Sunday, May 31, 2020

வள்ளுவர் பெண்களைப் போற்றவில்லையா - 5

கணவன் என்பவன் நற்பண்புகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.அப்போதுதான் ஒரு பெண்ணின் இல்வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஆக, இல்வாழ்க்கை சிறப்புற அமைய நற்பண்புள்ள கணவன் வேண்டும் என் கணவனிடம்தான் குறை கண்டார் வள்ளுவர்.பெண்களிடம் அல்ல

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு (58)

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிருக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.

கணனிடம் காணப்படும் அந்த நற்பண்புதான் குடும்பத்தின் சிறப்பு.அந்த நற்பண்புதான் புகழுக்குரிய இல்வாழ்க்கை அமைய முக்கியக் காரணமாக அமையும்.தம்மைப் பழித்து பேசுவோர் முன் தலைநிமிர்ந்து நடக்க முடியும்.

அப்படி அமையும் நற்பண்புள்ள குடும்பம் மேலும் சிறப்பது நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை (59)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நங்கலம் நன்மக்கட் பேறு (60)

இப்படி எல்லாவற்றிற்கும் தேவையான நற்பண்புகளைமுதலில் பெற வேண்டியவன் கணவன்.

இப்படிச் சொல்லும்போதே கணவனைவிட பெண்ணான மனைவியை அவர் போற்றுவது தெரியவில்லையா?

இனி மேலும் சில குறள்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம் 

Saturday, May 30, 2020

வள்ளுவர் பெண்மையைப் போற்றவில்லையா - 4

கற்பு என்ற வார்த்தைக்கு அவ்வையாரின் பொருள்
"கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை" - கொன்றைவேந்தன்.
சொன்ன சொல் மாறாமல் இருப்பது தான் கற்பு. அது உடல் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல என்று அவ்வையார் கூறுகிறார். அது உடல் சம்மந்தப்பட்ட விஷயம் என்று எடுத்துக்கொண்டால் பாரதியின் பதில்.
"கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்".
வள்ளுவர் இக்குறளில் சொல்வதைப் பாருங்கள்..

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சீர்விலாள் பெண் (56)

கற்புநெறியில் தன்னையும் (கற்புத் தவறாமல்) தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் (தான் சேர்ந்த குடும்பத்துக்கு) பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண் என்கிறார்.

கற்பு இருவருக்கும் பொது என வள்ளுவர் இலைமறை காய்மறையாகச் சொல்லவில்லையா இக்குறளில்.

இக்குறள் மூலம் பெண்களின் மன உறுதியைப் போற்றவில்லையா வள்ளுவர்.

இக்குறளைப் பாருங்கள்..

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை (57)

தம்மைத் தாமே காத்துக் கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்

கற்பு என்று சொல்லிக் கொண்டு பெண்களை குறுகிய வட்டத்தில் (வீட்டுச் சிறை) அடைத்து,அவர்களது மனவளர்ச்சியைத் தடைசெய்யும் சமூகக் கொடுமையை சாட்டி, பெண்ணுரிமை காக்கப்பட வேண்டுமென பெண்ணுக்கு இழக்கப்படும் வன்முறைக்கு எதிராக வாதாடிய முதல் பெண்ணியவாதி வள்ளுவர் அல்லவா?

வீட்டுக்குள்ளே பெண்ணியப் பூட்டி வைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்


என்று இருபதாம் நூற்றாண்டில் பாரதி சொன்னதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே வள்ளுவர் சொல்லவில்லையா?

அடுத்து சில குறள்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம். 

Friday, May 29, 2020

வள்ளுவர் பெண்மையைப் போற்றவில்லையா - 3


பெரும்பாலோர் "பெண்ணியம்" பற்றி பேசுகையில், வள்ளுவரின் இந்த குறளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பலமுறை படித்துள்ளோம்.
அந்த குறள் என்னவெனப் பார்ப்போம்..

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)

இதற்கு மு வரதராசனார் இப்படி உரை எழுதியுள்ளார்.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை சொலகிறார்

(கற்புடைய மனைவியின் சிறப்பு என்னவெனில்) கற்புடைய பெண் தெய்வத்தைக் கூட தொழமாட்டாள். அவள் கணவனையே தெய்வமாக வணங்கிச் சிறப்படைவாள். அப்படிப்பட்டவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்படியான தெய்வபலம் உள்ளவள்.

கலைஞர் தன் உரையில்

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையேத் தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையியப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

இவையெல்லாம் சாதாரணமாகச் சொல்லப்படும் உரைகள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லும் வள்ளுவர்..மனித உயிர்களில் கணவனைத் தெய்வம் என்றும் மனைவி அவனைத் தொழ வேண்டும் என்ற அர்த்தத்தில் குறளில் சொல்லி இருப்பாரா?

என்று யோசித்து..இன்னும் சற்று விவரமாகப் பார்ப்போம்.

திருக்குறள் இடம் பெறும் பதினென்கீழ்கணக்கு நூல்களில் இடம் பெற்றுள்ள நல்லாதனார் எழுதிய திருக்கடுகம் நூலில் ஒரு பாடலில் "பெய்யெனப் பெய்யும் மழை' என்று சொல்லியுள்ளார்.

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை

என்கிறார்.

அதாவது, கணவனின் குறிப்பு அறிந்தவள் பெண்டாட்டி, தான் மேற்கொண்ட விரதங்களை  செய்யும் முறைப்படி செய்பவன் தவசி,குடிமக்களுக்கு நன்மையானவற்றை செய்பவன் அர்சன்..ஆகிய இம்மூவரும் பெய் என்று சொல்ல மழை பொழியுமாம். 

பெண்டாட்டி என்றால் ஆளும் தன்மையினை உடையவள் என்று பொருள்.ஆக..கணவனையும் ஆளும் தனமை அவளுக்கு உண்டு.இது பெண்மைக்கு சிறப்பு அல்லவா. 

இன்னமும் சொல்ல வேண்டுமானால் "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு என்னாற்றுங்கொல்லோ உலகு" .அதாவது,கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை.அதுபோல மனைவி, தவசி, அரசன் ஆகியோர் கைம்மாற்றை..அதாவது ஏதும் பலனை எதிர்பாராது தன் செயல்களை செய்து வருபவர்கள் எனலாம்.

 சாதாரணமாக் "மாதம் மும்மாரி பொழிகிறதா நாட்டில்" என்பார்கள்.அதாவது ஒன்பது நாள் வெயில், ஒருநாள் மழை.அடுத்த ஒன்பதுநாள் வெயில் ..ஒருநாள் மழை.மூன்றாம் ஒன்பதுநாள் வெயில்..அடுத்த நாள் மழை.ஆக..மாதத்தை மூன்றாக பிரித்து..3 நாட்கள் மழை பெய்ய வேண்டுமாம்.

நல்ல மழை பெய்து கொண்டிருந்தால்..நாம் என்ன சொல்கிறோம்.."மழை பெய் ..பெய்..என் பெய்துக் கொண்டிருக்கிறது"

அதிக மழை பெய்தால் என்ன ஆகும் பயிர்கள் அழுகி வேளாண்மை பாதிக்கப்படும்.வெள்ளம் பெருக்கெடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.மழையே இல்லையெனில் வறட்சி.பஞ்சம்தான்.

ஆனால், இல்லறத்தை நல்லறமாகப் பேணி..கணவனுடன் துயில் கொண்டு எழுந்து..இல்லத்தை ஆளும் திறனைக் கொண்ட பெண்..இருந்தால் இயற்கையும் தவறாது அந்தந்த பருவத்திற்கேற்பவும், வேண்டும் போது  தேவைக்கேற்ப பெய் எனில் பெய்திடும் மழையுமாகி வளத்துடன் இருக்குமாம் நாடு.

இக்குறளில் பெண்களை இழிவுபடுத்துவதாக இனி எண்ணாமல் போற்றுவதாகவே நினையுங்கள்.

வள்ளுவர்..பெண்களை எங்குமே இழிவுபடுத்தியதில்லை.

மேலும் சில குறள்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போம்.


தந்தையிடம் சேர்த்த நாடகம்

பலர் கேட்கிறார்கள்..

நாடகங்களால் என்ன பயன்..நாடகங்கள் நசிந்து விட்டன என்றெல்லாம்..

சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், "சென்னையின் ஜனத்தொகை கிட்டத்தட்ட 70லட்சம் அதில் .1 சதிவிகிதமாவது (அதாவது 7000 பேராவது) உங்கள் நாடகங்களைப் பார்க்கிறார்களா? என்று.

உண்மைதான்..

ஆனால்.. பார்ப்பதில்லைதான்..ஆனால் நாடகங்கள்  பலரை திருத்தியுள்ளன.

அதற்கு ஒரு உதாரணம்..

தந்தைக்கு மகன்களிடம் உள்ள பாசத்தை விவரிக்கும் நாடகம்  ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன்னால் எங்களது சௌம்யா குழு "என்றும் அன்புடன்" எனும் பெயரில் அரங்கேற்றியது.

நாடகம் முடிந்ததும்..ஒரு ரசிகர்.. என்னிடமும், தந்தையாக நடித்த ரமேஷ் அவர்களிடம்  பேச மேடையில் ஏறி எங்களிடம் வந்தார்.

அவர் நாடகத்தைப் பார்த்து கண்கள் கலங்கியிருந்தார் என்பதை சிவந்த கண்கள் மூலம் நாங்கள் உணர்ந்தோம்..

நாடகத்தைப் பாராட்டியவர்..கடைசியில் துக்கம் தொண்டைய அடக்க சொன்னார், "சார்..எங்கப்பாவுக்கும் எனக்கும் பத்து வருஷங்களாக பேச்சு வார்த்தை யில்லை.ஆனால் உங்கள் நாடகம் இன்று என்னை மாற்றிவிட்டது..நாளைக்கே திருச்சி சென்றுஎங்கப்பாவைப் பார்த்து மன்னிப்புக் கேட்கப்போகிறேன்.என் தவறை உனர்ந்து கொண்டேன்..உங்களது நாடகம் மூலம் "என்றார்.

இதைத்தவிர வேரு ஒரு கலைஞனுக்கு என்ன வேண்டும்.

7000 நபர்கள் கூட நாடகம் பார்க்க வருவதில்லைதான்..ஆனாலும் இதுபோல ஒரு நபர் திருந்தினாலும், சென்னை மக்கள் 70லட்சமும் பார்த்த திருப்தி ஏற்படுகிறதே..அதுவே நாடகத்தின் சக்தி.

Thursday, May 28, 2020

வள்ளுவர் பெண்மையை போற்றவில்லையா? -2

ஆவதும் பெண்ணாலே..அழிவதும் பெண்ணாலே  என்பார்கள்.

ஆம்..பெண் வலிமை வாய்ந்தவள்.அவளின்றி இல்லறம் நல்லறம் ஆகாது.அவளின்றி இல்லறத்தில் ஒன்றும் அசையாது.

அதுவும் நற்பண்புள்ள மனைவி (ஓருவனுக்கு  அமையவில்லையாயின்).அமையா இல்வாழ்க்கை..எவ்வளவு சிறப்புள்ளதானாலும்,அதற்கென தனிச்சிறப்புக் கிடையாது..

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் (52)

ஒருவனின் இல்வாழ்க்கை சிறப்புற அமைய வேண்டுமாயின் அந்த வீட்டினுள்ளே இருக்கும் பெண்ணால்தான் இயலும்..

அப்படிப்பட்ட மனவி அமைந்தவன் வாழ்வில் எல்லாம் இருக்கும் (அன்பு, பாசம்,செல்வம்,கல்வி ஆகிய அனைத்தும்)..அப்படி ஒரு மனைவி அமையாதவன் வாழ்க்கையில் எதுவுமே இருக்காது

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (53)

இத்துடன் நில்லாது மேலும் சொல்கிறார்..

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால்,அதைவிட பெருமைக்குரியது வேறு யாது?(வேறு எதுவுமில்லை)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின் (54)

மேலே சொன்ன குறள்களில்  ..எல்லாம் பெண்மை பாராட்டப்படவில்லையா?

ஒருவனது வாழ்வு சீராக மைய ஒரு பெண்ணால்தான் முடியும்? என்று போற்றப்படவில்லையா?

இனி அடுத்து நான் சொல்ல இருக்கும் குறள்களை நாளைப் பார்ப்போம்.

Wednesday, May 27, 2020

வள்ளுவர் பெண்மையைப் போற்றவில்லையா?

சமீபத்தில் பெண்எழுத்தாளர்கள் பற்றி நான் எழுதி வந்த தொடரில் ஒருவரைப் பற்றிய செய்திகளை சேகரிக்கும் போது,ஒரு பேட்டியில் அவர் ,வள்ளுவரையும், வள்ளுவத்தையும் பற்றிய தன் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.பெண்களுக்கு எதிரானது வள்ளுவரின் கூற்றுகள் என்று பொருள் படும்படியும் கூறியிருந்தார்.

அது உண்மையா? என சில குறள்கள் மூலம் ஆராயும் தொடரே இது..


இல்வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் துணைநலம் இரு அதிகாரங்களை எடுத்துக் கொள்வோம்.

இரண்டிலிருந்தும் முதற் குறள்கள்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)

இதன் பொருள்..

பெற்றோர்,வாழ்க்கைத் துணை,குழந்தைகள்  (இவர்களே மூவர்) என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

இந்தக் குறளில் இல்லறம் நடத்தும் ஆணைப் பற்றி மட்டுமே சொல்லியுள்ளார்..என ஆண்கள் கொந்தளித்து எழுவது சரியா?

அதேபோலத்தான்  "வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் முதல் குறள்..

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (51)

இல்லறத்துக்குரியப் பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவன் வாழ்விற்குப் பெருந்துணையாவாள்.

கணவனைப் புரிந்து கொண்டு , வருவாய்க் கேற்ப குடும்பம் நடத்துபவள் காணவனின் வாழ்வில் பெருந்துணை என பெண்ணை பாராட்டித்தானே சொல்லியுள்ளார்.

ஆகா..இந்த இரண்டு முதல் குறள்களில்...இல்லறத்தில் ஈடுபட்டுள்ள ஆண் எப்படியிருக்க வேண்டும் என முதள் குறளில் கூறியவர் அடுத்துச் சொல்லியுள்ள குறளில்  கணவனுக்குப் பெருந்துணை எனபெண்ணைப் பாராட்டியுள்ளார்.

மேலும் சில குறள்களுடன் நாளை பார்ப்போம்.

(தொடரும்)

Friday, May 22, 2020

நானும் ரௌடிதான் - 8

அப்பாவிற்கு என்மேல் ஏதோ சந்தேகம் வ்ர ஆரம்பித்திருக்கிறது போலும்.

ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, "வர வர  ஐயா வீட்லேயே இருக்கறதில்ல'பெரிய பெரியசிநேகம் எல்லாம் ஏற்பட்டிருக்காப் போல இருக்கு" என்றார் நைசாக.

'அதெல்லாம் ஒன்னுமில்ல அப்பா" என்றேன் மெல்லிய் அகுரலில்.

"இதோ பார்..உன்னைப் பத்தி அப்பபப்  கம்ப்ளைண்ட்" வந்துகிட்டு இருக்கு..இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.ஜாக்கிரதை" என்றார்.

என்னைப் பத்தி யாரோ அப்பாகிட்ட போட்டுக் கொடுத்து இருக்காங்க என்ற அளவில் புரிந்தது.

அதற்கேற்றார் போல குள்ள கோவிந்தன் ஒருநாள் என்னிடம் சொல்ல ஆரம்பித்தான்.."இதோ பார் தம்பி..நீ....ர ஜாதி.நீங்க ரொம்ப அமைதியானவங்க.என்னைப் பாரு ரௌடின்னு பேர் வாங்கிட்டேன்.ஆனா உண்மையைச் சொல்லணும்னா என் உடம்புல சக்தியே கிடையாது.இருக்கற பலத்தைக் கூட குடிச்சு..குடிச்சு அழிச்சுக்கிட்டேன்.யாரையாவது மிரட்டணும்னா.."டேய்..என்னா நெனச்சுக்கிணு இருக்க..எம்மேல கைய வைத் தெரியும்..கீச்சுடுவேன்..நெஞ்சுல இருக்கற மஞ்சாசோற எடுத்துடுவேன்  (அத்துடன் சில கெட்ட வார்த்தைகளையும் கூறி) அப்படி..இப்படி உதார் உடுவேன்.உண்மையிலே என்னைத் தட்டினா தாறாந்துடுவேன்.நீ ரௌடியாணும்னு ஆசைப்டாத.உங்கப்பா சொல்றபடி..படிச்சு ஒரு கலட்டராவணும்..இனிமே என்னைப் பாக்க வராதே..நான் போறேன்.." என்று போய் விட்டான்.

பிறகு அவர் எங்கேப் போனார்னே தெரியல..காணவேயில்ல..குப்பால் கடைக்கும் வரதில்ல.."அதிகக் குடியில செத்துட்டார்னு" சொன்னாங்க சிலர்.சிலர், "கள்ளச்சாரய கேஸ்ல் அரெஸ்ட் ஆயிட்டர்னாங்க"

நானும் அவரை கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டேன்.

சில நாட்கள் கழிந்து அப்பா ,அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தார்,"அந்த சைக்கிள் கடை குப்பால யாரோ அரசியல் எதிரிங்க வெட்டிக் கொலைப் பண்ணிட்டாங்கன்னு.

கத்தி எடுத்தவன் ,கத்தியாலத்தான் சாகணும்" என்றார் அம்மா.

நான் அரை ரௌடி ஆகி பின் முழு நல்லவன் ஆகிவிட்டேன்.

(முற்றும்)

Thursday, May 21, 2020

நானும் ரௌடிதான் - 7

அப்போது உள்ளே நுழைந்தவர் சரோஜா..

நான் உடனே பாபு அங்கிளிடம்..அவளைக் காட்டி, "இதோ வர்றாங்களே...சரோஜா ..அவங்கதான் இவ்ரோட மனைவி....இவங்க இல்லை"என்றேன்.

அதற்குள் அங்கு வந்த சரோஜா, கையில் அவருக்கான பூத் ஸ்லிப்பை வைத்திருந்தார்.அவர் என்னைப் பார்த்து, :கண்ணு..இதுவும் இவர் சம்சாரம்தான்..என் சக்களத்தி "என்றார்.

"சக்களத்தி  என்றால்.." என்றேன் நான்.

அதற்கும் பூத் அதிகாரி உட்பட அனைவரும் சிரித்தனர்.அந்த சிரிப்பைப் பார்த்ததும்..ஓரளவு விஷயத்தைப் புரிந்து கொண்ட நான்  வெட்கத்துடன் நெளிந்தேன்.

இந்த சம்பவத்தை அவ்வப்போது கூறி கடைசிவரை பாபு அங்கிள் என்னை
நையாண்டி செய்வார்.

நான் அன்றே அம்மாவிடம்.."அம்மா..இந்த கிருஷ்ணனுக்கு இரண்டு சம்சாரம்மா"என்றேன்.

அம்மா அதைக் கண்டு கொள்ளாமல்'பெரிய பேச்செல்லாம் பேசாதே" என என்னை அடக்கி விட்டார்.

நாட்கள் ஓடின..

அவ்வப்போது நான் குள்ள கோவிந்தனை சந்திப்பதும்..குப்பால் கடையில் சைக்கிள் எடுப்பதும் தொடர்ந்தது.

ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் ஓடும் பஸ்ஸில் ஏற முயன்றவரிடம், பக்கத்தில் குள்ள கோவிந்தன் இருக்கும் தைரியத்தில்"ஏய்யா..பாத்தா படிச்சவனாட்டம் இருக்க..ஓடற பஸ்ஸுல ஏற்றியே" என்றேன்.

ஒரு சின்னப்பையன் (அவரைப் பொருத்தவரை..ஆனால் எனக்குள் நான் ரௌடியாயிற்றே) அவரை கண்டிப்பது போல சொன்னதும், தன்மானம் மிக்க அந்த மனிதர்.."நீ யாரு எனக்குச் சொல்ல..சின்னப்பையன் உனக்கு எதுக்கு இந்த வேலை"  என்றார்.

அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் உதறலுடன் நான்கோவிந்தனைப் பார்க்க, கோவிந்தன்..கைகால்களை உதறிக் கொண்டு.."டேய்..யார்டா..இந்தப் பையங்கிட்ட ராங்க் பண்றது" என குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

பஸ்ஸி ஏற முயன்ற அந்த மனிதனைப் பார்த்து, "பார்த்தியா ஐயாவோட வேலையை..சாதாரணமா நினைக்காத" என்று சொல்லிவிட்டு, கோவிந்தனிடம், "நீங்க வாங்க அங்கிள்..இவங்களுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிக்கிட்டு" என அழைத்து வந்தேண்.

அதற்குள் அங்குக் கூடியிருந்த  சிறு கூட்டம் எங்களை வியப்பாகப் பார்க்க..கர்வத்தில் என் தலை சற்றே உயர்ந்தது.

Wednesday, May 20, 2020

நான் அறிந்த கோமல் - 2கோமல் எளியவர் என்று சொன்னேன் அல்லவா?

கதர் வேட்டி, கதை ஜிப்பா வையே தரித்து வந்த கோமலிடம் வாகனங்கள் ஏதும் இல்லை.

இன்னமும் சொல்ல வேண்டுமானால்..அவர் செல்லும் வாகனம் எது தெரியுமா? ஆட்டோகூட இல்லை.சைக்கிள் ரிக்க்ஷா மட்டுமே.

இது குறித்து ஒருமுறை கோமலிடம் கேட்டேன், "ஏன் சார்..நீங்க ஒரு பாபுலர் பெர்சன்..இப்படி ரிக்க்ஷாவுல நீங்க வந்தா நல்லாவயிருக்கு?"
அதற்கு கோமல் பதில் என்ன தெரியுமா? "பாபுலர்னா ரிக்க்ஷாவுல வரக்கூடாதா என்ன.மக்களை நம்பிதானே உடலால உழைக்கிற அவன் பொழப்பு ஓடுது. அவனை வாழவைக்கற அந்தத் தொழிலும் தெய்வம்தானே.அதனால அவன் ரிக் ஷாவுல நம்ம போல ஆட்கள் வந்தா அவன் பொழப்பும் கஷ்டமில்லாமல் இருக்கும் இல்லையா?" என்றார்..

பொதுவுடமை சிந்தனைவாதி என்பதற்கு இதைத்தவிர வேறு என்ன வேண்டும்.

அவர் போஸ்டல் காலனியில் இருந்த வீட்டிற்கு இருமுறை சென்றிருக்கின்றேன்.அவர் கதை எழுத அமரும் நாற்காலி எது தெரியுமா? தரைதான். தரையில் அமர்ந்து, தனக்கு முன்னால் ஒரு சிறு கணக்குப் பிள்ளை ஸ்டூலை வைத்துக் கொண்டு..அதில் ஒரு பேடில் வெள்லத்தாள்களுடன் அமர்ந்து எழுத ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாது எழுதிக் கொண்டே இருப்பார்.

 அவர் வலியவர் என்றேன் அல்லவா?

நான் சொன்னது உடல் வலிமை அல்ல..மன வலிமை..திடமான மனம் கொண்டவர் அவர்.

சரி,அவரது வசன வலிமையைப் பார்ப்போம்.அவர் வசனங்களின்
 கூர்மை தீப்பொறி போன்றவை..ஆகவேதான் அவர் நாடகங்களை வெளிநாட்டவர்களூம் விரும்பிப் பார்த்தனர் எனலாம்..

என..வெளிநாட்டவரா? என நீங்கள் கேட்கலாம்.ஆம்..அதற்கும் ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியும்

ICF அம்பேத்கார் அரங்கில் அவரது "செக்கு மாடுகள்" நாடகம்.அதைப் பார்க்க நான் சென்றிருந்தேன்.என்னைப் பார்த்தவர் உடனே, "நல்லவேளை நீ வந்து இருக்க..இன்னிக்கு ரஷ்யாவுல இருந்து வந்திருக்கிற சிலர் நாடகத்தைப் பார்க்க வர்றாங்க..நீ என்ன செய்யற..அவங்கப் பக்கத்துல உட்கார்ந்துண்டு அவங்களுக்கு நாடகத்துல எதாவது புரியலேன்னா எக்ஸ்பிளைன் பண்ணு "என்றார்.

ஆனால்..வந்திருந்தோர் என்னைவிட நாடகத்துடன் ஐக்கியமாகி ரசித்தனர்.

"கோமல்" மற்ற குழுவினரின் நாடகங்களையும் மனதார பாராட்டுவார்.

1981ஆம் ஆண்டு எனது "சௌம்யா"குழு "புதியதோர் உலகம் செய்வோம்"என்ற நாடகத்தை அரங்கேற்றம்  செய்தோம்.அந்நாடகம்அரங்கேறி சில நாட்கள் புதிய தேதிகள் ஏதும் கிடைக்கவில்லை.அப்போது கோமல் சொன்னார்.."நீ ஒரு அருமையான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறாய்..இதற்கு உனக்கு தேதியில்லை என்றால்..நீ நாடகங்களே இனிப் போடாதே" என்றார்.

அவர் வாய்முகூர்த்தம்..அடுத்த சில தினங்களில் மடமடவென வாய்ப்புகள் குவிந்தன.

அது கண்டு என்னைவிட மகிழ்ந்தவர் அவர்.

கோமல் மறைந்தபோது..ஒரு இலக்கியவாதியை,இதழாசிரியரை நாடு இழந்திருக்கலாம்..

ஆனால்..என்னைப் போன்றோர் ஈடு செய்யமுடியா ஒரு அருமை நண்பரை இழந்தோம்.

அவர் மறைந்து 25ஆண்டுகள் ஓடிவிட்ட போதும் அவர் நினைவு நம்மை விட்டு ஓடாது தவிக்கிறோமே..அதுவே கோமலின் மாபெரும் வெற்றியாகும்.

நானுன் ரௌடிதான் -6

அப்பா..எப்படியும் தேர்தல் அன்று என்னை பாபு அங்கிளோடு அனுப்ப மாட்டார் என எனக்குத் தெரியும்..அதனால்..சொல்லாமல் அன்று கீளம்பிவிட வேண்டும் என் அதீர்மானித்தேன்.

அம்மாவிடம் மட்டும், "ஞாயிற்றுக்கிழமை என் ஃபிரண்ட் நாராயணனுடன் ஹோம் ஒர்க் செய்ய அவன் வீட்டுக்குப் போய்விடுவேன்.சாப்பாடு அவன் வீட்டில்தான்' என்று சொல்லிவிட்டேன்.

அரை ரௌடி ஆகிவிட்டேனே..ஆகவே அம்மாவிடம் பொய் சொல்வது எளிதாயிற்று.

ஞாயிற்றுக்கிழமை அப்பாவுக்கு முன்னாலேயே எழுந்துவிட்டேன். ஞாபகமாக அப்பாவின் வேஷ்டி ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டேன்.இடுப்பில் அது நிற்காது என்பதால் ஒரு பெரிய பெல்டை இறுக்கிக் கட்டிக் கொண்டேன்

குப்தா ஸ்கூல்தான் தேர்தல் நடைபெற இருந்த பள்ளி. அதிலிருந்து 100 மீட்டர் தள்ளி..ஒரு டேபிள், சேர் போட்டு அந்தக்கட்சி பூத் ஸ்லிப் வழங்கிக் கொண்டிருந்தது.

பாபு அங்கிள்தான் அக்கட்சியின் பூத் ஏஜன்ட்.என்னை பபௌ அங்கிள் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஏஜெண்டாக உள்ளெ அழைத்துப் போவதாக ஏற்பாடு.

அதற்கு முன்னால் பாபு என்னிடம், "ஓட்டு போட வருபவர் பெயர் அதிகாரி சொல்வார்.நாம் வேட்பாளர் லிஸ்டில் அவர் பெயரை மார்க் செய்து கொள்ள வேண்டும் என்றார்.ஆள் மாறி போட்டால் அதை சேலஞ்ச் செய்யலாம்.மறுக்கலாம்" என்றார்.

ஓரளவு எனக்குப் புரிந்தது.

எங்கள் வீட்டில் கிருஷ்ணன் என்ற தோட்டக்காரன் வேலை பார்த்து வந்தான்.அவன் மனைவி சரோஜா எங்கள் வீட்டுலேயெ வேளை செய்து வந்தாள்.

கிருஷ்ணன் அந்த பள்ளியில் ஓட்டுப் போட மனைவியுடன் வந்தான்.

ஆனால்..மனைவி சரோஜா இல்லை சின்னம்மா..

உடனே நான் சேலஞ்ச் செய்தேன்.

"உட்கார்..உட்கர "என்றார் பாபு அங்கிள்.நான் உறுதியாக நின்றேன்.
பூத் ஏஜென்ட் என்ன செய்வது எனத் தெரியாது விழித்தார்..

அப்போது...உள்ளே நுழைந்தவரைப் பார்த்து அதிர்ந்தேன்...  

Tuesday, May 19, 2020

நான் அறிந்த கோமல் - 1


கோமல் சுவாமிநாதன் பற்றி திருப்பூர்கிருஷ்ணன் முகநூலில் எழுதியிருந்தார்.
ஒரு நாடகக் கலைஞனாக நான் அறிந்த கோமலின் நாடக உலக சாதனைகளும், அவருக்கு என்னிடம் உண்டான அன்பினையும் இரு பதிவுகளாக இட உள்ளேன்.முதலாவதாக நாடக உலகில் அவரின் சாதனைகள்.

இன்றைய பல இளைஞர்களுக்கு அவர் எழுதியுள்ள நாடகங்கள் குறித்துத் தெரிய வேண்டும் என்றே இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

கோமல் சுவாமிநாதன் 1935ஆம் ஆண்டு காரைக்குடியில் பிறந்தவர்.இவரின் தாய்,தந்தையர் ஆடுதுறைக்கு அருகே கோமல் எனும் ஊரைச் சேர்ந்தவர்கள்.ஆகவே சுவாமிநாதன் "கோமல்" சுவாமிநாதன் ஆனார்.

ஆனால்..அந்த "கோமல்" என்பது இவருக்கு எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.முதலில் ஊர் பெயர் என்பதால் தன் பெயருக்கு முன்னாள் "கோமல்" என்பதை சேர்த்துக் கொண்டார் என்பது உண்மை என்றாலும்.."கோமல்" என்பதற்கு வடமொழியில் மென்மை எனப் பொருளாகும்.

ஆம்..இந்தக் "கோமலும்" மென்மையானவர்.இனியவர்,எளியவர்,வலியவர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

தனது 22ஆவது வயதில் எஸ்.வி.சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் இணைந்தார்.பின் 1960ல்  அதாவது அவரது 25ஆவது வயதில் அக்குழுவிற்கென "புதிய பாதை" என்ற முதல் நாடகத்தை எழுதினார்.தமிழ் நாடக மேடையின் முற்போக்கு நாடக ஆசிரியராகத் திகழ்ந்தவர்.

பின் 1971ல் சொந்தமாக ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ் எனும் ஒரு நாடகக் குழுவினை ஆரம்பித்தார்.  33 நாடகங்கள் எழுதி அரங்கேற்றினார்.  பொதுவாக சமகால அரசியல் பிரச்சினைகளையும் அறப் பிரச்சினைகளையுமே எழுதினார். தீவிரமான இடதுசாரிப் பிடிப்புடையவராக இருந்தார்.இவர் நாடகங்கள் பல நூறு காட்சிகளைக் கடந்து மேடையேறியுள்ளன.

தண்ணீர் தண்ணீர் நாடகம் 250 முறைகளுக்கு மேல் அவரால் மேடையேற்றப்பட்டது."நீரின்றி அமையாது உலகு" .உலகின் கடைசி சொட்டு தண்ணீர் உள்ளவரை இவரது தண்ணீர் தண்ணீர் பேசப்படும் நாடகமாக அமைந்தது .அரங்கேறமாகி 40 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கோமலின் மகள் தாரிணி மேடையேற்றிய இந்நாடகம் அனைத்து வயதினராலும் பாராட்டப்படும் நாடகமாகவே உள்ளது

இயக்குநர் கே.எஸ் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கோமல், "கற்பகம்", கைகொடுத்த தெய்வம் "பேசும் தெய்வம்"ஆகிய படங்களில் கதை வசனத்தில் பெரும் பங்காற்றினார்
1980ல்  தண்ணீர் தண்ணீர்  நாடகம் கே.பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி இவருக்கு மேலும் பெரும் புகழ் சேர்த்தது. அதைத் தொடர்ந்து அவரது பல நாடகங்கள் படமாக ஆயின. கோமல் யுத்த காண்டம் (1982), அனல் காற்று (1982), ஓர் இந்தியக்கனவு (1983) ஆகிய மூன்று படங்களை இயக்கினார்.

இவரது குழுவிற்காக இவர் எழுதிய நாடகங்கள்-

 • சன்னதித் தெரு, 1971,
 • நவாப் நாற்காலி, 1971 (சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் படமாகியது),
 • மந்திரி குமாரி, 1972,
 • பட்டணம் பறிபோகிறது, 1972,
 • வாழ்வின் வாசல், 1973,
 • பெருமாளே சாட்சி, 1974 (தமிழில் குமார விஜயம் என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாஜி மதனம் என்ற பெயரிலும் படமாகியது),
 • ஜீஸஸ் வருவார், 1974,
 • யுத்த காண்டம், 1974 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
 • ராஜ பரம்பரை, 1975 (பாலூட்டி வளர்த்த கிளி என்ற பெயரில் பி. மாதவன் இயக்கத்தில் படமாகியது. இளையராஜா இசையமைத்த இரண்டாவது படம்),
 • அஞ்சு புலி ஒரு பெண், 1976,
 • கோடு இல்லாக் கோலங்கள், 1977 (
 • ஆட்சி மாற்றம், 1977,
 • சுல்தான் ஏகாதசி, 1978,
 • சொர்க்க பூமி, 1979 (அனல் காற்று என்ற பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
 • செக்கு மாடுகள், 1980 (சாதிக்கொரு நீதி என்ற பெயரில் படமாகியது),
 • தண்ணீர் தண்ணீர், 1980 (அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் படமாகியது),
 • ஒரு இந்தியக் கனவு, 1982 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
 • அசோகவனம், 1983 (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
 • நள்ளிரவில் பெற்றோம், 1984,
 • இருட்டிலே தேடாதீங்க, 1985, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
 • கறுப்பு வியாழக்கிழமை, 1988,
 • நாற்காலி, 1989, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
 • கிராம ராஜ்யம், 1989,
 • மனிதன் என்னும் தீவு, 1989,
 • அன்புக்குப் பஞ்சமில்லை, 1992,

மற்ற குழுவினருக்கு இவர் எழுதிய நாடகங்கள்

 • புதிய பாதை, (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
 • மின்னல் கோலம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
 • தில்லை நாயகம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
 • டாக்டருக்கு மருந்து,
 • கல்யாண சூப்பர் மார்க்கெட், (எம்.என். நம்பியாரின் நாடகக் குழு )
 • டெல்லி மாமியார் ,(மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு) (பின்னாளில் கற்பகம் வந்தாச்சு" என்ற பெயரில் படமாகியது),
 • அவன் பார்த்துப்பான், (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
 • அப்பாவி, (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
 • கிள்ளியூர் கனகம், (மனோரமாவின் நாடகக் குழு)
 • என் வீடு, என் கணவன், என் குழந்தை (மனோரமாவின் நாடகக் குழு) (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
(அடுத்த பதிவும் உண்டு)


நானும் ரௌடிதான் - 5

அடுத்தநாள் பள்ளியில் உணவு இடைவேளை ஆர்ம்பம்.

அப்போது பள்ளியின் பியூன் வேலை செய்யும் சுப்பு வந்து, "உன்னைப் பார்க்க வெளியே ஒருத்தர் வந்திருக்கிறார்" என்றார்.

நான் கையில் அம்மா கொடுத்திருந்த தூக்கு டிஃபன் பாக்சை அப்போதுதான் திறந்திருந்தேன்.தயிர்(மோர்?) சாதம்.அதன் ந்டுவே காக்கா கக்கா போனாற்போல கருப்பு நிறத்தில் பச்சிமிளகாயை அரைத்து வைத்து ஒரு சட்னி.

அதை மூடிவிட்டு வெளியே வந்தேன்.

கையில் காலெண்டர் சுற்றியது போல ஒரு பார்சலுடன் நின்றிருந்தார் பாபு அங்கிள்.அவரைப் பார்த்து, "என்ன அங்கிள்?" என்றேன்.

"இந்தா மாசால்தோசை..நீ நேத்துகூட மசால்தோசைக்குத்தான் என்னோட நோட்டீஸ் கொடுக்க வந்தியாம்.குள்ள கோவிந்தன் சொன்னான்.பாவம்..அந்தப் பையன் ஏமாந்து போயிருப்பான்.பாபு..நீங்க நாளைக்கு ஸ்கூல் லஞ்ச் டயத்துக்குப் போய் அவனுக்கு ஒரு மசாலா தோசை வாங்கிக் கொடுத்துடுங்க என்றான்.அதுதான் வாங்கி வந்தேன்" என்று சொல்லியபடியே அப்பார்சலை என் கையில் தந்தார் பாபு அங்கிள்.

ஒரு நிமிடம் என் கண்கள் கலங்கிவிட்டது.எவ்வளவு நல்ல மனிதர் இந்த குள்ள கோவிந்தன்.அவரைப் போய்..எல்லாரும் ஏன் கெட்டவராகவேப் பார்க்கிறார்கள்? என எண்ணினேன்.

பாபு அங்கிளிடமிருந்து பார்சலை வாங்கிக் கொண்டவன், "அங்கிள்..இன்னிக்கு சாயங்காலம் சைக்கிள் எடுக்க குப்பால் கடைக்கு வருவேன்..அப்போ கோவிந்தனைப் பார்ப்பதாகச் சொல்லுங்கள்"என்றேன் .

அன்று ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பத்து பைசா சைக்கிள்விட வேண்டும் என வாங்கிக் கொண்டு குப்பால் கடைக்குப் போனேன்.

அங்கு என் கதாநாயகன் குள்ள கோவிந்தன் உட்கர்ந்திருந்தார்.அவர் என்னைப் பார்த்ததும் கையை நீட்டினார்.நான் அவர் கையைப் பற்றிக் கொண்டேன்.பின், "தேங்கஸ்" என்றேன்.

"எதுக்கு,  டேங்ஸ் எல்லாம் சொல்ற..நீ ஆசைப்பட்ட தோசையைவாங்கிக் கொடுத்தேன்.ஒரு தோசைக்கு எதுக்கு டேங்க்ஸ்.ஆமாம்..அந்த நாராயணப் பிள்ளை..அப்பாகிட்ட உன்னைப் போட்டுக் கொடுத்துட்டாரா?" என்றார்.

"இல்லை "என்றேன் நான்.பின்னர்.."தேர்தல் என்னிக்கு ?"என குப்பாலிடம் கேட்டேன்.

"வர ஞாயிற்றுக் கிழமை.பாபுதான் குப்தா ஸ்கூல்ல நம்ம ஏரியாவுக்கு கட்சியோட பூத் ஏஜன்ட் .அவர்கூட எப்படியும் உன்னை உட்கார வைச்ச்டறேன்.ஆனா..அன்னிக்கு மட்டும் நீ எப்படியாவது பெரிய மனுஷன் போல ஃபுல் பேன்டோ இல்ல வேஷ்டியோ கட்டிண்டு வந்துடு.முழுநாளும் டிஃபன்,காஃபியோட சாப்பாடு உண்டு" என்றான்.

"சரி" என தலையாட்டிவிட்டுக் கிள்மபினேன்.ஆனால், மனம் முழுதும் அப்பா கிட்ட எப்படி பர்மிஷன் வாங்குவது என்ற எண்ணத்துடன்.

Monday, May 18, 2020

நானு ரௌடிதான் - 4

காலை எழுந்ததும், அப்பா வேலைக்குக் கிளம்பியதுமே அம்மாவிடம், "அம்மா..நான் வெளியே கிளம்பறேன்..ஃபிரன்ட் வீட்டுக்குப் போரேன்"ணு சொல்லிவிட்டுக் கிளம்பப் பார்த்தேன்.

அம்மாவோ "இருடா..இட்லி சாப்பிட்டுட்டுப் போ" என்றாள்.

இட்லியா..இன்னிக்கு உன் பையன் மசாலா தோசை சாப்பிடப்போறானாக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டே.."வேணாம்மா பசியில்லைன்னு" சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.

கடைக்கு வந்து பார்த்தால்..பாபு என்னும் அங்கிள் எனக்காக அங்கே காத்திருந்தார்.

இந்த பாபு அங்கிள்  ஏற்கனவே தெரிஞசவர். அவர் போட்ட டிராமாவுல அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கி நான் நடிச்சிருந்தேன்.

அவர் என்னைப் பார்த்ததுமே.."வாடா..வா...உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்" என்று சொல்லியபடியே ஒரு கட்டு நோட்டீசை கையில் திணித்தார்.

அதைத் தூக்கிக் கொண்டு நடந்த நான்"அங்கிள்..,மசாலாதோசை சாப்பிட்டுக் கிள்மபலாமா?" என்றேன்.

அவரோ"இவ்வளவு சீக்கிரம் எதற்கு.இரண்டு தெரு முடிச்சுட்டுப் போலாம்" என்றார்  சிகரெட்டை பத்த வைத்தபடி.காலையில் ஏற்கனவே டிபன் சாப்பிட்டு இருப்பார்..பசிக்கலை..ஆனால் நான் வெறும் வயிறு..ஆனாலும் அதை அவரிடம் நான் சொல்லவில்லை   .

நாராயண பிள்ளை என்று அம்பத்தூர் வட்டத்திற்கு காங்கிரஸ் செயலாளர் ஒருவர் இருந்தார்.அவர், அப்பாவிற்கு ரொம்ப வேண்டியவர்.

நானும், பாபு அங்கிளும் நோடீஸ் கொடுக்க நுழைந்தத் தெரிவில்..அவர் தன் கட்சிக்கான வேட்பாளர் ஆதரவு நோட்டீஸ்களைக் கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்..அவர் என்னை பார்த்துவிட்டு.."டேய் நீ என்ன பண்ற..இந்த சின்ன வயசுல அரசியல் நோட்டீசா.."என்றவர், பாபுவிடம், "என்ன பாபு, படிக்கற வயசு சின்னப் பையனை இழுத்துக்கிட்டு திரியற..இது இவங்கப்பனுக்குத் தெரிஞ்சா..அவ்வளவுதான்" என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, "வீட்டுக்குப் போ..இல்லை உங்கப்பா கிட்ட சொல்லிடுவேன்" என்றார்.

நானும் பயந்தபடியே..வீட்டிற்குக் கிளம்பினேன்.

அம்மா சாப்பிட்டு போகச் சொன்ன இட்லியும் போச்சு.."மசாலா தோசை" கிடைக்கும் என்ற எண்ணத்தையும் நாராயண பிள்ளை கெடுத்துட்டார்.

ஆனால் அடுத்த நாள் பாபு என்ன செய்தார் தெரியுமா? 

Sunday, May 17, 2020

நானும் ரௌடிதான் - 3

முதலில் சாராயம் குடித்துவிட்டு என்னை ஊறுகாய்வாங்கிவரச் சொன்ன குள்ள கோவிந்தன், அடுத்த நாள் குப்பால் கடையில் நன சைக்கிளை விட்ட போது..ஒரு ரூபாயை நீட்டி.."துரை..காஜா பீடி ஒரு கட்டு வாங்கிக்க, ஊறுகாய் ஒரு பாக்கெட் அப்புறம் நீ வேணும்னா ஒரு சிகரட் மிட்டாய் வாங்கிக்க" என்றான்.

சிகரெட் மிட்டாய் என்பது..சிகரெட் போட வெள்ளை நிறத்தில்..சிகரெட் போல வே இருக்கும்..அதன் நுனிப்பகுதியில் கருப்பும், சிவப்பும் கலந்து நெருப்பினைப் போலிருக்கும்.

அவன் சொன்னபடியே அவனுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு..எனக்கும் ஒரு சிகரெட் மிட்டாயை வாங்கிக் கொண்டேன்.

அவனிடம் அதைக் கொடுத்து விட்டு கிளம்பும் போது..குப்பால் அவன் ஏதோகேட்க"என்ன இட்லி,வடகறி இல்ல மாசால்தோசை கிடைக்கும்"என்றான்..

"மசால் தோசை" என்ற பெயரைக் கேட்டதும்..நான் அங்கேயே நின்று விட்டேன்.அம்பத்தூரில் அப்போது உடுப்பி ஹோட்டல் ஒன்றும், அமுதா கேஃப் என்று ஒன்றும் உண்டு.

அந்த உடுப்பி ஹோட்டல் மசால்தோசை நன்றாய் இருப்பதாக பரவலாகப் பலர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டவன் நான்.
ஒருநாள் எப்படியும் மசால் தோசை சாப்பிட்டுவிட வேண்டும் எனும் ஆசை இருந்தது.அதனால் அந்தப் பெயரைக் கேட்டதும் "பிரேக்" போட்டு நின்றுவிட்டு..அந்த சிகரெட் மிட்டாயை வாயில் வைத்து எடுத்து "உஷ்" என வெறும் வாயில் புகை விட்டேன்.

அதைப் பார்த்த குப்பால்.."என்ன பெரிய ஆள் செய்யற வேலையெல்லாம் செய்யணுமா?" என்றான்.

"இல்லை..தோசை..மசால்தோசை ன்னு சொன்னீங்களே..வாங்கியாறணுமா? "என்றேன்.

"..அதெல்லாம் இல்லை..எலக்க்ஷன் வருது இல்ல.அதுக்கு வீடு வீடாப் போய்........ இவருக்கு ஓட்டுப் போடுங்கன்னு நோட்டீஸ் கொடுக்கணும்.அப்படி கொடுக்கறவங்களுக்கு டிஃபனா இட்லை, வடைகறியோ இல்ல மசால்தோசையோ தருவாங்க" என்றான்.

"அண்ணா..நான் வேணும்னா நோட்டீஸ் கொடுக்கக் கூட வரேனே!" என்றபடியே..வாயில் சிகரெட் (மிட்டாயை) வைத்துக் கொண்டேன்.அதைப் பார்த்து சிரித்தவன் "நாளைக்குக் காலைல வந்துடு.ஸ்கூல் லீவுதானே" என்றான்.

"சரி..வந்தா மசால்தோசை கிடைக்கும்ல" என்று அதை உறுதி செய்துகொண்டு  கிளம்பினேன்.

நடந்த விஷயத்தையெல்லாம்..மௌனமாக கடையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நாயர் என்னைக் கூப்பிட்டு,"என்ன பேசினீங்க?" என்றார்.

ரௌடி கனவில் இருந்த நான் , "நாளைக்கு என்னைப் பார்த்து பயப்படப்போறீங்கப் பாருங்க..நான் குள்ள குள்ள கோவிந்தனாக்கும்" என வீட்டிற்கு விரைந்தேன்..கையில் இன்னமும் அந்த சிகரெட்டுடன்.Saturday, May 16, 2020

நானும் ரௌடிதான்..-1

அம்பத்தூரில் என் பதின்மவயதில் "குள்ள கோவிந்தன் " என்ற உள்ளூர் பற்றி பலர் பேசுவதைக் கேட்டும்..அவனுக்கு பயப்படுவதைப் பார்த்தும், நாமும் ஒரு ரௌடி ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அத்ற்கேற்றாற் போல..ஒருநான் கடைவீதிக்கு வந்தபோது..கையில் ஒரு மருந்துச்சீட்டும்.ஒரு ரசீதும்,சில மருந்துகளையும் வைத்துக் கொண்டு தெருப்பாலச் சுவரில் அமர்ந்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தான் என் கதாநாயகன் குள்ள கோவிந்தன்.

மற்றவர்கள் பயப்படுவது போல அவன் இல்லை என்று எனக்குத் தோன்றியது.அதற்குள் அவன் "தம்பி" என்று கூப்பிட்டான்.

உள்ளூர பயம் எடுத்தது..சற்று முற்றும் பார்த்தேன்.அங்கு நான் மட்டுமே இருந்தேன்.அவன் உடனே "உன்னைத்தான் தம்பி..இங்க வா" என்றான்.

பயத்துடன், வரமாட்டேன் என்பது போல தலையை இடமும், வலமும் ஆட்டினேன்.

"உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன் வா.." என்றான்.அவன் குரலில் சற்று கனிவு இருந்தாற்போலத் தெரிய ,அவனிடம் போனேன்.

அவன், மருந்து வாங்கின ரசீதையும், கையில் மிச்சம் இருந்த காசையும் காட்டி, "௳ருந்துகடைக்காரன் சரியா பாக்கிக் கொடுத்திருக்கின்றானா?" எனப் பார்க்கச் சொன்னான்.

நானும் சரி பார்த்து "சரியாய் இருக்கிறது" என எனக்குக் கூட கேட்காத குரலில் பயத்துடன் சொன்னேன்.."டேங்க்ஸ்" என்ரான் என்னைப் பார்த்து சற்று சிரித்தபடி.அப்பஒது அவன் வாய் கோணியது.சற்று சப்போட்டா வாசனை வந்தது.

வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம்..பெருமையாக குள்ள கோவிந்தனிடம் பேசினேன் என்றேன்.

அப்பா, 'அவனோட எல்லாம் உனக்கு என்ன பேச்சு" என்றார்.

நான் விஷயத்தைக் கூறி..அவன் கிட்ட சப்போட்டா பழ வாசனை வந்தது அப்பா.."ரௌடிங்கன்னால வாசனை வருமா?"என்றேன்.

அப்போது மதுவிலக்கு அமுலில் இருந்த காலம்..

அப்பா சொன்னார், "அவன் சாராயம் குடிச்சு இருக்கான்..கள்ள்ச்சாராயம்" என்றார்.

அப்போதுதான் அவன் வாய்க் கோணி பேசியதன் அர்த்தம் புரிந்தது.

(நான் ரௌடி ஆனக்கதைத் தொடரும்)நானும் ரௌடிதான் - 2

சைக்கிள் கடை ஒன்று அம்பத்தூரில் இருந்தது.அதை குப்பால் என்பவர் நடத்தி வந்தார்.

அவர் கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுத்து..சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டவன் நான்.

"அண்ணா..அண்ணா.." என அவரைச் சுற்றி வருவேன்.அத்ற்குக் காரணம் உண்டு.சுயநாலம் தான்.அரைமணி நேரம் சைக்கிளை வாடகைக்கு எடுத்துவிட்டு ஒருமணி நேரம் கழித்துத் திருப்பிக் கொடுப்பேன்.அவர் அதிகப்படியான அரைமணிக்குக் காசு கேட்க மாட்டார்.என்னுடைய பாசமிகு(!) அண்ணா தான் அதற்குக் காரணம்.

அவர் அரசியலில் ஆர்வம் உள்ளவர்.அரசியல் கட்சிக்காரகள் அவ்வப்போது அங்குக் கூடுவர்.

ஒருநாள்..பொழுது சாயும் நேரம்..நான் சைகிளை திருப்பிக் கொடுக்க வந்த போது..என் கதாநாயகன் குள்ள கோவிந்தன் அங்கு அமர்ந்திருந்தான்.

குப்பால்..உள்ளிருந்து ஏதோ எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான்.அதை வாங்கிக் கொண்டு கோவிந்தன் என்னைடம்.."கண்ணா..அந்தப் பெட்டிக்கடைக்குப் போய் ஒரு ஊறுகாய் பாக்கெட் வாங்கிட்டு வர்றியா? என பத்து நயாபைசாவை (அப்போதுதான் ரூபாய்,அணா போய் பைசா வந்து சில ஆண்டுகள் ஆகியிருந்த படியால்..அந்த பைசாவை நயாபைசா என்பார்கள்.பார்த்தீர்களா இந்த பைசாவில் கூட இருந்த ஹிந்தித் திணிப்பை)
நீட்டினான் (ர்).

அந்தப் பெட்டிக்கடையை நாயர் ஒருவர் நடத்திவந்தார்.அவர் ஒரு ஊறுகாய்ப் பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு, "தம்பி..அந்த கோவிந்தன் கிட்ட சகவாசம் வைச்சுக்காத.."என்றார்.

"ஆஹா..அந்த கோவிந்தனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டுவிட்டதை நாயர் அறிந்து கொண்டுவிட்டாரே!" எனமனம் மகிழ்ந்தது.அரை ரௌடி ஆகிவிட்டோம் என் மகிழ்ந்தேன்.அந்த கோவிந்தன் என்னை எடுபிடி வேலைக்கு அனுப்பியிருக்கிறான் என்பதை உணரவில்லை.

நான் ஊறுகாய் பாக்கெட்டைத் தந்தவுடன், குப்பால் கொடுத்திருந்த பாட்டிலைத் திறந்து, அதில் இருந்த தண்ணீரைக் குடித்து..ஊறுகாய் பாக்கெட்டை அப்படியேப் பிரித்து முழுதுமாய் நக்கினான் குள்ள கோவிந்தன்.

"டேய்..நீ வீட்டுக்குப் போ" என்றான் குப்பால்.

வீட்டுக்கு வந்த நான்..ரகசியமாக அம்மா இல்லாத போது அடுக்களைக்குள் நுழைந்து..ஒரு தம்ளர் தண்ணீரை எடுத்துக் கொண்டு..அதை கோவிந்தன் குடிப்பது போல ஒரே மூச்சில் குடித்துவிட்டு..ஆவக்காய் ஜாடியிலிருந்து ஊறுகாய் சற்று எடுத்து நக்கினேன்..

காரம் சர்ரென ஏற.."ஐயா..காரம்..காரம்.."ஏன நாக்கை வெளியெ நீட்டி அவதிப்ப்ட்டேன்.நீண்ட தூரம் ஓடி வந்து..தன் நாக்கினை நீர் வடிய நீட்டி இளைப்பாறும் நாய் போல நாக்கை நீட்டிக் கொண்டிருந்தேன்சில மணித்துளிகள்.

"உள்ளே என்ன பண்றே" அம்மாவின் குரல் கேட்டது.Friday, May 15, 2020

எதிர்மறை

செய்
செய்யேன்
கேள்
கேளேன்
செய்யாதே
செய்வேன்
கேளாதே
கேட்பேன்
எதிர்மறையான
நீ யார்?
நானே நீ
நீயே நான்

Tuesday, May 12, 2020

பொண்ணுங்க மனசு...

அலைபேசி சிணுங்கியது..

அடுக்களைலிருந்து ஓடி வந்து அதை எடுத்த பரமசிவம், ராமபிரான், அணிலைத் தடவிக் கொடுத்தது போல தடவி..காதில் வைத்து "ஹலோ" என்றார் .

எதிர்முனையில் அவரது மகள் ரேணுகாவின் அழுகைக்குரல்..

"என்னம்மா..என்ன விஷயம் ஏன் அழறே..மாப்பிள்ளை ,பேரன், பேத்தி எல்லாம் சௌக்கியம்தானே..1"

பதில் இல்லை..அழுகைத் தொடர்ந்தது.

"மாப்பிள்ளை ஒர்க் ஃபிரம் ஹோம்தானே..உடம்புக்கு ஒன்னுமில்லையே"

மூக்கை உறிஞ்சும் சப்தத்திற்குப் பின்,"அதெல்லாம் நல்லாயிருக்கார்ப்பா.இப்ப வீட்ல இருக்கறதால..சமையல் வேலை, பத்து..பாத்திரங்கள் தேய்க்கிறது, வீட்டைப் பெருக்கி மொழுகறதுன்னு  எல்லா வேலையும் அவரே செய்யறார்ப்பா"

"அதுக்கு சந்தோஷப்படறதுக்குப் பதிலா..ஏம்மா அழறே?"

"இவ்வளவு நாளா, ரேணு இல்லேன்னா...வீடே வீடா இருக்காது, ருசியா எதுவும் நாக்குக்கு கிடைக்காது.வீட்டை சுத்தமா வைச்சுப்பான்னு எல்லாம் பாராட்டி சொல்வார்.இனிமே, இதையெல்லாம் தன்னாலும் செய்யமுடியும்னு எண்ணம் வந்துடுமே..அப்புறமா இந்த வீட்ல எங்ககு என்ன மதிப்பு இருக்கும்..அதை நெனச்சுத்தான் அழறேன்.."

"இதுக்கெல்லாம் போய் அழுவாங்களா..."என பேச ஆரம்பித்த பரமசிவத்தை மனைவியின் குரல் தடுத்து நிறுத்தியது.."அங்கே என்ன..யார் கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க? எப்ப பார் மொபைல்..இங்கே பாதி பாத்திரம் தேய்ச்சுக்கிட்டு இருந்துட்டு..அரைகுறையா விட்டுட்டுப் போன எப்படி..வாங்க வந்து வேலையைமுடியுங்க.."

"அப்பறமா பேசறேன்ம்மா" என்ற படியே அலைபேசியை அணைத்துவிட்டு.."இந்த பொம்பளைங்களை நம்பவே முடியலையே.."அப்படின்னா இப்படி...இப்படின்னா அப்படின்னு இருக்காங்களே.." என எண்ணியபடியே அடுக்களைக்குள் புகுந்தார்.

Sunday, May 3, 2020

கொரோனா

கோழையாய் மறைந்திருந்து
கண்ணுக்குத் தெரியாமல் தாக்கும்
கொரோனாவே
தைரியமிருந்தால்
நேராக கண்ணுக்குத் தெரிய
மோதிடு
காலனையே
காலால் மிதிப்பேன்
என்றிட்டான்
எங்கள் பாரதி
உன்னையும்
காலால் மிதித்திட
எங்களில் பாரதிகள்
தயார்...
தைரியமிருப்பின்
நேரிட மோதிடு