Saturday, February 28, 2009

சுஜாதாவின் டாப் 10 தேவைகள்..

தமிழ் வலைப்பதிவுகளில் கடந்த சில நாட்களாக பத்து என்னும் எண்..கிட்டத்தட்ட அனைத்து பிரபல பதிவர்கள் பதிவிலும் காணப்பட்டது.

முதன் முதலில்..ஒருவர்..பத்து கேள்விகள் என்று ஒரு பதிவு போட்டார்...பிறகு ஒவ்வொருவரும்..ஒவ்வொருவரிடம் கேட்கப்பட வேண்டிய 10 கேள்விகள்...என்று...கிட்டத்தட்ட..ஒரு புது தமிழ் படம் வந்தால் பதிவில் வரும் விமரிசனங்கள் போன்ற எண்ணிக்கையில் பதிவிட்டனர்.

அது சற்றே ஓய்ந்தபோது..தமிழ்மண விருதுகள்.பரிசு கிடைக்காத என்னைப் போன்றவர்கள்..டாப் 10ல் என் பதிவு..என்று பதிவிட ஆரம்பித்து விட்டோம்.நான் கிட்டத்தட்ட..டாப் 10ல் முதல் என்று ,உளியின் ஓசை'கலைஞர் டீ.வி.யில் சொன்னபோது..என்ன சந்தோஷம் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்தனரோ..அந்த அளவுக்கு என் பதிவும் டாப் 10ல் வந்ததற்கு மகிழ்ச்சிஅடைந்தேன்.

சரி...இந்த பதிவு இப்போது எதற்கு என்கிறீர்களா...

அமரர் சுஜாதா தன் டாப் 10 தேவைகள்/கவலைகள் என்று கற்றதும்...பெற்றதும்..தொடரில் சொல்கிறார் தெரியுமா?

1.உடல்நலம்....இதுவே முதல் இடம்

2.மனநலம்

3.மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது

4.தெரிந்தோ..தெரியாமலோ..யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது

5.இன்சொல்

6.அனுதாபம்

7.நல்ல காபி

8.நகைச்சுவை உணர்வு

9.நான்கு பக்கமாவது தினம் படிப்பது

10.எழுதுவது

இதை எழுதுகையில் அவர் வயது 70.

மேலும் அவர் சொல்கிறார்..பணம்..இந்த லிஸ்டில் இல்லை..அது இந்த வயதில் லிஸ்டை விட்டு போய்விட்டது.

இனி டாப் 10 தேவைகள் பதிவுகளை எதிர்ப்பார்க்கலாமா?

Friday, February 27, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(28-2-09)

1.தமிழ்...தமிழனால்தான் கெட்டுப்போய் இருக்கிறது.பேசும்போது கொச்சை பதங்களுக்கு அளவுக்கு மிஞ்சி இடம் கொடுத்துவிடுவது.இரண்டாவது ஆங்கில மொழிகளைத் தயக்கமின்றி எல்லாக் காரியங்களுக்கும்..எல்லாச் சமயங்களிலும் கலந்து பேசும் வழக்கம்..மூன்றாவது..பேசும்போது..கைகளையும்..தலையையும் ஆட்டி..பேச்சுக்குப் பதிலாக உடலை உபயோகித்து பேசுவது.மொத்தத்தில்..சோம்பேறிகளைப் பெற்ற தாயைப்போல தமிழன்னை அவதிப் படுகிறாள்.இப்படிச் சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி.

2.இந்தியாவில்...1997 முதல் 2007 வரை..பத்தாண்டுகளில் மட்டும் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.சராசரி ஆண்டுக்கு 18700 பேர்.நமக்கு சாப்பாடு போடும்..இந்திய விவசாயிகள் நிலை பாரீர். ஜெய் கிசான்..

3.ஸ்லம்....படத்தில்..வரும் தாராவி குப்பம் 520 ஏக்கர் பரப்பில் 93 பகுதிகளைக் கொண்ட 3600 குப்பங்களாம்.ஆசியாவிலேயே பெரிய குப்பம் இதுதானாம்.ஆனால்...2001ல் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்..இந்த குப்பத்தை சேர்ந்தவராம்.தற்போது மும்பை கூடுதல் முனிசிபல் கமிஷனர் எஸ்.எஸ்.ஷிண்டே இங்கே பிறந்து வளர்ந்தவராம்.தற்போது 46 மருத்துவம் படிக்கும் மாணவர்களும்,38 பொறியியல் படிக்கும் மாணவர்களும் உள்ளனராம்.எங்கள் குப்பம் பற்றி..ஸ்லம்...படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயமும்...அப்பட்டமான பொய் என்கின்றனராம் இப்பகுதி மக்கள்.

4.வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் தெரியுமா?..தாமரையைப் போல.,தாமரை சேற்றில் புதைந்து விடுகிறது.தாமரை மலர் மிகப் புனிதமானது.சேற்றின் நாற்றமோ,தண்ணீரின் சலசலப்போ..அதன் அழுக்கோ அதனை பாதிப்பதில்லை.தாமரை இலையோ இன்னும் நேர்த்தியாக ஒரு துளி தண்ணீர்கூட ஒட்டாமல்..'என்னைப்பார்..எவ்வளவு சுத்தம்..'என நம்மைப் பார்த்து சிரிக்கிறது.'வெள்ளத்தனைய நீர் மட்டம்' என்பது போல தண்ணீர் எந்த அளவு இருக்கிறதோ..அந்த அளவிற்கு தண்டுகளைச் சுருக்கி தாமரை அது பாட்டிற்கு..எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது.

5.ஒரு கவிதை

கடைசி சவம் விழுந்ததும்
கட்டாயம் அறிவிக்கப்படும்
போர் நிறுத்த அறிவிப்பு.

6.ஒரு ஜோக்

டாக்டர்-(அரசியல்வாதி நோயாளியிடம்) இரண்டுநாள் டயட் ரெஸ்ட் ரிக்ட் பண்ணினா உடம்பு குணமாயிடும்.
அரசியல்வாதி- அப்போ..மக்கள் ஒற்றுமையா இருக்கணும்னு இரண்டு நாள் உண்ணாவிரதம் அறிவிச்சுடறேன்.ஒரே கல்லில இரண்டு மாங்காய்

தமிழ்மணம் விருது எனக்கு ஏன் கிடைக்கவில்லை...

தமிழ்மணம் விருதுகள் 2008 போட்டி நடந்ததையே..கிட்டத்தட்ட அனைவரும் மறந்து விட்ட நிலையில்...முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றி பெறாதவவர்கள்..குறைந்தது தங்கள் பதிவு டாப் 10க்குள் வந்ததா என்று பார்த்து..சர்வேசன் போல் சந்தோஷப்படலாம்.,அதுவும் இல்லாதவர்களுக்கு better luck next time.

இப்போ தலைப்பு வருகிறேன்...

என் பதிவும் டாப் டென்னில் வந்திருந்தாலும்...எனக்கு ஏன் விருது கிடைக்கவில்லை..என மண்டையை குடைந்துக்கொண்டதில்...அதற்கான காரணம் புரிந்தது.

போட்டியில் ..நான் கலந்துக்கொண்ட பிரிவில்..நிறைய பதிவர்கள்..பதிவுகளும் இருந்தன.அப்படியில்லாமல்..இரண்டே பேர் கலந்துக் கொண்டிருந்தால் எனக்கு அந்த பிரிவில் விருது கிடைத்திருக்கும்.

குலப்ஜாமூன் விளம்பரத்தில் குட்டிப்பையன் கலந்துக்கொண்ட ஒட்டப்பந்தயம் போல.

Thursday, February 26, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 2

1954ல் இவர் நடித்து வெளிவந்த படங்கள்

மனோகரா, இல்லறஜோதி, அந்தநாள், கல்யாணம் பண்ணியும்  பிரம்மச்சாரி, துளிவிஷம், கூண்டுக்கிளி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது. இவைத் தவிர..மனோகரா..ஹிந்தி மற்றும் தெலுங்கு.

மனோகரா...மீண்டும் கலைஞர்..கதை வசனம்.மாபெரும் வெற்றி பெற்ற..படம்..பராசக்தி..கோர்ட் காட்சி வசனம் போல்...இப்படத்திலும்...கிளைமாக்ஸில்..கண்ணாம்பா,சிவாஜி வசனங்கள்..தனியாக இசைத்தட்டாகவே வந்து..அனைவராலும் முணுமுணுக்கப்பட்டவை. இப்படத்தில்..கிரிஜா என்னும் நடிகை நடிகர் திலகத்தின் ஜோடி.டி.ஆர்.ராஜகுமாரி,எஸ்.ஏ.நடராஜன்..வில்லி..வில்லன்.

இப்படத்தைப் பற்றி சிவாஜி ஒருமுறை கூறுகையில், நான் கஷ்டப்பட்டு பக்கம் பக்கமாய் வசனம் பேசியிருந்தாலும்.."பொறுத்தது போதும்..பொங்கி எழு மனோகரா" என்று கண்ணாம்பா பேசிய வசனத்தால் என்னைவிட அதிகமாக போற்றப்பட்டார் என்றார்.இது அவரின் பெருந்தன்மையினைக் காட்டுகிறது

இல்லறஜோதி..கண்ணதாசன்..கதை..வசனம்..படம் எதிர்ப்பார்த்த அளவு பேசப்படவில்லை.

எஸ்.பாலசந்தர் கதை வசனத்தில் வந்த படம்..அந்தநாள்.தயாரிப்பாளர் ஏ.வி.ஏம்.,சிவாஜிக்கு..வில்லத்தனமான கதானாயகன் பாத்திரம்.தேசதுரோகம் செய்யும் அவரை..அவர் மனையாக வரும் பண்டரிபாயே கொலை செய்துவிடுவார்.(பின்னாளில் வந்த கே.பாலசந்தரின்..அச்சமில்லை..அச்சமில்லை.ஞாபகம் வருகிறதா?)அந்தநாளில்..அந்தநாள் தான் பாடல்களே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் எனலாம்.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி...நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து..பி.ஆர்.பந்துலு எடுத்தபடம்.பத்மினி காதானாயகி.படம் வெளிவந்த போது..எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை என்றாலும்..இரண்டாவது..மூன்றாவது ஓட்டங்களில்..வசூலை குவித்தது எனலாம்.

துளிவிஷம்...சிவாஜி வில்லன் பாத்திரம்..பாரதிதாசன் கதை என்பதைத் தவிர..சொல்ல ஒன்றுமில்லை.

கூண்டுக்கிளி....தமிழ்த் திரையில்..புரட்சி நடிகரும்..நடிகர் திலகமும் நடித்து வந்த ஒரே படம்.டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பு..இயக்கம்.பி.எஸ்.சரோஜா நாயகி.சிவாஜிக்கு வில்லன் பாத்திரம்..ப


எதிர்பாராதது..ஸ்ரீதரின் கதை வசனம்.நாயகனின் நாயகி (பத்மினி)யே..எதிர்பாராமல்..நாயகனுக்கு அம்மா வாகிறார்.(மூன்று முடிச்சு?).படம் வெற்றி. சிற்பி செதுக்காத பொற்சிலையே..என்ற ஏ.எம்.ராஜாவின் பாடல் இன்றும் கேட்க இனிமையானது.

தூக்கு தூக்கி...என்ன சொல்ல முடியும்..வெற்றி..வெற்றி...வெற்றி..தான்.இன்றும் இப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு.பத்மினி.லலிதா,ராகினி,பாலையா..இப்படி நட்சத்திரக் கூட்டம்.இப்படப் பாடல்களைப் பாட..திருச்சி லோகனாதனைக் கேட்டார்களாம்.அச்சமயத்தில் பீக்கில் இருந்ததால்..அவர் அதிகத் தொகைக் கேட்க தயாரிப்பாளர்கள்..அவ்வளவு முடியாது என உரைக்க ..அப்போ..மதுரைல இருந்து ஒரு
பையன் வந்திக்கான்..அவனை பாடச்சொல்லுங்க..என்றாராம்..லோகநாதன். அந்த பாடகர்தான்..டி.எம்.எஸ்.,

பெண்களை நம்பாதே...ஏறாத மலைமேலே..அபாய அறிவிப்பு, சுந்தரி சௌந்தரி..குரங்கிலிருந்து போன்ற அற்புதமான பாடல்கள் நிறைந்த படம் இது.

கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்

இதை ஒரு கூட்டத்தில் கேட்ட சிவாஜி, அதை மறுக்கிறார்.ஆனாலவர் வாழ்வில் இவை அனைத்தும் உண்மையாகிறது

இனி 1955ல் வந்த படங்கள்...அடுத்த பதிவில்...

அபி அப்பாவும்...இந்த பதிவும்..

அபி அப்பா இன்னிக்கு ஒரு பதிவு போட்டிருக்கார்.பாடாவதி ஹிந்தி வாத்தியார்ன்னு.
http://abiappa.blogspot.com/2009/02/blog-post_26.html


அதைப்படிச்சதும்..எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.இது உண்மையா நடந்ததான்னு எனக்குத் தெரியாது.ஆனா உங்களைப்போல ஒரு நண்பர் சொன்னது.

அந்த பகுதி..அந்தணர்கள் நிறைந்த பகுதி.அங்கே சாக்கடை அடைத்துக் கொண்டுவிட்டது.தெருவிற்குள்ளே நுழையக்கூட முடியாத படிக்கு..ஒரே கப்பு.

அவங்களைப் பத்தித் தெரியுமே..ஒரு ஓய்வு பெற்ற பெரிசு..மேயருக்கு..ஒரு புகார் கடிதம் எழுதிட்டு..ஹிந்து பத்திரிகைல..லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் காலத்திற்கும் எழுதிடுத்து. பலன்...லெட்டர் பிரசுரமானதுடன் சரி..நிவாரணம்..கிடைக்கவில்லை.ஆனால் பெரிசோ..எல்லார் கிட்டேயும் பெருமையா..என் பேரு பேப்பர்ல வந்துடுத்து குதிச்சுதாம்.

உடனே இன்னொரு பெரிசு 'அதனால..என்ன ஓய்..பிரயோசனம்...சாக்கடை அடைப்பு..நீங்களையே..' ன்னு உசுப்பி விட்டுடுத்து.

இவருக்கு கோபம் வந்து..தலைமைசெயலகத்திற்கு..அலையாய்..அலைந்து..முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தது.

தேர்தல் வரும் சுழல்..இருந்ததால்..மனுவும்..முதல்வர் கண் பார்வைக்கு சென்றது. உடனே..வாக்குகள் மீது கண் இருந்ததால்..முதல்வரும்..நகர மேயருக்கு..அந்த கடிதத்தில்..சில எழுத்துக்களை எழுதி
ஃபார்வேர்ட் பண்னினார்..

அப்புறம் என்ன என்கிறீர்களா?

அப்பறம் தான் விசேஷமே..முதல்வர் எழுதியதைப்படித்ததும்...மேயருக்கு..அவர் என்ன சொல்ல வருகிறார்..சரி செய்ய சொல்கிறாரா..வேண்டாம் என்கிறாரா எனத் தெரியவில்லையாம்..ஆமாம் அப்படி..முதல்வர் என்ன எழுதினார் என்கிறீர்களா?

அவர் எழுதியது...

அந்தணர் வாழும் பகுதி...ஆவன செய்யவும்...

Wednesday, February 25, 2009

வாய் விட்டு சிரியுங்க....

1.ரௌடித்தனம் பண்ணி பணம் சம்பாதிச்சுக் கிட்டிருந்த கேடி கபாலிக்கு வேலை கிடைச்சிருக்கிறதே..
என்ன வேலை
போலீஸ் கான்ஸ்டபிளாக.

2.படத்திலே சம்பந்தமே இல்லாம ஒரு டெம்போ அடிக்கடி வருதே ஏன்?
படத்தில டெம்போ இல்லைன்னு..யாரும் சொல்லக்கூடாது..இல்லையா..அதனால்தான்

3.உன் பாட்டியை ஆம்புலன்ஸ்ல எங்கே அழைச்சுக்கிட்டுப் போறே..
பாட்டிக்கு உடம்பு சரியில்லை..லீவு வேணும்னா அதிகாரி நம்பமாட்டேன்னு சொல்றார்..அதான் நேரே அழைச்சுக்கிட்டுப் போறேன்

4.தலைவருக்கு எடைக்கு எடை அவுல் கொடுக்கறாங்களே..ஏன்?
எப்போதும் வெறும் வாயை மெல்லுகிறாராம்

5.அப்பா..200 கிராம் டூத் பேஸ்ட்ல..எவ்வளவு பேஸ்ட் இருக்கும்..
காற்றுப்போக 100 கிராம் இருக்கும்

6.உங்க கல்யாணத்திற்கு வரமுடியல...சாரி..
அதனால பரவாயில்லை...இப்பக்கூட நீங்க் மொய் எழுதலாம்.

7.என்ன டாக்டர்..வயிற்றில ஸ்டெத்தை வைச்சு தலையை ஆட்டிக்கிட்டு இருக்கீங்க?
உஷ்...சத்தம் போடாதீங்க..உள்ள வலையப்பட்டி ரேஞ்சுக்கு தவுல் வாசிக்கிற சத்தம் வருது

Tuesday, February 24, 2009

வண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..

வண்ணதாசன்...

எஸ்.கல்யாணசுந்தரம்

கல்யாண்ஜி

நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன்.திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்...நம் அனைவருக்கும் சொந்தமானவர்.பிரபல இலக்கிய விமரிசகரும்,சாகித்ய அகடமி..விருதும் பெற்றவருமான..பொது உடமைவாதியான தி.க.சி., என எல்லோராலும் அறியப்படும்..தி.க.சிவசங்கரனின்மகன் ...1962ல் தீபம் இதழில் எழுத ஆரம்பித்தவர்.பின் பல சிறுகதைகள் பல பத்திரிகைகளிலும் வண்ணதாசன் என்ற பெயரில் எழுதினார்.

பழக மிகவும் இனியவர்.....மறந்தும் கடினமான சொற்களைக் கூறாதவர்.இவர் படைத்துள்ள கதைகள் அனைத்தும்..இலக்கியத்தரத்துடன் இருப்பதோடு..அவற்றுள் கருணையும்..பிரியமும்..மெல்லிய நடைபோடும்.

சாதாரணமாக நாம் யாருக்கும் கடிதம் எழுதுவதில்லை...காரணம் சோம்பேறித்தனம்.ஆனால்..இவர்..அனைவருடன் கடிதத்தொடர்புள்ளவர். 'என்றென்றும் அன்புடன்.." என்ற இவரின் கடிதத் தொகுப்புக்கூட இலக்கிய மணம் வீசும்.

தோட்டத்துக்கு வெளியே சில பூக்கள்,சமவெளி,பெயர் தெரியாமல் ஒரு பறவை,கிருஷ்ணன் வைத்த வீடு..ஆகியவை இவரின் சிறுகதைத் தொகுப்புகள்.எல்லா சிறுகதைகளும் சேர்ந்து..சந்தியா பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

இவர் சமீபத்தில் விகடனில் எழுதிய 'அகம் புறம்' அனைவரும் படித்து ஆனந்த அடைய வேண்டிய ஒன்று.இதுவும்..விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

'சின்னு முதல் சின்னு வரை' என்ற ஒரு நெடுங்கதையும் எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள்..பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.

இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்..தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்..சாகித்ய அகடமி விருது பெற வேண்டிய எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.

கலைஞரின் படைப்பு ஒன்று(தென் பாண்டி சிங்கம் என்று நினைவு)..சன் டீ.வி.யில் இளையபாரதி (தற்சமயம்..இயல்,இசை,நாடக மன்றத்தில் செயலராக உள்ளார்) தயாரித்த போது..அவருடன் சேர்ந்து வண்ணதாசன் வசன உதவி புரிந்துள்ளார்.

புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்..என சுஜாதா அடிக்கடி கூறுவார்.

ஸ்டேட் வங்கியில்..அதிகாரியாக பணி புரிந்து..ஓய்வு பெற்று..திருநெல்வெலியில் தற்போது வசித்து வருகிறார்..அன்பு மனைவி வள்ளியுடன்.இவருக்கு..சங்கரி என்ற மகளும்..ராஜு என்ற மகனும் உள்ளனர்.

இவருடன் சேர்ந்து..வங்கியில் 3 ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்தவன்..நான்...

அந்த நாட்கள்..என் வாழ்வின் வசந்தகாலங்கள்.

அவரின் கவிதை ஒன்று.

இருந்தவை...தொலைந்தவை..

கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்துத் திரும்புமுன்
அணைந்துவிடுகிறது
முதல் விளக்குகளுள் ஒன்று.
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைந்த பிறகுதான்
அதைச் சற்று
அதிகம் பார்க்கிறோம்.
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தைவிட
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.

அதி புத்திசாலி அண்ணாசாமியும்...ஆஸ்கார் விருதும்...

நம் திரையுலகில் ஒரு படம் வெற்ரிப்பெற்றால்...தொடர்ந்து..அதே பாணியில் படங்கள் வரும்.,

ஆனால்..ஸ்லம்டாக்...படம் ஆஸ்கார் விருதுகளைக் குவித்ததால்...அண்ணாசாமிக்கும் படம் எடுக்கும் ஆசையும்..அதற்கு ஆஸ்கார் வாங்கும் ஆசையும் வந்துவிட்டது.ஆனால்..அவர் புத்திசாலியாயிற்றே!அதனால்..ஸ்லம்..படத்திர்கு பதில் பாஷ் ஃபாக்ஸ் (posh fox) படம் எடுக்க தீர்மானித்து விட்டார்.

மேலும் இந்தியாவில்..வசதிப்படைத்தவர்களும் இருக்கிறார்கள் என உலகுக்கு தெரிவிக்கப்போகிறாராம்.அவர் இந்த படத்தில் சொல்ல ஆசைப்படுவது...

ஒரு ஏழை...வயிற்றுக்கு இல்லாமல்...கிராமத்திலிருந்து சென்னை வருகிறான்.அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து..அக்கட்சி தலைவரின் பிரதம சீடன் ஆகிறான்.அப்போது..'தல ஹோ..தல ஹோ' ன்னு ஒருபாடல்.மக்களை எப்படி ஏமாற்றும் வழிகளை அறிகிறான்.உண்ணாவிரதம் என்று காலையில் பிரியாணியை ஒரு பிடி பிடித்து விட்டு..10 மணிக்கு வந்து உண்ணாவிரத மேடையில் உட்கார்ந்து..உண்ட மயக்கத்தில் தூக்கம் போட்டு...பார்க்கும் மக்கள்..பாவம்..சாப்பிடாமல் சோர்வு..என சொல்ல வைக்கிறான்.

பொது மக்களுக்கு செய்யும் அனைத்து சேவையிலும்..கமிஷன் அடிக்கிறான்..கவுன்சிலர்.ஆகி..ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறான்...அடுத்த சட்டசபை தேர்தலில்..எம்.எல்.ஏ.,ஆகி..லட்சக்கணக்கில் ஊழல் புரிகிறான்...அந்த தகுதியே..அவனுக்கு நாடாளுமன்ற தேர்தலில்..எம்.பி.,சீட் வாங்கி கொடுக்கிறது..பதவி உயர்வு...என்றதும்..ஊழல் அளவும் உயர்கிறது...இப்போது கோடிக்கணக்கில் ஊழல்..
இடையிடையே..மக்கள் சேவையே..என் லட்சியம்...என மக்களுக்காக சில போராட்டங்கள்.

மக்களும்...நமக்கு இந்த தன்மானத் தலைவனை விட்டால்..வேறு இல்லை...என சொல்ல வைக்கிறான்.மொத்தத்தில்..பணக்கார..கோடீஸ்வரர்களிடையே ஒரு குள்ளநரியாய் (அப்பாடி படப்பெயர் வந்துவிட்டது..posh fox)செயல் படுகிறான்.

நாட்டின் எழ்மையைக்காட்டி..ஆஸ்கார் வாங்கிய..ஸ்லம்...போல்...நாட்டின் மக்களை சுரண்டும் ஒரு பணக்காரவர்க்கத்தைக் காட்டி..அடுத்த ஆண்டு தான் ஒரு ஆஸ்கார் வாங்க தீர்மானித்து விட்டார் அண்ணாசாமி.படத்தை இயக்க ஒரு வெளிநாட்டு இயக்குநரையும் தேடிக்கொண்டிருக்கிறாராம்.

Sunday, February 22, 2009

தவறு செய்பவரா நீங்கள்...

மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா?

வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.

ஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..

நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.

சில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.

வாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.

நான்..ஒரு சமயம்...ஒரு  பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.

ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.

தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.

Saturday, February 21, 2009

தேர்தலும்..கூட்டணிகளும்..அண்ணாசாமியும்..

வரும் நாடாளுமன்றதேர்தலில் கூட்டணிகள் எப்படி அமையும்..எந்த கூட்டணி வெல்லும்..என்றெல்லாம்..கட்சிகள் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும் நிலையில்..அண்ணாசாமி ஒரு கணக்கு சொல்கிறார்.
சென்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்...தி.மு.க.,பா.ம.க.,கம்யூனிஸ்ட் கட்சிகள்,காங்கிரஸ் என வலுவான கூட்டணி அமைந்ததால்...தி.மு.க.வும் இட ஒதுக்கீட்டில் தனது பங்கை குறைத்துக் கொண்டது.அ.தி.மு.க., எதிர்பார்த்ததற்கு மேல்..சொத்தை கட்சியை கூட்டணியில் வைத்தும்..இடங்களை வென்றது.விஜய்காந்த் வேறு தன் பங்குக்கு ஓட்டுகளை பிரித்து..தி.மு.க.விற்கு உதவினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை..எல்லா கட்சிகளும் முடமாகவே இருக்கின்றன.கூட்டணிகட்சிகள் என்ற ஊன்றுகோல் இல்லாமல் இவர்களால் தனித்து நிற்கமுடியாது.வெல்லவும் முடியாது.

அதனால்தான்..பா.ம.க.,இன்னும் கூட்டணி விட்டு வர முடியவில்லை.

அதனால்தான்..அ,தி.மு.க., காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கிறது.

அதனால்தான் தி.மு.க.,சோனியாவை சொக்கதங்கம் என்கிறது.

அதனால்தான் மொய்லி தி.மு.க.உடன் கூட்டணி வலுவாக இருக்கிறது என்கிறார்.

அதனால்தான்..நேற்றுவரை கூட்டணி இல்லை என்றவர்..இன்று பரிசீலிப்போம் என்கிறார்..தேர்தலை புறக்கணிப்போம் என்கிறார்.

இவர்கள் எல்லாம் ஒன்றை மறந்துவிட்டனர்..இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் மக்கள். அவசரநிலை பிரகடனப்படுத்தபின் வந்த தேர்தலில்..காங்கிரஸ் ..மக்களால் புறக்கணிக்கப் பட்டது.இந்திரா காந்தி...அரசியல் கோமாளி எனப்பப்பட்ட ராஜ்நாராயணனிடம் தோற்றார்.

ஆகவே..கட்சி தலைவர்களே..மக்களுக்கு எல்லாம் தெரியும்...நீங்கள் யாருடன் வலுவான கூட்டு வைத்தாலும்...இம்முறை தமிழனை ஏமாற்றமுடியாது.

அவன் இன்று கொதித்துக் கொண்டிருக்கிறான்..முதலில் அவனை சாந்தப் படுத்துங்கள்.

இல்லையேல்..உங்களுக்கு சங்குதான்.

Friday, February 20, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(21-2-09)

1.பறவை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும்..அதன் நிழல் தரையை தொட்டுத்தான் ஆகணும்

2.நாடு நலமுடன் இருக்க மன்னர்கள் அமைச்சரிடம் மாதம் மும்மாரி பொழிகிறதா? என்பார்கள்.அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஒன்பது நாள் வெயில் காய வேண்டும்.ஒரு நாள் மழை பெய்ய வேண்டும்.அப்போதுதான் பூமி வளமை கொண்டதாக திகழும்.ஒரு மாதத்திற்கு 27 நாட்கள் வெயில்.3 நாட்கள் மழை.

3.உண்மைக்கும்...வாய்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன? என ஒரு சிஷ்யன்..தன் குருவைக் கேட்டான்.
'உண்மையைச் சொன்னால்..உயிருக்கு அழிவு வரலாம்..என்றால்..அதைச் சொல்லாமல் ..அதே சமயம் உயிருக்கு ஆபத்து வராத சொல்லைக் கூறுதல் வாய்மை எனப்படும்.
உதாரணமாக..ஒரு பசு ஒடி வருகிறது.முனிவர் அதைப் பார்க்கிறார்..சில மணித்துளிகள் கழித்து..ஒரு கசப்பு கடைக்காரன் வந்து..சுவாமி..இந்த பக்கமாக ஒரு பசு வந்ததா? என்கிறான்.முனிவர்..ஆமாம் என்றால்..பசு இறந்துவிடும்.எனவே..
பசுவா..என்கிறார்..
ஆமாம்...பார்த்தீரா
கண் பார்க்கும்...ஆனால் அதற்கு சொல்லத் தெரியாது
நடந்ததைச் சொல்லும்
நாக்கு பார்க்காது..அதற்கு சொல்லத் தெரியும்..அதாவது..பார்ப்பதற்கு சொல்லத் தெரியாது..சொல்வதற்கு பார்க்கத் தெரியாது
கசாப்பு கடைக்காரன்..எதும் புரியாமல்..திரும்பினான்.
குரு சொன்னார்..அந்த முனிவர் கையாண்ட முறையே..வாய்மை எனப்படும்.

4.ஒரு தலைவனின் கருத்துக்களையும்,கொள்கைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் ..புகழலாம்.ஆனால்..அத்தகைய தலைவர்களையே..கடவுள் அவதாரமாகக் கருதி..அவரின் கொள்கைகளையும்
கடவுள் வாக்காக கருதுவது தவறு.முன்னது..எந்த ஆபத்தையும் உருவாக்குவது..பின்னது பொல்லாத பெரும் கேடு உருவாக்கும். - டாக்டர்.அம்பேத்கர்

5. தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறு ஏதுமில்லை.பிள்ளை தன்னுடைய அன்பை பிரதிபலிக்காவிடினும்..தாய் அதை பொர்ட்படுத்த மாட்டாள்.துஷ்டப் பிள்ளை உண்டு.துஷ்ட அம்மா கிடையாது.

6.ஒரு கவிதை-

மகனே
நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும்பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னைமரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும்..சுவை நீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும்.
-தமிழருவி மணியன்

7.ஒரு ஜோக்..

கேடி கபாலி -(போலீஸ் அதிகாரியிடம்) என் பையன் பெரிய தாதா வாக்கும்
போலிஸ் அதிகாரி-அதனாலென்ன..என் பையன் யார் தெரியுமா? வக்கீலாக்கும்

Thursday, February 19, 2009

சிவாஜி ஒரு சகாப்தம்..- 1

சிவாஜி கணேசன்...

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்..

இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.

ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.

ஆம்...அவர் ஒரு பல்கலைக்கழகம்..சகாப்தம்..

இனி வாரம்தோறும் வெள்ளியன்று..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.

என் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும் விட்டுப்போயிருந்தாலோ..தவறிருந்தாலோ..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.

இனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..

தமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற..
படத் தயாரிப்பாளர் பெருமாள் சிவாஜிதான் அப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அப்படத்தின் கதை வசனம் கலைஞர் ..கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்" என்பதுதான்.பின் திரையில் வெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.

அதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.

பராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)

பூங்கோதையில் அஞ்சலி தேவி நாயகி,படம்  வெற்றி.அடுத்து..திரும்பிப்பார்..இதிலும் கலைஞர் வசனம்..பண்டரிபாய் கதாநாயகி..படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..காதானாயகன் கெட்டவன்.சிவாஜி..இமேஜ் பற்றி கவலைப்படாமல்..நடிப்பவர் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

அன்பு -

இத்திரைப்படம் வெளியான நாள்..24-7-1953

சிவாஜியுடன், டி.ஆர்.ராஜகுமாரி, பத்மினி,பாலையா ஆகியோர் நடித்திருந்தனர்.
விந்தன் எழுத்தில் எம்.நடேசன் திரைக்கதையில் நடேஷ் ஆர்ட் பிக்க்ஷர்ஸ் சார்பில் எம்.நடேசன் இயக்கியிருந்தார்.
டி ஆர்.பாப்பா இசை.

தங்கம் ,ராஜமாணிக்கம் முதலியார் என்பவர்க்கு இரண்டாம் மனைவியாய் வாழ்க்கைப்பட்டவர்.தங்கத்தின் திருமணத்திற்கு முன்னறே முதலியாருக்கு..செல்வம் என்ற மகனும், லட்சுமி என்ற ஒரு மகளும் இருந்தனர்.முதலியார் இறக்கும் காலகட்டத்தில் தங்கம் கருவுற்றிருந்தாள்.செல்வம், மாலதி என்பவளைக் காதலிக்க..இது விரும்பாத வில்லன் திருமலை..த்ங்கத்தின் வயிற்றில் வளரும் கரு ..செல்வத்தின் மூல்மாகத்தன என்ற வதந்தியை பரப்ப..மலதியும் அதை ந்மபும் சூழல் ஏற்படுகிறது.இப்பழியிலிருந்து செல்வமும், தங்கமும் எப்படி வெளிவந்தனர் என்பதே மீதிக் கதை.

இப்படம் அபெக்க்ஷா என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.    

மற்ற படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை.

1954..அடுத்த பதிவில்...

வக்கீல்கள்-போலீஸ் மோதலுக்கு காரணம் என்ன?

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி மீது முட்டை வீசியதாக கூறப்படும் வக்கீல் ஒருவரை போலீஸார் கைது செய்ததே வக்கீல்கள் பெரும் ஆத்திரத்துடன் இன்று கலவரத்தில் ஈடுபட முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் என்ற வக்கீல் கொடுத்த புகாரின் பேரில் சுவாமியைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியும் வக்கீல்கள் போராட்டத்தில் குதித்ததே வன்முறையாக மாறியது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மீது முட்டை வீசிய வழக்கறிஞர்களில் ஒருவரான இம்மானுவேல் என்பவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் இம்மானுவேல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகி விட்டது. இம்மானுவேலைக் கைது செய்த போலீஸார் சுவாமியைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் கொடுத்த புகாரை ஏற்று ஏன் சுவாமியைக் கைது செய்யவில்லை என்று கோரித்தான் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறிப் போனது.

போலீஸார் திட்டமிட்டு தாக்கினர் - வக்கீல்கள்:

இதற்கிடையே போலீஸார் திட்டமிட்டு தங்களைத் வெறித்தனமாக தாக்கியதாகவும், வக்கீல்கள் என்ற போர்வையில் ரவுடிகளை அழைத்து வந்து இந்த கலவரத்தை அரங்கேற்றினர் என்றும் உயர்நீதிமன்ற வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வக்கீல்கள் தரப்பில் கூறுகையில், அமைதியான முறையில்தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். வழக்கறிஞர் ரஜினிகாந்த் கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரினோம்.

ஆனால், திடீரென ஒரு கும்பல், அவர்கள் வக்கீல்கள் அல்ல, தாக்குதலில் இறங்கினர். முதலில் கல்வீசித் தாக்கினர். பின்னர் வன்முறையில் இறங்கினர். இதையடுத்து அதற்காகவே காத்திருந்தது போல போலீஸார் வெறித்தனமாக வக்கீல்களைத் துரத்தி துரத்தி தாக்கினர்.

இதில் பல வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். பலருக்கு மண்டை உடைந்துள்ளது.

போலீஸார் வேண்டும் என்றே இந்த வன்முறையை அரங்கேற்றியுள்ளனர். வக்கீல்களின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் இதைச் செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

போலீஸார் வெளியேற்றம்:

இதற்கிடையே உயர்நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார், அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

டிஜிபி கே.பி. ஜெயின் உத்தரவின் பேரில் அவர்கள் வெளியேறினர்.

நன்றி தட்ஸ் தமிழ்

Wednesday, February 18, 2009

என் புத்தகம் நாட்டுடமையாக்க எதிர்ப்பு...

நான் எழுதி வெளிவந்த நாடகநூல்..'பாரத ரத்னா..'

இது ஒரு தன்னலமற்ற..தமிழாசிரியர் கதை என்பதாலும்..ஆசிரியர்கள் குறித்து உயர்வாய் சொல்லி இருப்பதாலும்..ஆட்சியில் இருப்பவர்களைக் கவர்ந்த புத்தகம் இது என எண்ணுகிறேன்.அதனால்தான் இதை நாட்டுடமையாக்க அரசு அறிவிப்பு வெளியிட இருந்தது.இதை பள்ளிகளில் ஒரு பாடமாக வைக்கும் எண்ணமும் அரசுக்கு இருந்திருக்கிறது.

இப்புத்தகம் விலை 35 ரூபாய்தான்..என்பதாலும்..இதை நாட்டுடமை ஆக்கினால்..மற்ற பதிப்பகங்கள் இதை மலிவு விலையாக 5 ரூபாய்க்கே கொடுக்கலாம்.

ஆனால்..எனது வாரிசுதாரர்கள்..இப்புத்தகம் நாட்டுடமை ஆவதை எதிர்க்கிறார்கள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்..

1.அரசு 10 லட்சமாவது கொடுக்கும்

2.புத்தகத்தின் விலை 5 ரூ ஆனாலும்..அதிகம் பேர் வாங்கப் போவதில்லை.அதனால் பதிப்பகத்தாருக்கும் நஷ்டம் எற்படும்

3.தேவையில்லாமல் மக்கள் வரிப்பணத்தை எடுத்து அரசு எங்களுக்கு தருவதை நாங்கள் விரும்பவில்லை.

ஆகவேதான் எதிப்பைத் தெரிவிக்கிறோம் என்கின்றனர்.

ஆமாம்...என் கருத்து என்ன என்று கேட்கிறீர்களா?

என்னைவிட என் மக்களுக்கு ..என் எழுத்துப் பற்றி..என்னைப் பற்றி தெரியும் என்றே நினைக்கிறேன்.

வாய் விட்டு சிரியுங்க...

1.இங்க கணபதி ஸ்ரீனிவாச கோபால சுப்ரமணியன் வீடு எது?
பேரை இப்படி மொட்டையா சொன்னா..எப்படி..அவர் இனிஷியல் என்ன?

2.நான் காலையிலே ஆஃபீஸுக்கு லேட்டாப் போனா அதை சரிகட்ட சாயங்காலம் சீக்கிரம் போயிடுவேன்

3.உன் மனைவி இடது கை பழக்கம் உள்ளவரா?
எப்படி கண்டுபிடிச்சே
உன் வலது கன்னம் வீங்கியிருக்கே

4.நம்மோட தலைவர் சிறுகக் கட்டி பெருக வாழ்பவர்
அப்படியா
சின்னவீடு ஒன்னையும் வைச்சுண்டு..பெரிய வீட்டோட வாழ்ந்து கிட்டு இருக்கார்.

5.நிருபர்-(நடிகையிடம்) இன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னி நீங்கதான்
நடிகை-அந்த இளைஞர்கள் விலாசத்தையெல்லாம் சொல்லுங்க..அவங்க கனவில வர நேரத்துக்கான என் கால்ஷீட் பணத்தை வாங்க சௌகரியமா இருக்கும்.

6.எனக்கு நகைச்சுவை உணர்ச்சியே இல்லை என்கிறார்கள் என் நண்பர்கள்
ஏன் அப்படி
எங்க முதலாளி சொல்ற எல்லா ஜோக்குகளையும் நான் ரசிக்கிறேனாம்

7.அந்த பேச்சாளருக்கு ஒரு கூட்டத்தில் பேச 10000 ரூபாயா?
ஆமாம்..ஆனா.. அவர் கூட்டத்திற்கு 2000 பேரை கூட்டிகிட்டு வந்துடுவாராம்.

Tuesday, February 17, 2009

கண்ணதாசன் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு எதிர்ப்பா??

தமிழ் எழுத்தாளர்கள்..அறிஞர்கள் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டு வருகின்றன.அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் வாரிசுகளுக்கு..அவை சமுதாயத்தில்..ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்,அவற்றின்பெருமை ஆகியவற்றின் அடிப்படையில்..எழுத்தாளர்களின் வாரிசுகளுக்கு பரிவுத்தொகை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த அரசின் செய்கைகளால்...அவர்களின் எழுத்துக்களை..அதிக விலை கொடுத்து புத்தகமாக வாங்க வேண்டிய அவசியம் சில நேரங்களில் ஏற்படாது.பல..மலிவு விலை பதிப்புகளாக கிடைக்கும்.அனைத்து தரப்பு வாசகர்களுக்கும்..அவற்றை படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உதாரணமாக..கல்கியின் படைப்புகள்,பாரதியாரின்..கட்டுரை,கவிதைகள்..ஆகியவற்றை சொல்லலாம்.மேலும் சென்ற வருடம் வரை..நா.பார்த்தசாரதி முதலியவர்களின் படைப்புகளும்..அரசுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால்..இவ்வளவு நாட்களாக கண்ணதாசன்,பெரியார் ஆகியவர்கள் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்படவில்லை.

ஒரு எழுத்தாளரின் குடும்பத்தினர் ..சம்மதம் பெற்றே..அரசுடமை ஆக்கப்படும்.

ஆனல்..நேற்று மேலும் 28 சான்றோர் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலர்..மு.வ.,சாண்டில்யன்,,லட்சுமி,சுந்தர ராமசாமி,கண்ணதாசன்..ஆகியோர்.

இதில்..சுந்தர ராமசாமியின் மகனும்..கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசனும்..இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வாரிசுதாரரின் சம்மதம் இல்லாமல்..எந்த எழுத்தாளர்கள் படைப்பும்...நாட்டுடமை ஆக்கப்படாது என்றும்..விரைவில்..அவர்களிடம் சம்மதம் கேட்கப்பட்ட பின்னரே..இவை நாட்டுடமை ஆக்கப்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீங்க போட்ட எட்டு..(சிறுகதை)

தனக்கு இதுபோன்றதொரு நிலைமை வரும் என தர்மலிங்கம்..அந்த நிமிடம் வரை நினைக்கவில்லை.

அந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு ஆசிரியர் அவர்.கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம்.

அவரிடம் படித்த மாணவர்கள் பலர்..இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக இருக்கின்றனர்.ஆனால் அந்த தர்மலிங்கம் என்ற ஏணியோ எட்டாம் வகுப்பிலேயே நிரந்தரமாக இருக்கிறது.

கண்டிப்புக்குப் பெயர் போனவர் அவர்.அவரைக் கண்டால் அத்தனை மாணவர்களுக்கும் பயம்.அவர் வகுப்பிற்கு படிக்காமலேயோ..வீட்டுப்பாடங்களைச் செய்யாமலோ எந்த மாணவனும் வரமுடியாது.அப்படி வந்தால்..அந்த மாணவனின் அரைக்கைச் சட்டையை சற்றே தூக்கி 'எட்டு' போடுவது போல..ஒரு கிள்ளு..கிள்ளி விடுவார்.உயிரே போய்விடும்.

அந்த மாணவன் வீட்டில் போய் சொன்னாலும்..அவனைப் பெற்றோரும் தங்கள் பிள்ளைக்கு ஆதரவாகப் பேசமாட்டார்கள்.'நீ என்ன தப்பு செஞ்சியோ..வாத்தியார்கிட்டே அடி வாங்கிக் கிட்டு வந்து நிக்கறே..அடியாத மாடு படியாது..நல்லா அடி வாங்கு..' என்று கூறிவிடுவார்கள்.

ம்..அதெல்லாம்..அந்தக்காலம்.

இப்ப..கொஞ்சம் கோபமாக பேசினாலும்..கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்.

தர்மலிங்கத்திற்கு ..அன்று போதாத காலம் போலிருக்கிறது.அவர் வகுப்பில் படிக்கும் விக்ரம் என்னும் மாணவன்..முதல் நாளன்று கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யவில்லை.

அந்த மாணவனை கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.அவன் நடவடிக்கை சரியில்லை.அவனை இப்போது திருத்த முயற்சிக்கவில்லை என்றால் அவனது எதிர்காலமே கேள்விக் குறி ஆகிவிடும் என அவரது உள்மனம் சொல்ல..அவனுக்கு எட்டு போட்டு விட்டார்.மாணவனும் மயங்கி விழுந்து விட்டான்.

பள்ளியே..அல்லோலகலப்பட்டது.ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொன்னார்கள்.அவனை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள்.மாணவனின் பெற்றோருக்கும்..காவல் துறையினருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

என்ன செய்வது..என்று அறியாது..தர்மலிங்கம் தானே சரணடையும் நோக்கத்தில் காவல் நிலயத்திற்கு சென்றார்.அங்கு காவல்துறை அதிகாரி இல்லாததால்..இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வர..எழுந்து நின்று தர்மலிங்கம் பள்ளியில் நடந்தவற்றை அவரிடம் கூறினார்.

பொறுமையாக...எல்லாவற்றினையும் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரி..தன் அரைக்கை சட்டையின் கைகளை சற்றே உயர்த்தி..அந்த கருமை நிற வடுவைக் காண்பித்தார்.

இந்த வடுவைப் பார்த்தீங்களா..இது எனக்கு நீங்க போட்ட எட்டு...என்னைத் தெரிகிறதா உங்களுக்கு..நான்தான் அருணாசலம்..உங்க பழைய மாணவன்.ஒருநாள்..நான்..பக்கத்து பையன் பையிலிருந்து பணத்தைத் திருடிட்டேன்.அதைத் தெரிஞ்சுக்கிட்ட நீங்க கொடுத்த பரிசு 'டேய்..அருணாசலம்..இனிமே நீஒரு தப்பும் செய்யக்கூடாது.ஏதாவது செஞ்சா..அந்த நேரம் இந்த காயம் எப்படி ஏற்பட்டதுங்கற எண்ணம் உனக்கு வரணும்..இந்த காயத்தால ஏற்படப் போகும் வடு..உன்னை ஒரு நேர்மையானவனாக மாற்றும்' என்று சொன்னீங்க...அன்னிக்கு நீங்க எனக்கு இந்த தண்டனை கொடுக்கலைன்னா..நான் இன்னிக்கு இப்படி ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாய் மாறியிருப்பேனான்னு தெரியாது.

'நீ...நீ.. நீங்க..அருணாசலமா ..இப்படி..ரொம்ப மகிழ்ச்சி...ரொம்ப ..ரொம்ப..மகிழ்ச்சி' தர்மலிங்கத்தின் கண்களில் கண்ணீர்...ஆனந்தக் கண்ணீர்.

'ஐயா..அன்னிக்கு நான் நடந்துகிட்ட மாதிரி..ஒரு மாணவன் தப்பா நடந்துகிட்டு இருக்கான்..நீங்களும் அன்னிக்கு ..எனக்கு கொடுத்த அதே தண்டனையைக் கொடுத்திருக்கீங்க.அவன் பயத்திலே மயங்கி விழுந்துட்டான்.இது பெரிய தவறா எனக்குத் தெரியலை..உங்க மேல எதாவது புகார் வந்தா..நான் பார்த்துக்கறேன்..நீங்க போங்க...கான்ஸ்டபிள்..சாரை..நம்ம ஜீப்ல கொண்டுபோய் வீட்டில விட்டுட்டு வா' என்றார்.

தர்மலிங்கம்..இரு கைகளையும் கூப்பி விடை பெற்றார்..'இன்று..இந்த ஆசிரியரின் தண்டனையைப்பெற்ற மாணவன் நாளைக்கு நிச்சயம் என்னைப்போல நேர்மையானவனாக வருவான்.ஏனெனில் அந்த மாணவன் என் ரத்தம்' என்று எண்ணியவாறே..வேறு யாரும் பார்க்காதபடி..தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் அருணாச்சலம்.

Monday, February 16, 2009

சத்தியராஜ்.என்னும் உயர்ந்த மனிதன்..

ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்த நடிகர்கள் பின்னர் கதாநாயகனாக ஆவது ஒரு சில நடிகர்களுக்கே நடந்துள்ளது.

சிவாஜி கணேசன் கூட..தன் ஆரம்பகாலங்களில் துளிவிஷம்,பெண்ணின் பெருமை,கூண்டுக்கிளி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.அந்தநாள்,திரும்பிப்பார் படங்களில் வில்லத்தனமான நாயகன்.
ரஜினி,மூன்றுமுடிச்சு,பதினாறு வயதினிலே,அவள் அப்படித்தான் போன்ற சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

சத்தியராஜிற்கும்..24 மணிநேரம்,காக்கிசட்டை,நூறாவது நாள் என பட்டியல் தொடரும்.கதாநாயகன் ஆவதற்கு முன் அதிகப் படங்களில் வில்லனாக நடித்தவர் இவர்தான்.பின்..இவர் நாயகனாக நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.இவர் நடிக்க..மணிவண்ணன் இயக்க வெளிவந்த பல படங்கள் வெற்றிதான். வாசு இயக்கத்தில் இவர் நடித்த நடிகன் படம் இவர் நடிப்புக்கு ஒரு மைல்கல் எனலாம்.

தமிழ்த்திரையுலகில்..சில நடிகர்கள் படம் எடுக்கவும் அதிகம் செலவழிக்க வேண்டாம்..அவர்கள் நடித்த படமும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது. ஜெய்ஷங்கருக்குப் பிறகு அப்படிப்பட்ட நடிகர் சத்தியராஜ் ஒருவரே!

நடிப்பைப்பொறுத்தவரை இவர் பாணி தனி.சிவாஜி,ரங்காராவ்,எம்.ஆர்.ராதா ஆகியவர்களின் கலவை இவர் எனலாம்.

அமைதிப்படையில் இவர் பாத்திரத்தை வேறு எவராலும் அவ்வளவு அழகாக செய்திருக்க முடியாது.

ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில்..தன் இமேஜைப் பற்றிக்கவலைப்படாமல்..பாத்திரத்திற்கு ஏற்றாற்போல..கிராமவாசி போலவே..கோவணம் கட்டி..குளித்தார்.மற்ற நடிகர்கள் இப்படி(கமல் நீங்கலாக)நடிப்பார்களா?தெரியாது.

பகல்நிலா..காமராஜர் கெட்டப்பில், அதே சமயம்..வஞ்சக அரசியல்வாதியாக...அருமை. கவுண்டமணியும்..இவரும் சேர்ந்தால்..ரசிகன் வயிற்றுவலியுடன் தான் அரங்கத்தை விட்டு வெளியே வருவான்.

பெரியார்...சிவாஜி ஆசைப்பட்டு..நடிக்க முடியா பாத்திரம்..இவருக்கு அதற்கான அதிர்ஷ்டம் இருந்தது.சிவாஜிகணேசன்.. சத்ரபதி சிவாஜியாக தத்ரூபமாக நடிப்பதைக் கண்டு..பெரியார் சிவாஜி என்ற பட்டத்தைக் கொடுத்தார்.அவர் இருந்திருந்தால்..'பெரியார்' படம் பார்த்ததும் சத்தியராஜிற்கு பெரியார் பட்டம் கொடுத்து..பெரியார் சத்தியராஜ் ஆக்கி இருப்பார்.

அது சரி..தலைப்புக்கு இன்னும் வரவில்லையே..அவர் பகுத்தறிவுவாதி என்பதால் அந்த தலைப்பா..6'2" உயரம் என்பதால் அந்த தலைப்பா என்றால்..அவை எல்லாவற்றிற்கும் மேலே..பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும்..பந்தா இல்லாமல் பழகுபவர் என்பதால்தான் இந்த தலைப்பு.

Sunday, February 15, 2009

ஐ.டி.யும்..மற்ற சில தொழில்களும்..

கடந்த சில மாதங்களாக உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலையால்..ஐ.டி., ஊழியர் பலர் வேலை இழந்துள்ளனர்.பலரின் மாத வருமானம் குறைந்துள்ளது.காலையில் வேலைக்குப் போகும் ஊழியர்கள்..அன்று நம் வேலையைக் காப்பாற்றிக்கொள்ளமுடியுமா? என்ற..கிலியுடன் செல்கின்றனர்.

இந்நிலையில்..இத் துறையால் பாதிக்கப்படும் மற்ற சில தொழில்கள்..

சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 200 ஐ.டி.அலுவலகங்களும்..அதில் வேலை செய்யும் 2.5 லட்சம் ஊழியர்களும் உள்ளனர்.தரமணி..டைடல் பூங்கா அருகே உள்ள..ஆட்டோ நிறுத்தத்தில்..ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் முன்பெல்லாம்..ஒருநாளைக்கு 1000 ரூபாய் சம்பாதிப்பார்களாம்.அதில்..450 ரூ.வண்டி வாடகை,150ரூ டீசல் செலவு போக ஒருநாளைக்கு 400 ரூபாய் வருமானம் இருக்குமாம்..ஆனால்..இப்போதோ 30 சதவிகிதம் வருமானம் குறைந்துவிட்டதாம்.ஒருவருக்கு இன்றைய வருமானம் இப்போதெல்லாம் 100 அல்லது 150 தானாம்.

விடு வாடகைக்கு விட்டவர்கள்..அநியாய வாடகை வாங்கிக் கொண்டிருந்தனர்.இரண்டு படுக்கை அறைக் கொண்ட அடுக்ககம்..15000 முதல் 20000 வரை வாடகை வாங்கப்பட்டது..ஆனால்..இப்போது 10000 வாடைகை என்றாலும் வர ஆளில்லையாம்.ரியல் எஸ்டேட் துறையினரோ..கமிஷனாக முன்பெல்லாம் 30000 வரை மாதம் சம்பாத்திதனராம்..இப்போது 10000 கூட கிடைப்பதில்லையாம்.

கார் விற்கும் தொழில் நடத்துபவர் ..ஒருவர்..26 வருடங்களாக இந்த வியாபாரத்தில் இருக்கிறேன்..ஆனால் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட நிலையில்லை.இப்போதெல்லாம் என்னால் மாதம் ஒரு கார் கூட விற்கமுடிவதில்லை என்கிறார்.

மின்சாதன பொருள்கள் விற்பனை செய்பவரோ..எனக்கு 40 சதவிகிதம் வருமானம் குறைந்து விட்டது என்கிறார்.

பல ஐ.டி.நிறுவனங்கள் தாங்கள் ஏக்கர் கணக்கில் வாங்கிப் போட்டிருந்த இடங்களை விற்க தயாராய் இருந்தும்..வாங்க ஆட்கள் இல்லை என்கின்றன.

விலைஉயர்ந்த ஷூக்கள் விற்கும் கடைகளில் கூட 50 சதவிகித தள்ளுபடி என்றாலும் வாங்க ஆட்களில்லையாம்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில்..சாஃப்ட்வேர் தொழிலுக்கான வரிச்சலுகை..வரும் நிதி ஆண்டும் நீடிக்கப்படுமா..எனத் தெரியவில்லை என்கிறார்..ஒரு தொழிலதிபர்.

தோல் ஆடை,ஷூக்கள்,தோல் அணிகலன்கள் வியாபாரமும் படுத்து விட்டதாம்.

முன்பெல்லாம் என்ன விலையென்றாலும் வாங்கும் மக்கள்..இப்போது ஒவ்வொன்றிற்கும் விலை கேட்கின்றனர் என்கிறார்..சில்லறை பொருள்கள் விற்கும் வியாபாரி ஒருவர்.

வாழ்க்கைசக்கரம் என்பார்கள்.அந்த சக்கரத்தின்..நேற்றுவரை..மேலே இருந்த பகுதி கீழே சென்றுள்ளது..அது திரும்ப மேலே வந்துதானே ஆக வேண்டும்.

பொறுத்திருப்போம்.

Saturday, February 14, 2009

மதுரையில் காதல் சின்னத்துக்கு பாடை ஊர்வலம்!

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரித்து, காதலர் உருவ பொம்மைக்கு பாடை கட்டி ஊர்வலம் செல்ல முயன்ற இந்து இளைஞர் பேரவையைச் சேர்ந்த 100 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

உலகம் முழுக்க இன்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவும், இந்து அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மதுரையில் இந்து இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பெரியார் பேருந்து நிலையம் அருகே குவிந்தனர்.

பின்னர் காதலர் உருவ பொம்மையை பாடையில் வைத்து சங்கு ஊதி எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை, தடுத்து போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

செய்தியாளர்கள் மீது பாய்ந்த ஏ.சி:

அப்போது, உதவி ஆணையர் இலங்கேஸ்வரன் தாறுமாறான வார்த்தைகளால் செய்தியாளர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் திட்டத் தொடங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீடியாக்காரர்கள் அப்படியே சாலையில் அமர்ந்து மறியலில் குதித்தனர். மேலும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது.

காதலர் தின எதிர்ப்பாளர்களின் போராட்டத்தோடு திடீரென பத்திரிக்கையாளர்களும் மறியல் குதித்ததால் பரபரப்பு கூடியது.

நிலைமை சிக்கலாவதைப் பார்த்த உதவி ஆணையர் இலங்கேஸ்வரன் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதையடுத்து பத்திரிகையாளர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நன்றி தட்ஸ் தமிழ்

வழக்கொழிந்த சொற்கள்...

ஒரு மொழி செம்மொழி ஆக என்ன தகுதிகள் வேண்டும்..

அம்மொழி 2000 வருடங்களுக்கு முன்னதான பாரம்பரியம் பெற்றதாய் இருக்க வேண்டும்.(இப்பொழுது..சில மாநில அரசியல்வதிகள் நிர்பந்தத்தால் இந்த நிபந்தனையும் தளர்த்தப்பட்டது)
அம்மொழி வேற்று மொழி சொற்களை தன்னுள் வாங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

இந்த இரண்டு விதிகளும்..நம் தமிழுக்குள் அடக்கம்.வேற்று மொழிச் சொற்கள்..இப்போது நம் பேச்சிலும்..எழுத்துக்களிலும் காணப்பட்டாலும் ..அச் சொற்களுக்கு தமிழ் மொழியில் சரியான சொற்கள் உண்டு.ஆனால் நாம் தான் பயன்படுத்துவதில்லை.தவிர ..நம்மில் பலருக்கு சில தமிழ்சொற்களும்..வடமொழியில் வழங்கிவரும் சொற்களுக்கும் கூட வித்தியாசம் தெரிவதில்லை.

நான் ஒரு சமயம்..மனநல மருத்துவ மனையை சுற்றிப் பார்க்க சென்றேன் நண்பனுடன்.அப்பொழுது அங்கிருந்த ஒருவர்..."ஆரம்பி...புகைப்படக்கருவி...நடவடிக்கை..வெட்டு.." என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்.நான் அங்கிருந்த மருத்துவரிடம் அது பற்றி விசாரித்தேன்.

மருத்துவர் சொன்னார்...அவர் ஒரு தமிழ் பட இயக்குநர்.தமிழின் மேல் ஆர்வம் கொண்டவர்.அவர் சொன்ன சொற்கள் ஸ்டார்ட், காமிரா, ஆக் ஷன்,கட்...என்பதுதான்.அவர் இவற்றை தமிழில் சொல்வதால்..மன நோயாளி ஆக்கப்பட்டார்.

பாவம்...அவருக்கு..தமிழ் சினிமாவில் தமிழில் படத்திற்கு பெயர் வைத்தால் மட்டுமே போதும்..வரிவிலக்கு உண்டு..என்பது தெரியாது என தோன்றுகிறது எனக்கு.

அது போகட்டும்..தங்கர்பச்சானின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' படம் பார்த்த போது, திரை அரங்கில் பக்கத்தில் இருந்தவர்..'மடையன்..ஒன்பது ரூபாய் நோட்டே கிடையாது..படத்துக்கு அந்த பெயர் வைச்சிருக்கான் பாரு' என்றார்.நம் தமிழ் அறிவு அந்த அளவுதான்.

சரி..தலைப்புக்கு வருவோம்..

கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் பொறியை பம்ப்..என்கிறோம்..அதற்கான தமிழ்ச் சொல் எக்கி
சர்வே -நில அளவை
லாஜிக் என்ற பாடத்திற்கு அளவையியல்
ஹார்ஸ் பவர்-குதிரைத் திறன்
அக்ராசனர்,,காரியதரிசி,பொக்கிஷத்தார் - முறையே..தலைவர்,செயலர்,பொருளாளர்
எய்ம்- குறி
லஞ்சம்-கையூட்டு
சயின்ஸ்- அறிவியல்
ராக்கெட்-ஏவுகணை
சைக்கிள்- மிதி வண்டி

மைக்ரஸ்கோப்- நுண்ணோக்கி
மோடிவ்- ஊக்கி
டோனர்- வழங்கி

ஒரு மொழி வளர வேண்டுமானால்..பிற மொழிச் சொற்களை தன்னுள் கலப்பது..தவிர்க்க முடியாது என தமிழ் அறிஞர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.ஆனாலும் கூடியவரை தமிழ்ச் சொற்களை பேச தமிழன் கற்க வேண்டும்.

ழ,ர,ல,ற, ள,ண,ன ஆகியவற்றை சரியாக உச்சரித்தாலே போதும்

பின் குறிப்பு-

இந்த பதிவிற்கு என்னை அழைத்த ஜோ(சோ)தி பாரதிக்கு நன்றி

சினிமா இயக்குனர் செய்தி..சும்மா...நகைச்சுவைக்காக சொன்னது

Friday, February 13, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(14-2-09)

1. நெப்போலியன் காதல் விஷயத்திலும் மன்னனாம்.14 வயதிலிருந்து 60 வயது வரை அவனுக்கு காதலிகள் இருந்தனராம்.அவன் காதலித்து மணந்துக் கொண்ட ஜோஸஃபைனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலக பிரசத்திப் பெற்றவை.எகிப்தின் மீது அவர் படையெடுத்த போது..ஃபோரே என்னும் இருபது வயது பெண் மீது காதல் வயப்பட்டு..அவளைப் பிரிய மனமின்றி..அவளுக்கு ராணுவவீரன்
போல உடை அணிவித்து...தன்னுடன் யுத்தகளத்துக்கு அழைத்துச் சென்றானாம்.

2.பராசக்தி படத்தில்..பாரதிதாசனின் 'வாழ்க..வாழ்கவே..வளமான எமது திராவிடநாடு' என்ற பாடல் இடம் பெற்றது.திராவிட நாடு என்ற சொல்..திரையில் அப்போதுதான் முதன்முறையாக வந்ததாம்.

3.காதலர்தினத்தன்று எனக்கு ஞாபகம் வருவது...என்னைச் சுற்றி எப்பொதும் இருந்த ஃபிகர்கள்.அதிலிருந்து நான் தப்ப முயன்றாலும்..ஃபிகர்கள் என்னை விடவில்லை.இருங்க..இருங்க..அதுக்குள்ள அவசரப் படாதீங்க..நான் வேலை பார்த்த வங்கியில்..தினமும் கணக்குகள் balance ஆகாமல்..ஃபிகர்களை அதாவது எண்களை பார்த்ததைதான் சொல்கிறேன்.

4.கடலில் கலந்த பனித்துளி தன்னை இழப்பதில்லை..மாறாக தன்னை கடலளவு பெரிது படுத்திக் கொள்ளும்.

5.நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் சாதனையாளர் என்று நான் சொன்னால் நம்பமாட்டீர்கள்..ஆனால்..இச் செய்தியைப் பாருங்கள்.இந்த பூமியில் பிறப்போர் அனைவரும்..பத்துக் கோடிப் பேருடன் ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்தப் பிறகே பிறக்கிறார்கள்.ஆம்...தாம்பத்ய உறவின் போது..கிட்டத்தட்ட பத்துக் கோடி விந்தணுக்கள் உருவாகின்றனவாம்.அவற்றுள் ஒரே ஒரு விந்தணு மட்டுமே..எல்லாவற்றையும் தாண்டி..கரு முட்டையை அடையுமாம்.இப்போது சொல்லுங்கள்..பிறக்கும் முன்னரே நீங்கள் சாதனை புரிந்துள்ளீர்கள்.

6.ஒரு கவிதை-
நீ பருவமகள்
உண்மைதான்
குளித்து முடித்த உன்
கூந்தலில்
நீர் சொட்டும்போது
மழைக்காலம்
சீவும்போது
இலையுதிர்காலம்
நீ பூச்சூடும்போது
வசந்தகாலம்
அதை அள்ளி
நான் போர்த்திக்
கொள்ளும் போது
குளிர்காலம்.

- பழநிபாரதி

மனிதரில் இத்தனை வகைகளா.?..- இறுதி பகுதி

(http://tvrk.blogspot.com/2009/02/1.html)part one)
மனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.

Thursday, February 12, 2009

திரையுலகில் ஒரு முத்து முத்துராமன்

முத்துராமன்...ஸ்ரீதரால் திரையில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்.சஹஸ்ரநாமம் நாடகக் குழுவில் நடித்திக்கொண்டிருந்த இவரை நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் அறிமுகப் படுத்தினார் ஸ்ரீதர்.

நட்புடன் பழகும் குணம், மிகையில்லா யதார்த்த நடிப்பு ஆகியவை இவரை கிட்டத்தட்ட 25 வருஷங்கள் ... அவர் அமரர் ஆகும்வரை திரையுலகம் ஆதரித்தது.

இவர் நகைச்சுவை வேடத்தில் நடித்த படங்கள்..காதலிக்க நேரமில்லை,அனுபவி ராஜா அனுபவி, காசேதான் கடவுளடா..ஆகியவை.

சிவாஜியுடன் இவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்கள்.அவற்றுள் சில..அன்னை இல்லம்,பார் மகளே பார்,நெஞ்சிருக்கும் வரை,ஊட்டி வரை உறவு

குணச்சித்திர வேடத்தில் இவர் நடித்து வெற்றிப் பெற்றபடங்கள்..தீர்க்க சுமங்கலி,எதிர் நீச்சல்(நாயர்),வாழ்க்கைப்படகு
எந்த பாத்திரமானாலும் இமேஜ் பார்க்காமல் நடிக்கக் கூடியவர் இவர்.போலீஸ்காரன் மகள் படத்தில்..கதானாயகின் சகோதரனாக நடித்த இவரின் நடிப்பு..பாசமலர் ராஜசேகர் நடிப்புக்கு ஒப்பிடும் தன்மையானது.

இவர் நடிப்பில் வெற்றிப் பெற்ற சில படங்கள்..சித்தி,கற்பகம்,நத்தையில் முத்து. தாகம் என்ற ஆர்ட் ஃபில்மிலும் நடித்துள்ளார்.

பழக இனிமையானவர்..கால் பந்து ஆட்ட ரசிகர்., உடற்பயிற்சிகள் மூலம் தன் உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்தவர்...எந்த கிசு கிசுவிலும் சிக்காதவர்..தான் உண்டு தன் வேலையுண்டு..என தயாரிப்பாளர்களுக்கு தலைவலி தராதவர்..எந்த பாத்திரமானாலும் நடிக்கக் கூடியவர்..மொத்தத்தில்..ஒரு முத்தாய் இருந்தவர் முத்துராமன்.

தன் 55 வயதில்..ஊட்டியில்..ஒருநாள் காலை..உடன் பயிற்சி செய்துக்கொண்டிருந்த போது..மரணமடைந்தார்.

இவர் கடைசியாக நடித்த படம்'போக்கிரி ராஜா'...
..அதில்..ரஜினியின் வில்லன் இவர்.ஒரு வேளை..இந்த நல்ல மனிதர் வில்லனாக மாறுவதை பொறுத்துக் கொள்ள முடியாததால்..இயற்கை இவரை சீக்கிரமே தன்னிடம் அழைத்துக் கொண்டதோ???

Wednesday, February 11, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.எங்க ஆஃபீஸ்ல யார் தப்பு பண்ணினாலும் உடனே வீட்டுக்கு அனுப்பிடுவாங்க..
இப்போ நீங்க வேற வேலை தேடறீங்களா?

2.என்னோட பையன்..எப்போதும்..be indian..buy indian தான்
அவ்வளவு தேச பக்தியா?
ஆமாம்..படிப்பில கூட..இந்தியர்கள் கண்டுபிடித்த '0" தான் வாங்குவான்.

3.வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்
நாலு செண்ட் தான்
ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே

4.டாக்டர்- உங்க வயற்றில எப்படி இவ்வளவு தீப்புண் ஏற்பட்டது
நோயாளி- பையன் +2 ல நல்ல மார்க் வாங்கணுமேன்னு..இவ்வளவு நாள் வயத்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்

5.டாக்டர் என் மூக்கு பலமடைய ஏதாவது மருந்து கொடுங்க.என் மூக்கு கண்ணாடி வைட்டக் கூட மூக்கால தாங்க முடியல

6.வர வர ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வர்றீங்களே..என்ன காரணம்
நான் என்ன செய்யறது...ஒரு பயலும் போறப்ப எழுப்பிவிடாம போயிடறாங்க..

ஆதலினால் காதல் செய் ...

1.பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உனக்காக ஒரு பூ கத்திருக்கிறது.அதை தேர்ந்தெடுக்கிறாயே..அதுதான் காதலின் சக்தி.

2.காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.

3.காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.

4.இரவில் கவிதை
கவிதையான இரவு
கனவில் நிலவு
நிலவு பற்றி கனவு
தனிமையில் சிரிப்பு
சிரிப்பில் தனிமை
இதுதானா காதல்?

5.காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.

6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.

7.அழகு..அறிவு..எல்லாவற்றிலும்..கடந்த மென்மையான உணர்வு காதல்.

8.காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்

9.பறக்கத் தெரியும்
திசை தெரியாது
காதல் ஓர்
இலவம் பஞ்சு

_ கபிலன்

மனிதரில் இத்தனை வகையா?! பகுதி - 1


மனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.

Tuesday, February 10, 2009

இந்தியாவிற்கு அல்-கய்தா மிரட்டல்

அல்-கய்தா இயக்கத்தலைவன் பின்லேடனுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ல தலைவன்..அபு அல்-யாசித்.அவன் அரபு மொழியில் பேசிய வீடியோ கேசட் ஒன்று பி.பி.சி.,க்கு வந்திருக்கிறதாம்.அதில் அவன் கூறி இருப்பதாவது..

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால்..முப்பையில் நடந்தது போன்ற தாக்குதல்களை..இந்தியாவின் பிற பெரிய நகரங்களிலும் நடத்துவோம்..என மிரட்டல் விடப்பட்டுள்ளது.ஆஃப்கனிஸ்தானில்..ரஷ்ய ராணுவத்தை மண்ணில் புதைத்தது போல இந்திய ராணுவத்தை..தீவிரவாதிகள் மண்ணில் புதைத்து விடுவார்கள்.இந்திய பொருளாதார மையங்கள் அழிக்கப்படும்.

அபு-அல் யாசித்பாகிஸ்தானையும் கண்டித்துள்ளான்..எதற்கு தெரியுமா? தீவிரவாத இயக்கங்களுக்கு தடை விதித்துள்ளதற்கு.

இந்நிலையில்..இந்திய ராணுவ அமைச்சர் அந்தோணி..'நாட்டுக்கு எதிரான எந்த மிரட்டலையும்..இந்திய ராணுவம் சமாளிக்கும் நிலையில் உள்ளது' என கூறியுள்ளார்.மேலும்..நாட்டின் பாதுகாப்பு நிலை கருதி ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருப்பதில்..எந்த சமரசமும் செய்துக் கொள்ள முடியாது..என்றுக் கூறியுள்ளார்.

Monday, February 9, 2009

பதிவுகளும்...பின்னூட்டங்களும்..

நாம் நமது..எண்ணங்களை, உணர்ச்சிகளை,சமுக சிந்தனைகளை,நகைச்சுவை நிகழ்ச்சிகளை..நமது ப்ளாகில் பதிவிடுகிறோம்.

நமது கருத்துக்கள்..எவ்வளவு நண்பர்களால்...ரசிக்கப்படுகிறது...என்பதை நமக்கு வரும் பின்னூட்டங்களும்..நாம் பிறர் கருத்தை எப்படி ரசிக்கிறோம் என்பதை..அவர்களுக்கு நாம் இடும் பின்னூட்டங்களும் சொல்கின்றன.இதிலும் நமக்கு வேண்டாத பின்னூட்டங்கள் நீக்கவும் செய்கிறோம்.சில சமயங்களில் ஆரோக்யமான வாதங்களும் செய்யப்படுகிறது.

ஒரு கட்டத்தில்...பதிவிற்கான கருத்துக்கள் தான் பின்னூட்டங்கள் என்ற நிலைமாறி..நமக்கு வேண்டிய பதிவர் என்றால்...ஒருவரே..பல பின்னூட்டங்கள் இடும் நிலைமை ஏற்பட்டது.தமிழ்மணத் திரட்டி...அதை மட்டுறுத்தி..40 பின்னூட்டங்கள் வரை முகப்பில் தெரியும் நிலையை ஏற்படுத்தியது.

பின்னூட்டம்..நாம் ரசிக்கும் ஒன்று என்பதைவிட..ஒருவரின் பதிவு..நீண்ட நேரம் முகப்பில் இருக்க உதவி செய்யும் ஒரு நண்பன் எனலாம்.ஒருவர் பதிவிற்கு..ராப்,மங்களூர் சிவா..போன்றவர்கள் பின்னூட்டம் இட்டிருந்தால்..அப்பதிவு அதிகம் பேர் பார்த்திருப்பார்கள் என சொல்லலாம்...வேறு வார்த்தைகளில் சொல்வதானால்..பின்னூட்டங்களின் அத்தாரிட்டி இவர்கள் எனலாம்.ஆனால்..சமீப காலங்களாக.. பின்னுட்டங்கள் முன்புபோல..எந்த பதிவர்களுக்கும்..அதிகமாக வருவதில்லை.ஏன் என்று தெரியவில்லை.

இதனிடையே..அனானி என்ற பெயரில்...பதிவிடுபவரை..அநாகரிகமாகவும்..ஆபாசமாகவும் திட்டி வரும் பின்னூட்டங்கள்.profile இல்லாமல்...புனைப்பெயரில்..வரும் ஆபாச பின்னூட்டங்கள்.இவை..பொது கழிப்பிடங்களில் மன வக்கிரத்தையும்,விகாரங்களையும்..எழுதி வடிகால் தேடும் நபர்களை விட கேவலமானவையாக இருக்கிறது.

இப்படிப்பட்டவை..publish செய்வது ..நம் கைகளில் இருந்தாலும்..இவற்றைப் படிக்கும் போது மனம் வேதனை அடையவே செய்கிறது.

ஆகவே..அப்படிப்பட்ட நண்பர்களுக்கு..ஒரு வேண்டுகோள்...எங்கள் பதிவை படிப்பதும்..படிக்காததும் உங்கள் விருப்பம்..என்பதுபோல்..எங்கள் எண்ணங்களை பதிவிடுவது எங்கள் விருப்பம்.உங்களுக்கு பதிவுி பிடிக்கவில்லை எனில்...படிக்காதீர்கள்..மவுஸ் உங்கள் கையில்...மாற்றிக் கொள்ளுங்கள் வேறு பக்கத்திற்கு.

Sunday, February 8, 2009

அலட்சியப்படுத்தப்பட்ட இலட்சிய நடிகர்..

சிவாஜி கணேசனுடன்..பராசக்தியில் அறிமுகமானவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.கலைஞரின் வசனத்தை..ஆணித்தரமாக பேசுவதிலும்...சிவாஜியையும்.இவரையும் விட்டால் தமிழ்த் திரையில் வேறு எவரும் இல்லை எனலாம்.

குலதெய்வம் படத்தில்...நீண்டநேரம்..இவர் பேசும் வசனம்..அப்படம் வெற்றிக்கு ஒரு காரணமாய் இருந்தது எனலாம்.

தி.மு.க.,வின் ஆரம்பகால வளர்ச்சியில் இவர் பங்கும் அதிகம் உண்டு.இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இவர் பங்கும் உண்டு.அதேபோல..திரைஉலகை சேர்ந்த நடிகர் ஒருவர் எம்.எல்.ஏ., ஆவதை..முதலில் ஆரம்பித்து வைத்தவர் இவர்.நாடாளுமன்றத்தில் இவர் எம்.பி.யாக இருந்தபோது..மன்னர் மான்ய ஒழிப்பு மசோதாவில்...இவர் ஓட்டுப் போடாததால்..மசோதா தோல்வி அடைந்தது.இவரது அந்த செயல்..கட்சியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.பதிவு அதைப்பற்றியில்லாததால்..அந்த விஷயம் பற்றி..மேலும் எழுத விரும்பவில்லை.

திரைஉலகைப் பொறுத்தவரை இலட்சிய நடிகர் என்ற பட்டத்துடன் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பல..அவற்றுள் குறிப்பிடத்தக்கவை...சாரதா,குமுதம்,உல்லாசபயணம்,தை பிறந்தால் வழி பிறக்கும்,நானும் ஒரு பெண்,காக்கும் கரங்கள்,அன்பு எங்கே?பூம்புகார்.. ஆகிய படங்களை சொல்லலாம்.

இவர்கள் சார்ந்த கட்சிகள் வேறு வேறாய் இருந்தாலும்...சிவாஜியுடன் இருந்த நட்பால்..அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தப் படங்கள் பல..அவற்றுள் சில...தெய்வப்பிறவி,கை கொடுத்த தெய்வம்,குங்குமம்,பச்சை விளக்கு.

எஸ்.எஸ்.ஆரே..தயாரித்து..இயக்கிய சில படங்கள்..அல்லி,மணிமகுடம்,தங்க ரத்தினம்.தன்னுடன் நடித்த விஜயகுமாரியை..தனது இரண்டாம் தாரமாய் ஆக்கிக்கொண்டார்.இந்த ஜோடி பல நல்ல படங்களையும் கொடுத்தது.

எம்.ஜி.ஆருடன் இவர் நடித்தது..காஞ்சித்தலைவன்.ராஜாதேசிங்கு ஆகிய இரு படங்கள்
சில நடிகர்களுடன் ஒப்பிடுகையில்..இவரது சாதனை அதிகம் என்றாலும்...அதற்கேற்றால் போல இவர் தமிழக அரசால் கௌரவிக்கப்படவில்லை.

ஆனால்..ஒன்று..ஒரு கலைஞன் தன் வாழ்நாளில்..அவனைவிட திறமைக் குறைந்தவர்களுக்கு..கிடைக்கப்படும் அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லையே..என்று மனம் புழுங்கக்கூடாது.

Saturday, February 7, 2009

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸ் இணை செயல‌ர் தீக்குளிப்பு!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், தனது கட்சியை கண்டித்தும் நாகை மாவ‌ட்ட‌ம் ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸ் இணை செயல‌ர் இ‌ன்று அ‌‌‌திகாலை ‌தனது உட‌லி‌ல் தீ வை‌த்து‌க் கொ‌ண்டா‌ர். ஆப‌த்தான ‌நிலை‌யி‌ல் மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பிடாரி தெருவை சேர்ந்தவ‌ர் ரவிச்சந்திரன் (45). இவ‌ர் சீர்காழி 17வது வார்டு கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் இணை செயலராக உ‌ள்ளா‌ர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ரவிச்சந்திரன், த‌ன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடினார்.

நடுத்தெருவில் வைத்து, "இலங்கையில் போரை நிறுத்து....தமிழ் வாழ்க.....'' என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வை‌த்து‌க் கொ‌ண்டா‌ர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரைக் ‌சீ‌ர்கா‌ழி அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌‌த்தன‌ர். ‌பி‌‌ன்ன‌ர் மே‌ல் ‌சி‌கி‌ச்சை‌க்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனை‌‌க்கு கொ‌ண்டு செ‌ன்றன‌ர்.

அ‌ங்கு அவரு‌க்கு ‌தீ‌விர ‌சி‌‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது. 65 சத‌வீத‌ம் ‌‌தீ‌க்காய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் அவ‌ர் ‌பிழை‌ப்பது கடின‌ம் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இத‌னிடையே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன், மயிலாடுதுறை ‌நீ‌திப‌தி‌யி‌ட‌ம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தில், ''நேற்று இரவு டி.வி.பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஈழத் தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது.

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஈழத் தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன்’’ என்று கூ‌றியு‌ள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில் ரவிச்சந்திரனை பார்ப்பதற்காக காங்கிரஸ் பிரமுகர்கள் வந்ததாகவும், அவர்கள் ரவிச்சந்திரனை பேச விடாமல் தடுத்ததாகவும், அ‌ப்போது இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அவ‌ர்களை தடுத்ததாகவும், இதனா‌ல் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்ததாகவும் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இதை‌த் தொட‌ர்‌ந்து இரு தரப்பையும் கலைத்து பத‌ற்ற‌த்தை தணிக்க காவ‌ல்துறை‌யின‌ர் முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌‌ன்போது டி.எஸ்.பி. ஒ‌ருவ‌ரி‌ன் மூக்கு கி‌ழிந்து ரத்தம் பீறிட்டுள்ளது. இதனா‌ல் ஆத்திரமடைந்த காவல‌ர்க‌ள் இலோசான தடியடி நடத்தி பத‌ற்ற‌த்தை தணித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ரவிச்சந்திரன் தீக்குளிப்பதற்கு முன்பு ப‌த்‌தி‌ரிகை ஒன்றில், ஈழத்தமிழர்கள் துயரம் தன்னை மிகவும் பாதித்ததாக எழுதி வைத்துள்ளார். கூடவே தமிழீழம் வாழ்க என்றும் ராஜபக்சே ஒழிக என்றும் முழக்கங்களையும் எழுதி வைத்துள்ளார்.

ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர் மகளிர் காங்கிரஸ் பிரிவான மகிளா காங்கிரஸ் உறுப்பினர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் ‌இணை செயல‌ர் ஒருவர் தீக்குளித்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.நன்றி வெப்துனியா

மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

Friday, February 6, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(7-2-09)

1.ரசிகமணி டி.கே.சி.யின் மணிவிழா இலஞ்சி குமரன் கோவிலில் நடைபெற்றதாம்.அதற்கு தந்தை பெரியார் வந்திருந்தார்.'முருகன் கோவிலுக்குள் வந்திருக்கிறீர்களே..என ஒருவர் கேட்டபோது..'அறுபதாம் கல்யாணம்..முதலியாருக்குத்தானே...முருகனுக்கில்லையே..' என்றார் பெரியார்.கோவிலில் வழங்கிய சித்ரான்னம் சாப்பிட்டு ..நிழற்படமும் எடுத்துக்கொண்டார். பெரியாருக்கு மனித நேயமும் முக்கியம்.

2.நமது உடலில்..புற்று நோய் தாக்காதஒரு பகுதி இருக்கிறது..அதுதான் இதயம்.

3.சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதி.ஆனால்..நாட்டில் 4635 ஜாதிகள் உள்ளனவாம்..அதை எப்படி இல்லை என்று சொல்ல முடியும் என்கிறார் ஒரு அரசியல்வாதி.

4.தமிழன்னையை எப்படி அலங்கரித்துள்ளார்கள்..நம் புலவர்கள்
தலைக்கு சூளாமணி,
மார்புக்குச் சிந்தாமணி
காதுக்கு குண்டலகேசி
கைக்கு வளையாபதி
இடைக்கு மணிமேகலை
காலுக்கு சிலப்பதிகாரம்
இப்படிச் சொன்னவர் தமிழ்த் தாத்தா..உ.வே.சா.

5.உன்னால் முடியாதது ஏதுமில்லை என்றார் ஒரு ஞானி...ஆனால் நம்மால் முடியாதது பல உண்டு.உதாரணத்துக்கு..நம் தலையைத் திருப்பி..நம் முதுகை நம்மால் பார்க்க முடியுமா?

6.பாராளுமன்றம் என்பது..தவறு.ஆங்கிலேயன் பாரெல்லாம் ஆண்டான்..ஆகவே பாராளுமன்றம் அவனுக்கு..பொருந்தும்.நாம் ஆள்வது இந்த நாட்டினை..ஆகவே நாடாளுமன்றம் என்பதே சரி..என்றார்
ராஜாஜி

7.ஒரு கவிதை

முள்ளின் கீறல் வலி என்று
முனகுவதில்லை இசைத்தட்டு
பள்ளம் பறித்த பூமியில் தான்
புத்துயிர் தோன்றும் முளைவிட்டு

பட்ட வலிகளே பாடங்கள்
பழித்தவர் சொற்கள் வேதங்கள்
விட்டிடு காயம் ஆறட்டும்
வாழ்வின் போக்கே மாறட்டும்.
-மரபின் மைந்தன்..முத்தையா

வாய் விட்டு சிரியுங்க...

மனைவி- காக்கா கத்துது..ஊர்ல இருந்து எங்க அம்மா வருவாங்க போல இருக்கு
கணவன்-கழுதை கத்தினா யார் வருவாங்க?
மனைவி- அப்போ..எங்க மாமியார் வருவாங்கன்னு அர்த்தம்.

2.பெட் ரோல் விலை ஏறிப்போச்சுன்னு காரை வித்துட்டு...ஒட்டகம் வாங்கிட்டேன்..ஐந்து லிட்டர் த்ண்ணீருக்கு 40 கிலோமீட்டர் போகுது.

3.டாக்டர்..என் நோயை குணப்படுத்திட்டீங்க..நன்றி
நான் என்ன செய்தேன்..அந்த ஆண்டவன்தான் காப்பாற்றினான்
அப்போ பில் பணத்தை ஆண்டவனுக்கு அனுப்பிடறேன்

4.அந்த ஸ்கூல்ல..ஃபீஸை ராத்திரிதான் வாங்குவாங்க
ஏன்?
அப்போதான் யாரும் பகல் கொள்ளைன்னு சொல்லமாட்டாங்களாம்

5.புதுசா..வெட் கிரைண்டர்,வாஷிங் மெஷின்..எல்லாம் வாங்கி இருக்கேன்
அடிப்பாவி..உன் கல்யாணத்திற்கு எனக்கு இன்விடேஷன் கொடுக்கலையே

6.தலைவர் ஜோசியம் கேட்கப் போய் இருக்கார்
எதற்கு?
பகுத்தறிவு மாநாடு நடத்த நல்லநாள் கேட்டு

Wednesday, February 4, 2009

இதுவரை கலைஞர் செய்தது என்ன?

கலைஞர் சமீப காலங்களில் இலங்கை தமிழர்கள் பிரச்னையில்..ஒன்றும் செய்யவில்லை என பரவலாக பேச்சு இருக்கிறது.கலைஞரின் உண்மைத் தொண்டர்களும் இந்த விஷயத்தில் அவரிடம் சற்று வருத்தமே..அடைந்துள்ளனர்.அப்படி எண்ணுபவர்கள் நினைவிற்கு...

1.பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும்,தமிழக ராஜ்ய சபா உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்.இதற்கு முன்னோடியாக கனிமொழி தன் தந்தையிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

2.மனித சங்கிலி போராட்டம்...சென்னையில் இருந்து கிட்டத்தட்ட செங்கை வரை...அனைத்து கட்சியினர்,பொது மக்கள்,கல்லூரி மாணவ..மாணவியர்.பள்ளி மாணவ..மாணவியர்..கொட்டும் மழையில்
நின்றனர்.கலைஞரும்..ஸ்டாலினும்...காரில் பயணித்தபடி குரோம்பேட்டை வரை சென்று வந்தனர்.

3.தமிழக எம்.பி.க்கள் பிரதமரைப்பார்த்து பேசினர்.

4.அனைத்து கட்சி தலைவர்களும்..கலைஞர் தலைமையில் பிரதமரை சந்தித்து..இலங்கையில் போர் நிறுத்தம் கோரினர்.பிரதமரும்..பிரணாப் முகர்ஜியை இலங்கை அனுப்புவதாக உறுதிமொழி அளித்தார்.

5.பொதுக்குழு கூட்டத்தில்...பிரதமர் உறுதிமொழி காப்பாற்ற கோரிக்கை.தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் ஒரு தமிழன் அங்கு இறக்கிறான்..என கண்களில் கண்ணீருடன் கலைஞர் உரை.

6.சட்டசபையில்..மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடப்பட்டது.

பிரணாப் இலங்கை பயணம்..தி.மு.க., பிரதமர் உறுதிமொழி படி நடந்ததாக சொன்ன போது...ராஜபக்சே..தன் அழைப்பின் பேரில்தான் பிரணாப் வந்ததாகக் கூறியது.இதன் நடுவில்..தமிழக அரசியல் வாதிகளை கோமாளிகள் என பொன்சேகா கூறியது.

48 மணி நேரம் போர்நிறுத்தம் அறிவிப்பு வந்தும்...போர் நீடித்தது

7..மருத்துவ மனையில் செயற்குழு கூடி...மக்களிடம் விளக்கக் கூட்டங்கள், மனித சங்கிலி போரட்டம் ஆகியவை நடத்தி...மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி..மக்கள் கருத்தை மத்திய அரசு அறிய வைப்பது என முடிவெடுத்தது.

இப்போது சொல்லுங்கள்..எவ்வளவு உருப்படியான காரியங்கள் நடந்துள்ளன. இது தெரியாமல்..கலைஞரை குறை.சொல்லக்கூடாது.

எழவு வீட்டில்..இரவு விருந்து..

சாதாரணமாக ..வீட்டில் ஒருவர் இறந்து விட்டால்..அவருக்கு..இறுதிக்கடன்களை முடித்ததும் தான்..ஏதேனும் வயிற்றுக்கு ஈயப்படும்.இதுதான் வழக்கம்.

முல்லைத்தீவில் இலங்கை ராணுவத்திற்கும்..விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது.போர்முனையில் 2.5 லட்சத்திற்கு மேல்..அப்பாவி தமிழர்கள் சிக்கியுள்ளனர். குண்டு வீச்சில் காயம் அடைந்தோர் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.அந்த மருத்துவ மனை மீது 3 நாட்களாக குண்டு வீசப்படுகிறது.நேற்று முதல் முறையாக பாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டது.இதில் மேலும் பலர் காயமடைந்தனர்.

பாஸ்பரஸ் குண்டு போரில் தடைசெய்யப்பட்ட ஒன்று.வெள்ளை பாஸ்பரஸ் அடங்கிய இந்த குண்டு..வீசப்பட்டதும்..சிதறி பறவும்.அதன் துகள்கள் பட்ட இடம் தீப்பற்றி எரியும்.மனிதர்கள் உடலில் பட்டாலும்..தீப்பற்றி எரியும்.கூண்டின் துகள்கள் உடலில் பாய்ந்து ஆறாத காயத்தை ஏற்படுத்துமிந்த வகை குண்டுகள் ஆஃப்கானிஸ்தானில் பின் லாடனை ஒழிக்க அமெரிக்கா வீசியது.வன்னியில் சுரந்தாபுரம் என்னும் இடத்தில்..விமானங்கள் குண்டு வீசியதில் 52 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

சரி தலைப்புக்கு வருவோம்..

இந்திய கிரிக்கட் குழு, தற்சமயம் ஸ்ரீலங்காவில் விளையாடி வருகிறது. நேற்று இரவு இலங்கை அதிபர் ராஜ பக்சே..இந்திய கிரிக்கட் வீரர்களுக்கு இரவு விருந்தளித்தாராம்.அதில் வீரர்கள் கலந்துக் கொண்டனராம்.

ஒரு பக்கம் தமிழர் பிணக்குவியல்...மறுபக்கம் இந்தியர்களுக்கு விருந்து...

:-((((((((((

Tuesday, February 3, 2009

தமிழகம் முழுதும்..3 நாள் பேரணி...பொதுக்கூட்டம்..

சந்திரபாபு...ஒரு படத்தில் பாடுவார்..

சிரிப்பு வருது...சிரிப்பு வருது
சின்ன மனுஷன்..பெரிய மனுஷன்
செயலை பார்க்க..பார்க்க
சிரிப்பு வருது..சிரிப்பு வருது..

இப்பொழுது இந்த பாடல் எதற்கு என்கிறீர்களா?

தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் நேற்று எடுத்த முடிவு குறித்துதான்.

இலங்கை தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத்தரவும்...போர் நிறுத்தம் ஏற்பட்டுஅமைதி தோன்றவும்..ஒத்த கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ் சான்றோர்கள்..அரசியல் கட்சிகளைக் கொண்டு இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்ற அமைப்பு பெயரால்...(அப்பாடா..குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு இந்த அமைப்பு தலைவர் பதவி கொடுத்து விடலாம்)தமிழக பட்டி..தொட்டி எங்கும்..விளக்கக் கூட்டங்கள்,பேரணிகள்,மனித சங்கிலி..போன்ற அறப்போராட்டங்கள் நடத்தி..தமிழ் நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை மத்திய அரசுக்கும்..இலங்கை அரசுக்கும் எட்டுமாறு செய்யப்படும்.ஃபிப்ரவரி 7ம் நாள் சென்னையிலும்,8,9..தேதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும் நடத்துவதென்று செயற்குழு தீர்மானிக்கிறது.

இப்பொழுது..மேற்கண்ட பாடலை நீங்களும் முணுமுணுப்பது கேட்கிறது.

Monday, February 2, 2009

ஆட்சி மாற்றமாவது...வெங்காயமாவது...

இந்தியாவிலும்...மாநிலங்களிலும்..ஆட்சி மாற்றங்கள்..ஏற்பட...தேர்தலுக்கு முன் ஒரு வருடத்தில் எற்பட்ட சம்பவங்களும் காரணமாய் அமைவதுண்டு.

தமிழகத்தை பொறுத்தவரை..தி.மு.க., ஆட்சியைப் பிடிக்க முதலில் உதவியவை...அரிசி பிரச்னை,மொழி பிரச்னை, ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டு.

இந்திரா காந்தி..மத்தியில் ஆட்சி இழக்க காரணமாய் இருந்தது..'எமெர்ஜென்ஸியும்...அதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களும்...தலைவர்கள் பட்ட கொடுமையும்.இதை எண்ணியவாறே இருந்ததால் தான் மனம் வெதும்பி..காமராஜர் இறந்தார்..என்றும் சொல்வதுண்டு.

பா.ஜ.க.,மத்தியில் ஆட்சியை இழக்க..ஒரு முறை வெங்காய தட்டுப்பாடு..காரணமாய் அமைந்தது.

அ.தி.மு.க., ஆட்சி இழக்க..வளர்ப்பு மகன் திருமணமும்..சசிகலா& கோ., வின் ஊழல்களும்..ஒரு முறை காரணமாக அமைந்தது.மற்றொரு முறை..அரசு ஊழியர்கள் கைது காரணாமாய் அமைந்தது.

ஆனால்...தற்போது..தமிழகத்தைப் பொறுத்தவரை..பாராளுமன்ற தேர்தலில்..40 க்கு 40 கிடைப்பது கஷ்டம்.(பாண்டியும் சேர்த்து)ஆனால்..மூன்றாம் அணி என்று ஒன்று உருவாகுமே ஆனால்..வோட்டுகள் சிதறும்..தி.மு.க., காங்கிரஸ்..கூட்டணி மீண்டும் வெற்றிப் பெறும். இவர்கள் தமிழர் பிரச்னையில் நிலைபாடு எப்படி இருந்தாலும்.

இதை உணர்ந்துதான்..ராமதாஸும் கூட்டணி விவகாரத்தில் அடக்கி வாசிக்கிறார்.இல்லையேல்..இவ்வளவு பேசுபவர்..காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என வெளியே வரலாமே...

பா.ஜ.க.வோ..ஒரு அகில இந்திய தேசியக் கட்சிக்கான வலு இழந்து காணப்படுகிறது.கம்யூனிஸ்டுகளை நம்பும் கட்சிகள்..மண்குதிரையை நம்புவதைப் போலத்தான்.

மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி..காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கிறார்..பீகாரில் லல்லு.,யு.பி.யில் முலாயம் சிங்..இப்படி போகிறது..

அதனால்தான் காங்கிரஸ் பிராந்திய கட்சியுடன் கூட்டு வைப்போம் என்கின்றனர்.,இவர்களை விட்டால்..அவர்களுக்கும் போக்கிடம் இல்லை..

ஆனால்..இந்திய மக்களுக்கு..தேர்தல் என்றால்...

இந்த ஊழல் அரசியல்வாதிகளை விட்டால்..வேறு வழியில்லை..வோட்டளிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என கூறிக்கொண்டு ..பெருச்சாளிகளுக்கு ஓட்டளித்துவிட்டு..ஒருநாள் விடுமுறை கிடைத்த ஆனந்தத்தில்..சாப்பிட்டு உறங்கும் ஆனந்தம்.

கலைஞருக்கு ஒரு தொண்டனின் கடிதம்..

ஐயா

வணக்கம்.

தங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது.சிலர் நீங்கள் பிரச்னைகளுக்கு பயந்து சும்மாவேனும் மருத்துவ மனையில் போய் படித்திருப்பதாக கூறுகின்றனர்.அதை நான் நம்பவில்லை.உங்களது அரசியல் வாழ்வில்...நீங்கள் சந்திக்காத பிரச்னைகளா? நீங்கள் சந்திக்காத போராட்டங்களா?நீங்கள் பார்க்காத மத்திய அரசா? அல்லது..நீங்கள் பார்க்காத எதிர்க்கட்சிகளா?

என்ன ஒன்று...அப்போதெல்லாம்...உங்களுக்கு கட்டுப்பட்ட பிள்ளைகள் இருந்தனர்...இப்போதோ அது இல்லை அவ்வளவுதான்.

கட்சியை அண்ணாவிற்குப் பிறகு...பல சோதனைகள் வந்த போதும்..கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என கட்டிக்காத்தவர் நீங்கள்.ஒரு சமயம் ,அண்ணா வின் மறைவிற்குப் பின் அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கி வைத்திருந்த நீங்கள்...சமீப காலத்தில் அதை தொலைத்து விட்டீர்களோ...என சந்தேகம் எங்களுக்கு.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்..தீக்குளித்த வீரர்களை வைத்து அரசியல் பண்ணவில்லையா நீங்கள்? இலங்கை தமிழனுக்காக உயிர் நீத்த முத்துகுமாரின் மரணத்தை அரசியல் பண்ண வேண்டாமென்கிறீர்களே! ஏன்.,இது உங்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் என்பதாலா...அல்லது..நடக்கும் ஆட்சியில் நீங்கள் முதல்வர் என்பதாலா?

சேது சமுத்திர திட்டத்திற்கு..முழு அடைப்புக்கு குரல் கொடுத்த..நீங்கள்..அ,தி.மு.க.,உச்ச நிதிமன்றம் சென்றதாலும்..நீதிமன்றம் அதற்கு தடை விதித்ததாலும்..வெறும் உண்ணாவிரதத்துடன் நிறுத்திக்கொண்டதாக அறிவித்தீர்கள்.(இல்லை..பந்த் இருந்தது என்றும்..நீதிமன்ற அவமதிப்பு என்றும் அ.தி.மு.க.முறையிட அந்த வழக்கு நிலுவையில் உள்ளது)

இந்நிலையில்...வருகின்ற 4ஆம் தேதி..பந்த் அறிவித்துள்ளனர் சில இயக்கங்கள்.உடனே ..எங்கே..அவர்கள் வெற்றிப்பெற்றுவிடுவார்களோ..என ..'பந்த் கூடாது...நீதிமன்ற அவமதிப்பு'என ஓலமிடு
கிறீர்கள்.மாமியார் உடைத்தால் மண்குடம்....என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் வேறு வருகிறதே..என்ற கவலை வேறு உங்களுக்கு..காங்கிரஸ் உங்களை கழட்டி விட்டால் நன்றாய் இருக்கும் என எண்ணுகிறோம்..அப்போதாவது..வீரமான..எங்கள் முதல்வரைப் பார்க்க எங்களால் முடியும்.

இலங்கை தமிழர்கள் பற்றி மறந்து விடுங்கள்...உங்கள் வீட்டில்..உறவினர் பலருக்கு..இன்னும் கட்சிப் பதவி கொடுக்கப் படவில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.இன்னும்..வட மண்டல செயலர் பதவி,தென் மண்டல,வட மண்டல பொருளாளர்கள் பதவிகள் காலியாக உள்ளன. உறவு காத்திருக்கிறது.

விரைவில்..உடல் நலம் தேறி...வந்து..கழகப்பதவிக்கான இடங்களை நிரப்புங்கள்.

என்றும் நீங்கள் சொல்வதையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கும்

அப்பாவி தொண்டர்களில் ஒருவன்.

Sunday, February 1, 2009

சந்நியாசி என்பவன் யார்?

சந்நியாசி என்பவன் துறவியாய் இருக்க வேண்டும்.எந்த பொருளின் மீதும் ஆசை வைக்கக்கூடாது.பற்றற்றான் பற்றினை பற்ற வேண்டும்.மாற்று உடையிலிருந்து...எதுவும் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது.கிடைக்கும் உணவை பகிர்ந்து உண்ண வேண்டும்.கிடைக்காவிட்டால்...அதுவும் கடவுளின் திரு உள்ளம் என நினைத்து, தவம் செய்ய நல்ல சந்தர்ப்பத்தை ஆண்டவன் கொடுத்துள்ளான் என எண்ண வேண்டும்.

சிறுதாவூரில் பங்களா,கோடனாடு எஸ்டேட்.போயஸ் தோட்ட அரண்மணை,ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் ,கோடிக்கணக்கில் பணம்..எல்லாம் உள்ள ஒருவர்..தான் 21 வருஷங்களாக சந்நியாசியாய் இருந்தேன் என்றால்...யார் நம்புவார்கள்.

சாரி, மறந்து விட்டேனே!

இருக்கவே இருக்கிறான் தமிழன்...எதைச் சொன்னாலும் நம்புவதற்கு...

மீசை மாதவன்..(ஒரு பக்கக் கதை)

அப்பாவிற்கு என்றைக்குமே தன் மீசைமீது தணியாத பற்று உண்டு.

'டேய்..இந்த மீசையோட ஒரு புகைப்படம் எடுக்கணும்டா' என்பார் ஒவ்வொருமுறை மீசையை மாற்றிய பின்னும்.'

ஆனால் அவரும் ஒரு முறைகூட புகைப்படம் எடுத்துக்கொண்டதில்லை.நானும் அவர் சொல்வதை கண்டுக் கொண்டதில்லை.'ஆமாம்..கரப்பான் பூச்சிக்கு கூடத்தான் மீசை இருக்கிறது' என அலட்சியப் படுத்திவிடுவேன்.

அந்த நாட்களில் பாரதியார் போல மீசை வைத்துக்கொண்டு தினமும் அதற்கு பசுநெய் தடவி பராமரித்து வருவாராம்.அவரை அந்த மீசை உடன் பார்க்கும்போது பயமாக இருக்குமாம்.அழுத குழந்தையும்..அவரைப் பார்த்தால் வாயை மூடிவிடுமாம்.

அம்மா கதை சொல்வதுபோல எனக்கு தினமும் சொல்லி மாய்ந்து போவாள்.

நான் வளர்ந்து வேலைக்குப்போக ஆரம்பித்ததும் அப்பாவும் என்னிடம் இதுபற்றிப் பேச ஆரம்பித்தார்.

'டேய் சிவா, உன் வயசிலே 'கருகரு' ன்னு மைனர் மீசை வச்சுக்கிட்டு இருந்தேன்.என் பேரே 'மீசை மாதவன்னு தான் சொல்லுவாங்க.நீ என்னடான்னா..இந்திப்பட கதாநாயகர்கள் போல..முகத்தை மிழிச்சுண்டு இருக்கியேடா..' என்று என்னை கிண்டல் செய்வார்.

தேவர் மகன் வந்த புதிதில்..அதில் தேவர் சிவாஜி கணேசன் வைத்துக் கொண்டிருப்பது போல தன் மீசையை வளர்த்துக் கொண்டார்.அத்துடன் நில்லாமல்..'டேய்..சிவா..இந்த மீசையுடன் கண்டிப்பா ஒரு புகைப்படம் எடுக்கணும்னு' என்று தொண தொணத்தார்

ஆனால் வழக்கம் போல நான் கண்டுக்கொள்ளவில்லை. பிறகு...

ஓரிரு ஆண்டுகள் கழித்து..இது 'விருமாண்டி' மீசை என்று சொல்லி..கிருதாவையும்.,மீசையையும் சேர்த்துவிட்டுக் கொண்டு சொல்லிக்கொண்டிருந்தார்.

'டேய்..இதுவரைக்கும் எந்த மீசையை நான் புகைப்படம் எடுக்க சொன்னாலும் தட்டிக் கழிச்சுட்ட..நீ எடுக்கவே இல்லை.ஆனா..கண்டிப்பா இந்த மீசையோட ஒரு படம் எடுக்கணும்' என்று கடந்த இரண்டு வாரங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்'.

ஆனால்..இன்றுதான் அதற்கான வேலை வந்திருக்கிறது..

புகைப்படம் எடுப்பவரை ஐந்து மணிக்குள் வரச் சொல்லி இருக்கிறேன்.அப்பாவை இன்று புகைப்படம் எடுக்க..இன்று இல்லாவிட்டால்...வேறு சந்தர்ப்பம் கிடைக்காது...

பெசண்ட் நகர் எரியூட்டியில் அப்பாவிற்கு 6.30 க்கு நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள்.அதற்குள் முடிக்க வேண்டிய காரியங்களை முடித்தாக வேண்டுமே...

மனத்தை வலிக்கத்தான் செய்தது...