Monday, December 28, 2015

நம்ம தலைவர்




நம்ம தலைவர் திருவள்ளுவரை பின்பற்றுபவர்
எப்படிச் சொல்ற...
யாராயிருந்தாலும் இரண்டு அடிதான்

2)தலைவருக்கு பிடித்த குறள் எது தெரியுமா?
 எது
 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉ மழை

3) நம்ம டிவியெல்லாம் பார்க்கிறோமே..அது யாரால
   அதுதான் தலைவர் சொல்லிட்டாரே "கூகுளாலன்னு"

4) தலைவர் போதையில என்ன பேசறார்
  மதுவிலக்கு அமல் படுத்தணூமாம்

5) தலைவருக்கு பிடிக்காத வார்த்தை என்ன தெரியுமா
  "அம்மா"

6) தலைவருக்கு மாடுகளைப் பிடிக்காது..ஏன் தெரியுமா?
  அவை அம்மான்னு கத்துமாம்

Thursday, December 24, 2015

கதை அல்ல நிஜம்...


அமெரிக்காவில் பிராஜெக்ட் மேலாளராய் வேலை செய்யும் ஒருவருக்கு  திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
கணவன்,மனைவி..தங்கள் குழந்தையுடன்  சென்னை வந்தனர்.

அவர்களை வரவேற்க வந்த இரு வீட்டாரும், குழந்தையை வாங்கி கொஞ்சினர்.பின்னர் மந்தைவெளியில் உள்ள தன் வீட்டிற்குச் செல்ல இஞ்சினீயர் கிளம்பினார்.ஆனால் மனைவியோ தனது வீட்டிற்கே முதலில் போக வேண்டும் என்றார்.இதில் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.

உடன் பெண்ணின் தந்தை, 'மகளையும், பேரனையும் நான்தான் அழைத்துச் செல்வேன்..நீங்கள் எங்களுடன் வருவதானால் வாருங்கள் அல்லது நீங்கள் மட்டும் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று கூறி மகளையும், பேரனையும் காரில் அழைத்துச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், விமான நிலைய போலீசிற்குச் சென்று, 'மனைவியும், மகனும் மாயமாகி விட்டனர்.அவர்களை கண்டுபிடித்து தாருங்கள்' எனப் புகார் கொடுத்தார்.போலீஸ் விசாரணையில் பெண்ணின் தந்தையே பெண்ணை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதோடு, 'இரு வீட்டாரையும் ஈகோவை விட்டு அனுசரித்துச் செல்ல அறிவுறுத்தினர்.மனைவியின் விருப்பப்படி அவருடன் சேலம் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்'என்றனர்.

இச் செய்தி ஒரு செய்தியா என்று சிலர் நினைக்கக் கூடும்..ஆனால் எனக்கு இது முக்கியச் செய்தி ஆகப் பட்டது.

பெண்கள் கணவன் வீட்டிற்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று குறுகிய நோக்கம் இருந்த காலம் எல்லாம் போய் விட்டது.திருமணமானதும்..பெண்களின் பிறந்தவீடு உறவு முடிந்துவிட்டது..இனி புகுந்த வீடுதான் என்பதெல்லாம்..பழங்கதை.பிள்ளையைப் பெற்றோர்..தன் மகன் என எண்ணுவதைப்போல..பெண்ணைப் பெற்றோருக்கும்..அப்பெண் அவர்கள் வீட்டுக் குழந்தை..பெற்றோரால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவள்..ஒவ்வொரு வயதிற்கும்..ஒவ்வொரு வித அலங்காரம் பண்ணி குழந்தை வளர்ச்சியை ரசித்தவர்கள்.அவளுக்கு பையனுக்கு இணையாகக் கல்வியறிவை ஊட்டியவர்கள்.எந்த அளவிலும்..பெண்ணைப் பெற்றோர்..பிள்ளையைப் பெற்றொரைவிடக் குறைந்தவர்கள் அல்ல..அதே போல பிள்ளையின் மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களோ..அதில் எள்ளளவு பாசமும் குறையாமல் பெண் மீது பாசம் வைத்துள்ளவர்கள் அவர்கள்.

ஆகவே..வயதில் பெரியவர்களான பெற்றோர்கள்..இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ளுங்கள்.

நான் மேலே சொன்ன செய்தியில், கணவனும் சரி,பிள்ளையைப் பெற்றோரும் சரி...நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாய்..முதலில் உன் வீட்டிற்குச் சென்று உன் பெற்றோருடன் சில நாட்கள் இருந்து விட்டு வா..என்று சொல்லியிருந்தால்..அந்தப் பெண்ணும் மகிழ்ந்திருப்பாள்..தனது மாமியார்,மாமனார் மீது நல்ல எண்ணமும் உருவாகி இருக்கும்...திட்டமிட்டப்படி இல்லாமல் விரைவில் தன் பெற்றோர் வீட்டிலிருந்து கிளம்பியிருப்பாள்.

மேலும் பெண்ணின் தந்தையும் சற்று விட்டுக் கொடுத்து தன் பெண்ணிடம்..'நீ அவர்கள் வீட்டில் இரண்டு நாள் இருந்துவிட்டு கணவன், குழந்தையை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வந்து சில நாள் தங்கலாம்' என்று அறிவுறுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் இப்போதைய தேவை..புரிந்துணர்வும்..விட்டுக் கொடுத்தலுமே...இதை அனைவரும் புரிந்து கொண்டால்..பிரச்னை இல்லை.


வயதானவர்கள் தங்கள் பிடிவாதத்தால்...ஒரு அருமையான உறவுகளிடையே கடைசிவரை ஒரு பிளவு ஏற்பட்டு விட்டதை ஏன் உணர மறுக்கிறார்கள்.

கணவனானாலும் சரி..மனைவியானாலும் சரி..அவர்களுக்கான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டிய வயதை அடைந்து விட்டனர்..அவர்களுக்குள் பேசி முடிவெடுக்கட்டும்.இடையே ..இரு தரப்பு பெற்றோரும் தங்கள் எல்லையை உணர்ந்து..அத்துடன் நிற்க வேண்டும்.

இன்னமும் சென்ற நூற்றாண்டிலேயே இருப்பதில்  கேடுதான் விளையும்.

Wednesday, December 23, 2015

M.G.R.,


தமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.
பல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.
அடிப்படையில் காங்க்கிரஸ்காரரான இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.
எம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.
இவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.
ஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.
கட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.
முன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக்கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்?
இவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..
எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.
இன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.தி.மு.க.
சரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..

ஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...

அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.
இது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....
விஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.

ஜெயலலிதா-
எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமா?இவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.

ஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு?
யாருமே இல்லை..
ஒரு காமராஜ்தான்
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.

பெரியாரின் பெருந்தன்மை



கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.

ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.

மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.

திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.

கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.

பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.

அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.

அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.

இது கல்கியின் பெருந்தன்மை.


Sunday, December 20, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 4



1967ல்..பாமா விஜயம் என்னும் நகைச்சுவைப் படம் பாலசந்தர் கதை, வசனம், இயக்கத்தில் வந்து சக்கைப் போடு போட்டது.இப்படத்தில் டி.எஸ்.பாலையா,நாகேஷ்,முத்துராமன், சுந்தரராஜன், காஞ்சனா,சௌகார் ஜானகி, ராஜஸ்ரீ, ஜெயந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

நிம்மதியாக வாழ்ந்து வந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில். அவர்கள் இல்லத்தின் அருகே வரும் ஒரு நடிகையின் பிரவேசம்..அந்த வீட்டின் மூன்று மகன்களையும், மருககள்களையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை சிரித்து..சிரித்து மகிழுமாறு கொடுத்திருந்தார் இயக்குநர்.தவிர்த்து, பேராசை பெரு நஷ்டம் என்ற படிப்பினையையும் இப்படம் உணத்தியது.

பாலசந்தர் படங்களில் எல்லாமே, வெளியே தெரியாமல். சற்று ஆழ்ந்து பார்த்தால் சமுதாயத்திற்கு ஒரு செய்தி இருக்கும்.அவற்றை அவ்வப்போது அந்தப் படங்கள் பற்றி எழுதுகையில் பார்க்கலாம்.

பாமாவிஜயத்தில் குடும்பத்தின் தலைவனாக பாலையாவின் நடிப்பு மிகவும் பாராட்டுதலைப் பெற்றது.தவிர்த்து, வீட்டு குழந்தைகளுடன் அவரும் "வரவு எட்டணா..செலவு பத்தணா" பாடலில் குரல் கொடுத்ததும், அதன் படப்பிடிப்பு நேர்த்தியும் அருமை.இப்படத்தின், மற்றொரு சிறந்த பாடலாக"ஆனி முத்து வாங்கி வந்தேன்' என்பதையும் குறிப்பிடலாம்.

இதே ஆண்டு வெளிவந்த மற்றொரு நகைச்சுவைப் படம் "அனுபவி ராஜா அனுபவி"

பாலசந்தருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சில தலைவர்களுடன் பரிச்சயம் இருந்தது.அவர்களில் குறிப்பித்தக்க ஒருவர் அரங்கண்ணல்.அவர் கதை எழுதி தயாரித்த  படம் "அனுபவி ராஜா அனுபவி". இதற்கான திரைக்கதையும், இயக்கமும் நம் பாலசந்தருடையது.

இப்படத்தில் நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்தார்.அவரது நகைச்சுவை நடிப்பிற்கு ஈடு கொடுத்து முத்துராமன் நாயகனாக நடித்தார்.மற்றும், ராஜஸ்ரீ, மனோரமா ஆகியோரும் இருந்தனர்.இப்படப்பாடல்களும் புகழ் பெற்றன.இப்படிச் சொன்னதும் இசை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

டி.எம்.சௌந்தரராஜனும், மனோரமாவும் இணைந்து .தூத்துக்குடி தமிழில் பாடியிருந்த "முத்துக் குளிக்க வாரீயளா?" அனைத்து ரசிகனையும் பல ஆண்டுகள் முணுமுணுக்க வைத்தது.

தவிர்த்து, "அழகிருக்குது உலகிலே, ஆசை இருக்குது மனசுலே .அனுபவி ராஜா அனுபவி' என்ற பாடல்..

அன்றைய மதராஸில் இருந்த ஏமாற்று பேர் வழிகள், போலி வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கும் வகையில் கவியரசு எழுதிய "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பாடல்...இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்தன என்றால் மிகையில்லை.

மொத்தத்தில்  இரண்டு நகைச்சுவை படங்களும் பாலசந்தருக்கு பெரும் வெற்றியைத் தந்தன எனலாம்.

Friday, December 18, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் = 3



தமிழ்த் திரைப்படங்களில் முதல் முழு நீள நகைச்சுவைப் படம் 'சபாபதி' எனலாம்.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் புகழ் பெற்ற இந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என ஏ.டி.கிருஷ்ணசாமி கூற அவருடன் சேர்ந்து ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் இயக்கி, தயாரித்த படம் இது.

1941ல் வெளிவந்த இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரன், காளி என்.ரத்தினம் ஆகியோர் நடித்திருந்தனர்.அந்நாளில் காளி என்.ரத்தினமும், சி.டி.ராஜகாந்தம் இருவரும் இணைந்த காமெடி..என்.எஸ்.கே., மதுரம் ஆகியோர்க்கு இணையாக பேசப் பட்டது.

ஆர்.பத்மா என்னும் 'லக்ஸ்' சோப்பின் அன்றைய பிரபல மாடலாகத் திகழ்ந்தவர் கதாநாயகியாக நடித்தார்.

நாயகன் பெயரும்,வேலைக்காரன் பெயரும் 'சபாபதி' என ஒன்றாய் இருப்பதை வைத்து நல்ல காமெடி செய்திருப்பர்.தமிழ் வாத்தியாராக சாரங்கபாணி நடித்திருப்பார்.இந்தப் படம் இன்றும் தொலைக்காட்சி சேனல்களில் ஒலி/ஒளி பரப்பானால் அதைப் பார்க்கும் மக்கள் அன்று அதிகம் இருப்பர்.இப்படக் காமெடி வசனங்கள் இன்றும் மாறி..மாறி வேறு படங்களில் வந்த வண்ணம் உள்ளன.

இப்படத்திற்குப் பின் படு முட்டாளானவர்களை 'சபாபதி" என்பர்.

இப்படம் மொத்தம் 40000 ரூபாயில் எடுத்து முடிக்கப் பட்ட படமாகும்.கதாநாயகன் சம்பளம் மாதம் 35 ரூபாய் ஆகும்

Thursday, December 17, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 2



இத் தொடரின் ஆரம்பப் பதிவில் அடுத்த வீட்டுப் பெண் படம் பற்றி பார்த்தோம்.

இப்பதிவு மற்றொரு மிகச் சிறந்த நகைச்சுவை திரைப்படம் பற்றியது..

தமிழ்த்திரையுலகில்..இதுவரை வந்த நகைச்சுவை படங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது 'காதலிக்க நேரமில்லை' திரையுலக மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீதர் கதை,வசனம்,இயக்கத்தில் அவர் சொந்த நிறுவனமான சித்ராலயா தயாரிப்பு இப்படம்.

இப்படத்தில் முத்துராமன்,பாலையா,நாகேஷ்,ஆகியோர் நடித்துள்ளனர்.ரவிச்சந்திரனின் முதல் படம்.

கதாநாயகிகளாக காஞ்சனா,ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர்.

கண்ணதாசன் பாடல்களை எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் அருமை.

என்ன பார்வை உந்தன் பார்வை' 'நெஞ்சத்தை அள்ளித் தா' உங்க பொன்னான கைகள்' அனுபவம் புதுமை' நாளாம் நாளாம் ஆகிய பாடல்கள் இனிமை என்றாலும், சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போன்ற இனிமை..'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலும், சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய 'காதலிக்க நேரமில்லை' பாடலும்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.பி.பி.ஸ்ரீநிவாஸ்,ஜேசுதாஸ்,சுசீலா ஆகியோர் கலக்கியிருப்பார்கள்

இப்படம் வெள்ளிவிழா கண்டது.இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.

.நாகேஷ், பாலையா பற்றி குறிப்பிடாவிடின்..இந்த இடுகை முற்று பெறாததாகவே இருக்கும்.

இருவர் நடிப்பும் அருமை.குறிப்பாக நாகேஷ் தான் எடுக்கப் போகும் படத்தின் கதையை பாலையாயிடம் கூறும் இடம்..உம்மணாமூஞ்சிகளையும் வாய் விட்டு சிரிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட நகைச்சுவைப் படம் ஒன்று மீண்டும் தமிழில் வருமா?

காலம்தான் பதில் சொல்லும்.

Tuesday, December 15, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்



தமிழில் முழுநீள நகைச்சுவை படங்கள் எனக் கணக்கெடுத்தால்...இருகைவிரல்களில் அடக்கிவிடலாம்.

அப்படிப்பட்ட சில படங்கள் குறித்துப் பார்ப்போம்

முதலாவதாக...மறக்கமுடியாத படம், அஞ்சலி பிக்சர்ஸ் 'அடுத்த வீட்டுப் பெண்'

1960ஆம் ஆண்டு இப்படம் வந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,தங்கவேலு,சாரங்கபாணி,ஃப்ரண்ட் ராமசாமி.ஏ.கருணாநிதி..ஆகிய சிரிப்பு நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.அஞ்சலிதேவி கதாநாயகியாய் நடித்ததுடன்..இப்படத்தின் தயாரிப்பாளராயும் இருந்தார்.படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும்..இன்றும் பார்த்தால் ரசிக்கவைக்கும் படம்.

கதாநாயகன்..அடுத்த வீட்டுப் பெண்ணை காதலிக்கும் படம்.அவளைக் கவர தான் ஒரு பாடகன் என்று சொல்லி..தான் வாயை அசைக்க..நண்பனை பாட வைக்கும் யுக்தி முதலில் இப்படத்திலேயே காட்டப்பட்டது.பின்னாளில் இதே போன்ற காட்சி பல படங்களில் காபி அடிக்கப்பட்டது.

ஆதி நாராயண ராவ் இசையில்..தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருந்த அனைத்துப் பாடல்களும் அருமை.

பி.சுசீலா பாடிய, 'கன்னித் தமிழ் மனம் வீசுதடி' 'மலர்க்கொடி நானே' ஆகியபாடல்களும்

பி.பி.எஸ்.பாடிய, 'மாலையில் மலர்ச் சோலையில்' வாடாத புஷ்பமே' ஆகிய பாடல்கள் தேனாய் இனிப்பவை.

'கண்ணாலே பேசி..பேசி' என்ற பாடலில் ராமையாதாஸ் சொல் விளையாட்டு விளையாடி இருப்பார்..
கொல்லாதே..செல்லாதே,துள்ளாதே
வாடுதே,ஓடுதே,ஆடுதே
அழகிலே,நினைவிலே,மலரிலே,வலையிலே
என்றெல்லாம்..அருமை..அருமை..

இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இயக்குநர் வேதாந்தம் ராகவையா..

இன்று நகைச்சுவை படம் எடுக்க நினைக்கும்..தயாரிப்பாளர்கள் கதை வேண்டி நின்றால்..இப்படத்தை ரீமேக் செய்யலாம்.அப்படி ரீமேக்கில் வந்தாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நிச்சயம் சொல்வேன்.

அடுத்த இடுகையில் வேறொரு நகைச்சுவை படம் பற்றி பார்ப்போம்.

Sunday, December 13, 2015

தலைவர் போகாத சிறை



1)நான் கடைசியா எழுதிய புத்தகத்தை படித்து விட்டீர்களா?
உங்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் படித்ததும் , இது அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்..ஆனால் எண்ணம் நிறைவேறவில்லையே

2)அந்த எழுத்தாளரின் நாலாவது படைப்பு சிம்ப்ளி சூபர்ப்
அப்படியா..அந்த புத்தகம் பெயர்..
நான் அவரது நாலாவது பெண் சுஜாதாவைச் சொன்னேன்

3)தலைவர்- (மேடையில்) நம் நாட்டில் எத்தனையோ சிறைச்சாலைகள் உள்ளன.ஆனால் நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ இது வரை ஒரு சிறைச்சாலைக்கு போனது இல்லை
தொண்டர்-போகாத அந்த ஒரு சிறைச்சாலை எது தலைவா?

4)உங்க உடம்பை முழுதும் சோதனை பண்ணியாச்சு...நோய்க்கான காரணம் தெரியலை..ஆமாம்..புகையிலை போடற பழக்கம் உண்டா?
அஞ்சாறு ஏக்கரிலே போட்டிருக்கேன்..

5)அந்த டைலர் கிட்ட எதைக் கொடுத்தாலும் பிடிக்கிற மாதிரி தைத்துடறார்..அதற்குத் தான் சண்டை போட்டுட்டு வரேன்..
 பிடிச்சா மகிழ்ச்சி அல்லவா அடையணும்..ஏன் சண்டை போடறே!

Friday, December 11, 2015

மனிதரில் இத்தனை வகையா!!!!!



மனிதர்கள் பலவிதம்..ஒருவர் போல ஒருவர் இருப்பதில்லை.சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள்.சிலர்..தேர்ந்தெடுத்து சொற்களை வெளியிடுவார்கள்.ஒரு சிலரோ...வாயைத் திறந்தாலே..முத்து உதிர்ந்துவிடும் போல எண்ணி வாயைத் திறக்க மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர்..பெயர் வேண்டாமே..எதிலும் குறை சொல்பவராகவே இருப்பார்.நண்பர்கள் பற்றியோ..அரசியல் பற்றியோ பேசும் போது..எளிதில் உணர்ச்சி வசப்பட்டு..கடுமையாக தாக்கிப் பேசுவார்.இதனால்..நண்பர்கள் இவரை விட்டு..அவ்வப்போது விலகுவர்.

வேறு ஒரு நண்பர்..இவர் பத்திரிகைகளில் அரசியல் விமரிசகர்.அவரிடம்..'உன்னால் எப்படி..குடைந்து..குடைந்து பார்த்து அரசியல்வாதிகள் பற்றி எழுத முடிகிறது?'என்றபோது, அவர்..'நான் வக்கீலுக்கு படித்தவன்..அதனால் ஓட்டை எங்கு என்று அறிந்துக் கொள்ளமுடியும்.அதனால் அவர்கள் குறைகளை..கண்டுபிடிப்பது எளிதாய் இருக்கிறது..ஆகவே..அவர்களுடன் நான் புத்திசாலியாக இருக்கிறேன்'(?!) என்றார்.

சில நண்பர்கள்..தங்கள் சுய லாபத்திற்காக பழகுவர்.அவர்கள் நினைத்த காரியம் முடிந்ததும்..நம்மை கழட்டி விட்டு விடுவார்கள்.

சிலர் எப்போதும் ..விரக்தியாகவே..இருப்பார்கள்.இவர்கள் வாயைத்திறந்தாலே..'எல்லாம் மோசம்..நாடு பாழாகிக் கொண்டிருக்கிறது.நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது' என்று பேசுவார்கள்.

வேறு சிலர்..தான் தவறு செய்தாலும்..அதை மறைத்து பழியை பிறர் மீது போடுவார்கள்.இவர்கள் தங்கள் காரியத்தை சாதிக்க..பிறரை பலிகடா ஆக்கவும் தயங்க மாட்டார்கள்.

ஒரு சிலர்..பழகவே..கூச்சப் படுவர்.சிலரோ..எதோ பறிகொடுத்தாற்போல சோகத்திலேயே இருப்பர்.சிலர் வேலை செய்யாமலேயே..நெளுவெடுப்பர்.சிலர் பயந்த சுபாவத்துடன் இருப்பர்.

இதையெல்லாம் எப்படி போக்குவது...நண்பர்கள் உயிர் காப்பான் என்பார்களே..அது பொய்யா?

மனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.

Wednesday, December 9, 2015

கணையாழி கடைசிப் பக்கங்கள் _ சுஜாதா


தில்லி மிருகக்காட்சிசாலையிலிருந்து இரண்டு சிங்கங்கள் தப்பித்துச் சென்றன

சில மாதங்கள் கழித்து யமுனை நதிக்கரையில் அவை மீண்டும் சந்தித்துக்கொண்டன.ஒரு சிங்கம் மிக ஒல்லியாக ஒடிந்து புல்லிலும், கல்லிலும் தடுக்கிக்கொண்டிருந்தது.
மற்றது புஷ்டியாக இருந்தது.அது, "நண்பா, ஏன் இப்படி இளைத்து விட்டாய்" என்று கேட்டது.

"என்ன செய்வது! எனக்குச் சாமர்த்தியம் போதவில்லை.பகலெல்லாம் பதுங்கி இரவெல்லாம் அலைந்தேன்.ஆகாரம் ஏதும் அகப்படவில்லை.வேட்டையாடும் சாமர்த்தியம் எனக்கு மறந்துவிட்டது.நீ மட்டும் எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறாய்?" என்றது

"பைத்தியமே! ரொம்ப சிம்பிள்.செகரடேரியட் போய் இரவோடு இரவாக ஃபைல்களுக்குப் பின் ஒளிந்து கொண்டேன்.அவ்வப்போது ஒரு அண்டர் செக்ரட்டரி , ஒரு டெபுடி செக்ரட்டரி என்று அந்தப் பக்கம் செல்பவர்களை இழுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.ஒருவரும் கவனிக்கவில்லை"

"பின் ஏன் அந்த சுகத்தை விட்டு வந்துவிட்டாய்?"

"கடைசியில் ஒரு தப்புப் பண்ணிவிட்டேன்.டீ கொண்டுவரும் பையன் ஒருவனை ஒருநாள் சாப்பிட்டுவிட்டேன். உடனே கண்டுபிடித்துவிட்டார்கள்"