Tuesday, July 28, 2015

குறுந்தொகை-221




தலைவி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்தது கண்டு கவன்ற தலைவியை, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்திய தோழியை நோக்கி, “முல்லை மலர்ந்தது; கார்காலம் வந்து விட்டது; அவர் வந்திலர்; யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன்?” என்று தலைவி கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் உறையூர் முதுகொற்றன்

இனி பாடல்-
 
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
   
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
   
பாலொடு வந்து கூழொடு பெயரும்
   
யாடுடை யிடைமகன் சென்னிச்

சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே.

                     -உறையூர் முதுகொற்றன்

 

 முல்லைகளும்மலர்ந்தன; பறியோலையை உடையகையினை உடையார்,  குட்டிகளைஉடைய ஆட்டின் திரளோடு சென்று தங்க,  பாலைக் கொணர்ந்து வந்து பாற்சோற்றைப் பெற்று மீண்டு செல்கின்ற,  ஆடுகளை உடைய இடையன், தன் தலையில் அணிந்து கொண்டன யாவும், சிறிய செவ்வியை உடைய அம்முல்லையின் அரும்புகளே ஆகும்;  அத்தலைவர் இன்னும் வாராராயினர்.

     (முடிபு) முல்லையும் பூத்தன; இடைமகன் சூடியவெல்லாம்முகையே; அவர் வாரார்.

     (கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.

     முல்லை பூத்தல் கார் காலத்திற்குஅடையாளம்.

     மாலைக் காலத்தில் ஆட்டை மேய்ப்பவர்கள் மேய்ச்சல் நிலத்தில்தங்க இடையன் பாலை வீட்டிற்குக் கொணர்ந்து கொடுத்து அவர்களுக்குப் பால் சோற்றைக் கொண்டு சென்றான். பாலை விற்கும் பொருட்டு வந்த இடையன் ஊரில் அதனை விற்று விட்டு அதற்கு விலையாக உணவுக்குரிய தானியத்தைப் பெற்றுச் சென்றானெனலும் ஒன்று. இடையர் பாலை விற்றல் வழக்கம்; அவன் செல்லும் வழியில் பூத்த முல்லைப் பூக்களைப் பறித்துத் தன் தலையில் சூடினான்.

Sunday, July 19, 2015

குறுந்தொகை-220




தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராமையால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழிக்குத் தலைவி கூறியது.)


முல்லை திணை - பாடலாசிரியர் ஓக்கூர் மாசாத்தி

இனி பாடல்-
 
பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
   
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
   
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
   
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக்

குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
   
வண்டுசூழ் மாலையும் வாரார்
   
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே.


                          -ஓக்கூர் மாசாத்தி.

   

 தோழி-,  பொருள் ஈட்டி வரும் பொருட்டு நம்மை இங்கு வைத்துப் பிரிந்ததலைவர்,  பழைய மழையினால் தழைத்த, புனத்தில் உள்ள புதிய வரகினது, ஆண் மான்மேய்ந்தமையால் குறைதலை உடைய நுனியை உடையகதிர் அரிந்த தாள்,  சேர்ந்த பக்கத்தில்,  மலர்ந்த முல்லைக் கொடியினது,  காட்டுப் பூனை சிரித்தாற் போன்ற தோற்றத்தைஉடைய, செவ்விப் பூவின்மெல்லிய பொதிதலை உடைய சிறிய அரும்புகள், மலர்ந்த, நறிய மலர்களை உடையமுல்லை நிலத்தில்,  வண்டுகள்அம் மலரை ஊதும் பொருட்டுச் சுற்றுகின்ற மாலைக்காலத்திலும் வாராராயினார்,  இதனைக் கருதுவாயாக.



     (கருத்து) தலைவர் தாம் கூறிச் சென்ற பருவம் வந்தும் வந்திலர்.

Friday, July 17, 2015

குறுந்தொகை-219





தலைவி கூற்று

(தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக் கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வி” என்று உணர்த்தியது.)


நெய்தல் திணை - பாடலாசிரியர் வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்

இனி பாடல்-


பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
   
நாரி னெஞ்சத் தாரிடை யதுவே
   
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
   
ஆங்கட் செல்க மெழுகென வீங்கே

வல்லா கூறி யிருக்கு முள்ளிலைத்
   
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்
   
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே.


                              -வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்


    தோழி--, பசலையானது எனது மேனியின் கண்ணது;  காதல் அவரது அன்பற்றநெஞ்சமாகிய செல்லுதற்கரிய இடத்தின்கண்ணது; எனது அடக்கமும்,  நெடுந்தூரத்தில்.நீங்கியது;  எனது அறிவு,  தலைவர் உள்ள இடத்திற்கே செல்வேம் அதன்பொருட்டு எழுவாயாக என்று, நம்மால் மாட்டாதவற்றைக் கூறி இங்கே தங்கி இருக்கும்; எந்தத் தன்மையில் உள்ளீரோ என்றுபரிவு கூர்ந்து வினாவிக் குறைதீர்ப்பராயின், முள் அமைந்த இலையை உடைய, பருத்த அடியை உடைய தாழையை உடையகடற்கரைத் தலைவருக்கு,  இது தக்க செவ்வியாகும்.



     (கருத்து) தலைவர் வரைவதற்கு ஏற்ற சமயம் இது.

     (வி-ரை.) பகற்குறிக்கண் நிகழும் இடையீட்டால் வருந்திய தலைவி,தலைவன் வரைந்து கோடலை விரும்பிக் கூறியது இது. இதன்கண் தன்நிலையைப் புலப்படுத்தி, இது நீங்குதற்குரிய செவ்வி இதுவென்றுதலைவன் உணரும்படி கூறினாள், அவன் அதனை உணர்ந்து விரைவில் வரைந்து கொள்வான் என்பது கருதி.

Wednesday, July 15, 2015

குறுந்தொகை-218



தலைவி கூற்று
(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவர்நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்போதும்பொருந்தும் வன்மையிலேம்; இத்தகைய நம்மை அவர் மறந்து ஆண்டேஇருப்பாராயின் அவர் பொருட்டுக் கடவுளைப் பராவுதலும் நிமித்தம்பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறியது.)


பாலை திணை - பாடலாசிரியர் கொற்றன்

இனி பாடல் -


விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
   
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
 
புள்ளு மோராம் விரிச்சியு நில்லாம்
 
உள்ளலு முள்ளா மன்றே தோழி

உயிர்க்குயி ரன்ன ராகலிற் றம்மின்
   
றிமைப்புவரை யமையா நம்வயின்
   
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே.


                          -கொற்றன்



 தோழி-, நம் உயிருக்கு உயிரைப் போன்றவராதலின், தம்மை யின்றி,  இமைப் பொழுது அளவேனும், பிரிந்திருத்தலைப் பொருந்தாத,  நம்மை, மறந்து விட்டுத் தாம் சென்ற அவ்விடத்தே தங்குதலில்வல்ல தலைவர் திறத்தில்,  பிளப்பையும் குகைகளையும் உடைய மலைப் பக்கத்தில்  வெற்றி பொருந்திய துர்க்கைக்கு, பலிக் கடன் கழித்தலைச் செய்வோம்; கையில் காப்பு நூலைக் கட்டோம் நிமித்தத்தையும் பாரோம்; நற் சொல்லைக் கேட்டற்குச் சென்று நில்லோம்; நினைத்தலையும் செய்யோம்.


     (கருத்து) நம் அன்பு நிலை தெரிந்து விரைந்து வருதல் தலைவர் கடமையாகும்/

 
     ‘ஒருகணப் பொழுதேனும் அவரைப் பிரிந்து அமையேமாகிய நம்மைப் பிரிந்து, தாம் சென்ற இடத்தே நம்மை மறந்து இருக்கும் மனவலியை உடையர் தலைவர். அவர் நம் உயிருக்கு உயிர் போன்றவராதலின், நம் நிலையை உணர்ந்து விரைவில் வரும் கடப்பாடுடையர். அங்ஙனம் அவர் செய்யாராயின் நாம் கடவுளை வழிபட்டுப் பயன் என்?' என்று தலைவி கூறினாள்.

Tuesday, July 14, 2015

குறுந்தொகை-217



தோழி கூற்று
(‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!’ என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிவெய்துயிர்த்தான்; அது நன்றேயென நான் கூறினேன்” எனத் தோழிதலைமகளுக்குக் கூறி உடன்போக்கை நயக்கச் செய்தது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் தங்கால் முடக்கொல்லனார்


இனி பாடல்


தினைகிளி கடிகெனிற் பகலு மொல்லும்
   
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
   
யாங்குச்செய் வாமெம் மிடும்பை நோய்க்கென
   
ஆங்கியான் கூறிய வனைத்திற்குப் பிறிதுசெத்

தோங்குமலை நாட னுயிர்த்தோன் மன்ற
   
ஐதே காமம் யானே
   
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே.


                        -தங்கால் முடக்கொல்லனார்

   

 தினையின்கண் படியும்கிளிகளை ஓட்டுவீர்களாக என்று கூறி எம் தாய் எம்மைப்போதரவிடின், பகற்காலம் நின்னோடுஅளவளாவுதற்குப் பொருந்தும், அங்ஙனம் இன்மையின்,இராக் காலத்து நீ வருதலினால்,  வழியின்கண் நேரும் துன்பங்களுக்கு அஞ்சுவேன்,  துன்பத்தைத் தரும் எமதுகாமநோயை நீக்குதற்கு, எவ்வாறுபரிகாரம் செய்வேம், என்று அவ்வாறு யான் சொன்ன அதற்கு,  உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன்,வேறு ஒன்றை நினைத்து,அந்நினைவினால் வெய்துயிர்த்தான்;  காமநோய் நுண்ணியது; அவனது குறிப்பை உணர்ந்தயான், நீ நினைத்தவாறு செய்தல்மிக்க அறிவுடைமையும், பழிக்குக் காரணமும்ஆம், என்றேன்.


 
கருத்து - தலைவன் நின்னை உடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான்.


பொருள் எளிய நடையில்-
     ‘இப்பொழுது தினை காவலை ஒழிந்தேமாதலின் பகற்குறி வாயாது; இரவுக் குறியோ ஆற்றூறஞ்சும் நிலையினது; ஆதலின் அதனையும் விரும்பேம். இந்நிலையில் யாது செய்வேம்!’ எனக் கவன்றேன். அதற்குரிய பரிகாரம் ஒன்றை நினைந்த தலைவன் அதனை வாய்விட்டுக் கூற அஞ்சிப் பெருமூச்சு விட்டான். காமம் எவ்வளவு நுண்ணியது! யான் அவன் குறிப்பை உணர்ந்தேன். அவன் நினைந்ததே தக்க விரகாகத் தோற்றியது. ‘நீ நினைந்தது அறிவுடைமையே ஆகும்; ஆயினும் ஊரினர் பழி கூறுதற்கு இடமாம்’ என்றேன்” என்று தோழி கூறினாள். இதனால் தலைவன் உடன்போக்கு நயக்கின்றான் என்பதையும், அதனையன்றி வேறு பரிகாரம் இல்லை என்பதையும், அங்ஙனம் செய்தலே அறிவுடைமைக்கு ஏற்றது என்பதையும், பழிக்கு அஞ்சி அறிவுடைய செயலை விலக்குதல் தகாது என்பதையும் புலப்படுத்தித் தலைவியை உடம்படச் செய்தாள்.(தோழி)