Friday, August 30, 2013

பொன்மொழிகள் ஐந்து...
..1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது

2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இல்லாதவன் எல்லாப் பொருளிலும் தாழ்ந்தவனே
என்பதில் ஐயம் இல்லை.

3.பயம் நம் எதிரே வராத வரைக்கும்
பயந்துக்கொண்டே இரு.அது வந்து விட்டால் கண்டதுமே
அதனை சந்தேகப்படாமல் அடித்து தொலைத்துவிடு.

4.மன அமைதியைவிட உயர்ந்த தவம் வேறில்லை.மகிழ்ச்சியை விட
உயர்ந்த இன்பம் வேறீல்லை.ஆசையைவிட உயர்ந்த நோய் ஒன்றுமில்லை.
கருணையைவிட உயர்ந்த தருமம் வேறில்லை

5.வெட்டி நறுக்கப்பட்டாலும் சந்தனமரம் நறுமணம் இழக்காது.முதுமை எய்தினும் கூட
யானை தன் விளையாட்டை விடாது.ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் கரும்பு
இனிமையை விடாது.நற்குடிப் பிறந்தோர் வறுமையால் கெட்டழிந்தாலும்
ஒழுக்க குணங்களைக் கைவிட மாட்டார்கள்.

Sunday, August 25, 2013

கொஞ்சி விளையாடும் தமிழ்..- 27
காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் "வெறியாட்டு' என்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், "இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? (அஞ்சுமா?) இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்த தலைவனுக்கு எட்டுமா?' என்னும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் "பத்தொன்பது மா' (19 மா 5+6+8=19) என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது "மா' என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் "வெறிவிலக்கு' என்ற துறையில் பாடியுள்ளார்.
இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்"மை'உமை இம்மைஐயோ என்செய்த(து)-அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.
வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா - தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.


ஒரு தினசரியில், திரு இரா.ராமமூர்த்தி எழுதியது இது.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.ஆகவே இப்பதிவு.

Thursday, August 22, 2013

வாய் விட்டு சிரிங்க... தலைவர் ஜோக்ஸ்..1) எதிர்க்கட்சித் தலைவருக்கு என்னைப் பார்த்தால் பயம்....நான் என்ன சிங்கமா அல்லது புலியா
  சேச்சே...அது எல்லாம் எவ்வளவு சாதுவான மிருகங்கள்...

2)தலைவர் இன்று வாரிசு அரசியலை எதிர்த்து பேசப்போறாராம்...
 யார் தலைமை..? யார் முன்னிலை..??
 அவர் மச்சான் தலைமையிலே..மாமா முன்னிலையிலே..அவர் மகன் வரவேற்புரை நிகழ்த்தியதும்..பேசுவார்

3)தலைவர் ஏன் எப்பவும் கைகளில் 'கிளவ்ஸ்' போட்டுக்கிட்டு இருக்கார்?
  தன் கை அவ்வளவு சுத்தம்னு சிம்பாலிக்கா சொல்றாராம்.

4)நம்ம தலைவர் டிபாசிட் இழந்துட்டார்??
 எந்தத் தொகுதியில் போட்டியிட்டு..?
 நான் சொல்றது..அவர் டிபாசிட் போட்டு வைத்திருந்த ஃபைனான்ஸ் கம்பெனியை மூடிட்டதால..

5)குறவர்கள்கிட்ட ஓட்டுக் கேட்கப் போன தலைவர், 'அவர்கள் முதாதையர்கள் தமிழுக்குச் செய்த சேவைக்கு பாராட்டு தெரிவித்தாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை இவர்கள்தான்னு தப்பா நினைச்சுட்டார்..

6)தலைவா! உங்கப் பெயர் குற்றப்பத்திரிகையிலே வந்திருக்கு..
 அந்தப்பத்திரிகை சர்குலேஷன் எவ்வளவு.


Tuesday, August 20, 2013

குறள் போற்றுவோம் -5ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்.அதாவது உணவைக் குறை என்று பொருள். (புலன் -வாய்)

கண் போன போக்கில் எல்லாம் மனிதன் போகலாமா? என்று ஒரு பாடல் உண்டு.அதாவது, நம் கண்கள் பார்த்து, ஆசைப்பட்டு அதன் வழியில் எல்லாம் நடந்தால், அது சிக்கலில்தான் கொண்டு விடும். கண்கள் பார்த்தாலும், மனம் சிந்தித்து நல்லது, கெட்டது உணர்ந்து செயல் பட வேண்டும்.(புலன் - கண்)

நம்மில் கோபம் ஏற்பட்டால் , இடம் மறந்து..வாயில் வந்ததை எல்லாம் உரக்கக் கூறி, அதுவரை நம்மைப் பற்றி நல்லபடியே நினைப்பவர்கள் எண்ணங்களை மாற்றி விடுவோம்.அது சரியா? பிறர் பற்றி புறம் கூறுவோம்..அது சரியா(புலன்-மெய்)

கெட்டவற்றைக் கேட்காத செவி வெண்டும்.நல்லவற்றையே நாளும் கேட்க வேண்டும்.(புலன்-செவி)

வாசனையைத் தரும் பொருள்கள், உணவு போன்றவைக்கூட ஆசையைத் தூண்டும்.ஆனால் அவை உடலுக்கும், உள்ளத்திற்கும் கேடு விளைவிப்பவை என உணர வேண்டும். (மூக்கு -புலன்)

நமக்கு புலனடக்கம் இல்லாவிடில், நம் பெயர், புகழ், வாழ்வு எல்லாம் கெடும்.மனிதனாய் பிறந்தோர் அனைவருமே..தங்கள் ஐம்புலன்களை அடக்கினால், வையத்தில் சந்தோசமாக வாழ்வாங்கு வாழலாம்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான கருத்தை..ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவனைத் தவிர வேறு யாரால் தரமுடியும்?

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு    (28)

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கி ஆளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும் .

சிரிப்போம்..சிந்திப்போம்...
வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

Wednesday, August 14, 2013

சுதந்திரம் எப்போ கிடைச்சது?! வாய் விட்டு சிரிங்க..1) அப்பா..நாளையிலிருந்து நாம பணக்காரரா ஆயிடலாம்
   எப்படி
  நாளைக்கு எங்க கணக்கு வாத்தியார் பைசாவை எப்படி ரூபாயா மாத்தறதுன்னு சொல்லிக்கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்

2)இன்னிக்கு தலைவருக்கு எடைக்கு எடை பேனா கொடுக்கிறார்களாம்
 ஏன்...
 பிரதமருக்கு அப்பப்ப கடிதம் எழுத பேனா வேண்டியிருக்குமே

3)நீங்க நடிச்சப்படம்..வெற்றியடையணும்னு நாமே முயற்சி செய்யணுமா? புரியலையே..
 படம் வெளிவரும் நாள் அன்று ஏதெனும் கிளர்ச்சி பண்ணவைச்சு படம் வெளிவராம தடுக்கணும்

4)சுதந்திரம் எப்ப கிடைச்சுது
 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி
 என்ன சொல்ற
 அன்னிக்குத்தானே என் மனைவி கோச்சுண்டு பிறந்த வீடு போனா

5)வர வர ஆஃபீஸிலிருந்து ஏன் லேட்டா வரீங்க
  எந்த பயலும் கிளம்பும்போது எழுப்பாமல் போயிடறான்

6)உன்னைவிட உன் பையன் தைரியசாலியா? எப்படி சொல்ற
  என் மனைவியை எதிர்த்து பேசறானே

  (பதிவர்கள் அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துகள்)


Tuesday, August 13, 2013

சூரியனுக்கே டார்ச்...(வண்ணதாசனின் கவிதை ஒன்றை பாராட்டி என் கவிதை)


வண்ணத்துப் பூச்சி
விரலிடுக்கில்
வண்ணத்தை
விட்டுச் செல்லல் போல்
வண்ணதாசா..
உன் எழுத்தின்
வண்ணம்..மனதில்..
வன்மையாய் ஒட்டிக்கொள்ளும்
வண்ணம்..கோலில்..
விடுப்பது என்ன மை..