்று
(கருத்து) தலைவர் இல்லாமையால் இவ்வூர் நமக்கு இனி உறையும்பதி அன்று.
Tuesday, October 28, 2014
குறுந்தொகை-144
செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனாளாக, அவளைப் பிரிந்த செவிலித்தாய், “ஆயமகளிரோடு பிரிவின்றி விளையாடும் என் மகள் இப்பொழுது பாலைநிலத்திலே பரல் தன் அடிகளை வருத்தா நிற்க எம்மைப் பிரிந்து சென்றனள்” என்று கூறி வருந்தியது.)
பாலைத் திணை -பாடலாசிரியர் கோடங்கொற்றன்
இனி பாடல்-
கழிய காவி குற்றுங் கடல
வெண்டலைப் புணரி யாடியு நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர
இவ்வழிப் படுதலு மொல்லா ளவ்வழிப்
பரல்பாழ் படுப்பச் சென்றனண் மாதோ
சென்மழை தவழுஞ் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.
- கோடங்கொற்றன்
உரை-
கழியினிடத்து மலர்ந்த காவிமலர்களைப் பறித்தும், கடலிலுள்ள வெள்ளிய தலையையுடைய அலையின்கண் விளையாடியும் மிக தன்னுடன் என்றும் பிரிதலில்லாத ஆயத்தார் தத்தமக்கு உரிய விளையாட்டைப் புரிய, இவ்விடத்துப் பொருந்துதலுக்கும் உடம்படாளாகி விரைந்து செல்லும் மேகங்கள் தவழ்கின்ற உச்சியையுடைய வானத்தளவும் உயர்ந்த விளக்கத்தையுடைய குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டில் அப்பாலை நிலத்தில்
பருக்கைக்கற்கள் தன் பாதத்தின் அழகைச் சிதைக்கும் வண்ணம் தலைவி போயினள்.
(கருத்து) தலைவி நம்மைப் பிரிந்து தலைவனுடன் சென்றனள்.
குறுந்தொகை-143
தோழி கூற்று
(தலைவன் வரைபொருட்காகப் பிரிந்தவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் நம்முடைய வருத்தத்தை யறிந்து இரங்கும் தன்மை யுடையவர்; ஆதலின் அவர் விரைவில் வருவர்; நின் மேனிப் பசப்பு அவர் வரவால் நீங்கிவிடும்” என்று தோழி கூறியது.)
குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்
இனி பாடல்-
அழிய லாயிழை யழிபுபெரி துடையன்
பழியு மஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்
தங்குதற் குரிய தன்றுநின்
அங்கலுழ் மேனிப் பாய பசப்பே.
- மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்.
உரை-
தெரிந்து அணிந்த அணைகலங்களையுடையாய் பயனையுடைய மலைநாட்டுக்குத் தலைவன் நம்மைப்போல இரங்குதலை மிக உடையவன், பழியையும் அஞ்சுவான் நில்லாது அழியும் தன்மையே இவ்வுலகில் நிலைபெற்றதாதலின் நிலை பெறுதலையுடைய நல்ல புகழை விரும்பிய நீதியையுடைய நெஞ்சையுடைய ஒப்புரவாளன் பெற்ற செல்வத்தைப் போல நினது அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலை தங்குவதற்கு உரிமை உடையதன்று.ஆதலால் நீ வருந்தாதே!
(கருத்து) தலைவன் நம்பால் இரங்கி விரைவில் வந்து வரைந்து கொள்வான்.
( ‘நீ தலைவரைப் பிரிந்து இரங்குதலைப் போலவே அவரும் நின்னைப் பிரிந்தமையால் இரங்குவர்’ )
(‘நின் பசப்புத் தங்குதற்குரியதன்று’ என்றதனால் போவதற்குரிய தென்பது பெறப்படும்: தலைவனைப் பிரிந்த காலத்தில் தலைவிக்குப் பசலை உண்டாவதும், அவனோடு பொருந்திய காலத்தில் அது நீங்குவதும் மரபு;)
Monday, October 27, 2014
குறுந்தொகை-142
தலைவன் கூற்று
(தலைவியைப் பால் வயத்தனாகிக் கண்டு அளவளாவி நீங்கும் தலைவன், “என் உள்ளம் தலைவியினிடத்தே உள்ளது; இதனை அவள் அறிந்தனளோ, இலளோ!” எனக் கூறியது.)
குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் கபிலர்
இனி பாடல்-
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ விலளோ பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.
-கபிலர்
உரை-
நடு இரவில் படுத்துத் தூங்கும் யானையைப் போல பெரு மூச்சு விட்டுக் கொண்டு என் நெஞ்சம் ,நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும் அவளிடத்திலேயே இருக்கின்றது.சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து மாலையைக் கட்டி, தினைப் புனத்தில் கதிரை உண்ணும் பொருட்டு வீழும் கிளிகளை ஓட்டுகின்ற, பூவைப் போன்ற கண்களையுடைய பேதையாகிய அத்தலைவி இதனை அறிவாளோ? மாட்டாளோ?
(கருத்து) என் உள்ளம் தலைவியின்பால் உள்ளது.
. (தனது நெஞ்சம் அவளிடத்தே பொருந்தியிருப்பதை அறியாமையின், ‘பேதை’ என்றான்.)
Saturday, October 25, 2014
குறுந்தொகை-141
தலைவி கூற்று
(இராக்காலத்தே வந்து ஒழுகா நின்ற தலைவன் கேட்கும் அண்மையனாக, அவன் வரும் வழியினது ஏதத்தை அஞ்சிய தலைவி தோழியை நோக்கி ‘நீ தலைவரிடம், இனி இரவில் வாரற்க; எம் தாய் எம்மைத் தினைப்புனங்காக்கும்படி கூறியுள்ளாள்; ஆதலின் அங்கே வருகவென்று உணர்த்தின் என்ன குற்றம் உளதாகும்?” என்று கூறியது.)
குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரைப் பெருங் கொல்லன்.
இனி பாடல்-
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே யன்னை யெனநீ
சொல்லி னெவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சார னாட வாரலோ வெனவே.
-மதுரைப் பெருங் கொல்லன்.
உரை-
(தோழி) மலைப்பக்கத்தையுடைய நாட...கொல்லையிலுள்ள நெடிய கையையுடைய யானையினது கடிய பகையினால்
வருந்திய குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல ஆண்புலியானது, பசிய கண்ணையுடைய செந்நாய் அகப்படுகின்ற செவ்வியைப் பார்த்திருக்கும்..வருதற்கரிய இருளையுடைய நடு யாமத்தில் வருகின்றாய்.அப்படி வருதலை ஒழிப்பாயாக!வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை விளைந்த தினையிடத்துப் படாமற் கடியும் பொருட்டு நம் தாய் செல்வீராக என்றாள்.என தலைவனுக்குக் கூறின் குற்றம் என்ன? (நீ சொல்வதில் தவறில்லை)
(கருத்து) தலைவரை இனிப் பகலில் சந்திக்க வரும்படி நீ சொல்ல வேண்டும்.
Friday, October 24, 2014
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்
தமிழ்த் திரையுலகின் பழம் பெரும் நடிகரும், அழகாம உச்சரிப்புடன் தமிழ் பேசியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இன்று நம்மிடையே இல்லை.
அவரைப் பற்றி "தமிழா தமிழா" வில் நான் எழுதியுள்ளதை கீழ்கண்ட சுட்டியில் பார்க்கவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
http://tvrk.blogspot.com/2009/02/blog-post_08.html
அவரைப் பற்றி "தமிழா தமிழா" வில் நான் எழுதியுள்ளதை கீழ்கண்ட சுட்டியில் பார்க்கவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
http://tvrk.blogspot.com/2009/02/blog-post_08.html
குறுந்தொகை-140
தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்ட பிரிந்த காலத்தில் அவனுடைய பிரிவினால் துன்புற்ற தலைவியை நோக்கி, “நீ ஆற்றாமல் இருக்கின்றாய்” என்று தோழி இரங்க, “இவ்வூர் இப்பொழுது நான்
படுந்துன்பத்தை எங்ஙனம் அறிந்தது?” என்று முன்னிலைப் புறமொழியாகத் தலைவி கூறியது.)
பாலைத் திணை- பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை
இனி பாடல்-
வேதின வெரிநி னோதி முதுபோத்
தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதல ருரனழிந்
தீங்கியான் றாங்கிய வெவ்வம்
யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே.
-அள்ளூர் நன்முல்லை.
உரை-
தலைவன், கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய, முதிய ஆண் ஓந்தியானது வழிச் செல்லும் மனிதர்கள் நிமித்தமாகக் கொள்ளுமாறு தங்குகின்ற பாலைநிலத்திற் சென்றனர்.வலிமை இழந்து, அவர் பிரிந்த பிறகு இங்கு இருந்து நான் பொறுத்துக் கொண்டுள்ள துன்பத்தை இரங்குதலையுடைய இவ்வூர் எவ்வாறு அறிந்தது.
(கருத்து) தலைவர் பிரியுங் காலத்து அவரைச் செல்லாதவாறு செய்யாமல் இப்பொழுது என்னை, “நீ ஆற்றுகின்றிலை” என்று கூறிப் பயனில்லை.
(ஓந்தி- சுமைதூக்கி)
Thursday, October 23, 2014
குறுந்தொகை-139
தோழி கூற்று
(விலைமகள் வீட்டிற்குச் சென்ற தலைவன் தலைவியிடத்தே மீண்டு வந்த காலத்தில் தோழி, “நீ இங்கே வந்தாற் விலைமகள் பழி கூறுவார்; ஆதலின் இங்கே வர வேண்டாம்.” என்று கூறியது.)
மருதம் திணை-பாடலாசிரியர் ஒக்கூர் மாசாத்தியார்
இனி பாடல்-
மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றெனப்
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கு மம்பலொடு
வாரல் வாழிய ரையவெந் தெருவே.
-ஒக்கூர் மாசாத்தியார்.
உரை-
இல்லத்தில் வாழும் கோழியினது குறிய காலையுடைய பேடையானது , வேலிக்கு வெளியில் காட்டுப் பூனையின் கூட்டம் மாலைக்காலத்தில் உற்றதாக அதற்கு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல் சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டு துன்பத்தையுடைய குஞ்சுகளாகிய இனத்தை அழைத்துக் கூவினற் போல இன்னாததாகி விலைமகளால் கூறப்படும்பழி மொழியோடு எம்முடைய தெருவிற்கு வருதலை ஒழிவாயாக! நீ வாழ்க.
(கருத்து) எம் தெருவிற்கு வந்தால் விலைமகள் பழி கூறுவார்.
தன்னாற் பாதுகாக்கப்பட்ட பிள்ளையை கவருமோ வென்னும் அச்சத்தினால் கோழிப் பேடை கூவியது போலத் தம்பால் இருந்து வந்த தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாளோ வென்னும் அச்சத்தினால் பரத்தையர் பழிமொழி கூறினரென்று கொள்க.
Wednesday, October 22, 2014
குறுந்தொகை-138
தோழி கூற்று
(முதல்நாள் உரிய இடத்தே வந்து தலைவியைக் காணாத தலைவன் மறுநாள் கேட்கும் அணிமையில் நிற்பதை அறிந்த தோழி, “நேற்றிரவு தலைவரது வரவை எதிர்நோக்கித் துயிலாமல் இருந்தேம்; அவர் வந்திலர்” எனக் கூறியது.)
குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் கொல்லன் அழிசி
இனி பாடல்-
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.
-கொல்லன் அழிசி.
உரை-
எமது வீட்டின் அயலதாகிய ஏழிற்குன்றத்தின் மேலுள்ள மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்தையுடைய நொச்சியினதுஅழகு மிக்க மெல்லிய கொம்புகள் உதிர்த்த நீலமணி போன்ற மலர்களின் ஓசையை மிகக் கேட்டு பெரிய ஊரிலுள்ளோர் தூங்கினாலும் நாங்கள் தூங்கமாட்டோம்.
(கருத்து) நேற்றுத் தலைவரை யாம் எதிர் நோக்கியிருந்தோம்.
தலைவன் கேட்கும் அண்மையில் இருப்பதை அறிந்த தோழி, “ நேற் றிரவு நாம் துயிலாமல் தலைவரது வரவை எதிர்நோக்கி இருந்தோம். ஊரினர் யாவரும் துயின்றனர். நாங்கள் தூங்கவில்லை..வீட்டுக்கு அருகிலுள்ள ஏழிற் குன்றத்தின்மேல வளர்ந்த நொச்சியின் மலர் உதிரும் ஓசையும் எம் காதில் விழுந்தது. தலைவர் வந்தால் நாம் நன்கு அறிந்திருப்போம். அவர் வந்திலர்” என்று கூறியது.
Tuesday, October 21, 2014
குறுந்தொகை-137
தலைவன் கூற்று
(தலைவியைப் பால்வயத்தனாகிக் கண்டு அளவளாவிய தலைவன், “நின்னை யான் பிரியேன்” என்று கூறி, அவள் பிரிவென்ப தொன்றுண்டென்று ஓர்ந்து அஞ்சுமாறு செய்தது.)
பாலைத் திணை- பாடலாசிரியர் பெருங்கடுங்கோ.
இனி பாடல்-
மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப
நிற்றுறந் தமைகுவெ னாயி னெற்றுறந்
திரவலர் வாரா வைகல்
பலவா குகயான் செலவுறு தகவே.
- பாலை பாடிய பெருங்கடுங்கோ.
உரை-
மென்மைத் தன்மையையுடைய அரிவையே! நின் நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்த நின்னைப் பிரிந்து சென்று, சென்ற இடத்தே மனம் பொருந்தி இருப்பேனாயின் ,நான் அங்ஙனம் செல்வதற்கு தக்க வினையின் கண் என்னை நீங்கி இரப்போர் வராத நாட்கள் பலவாகுக
(கருத்து) நின்னைப் பிரியேன்; பிரியின் அறப்பயனை இழந்தவனாவேன்.
Monday, October 20, 2014
குறுந்தொகை-136
தலைவன் கூற்று
(“நீ காம நோயுறல் தகாது” என்று பாங்கனை நோக்கித் தலைவன், “காமம் யாவரிடத்தும் இயல்பாக உள்ளதே; ஆயினும் அது வெளிப்படற் குரியதொரு காலத்தை யுடையது” என்று கூறியது.)
குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் மிளைப்பெருங் கந்தன்
இனி பாடல்-
காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை
குளகுமென் றாண்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே.
-மிளைப்பெருங் கந்தன்.
உரை-
காமம், காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்.அக்காமமானதுபுதியதாகத் தோற்றும் வருத்தமும் நோயும் அன்று.நுண்ணிதாகி கடுத்தலும் மிகுதலும் குறைதலும் இலது.யானை தழையுணவை மென்று தின்று அதனாற் கொண்ட மதத்தைப் போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும் செவ்வியையும் உடையது.
(கருத்து) காமம் இயல்பாகவே ஒருவரிடம் இருந்து உரிய காலத்தில் வெளிப்படுவது.
(தலைவன் ஒரு தலைவியைக் காமுற்றா னென்பதை யறிந்த பாங்கன், “பேரறிவுடைய நீ காம நோயை அடைதல் நன்றோ?” என்று இடித்துரைக்க, அவனை நோக்கித் தலைவன் கூறியது இது.)
Sunday, October 19, 2014
Saturday, October 18, 2014
குறுந்தொகை-135
தோழி கூற்று
(தலைவன் பிரியவெண்ணியிருப்பதை யறிந்து வருந்திய தலைவியை நோக்கி, “ஆடவர் மகளிர்க்கு உயிரென்று கூறியவராகிய தலைவர் இப்பொழுது நின்னைப் பிரிந்து செல்லார்’ என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)
பாலைத்திணை- பாடலாசிரியர் பெருங்கடுங்கோ
இனி பாடல்-
வினையே யாடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவ ருயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅ றோழி யழுங்குவர் செலவே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.
உரை-
தோழி.....தொழில்தான் ஆண்களுக்கு உயிர் ஆகும்.ஒளி பொருந்திய நெற்றியையுடைய இல்லின் கண் உறையும் மகளிர்க்கு கணவன்களே உயிர் ஆவாரென்று நமக்கு எடுத்துக் கூறியவரும் அத் தலைவரே! ஆகவேஅழுதலை ஒழிவாயாக! அவர் செல்லுதலை தவிர்ப்பார்
(கருத்து) தலைவர் உன்னைப் பிரியாராதலின் நீ வருந்தற்க.
Friday, October 17, 2014
குறுந்தொகை -134
தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்டப் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவிப்ப அத்தோழியை நோக்கி, “தலைவன் பிரியாமல் இருப்பின் அவனது நட்பு நன்று; பிரிவுண்மையின் வருத்தம் உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.)
குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கோவேங்கை பெருங்கதழ்வன்
இனி பாடல்-
அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவின் றாயி னன்றுமற் றில்ல
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை யலங்குசினை புலம்பத் தாக்கிக்
கல்பொரு திரங்குங் கதழ்வீ ழருவி
நிலங்கொள் பாம்பி னிழிதரும்
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே.
-கோவேங்கைப் பெருங்கதழ்வன்.
உரை-
தோழி...ஒன்று கூறுவேன்..கேட்பாயாக...குறிய கற்களினிடத்தே பருத்து வளர்ந்த உயர்ந்த அடியையுடைய வேங்கை மரத்தினது மலர்களையுடைய அசைந்த கிளைகள், அம்மலர்களை நீங்கித் தனிக்கும்படி அடித்து கற்களை அலைத்து
ஒலிக்கும் விரைந்து வீழும் அருவியானது நிலத்தைத் தனக்கு இடமாக ஊர்ந்து கொள்ளும் பாம்பைப்போல இறங்குதற்கிடமாகிய ஒன்றற் கொன்று குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனோடு மணந்ததால்
உண்டான தொடர்பு ,தலைவனுக்கு நம்மோடு பிரிவு இல்லாவிடில் நிச்சயமாக நன்றாகும்.அதுவே என் விருப்பம்.
(கருத்து) தலைவன் பிரிவை நான் ஆற்றேனாயினேன்.
(அருவியின் அருகில் வளர்ந்ததாதலின் வேங்கை பருத்தும் உயர்ந்தும் பூக்கள் மலிந்தும் விளங்கியது. அருவி தாக்குதலால் பூக்கள் உதிர்ந்தன; அதனால் சினை தனிமை யுற்றது. கதழ்வீழ் அருவி - கதழ்ந்து வீழும் அருவி;)
Thursday, October 16, 2014
குறுந்தொகை-133
தலைவி கூற்று
(தலைவன் தலைவியை மணக்காமல் நெடுங்காலம் இருந்ததால், வருந்திய தலைவி, “என் நலத்தை இழந்தும் தலைவர் வரைவாரென்னும் கருத்தினால் இன்னும் உயிர்தாங்கி நிற்கின்றேன்” என்று கூறியது.)
குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் உறையூர் முதுகண்ணன் சாத்தன்
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினை
கிளிகுறைத் துண்ட கூழை யிருவி
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென்
உரஞ்செத்து முளெனே தோழியென்
நலம்புதி துண்ட புலம்பி னானே.
-உறையூர் முதுகண்ணன் சாத்தன்.
உரை-
தோழி, குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப்போன்ற சிறு தினையினது கதிரை கிளி ஒடித்து உண்ணுதலால் கூழையாகிய தாள் பெரிய மழை உண்டானமையால் மீண்டும் இலை தழைத்தாற் போல தலைவர் எனது பெண்மை நலத்தைப் புதிதுண்டமையால் உண்டாகிய தனிமை வருத்தத்தோடு எனது வலி அழிந்தும் இன்னமும் உயிருடன் இருக்கின்றேன்.
(கருத்து) தலைவர் மணப்பார் என இன்னும் உயிர் தாங்கி நிற்கின்றேன்.
பெரும்பெயல் நீட்டிப்பின் தினை மீண்டும் கதிர் விடுதல் போலத் தலைவன் வந்து மணப்பானானால் என் நலனை மீண்டும் பெறுவேன் (எனத் தலைவி தோழியிடம் கூறினாள்).
குறிஞ்சி நிலத்தினளாகிய தலைவி தினைப்புனங்காத்துக் கிளியோப்பிய பழக்கத்தினால் தான் அறிந்த உவமையையே கூறினாள்.
Wednesday, October 15, 2014
குறுந்தொகை-132
தலைவன் கூற்று
(பேரறிவுடைய நீ ஒரு மகள் திறத்து உள்ளமுடைதல் அழகோவென இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவியின் இயல்பும் வனப்பும் கூறி, “ இத்தகைய தன்மையுடையாளை நான் எப்படி மறப்பேன்!” என்று தலைவன் சொல்லியது.)
குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்
இனி பாடல்
கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்
கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி
தாய்காண் விருப்பி னன்ன்
சாஅய்நோக் கினளே மாஅ யோளே.
என்பது கழற்றெதிர்மறை.
- சிறைக்குடியாந்தையார்
உரை-
தோழனே! மாமையையுடைய தலைவி தழுவுவதில் விரைவுடையவள்.விருப்பம் தரும் வனப்பை யுடையவள்.குவிதலையுடைய மெல்லிய மார்பகங்களை உடையவள்.நீட்சியையுடைய கூந்தலையுடையவள்,
பக்கத்தில் மேயச் சென்ற மிக்க சுரப்பையுடைய நல்ல பசுவினது ,நடுங்கும் தலையையுடைய கன்று அத் தாய்ப்பசுவைக் கான வேண்டும் எனும் விருப்பத்துடன் இருந்தாற் போன்ற விருப்பத்தை வெளிப்படுத்தும் மெலிந்த பர்வையையுடையவள்.அப்படிப்பட்டவளை எப்படி மறந்து இருப்பேன்!
(கருத்து) தலைவி மறத்தற்கரிய இயல்புடையவள்.
‘கன்று பசுவைப் பார்த்திருத்தலைப் போன்ற விருப்புடையளாதலினாலும், மனங்கவரும் இயல்பினளாதலினாலும் அவளை மறந்து அமைதல் அரிது’ என்று தலைவன் கூறினான்.
தலைவனுக்குப் பசுவும், தலைவிக்குக் கன்றும் உவமை
Tuesday, October 14, 2014
குறுந்தொகை-131
தலைவன் கூற்று
(தலைவியைப் பிரிந்துவந்த தலைவன் தான் மேற்கொண்ட முயற்சி முற்றுப்பெற்றபின் தலைவிபால் மீள எண்ணி, “தலைவியின் ஊர் நெடுந்தூரத்தில் உள்ளது; “அவள்பாற் செல்வதற்கு என் நெஞ்சம் மிக விரைகின்றது” என்று கூறியது.)
பாலைத்திணை - ஓரேருழவனார்
இனி பாடல்-
ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோட்
பேரமர்க் கண்ணி யிருந்த வூரே
நெடுஞ்சே ணாரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்
தோரே ருழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றா னோகோ யானே.
-ஓரேருழவனார்
உரை-
அசைகின்ற மூங்கிலை ஒத்த அழகினையும் பருமையையும் உடைய தோளையும் ,பெரிய அமர்த்தலையுடைய கண்களையும் பெற்ற தலைவி இருந்த ஊர், நெடுந்தூரத்தில் உள்ளது.எனது நெஞ்சானது ஈரம் உண்டாகிய செவ்வியையுடைய பசிய புனத்தையுடைய ஒற்றை ஏரையுடைய உழவனைப் போல பெரிய விரைவை அடைந்தது.அதனால் வருந்துகிறேன்.
(கருத்து) யான் கூறிவந்த பருவம் வந்தமையின் என் நெஞ்சம் தலைவியை அடைய அவாவுகின்றது.
(ஓரேர் உழவன், ஈரம் வீண்படாமல் உழுதற்கு விரைதலைப் போல என் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்ற தென்றான்.)
Monday, October 13, 2014
குறுந்தொகை-130
தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் இவ்வுலகில் எங்கேனும் ஓரிடத்தில் இருப்பார்; அவரைத் தேடித் தருவேன்” என்பதுபோலத் தோழி கூறியது.)
பாலைத்திணை- பாடலாசிரியர் வெள்ளி வீதியார்
இனி பாடல்-
நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டி னாட்டி னூரி னூரிற்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோநங் காத லோரே.
-வெள்ளிவீதியார்
உரை-
நம்முடைய தலைவர் சித்தி பெற்ற சாரணரைப்போல பூமியைத் தோண்டி உள்ளே புகார்.ஆகாயத்தின் கண் ஏறார்.குறுக்கிடுகின்ற பெரிய கடலின் மேல் காலினால் நடந்து செல்லார்.நாடுகள் தோறும், ஊர்கள் தோறும் முறையாகக் குடிகள் தோறும் ஆராய்ந்தால் அகப்படாமல் தப்புவாரும் உள்ளாரோ ?(இல்லை)
(கருத்து) தூதுவிட்டுத் தலைவரைத் தேடித் தருவேன்.
“நம் தலைவர் இவ்வுலகத்தில் ஏதேனும் ஒரு நாட்டிலுள்ள ஓரூரில் ஒரு குடியில் இருப்பர்; சாரணரைப் போல இவ்வுலகுக்குப் புறம்பே செல்பவரல்லர்; ஆதலின் எல்லா நாட்டிலும் உள்ள ஊர்கள் யாவற்றிலும் அமைந்த குடிகளையெல்லாம் தேடின் அகப்படாமற் போதற்கு நியாய மில்லை; அங்ஙனம் தேடித் தருவேன். நீ வருந்தற்க” என்று தோழி, தலைவியை ஆற்றுவித்தாள்.
(வரலாறு
இச்செய்யுளைப் பாடிய வெள்ளி வீதியார் தம்முடைய கணவனைத் தேடித் திரிந்தார் என்றதொரு செய்தி,)
Friday, October 10, 2014
குறுந்தொகை=129
தலைவன் கூற்று
(தலைவியோடு அளவளாவி மீண்ட தலைவனது வாட்டத்தைக் கண்ட பாங்கன், “ உனக்கு இவ்வாட்டம் உண்டாதற்குக் காரணம் யாது?” என்றவழி, “ஒரு மங்கையின் நுதல் என் உள்ளத்தைப் பிணித்தது” என்று தலைவன் கூறியது.)
நெய்தல் திணை - பாடலாசிரியர் கோப்பெருஞ்சோழன்
இனி பாடல்-
எலுவ சிறாஅ ரேமுறு நண்ப
புலவர் தோழ கேளா யத்தை
மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப்
பசுவெண் டிங்க டோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே.
- கோப்பெருஞ்சோழன்
உரை-
(தோழா) இளைஞர் இன்புறுதற்குக் காரணமாகிய நட்பையுடையோய் அறிவிடையாருக்குத் தோழா கேட்பாயாக! ஓரிய கடலின் நடுவில் எட்டாந் திதிக்குரிய இளை வெள்ளிய சந்திரன் தோன்றியதைப்போல, ஒரு மகளின் கூந்தலுக்கு அயலில் விளங்குகின்ற சிறிய நெற்றி புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப்போல எம்மைப் பிணித்தது.
(கருத்து) ஓர் அழகிய மகள் என் நெஞ்சத்தைக் கவர்ந்தாள்.
Thursday, October 9, 2014
Wednesday, October 8, 2014
குறுந்தொகை-128
தலைவன் கூற்று
(தலைவன் தலைவியை வழக்கமாய் சந்திக்கும் இடத்தில் காணாது மீளும் பொழுது நெஞ்சை நோக்கி, “இனி தலைவி காண்பதற்கு அரியவள்; நீ துன்புற வேண்டியதுதான்” என்று கூறியது.)
நெய்தல் திணை- பாடலாசிரியர் பரணர்
இனி பாடல்-
.
குணகடற் றிரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை
அயிரை யாரிரைக் கணவந் தாங்குச்
சேய ளரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.
-பரணர்
உரை-
(நெஞ்சே! கீழ்கடல் அலைக்கு அருகில் உள்ளதாகிய முதுமையால் சிறகுகள் நீங்கப் பெற்ற நாரை,திண்மையாகிய தேரையுடைய சேரனது, மேற்கடற்கரையில் அமைந்த தொண்டி என்னும் பட்டினத்தின் கடல் துறையின் முன் உள்ள அயிரை மீனாகிய பெறற்கரிய உணவைப் பெறும் பொருட்டு தலையை மேலே எடுத்தாற்போல நெடுந்தூரத்தில் உள்ளவளும் பெறற்கரியவளுமாகிய தலைவியை பெறுவதற்கு நினைந்தாய்.நீ வருத்ததையுடைய துன்பத்திற்குக் காரணமாகிய உழ்வினையுடையை
(கருத்து) இனித் தலைவியை நான் அடைய முடியாது
குறுந்தொகை -127
தோழி கூற்று
(தலைவன் தலைவியின்பால் பாணனைத் தூதாக விட்டுத் தான் பின் நிற்பத் தோழி அவனை நோக்கி, “நின்பாணன் பொய்யனாயினன்; அதனால் பாணர் யாவரும் பொய்யர் போலுமென எண்ணுவே மாயினேம்” என்று கூறி வாயில் மறுத்தது.)
மருதம் திணை - பாடலாசிரியர் ஓரம் போகியார்
இனி பாடல்-
குருகுகொளக் குளித்த கெண்டை யயல
துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
உள்ள பாண ரெல்லாம்
கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.
-ஓரம் போகியார்
உரை-
நாரை கவர்ந்து கொள்ள அதன் வாயினின்று நிருட் குளித்த கெண்டை மீன் அயலாதாகிய நிறம் பொருந்திய தாமரையின் வெள்ளிய அரும்பை .அஞ்சும் வயல் பக்கங்களையுடைய காஞ்சி மரங்கள் வளர்ந்த ஊரையுடைய தலைவ.. நின் பாணன் ஒருவன் பொய்யனானமையால் மற்றுள்ள பாணர்கள் அனைவரும்.நீ அகன்றதால்தனித்திருக்கும் மகளிருக்கு பொய்யரைப் போலத் தோன்றுவர்.
(கருத்து) நின் தூதுவனாகிய பாணன் பொய்யன்.
(வி-ரை.) குருகு - கொக்குமாம். குளித்தல் - மறைதல். உரு - அச்ச முமாம். தாமரை - இங்கே வெண்டாமரை.
(நாரையாற் கௌவப்பட்டுத் தப்பி நீருட் குளித்த கெண்டை மீண்டும் நீரின்மேல் எழும்போது தாமரை முகையை அந்நாரையென்றே கருதியது; “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற பழமொழி இங்கே நினைத்தற்குரியது.)
(“தலைவன் நினை மறப்பானல்லன்; அவர் தூய ஒழுக்கமுடையவன்” என்று அப்பாணன் தலைவிபாற் கூறிய பொய்க் கூற்றுக்களைக் கேட்ட வளாதலின் ஒரு நின்பாணன் பொய்யனாக வென்றாள். நின்பாணன் கூறுவனவெல்லாம் பொய்யென்னும் தன் கருத்தையே சமற்காரமாகப் புலப்படுத்தி வாயில் மறுத்தாள்.)
Tuesday, October 7, 2014
"ல"
நானும்
"ள" வும்
சகோதரர்கள்
ஆனால் உங்களில்
பலர் "ள"என என்னையும்
"ல" என அண்ணன் 'ள" வையும்
அழைப்பதால்..
யாரை அழைக்கிறீர்கள்
என குழப்பம்
எங்களுக்குள்
நாக்கை மடக்கி
முன் பற்களின் பின்
வைத்து அழையுங்கள்
நான் வருவேன்
நாக்கை மடக்கி
பின்னால் அண்ணத்தில்
அழையுங்கள்
அண்ணன் வருவான்..
செய்வீர்களா? நீங்கள்
செய்வீர்களா!
குறுந்தொகை- 126
தலைவி கூற்று
(தலைவன் மீண்டுவருவேனெனக் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்த பின்பும் அவன் வாராமையால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “கார்ப்பருவம் வந்துவிட்டது; முல்லைக் கொடிகள் அரும்பின; தலைவர் இன்னும் வந்திலர்” என்று கூறியது.)
முல்லைத் திணை - பாடலாசிரியர் ஒக்கூர் மாசாத்தி
இனி பாடல்-
இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரா ரெவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை யிலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.
-ஒக்கூர் மாசாத்தி.
உரை-
(தோழி) இளமையது அருமையைப் பாராராகி .பொருளை விரும்பி என்னைப் பிரிந்து சென்ற தலைவர் இவ்விடத்தும் மீண்டு வந்திலர்.எவ்விடத்தில் உள்ளாரோ என்று நான் எண்ணியிருக்க, நறிய தண்ணிய கார் காலத்தில் மழையாற் பாதுகாக்கப்பட்ட பூவையுடைய முல்லைக்கொடியினது தொகு முகைகளை விளங்குகின்ற தன் பற்களாகக் கொண்டு நம்மைப் பிரித்துச் சிரிக்கும்.
(கருத்து) கார்காலம் வந்துவிட்டது; தலைவர் வந்திலர்.
(தொகுமுகையாகலின் பல்வரிசையை ஒத்தன. முல்லைமலரால் நறுமையும் பெயலால் தண்மையும் உடைமையின் நறுந்தண் காரென்றாள்;)
Monday, October 6, 2014
குறுந்தொகை-125
தலைவி கூற்று
(தலைவன் மணம் செய்யாமல் நெடுநாள் இருந்ததால் வருந்திய தலைவி, அவன் கேட்கும் அண்மையில் இருப்பத்தோழியை நோக்கி, தலைவன் என் நலம் கொண்டான்; அந்நலம் என்னைப் பிரிந்தது. நான் இன்னும் உயிரோடு வாழ்ந்திருக்கின்றேன்” என்று கூறித் தலைவன் மணக்காவிடின் உயிர் நீங்குமென்ற குறிப்பை உணர்த்தியது.)
நெய்தல் திணை - பாடலாசிரியர் அம்மூவன்
இனி பாடல்-
இலங்குவளை நெகிழச் சாஅ யானே
உளெனே வாழி தோழி சாரற்
றழையணி யல்குன் மகளி ருள்ளும்
விழவுமேம் பட்டவென் னலனே பழவிறற்
பறைவலந் தப்பிய பைத னாரை
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.
- அம்மூவன்
உ ரை-.
(தோழி) மலைச்சாரலில் விளைந்த தழையினாலாய உடையை அணியும் பெண்மை அழகுடைய மகளிர் யாவரினும், விழாவைப்போலச் சிறப்பெய்திய எனது பெண்மை நலம்,பழைய விறலையுடைய சிறகின் வன்மை தவறியதனால் உண்டாகும் துன்பத்தையுடைய நாரை,அலைகள் தோயப் பெற்ற வளைந்த மரக்கிளையில்தங்கியிருக்கும் குளிர்ந்த கடல் துறையை உடைய தலைவனோடு என்னை விட்டுப் பிரிந்து சென்ற இடம் பெயர்ந்தது அங்ஙனமாகவும் யான் மாத்திரம் விலங்குகின்ற வளைகள் நெகிழும் படி மெலிந்து இன்னமும் உயிருடன் உள்ளேன்.
(கருத்து) தலைவன் விரைவில் வவந்து மணக்கவிடின் உயிர் தரியேன்.
மரம் கரையிலிருப்பினும் அதன் கிளை அலைவந்து தோயுமாறு வளைந்தது. மீனைத் தாராதொழியின் நாரை இரையின்றி உயிர்நீத்தலைப் போலத் தலைவன் இரங்கி வரைந்து கொள்ளானேல் யானும் உயிர்விடுவேன்..
Sunday, October 5, 2014
குறுந்தொகை-124
தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய தலைவன், “பாலை நிலம் இவளை வருத்தற்கு உரியதன்று: இன்னாமையையுடையது” என்று கூற, “தலைவரைப் பிரிந்தாருக்கு வீடுமட்டும் இனிமையையுடையதோ?” என்று வினவு முகத்தால் தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி அறிவித்தது.)
பாலைத் திணை- பாடலாசிரியர் பாலைபாடிய பெருங்கடுங்கோ
இனி பாடல்
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே
-பாலை பாடிய பெருங்கடுங்கோ
உரை- உப்பு வணிகர் பலர் கூடிக் கடந்து சென்ற பக்கத்தையும், விரிந்த இடத்தையும் பெற்ற. குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய ஓமை மரங்கள் வளர்ந்த பெரிய பாலை நிலங்கள் இன்னாமையையுடையன என்று கூறித் தனியே செல்ல கருதினீராயின் ,தலைவரைப் பிரிந்த தனிமையையுடைய மகளிருக்கு வீடுகள் இனிமை தருவனவோ? (இல்லை)
(கருத்து) தலைவியையும் உடன்கொண்டு செல்லுதல் வேண்டும்.
(வி-ரை.) தலைவியை உடன்கொண்டு செல்லவேண்டுமென்று விரும்பிய தோழியை நோக்கித் தலைவன், “யான் செல்லும் வழியிலுள்ள பாலைநிலம் இன்னாமையை யுடையது” என்று கூற அது கேட்ட தோழி கூறியது இது. “பாலை நிலம் இன்னாதென்றீர்: தலைவர் பிரிந்த மனை, மகளிர்க்கு இனிமையைத் தருவனவோ? இன்னாமையை யன்றோ தருவன? இவளைப் பிரிந்து சென்றால் இம்மனை இவளுக்குப் பாலையினும் இன்னாமையை உடையதாகும்; ஆதலின் இவளை உடன்கொண்டு செல்லுதலே நன்று’’ என்று தோழி கூறினாள்.
Saturday, October 4, 2014
Friday, October 3, 2014
குறுந்தொகை - 123
தோழி கூற்று
(தலைவன் பகலில் வந்து மறைந்து நிற்க, “தலைவர் இன்னும் பாணிப்பாராயின் நம் தமையன்மார் மீன்வேட்டையினின்றும் திரும்பி வருவாராதலின் அவர் நம்மைக் காண்டலரிது; இப்பொழுதே வருவாராயின் நன்றாகும்” என்னும் கருத்துத் தோன்றத் தோழி தலைவிக்குக் கூறியது.)
நெய்தல் திணை - பாடலாசிரியர் ஐயூர் மடவன்
இனி பாடல்-
இருடிணிந் தன்ன வீர்ந்தண் கொழுநிழல்
நிலவுக்குவித் தன்ன வெண்மண லொருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.
-ஐயூர் முடவன்
உரை-
நிலவைத் தொகுத்தாற் போன்ற தோற்றத்தையுடைய வெள்ளிய மணற்பரப்பின் ஒரு பக்கத்தில் உள்ள இருள் செறிந்தாற் போன்ற ஈரமும் குளிர்ச்சியுமுடைய கொழுவிய நிழலையுடைய கரிய கிளைகளையுடைய புன்னை மரங்கள் அடர்ந்த பூஞ்சோலை தனிமைப் பட்டிருப்ப தலைவர் இன்னும் வந்தாரில்லர்.பலவகை மீன்களை வேட்டையாடுதலையுடைய தமையன்மார் ஏறிச் சென்ற மீன் படகுகள் மீண்டு வரும்.
(கருத்து) தலைவர் இப்பொழுதே வருதல் நலம்.
( பகலில் தலைவியைக் கடற்கரைப் பொழிலிற் கண்டு இன்பந் துய்த்துவரும் தலைவன் ஒரு நாள் அங்கே தலைவி அறியாதவாறு அவளும் தோழியும் பேசுவனவற்றை அறிந்து மகிழும் அவாவினால் மறைந்திருந்தான். அவன் வந்திலனென்று கருதிய தோழி பின்பு அவன் அருகில் மறைந்திருப்பதை உணர்ந்து அவன் கேட்கவேண்டுமென்னும் கருத்தோடு தலைவிக்குச் சொல்லுவாளாய் இதனைக் கூறினாள்.)
“தலைவர் இதற்குள் வந்திருத்தல் வேண்டும். இனி வருவதற்குத் தாமதமானால் மீன்வேட்டைக்குச் சென்ற நம் தமையன்மார் மீண்டு வந்துவிடுவர் ஆதலால், இங்கே நிற்பது இயலாதாகும்” என்று தலைவன் அறியும்படி கூறினாள். இதற்குப் பயன் தலைவன் உடனே மறைவினின்றும் வெளிவந்து தலைவியைக் காண வேண்டும்" என்பதாம்.
Thursday, October 2, 2014
குறுந்தொகை - 122
தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்திக் கூறியது.)
நெய்தல் திணை - பாடலாசிரியர் ஓரம்போகியார்
இனி பாடல்-
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
குண்டுநீ ராம்பலுங் கூம்பின வினியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதா னன்றே கங்குலு முடைத்தே.
என்பது தலைமகள் பொழுதுகண்டு அழிந்தது.
-ஓரம்போகியார்
உரை-
பசிய கால்களையுடைய கொக்கினது புல்லிய புறத்தைப் போன்ற, ஆழமாகிய நீர்நிலையில் வளர்ந்த ஆம்பலின் மலர்களும் குவிந்தன.
இப்பொழுது மாலை நேரம் வந்தது.அது வாழ்வதாக!இங்ஙனம் வந்தது மாலையாகிய தான் ஒன்று மட்டும் அன்று.தன்பின் வரும் யாமத்தையும் உடையது.இனி என் செய்வேன்!
(கருத்து) இராக்காலம் வந்து விட்டது; இனி யான் மிக்க துன்பத்தை அடைவேன்.
.
மாலை வந்ததனால் துன்புற்ற தலைவி, “இம்மாலையோடு என்துயர் ஒழிந்திலது; இதன்பின் வருவது கங்குல்; அதுவும் என்துயரை மிகுவிப்பதாகும்” என வருந்தினாள்.
(மாலை - இரவின் முதல் யாமம்; கங்குல் - இடையாமம்.)
Wednesday, October 1, 2014
குறுந்தொகை- 121
தலைவி கூற்று
(தலைவன் சொன்ன இடத்தில் சந்திக்க வராமையால் ஒரு நாள் மீண்ட தலைவி, பின் ஒரு நாள் அவன் வந்தமை கூறிய தோழியை நோக்கி, “நீ உரைப்பது உண்மையோ? முன் அவன் வாராமையால் துன்புறுகின்றேன்” என்று கூறியது.)
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்
இனி பாடல்-
மெய்யோ வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை்
ஆற்றப் பாயாத் தப்ப லேற்ற்
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனவென் றடமென் றோளே.
=கபிலர்
உரை-
(தோழி) இப்பொழுது தலைவன் வந்ததாக நீ கூறியது உண்மையோ! மலைப்பக்கத்தில் மைபட்டாற் போன்ற கரிய முகத்தையுடைய ஆண்குரங்கு கொம்பு தாங்கும்படி பாயாத தவற்றினது பயன் அக்குரங்கை ஏற்றுக் கொண்டு முறிந்த அக்கொம்பினிடம் சென்றார் போல தலைவன் சொன்ன இடத்தில் வராத தன் தவற்றின் பொருட்டு என் பரந்த மெல்லிய தோள்கல் பசலையை அடைந்தன.
(கருத்து) ஏற்ற குறியைச் செய்யாது முன்னர்த் தவறிய தலைவன் இப்போது வந்தான் என்று நீ கூறுதல் மெய்யோ?
.
“குரங்கு, கொம்பு ஏற்றுக் கொள்ளும்படி பாயாமையால் அது முறிந்து போனதுபோல, தலைவர் நான் அறியும் வண்ணம் குறி செய்யாத தவற்றால் என் தோள்கள் பசந்தன” என்று தலைவி கூறினாள்.
(தலைவன் சொன்ன இடத்தில் சந்திக்க வராமையால் ஒரு நாள் மீண்ட தலைவி, பின் ஒரு நாள் அவன் வந்தமை கூறிய தோழியை நோக்கி, “நீ உரைப்பது உண்மையோ? முன் அவன் வாராமையால் துன்புறுகின்றேன்” என்று கூறியது.)
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்
இனி பாடல்-
மெய்யோ வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை்
ஆற்றப் பாயாத் தப்ப லேற்ற்
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனவென் றடமென் றோளே.
=கபிலர்
உரை-
(தோழி) இப்பொழுது தலைவன் வந்ததாக நீ கூறியது உண்மையோ! மலைப்பக்கத்தில் மைபட்டாற் போன்ற கரிய முகத்தையுடைய ஆண்குரங்கு கொம்பு தாங்கும்படி பாயாத தவற்றினது பயன் அக்குரங்கை ஏற்றுக் கொண்டு முறிந்த அக்கொம்பினிடம் சென்றார் போல தலைவன் சொன்ன இடத்தில் வராத தன் தவற்றின் பொருட்டு என் பரந்த மெல்லிய தோள்கல் பசலையை அடைந்தன.
(கருத்து) ஏற்ற குறியைச் செய்யாது முன்னர்த் தவறிய தலைவன் இப்போது வந்தான் என்று நீ கூறுதல் மெய்யோ?
.
“குரங்கு, கொம்பு ஏற்றுக் கொள்ளும்படி பாயாமையால் அது முறிந்து போனதுபோல, தலைவர் நான் அறியும் வண்ணம் குறி செய்யாத தவற்றால் என் தோள்கள் பசந்தன” என்று தலைவி கூறினாள்.
Subscribe to:
Posts (Atom)