Wednesday, February 10, 2021

கவி வீரராகவ முதலியாரும்..செழியனும் - 1 (குறுந் தொடர்)


 


புறக்கண் இல்லாமல் போனாலும் அகக்கண் ஒளி படைத்தோர் பலர் உண்டு புவியில்.புறக்கண் இழந்த புலவர்களும் இருந்தனர்.தொண்டை மண்டலத்தில்  உழலூர் என்னும் ஊரில் பிறந்தவர் கவி வீரராகவ முதலியார்.16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.


கண் பார்வை இழந்தவராக இருந்தாலும் அறிவு கூர்மையாக இருந்தது.தமது முதுகில் எழுதச் சொல்லி தமிழைக் கற்றாராம் இவர்."தன் நெஞ்சம் ஏடெனக் கற்றான் கவி முத்தமிழையுமே" என்று இவர் கல்வி சிறப்பைப் பற்றி பாடியுள்ளார் ஒரு புலவர்.


கம்ப ராமாயணம் இவருக்கு முழுவதும் மனனம்.கம்ப ராமாயணத்தில்..இன்னசொல்  எங்கெங்கே வருகிறது எனக் கேட்டால் அது வந்த இடத்தைச் சொல்வாராம்.இன்ன உவமை எத்தனை இடங்களில் வருகிறது? என்றால், அந்த இடங்களைச்சொல்வாராம்.இவ்வாறு சொல்வதை அவதானம் என்பார்கள்.கம்ப ராமாயணம் அவதானம் செய்வதில் சிறந்து விளங்கிய வீரராகவ முதலியாரைப் பார்த்து கண் உடையவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.


கண்ணினால் ஏட்டைப் பார்த்து மனனம் செய்தவர்களூம் இப்படி செய்ய முடியாத நினைவாற்றல் அவருக்கு.


கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு..கவி பாடும் ஆற்றலும் இவருக்கு உண்டாயிற்று.கருத்தை ஆழமாகவும், தெளிவாகவும் சொல்லும் கவிகளைப் பாடினார்."திருக்கழுக்குன்ற புராணம்",திருவாரூர் உலா,சந்திரவாணன் கோவை,சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், முதலிய நூல்களை இயற்றினார்.


அக்காலத்தில் இலங்கையின் வட பகுதியில் பரராச சிங்கம் எனும் அரசன் ஆட்சி செய்து வந்தான்.யாழ்ப்பாணத்தில் தமிழறிவில் சிறந்த மக்கள் உள்ளனர்..என் அகேள்விப்பட்டு..இவர் கடல் கடந்து இலங்கை சென்றார்.பரராச சிங்கத்துக்கு முன் கம்ப ராமாயணம் அவதானம் செய்து காட்டி..அவ்வரசனையும், அங்கிருந்த புலவர் பெரு மக்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.


அரசன் இவரது இணையற்ற புலமைத் திறமையைப் பாராட்டிப் பல பரிசுகளைத் தந்தான்.ஒரு யானைக் குட்டியையும், சில ஊர்ப் பகுதிகளையையும் வழங்கினான்."யானைக் கன்றும் வளநாடும் புலவர் பெற்றார்" என்பார்கள்.


அக்காலத்தில் சின்னச் சேலத்தில் செழியத்தரையன் என்று ஒருவன் இருந்தான்.அவ்வூரில்..மழையில்லாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.விளைச்சல் குறைந்ததால் பிற இடங்களிலிருந்து அரிசி வரவழைத்து உண்டனர்.தண்ணீர் இல்லையென்றால்..சில நாட்கள் குளிக்காமல் இருக்கலாம்.ஆனால்..தண்ணீர் குடிக்காமல் ஒரு வேளையாவது  இருக்க முடியுமா?      ஊரில் அனைத்துக் கிணறுகளும் வரண்டன.பக்கத்தில் இருந்த ஏரிகள் வற்றின.இந்த நிலையில் மக்களும், விலங்குகளும் நீரின்றி துன்புற்றன.மாடுகள்..ஆடுகள்..இறந்தன.மக்கள் கூட்டம் கூட்ட௳அய் ஊரைவிட்டு வெளியேறத் தொடங்கினர்.எங்கு பார்த்தாலும் மயானம் போன்ற காட்சி.அந்தப் பகுதி முழுவதும் பாலவனமாகியது.


மக்களின் துன்பத்தைக் கண்ட செழிய தரையன்..அதனைத் தீர்க்க ஒரு வழியைக் கண்டு பிடித்தான்.அது என்ன? அடுத்த பகுதியில்...

Friday, November 27, 2020

யார் நல்லவர்..யார் கெட்டவர்

" டோக்கன் நம்பர் 24"


வெளியே பெஞ்சில் காத்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தின் காதுகளில் இது விழுந்தது.


தன் கைகளில் வைத்திருந்த அட்டை டோக்கனைப் பார்த்தார்.அவருடையது தான்..


எழுந்து டாக்டரைப் பார்க்க உள்ளே நுழைய இருந்த அவருக்கு உதவியாளர் கதவைத் திறந்து விட்டார்.


அவரைப் பார்த்ததும் சாம்பசிவம்.."உன்னைப் பார்த்தால் நல்லவனாகத் தெரியவில்லையே! வந்து உன்னை பேசிக் கொள்கிறேன்" என உள்ளே நுழைந்தார்.


அவரை டாக்டர் ரவீந்திரன் "வாங்க" என வரவேற்றார்.


"ஆமாம்..ஆமாம்..எங்களை வாங்க..வாங்கன்னு நீங்க கூப்பிடறதே எங்கக் கிட்ட இருந்து அநியாயத்துக்கு வாங்க..வாங்கதானே!" என்றார்.


இது போன்று பேசும் நோயாளிகள் பலரைப் பார்த்திருந்ததால், அவர் சொல்வதை சட்டை செய்யாமல் புன்முறுவலுடன் "உங்களுக்கு என்ன உடம்புக்கு?" என்றார்.


சிறிது நேரம் யோசித்தவர்"டாக்டர்..எனக்கு..இப்ப எல்லாம் யாரைப் பார்த்தாலும் நல்லவங்களாத் தெரியறதில்லை" என்றார்.


"எவ்வளவு நாளாக இப்படி இருக்கு?""யாரைப் பார்த்து என்ன கேட்கற.நான் உன்னை நல்லவன்னு நினைச்சேன்.இப்படி கேடு கெட்டவனா இருக்கியே.நீ ஒரு ஃபிராடு.உங்கிட்ட வந்தேன் பாரு..என் புத்தியை செருப்பால அடிக்கணும்"      என்று சொல்லிய படியே வெளியேறினார்.

Wednesday, November 25, 2020

"காலத்தினால் செய்யா உதவி"

"கணேஷ்..ஒரு ஆயிரம் ரூபாய் கடனாகக் கொடேன்.கண்டிப்பாக அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் கொடுத்துடறேன்.குழந்தைக்கு ஜுரம்.டாக்டர் கிட்ட உடனே எடுத்துட்டுப் போகணும்" என்றான் பாஸ்கரன்.


பர்ஸில் பணமிருந்தும்..பணத்தைக் கொடுக்க மனது இல்லாததால்.."சாரி பாஸ்கர்..எனக்கே கஷ்டம்."என்று சொல்லி விட்டேன்.பலமுறை இப்படி அவன் கேட்டு நான் கொடுத்திருக்கின்றேன்.ஆனால் கொடுத்த பணம் திரும்பி வராது அவனிடமிருந்து.


பாஸ்கர், "குழந்தைக்கு உடம்பு சரியில்லை" என பலரைக் கேட்டான்..யாரும் கொடுக்கவில்லை.அவனுக்கு கொடுக்கும் பணம் ஒரு வழிப் பாதை என்பதை அனைவரும் அறிந்திருந்ததால்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி "இல்லை" என்று சொல்லி விட்டனர்.


வெறும் கையுடன், அலுவலகத்தில் லீவு சொல்லி விட்டுச் சென்று விட்டான் அவன்.


இரண்டு மணி நேரம் சென்றிருக்கும்.அவன் மனைவியிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது.."கணேஷ் சாரா..பாஸ்கர் உங்களுக்கு ஃபோன் பண்ணச் சொன்னார்.குழந்தை.....டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போக பணம் இல்லாததால்..ஜுரம் அதிகமாகி.....இறந்து போச்சு.ஆஃபீஸ்ல எல்லார் கிட்டேயும் சொல்லச் சொன்னார்.."என்று அழுதபடியே சொல்லி முடித்தாள்.


பகீரென்றது எனக்கு.எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டேன்.


உடனே..ஆஃபீஸில் ஒவ்வொருவரும் பணம் போட்டு..ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் போனோம்


"என் குழந்தையைக்  காப்பாற்ற பணம் கேட்டேன்..ஆனா..ஆனா..அடக்கத்துக்கு கொண்டு வந்து கொடுத்து இருக்கீங்களே!"என்று அழும் அவனை எங்களால் தேற்ற முடியவில்லை     

Monday, November 2, 2020

அம்மா என்றால் அம்மாதான்

 


தனக்கு முன்னால் தட்டில் கொண்டுவந்து வைக்கப்பட்ட அந்த ஸ்வீட்டைப் பார்த்தான் பிரபு.அவன் அம்மாவின் முகம் அதில் தெரிந்தது.


அவனுக்கு இந்த ஸ்வீட் பிடிக்கும் என எவ்வளவு நாட்கள் அம்மா அதை செய்து கொடுத்திருக்கிறாள்.அம்மாவுக்கு மட்டுமே செய்ய தெரிந்த இனிப்பு அது.

அதெல்லாம் பழைய கதை.

அவனுக்கு திருமணம் ஆனவுடன் அம்மா அவனுடைய மனைவி மைதிலியிடம் " இதோ பாரும்மா: இனிமேல் அவனை கவனிக்கவேண்டியது உன் பொறுப்பு.ஆனா இந்த ஸ்வீட் சமாசாரத்தை மட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன்.இதை நான் செய்தால் தான் அவனுக்கு பிடிக்கும்." என்று கூறிவிட்டாள்.


ஆனால்...மைதிலிக்கும்..அம்மாவிற்கும் ஒத்து வராததால் தனிக்குடுத்தனம் வந்து விட்டான் அவன்.

அப்போது கூட..'அம்மா..அந்த ஸ்வீட் பண்றதை மைதிலிக்கு சொல்லிக்கொடு' என்று அவன் கூற..அம்மா செய்முறையை எழுதி அவளிடம் கொடுத்தாள்.

அதற்குப் பிறகு மைதிலி எவ்வளவோமுறை அதை செய்துக் கொடுத்து விட்டாள்..ஆனாலும் அம்மா செய்வது போல இல்லை..அந்த கைப் பக்குவம் வரவில்லை.இதை மைதிலியிடம் அவனாக சொல்லாவிட்டாலும்,அவளுக்கும் தெரிந்தே இருந்தது.

அதனால் எவ்வப்போது அவனுக்கு அந்த ஸ்வீட் சாப்பிட ஆசையோ அப்பவெல்லாம் அம்மாவைப் பார்க்க கிளம்பி விடுவான்.

***** ***** ****** ***** *****

அன்று அவனது பிறந்த நாள்.அம்மா சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள்.கண்டிப்பாக அந்த ஸ்வீட் இருக்கும்.மைதிலியுடன் கிளம்பினான் பிரபு.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது..அம்மா குளியலறையில் இருந்தாள்.

அவனும்,மைதிலியும் அடுக்களையை நோட்டம்விட்டனர்.அம்மாவின் பழைய டயரி ஒன்று கிடைத்தது.அதை எடுத்து புரட்டுகையில்...பக்கத்தில் அந்த ஸ்வீட் செய்முறை இருந்தது.

அதை படித்த மைதிலி...ஆச்சரியத்துடன் "பார்த்தீங்களா:ஸ்வீட்டில் இந்த பொருட்களையெல்லாம் சேர்க்கணும்னு உங்க அம்மா சொல்லித்தரல்லை.அதனால்தான் உங்க அம்மா செய்வதுபோல வரல்லை'என்றவாறு தேவையான பொருட்கள் எழுதியிருந்த பகுதியை சுட்டிகாட்டி அம்மா மீது குற்றம் சாட்டினாள்.

அதை பார்த்த பிரபுவின் முகத்தில்...கோபம்...வருத்தம்...குழ்ப்பம்...

ஆம்...அம்மா முழுமையாக மைதிலிக்கு சொல்லித்தரவில்லை.ஒருவேளை மைதிலி தன்னிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடாது என்பதற்காகவா? ...ச்சே...அப்படிபட்டவளா அம்மா என்று எண்ணியவன் வாயிலிருந்து அவனை அறியாமலேயே வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

நடந்ததை எல்லாம் அடுக்களையின் வாயிலிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அம்மா...கண்களில் கண்ணீர் கொப்பளிக்க "பிரபு: என்னை மன்னிச்சுடுடா..நீ தனி குடித்தனம் போனதும் .இந்த ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே என்னை பார்க்க வர்றே..ஒரு வேளை மைதிலியும் என்னைப்போல செய்ய ஆரம்பித்துவிட்டால் ..நீ வர்றதையும் நிறுத்திவிடுவே...உன்னை பார்க்காமல் என்னால் இருக்கமுடியாதுடா... அதனால்தான் இப்படி கீழ்த்தரமாக நடந்துண்டுட்டேன்..தப்புன்னா மன்னிச்சுடுடா"கூப்பிய கைகளுடன் வார்த்தைகள்...துண்டு துண்டாக குமுறலுடன் வந்தன.

அம்மான்னா அம்மாதான் என்றவாறே நாத்தழுதழுக்க அம்மாவை அணைத்துக்கொண்டான் பிரபு.

Tuesday, October 27, 2020

என்னவென்று சொல்ல...

 "அம்மா..அம்மா..நேரமாயிடுச்சு..ஒர்க் ஃபிரம் ஹோம்னா வேலை குறைச்சல்னு நெனைக்காதே.வேலை அதிகமாயிடுச்சு.ஒன்பது மணிக்கே லேப்டாப் முன்னால உட்காரணும்..தெரிஞ்சுக்க.." என கத்திக் கொண்டிருந்தான் சுரேந்தர்.

'எனக்குத் தெரியும்.முதல்ல டிஃபனை சாப்பிடு" என்றார் அம்மா."இல்லைம்மா..அதுக்கெ எல்லாம் நேரமில்லை.என்னைப் போல சாஃப்ட் வேர் பீப்புள் எல்லாம் நேரம் காலம் பார்க்காம வேலை செய்யறதாலத்தான்..கம்பெனியால எங்கள் எல்லாருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பளம் கொடுக்க முடியுது.இதையெல்லாம் நீ எப்ப தெரிஞ்சுக்கப் போறியோ...அப்பா..அப்பா..கொஞ்சம் தள்ளி நில்லு..வீடியோ கான்ஃபெரென்ஸ்..நீ தெரியறபார்.."என பேசிக் கொண்டே இருந்தான் சுரேந்தர்.


"கம்பெனிக்கு ஏகப்பட்ட லாஸ்னு வேலையை விட்டு இவனை அனுப்பின அதிர்ச்சிலே இருந்து இவன் இன்னமும் மீளலையே! இன்னிக்கும் வேலைக்குப் போறாப் போல ஒர்க் ஃபிரம் ஹோம்னு சொல்லிட்டு பைத்தியம் போல பேசிக்கிட்டு இருக்கானே..எப்ப பழைய நிலைமைக்கு வருவானோ..?' என அம்மாவிடம் வருத்தப் பட்டுக் கிட்டு இருந்தார் அப்பா. 


Monday, October 26, 2020

எங்கே போச்சு..?

 "இங்க தானே வைச்சிருந்தேன்..எங்கே போச்சு?..வாணி..வாணி..நீ பார்த்தியா?"என்றான் ஹாலிலிருந்து சுரேஷ்.


"நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க..எங்கே வைச்சீங்கன்னு


"ஆமாம்.. இங்கதான் வைச்சேன்..நீதான் எதையும் இடம் மாறி..இடம் மாறி வைக்கறவளாச்சே"


"ஆமாம்.எது காணும்னாலும்..நான்தானா? உங்க பொருளை நான் ஏன் எடுக்கப் போறேன்?"


"அப்போ.கால் முளைச்சு அதுவே..ஓடிடுத்தா?"என்றான் கோபத்துடன்.


அதற்குள் சமையலறையில் இருந்து வெளியே வந்தவள்..டீபாயின் மீது வைத்திருந்த டிவி ரிமோட்,செய்தித் தாள்..என ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்துவிட்டு வைத்தாள்.


அதற்குள் வெளியே கிளம்பத் தயாரானவன்.."ஏன்..வேணும்னா என் பேன்ட் பாக்கெட்டிலும் தேடேன்" என பேன்ட் பாக்கெட்டினுள் கையை விட்டவன்"இதோ இருக்கு.."என அசடு வழிய எடுத்தான்.


போன தடவை வெளியே போயிட்டு வந்துட்டு ஃபேஸ் மாஸ்க்கை அப்படியே பேக்கட்ல போட்டுண்டு கத்தறதைப் பாரு"என தன் பங்குக்குக் கத்திவிட்டு சமையலறைக்குள் மீண்டும் நுழைந்தாள் வாணி.

Saturday, October 24, 2020

கடல்


தனியாக
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
இந்த
நதிகள்தான்
ஓடி வந்து
ஒருகை ஓசையாக
அதனுடன்
சங்கமிக்கின்றன

மழையில் நனையவே
ஆசைப்படுகின்றேன்
விண்ணின்
கொடைக்கு
குடை
எதற்கு..

காலம் ஓடுகிறது
மிகப் பெரியவன் சொல்ல
நடுவனோ
சற்றே விரைந்து
செயல்பட
சிறியனோ
நிதானமாய் கடக்கின்றான்
காலக் கடிகாரத்தை

உனக்கென்ன
மலர்ந்து
மணம் விசி விட்டாய்
மொக்காய் நிற்கும் என்னை
மலர விடுவார்களா
அழித்து விடுவார்களா
பாவிகள்

மழையும்..மனிதனும்..
------------------------------
மழை
பெய்து கொண்டிருக்கிறது
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
நொறுக்குத் தீனியுடன்..
பாழாய்ப்போன மழை
வெளியே செல்ல இயலவில்லை
என்கின்றேன்..
தொலைபேசியில் அழைப்பவனிடம்..
நல்லது செய்யும்
மனிதன் மட்டுமல்ல
மழையும்
சபிக்கப்படும் போல.

பெண்களை வர்ணித்தே
கவிதை எழுதப்படுகிறதாம்
கவிஞர்களால்....
வேறு என்ன செய்ய
மாற்றி எழுதினால்
அவனா நீ
என்கிறீர்களே

இதழ்கள்
முத்தத்திற்குக் காத்திருந்தாலும்
தேனை மட்டுமே உறிஞ்சி
பறக்கிறது
வண்டினம்

கலாமும், கனவும்
--------------------------------------
இத் தரணியில்
இளைஞர்களை
நல் கனவுக் காணச் சொன்னார்
நமது கலாம் எனும் மகான்...
கண்ட கனவை
நனவில் நிறைவேற்றிட
நாளும் உழைத்திடுவீர் என்றிட்டார்....
செய்யும் தொழிலில் நேர்மையாய் இருந்திட்டால்
செய்ய வேண்டாம்
கையூட்டு அதிகாரிகளுக்கு சல்யூட்டு
இலட்சிய நாயகன் சொன்னார்....
இனிய வார்த்தைகளில்
விதைத்துவிட்டு சென்றிட்டார் கனவுகளை
வளரும் இளைஞர் மனதில்...
நாளை அவை..
நாளும் வளர்ந்து
அறுவடைக்கு தயாராயிடும்
அன்னை நாடு சிறந்திட...
வாழ்க எம் கலாம் புகழ்
வையகம் இருந்திடும் வரை

கவிதைக்கான
கருவினைத் தேடி
கவிஞனே அலையாதே!
இயற்கை என்னிடம்
இல்லா
கவிதைக் கருவா
உனக்கு
வெளியே கிட்டிடும்


நாட்கள்
நகர்ந்து
கொண்டுதான் உள்ளன
சில
நட்புகளின்
இழப்புகளுடன்

அவர்
நாண
நன்னயஞ் செய்து விட்டாலும்
கண்ணாடியில் விழுந்த
விரிசலாகவே உள்ளது
நட்பு..


அழகிய கண்ணே..
----------------
இதயத்தின் வாசல் அது
இன்பமாய் வரவேற்றிடும்..
காந்தமாய்
கவர்ந்திழுக்கும்..
கவிஞனாய்
கவிதை பேசும்...
கதாசிரியனாய்
கதைபலக் கூறும்..
நடிகனாய்
நவரசமும்
நன்குக் காட்டிடும்...
தூண்டில் போட்டு
தூய மனதினையும்
தூண்டில் புழுவாக்கிடும்..
சாதித்திடும் அனைத்தையும்
தன் கண்ணீரினால்

சக பயணிகள் அவ்வப்போது
இறங்குகிறார்கள் - நானோ
இறங்க வேண்டிய இடம்
எப்போது வரும்
எனத் தெரியாமல்..
பயணித்துக் கொண்டிருக்கிறேன்...


மண்ணில் கிடந்தது நேற்றைய சருகு
மரத்தில் இன்று துளிர்த்த இலை
அதனைக் கண்டு கண்ணீர் விட்டது
தாயின் சோகத்திலும் சற்று மகிழ்ச்சி
தாண்டவமாடியது சற்று.
தாயின் ஆட்டத்தில்
சருகு மறைந்தது.

கூண்டுக்குள் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்
சிறிது சிறிதாக
சிறகுகள்
முளைத்துக் கொண்டிருக்கின்றன
கூண்டைவிட்டு
வெளியேறச் சொல்லி
படபடக்கின்றன