Monday, October 31, 2011

7 ஆம் அறிவு.. என் பார்வையில்...
மனம் வருந்துகிறது..

தமிழன்..தமிழன்..என்று விட்டால் படம் ஹிட் ஆகிவிடும் என முருகதாஸிற்கு யார் கூறியது.

படத்தின் முதல் 20 நிமிடங்கள்..

ஒரு காலத்தில்..ஒவ்வொரு திரையரங்கிலும்...செய்தித் தொகுப்பு படம் ஆரம்பிக்கும் முன் போட வேண்டும் என்று கட்டாயம் இருந்தது.அந்த காலத்தை நினைவூட்டியது அந்த இருபது நிமிடங்கள்.குரல் கொடுத்தவரும் அதே போல ..'பீகாரில் வெள்ளம்' குரல் கொடுத்தார்.

போதிதர்மனை மன்னன் சைனாவிற்கு அனுப்பினாராம்..அங்கு அவர் அவர்களுக்கு வந்த மர்ம நோயைப் போக்கினாராம்..விரோதிகளிடமிருந்து காப்பாற்றினாராம்..பின் அந்த மக்கள் அவருக்கே விஷம் இட்டு..அவர் அதை அறிந்திருந்தும் உண்டு அங்கேயே இறந்தாராம்..இந்த இடத்தில் தமிழன் இ.வா., ஆகிறான்.

காலங்கள் கடந்து..இப்போது அதே மர்மக்காய்ச்சலை  இங்கு பரப்ப..தமிழ்நாட்டிற்கு (??!!!) வில்லன் வந்தானாம்..ஆண்டவா தலை சுத்துது.ஆமாம் அருங்காட்சியகத்தில் உள்ள போதி தர்மனின் குறிப்பேடு இம் மர்மக்காய்ச்சல் பற்றி ஏதும் சொல்லவில்லையா?மர்மக்காய்ச்சலுக்கு போதியின் பச்சிலை வைத்தியம் மட்டுமே இன்று போதுமா?ஆயிரக்கணக்கான இழப்பை பச்சிலை சரி செய்து விடுமா?


ஆமாம் அரவிந்தன் (சூர்யா) ஏன் சர்க்கஸ் தொழிலாளி ஆக்கினார்.குங்க்ஃபூ ஒரு கலை என்பதால்....அந்த போதி தர்மனின் டிஎன்ஏ 80 விழுக்கட்டுக்குமேல் ஒத்துப்போகும் அரவிந்தனையும் ஒரு கலைனாக சித்தரிக்க வேண்டும் என எண்ணி..அப்படி ஆக்கிவிட்டாரோ..முருகதாஸ்..

திரைக்கதையை ..முதல் இருபது நிமிடம் கழித்து எப்படி அமைக்கலாம் என்பதில் குழப்பமே அவருக்கு ஏற்பட்டிருக்கும் என எண்ணுகிறேன்.

போதி குதிரையில் போவதால்  அரவிந்தனை யானையில் போக வைத்தார் போலும்.

சூர்யா..இப்படத்திற்காக உழைத்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள்..கஜினியை விடவா? இன்னும் சொல்லப் போனால் அவருக்கு இதில் அதிக வேலையே இல்லை எனலாம்.

ஸ்ருதி ஹாசன்..பல காட்சிகளில் நன்றாகத் தெரிகிறார்..சில காட்சிகளில்..ஏன் இப்படி?

விஞ்ஞானிகள் கூட்டத்தில் தமிழில் பேசுபவரை சாடுவதை சாடுகிறார் தமிழில்..ஒருவேளை இவர் பேசும் தமிழை அவர்கள் சாடி இருப்பார்களோ என்று தோன்றுகிறது.

பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ்..படத்தி பார்ப்பதை விட வெளியில் கேட்க நன்றாய் இருக்கிறது.

ஆமாம்..அதெப்படி பார்வையாலேயே வில்லன்..போலீஸ் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லவைப்பாராம்..போலீஸ் அதிகாரிகள் மௌனமாய் இருப்பர்களாம்.இதைவிட காவல்துறையைக் கேவலமாய் வேறெந்த படத்திலும் காட்டவில்லை எனலாம்.

அளவிற்கு அதிகமாய்..பார்வையாலேயே..தெருவில் நடக்கும் ஆக்ஸிடெண்ட்கள்...மரணங்கள்...(வழக்கம்போல கதாநாயகனும்,நாயகிக்கும் சில முகக் கீறல்கள் மட்டுமே)

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்...அல்ல அல்ல கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்.

பல இடங்களில் ஒளிப்பதிவு..ஆகா..என சொல்ல வைப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

 கைதட்டல் வரவேண்டும் என்றே மஞ்சள், வீட்டு வாசல் கோலம்.,துரோகம்.என நுழைக்கப்பட்டுள்ள வசனங்கள்.


தமிழன் உணர்ச்சிவசப்படுபவன் தான்...அவனைப் பற்றியும்..தமிழைப் பற்றியும் கூறினால் மகிழ்ச்சியுடன் கைதட்டுவான்..

ஆனால்..வியாபார யுக்தி என்றால்..அதையும் புரிந்துக் கொள்வான்.

மொத்தத்தில்..படம் முடிந்து திரையரங்கு விட்டு வெளியே வருகையில்..தமிழன்..தமிழ் என தலை நிமிர்ந்து வருவான் என இயக்குநர் கூறியுள்ளது போல நடக்கவில்லை.வெளியே வருபவன்..முழம் முழமாய் காதில் சுற்றியுள்ள பூவை கழட்டி எறிந்து விட்டுத்தான் வருகிறான்.

டிஸ்கி-

புரஃபசர் ஆட்டோவில் ஏறியதும் மீட்டர் போடப்படுகிறது..இயக்குநர் எந்த காலத்தில் இருக்கிறார்..ஆட்டோ மீட்டர் போட்டு ஓட்டிய நாளெல்லாம் எப்போதோ ஓடிவிட்டது.

ஆமாம்..இப்படம் தெலுங்கு டப்பிங்கில் தமிழன் என்று வருமிடமெல்லாம் இந்தியன் என்று மாற்றிவிட்டாராமே..உண்மையா..
அப்படியாயின்...தமிழனுக்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு அல்ல..தமிழகத்தில் மட்டுமே சிறப்பு என்கிறாரா இயக்குநர்..
இந்த ஒரு செயலே இயக்குநரின் தமிழ் பற்றை சந்தேகிக்க வைக்கிறது.Sunday, October 30, 2011

கலைஞர் இளைத்து வரும் பூனையா?
திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய பரிதி இளம்வழுதி..பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளது..

"கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் பற்றி கருணாநிதியிடம் கூறினேன்.உண்மையைப் புரிந்து நடவடிக்கை எடுத்தார்.அதற்கு முன்பாக ஸ்டாலினிடம் புகார் தந்தேன் நடவடிக்கை எடுக்கவில்லை.இன்னமும் கருணாநிதியை நான் நம்புகிறேன்.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் உள்ளதா இல்லையா என்பதை நீங்களே அறிவீர்கள்.மாநிலம் முழுதும் தொண்டர்களிடம் மனக்குமுறல் உள்ளது.என் மீதான வழக்குகளுக்கு பயந்து நான் இந்த முடிவை எடுக்கவில்லை.நான் பார்க்காத வழக்கு இல்லை.தனி ஆளாக சட்டசபையில் போராடினேன்" என்றுள்ளார்.

கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

"துரோகச் சிந்தனையினர் தம் சுகவாழ்வு ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர்.கையிலே காசில்லாத போது, திமுக விற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள் கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கட்சியையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்." என்றுள்ளார்.

நம் சந்தேகம்...

'பரிதி...இடைப்பட்ட காலத்தில் காசு அதிகம் சேர்த்துவிட்டாரா..கலைஞர் மறைமுகமாக பரிதி முறைகேடான வழியில் பணம் சேர்த்துவிட்டார் என்று சொல்கிறாரா?(முறையான சேர்ப்பு என்றால் கட்டிக் காக்க போரிடவேண்டாமே!)

இதற்கிடையே..திமுகவின் முன்னாள் எம் எல் ஏ வும்..திருநெல்வேலி மாநில செயலாளருமான என்.மாலைராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

டிஸ்கி- வைகோ..கலைஞரையும்,ஜெ யையும் பற்றி ஒரு அறிக்கையில் இருவரும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்றுள்ளார்..

அதற்கு கலைஞர்..'திமுக விற்கு ஆற்றிய பணிக்காக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி அருகிலேயே வைத்திருந்து பாராட்டிய நானும், கடைசி நிமிடம் வரை காத்திருக்க வைத்து கைவிட்ட ஜெயலலிதாவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத் தெரிகிறார்கள் என்றால் அவர் இன்னமும் திருந்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

பூனை இளைத்தால் எலி கூட மச்சான் முறை கொண்டாடும் என்பது பழமொழி அல்லவா " என்று சாடியுள்ளார்.

கலைஞர் தன்னை பூனை என்றும்..தான் தற்போது இளைத்துவிட்டதாகக் கூறுகிறாரா.

அப்படியானால்..இளைத்தது..இவரது கட்டுப்பாட்டை திமுகவில் இழந்து வருவதாகப் பொருளா?

Saturday, October 29, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (28-10-11)
இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து செயற்கை ரத்தத்தை தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனராம்.இன்னும் 2 ஆண்டுகளில் மனித உடலில் செலுத்தி சோதிக்கப்பட இருக்கிறது.இந்த ரத்தம் பயன்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் ஆகலாமாம்

2)இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 16561 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனராம்.
இந்தியா முழுதும் 1,34,599 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனராம். வறுமை,வேலையில்லாத் திண்டாட்டம்,குடிப்பழக்கம்,வரதட்சணைகொடுமை ஆகியவையே இவற்றிற்குக் காரணம்

3)ஆர்.நடராஜ முதலியார் என்பவர் தயாரித்த கீசகவதம் என்ற திரைப்படம்தான் தமிழில் தயாரான முதல் படமாகும்.தமிழில் வெளியான காளிதாஸ் தான் முதல் பேசும்படம்

4)திமுக விற்கு பிரச்சாரம் செய்ததால் ஓய்வில் வைக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகருக்கு..முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி சந்தர்ப்பம் அளிக்குமாறு பூ நடிகையை மூத்த அரசியல்வாதி கேட்டுக் கொண்டுள்ளாராம்.

5)ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லையென்றாலே தவித்து விடுகிறோம் நாம்.ஆனால் உலகில் 160 கோடி மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் வாழ்கிறார்களாம்

6)86.57 கோடி பேர் இந்தியாவில் செல்ஃபோன் வாடிக்கையாளராய் உள்ளனராம்

7)காவிரி நதிநீர் பிரச்னையில் அரசியல் பிரச்னைகளை நுழைக்காமல் தமிழக அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்கு திராவிடர் கழகம் ஒத்துழைக்கும் என வீரமணி தெரிவித்துள்ளார்

8)ஜோக்ஸ் கார்னர்
 
பக்கத்து வீட்டு கணவன், மனைவி ஏன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
பிரபு தேவா,நயந்தாரா இடையே சண்டைன்னு இந்தம்மா சொல்றாங்க..அவர் இல்லைங்கிறார்..அந்த பேச்சு வார்த்தை முற்றி சண்டை

9)தீபாவளிக்கு தைக்கக் கொடுத்த சட்டையைப் போட்டுப் பார்த்துவிட்டு அந்த ஆள் ஏன் கத்துகிறார்.
 தையல்காரர் தைத்த சட்டை அவருக்கு ரொம்ப பிடிக்குதாம்..அதான் கத்தறார்
 சட்டை அவருக்குப் பிடிச்சால் சந்தோஷப்படாம ஏன் சண்டை போடறார்

10)உனக்கு இன்னிக்குப் பிறந்த குழந்தை அட்மிஷனுக்கு இப்பவே போகணுமா..எல்.கே.ஜி.அட்மிஷனுக்கா?
 இல்லை இல்லை ..பாட்டு டீச்சர் கிட்ட..பாட்டு சொல்லிக் கொடுக்க..அப்பத்தானே சூபர் சிங்கர் ஜூனியர்ல பாடமுடியும்

Friday, October 28, 2011

தமிழக அரசு ஏன் தடை செய்யக்கூடாது...
தினமணியில் படித்த தலையங்கம்.
ஏனோ உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள தோன்றியது.அண்மையில் கேரள அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் அம்மாநில மக்களின் உணவுப்பழக்கம் தொடர்பானது. அம்மாநிலத்தில் 80 விழுக்காடு மக்கள் அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுகிறவர்கள் என்கிற புள்ளிவிவரம் நமக்குப் புதியதல்ல. ஆனால், அந்தப் புள்ளிவிவரம் தரும் தகவல்கள் தமிழர்களுக்கு மகிழ்ச்சி, அதிர்ச்சி இரண்டையும் சேர்த்துத் தருகின்றது.
கேரள மாநில மக்களுக்கு ஒரு நாளைக்கு மொத்தம் 5,034 டன் இறைச்சி தேவைப்படுகிறது. இதில் 45 விழுக்காடு இறைச்சி கறிக்கோழி வகை. கறிக்கோழிக்காக மட்டும் கேரள மக்கள் 2009-10 நிதியாண்டில் ரூ. 2,844 கோடி செலவிட்டுள்ளார்கள். இதில் ரூ. 1,752 கோடி வெளிமாநில கறிக்கோழிகளுக்காகச் செலவிட்டது. அதாவது இதில் 90 விழுக்காடு கறிக்கோழி வணிகம் தமிழ்நாட்டுக்குரியது என்பதால், இவ்வளவு பெரிய வணிக வாய்ப்பை கேரளத்தின் மூலம் தமிழர்கள் பெறுகிறார்கள் என்கிற வகையில் மகிழ்ச்சி.
அடுத்ததாக, அதிர்ச்சியைத் தரும் தகவல் இதுதான்: கேரள மக்களின் ஒரு நாள் தேவையான 5,034 டன் இறைச்சியில் அந்த மாநிலத்திலிருந்து கிடைப்பது 264 டன் மட்டுமே. மீதி இறைச்சி (மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கறிக்கோழி) ஆகியவற்றில், கேரள மக்களின் பிரியமான அசைவ உணவான மாட்டிறைச்சி பெரும்பகுதியாக உள்ளது. இந்த மாட்டிறைச்சித் தேவையை அண்டை மாநிலங்கள்தான் முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன.
2009-10 நிதியாண்டில் அண்டை மாநிலத்திலிருந்து 61 லட்சம் மாடுகள் சுங்கச்சாவடிகள் வழியாக முறையாகவும், 18 லட்சம் மாடுகள் கடத்தப்பட்டும் கொண்டுவரப்பட்டன என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 79 லட்சம் மாடுகள் கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
கர்நாடக மாநிலத்தில் பல ஆண்டுகளாகவே, அடிமாடுகள் விற்பனைக்குத் தடை நிலவுகின்ற காரணத்தால், 90 விழுக்காடு மாடுகள் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குச் செல்கின்றன என்பதும், தமிழ்நாட்டில் மாடுகள் எண்ணிக்கை அண்மையில் வேகமாகக் குறையத் தொடங்கிவிட்டது என்பதும்தான் அதிர்ச்சியைத் தருகிறது. இப்போது தமிழ்நாட்டில் மாடுகளின் எண்ணிக்கை என்ன என்கிற சரியான கணக்கெடுப்பு தமிழக அரசிடம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
""கால்நடைகள், மீன்வளர்ப்பு, வேளாண்மை போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்'' என்று ஆகஸ்ட் 15, 2011-ம் தேதி தமிழக முதல்வர் கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசியதை மேற்கோள்காட்டித் தொடங்கும் கால்நடைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், 2007-ம் கணக்கெடுப்பில் 111.89 லட்சம் மாடுகள் (2004 கணக்கெடுப்பைவிட 22 விழுக்காடு அதிகம்) 20 லட்சம் எருமைகள் (2004 கணக்கெடுப்பைவிட 21 விழுக்காடு அதிகம்) என்று புள்ளிவிவரம் தருகிறது. ஆனால், இப்போது கால்நடைகளின் எண்ணிக்கை, குறிப்பாக மாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றால், 2007-க்குப் பிறகு தமிழ்நாட்டில் கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கான தகவல் இல்லை என்கிற பதில்தான் கிடைக்கிறது.
கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு அதிக அளவில் மாடுகள் கடத்தப்படுகின்றன என்கிற பிரச்னை எழுந்தபோது, அந்த மாநில அரசு எடுத்த முதல் நடவடிக்கை அடிமாடுகள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்குத் தடை விதித்ததுதான். தற்போது கர்நாடக மாநிலத்திலிருந்து கள்ளத்தனமாக மாடுகள் கடத்தப்படலாமேயொழிய, சட்டப்படி கொண்டு செல்லப்படுவதில்லை. இதனால், கேரளத்தின் மாட்டிறைச்சி தேவை முழுக்க முழுக்கத் தமிழகத்தைச் சார்ந்துள்ளது. தமிழக மக்களோ விவசாயத்துக்கு மாடுகளை வளர்க்கும் வழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்து, தற்போது இருக்கின்ற மாடுகளையும் அதிக விலை கிடைக்கும் ஒரே காரணத்தால் அடிமாட்டு வியாபாரிகளுக்கு விற்று வருகின்றனர்.
பால் வணிகத்துக்காக கறவை மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு, காளைகள் அனைத்தையும் கேரளத்துக்கு அனுப்பும் போக்கு எத்தகைய பிரச்னையைத் தமிழகத்துக்கு நாளை கொண்டு வந்து சேர்க்கும் என்பது தெரியவில்லை. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாடு, ஆடு வழங்கும் திட்டத்தில், மாடு என்பது கறவை மாடு என்பதாகவே இருக்கிறது. கால்நடை மருத்துவமனைகளில் உறைவிந்து இருப்பதால், காளைகளே தேவையில்லை என்ற நிலைமையை நோக்கித் தமிழகம் செல்லுமேயானால் இதன் எதிர்வினைகள், மாடுகளுக்கான புதுப்புது நோய்கள்போல என்னவெல்லாம் நேருமோ யார் அறிவார்?
ஆடுகள், மாடுகள், கோழிகள் வெறும் இறைச்சிக்காக வளர்க்கப்படும்போது இவற்றின் உணவுக்காக அழிக்கப்படும் தாவரங்கள், புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன. ஆகையால், இறைச்சி உணவுத் தேவை குறையக் குறைய புவிவெப்ப அபாயமும் குறையும் என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் யாருமே இல்லை.
ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதன் வாழ்விடம், உணவு, இனப்பெருக்க அளவு போன்றவற்றை இயற்கை சமநிலையில் வைத்திருக்கிறது. இதில் குறைவு அல்லது மிகை இரண்டுமே பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதிக்கும். இதனால், பிற உயிரினங்களைவிட எதனால் பாதிப்பு என்பதை உணர்ந்து துடிதுடித்து மடிவது மனிதனாகத்தான் இருக்கும்.
நம் பாரம்பரிய மாடுகளான, காங்கேயம், மணப்பாறை மாடுகளை ஏறக்குறைய நாம் இழந்துவிட்டோம் என்கின்ற நிலையில், தற்போது காளை மாடுகள் அனைத்தையும் கேரள மாநிலத்தின் இறைச்சித் தேவைக்காக இழப்பது சரியான செயல்தானா? ஏன் தமிழக அரசும், கர்நாடக அரசைப்போல அடிமாடுகள் விற்பனைக்குத் தடை விதிக்கக்கூடாது?

Thursday, October 27, 2011

பட்டாசு
வெடித்துச் சிதறின
வெடிகளின் ஓசை
அதைவிட
அதைத் தயாரித்த
குட்டிக் கரங்களின்
விசும்பல் ஓசை
அதிகமாய்க் கேட்டது
செவியில்


திமுக வாக்கு சதவிகிதம் வளர்ந்துள்ளதா..?
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டதில் திமுக வாக்குச் சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்று கலைஞர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ்,பாமக,விடுதலைசிறுத்தைகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்து பெற்ற வாக்குகள் 82 லட்சத்து 49,991 ..அதாவது 22.30 சதவிகிதம்.ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 26.09 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளோம்.22 சதவிகிதத்திலிருந்து 26 சதவிகிதம் அதிகரித்ததற்கு காங்கிரஸ் இல்லாததுதான் காரணம் என சொல்லமுடியாது.வாக்குகள் அதிகம் கிடைத்ததால் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றுள்ளார்.

நமக்கு புரியாதது..

உள்ளாட்சித் தேர்தலில், சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்திருந்தக் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம்..

திமுக -     26.1
காங்கிரஸ்-  5.71
பாமக -  3.55
         
மொத்தம் 35.36

சட்டசபைத் தேர்தலில் திமுக,காங்கிரஸ்,பாமக ஆகியவை பெற்ற வாக்கு சதவிகிதம்

திமுக - 22.4
காங்கிரஸ்-9.3
பாமக -5.2
விடுதலை-1.5
முஸ்லீம் லீக்-1.00

 மொத்தம்-  39.4

உள்ளாட்சித் தேர்தலில் திமுக வாக்குகள் குறைந்துள்ளதா..இல்லையா என்பதை நீங்களே சொல்லுங்கள்.
Wednesday, October 26, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ் -25
பரிதிமாற் கலைஞர் ஒரு சமயம் தன் மாணவர்களுக்கு செய்யுள் இலக்கணப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்..

அப்போது ஒரு மாணவன் எழுந்து, 'ஐயா..நீங்கள் நடத்தியதில் எழுத்து புரிகிறது.சீர் புரிகிறது,தளை புரிகிறது,தொடை புரிகிறது..ஆனால் தொடைக்கு மேல் ஒன்றும் புரியவில்லை.அதைச் சற்று விளக்கமாகக் கூறுங்கள்' என்றான்.

உடன் பரிதிமாற் கலைஞர், 'தனியே என் அறைக்கு வா..விளக்குமாற்றால் விளக்குகிறேன்' என்றார்,

வகுப்பு முழுதும் சிரித்தது.

(விளக்குமாற்றால் என்பது இரு பொருள் உடையது.துடைப்பத்தால் எனபது ஒரு பொருள்.விளக்கும் ஆற்றலால் என்பது இன்னொரு பொருள்)

பரிதிமாற் கலைஞர் தமிழாசிரியர் பணிக்காக நேர்முகத் தேர்விற்குச் சென்றார்..

அப்போது அவரிடம்'குற்றியலுகரத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தாருங்கள்' என்றனர்.

'எனக்குத் தெரியாது' என்றார் பரிதிமாற் கலைஞர்.

கேள்வி கேட்டவர்கள், தமிழாசிரியர் பணி அவருக்கேத் தரவேண்டும் என்றனர்.

(எனக்கு தெரியாது  என்பதே இரண்டு எடுத்துகாட்டுகள்.

இலக்கண வகுப்பு...பரிதிமாற் கலைஞர், எழுவாய்,செயப்படுபொருள்,பயனிலை பற்றி விளக்கமாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.வகுப்பில் ஒரு மாணவன் மட்டும் வகுப்பைக் கவனிக்கவில்லை.இதனால் கோபம் அடைந்தவர்,'வகுப்பைக் கவனிக்காத நீ உன் இடத்தில் இருந்து எழுவாய்.உன்னால் ஏதும் செயப்படு பொருள் இல்லை.நீ இங்கிருந்தால் உனக்கோ பிறர்க்கோ யாதும் பயனிலை.வகுப்பை விட்டு வெளியேறுக' என்றார்.

டிஸ்கி1- இது போல அவ்வப்போது தமிழ் அறிஞர்கள் பற்றிய செய்திகளை பகிர்ந்துக் கொள்ள ஆசை

தலைவர்களின் தீபாவளிச் செய்திகள்
ஜெயலலிதா - அந்த நாளில் அஞ்சாநெஞ்சனாய் அட்டூழியம் செய்துவந்த நரகாசுரனிடமிருந்து மக்கள் விடுதலையடைந்த நாளை தீபாவளியாய் கொண்டாடுகிறோம்.இன்றும் ஐந்து மாதங்களுக்கு முன் அந்த நிலைதான்..ஆனால் இன்று மக்கள் அஞ்சாமல் இருக்கிறார்கள் எனில்..அதற்கு முக்கிய காரணம் யார் எனச் சொல்லத்தேவையில்லை.மக்களுக்கு என் தீபாவளி வாழ்த்துகள்

கலைஞர்- மக்கள் செய்த தவறால் அன்று நரகாசுரனிடம் அவதிப்பட்டு கண்ணனால் விடிவுகாலம் வந்ததாய் கதை உண்டு.இன்று தெரிந்தே மக்கள் அதே போல் தவறு செய்துள்ளனர்.அவர்கள் செய்த தவறை இப்போதுதான் உணர்ந்துள்ளார்கள்.விடிவுகாலம் விரைவில் வரும் என நம்புவோமாக.அதுவரை என்னால் வெறும் வாழ்த்துகள் என்று மட்டுமே சொல்லமுடியும்.

தங்கபாலு- இவ்வளவுநாள் மாற்றி மாற்றி அரக்கர்களுடன் கூட்டணி வைத்திருந்தால்தான் அரக்கர்களை ஒழிக்கமுடியும் என்று தவறான எண்ணத்தை அழித்து..இனி வரும் காலங்களில் தனித்தே 'சம்ஹாரம்' செய்வோம் என்று மிச்சம் மீதி உள்ளவர்கள் இந்நாளில் சபதம் ஏற்போம்.

வைகோ-அரக்கனை ஒழிக்கும் தகுதி ஏகாதிபதியான நம்மைத்தான் சாரும் எனக் கூறி..அதற்கான சான்றாக இப்பண்டிகை அமைய வாழ்த்துகள்

ராமதாஸ்- சீப்பை ஒளித்து வைத்ததால் கல்யாணம் நிற்குமா? என்பார்கள். 'சீப்' பாய் நம்மை நினைப்பவர்கள் கல்யாணத்தை நிறுத்தும் சீப்பாய் நம்மை எண்ணும் காலம் வரவேண்டும்.அதற்காக அனைத்து பட்டாசுக் கடைகளிலும் போராட்டம் நடத்தும் நாளையே..நான் தீபாவளி என்பேன்.அதுவரை வாழ்த்துகளைச் சொல்ல மாட்டேன்

சிபிஐ- தனிமரம் தோப்பாகாது என்று கூறுபவர்கள், தோப்பில் ஒவ்வொரு மரமும் தனித்தனியாய் நிற்பதை ஏன் மறந்தார்கள்.அவர்களுக்கு பாடம் புகட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை.அதுவரை வாழ்த்துகள்

சிபிஎம்-எங்களுடன் கூட்டு சேர்ந்ததால் ஜெ ஆட்சி அமைக்க முடிந்தது..எங்களுடன் கூட்டு சேர்ந்ததால் தேமுதிக உள்ளாட்சித் தேர்தல்களில் 3ஆம் இடத்தைப் பெற்றது.ஏணி நிற்கும் இடத்திலேயே நிற்கிறது..ஏறியவர்கள் மறந்துவிடுகிறார்கள்.இருந்தாலும் மீண்டும் மீண்டும் இந்த ஏணி அவர்களை ஏற அழைத்துக் கொண்டே இருக்கும்.அதற்காக வாழ்த்துகள்

தேமுதிக-தோல்வி என்பது நமக்குப் பிடிக்காத ஒரே தமிழ்ச்சொல்..ஆகவேதான் அது விடாமல் நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.கடவுள் சொன்னதால் முன்னர் ஜெ உடன் கூட்டணி வைத்தேன்..இனி கடவுளே வந்து சொன்னாலும் கூட்டணி கிடையாது.தேர்தல்களில் 10 சதவிகித வாக்குகளே பதிவாகும் நாள் வரத்தான் போகிறது.அப்போது 10 சதவிகித வாக்கு வங்கி வைத்திருக்கும் நாம் ஜெயித்து ஆட்சி அமைப்போம்.தொண்டர்கள் அதுவரை துவள வேண்டாம் என இந்நாளில் வாழ்த்துகிறேன்.  


Monday, October 24, 2011

எம்.ஜி.ஆர்., ஏன் திமுகவில் அமைச்சராகவில்லை..?!
அந்த சமயத்தில் எம்ஜிஆர் எந்தக் கட்சியிலும் இல்லை.,ஆனால் அரசியல் பற்றி சிந்தனையாளர்கள் பற்றி அடிக்கடி அந்நாள் பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரிடம் விவாதிப்பாராம்.

மூத்த இயக்குநர் திருலோகசந்தர் சமிபத்தில் ஒரு வார இதழிற்கு பேட்டிக் கொடுத்திருந்தார்.அதில் இவ்வாறு தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில்..

ஒருநாள் எம் ஜி ஆர் என்னிடம்'இப்போது இருக்கும் நிலையில், எனக்கு எந்தக் கட்சியிலும் ஈடுபாடு இல்லை.நானே ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றுள்ளேன்.அது சாத்தியமா? அது என்னால் முடியுமா? என்றார்.

அதற்கு நான்., 'முடியும்.ஆனால் அதற்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும். முதலில்  அரசியல் அறிவு வேண்டும்.பின்னால் இருந்து நம்மை முன்னுக்குத் தள்ளும் உந்துதல் சக்தி வேண்டும்.அது மனித கூட்டம்,தொண்டர் படை, கோட்பாடு, பேச்சாற்றல் ஆகும்.இப்பொழுது ஒரு கூட்டம் உங்களை தொடர ஆரம்பித்து இருக்கிறது.இது போதாது.காமராஜர்,அண்ணா போல ஒரு கட்சியைச் சார்ந்திருந்து முன்னேறுவது உசிதம்.உங்களுக்கு சரி என்று தோன்றும் அரசியல் கட்சியில் சேருங்கள்.அந்தக் கட்சியையும் உங்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.பின் நல்ல அறிமுகத்தோடு வந்து கட்சி ஆரம்பியுங்கள் அதற்குள் உங்களுக்கே பல விஷயங்கள் புரிந்துவிடும்.நீங்கள் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளை செய்ய முடியும்' என்றேன்.

பின்னாளில் அதுவே சாதனையானது.

'திராவிட முன்னேற்ற கழகம் முதன் முறையாக அரசு அமைக்கும் முயற்சியில் இருந்த போது நான், ' நீங்கள் நிச்சயம் அமைச்சராவீர்கள்' என்றேன்

அதற்கு அவர், 'ஆக மாட்டேன்..இப்போது மந்திரிப் பதவிக்காக போட்டி நடக்கப் போகிறது.அதில் கலந்துக் கொண்டு அனைவரின் அதிருப்தியையும்,விரோதத்தையும் பங்கிட்டுக் கொள்ள நான் விரும்பவில்லை.ஆர்வக் கோளாறால் பல தவறுகள் நடக்கலாம்.அதில் நானும் அங்கமாக இருக்க விரும்பவில்லை' என்றார்.

பின்னர் எம் ஜி ஆரே...வெளியே வந்து தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வரானது தனிக்கதை.

இப்படி பேட்டிக் கொடுத்த திருலோகசந்தர் எம் ஜி.ஆரின் நண்பர்..அவரை வைத்து சில படங்களை இயக்கியுள்ளார்.

Sunday, October 23, 2011

உள்ளாட்சித் தேர்தல்கள்...
மிகவும் கடினமான உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன.இப்போதெல்லாம் தேர்தல் ஆணையம் மீது பாராபட்சமாக இருப்பதாக புகார்கள் வருகின்றன.அதை உண்மையாய் இருக்கக்கூடுமா என்ற கோணத்தில் பார்த்தால்..அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே.மேலும் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும்.திமுக ஆளும் கட்சியாய் இருந்த போதும் இதுதான் நடந்தது என்று கலைஞர் கூறியதிலிருந்து...பெரிய தவறுகள் ஏதும் இத் தேர்தலில் நடக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.


எது எப்படியாயினும் இவ்வளவு பெரிய தேர்தலை பெரிய அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் நடத்தி முடித்த மாநில தேர்தல் ஆணயத்திற்கு நம் வாழ்த்துகள்.

இந்நிலையில் மாநகராட்சி நகராட்சி,நகர பஞ்சாயத்து,மாவட்ட பஞ்சாயத்து,பஞ்சாயத்து யூனியன் என பலநிலையில் தேர்தல்கள் நடந்துள்ளன.

உண்மையாக, இத் தேர்தல்கள் கட்சிகள் சார்பில் நடக்கக்கூடாது.அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அங்கு சமூக பணி ஆற்றுபவர்கள்,சமுக நல அமைப்புகள், பொதுத் தொண்டில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆகியவர்கள் தான் இது போன்ற தேர்தல்களில் , கூடியவரை போட்டியைத் தவிர்த்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

ஆனால்..இக்காலத்தில், கல்லூரி மாணவர்கள் தேர்தலிலிருந்து..தொழிற்சங்கத் தேர்தல் என எல்லாவற்றிலும் அரசியல் நுழைந்து விட்டப் பிறகு...இனித் தேர்தல் என்றாலே அரசியல்கள் தான் என்னும் நிலை உருவாகி விட்டது.

அந்தக் காரணங்களாலேயே..வன்மம், அட்டூழியம்,அடிதடி, கொலை போன்ற சம்பவங்கள் எல்லாம் ஏற்பட்டு விடுகின்றன.

இந்நிலையில், தேர்ந்தெடுக்கப் பட்ட அனைத்து உறுப்பினர்களும்..கட்சிப் பேதம் பார்க்காது..தங்கள் பகுதி நலனிலேயே குறியாக இருந்தால்..நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியைக் காணலாம்.உண்மையான பஞ்சாயத் ராஜ் அமையும்.

மக்கள் நலன் ஏற்படும் எனில் கட்சி பேதத்தை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால்தான்...இத் தேர்தல்களுக்கு மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவானது தவறில்லை என்ற நிலை ஏற்படும்.

இல்லையேல்..இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் வழக்கம் போல ஏமாற்ற பட்டவர்களாகவே ஆகின்றனர்.

Saturday, October 22, 2011

நில அபகரிப்பு (சிறுகதை)


(வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி!)

'நாளைக்கு வாசக்கால் வைக்கறோம்..விட்டு ஓனருங்கமுறையிலே நீங்க அம்மாவையும் அழைச்சுண்டு ஒம்பது மணிக்கு வந்துடுங்க' என்றான் மேஸ்திரி கண்ணாயிரம்.
'என்ன..பர்வதம்..நாளைக்கு காலையிலே போகமுடியுமா' - ஈஸ்வரன்
'நல்லாயிருக்கு..நீங்க கேக்கறது..நம்ப எஞ்சிய காலத்தை இனிமே அங்கத்தான் கழிக்கப்போறோம்..நம்ம பிள்ளைங்க
..அப்பறம் பேரப்புள்ளைங்க எல்லாம் அங்கேதான் வாழப்போறாங்க..அதனாலே ஸாஸ்திரப்படி எல்லாம் செய்யணும்.
நாம கண்டிப்பா போகலாம்'என்றவள் ..மேஸ்திரியைப் பார்த்து'என்ன ..மேஸ்திரி நிலைப்படி வைக்கறதுக்கு முன்னாலே கீழே ஏதேதோ போடணும்னு சொல்வாங்களே..'என்றாள்.
'அந்த கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம்மா...இந்த கண்ணாயிரம் எல்லாத்தையும் ஒயிங்கா செஞ்சுடுவான்.
நீங்க தங்கக்காசு இருந்தா மட்டும் ஒன்னு கொடுங்க..அட..அரை கிராம் கூட போதும்..'பர்வதம் ஈஸ்வரனின் முகத்தைப்பார்க்க..'அட..இல்லேன்னாலும் பரவாயில்லைம்மா..நானே போட்டுக்கறேன்..என் வூடு மாதிரி நினைச்சுத்தாம்மா கட்டறேன்' மேஸ்திரி கிளம்ப... ஈஸ்வரனின் முன்னால் ஒரு கொசுவத்திச் சுருள்.
**** ***** *****
கடந்த சில மாதங்களாகவே ஈஸ்வரனுக்கு..தனக்கென்று ஒரு வீடு இல்லையே..இப்போதெல்லாம் வங்கிகள் வரிந்துக்கட்டிக் கொண்டு வீடுகட்ட லோன் கொடுக்கும்போது..நாமும் நமக்கேத்தாற்போல ஒரு வீடு கட்டிக் கொண்டால் என்ன? என்ற எண்ணம் இருந்தது.
ஒரு நாள் இரவு சாப்பாடு முடிந்ததும்..அந்த புறாக்கூண்டுப் போன்ற அவர் ஃப்ளாட்டில்..சிகப்பு ரெக்சின் கிழிந்து ..ஸ்பிரிங்க் கம்பிகளும்,தேங்காய் நாரும் பிதுங்கிக்கொண்டிருந்த ஷோஃபாவில் அமர்ந்து கோலங்கள் பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் தன் ஆசையைத் தெரிவித்தார்.
உள்ளே படுக்கும் அறை கம் படிக்கும் அறையில் கணினியில்.. இண்டர்னெட்டில் மேய்ந்துக் கொண்டிருந்த ஈஸ்வரனின் மகன் காதுகளில் இது விழ..அவனும் கணினியை மறந்து அப்பாவிடம் வந்தான்.
'இதோ பாருங்க..நாம ஏதோ வாடகைக் கொடுக்கிறோம்..இந்த புறாக் கூண்டு ஃப்ளாட்லேயே இருக்கோம்..
வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்கோம்...வாசக்கதவைத் திறந்தா ..பக்கத்துவீட்டு ஹால் தெரியுது.
நம்ம வீட்டு பரணில் எந்த அடசலும் இல்லை...பக்கத்துவீட்டுக்காரன் அடசலை வைச்சிருக்கான்.அங்கிருந்து தினமும் எலிகள் வந்து வாக் பண்ணிட்டு போறது நம்ம் வீட்டில...வாசல்ல ஒரு பண்டிகை நாள்லயோ..விசேஷத்திற்கோ ஒரு கோலம் கூட போட முடியவில்லை...கொஞ்சம் பெரிய கோலம்னா அடுத்தவீட்டுக்காரன் வாசல் வந்துடுது.
அதனால நமக்குனு வாங்கறது கண்டிப்பா தனி வீடாத்தான் இருக்கணும்.இது போல ஃப்ளாட் எல்லாம் வேண்டாம்'என்றாள் பர்வதம்.
ஆமாம் ப்பா ஒரு தனி வீடு தான் வேண்டும்..எனக்குனு தனி படிக்கிற ரூம்..அதிலேயே கம்பூட்டர் வைச்சுப்பேன்..ஒரு கட்டில் வாங்கி போட்டுடுட்டா.. அங்கயே படித்துவிட்டு படுத்துப்பேன் ' என்றான் மகன் பரமசிவம்.
ஹாஸ்டலில் இருக்கிற பசங்க ரூம்க்கு அடிககடி போய்ட்டு வர்ரான் போலிருக்கு.தனக்கும் ஹோட்டல் ரூம் போல கேட்கிறான்..என்று ஈஸ்வரன் நினைத்தார்.ஆனாலும் கிண்டலாக,"தனி வீடுன்னா அட்டாச்டு பாத்ரூம் இருக்காதே"என்றார் மகனிடம்.
"தனிவீட்டிலேயும் ..இதுபோல வைச்சுக்கலாம்பா..நீங்க இன்னும் கிராமத்துபக்கம் இருக்காப்போல அரைக்கிலோ
மீட்டர் தள்ளிதான் கக்கூஸ் இருக்கணும் என்று நினைக்கிறதே தப்பு." என்றான் மகன்.
"பர்வதம் நீயும் பரமசிவமும் சொல்றதுவாஸ்தவம் தான். ஆனா இன்னிக்கி இருக்கிற விலைவாசிக்கு தனி வீடுங்கிறது நமக்கு குதிரைக்கொம்பு...அதனால இதோட கொஞ்சம் வசதி அதிகமாக இருக்கிற ஃப்ளாட்டைப்ப்பார்க்கலாம்."
முடியாதுன்னா முடியாது..வேணும்னா நாங்க இந்த ஃப்ளாட்டிலே இருந்திடறோம்"என்று அவள்"என்னடா சொல்ற பரமசிவம்" என மகனை துணைக்கு இழுத்துக்கொண்டாள்.
"ஆமாம்மா.நீ சொல்வது சரி தான் " என்றான் மகன்.
ஈஸ்வரனுக்கு கோபம் வர "இனி இந்த டாபிக்கே வேண்டாம்" என்று கூறிவிட்டு டிவீயை பார்க்கலானார்.
டீவியிலும் அந்த சீரியலின் கதாநாயகி குற்றால அ ருவி போல் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் பர்வதம் தன் மௌன விரதத்தை ஆரம்பித்தாள்.அந்தந்த நேரத்துக்கு காபி,டிபன் என மௌனமாகவே
வந்துக்கொண்டிருந்தது.
ஓரிரு நாள் கழிந்தது.பர்வதம் தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளவில்லை.
இந்த விஷயத்தை மெதுவாக..அவர் தன் அலுவலக நண்பனிடம் சொல்ல அவன்'ஈஸ்வரன்..உங்க மனைவி சொல்றது..உண்மைதானே!நாந்தான் மூளை இல்லாமல் ஒரு ஃப்ளாட்டை வாங்கிட்டு திண்டாடிக்கிட்டு இருக்கேன்.பக்கத்து வீட்ல ஒருத்தன் குளிச்சா அந்த தண்ணீ சத்தம் எங்க ஃப்ளாட் ல கேட்குது.அவ்வளவு ஏன் யாராவது நண்பர்கள் வீட்டுக்கு வந்தாக்கூட அவங்க முன்னாலே வீட்ல டாய்லட் யூஸ் பண்றதுக்குக் கூட கூச்சமா இருக்கு.'என்றான்.
தனி வீடு கட்டணும்னா இப்ப முடியுமா?'
'ஏன் முடியாது..சிடியிலே நரக வாழ்க்கைத்தான்.சிடியை விட்டு சற்று தள்ளிப்போனால் கிரவுண்ட் 2லட்சத்திலே வாங்கிடலாம்"
ஈஸ்வரன் மனம் கணக்குப் போட்டது.கையில் உள்ள சேமிப்பு..பர்வதத்தின் நகைகள் எல்லாம் சேர்த்தால் 2லட்சம் தேறும்..என்று தோன்றியது.நண்பனின் குரல்..அவரை தன்னிலைக்கு கொண்டு வந்தது.
'என்ன சொல்லுங்க..எனக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் தரகன் ஒருவன் இருக்கிறான்.சொல்லிவிடட்டுமா"
சரி என தலை ஆட்டினார்.ஈஸ்வரன்.
அடுத்த நாள் முதல் .. 'தரகர் வரேன்னு சொல்லியிருக்கார்..கிளம்புங்கன்னு விடுமுறை நாட்களில் இடங்களை பார்க்க ஆரம்பித்தனர் ஈஸ்வரன் குடும்பத்தினர்.
அன்றும்..அப்படித்தான்..ஒரு புது தரகர் வந்தார்.
நெற்றியில் சந்தனம்..அதன் கீழே குங்குமப்பொட்டு..சற்று சின்னாதான பிடித்தத்துடன் ஒரு சட்டை போட்டிருந்தார்.லுங்கி கட்டி இருந்தார்.சட்டை சிறியதாக இருந்ததால்..அவரின் மேடிட்ட வயிறு தெரிந்தது.ஈஸ்வரனுக்கு அவரைப் பார்த்ததும்..ஏனோ..கூவாகம் நினைவு வந்தது.
தரகர் சைக்கிளில் செல்ல..இவர்கள் ஆட்டோவில் பின் தொடர்ந்தனர்.
'இதோ பாருப்பா..பார்க்கிற இடத்திலே..கோவில்,பள்ளிக்கூடம்..பேங்க்,சூப்பர் மார்க்கெட்,மாவுமில்ல் எல்லாம் இருக்கணும்'என்றாள் பர்வதம்.
தரகர் இதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.
அன்றும் அவர் காட்டிய இடம் திருப்தி இல்லை.
அடுத்த வாரம்..ஒரு கிராமம் போன்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்.அந்த இடத்தைப் பார்த்ததுமே ஈஸ்வனுக்கு பிடித்துப்போயிற்று.இவ்வளவு அழகான கிராமம்..சென்னைக்கு அருகிலா..ஈஸ்வரன் வியந்தார்.
இங்கொன்றும்..அங்கொன்றுமாக வீடுகள் அப்போதுதான் முளைத்தது போல இருந்தது.வெண்மை நிற கற்கள்
அந்தந்த மனையின் அளவிற்கேற்ப நடப்பட்டிருந்தது.சில மனைகளில் புதர்களும்..செடிகளும் மண்டிக் கிடந்தது.
இன்னும் அந்த ஏரியாவிற்கு ஆர்காட் வீராசாமி வரவில்லை...அதாங்க மின்சாரம்.
'எல்லா மனையும் வித்துப்போச்சு..இன்னும் அஞ்சு வருஷத்திலே இந்த இடம் இன்னொரு தி.நகராய் ஆகிடும்'என்ற தரகர் ஒரு வெற்றிடத்தைக்காட்டி'அங்கே பஸ் ஸ்டாண்ட் வருது..பக்கத்திலே சூப்பர் மார்க்கட் சாங்க்ஷன் ஆகிடுச்சு'என்று சொன்னவாறு'ஒரு வேப்பமர நிழலை ஒட்டியவாறு இருந்த மனையைக்காட்டி'இதுதான் உங்களுடையது'என்றார்.
அவர்களுக்கு அந்த இடம் பிடித்ததா ..இல்லையா ..என்பதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல்..அவர்.. அந்த இடத்தை பத்திரம் போட்டு அவர்கள் பெயரில் பதிவு செய்திடுவார் போல இருந்தது.
ஈஸ்வரனுக்கு அந்த இடம் பிடித்திருந்ததோ..இல்லையோ..அந்த வேப்ப மரம் பிடித்திருந்தது.அதை அடுத்து சற்று தள்ளி இருந்த அரசமரம் பிடித்திருந்தது.வேப்பமரத்தில் ஓடி..பிடித்து விளையாடும் அணில்களைப் பிடித்திருந்தது.பின்னங்கால்களை ஊன்றிக்கொண்டு வேப்பம் பழத்தை கொறித்துக்கொண்டிருந்த அணில்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.மரத்தில் அமர்ந்துக்கொண்டு விசிலடித்த பறவைகளைப் பிடித்திருந்தது.மரத்தில் இருந்த பறவைகளீன் கூடுகளைப் பிடித்திருந்தது.சென்னை நகரிலிருந்து வெளியேறியிருந்த குருவிகளைப் பார்க்க முடிந்தது.
அவருக்கு..மனசுக்குள் மழை பெய்தது.திடீரென வெண்மேகங்கள் சூரியனை மறைத்தன.யானை போல தோற்றம் அளித்த மேகம் ஒன்று கிழக்கு நோக்கி நகர்ந்தது.தீடீரென அது உரு மாற்றம் அடைந்து சிறு சிறு மேகங்களாக மாறின.
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்..மயில் குயில் ஆனதடி என்ற திருப்பாவை ஈஸ்வரனுக்கு ஞாபகம் வந்தது.இயற்கையை ரசிக்க வேண்டுமென்றால்..அதற்கென்று தனி உணர்வு வேண்டும்.இயற்கையின் படைப்புகளை மனிதர்கள் எவ்வளவு தூரம் தன் சுயநலத்திற்கு அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன் தோள்களை யாரோ உலுக்குவதை உணர்ந்தவர்...தன் நிலைக்கு வந்தார்.'என்னங்க இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.இதையே வாங்கிடலாம்'என்றாள் பர்வதம்.
அதற்குள்..தரகர்..ஓடிப்போய்..அங்கு கட்டிக்கொண்டிருந்த ஒரு வீட்டுக் கிணற்றிலிருந்து ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.
'தண்ணீ குடிச்சுப் பாருங்க..கல்கண்டு போல இருக்கும்.பத்து அடியிலேயே தண்ணிர் இருக்கு..'என சொம்பை பர்வதத்திடம் கொடுத்தார்.அவள் தண்ணீரைக் குடித்துப்பார்த்துவிட்டு..'ரொம்ப நல்லாயிருக்கு..'என சொம்பை ஈஸ்வரனிடம் கொடுத்தாள்.சுவையாகவே இருந்தது.அதற்குள் அவரது மகன் தெரு நாய் இரண்டுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.அவை அவனிடம் வாலாட்டிக்கொண்டிருந்தன.
இந்த இடம் இவர்களுக்கு பிடித்துப் போயிற்று என உணர்ந்துக்கொண்டார் தரகர்.
'என்னங்க முடிச்ச்டலாமா?சென்னை முழுக்க தேடினாலும் இப்படி ஒரு இடம் கிடைக்காது...'என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.
மரத்தில் ஏதோ பறவை கிக்கி..கிக்கி என கூவிக்கொண்டிருந்தது.மரங்கொத்தியாய் இருக்குமோ..இல்லை குயிலாகத்தான் இருக்கக்கூடும்..ஈஸ்வரனுக்கு சரியாகத்தெரியவில்லை.ஆனால் அதன் கிக்கி..கிக்கி..ஓசை..இந்த இடத்தை முடித்து விடு..இந்த இடத்தை முடித்துவிடு..என அவர் காதில் ஒலித்தது.
அந்த இடம்..சுவையான நீர்,காற்று வசதி,அப்புறம்..அந்த அரச மரம்,வேப்பமரம்..அதில் வாழும் பறவைகள்..அவற்றின் சுதந்திரத்தன்மை..இங்கும் அங்கும் அவை பறக்கும் போது ஏற்பட்ட இறக்கைகளின் சப்தம்..குக்கூ என கூவும் ஓசை...அந்த இடம் அடுத்த சில தினங்களில் அவருக்கு சொந்தமானது.வீடுகட்டும் வேலை தொடங்கியது.தாராளமாக வங்கியில் கடன் கிடைத்தது.திருப்பிச் செலுத்துவது பற்றி வாங்கும்போது யாருக்கு கவலை இருக்கிறது.
*** **** ****
வீடு பாதி வேலை முடிந்ததும் ...சம்பிரதாயப்படி கிரகப்பிரவேசம் செய்துவிட்டார் ஈஸ்வரன்.கிரகப்பிரவேசத்தன்று விருந்து நண்பர்களுக்கு மட்டுமல்ல ...பறவைகளுக்கும் கூடத்தான்....அவை பயந்து பய்ந்து இலை அருகே வந்து
கொத்தி எடுத்துக்கொண்டு போய் சாப்பிட்டன.
ஒருவருடம் முடிந்துவிட்டது.வீடு முழுமை பெற்று சாவி அவரிடம் தரப்பட்டது.
ஈஸ்வரன் தன் குடும்பத்தினருடன் அந்த புது வீட்டுக்கு குடித்தனம் போக தீர்மானித்தார்.லாரியை வரவழைத்து சாமான்களை எடுத்துப்போக ஏற்பாடு செய்தார்.
அவரும் மனைவியும்,மகனும் முன்னதாக ஆட்டோவில் ஏறினர்.
வேப்பமரத்தை அடையாளம் வைத்து வீட்டை தேடியவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.அது வெட்டப்பட்டு இருந்த இடம் தெரியவில்லை.சற்று தள்ளி இருந்த அரசமரமும் வெட்டப்பட்டு அதில் வேறொருவர் வீடு கட்டிக்கொண்டிருந்தார்.
ஈஸ்வரனுக்கு திடீரென்று ஒரு குற்ற உணர்ச்சி..
அந்த அணில்களெல்லாம் இப்ப எங்கே போயிற்று?
அந்த மரத்தில் கூடு கட்டி வாழ்ந்துகொண்டிருந்த பலதரப்பட்ட பறவைகள் இப்போது எங்கே குடி போயிருக்கும்.
அந்த சின்னஞ்சிறு குக்கூ குருவிகள் எங்கே..அவற்றின் கதி என்ன?
அவ்வளவு பறவைகளின் கூடுகளையும் அழித்துவிட்டு நாம் வாழ நமக்கு ஒரு கூடா? அவற்றை கலைக்க நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
நாம் பேசத்தெரிந்தவர்கள் என்பதற்காக...பேசத்தெரியாத அந்த வாயில்லாத ஜீவன்களை விரட்டிவிட்டு......
ஈஸ்வரனுக்கு கண்களில் கண்ணீர் கொப்பளித்தது..
சொந்த வீட்டிற்கு வந்த மகிழ்ச்சியால் வந்த ஆனந்தக் கண்ணீர் அல்ல அது.

வாய் விட்டு சிரிங்க..
1)நம் முன்னோர்கள் சொன்ன கருத்தெல்லாம் ஆணித்தரமாய் இருக்கும்..
 ஆமாம்..அதனாலேதானே அவங்க எல்லாம் எழுத்தாணியாலே எழுதினாங்க.

2)'கம்பல்சரி' ன்னா என்ன
 உச்ச நீதி மன்றம் சமச்சீர் கல்வியை கம்பெல் பண்ணியதாலே தானே முதல்வர் 'சரி'ன்னார்.அதுதான் கம்பல்சரிங்கறது

3)அண்ணாசாலையிலே ஒரு கார் மணிக்கு 150கிலோ மீட்டர் வேகத்திலே போனால் 15 நிமிடங்களில் எவ்வளவு தூரம் போகும்
  100 மீட்டர்
  உனக்குக் கணக்கே தெரியலையே
 உங்களுக்குத்தான் அண்ணாசலை டிராஃபிக் பற்றி தெரியலை

4)தலைவர் பெயர்ல நில அபகரிப்பு வழக்கு பொய்யானாதுங்கறாங்களே..ஏன்?
 செவ்வாய் கிரகத்திலே இருக்கிற நிலத்தை அபகரிச்சதா வழக்குப் போட்டிருக்காங்களே

5)தலைவர் வரிகளை உயர்த்துவது தெரியாம உயர்த்துவார்னு எப்படி சொல்ற
 அரசியலுக்கு வரதுக்கு முன்னால பேருந்துக்கள்ல தெரியாம நைசா பிக் பாக்கெட் அடிச்சுக்கிட்டுத்தானே இருந்தார்

6)தலைவர் பாஸ் பாஸ்ன்னு கத்திக்கிட்டு இருக்காரே எண்..
அவருக்கு பெயில் இல்லைன்னு கோர்ட்ல சொல்லிட்டாங்களாம்


கருணாநிதியிடம் டிபாசிட் இழந்த அண்ணாதுரை
பனப்பாக்கம் பேரூராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டவர் பெயர் கருணாநிதி.திமுக சார்பில் போட்டியிட்டவர் பெயர் அண்ணாதுரை.

அதிமுக..கருணாநிதி 3893 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால் அண்ணாதுரையோ நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.கருணாநிதிக்கு அடுத்து சுயேச்சை வேட்பாளர் சந்தானம் என்பவர் 1139 வாக்குகளும்.அடுத்து தேமுதிக ஏகாம்பரம் 930 வாக்குகளும் பெற்றனர்.திமுக வைச் சேர்ந்த அண்ணாதுரை 486 வாக்குகள் மட்டுமே பெற்றதுடன்..கருணாநிதியிடம் டிபாசிட் தொகை யையும் இழந்தார்


Friday, October 21, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (21-10-11)
புற்றீசல்கள் போல் பரவி வரும் சேனல்கள் வரிசையில் புதிய வரவு கிருஷ்ணா டீவி.சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி அஸ்ஸோசியேட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணசாமியே இதன் பிரோமோட்டர்.'ஆன்மீகம் மற்ரும் இந்தியாவின் புராதனக் கலைகளுக்கு கிருஷ்ணா டீவி முக்கியத்துவம் அளிக்கும்'என்கிறார் அவர்.சென்னையைத் தவிர மாநிலத்தின் மற்ற இடங்களில் இந்த தீவி தெரிகிறது.
இவ்வளவு சொல்லிவிட்டு முக்கியமான ஒரு செய்தியை சொல்லாவிட்டால் எப்படி..
இந்த டீவியின் பங்குதாரர் சுப்பிரமணிய சுவாமி ஆகும்

2)உள்ளாட்சித் தேர்தல்களில்..மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றுள்ளது. 'பெருக்கத்து வேண்டும் பணிவு'  என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட்டால் நல்லது.

3)திருக்குறளில் பயன்படுத்தப் படாத ஒரே உயிர் எழுத்து 'ஔ' ஆகும்.இடம் பெற்றுள்ள இரு மலர்கள்..அனிச்ச மலரும், குவளை மலரும் ஆகும்.

4)எழுத்தாளர் ராஜேஷ் குமார் இதுவரை 1440 நாவல்கள் எழுதியுள்ளார்.அவற்றில் 1250 க்கு மட்டும் அவரிடம் பிரதிகள் உள்ளனவாம்.190 நாவல்களுக்கு கைவசம் பிரதிகள் இல்லையாம்.

5)இதுவரை கமல்ஹாசன் நடித்துள்ள 7 படங்கள் சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவின் கீழ் ஆஸ்கர் விருதிற்காக கலந்துக் கொண்டிருக்கின்றன.இந்தியாவில் வேறெந்த நடிகரின் படமும் இத்தனை முறை கலந்துல் கொண்டதில்லை.

6) பலஹீனமானவர்கள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம்.சைனாவில் மனிதநேயம் செத்ததைக் காட்டுகிறது இந்த விடீயோ.இரண்டு வயது குழந்தை மீது கார் ஏறுகிறது..இரண்டு கார்கள்.ஆனால் அவர்களும் சரி..பாதசாரிகளும் சரி (கடந்து சென்றவர்கள் 18  பேர்)காப்பாற்ற முயலவில்லை.கடைசியில் குப்பைப் பொறுக்கும் ஒருவர் அக்குழந்தையை ஒரத்தில் கொண்டுவந்து போட்டு உதவிக்கு குரல் கொடுத்தார்.குழந்தை ஆஸ்பத்திரிக்கு வருகையிலேயேமூளைச்சாவு அடைந்துவிட்டது.வெள்ளியன்று இறந்துவிட்டது. அக்டோபர் 13 ..சைனாவிற்கு வெட்கப்பட வேண்டிய நாள்.

Thursday, October 20, 2011

சிபிஐ கண்டெடுத்த தங்கச் சுரங்கம்..
சிபிஐ ரெய்டில் கண்டுக்கப்பட்டவைகளின் லிஸ்ட் இது..

யார் இல்லத்தில் என்கிறீர்களா?

சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டியின் இல்லத்தில்தான்..இந்தியா டுடே இதை..அலிபாபாவின் 40 திருடர்கள் பதுக்கி வைத்திருந்த புதையல் போல இருக்கிறது என்றுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் அவர்கள் கண்டதும்..கையகலப்படுத்தியுமான லிஸ்ட்

15 கிலோ தங்கத்தாலானவைரம் பதித்த சிம்மாசனம் மதிப்பு சுமார் 2.2 கோடிகள்

தட்டு, பாத்திரம்.ஸ்பூன்,கத்தி எல்லாம் தங்கத்தில் மதிப்பு 20.87 லட்சங்கள்

கோப்பை, ஆஷ்ட்ரே,லைட்டர் எல்லாம் தங்கத்தில்

தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு அடி உயர பாலாஜி சிலை..ஆறு அங்குலம் உயர பத்மாவதி அம்மாள் சிலை.100 க்கு 50 அடி அகல அறையின் பிற தங்க சிலைகள்

ஒரு கிலோ எடையுள்ள தங்க மணி

45 நெக்லஸ்,610 தங்க வளையல்கள்(வைரம் பதித்த 35 வளையல்)300 ஜோடி காதணி (வைரம் பதித்தது 75)1200 தங்க மோதிரம்.(வைரம் பதித்தது 100)

ஏராளமான பிரேஸ்லெட்,பழங்கால நகைகள்,பிளாட்டினம் நகைகள் (மதிப்பு தெரிவவில்லை இன்னும்)

30 கிலோ எடையுள்ள தங்க பாத்திரம்

பைகளில் வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரொக்கம்

ரோல்ஸ் ராய்ஸ்,ரேஞ்சோவர்,லேண்ட் ரோவர்,மெர்சிடஸ் பென்ஸ்,ஆடி, பி.எம்.டபிள்யூ,ஒரு டஜன் ஸ்கார்பியோக்கள்,பொலேரோக்கள் முதலிய கார்கள்

பெல்407 ரக ஹெலிகாப்டர்

அவரது சொந்த கணிப்பின் படி ஒரு நாள் வருமானம் 5 கோடியாம்

ரெட்டியின் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கர்நாடகாவின் எட்டுத் துறைமுகங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட சட்ட விரோத இரும்புத் தாது 2007-2010 வரை 29.8 மில்லியன் டன்.இதன் மதிப்பு 12228 கோடி

70 எம் எம் திரையும் கொண்ட உள் அரங்க நீச்சல் குளம்.எல்லா வசதிகளும் கொண்ட பார்.ஹோம் தியேட்டர் கொண்ட 3 மாடி வீடு மற்றும் அலுவலகம்

வெடிகுண்டு தாக்குதல் சமயத்தில் பதுங்கிக் கொள்வதற்கு இடமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.வீட்டுக்கு நேரே ஹெலிகாப்டர் தளம்.வீட்டிற்குள்ளும் ஒன்று.வீட்டைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு.பங்களாவிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்தே சி சி டீ வி கண்காணிப்பு

அண்டா காகசம், அபூர்வா ஹூகும்..திறந்திடு சீசேம்..

டிஸ்கி- ஊழலை(??!!) எதிர்த்து அத்வானி ரத யாத்திரை சென்றுக் கொண்டிருக்கிறார்..

Wednesday, October 19, 2011

'ஜெ' வழக்கு....முழுவிவரம்..
1991 லிருந்து 1996 வரை ஜெ ஆட்சி தமிழகத்தில்.பின் 1996ல் கலைஞர் கையில் ஆட்சி வந்தது.

அப்போது ஜெ மீது மட்டும்10க்கும்  மேற்பட்ட வழக்குகள்.அதில் ஒன்று கலர் டீவி வாங்கியதில் ஊழல் என்ற வழக்கு.இதில் ஜெ 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் நாள்கைது செய்யப்பட்டார்.1997 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள் ஜாமீனில் விடப்பட்டார்.

இப்போதுள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் சுருக்கம்.ஜெ முதல்வராய் இருக்கையில்(1991-96) ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாய் பெற்றதாகக் கூறியிருந்தார்.ஆனால் அவருக்கு 66.65 கோடி சொத்துகள் இருந்ததாக சிபிசியைடி போலீசார் குற்றம் சாட்டினர்.இதை லஞ்ச ஒழிப்புப் போலீசும் உறுதி செய்தது.இதன் பேரிலேயே சசிகலா,சுதாகர்,இளவரசி ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

வருமானத்திற்குப்  புறம்பான சொத்துக்களாக பண்ணை வீடுகள்,பங்களாக்கள்,விவசாய நிலங்கள்,ஹைதராபாத் பண்ணை நிலம்,நீலகிரி டீ எஸ்டேட்,நகைகள், வங்கியில் இருந்த பணம்,முதலீடுகள் ஆகியவை வழக்கில் சொல்லப்பட்டுள்ளன.

1997 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள்..இவர்களுக்கெல்லாம் சொந்தமான 77 அசையாச் சொத்துக்களையும்,1000 ஏக்கர் பாசன நிலங்களையும் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.

 பின் 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், வழக்குகளில் ஜெ தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம் என வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றச் சொல்லி திமுக வின் பொதுச் செயலர் அன்பழகன் மனுதாக்கல் செய்தார்,வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கிற்காக ஜெ ஒரு முறை கூட ஆஜராகாது வாய்தா வாங்கி வந்தார்,உச்சநீதி மன்றம் ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டுவிட்டது.

டிஸ்கி- சங்கரராமன் கொலை வழக்கில் ஜெ ஆட்சிக்கு வந்ததும்...வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என ஜெயேந்திரர் மனுதாக்கல் செய்ய வழக்கு புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது.இதில் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கை மாற்றச் சொன்னார்.
ஜெ யின் இந்த வழக்கில் வழக்குத் தொடர்ந்தவர் மாநிலத்தில் நீதி கிடைக்காது என வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றச்சொல்லி பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

இதற்குக் காரணம்..ஜெ வழக்கில் தலையிடுவார்..நீதி கிடைக்காது என்பதாக இருந்தால்..

நமக்குப் புரியாதது..

நீதிமன்ற நடவடிக்கைகளில் முதல்வர் தலையீடு இருக்குமா..
ஆட்சி மாறினால் நீதி கிடைக்காது என்பது நீதி மன்றத்தையே அவமதித்தது போல ஆகாதா?

Tuesday, October 18, 2011

தேமுதிக உடைகிறது..????? 
அரசியலில் ஒரு கட்சியைக் கவிழ்க்க வேறொரு கட்சி ஏதேனும் வதந்தியை பரப்பி விடுவது வழக்கம்.இப்போது வேகமாக பரவி வரும் வதந்தி..தேமுதிக அவைத்தலைவரும்,கட்சியின் மூத்த அரசியல்வாதியும் ஆன பண்ருட்டி ராமசந்திரன் 10 கட்சி எம் எல் ஏ க்களுடன் அதிமுகவிற்கு தாவப்போவதாகக் கூறப்படுவது..

உள்ளாட்சித் தேர்தலில் ஜெ தேமுதிக வை முற்றிலும் புறக்கணித்தார்.சட்டசபைத் தேர்தலில் அதிமுக வுடன் விஜய்காந்த் கூட்டணி அமைத்ததற்கு முக்கியக் காரணம் பண்ருட்டியார் என்பதால்...இம்முறை அதிமுக தங்களைப் புறக்கணித்ததால் கோபத்தை பண்ருட்டியார் மேல் காட்டினாராம் கேப்டன்.ஆகவே தான் உள்ளாட்சித் தேர்தலில் பண்ருட்டியாரை பிரச்சாரத்திற்குக் கூட அழைக்கவில்லையாம்

இந்நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பண்ருட்டியாரை அதிமுகவிற்கு இழுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மொத்தம் தேமுதிகவில் 29 எம் எல் ஏ க்கள் உள்ளனர்.10 பேர் இதில் அணி மாறினால் கட்சித் தாவல் திட்டம் பாயாது.மேலும் தேமுதிக வில் அப்போது 19 எம் எல் ஏ க்களே மிஞ்சி இருப்பர்.எதிர்க்கட்சி அந்தஸ்தை அது இழக்கும்.

தேமுதிக வை எதிர்கட்சியாய் வைத்து அரசியல் பண்ணுவதோடு திமுக வே எதிர்க்கட்சியாய் இருக்கட்டும் என முதல்வர் நினைத்திருக்கலாம்.உண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளை கழட்டிவிட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
தன் ஆட்சியின் 100 வது நாள் நிகழ்ச்சியில் விஜய்காந்த் கலந்துக் கொள்ளாததும்...தன் கட்சியின் ஆட்சி பற்றி  6 மாதம் கழித்து விமரிசிப்பதாகவும் சொன்னது வேறு  ஜெ விற்கு அதிருப்தியைத் தந்துள்ளதாம்

அரசியலில் எது வேணும்னாலும் நடக்கலாம்.


Monday, October 17, 2011

திட்டியவரை என்ன செய்வது...
நபிகள் நாயகத்தின் நெருங்கிய நண்பர் ஹலரத் அபூபக்கர்.நபிகளிடம் புதிய தோழராக ரபியா அஸ்லமி அவர்கள் சேர்ந்தார்கள்.

அபூபக்கர் அவர்களுக்கும்,ரபியா அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கோபத்தில் தன்னை மறந்து அபூபக்கர், ரபியா அவர்களைத் திட்டித் தீர்த்து விட்டார்.

ரபியா அவர்கள் வருத்தம் அடைந்தார்.அதை அறிந்த அபூபக்கர், 'நீர் , நான்  உம்மைத் திட்டியது போல...என்னைத் திட்டிவிடும்' என்றார்.

ரபியா அதற்கு மறுத்து விட்டார்.

'நீர் என்னைத் திட்டிவிடும், இல்லையேல் பெருமானார் அவர்களிடம் உம்மைப் பற்றி குறை சொல்வேன்' என்றார் அபூபக்கர்.

ரபியா அவர்கள் ஏதும் சொல்லாது, அவ்விடம் விட்டு அகன்றார்.

'கோபத்தில் என்னை மறந்து, என் வாயில் தவறான சொற்கள் வந்து அவரைத் திட்டிவிட்டேனே! இது குறித்துப் பெருமானார் அவர்களிடம் சொல்லி, ரபியா அவர்களைத் தன்னை திட்டச் செய்ய வேண்டும்..வேறு வழியில்லை' என உள்ளம் நொந்து புலம்பினார் அபூபக்கர்.

இதையெல்லாம் அறிந்த உறவினர்கள் சிலர் ரபியா வை அணுகி' அபுபக்கர் உங்களைத் திட்டியதும் அல்லாது பெருமானார் அவர்களிடம் முறையீடு செய்யப் போகிறாராமே!' என்றனர்.

அதற்கு ரபியா அவர்கள்,'அபூபக்கர் கோபம் கொண்டால், பெருமானார் அவர்களும் கோபம் கொள்வார்.பெருமானார் அவர்கள் கோபம் கொண்டால் அல்லாவும் கோபிப்பார்.நான் நாசமாவதைத் தவிர வேறு வழியில்லை.இப்போதே பெருமானாரை சந்தித்து என் நிலையைச் சொல்கிறேன்' என்று புறப்பட்டார்.

பெருமானார் அவர்களை வணங்கி ரபியா அவர்கள்,' தமக்கும், அபூபக்கருக்கும் இடையே நடந்த நிகழ்ச்சியைக் கூறி, என் மீது தவறிருந்தால் மன்னியுங்கள்' என்றார்.

அதற்கு பெருமானார்,'ரபியா ..நீர் செய்தது சரி.கோபத்தில் அவர் திட்டியது போல நீரும் கோபம் கொண்டு அவரைத் திட்டிவிடுவது அறிவுடைமை ஆகாது.அதற்கு மாறாக, "அபூபக்கரே!  இறைவன் உம்மை மன்னிப்பாராக' என்று கூற வேண்டும் என்றார்.


Sunday, October 16, 2011

தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..
தமிழ்மணத்திற்கும் சில பதிவர்களுக்குமான சர்ச்சை தொடர்ந்து வருவது என்னைப் போன்ற சில பதிவர்களுக்கு சங்கடத்தையே ஏற்படுத்தி வருகிறது.

பதிவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்..

தமிழ்மணம் நடத்துபவர்கள் ஒன்றும் ஞானிகளல்ல...தங்கள் திரட்டிப் பற்றி அவதூறு/கிண்டல் செய்தால் ரசித்துவிட்டுப் போவதற்கு...

சக பதிவர் ஒருவர் போட்ட தமிழ்மண பயோடேட்டா தான் பிரச்னைக்கான ஆரம்பம்..இதை நகைச்சுவையாக தமிழ்மணமும் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

இதற்கு முன்னர் கூட பல ஆபாச பதிவுகள்..தமிழ்மணம் ஏற்றுக்கொண்டுள்ளது.இந்த விஷயத்தில் சரியான அளவுகோலை தமிழ்மணம் வைத்திருக்கவில்லை.வார முன்னணி பதிவுகளை தமிழ்மணம் அறிமுகப் படுத்தியதிலிருந்து தான்..வந்தது வினை..

தங்கள் பதிவுகள் அதில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே..கட் அண்ட் பேஸ்ட் பதிவுகள், கவர்ச்சி தலைப்புடன் கூடிய பதிவுகள் என அதிகரிக்க ஆரம்பித்தன.

இந்த காரணத்தைக் காட்டியே பல மூத்த பதிவர்கள் பதிவுகள் இடுவதை நிறுத்திவிட்டு தங்கள் எண்ணங்களை கூகுள் பிளஸ்ஸில் பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

சரி தலைப்பிற்கு வருவோம்...

தவறு யார் பெயரில் என்னும் கேள்விக்கு நான் போகப் போவதில்லை..

ஆனால்..தமிழ்மணம் சார்பில் பெயரிலி போட்ட சில பின்னூட்டங்கள் , கண்டிப்பாக அருவருப்பையே தந்தன..தனிப்பட்ட மனிதன் இப்படி பின்னூட்டம் இட்டிருந்தால் கவலையில்லை..ஆனால் பெயரிலி செய்தது தவறென்றே எண்ணுகிறேன்.அது அவர் தனிப்பட்ட கருத்து..என தமிழ்மண நிர்வாகிகள் கூறலாம்..ஆனால் அவர் ஒரு பின்னூட்டத்தில் தமிழ்மணம் சார்பாக பெயரிலி எனப் போட்டுள்ளார்.

பெயரிலி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மரியாதையும், மதிப்பும் உண்டு..அவரது திறமை என்னை வியக்க வைத்தது உண்டு.

ஆனால் ஒரு திரட்டியில் முக்கிய பங்கு வகிப்பவர் என்ற வகையில் அவர் இன்னும் சற்று கவனத்துடன் செயல் பட்டிருக்கலாம்.

பேசாத சொற்களுக்கு நாம் எஜமானன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நடந்ததைப் பற்றி பேசி பயனில்லை..இனி நடப்பவை நன்மை பயக்க வேண்டும்...

பெயரிலி இனி புதிதாக எந்த கமெண்டும் போட வேண்டாம்..

சம்பந்தப்பட்ட பதிவர்களும்..இப்பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கட்டும்.

தமிழ்மணம் இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது என்றும்..இது சம்பந்தமாக ஆதரவு/எதிர்ப்பு பதிவுகள் வெளியிடாது என்றும் அறிவிக்கட்டும்.

தமிழனும்..நண்டும்
நம்ம தமிழனை நினைச்சா..நண்டு கதை தான் ஞாபகத்துலே வருது..

ஒரு பள்ளத்திலே சில நண்டுகள் விழுந்திடுச்சு.அவற்றில் ஒரு புத்திசாலி நண்டு..சைடுலே நடந்து ..கொஞ்சம் கொஞ்சமா மேலே ஏறப்பார்த்துது..

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற நண்டுகள் நாம மட்டும் கீழே இருக்க..அது மட்டும் மேலே போறதா..என அதன் காலை இழுத்து கீழே தள்ளின.

இப்படித்தான்..தமிழன் தமிழன்னு நாம் பேசினாலும்..ஒரு தமிழன் முன்னுக்கு வரதை..இன்னொரு தமிழன் பொறுத்துக்க மாட்டான்.

அது போகட்டும்...

நம்ம பிரபல எழுத்தாளர் பிளாக்கர் ஒருத்தர் பாரதியாரை மகாகவி இல்லன்னு சொல்லியிருக்காராமே..

சொல்லட்டும்..சொல்லட்டும்...

இது சுதந்திர நாடு..நாம நினைக்கிறதை சொல்ல நமக்கு உரிமை இல்லையா என்ன..

ஓஹோ...வடக்கே யாரோ சமீபத்தில சொன்ன வார்த்தையோ இது..

ஆமாங்க..என்ன செய்யறது..

நமக்கு மனசுக்கு கஷ்டமான விஷயத்தை  சொல்றப்போ..கடினமா சொல்லக் கூட முடியலே..

ஆமாம்..நாம என்ன ராம சேனா ஆட்களா என்ன..


Saturday, October 15, 2011

உங்கள் வாழ்வு வளம்பெற


உங்கள்

வாழ்வு வளம்பெற

வாக்களிப்பீர் எங்களுக்கே என்றதை

நம்பினோம்..வாக்களித்தோம்

நம்பினார் கெடுவதில்லை

சொன்னதைச் செய்தனர்

எழுபத்தைந்து விழுக்காடு

உங்கள் எனும் நான்கெழுத்தில்

'உ"விற்கு பதில்

'எ' என்று மாற்றிFriday, October 14, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (14-10-11)
1) ஊழலே இல்லாத நாடு உள்ளதா?  ஆம்..இருக்கிறது..ஊழல் இல்லாத நாடு டென்மார்க்.அடுத்து சிங்கப்பூர்.இதில் அமெரிக்காவிற்கு 17 வது இடமாம்..இந்தியாவிற்கு..?

2)நமது இதயம் ஆண்டொன்றுக்கு 3கோடியே 68 லட்சம் முறை துடிக்கிறதாம்..அப்படியிருக்கும் அதை நாம் ஆரோக்யமாக வைத்திருக்க வேண்டாமா?

3)மம்தா பேனர்ஜி காலில் சாதாரண ரப்பர் செருப்பைத்தான் அணிகிறார்.எளிய கைத்தறி சேலைதான் கட்டுகிறார்.எளிமை அவரது தனி அடையாளம்.அவர் பயணிக்கும் கார் கூட அரசால் கொடுக்கப்பட்டது அல்லவாம்

4)மாமல்லபுரம்,தஞ்சை பெரிய கோயில்,தாராபுரம் ஐராதீஸ்வரர் கோயில்,கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் ஆகிய நாங்கு கோயில்களை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது இந்தியாவிலேயே நாங்கு உலக பாரம்பரிய சின்னங்கள் கொண்ட மாநிலம் தமிழகம் மட்டுமே!

5)உலகில் ஐந்து கோடி மக்களுக்கு மேல் பேசப்படும் மொழிகள் வெறும் 13 மட்டுமே..அதில் தமிழ் மொழியும் ஒன்று

6)நான் தமிழ் படங்களைப் பார்த்தே இரண்டு ஆண்டுகள் ஆயிற்று என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

7)தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகிலேயே ஊழியர்கள் பணி புரிய சிறந்த நிறுவனமாகத் தெர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறது கூகுள் நிறுவனம்.

8)இந்த வார விகடனில் மதன் கேள்வி பதிலில் கேட்கப்பட்ட கேள்வியும்..பதிலும்..

உலகிலேயே தைரியமாகத் தங்கள் அரசாங்கத்தைக் கிண்டல் செய்பவர்கள் அதிகம் உள்ள நாடு எது?

 சந்தேகம் இல்லாமல் அமெரிக்காதான்.
பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த போது ஒரு டீ.வி.சேனலில் தமாஷாக ஒரு வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டார்கள்.அதில் பெண்களுக்கு ஒரு கேள்வி..
'கிளிண்டனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்மதமா?
அமெரிக்காவில் உள்ள 90 சதவிகிதம் பெண்கள் அளித்த பதில்..ஐயயோ..மறுபடியுமா?

9)சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பமுடியாது..
 ஆம்..உண்மைதான்..ஆனால் செல்வாக்கு மிக்கவரானால் சட்டம் தன் பிடியை தளர்த்திவிடும்

10) ஒரு ஜோக்

  மகன்- அப்பா..எங்க வாத்தியார் பள்ளிபடிப்புக்கும், எனக்கும் ரொம்ப தூரம்னு சொல்றார்
  அப்பா- கவலைப்படாதே..நாளைலே இருந்து ரிக்க்ஷா ஏற்பாடு பண்ணிடறேன்


Thursday, October 13, 2011

தமிழ் திரட்டிகளும்...பதிவர்களும்..
சமீப காலங்களில் தமிழ் திரட்டிகளை விமரிசித்து சில பதிவுகளை படிக்க நேர்ந்தது..

பதிவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்..

எந்த திரட்டியும் நம்மை இணையுமாறு கட்டாயப்படுத்துவதில்லை.மேலும் அவை இலவசமாகவே பதிவர்களுக்கு சேவை செய்து வருகிறது.

நம்மிடம் உள்ள எழுத்துத் திறமையை..எல்லா வார இதழ்களும் அங்கீகரித்து..இதழ்களில் வெளியிடுவதில்லை..ஆனால் நம் எழுத்துகள் எந்த திரட்டியில் நாம் இணைகிறோமோ அத் திரட்டியால் திரட்டப்படுகின்றன.நாம் எழுதியதை..அத் திரட்டிக்கு படிக்க வரும் நண்பர்கள் பலர் படிக்கின்றனர்.இன்னும் சொல்லப் போனால்..நமது எழுத்து வார இதழில் வெளியானால்..அதைப் பற்றி படிப்பவர் கருத்தை நாம் அறியமுடிவதில்லை.ஆனால்..இங்கோ..கமெண்ட் மூலம்..நம் எழுத்திற்கு ஆதரவை அறிய முடிகிறது.

அதனால்தான் நம் பதிவு...சூடான இடுகையில் வருகிறதா...நம் பதிவு வாசகர் பரிந்துரையில் வருகிறதா..என்ற ஆவல் ஒவ்வொரு பதிவருக்கும் உண்டாகிறது.

இப்படி இலவச சேவை செய்துவரும் திரட்டிகளில் வரும் படிப்பவர் எண்ணிக்கை..அந்த அந்த திரட்டிகளுக்கு ஏற்ப ..அதிகமாகமோ,சற்று குறைவாகவோ இருக்கக் கூடும்.உடனே நாம் இரண்டு திரட்டிகளையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போட்டுவிடுவதா?

'தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்தாற்போல்' என்று சொலவடை ஒன்று உண்டு..

அதுபோல பார்க்காது..நம் எழுத்துகளை அங்கீகரிக்கும்..அவற்றை இலவசமாக திரட்டும்..திரட்டிகளை இனியும் விமரிசிக்க வேண்டாம்.ஏனெனில் இவை நமக்கு சேவைதான் செய்கின்றன.

டீவியில் நிகழ்ச்சி பிடிக்காவிட்டால் ரிமோட் நம் கையில் தான் உள்ளது..அதுபோல ..திரட்டியைப் பிடிக்காவிட்டால்..அதில் இணைவது உங்கள் கையில்தான் உள்ளது.இதை உணர்ந்து கொள்ளுங்கள்,

தரம் நம் பதிவுகளில் இருக்கட்டும்..திரட்டிகளைப் பற்றியும்..அவற்றில் வரும் வாசகர்கள் பற்றியும் கவலை வேண்டாம்.

Wednesday, October 12, 2011

கேபிளார் அறிவிப்பை புரிந்து கொண்ட விதம்...
கேபிளார் வழக்கமாக அவரது நண்பருடன் அந்த பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு செல்வது வழக்கம்..
அந்த ஹோட்டலில் தோசையை சர்க்கரையுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
ஆகவே  அங்கு வருபவர்கள் எல்லாம் தோசை, சர்க்கரை என சாப்பிடுவார்கள்.
கேபிள் போன்றவர்கள்..ஒரு தோசைக்கு கால் கிலோ சர்க்கரையைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.
இதையெல்லாம் பார்த்து பொறுமை இழந்த ஹோட்டல் முதலாளி..'இன்று முதல் தோசைக்கு சர்க்கரை கிடையாது' என போர்ட் எழுதி வைத்தார்.
அதைப்படித்த தமிழன் கேபிள் பொங்கி எழுந்தார்..
அந்த முதலாளிக்கு பாடம் புகட்ட எண்ணினார்..
ஹோட்டலுக்கு சென்று ஒரு தோசைக்கு ஆர்டர் செய்தார்..அதை சாப்பிட்டு முடிந்ததும்..அடுத்த தோசைக்கு ஆர்டர் கொடுத்தார்..
தோசை வந்தது..தொட்டுக் கொள்ள சர்க்கரை கொண்டுவரச் சொன்னார்.
சர்வருக்குக் கோபம் வந்தது..'அங்கு என்ன எழுதியிருக்கிறது பாருங்கள்'' என்றார்.
கேபிளும்,'என்ன எழுதியிருக்கிறது..நீயே படி' என்றார்.
சர்வர், 'இன்று முதல் தோசைக்கு சர்க்கரை கிடையாது' என படித்தார்.
கேபிளும்,'போர்டில்..இன்று..முதல்..தோசைக்கு சர்க்கரை கிடையாது..என்று எழுதியுள்ளது..சரிதான்..அதனால் தான் நான் முதல் தோசைக்கு சர்க்கரை கேட்கவில்லை..இரண்டாம் தோசைக்குத் தான் கேட்டேன்.போய் எடுத்து வாருங்கள்..'என்றார்.
அப்போதுதான் மற்றவர்களுக்கு..போர்டில் எழுதியுள்ளதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் உள்ளதா..என ஆச்சரியம் ஏற்பட்டது.
கேபிளாரோ, இதையெல்லாம் கவனிக்காது..மூன்றாவது தோசைக்கு ஆர்டர் செய்தார்.

டிஸ்கி-இந்தப் பதிவு வெறும் நகைச்சுவை பதிவுதான்.

Tuesday, October 11, 2011

தொழில் நுட்ப அறிவில்லாதவர்....
என்னதான் நீங்கள் தொழில் நுட்பத்தில் மேதையாய் இருந்தாலும்...தொழில் நுட்பம் அதிகம் அறியாதவரை 'தொழில் நுட்ப அறிவில்லாதவர்' என ஒருவர் கூறலாமா?

ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழில் திறமையைக் கொண்டவராய் இருப்பார்கள்...அப்படிப்பட்டவர் தொழில் திறமை நமக்கு இல்லாவிடின் அத்துறையைப் பற்றி அறியாதவர் எனலாம்..ஆனால் அத்துறை அறிவில்லாதர் என்று கூறமுடியுமா?

May I help you? என்பது நாகரிக வார்த்தை என்று சொன்னவருக்கு...அறிவில்லாதவர்..அறியாதவர் என்பதற்கான வித்தியாசமும் தெரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

அவர் இன்னமும் தான் சொன்னது சரி என்றால்....அவரைப் பொறுத்தவரை... நாட்டில் அனைவரும் அறிவில்லாதவர்களே!!!


பிரதமருக்கு 'ஜெ' எழுதிய காட்டமான கடிதம்இலங்கை கடற்படையினராலும்,விஷமிகளாலும் தமிழக மீனவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் சம்பவங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம் தொடர்ந்து தாக்கப் படுகின்றனர்.
இது தமிழக அரசுக்குப் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.

பாக் ஜலசந்தியில் காலம் காலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதுதான் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது என்பது தாங்கள் அறிந்திருக்க முடியும். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்புக்கு தமிழக அரசு உயர்ந்தபட்ச முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2011ம் ஆண்டு மே மாதம் எனது தலைமையிலான அரசு அமைந்த பின்னர் 16 முறை தமிழக மீனவர்களை இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்கி சித்திரவதை செய்துள்ளனர் என்பதை மிகுந்த வருத்தத்துடன் உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

7.6.2011 அன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் எனது அரசு உரிய நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து 17.6.2011 அன்றுதான இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மீண்டும் 20.6.2011 அன்று 5 படகுகளில் சென்ற 23 மீனவர்களை இலங்கைப் படையினர் பிடித்துச் சென்றனர். மீண்டும், இதுகுறித்து உங்களது கவனத்திற்கு நான் கொண்டு வந்த பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இப்படி தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதும், துன்புறுத்துவதும், சித்திரவதை செய்வதும், தாக்குவதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாக நடந்து வருகின்றன. இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இலங்கைக் கடற்படையினரும் சரி, இலங்கையைச் சேர்ந்த விஷமிகளும் சரி தொடர்ந்து மாறி மாறி இவ்வாறு தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களில் ஒரு மீனவர் படுகாயமும் அடைந்துள்ளார். மீனவர்ளின் பல்வேறு உடமைகளை இலங்கைத் தரப்பினர் சூறையாடியுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் குறிப்பாக நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள்தான் இதுபோல தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கைப் படையினரால் அல்லது விஷமிகளால் தாக்கப்படுவோமோ என்ற பயத்தில்தான் இவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் துர்பாக்கிய நிலை நிலவுகிறது.

8.10.2011 அன்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் என்னை சென்னை வந்து சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களையும், சித்திரவதை மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் நான் விரிவாக விளக்கிக் கூறினேன். ஒருபக்கம் இந்திய, தலைவர்களுடன் பேசிக் கொண்டே மறுபக்கம் இலங்கைத் தரப்பினர் தமிழக மீனவர்களை தாக்கி வருவது குறித்து இலங்கையிடம் கண்டிப்புடன் எடுத்துக் கூறுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

ஆனால், அதே நாளில், அதாவது 8.10.2011 அன்று மாலை ரஞ்சன் மத்தாய் கொழும்பு சென்றடைந்த நிலையில், இலங்கைப் படையினர் தமிழக மீனவர்களை கடலில் விரட்டியடித்துள்ளனர், தாக்கியுள்ளனர். மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்தத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அனைத்து மீடியாக்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

தாங்கள் உடனடியாகஇந்த விவகாரத்தில் தீவிரமாக தலையிட்டு இலங்கை அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும், எச்சரிக்கை விடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைப் படையினர் தாக்கி வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாங்கள் பாரம்பரியாக மீன் பிடித்து வரும் பாக். ஜலசந்தி பகுதியில் எந்தவித இடையூறும் இல்லாம்ல் மீன் பிடிக்க வகை செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதலை நான், பாகிஸ்தான், சீனப்படையினர் இந்தியப் படையினர் மீது நடத்தும் தாக்குதலுக்கு சமமாக பார்க்கிறேன். அதேபோலவே மத்திய அரசும் கருத வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது தேசியப் பிரச்சினை என்பதை இப்போதாவது மத்திய அரசு உணர வேண்டும். இது தமிழ்நாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, இந்தியா தொடர்பான பிரச்சினை என்பதை தாங்கள் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.


Monday, October 10, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ் -24


இதயத்தில் காதலனை வரச்செய்வது கண்களே ஆகும்..ஆகவே தான் கவிகளும் இதயத்தின் வாயில் கண்கள் என்கிறார்கள்.


காதல் தோல்வியுற்ற பெண்..'என் கண்கள் செய்த பாவம் உன்னைக் கண்டது' என்கிறாள்.


காதல் தோன்ற முதல் கருவியாய் இருப்பது கண்களே.

.
அதையே வள்ளுவரும் ஒரு குறளில்..'கண்டபின் நீங்குமென் மென் தோள் பசப்பு' என்கிறார்.


அதாவது காதலனைக் கண்கள் காண முடியாததால் அவள் தோள்களில் பசலை நோய் படிகிறதாம்..கண்கள் அவனைக் கண்டுவிட்டால் அது மறைந்து விடுமாம்

.
ஆனால் அதே சமயம் பழி ஓரிடம்..பாவம் ஓரிடம் என்பார்கள்...
ஒருவன் ஏதேனும் தவறிழைத்து விட தண்டனையை வேறொரு அப்பாவி அனுபவிப்பான்..
அப்படிதான் கண்கள் செய்த பாவத்தை தோள்கள் அனுபவிக்கின்றன..இந்த முத்தொள்ளாயிரம் பாடலில்..


பாண்டிய மன்னன் நகர் வலம் வருகிறான்.அவனை ஒரு கன்னிப் பெண் காண்கிறாள்.உடன் அவன் மீது காதல் கொள்கிறாள்.அதன் காரணமாக பசலை படர்ந்தது அவள் உடல் முழுதும்.தன் உடலில் பசலைப் படரக் காரணம் தன் கண்களால் அவனைக் கண்டதால்தானே..ஆனால் ஒரு பாவமும் அறியா அவள் தோள்கள் அல்லவா தண்டனை பெற்றன.உண்மையில் தண்டனை பெற வேண்டியது கண்களல்லவா? இது எப்படியிருக்கிறது எனில் உழுத்தஞ் செடி வளர்ந்துள்ள வயலில் ஊரில் உள்ள கன்றுகள் நுழைந்து மேய்ந்து அழிக்க...ஆனால் அங்கிருந்த ஒன்றுமறியா கழுதையைப் பிடித்து காதை அறுத்து தண்டித்தது போல இருக்கிறதாம்.
உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்


கழுதை செவி அரிந்தாற்றால் - வழுதியைக் 


கண்டநம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்


கொண்டன மன்னோ பசப்பு
  (முத்தொள்ளாயிரம் - பாண்டிய நாடு -60)
(இப்பாடலில் கண்களை..உர்க்கன்று ஆகவும்...பசலை படர்ந்த தோள்களை கழுதைக்கும் ஒப்பிட்டுள்ளார் கவிஞர்.)
முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளைக் காதலேயாகும்.
கடை விரித்தான்..கொள்வாரில்லை..
வாங்க...வாங்க..

கத்தினான் கடைவாயிலில்

எதை வாங்க என்றேன்

விற்பதை வாங்க என்றான்

என்ன விற்கிறார்கள்..

வாங்குவதை விற்கிறார்கள்

கடைசிவரை..

என் தேவையையும் சொல்லவில்லை

அவன் விற்பதும் எதுவென

தெரியவில்லை


Sunday, October 9, 2011

திராவிடக் கட்சிகள் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப இல்லை...

ஏறிய ஏணியை எட்டி உதைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்..
ஆனால்...தனது கட்சிக்கு உயிர் அளித்த கட்சிகளை எட்டி மிதித்ததை இன்று உள்ளாட்சி தேர்தலில் சந்திக்கிறோம்..

ஆம்..1967 ஆம் ஆண்டு..திராவிடக்கட்சியால்..தூக்கி எறியப்பட்ட காங்கிரஸ்..அதற்கு பின் ததிங்கணத்தோம் போட்டும்..தமிழகத்தில் தனியாக ஒன்றும் செய்ய முடியவில்லை.அதுவும் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., ஆரம்பித்ததும் தமிழகத்தில் மாற்றி மாற்றி இரு கட்சிகளே ஆட்சி அமைத்து வருகின்றன.மற்ற கட்சிகள் இவற்றுடன் கூட்டு சேர்ந்து சில இடங்களைப் பெற்று..அவற்றில் மிகச் சில இடங்களில் வென்று..தாங்களும் இருக்கிறோம் என்பதைக் காட்டி வந்தன.

இதற்கு..அகில இந்திய அளவில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல..

ஆனால்...பாலத்தை கடக்கும் யானையின் மீது அமர்ந்த கொசு தன் தயவால்தான் யானையால் பாலம் கடக்க முடிந்தது என்று கூறும் கதையைப் போல..எங்களது ஆதரவால்தான் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் மாற்றி மாற்றி அரசு அமைக்க முடிந்தது என காங்கிரஸ் கூறுவது சிரிப்பையே வர வழைக்கிறது.
 அதுவும் அதை ஒரு மத்திய அமைச்சர்,(திராவிடக்கட்சியால் வென்று அமைச்சர் ஆனவர்) கூறுகிறார் என்றால்...!!!!!!

கடலூரில் பேசியுள்ள G.K.வாசன்..'இவ்வளவு ஆண்டுகளாக நமது ஆதரவுடன் மாற்றி மாற்றி ஆட்சி புரிந்த திராவிடக் கட்சிகள் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுள்ளார்.

பாரதியின் ஒரு கவிதையே இச் சமயத்தில் ஞாபகம் வருகிறது

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வா ரடி - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி!

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி
நாட்டத்தில் கொள்ளா ரடி - கிளியெ
நாளில் மறப்பா ரடி!

Saturday, October 8, 2011

நாத்திகம் என்றால் என்ன - பெரியார் சொன்னது
பெரியார் பகுத்தறிவாளர் என நாம் அறிவோம்..
அவர் கடவுள் நம்பிக்கை அற்றவர்..
அதே சமயம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை...அவர்களது நம்பிக்கையை மதித்தார் என்பதற்கு பல நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
ராஜு முருகன் ,விகடனில் 'வட்டியும்..முதலும்' என்னும் தொடரில் ஓரிடத்தில் இப்படிக் கூறியுள்ளார்..
கடவுள் மறுப்பாளராக இருந்த பெரியார் ஓரிடத்தில்.
"நாத்திகன் என்று சொன்னால், கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை. நான் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை, இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை.புராண.இதிகாச, வேத சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே பார்ப்பனர்கள் நாத்திகன் எனக் குறிப்பிடுகின்றனர்' என்கிறார்...எனக் குறிப்பிட்டுள்ளார்.

Friday, October 7, 2011

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (7-10-11)


நமது ஜனாதிபதிக்கு 6 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ஹைடெக் பென்ஸ் கார் வாங்கப்பட்டுள்ளதாம்.ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் காரைப்போல இந்தக் காரிலும் ஆங்காங்கே அதி நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளதாம்.ஒரு மினி மீட்டிங் நடத்தும் அளவிற்கு காரில் இடமுள்ளதாம்.
(ஜனாதிபதி ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதால் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளார்..என்பதை நினைவில் கொள்க)

2)முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீட்டிற்கு 323 தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக வழங்கியது தொடர்பான ஃபைல்களை தொலைத் தொடர்புத்துறை சமர்ப்பிக்க வேண்டும் என சி.பி.ஐ., கேட்டுள்ளதாம்

3)2G விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையால் நான் ராஜினாமா செய்ய வந்தேனா இல்லையா என்று எனக்கு நினைவில்லை.எனக்கு ஞாபக மறதி உள்ளது என்றுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
 (மறதி நோய் உள்ள ஒருவர்..இந்தியாவில் முக்கிய அமைச்சர் பதவியில் உள்ளார்...அது சரியா....சட்ட வல்லுநர் யாரேனும் தெரிவிப்பார்களா?)

4)குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உண்ணாவிரதத்திற்கு 60 கோடிகள் செலவழிக்கப் பட்டுள்ளதாம்..
  (நல்லவேளை உண்ணாவிரதத்திற்கே இவ்வளவு என்றால் உண்ணும்விரதமாயிருந்தால்...என்கிறார் காமன் மேன்)

5)முல்லைப் பெரியாறு விவகாரமே புரியவில்லை...அணை கட்டுவேன் என்கிறது கேரளா..தமிழகம் கூடாது என்கிறது..வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அவ்வப்போது நிபுணர் குழுக்கள் வந்து அணையை பரிசீலிக்கிறது..இந்நிலையில் கேரளாவும் 663 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டப்படும் என்கிறது..
அட..தேவுடா...தலை சுற்றுகிறது.

6)கூடங்குளம் விவகாரமாக தில்லி சென்ற தமிழக அனைத்துக் கட்சியினர் குழுவினருக்கு வழக்கம் போல பிரதமர் வெண்டைக்காய் பதிலைச் சொல்லி அனுப்பியுள்ளார்.
 முடிவு..ஒரு அங்குலமும் இறங்கவுமில்லை..முன்னேறவுமில்லை.

7)ஒரு இணையத்தில் இப்படி ஜாப்ஸ் புகழப்பட்டுள்ளார்.:

உலகை மூன்று ஆப்பிள்கள் மாற்றியமைத்தன. ஒரு ஆப்பிள் ஏவாளை மயக்கியது. இன்னொரு ஆப்பிள் நியூட்டனை விழித்தெழ வைத்தது. 3வது ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் கைவசம் இருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் அவர் பால் பெரும் அன்பையும், மரியாதையையும், ஆச்சரியத்தையும் வாரியிறைத்துக் கொண்டுள்ளன.

ஸ்டீவ் மரணச் செய்திக்கு ட்விட்டர் மூலம் லட்சக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விநாடிக்கு 10 ஆயிரம் ட்விட்டர்கள் அனுப்பப்பட்டு புதிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இணையதள வரலாறு காணாத இரங்கல் தகவல் இது.

Thursday, October 6, 2011

7ஆம் அறிவு...ட்ரெய்லர்
சூரியா,ஸ்ருதி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உதயநிதி தயாரித்த 7 ஆம் அறிவு படம் தீபாவளி அன்று வெளிவர இருக்கிறது..

6 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள பல்லவ நாட்டில் பிறந்து, 3 வருடங்கள் தரை வழிப் பயணம் மேற்கொண்டு, சீனாவை அடைந்து, அங்கு நமது தற்காப்பு கலைகளை பரப்பி புகழ் பெற்றவர் போதி தர்மன்.சைனாவில் உள்ள ஷாலியன் டெம்பிள் உருவாகக் காரணமாய் இருந்தவர்.சைனாவில் புத்தர் சிலை இருக்குமிடமெல்லாம் இவரது சிலையும் உள்ளதாம்.சைனாவில் இவரை,,'இந்திய ஞானி' என்கிறார்கள்.வணங்குகிறார்கள்.
ஆனால் நம் நாட்டிலோ அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லையாம்.காஞ்சிபுரம் அருகில் அவரது சிறு சிலை ஒன்று மட்டுமே உள்ளதாம்.அவரது வரலாறு ஏன் இந்தியாவில் மறைக்கப்பட்டது எனத் தெரியவில்லை.அவரது சரித்திரத்தை மீட்டு எடுப்பதே இப்படம் என்கிறார் முருகதாஸ்.
இப்படத்திற்காக பல நுண்ணிய விஷயங்களை கேட்டு அறிந்து அதன்படி மாறியுள்ளாராம் சூரியா.சைனா,தாய்லாந்த்,வியட்னாம் என பயணம் செய்து அங்குள்ள சண்டைக் கலையைக் கற்றாராம்.
இப்படம்..ஒவ்வொரு தமிழரையும் தலை நிமிர நடக்கவைக்கும்..என உறுதியுடன் நம்புகிறார் இயக்குநர்.
ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டனர்.
அதிக எதிர்பார்ப்புகள் இருந்த பல படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன( ராவணன்,ஆயிரத்தில் ஒருவன்)..இந்தப் படம் அந்த வரிசையில் சேராது வெற்றி படமாகத் திகழ வாழ்த்துவோம்..
தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ள இந்நிலையில்..இப்படம்  இப்போதே சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் 40க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒருநாளில் கிட்டத்தட்ட 200 காட்சிகள்..
கண்டிப்பாக தீபாவளி விடுமுறைநாட்களில் வசூலைக் குவிக்கப் போவது நிச்சயம்.
உதயநிதி ஸ்டாலின் இப்படத்தின் தயாரிப்பாளர் என்பது வெற்றிக்கான மற்றொரு அறிகுறியாகும்.
Wednesday, October 5, 2011

2H ஊழல் 100 கோடி..?!
2g ஊழல் 176000 கோடி என தலைமை தணிக்கை கூறினாலும்...பின்னர் 33000 கோடி என்றும்..பின்..மத்திய அமைச்சர் கபில் சிபல் நஷ்டமே இல்லையென்றும் கூறியவை எல்லாம் நாம் அறிவோம்.
இந்நிலையில் புதியதாக ஒரு ஊழல் நம் பார்வைக்கு வந்துள்ளது.
பக்தர்களின் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூபாய் 133 கோடிக்கு விற்பனை...இது செய்தி..
2011ல் நிர்ணயித்த விலையில் இது விற்கப்பட்டது என்றும்..இன்றைய விலைக்கு ஏலம் விட்டிருந்தால்  மேலும் 100 கோடி அதிகம் கிடைத்திருக்கும் என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது..
இதனால்..100 கோடிக்கு ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
இது சம்பந்தமாக உள்துறைக்கும் இது தெரியும் என்றும்...ஆனால்..முடிதானே என அலட்சியப்படுத்தப்பட்டதாக நிதி  மீது புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இது டுபாக்கூர் செய்திக்காக திருப்பதியிலிருந்து கேசவன் அளிக்கும் ஊர்ஜிதமாகாதத் தகவல்.


Tuesday, October 4, 2011

செய்யும் தொழிலே தெய்வம்...அதை போற்றுவோம்..
கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்பர் ஆன்மீகவாதிகள்..பாரதியாரும் 'பாஞ்சாலி சபதத்தை' அவரது எழுத்துக்களில் வடித்தபோது முதலில் சரஸ்வதியை வணங்குகிறார்.
'வெள்ளைக் கமலத் திலே அவள்
வீற்றிருப்பாள், புக ழேற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசை தான் நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்

கள்ளக் கடலமுதை - நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே -எனைப்
பேணவந்தாளருள் பூணவந்தாள்...

என்று எழுதியுள்ளார்...

ஆன்மிகவாதிகள் ஆனாலும் சரி, பகுத்தறிவாளராயினும் சரி..கல்வி அறிவு முக்கியம் என்பதை மறுக்கமாட்டார்கள்.ஆகவே அப்படிப்பட்ட கல்விக்கு ஒதுக்கப் பட்ட நாள் இது எனக் கொள்வோம்.அதைப் போற்றுவோம்..
அதைத் தவிர்த்து..கல்வி அறிவு பெற்றோரும் சரி..அற்றோரும் சரி..வாழ..ஏதேனும் தொழிலை மேற்கொண்டிருப்பர்.அத் தொழிலை வழிபட வேண்டிய தினம்..அத் தொழிலுக்கு நன்றி சொல்ல வேண்டிய தினம்.அதை மனதாரச் செய்வோம்..
மேலும்..நமக்கு அன்றாடம் பயன்படும் பொருள்களுக்கும்..அவை அஃறிணை ஆனாலும்..அவற்றையும் தொழுவோம்..ஆகவேதான் இத் தினம் ஆயுத பூஜை என்று கொண்டாடப்படுகிறது.
உதாரணமாக..நாம் தினமும் அலுவலகம் செல்ல பயன்படும் நமது ஊர்தி..சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றிற்கு பூ போட்டு,சந்தனம் இட்டு வணங்குவோம்.
நமக்கு படி அளக்கும் அரிசி படி,பணம் வைக்கும் கப்போர்ட்,சமைக்கும் கேஸ் அடுப்பு,கணிணி போன்ற அனைத்தையும் வணங்கி நன்றி சொல்வோம்..
அவற்றிற்குத் தேவையா? என வினவுவோர்க்கு...என் அனுபவத்தில் நடந்த ஒரு விஷயம் கூற ஆசை..
சில ஆண்டுகளுக்கு முன்..என் வீட்டு ஃப்ரிட்ஜ் பழுதுபட்டு வேலை செய்யவில்லை.நீண்ட நாட்களாக எங்களுக்கு சேவை செய்தது அது.அதை எக்சேஞ்ச் செய்ய வேண்டுமானால் அது வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும்..அப்படியானால் புது ஃப்ரிட்ஜ் 2000 ரூபாய் குறைக்கிறோம் என்றார்கள் கடையில்.ஆனால் என் வீட்டு ஃப்ரிட்ஜோ முற்றிலும் வேலை செய்யவில்லை.ஆனால் கடைக்காரரிடம் ஃப்ரிட்ஜ் வேலை செய்கிறது எனச் சொல்லிவிட்டேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள்...அந்த கடையிலிருந்து மெக்கானிக் வந்த தினம்...அவர் ஃப்ரிட்ஜை நோட்டம் விட்ட போது அது வேலை செய்தது..இன்றைக்கும் எனக்கு அந்நிகழ்ச்சி அதிசயமாக இருக்கிறது.அதற்கு பிரியாவிடை கொடுத்தும்..என்னால் இன்றளவும் ஒரு உறவை பிரிந்த துயரமே!இதை என் மூட நம்பிக்கை என நீங்கள் கூறினாலும் எனக்குக் கவலையில்லை.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்...நாம் அப்படி நமக்கு பயன்படும் பொருள்கள் எல்லாவற்றையும் வனங்கி இன்று தொழுவோம் என்பதற்கே..
பத்து ரூபாய்க்கு சில்லறை கொடுக்கும் பேருந்து நடத்துநருக்கு நன்றி எனச் சொல்லும் நாம்..அப்பணத்தை சம்பாதிக்கும் நம் தொழிலுக்கு நன்றி எனச் சொல்வதில் தப்பில்லை.
நம் வாழ்வை வளமாக்கும்..அனைத்தையும் எண்ணி ..இன்று அவற்றை வணங்குவோம்.

Monday, October 3, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ் -23
இன்றைய கேரளாவின் பகுதிகள் சேரநாடாய் இருந்ததை நாம் அறிவோம்...
அந்நாடு  பற்றி முத்தொள்ளாயிரத்தில் கவிஞர் ஒருவர் சொல்லியுள்ள பாடல்..
அந்த கவிஞர் சேர அரசனைப் பார்க்க வருகிறார்.அவரை அரண்மனை வாயிலிலேயே வந்து வரவேற்றான் மன்னன்.மகிழ்ந்த கவிஞர் மாமன்னனை வணங்கி, 'மன்னா! உயர்ந்த செங்கொலை பிடித்து ஆட்சி செய்யும் உம் நாட்டில் எல்லோரும் பயமின்றி வாழவேண்டியது தானே..ஆனால் உன் நாட்டில் உயிரினங்களின் வாழ்வில் பயம் குடி கொண்டிருப்பதை நான் வரும் வழியில் கண்டேன்..' என்று நிறுத்தினார்.
மன்னனும்..மற்ற அமைச்சர்களும், கவிஞர்களும்..இக்கவிஞரின் கூற்று கேட்டு திகைத்தனர்..ஆனால் கவிஞர் தொடர்ந்தார்..
'ஆனால்..உன் நாடு நீரோடு சேறு நிறைந்த கழனிகளைக் கொண்டது.அதில் சிவந்த செவ்வாம்பல் பூக்கள் பூத்து மலர்ந்து எங்கு பார்த்தாலும் சிவப்பாகக் காட்சியளிப்பதைக் கண்டு, புள்ளினங்கள், தீப்பற்றி விட்டதோ எனப் பயந்து தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்ற தாய்ப்பறவைகள் முனைந்ததைக் கண்டேன்.இத்தகைய பயத்தை உடையதாய் உள்ளது உன் நாடு.இதைத்தவிர எந்த பயத்தையும் நான் காணவில்லை...என முடித்தார்.

அள்ளற் பழனத்
தரகாம்பல் வாய் அவிழ
வெள்ளந்தீப் பட்ட
தெனவெரீ இப்-புள்ளினம்தங்
கைச்சிறகார் பார்பொடுக்கும்
கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோகோதை
நாடு..

(முத்தொள்ளாயிரம் பாடல்-14 .சேரநாடு)

'நஞ்சு தோய்ந்த அச்சத்தை விளைவிக்கக்கூடிய இலை போன்ற வேலையுடைய மன்னர் மன்னன் சேரன்,அவனுடைய நாடு,சேறு நிறைந்த நல்ல களியோடு கூடிய நீர் நிறைந்த பெறும் கழனிகளை உடையது.அதில் சிவந்த செவ்வாம்பல் பூக்கள் பூத்து, இதழ் விரித்து, ஒரே சிவப்பாய் காட்சி தந்தன.அதைக்கண்ட தாய்ப்பறவை இனங்கள். நீரில் தீப்பிடித்து விட்டதோ என பயந்து தங்கள் தங்கள் குஞ்சுகளை இறக்கையாகிய  கைகளால் அணைத்துக் கொள்கின்றன.இப்படிப்பட்ட பயத்தோடு கூடிய ஆரவாரத்தை உடையதாய் உள்ளது சேரனது நாடு'


"கறுப்பு ஆடுகள்' நாடக விமர்சனம்

  ஸ்ரீபார்த்த சாரதி சுவாமி சபா நாடக விழாவில், இந்த ஆண்டு நல்ல நாடகங்களைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது.நாடகங்களை வியாபாரமாக ஆக்காமல், சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை அறிவுறுத்தும் ஒரு சில வலுவான கதைக்கருவில், இதுவும் ஒன்று. சென்னை, மயிலாப்பூர் பைன்-ஆர்ட்ஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற "கறுப்பு ஆடுகள்' நாடகத்திலும், இன்று நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் முறைகேடுகளின் ஒட்டு மொத்த பட்டியலையும், நீண்ட வசனங்களாகக் கேட்டு ரசிக்க வைத்துள்ள, இந்த நாடகத்தின் கதை, வசனம், நடிகர், இயங்குனர் "டிவி' ராதா கிருஷ்ணனை, நாடக ரசிகர்கள் நன்கு அறிவர். அரசியல் ஊழல்களை இவர் அப்பட்டமாக வெளிச்சம் போடுவதிலும், நையாண்டி செய்வதிலும் வல்லவர்.அக்கிரம அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் வகையில், சட்டத்தைத் தானே கையிலெடுக்கும் ஒருமித்த கருத்துடைய சமூக ஆர்வலர்களும், நலம் விரும்பிகளும் ஒரு இயக்கமாக இயங்கி, தவறு செய்யும் அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் நியாயவாதிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளதை, இந்த நாடகத்தில் வித்தியாசமாகக் காண முடிகிறது.இந்த நாடகத்தில், பல அக்கிரமங்களைப் புரிந்த அதாவது மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையால் பல ஊழல்களை செய்யும் அரசியல்வாதி நந்திவர்மனை (ரமேஷ்), ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் சிவா (ஜெயசூர்யா), மனித வெடிகுண்டு மாலையை அணிவித்து, கொன்று விட்டு தப்பித்துச் செல்கிறான். காயத்துடன் தப்பி, டாக்டர் பத்ரிநாத் (கரூர் ரெங்கராஜ்) மருத்துவமனைக்கு வருகிறான்.அங்கு நடக்கும் பல சம்பவங்கள், கதைப்பின்னலாக தரப்பட்டுள்ளன.க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ், எதிர்பாராத முடிவாக வியப்பையும், திருப்தியையும் அளிக்கிறது. டாக்டருடைய உதவியாளர் ரங்கா (ராஜேந்திரன்), "ஊழல் ஒழிப்பு இயக்கம் வன்முறை தவிர்த்து, அகிம்சை வழியில் நடக்க உறுதுணையாக இருப்பேன்' என, இறுதியில் சபதம் ஏற்பதோடு, நாடகம் நிறைவு பெறுகிறது.பளிச்சென்று அரசியல் நையாண்டி வசனங்கள், மேடைக் காட்சிகள், நடிப்பு, இயக்கம் ஆகியவை கன கச்சிதமாக, ரசிக்கும்படி உள்ளன. சிவாவாக ஜெயசூர்யா, நிறைய நீண்ட வசனங்களை தவறின்றி பேசுவதும், டாக்டர் பத்ரிநாத்தாக கரூர் ரெங்கராஜின் அனுபவம்மிக்க நடிப்பும், அப்பாவி பரமானந்தமாக "டிவி' ராதா கிருஷ்ணனின் நடிப்பும், பாராட்டும்படி உள்ளது.


-மாளவிகா 

(நன்றி தினமலர் )

Sunday, October 2, 2011

சாமி கண்ணைக் குத்தும் - விஜய்காந்த்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று தே.மு.தி.க., மற்றும் கூட்டணிகள் (!!!) சார்பில், வேட்பாளர்களை ஆதரித்து விஜய்காந்த் பிரச்சாரம் செய்தார்.
உள்ளாட்சித் தேர்தல் மூலம்தான் மக்களின் அடிப்படை பிரச்னைகளை சரி செய்ய முடியும்.குடிநீர்,சால உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்வோம்.லஞ்சம் இல்லா..ஒளிவு மறைவு இல்லா ஆட்சி அமைப்போம் என்று கூறியவர்கள் யாரும் மக்களின் அடிப்படை பிரச்னைகளைக் கூட நிறைவேற்றவில்லை.
அனைத்து வசதிகளையும் மக்கள் பெற எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் என அவர் பேசினார்.
அவர் மேலும் கூறுகையில்'கோவிலின் வாசலில் வைத்துக் கேட்கிறேன்..அனைவரும் தே.மு.தி.க., விற்கு வாக்களிக்க வேண்டும்' என்றார்.அதற்கு கூடியிருந்தோர்,"வாக்களிப்போம்" என குரல் கொடுத்தனர்.
உடன் அவர் 'யாராவது பொய் சொன்னால்..சாமி கண்ணை குத்தி விடும்' என்றார்.
விஜய்காந்தின் கூற்றுக்கு சாமி செவி சாய்த்தால்..தமிழகத்தில் குருடர்கள் சதவிகிதம் எவ்வளவு சதவிகிதம் அதிகரிக்கும் என புள்ளிவிவரம் வெளியிடுபவர் யாரேனும் தெரிவித்தால் நன்றாய் இருக்கும்...