Saturday, July 30, 2016

ஒரு பக்கக் கட்டுரைகள்- 4


காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

ஆதலினால் காதல் செய்வீர்
--------------------------------------------------

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

Friday, July 29, 2016

ஒரு பக்கக் கட்டுரைகள் 3

பேசும் முன் யோசியுங்கள்
--------------------------------------------


தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..

தவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...

உதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...

வழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றிவிட்டது.

அடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி?' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக்கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.

அடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை ஒரு ரூபாய் இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் ஒரு ரூபாயை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.

இப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.

முடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.

Thursday, July 28, 2016

ஒரு பக்கக் கட்டுரைகள்- 2

நலம் நலம் அறிய அவா>>

பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகளிலே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்துடன் நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 7

                                               
ஏ.எஸ்.ஏ.சாமி

ஏ.எஸ்.ஏ. சாமி என அழைக்கப்பட்ட ஏ.சூசை அந்தோணி சாமி, தமிழ்நாடு குருவிக்குளம் என்ற கிராமத்தைச் சேற்ந்தவர்.இவர் பெற்றோர் இலங்கைச்  சென்று கொழும்பு நகருக்குக் குடி பெயர்ந்தனர்.இவர் இளம் வயதில் பி.ஏ.(ஹானர்ஸ்) ஆக்ஸ்ஃபோர்ட்  பல்கலைக் கழகம், லண்டனில் படித்தார்,பின் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்த போது இவரது குடும்பம் திருநெல்வேலி பாளயம்கோட்டைக்கு வந்தது.

பில் ஹணன் என்ற நாடகம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.ஜூபிடர் சோமு இந்நாடகத்தை படமாக்கினார்.


பின் வால்மீகி, ஸ்ரீமுருகன் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.ஸ்ரீமுருகன் படத்தை இயக்கினார்.

ராஜகுமாரி எனும் படத்தில் எம்.ஜி.ஆர்., கதாநாயகனாக அறிமுகமானார்.

அபிமன்யூ, மருமகள், நீதிபதி போன்ற படங்களுக்கு கதை ,வசனம் எழுதினார்.

கற்புக்கரசி என்ற படம் தயாரிப்பில் இருந்த போது அதன் இயக்குநர் மறைந்துவிடவே..அப்படத்தை இயக்கும் வாய்ப்பை சாமி பெற்றார்.

தங்கப்பதுமை,அரசிளங்குமரி,ஆனந்தஜோதி ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் வந்த வெற்றி படங்கள் எனலாம்.

தவிர்த்து, கடவுளைக்கண்டேன்,ஆசை அலைகள், துளிவிஷம் ஆகிய படங்களையும் இவர் இயக்கினார்.

Wednesday, July 27, 2016

TVR ன் ஒரு பக்கக் கட்டுரைகள் - 1 - நீண்ட நாட்கள் வாழ

நீண்ட நாட்கள் வாழ
உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)
உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.
சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.
மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.
மனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.
நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.
இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.
எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.பாரதி இன்பமாய் நினைத்தவை...எதை எதைத் தெரியுமா?
தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்
இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்
ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது...இன்பமாய் வாழ்வோம்.
இறந்த பின் சொர்க்கம் போக வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு...வாழும் போது..வாழ்வை..நரகமாய் ஆக்கிக் கொள்ளாது சொர்க்கமாய் ஆக்கிக் கொள்வோம்

Thursday, July 21, 2016

நீங்கள் மேடைப் பேச்சாளர் ஆக வேண்டுமா?நமக்கெல்லாம்..மேடையில் பேச வேண்டும் என்றும்..நாம் பேசுவதை நான்கு பேர் கேட்டு பாராட்ட வேண்டும் என்றும் உள்ளூர ஒரு விருப்பம் இருக்கும்.

பேசுவது என்பதே ஒரு கலை.அதற்காக பேசுவதையெல்லாம் கலை என்று சொல்லிவிட முடியாது.அதுவும்..மேடையில் பேசுவது என்பது...!!! எளிய நடையில் பலர் முன் நின்று மேடையில்..உயர் கருத்துகளைச் சிறந்த முறையில்..கேட்போர் உள்ளத்தில் அழகாக பதிய வைப்பதே ஆகும்.

மேடைப்பேச்சை 'சொற்பொழிவு' என்பர்.சொற்களைத் தேடிப் பிடித்து..எளிய நடையில்..அமைதியாக பொழிவது தான் சொற்பொழிவு.

மழை பொழிகிறது என்கிறோம்....மழை நீர்த் துளிகள்..ஒன்றன் பின் ஒன்றாக சீராக..நேராக..அமைதியாக பெய்வது தான் 'பொழிதல்' எனப்படுவது.அழகாக ஒன்றன் பின் ஒன்றாக வரம்பு மீறாமல் இருப்பதுதான்.வரம்பு கடந்தால் மழை பொழிதலும்..மழை அடித்தல், மழை கொட்டல் என்றெல்லாம் ஆகிவிடும்.

அதுபோலவே தான் சொற்பொழிவும்..வரம்பு கடந்தால்..மக்களிடமிருந்து..கிண்டல்,கத்தல்,திட்டுதல் என்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டு விடும்..

ஒருவர் பேசும் சொற்கள் அனைத்தும் நல்ல சொற்களாக, பண்பட்டவைகளாக இருந்தாக வேண்டும் என்ற கவலை சொற்பொழிவாற்றுவோருக்கு இருக்க வேண்டும்.சொற்கள் பற்றி வள்ளுவன்
சொல்வன்மை என்ற அதிகாரத்தையே வைத்துள்ளார்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லிங்கட் சோர்வு

ஆக்கமும், அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால்..எந்த ஒரு சொல்லிலும் குறைபாடு நேராது கவனமாக இருக்க வேண்டும்...என்கிறார்.

நாம் சொல்வதை பிறர் எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.எவ்வளவு நேரம் பேசினோம் என்பதை விட..நாம் என்ன பேசினோம் என்பது மக்களுக்குப் புரிகிறதா என்பதே முக்கியம்.

நாம் கற்றதை ..பிறர் உணரும் வண்ணம் சொல்லத் தெரியாதவர்..கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லா மலருக்கு ஒப்பாவர்..(யாருக்கும் பயன் தரா மலர்) என்கிறார் வள்ளுவர்.

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்

ஒருவனின் உண்மைத் தோற்றத்தைக் காட்டுவது அவன் வாய்ச் சொற்களே..மற்ற அனைத்தும் போலித் தோற்றங்கள்.ஆகவே..பிறரிடம் பேசும்போது..அதிலும் குறிப்பாக மேடையில் பேசும்போது மிக விழிப்புடன் இருக்க வேண்டும்..இல்லையேல்..நமக்கு வீழ்ச்சியே ஏற்படும்.

எதைக் காப்பாற்றாவிடினும் நாக்கை காப்பாற்ற வேண்டும்..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும்..நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவரது துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.


நல்ல கருத்துகள் சொற்பொழிவுக்கு அவசியம்.நாம் பேசுவது மக்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால்..அவை நல்ல கருத்துகள் கொண்டதாய் இருக்க வேண்டும்.பண்பற்ற..பயனில்லா சொற்களை மறந்தும் பேசக் கூடாது.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

பயனற்றதும்..பண்பற்றதுமான சொற்களை பலர்முன் சொல்வது மகிழ்ச்சியைக் குலைத்து..நன்மையை மாய்க்கும்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

பேச்சுக்கு கருத்துகளை எப்படி அமைப்பது.அதற்கு ஒரு வழி..

முதலில்..இன்று நாம் எதைப்பற்றி பேச வேண்டும்..என்னென்ன பேச வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.முதல் கேள்விக்கான விடை தலைப்பாகவும்..அடுத்தக் கேள்விக்கான பதில் கருத்தாகவும் அமையும்.

அதை ஒரு சிறு அட்டையில் குறித்துக் கொண்டு 1, 2 என இலக்கமிட்டு முறைப்படுத்தி மனனம் செய்துக் கொள்ள வேண்டும்.பின் மேடை ஏறியதும் மனப்பாடம் செய்ததை வரிசைப் படுத்தி பேச வேண்டும்.இது வெற்றிகரமான பேச்சாக அமையும்.ஆரம்ப பேச்சாளர்கள்..இரண்டு அல்லது மூன்று கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு..ஐந்தாறு நிமிடங்களுக்குள் பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் இது நமக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.

குறிப்புகள் எடுக்கையில் பேச வேண்டிய கருத்துகள் ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு சொற்களுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.அதுதான் மனதில் பதியும்.மனதில் பதிந்ததைப் பேசி முடித்ததும்..நம் குறிப்பை எடுத்து..எல்லாம் பேசி விட்டோமா என்று பார்க்கலாம்.ஏதேனும் விட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை.ஏனெனில் நம் பேச்சை கேட்டவர்களுக்கு அது தெரியப் போவதில்லை.
தொடக்கப் பேச்சாளர்கள்..எழுதியிருக்கும் குறிப்பை இடையிடையே பார்த்து பேசலாம்..ஆனால் இதுவே பழகிவிடக் கூடாது.

மேடைப் பேச்சில் எழுதிப் படிக்கிறார்களே பொறுப்பானவர்கள் என்று கேட்கலாம்..பொறுப்பான பதவியில் உள்ளவர்கள்..வேறு ஏதும் பேசிவிடக் கூடாதே என்பதற்காக கையாளும் முறை இது.ஆனால் பேச்சாளர்களுக்கு ஏற்றதல்ல இது.பார்த்து படிப்பது படிப்பதாகவே இருக்குமேயன்றி..அது பேச்சாக இராது.அதில் உணர்ச்சியும் இராது..

இப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்களாக ஆகவே முடியாது
Thursday, July 14, 2016

கர்மவீரர் காமராஜர்


1)காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு அனைக்கட்டுகள் கட்டப்பட்டன.பேச்சிப்பாறை,மணிமுத்தாறு,வைகை,ஆழியாறு,பரம்பிக்குளம்,குந்தா,கீழ்-மேல் பவானி,கிருஷ்ணகிரி,சாத்தனூர்,கோமுகி அணைகள் கட்டப்பட்டன. அவர் அதனால் அணைகளின் நாயகன் எனப்பட்டார்.

2)காமராஜர் தனது 27 ஆவது வயதில் முதன்முறையாக சிறை சென்றார்.1930ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.பின் பல முறை சிறை சென்றுள்ளார்.தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார்.தவிர்த்து..நாட்டின் விடுலை எண்ணத்திலேயே இருந்து தன் திருமணத்தை புறந்தள்ளியவர்.

3)அமெரிக்க அதிபராய் இருந்த நிக்சன் இந்தியா வந்த போது காமராஜரைப் பற்றி கேள்விப் பட்டு அவரை சந்திக்க விரும்பினார்..ஆனால் காமராஜர் அதற்கான நேரத்தை ஒதுக்கவில்லை.உதவியாளர் 'ஐயா உலகே பெருமைப்படும் அமெரிக்க அதிபரே வலிய வந்து பார்க்கத் துடிக்கும் போது...'என இழுத்தார்.
காமராஜர் அவருக்கு பதில் அளித்தார்..'அவர் பெரிய ஆளா இருக்கலாம்னேன்..ஆனா நம்ம ஊர் அண்ணாதுரை அமெரிக்கா போனப்போ நிக்சனைப் பார்க்க விருப்பப்பட்டார்..நிக்சன் பார்க்கமுடியாதுன்னு சொல்லிட்டார்.நம்ம ஊர்க்காரரை பார்க்க விரும்பாதவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றார் த்ன்மானத் தலைவர்.

4)பள்ளியில் படிக்கவரும் மாணவர்கள்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு உடையில் வருவதால் அவர்கள் மனதில் வேற்றுமை ஏறபடும் என்பதால், குழந்தைகள் மனதில் பணக்காரன்,ஏழை என்ற ஏற்றத்தாழ்வு வராமல் தடுக்க என்ன செய்யலாம் என எண்ணிய காமராஜரின் சிந்தனையில் உதித்ததுதான் இலவச சீருடைத் திட்டம்

5)ரஷ்யா செல்லும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது..மாஸ்கோவில் குளிர் வாட்டி எடுத்தும், அவர் கோட் அணியாது எளிய கதர் வேட்டி,சட்டையுடன் இருந்தார்..'நான் எந்நேரத்திலும் எந்நிலையிலும் ஓர் ஏழை இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன்' என்றார்.

6)1956ல் பள்ளியில் இலவச உணவு திட்டமும்..1960ல் பள்ளியில் இலவச கல்வியும் இவர் காலத்தில்தான் அமுலாக்கப்பட்டது.

7)காமராஜர் கடைசிவரை எம்.டி.டி. 2727 என்ற எண்ணுள்ள ஒரே சவர்லே காரை உபயோகித்தார்...சென்னையில் வாடகை வீட்டிலேயுமே இருந்தார்..தன்னலமற்ற தலைவர் அவர்.

8)காமராஜர் பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது

Tuesday, July 12, 2016

மழை பார்த்தல்...

                                 
                     


 மழை பிரமிப்புதான்

முதல் மழை என்று பார்த்தேன்?

நினைவில் இல்லை

பார்க்கும் மழையெல்லாம்

முதல் மழைதான்

மனதில் மணம் நிரப்பி

நாசியிலும் ருசிக்க வைக்கிறது

எப்பணியாயினும்..

மழை வந்திடின்

அதைப் பார்த்தலே

முதல் பணி எனக்கு