Sunday, February 28, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1)ஆசிரியர்- (மாணவனிடம்) ஏண்டா..அவன் உன்னை Blade ன்னு..திட்டினதற்கு..அவன் கிட்ட சண்டை போடலாமா?
மாணவன்-அவன் என்னை வெறும Blade ன்னு சொல்லி இருந்தா சண்டை போட்டிருக்க மாட்டேன்..சார்..வாத்தியாரைப் போல நீயும் ஒரு Blade ன்னான்

2)தலைவர் திடீர்னு நீச்சல் கத்துக்க ஏன் ஆசைப்படறார்..
தன் கட்சி 'தேசிய நீரோட்டத்தில்' கலக்கும்னு சொல்லிட்டாராம்..அதனால்தான்

3)இடைத்தேர்தல்னா என்னென்னு தலைவருக்குத் தெரியல
எதை வைச்சு சொல்ற
இடைத் தேர்தல்ல வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம்ங்கறாரே!

4)தயாரிப்பாளர்- (இயக்குநரிடம்) நம்மப் படத்தைப் பார்க்கற ரசிகர்களிடையே..படத்தில் நான் ரசித்தக் காட்சின்னு ஒரு போட்டி வைக்கலாம்..அதை எழுதி அனுப்புபவருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்குவோம்னா.. படம் ஒடும்
இயக்குநர்- அப்படி யாராவது எழுதி அனுப்பிட்டா..
தயாரிப்பாளர்-நம்ம படத்தில அப்படி ரசிக்கற காட்சிதான் எதுவுமே இல்லையே

5)எல்லாருடைய வீட்டிலும் திருடறவங்க..அரசியல்வாதிங்க வீட்ல மட்டும் ஏன் திருடறதல்ல
சக தொழில் செய்யறவங்க வீடாச்சேன்னுதான்

6)சார்..நான் பழைய பஞ்சாங்கம் தான்..என்னை சுறுசுறுப்பு பத்தாது,காலி பெருங்காய டப்பா..அப்படி..இப்படின்னு என்ன வேணும்னா திட்டுங்க..ஆனா தயவு செஞ்சு போடா பொதிகைன்னு திட்டி இழிவு படுத்தாதீங்க..

Saturday, February 27, 2010

குச்சியாய் நான்

பேருந்து பயணத்தில்

நடத்துநர்

பக்கத்துப் பயணி

மின்தூக்கியில் உடன் வருபவன்

தாமதமாக வந்ததால்

கண்டிக்கும் அதிகாரி

தெருவை கடக்கையில்

தென்படும்

காவல் துறை அதிகாரி

முகம் தெரியா

மற்றும் பலர் -என

கண்டு புன்னகைப்பவன்

வீடு வந்ததும்

தெரிந்த முகங்களிடம்

மறப்பதேன்


2) தடகளப் போட்டி

பாதி தூரம்

குச்சி எடுத்து

ஓடி வந்தவள்

இரண்டாம் கட்டத்தில்

உன்னிடம் தர

வெற்றி பெற்ற

உனை பாராட்டி

முதலாமவளை

மறந்த

குச்சியாய் நான்

Friday, February 26, 2010

சுஜாதா..இன்னமும் வாழ்கிறார்


தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டிருந்தவர் சுஜாதா என்னும் ரங்கராஜன்..இவர் தொடாத சப்ஜெக்ட் இல்லை எனலாம்.இன்று அவரது நினைவு நாள்.

1935ல் சென்னையில் பிறந்த இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இவரது முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று..இதற்காக பிரசித்திப் பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார்..1993ல் மைய அரசின் அறிவியல் தொழில் நுட்ப விருதான NCTC விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையை பரப்பியதற்காக இவருக்கு அளிக்கப்பட்டது.

நடிப்பில்..நடிகர்கள் எப்படி நடித்தாலும்..அவர்கள் பாணியில் சற்றேனும் சிவாஜியின் பாணி தெரிவதை மறைக்கமுடியாது..

அதுபோல இன்றைய எழுத்தாளர்கள் யாராயிருந்தாலும்..அவர்கள் எழுத்தில் எங்கேயேனும் சுஜாதா எட்டிப்பார்த்துக் கொண்டு இருப்பார்.

அவர் 27-2-08ல் நம்மை விட்டு மறந்தாலும்..அவர் எழுத்துகளால் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டுதான் இருப்பார்.

அவரது ஒரு கதைக்கும்..யாவரும் நலம் படத்திற்கும் ஒற்றுமை இருந்ததைச் சுட்டிக்காட்டி..நான் எழுதிய பதிவு ஒன்றை இன்று மீள் பதிவாய் இட்டுள்ளேன்.


யாவரும் நலமும்...சுஜாதா கதையும்..


சமிபத்தில் வந்த படங்களில் யாவரும் நலம் வெற்றி பெற்ற படம்.இப்படம் இந்தியில் 13 B என்ற பெயரில் வந்தது.மாதவன் நடித்திருந்தார்.இப்படத்தின் கதையை ஹாலிவுட் படத்தயா ரிப்பாளர்கள் வாங்கியுள்ளதாக செய்தி வந்தது.

ஆமாம்..இதற்கும்...இப்பதிவின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என பார்க்கிறீர்களா?

இருக்கிறது..

சுஜாதாவின்..தர்மு மாமா..என்ற கதை எத்தனைப் பேர் படித்திருப்பீர்கள் என தெரியவில்லை.அக்கதையின் நாயகன் ராஜாங்கத்தின் வீட்டு டி.வி.,யில். ஊரெல்லாம் வயலும் வாழ்வும் நிகழ்ச்சி ஓடும்பொது..
வேறு நிகழ்ச்சி தெரியும்..அதில் அவர் மாமா தோன்றி..'மெடிகல் ஷாப்பிற்கு வா' என்பார்.

ராஜாங்கம்..பக்கத்துவீட்டிற்கு சென்று பார்த்தான்..அவர்கள் டி.வி.யில்..வயலும் வாழ்வும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

கடைசியில்..ஒரு எதிர்ப்பாரா திருப்பத்துடன் கதை முடியும்..

யாவரும் நலம் படத்தில்..ஒரு குறிப்பிட்ட நேரத்தில்..கதானாயகன் வீட்டில் மட்டும்..வேறு ஒரு மெகா சீரியல் ஓடும்..

சுஜாதா..அன்றே..எழுதியதை..இப்படத்தின் கதாசிரியர்..மையக் கருவாக எடுத்து..சற்று வித்தியாசமாகக் கொடுத்துள்ளார்.

இதை ஏன் எந்த ஊடகங்களும் சுட்டிக் காட்டவில்லை.

ஒரு நடிகன் எப்படி நடித்தாலும்..ஒரு கட்டத்தில்..சிவாஜியின் சாயல் தெரியும்..அதுபோல எழுத்துலக சிவாஜியான சுஜாதாவின் சாயல் இன்றி எக்கதையும் இருக்காது எனக் கூறலாம் போலிருக்கிறது.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(26-2-10)

நம்மிடம் உள்ள குறைகளை யார் சொன்னாலும் அவர்களுக்கு நாம் சந்தோஷத்துடன் நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் அவர்களை விட நமக்கு வேண்டியவர் வேறு யாரும் இருக்க முடியாது.

2)கப்பல் கடலில் மிதக்கும் போதுதான் கப்பலுக்கு மதிப்பு..அரசியல்வாதி பதவியில் இருக்கும் போதுதான் அவனுக்கு மதிப்பு..நம் பதிவை நாம் தமிழ்மணத்தில் இணைத்தாலும்..நம் நண்பர்களின் ஆதரவு ஓட்டு விழுந்து..வாசகர் பரிந்துரையில் பதிவு வந்தால் தான்..அதன் பதிவாளருக்கு மதிப்பு

3)எல்லாப் பழத்திற்கும் கொட்டை உள்ளே இருக்கும்..முந்திரிப் பழம் ஒன்றுக்கு மட்டுமே கொட்டை வெளியே இருக்கும்..எல்லாச் செடிகளும் பூத்துதான் காய்க்கும்..பூசணிச் செடி மட்டுமே காய்த்துதான்
பூக்கும்.

4)தனது ரசிகர்கள் சார்பில் நடத்திய மையம் பத்திரிகையை வெப்சைட் ஆக்க இருக்கிறாராம் கமல்.இதில் கமல் தனது 50 வருட திரைவாழ்க்கையை தொடராக எழுத இருக்கிறாராம்.'களத்தூர் கண்ணம்மா'வில் தொடங்கி இன்றைய நாள் வரையிலான சம்பவங்கள் இதில் இடம் பெற உள்ளன.அத்துடன் தமிழ்மொழியுடனான தனது தொடர்பு, பங்களிப்பு பற்றியும் இதில் குறிப்பிட உள்ளாராம்.இதற்கான டீமை ஏற்படுத்திவிட்டாராம்.இதற்காக கல்லூரி விரிவுரையாளர்கள் கொண்ட குழுவையும் ஏற்படுத்தியுள்ளாராம்.

5) ஒரு நாள் போட்டியில் 200 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை புரிந்துள்ள டெண்டுல்கர் இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ள ஓட்டம் 13447..இதில் 47 செஞ்சரியும்,54 முறை 50ஓட்டங்களும் அடங்கும்.தவிர்த்து 44 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
442 ஒரு நாள் போட்டிகள் ஆடி..17594 ஓட்டங்களும் 46 செஞ்சரியும்..93 முறை 50 ஓட்டங்களும் அடங்கும்.தவிர்த்து 154 விக்கட்டுகள் எடுத்துள்ளார்.

தன் ஒரு நாள் போட்டி உலக சாதனையை..ஒரு இந்தியரே முறியடிக்க வேண்டும்..அதுவே தன் விருப்பம் என்றுள்ளார்.

6) கொசுறு ஒரு ஜோக்

வேலை நேரத்தில பேசறவன் உருப்பட மாட்டான்னு சொல்றீங்களே..நீங்க என்ன வேலை செய்யறீங்க
வக்கீலா இருக்கேன்

Thursday, February 25, 2010

தங்கக் குடைகள்

மெலிதான இருள்

மெழுகுவர்த்தியின் சன்ன ஒளி

ஹேப்பி பர்த் டே பாடல்

அவனுக்கு பிறந்த நாள்

மெழுகுவர்த்திக்கு இறந்த நாள்


2)கொட்டும் மழையில்

தொப்பலாக நனைகிறாள்

இரு தங்கக் குடைகள்

காதில் நடனமாட..


3)பூக்களைப் பறிக்காதீர்

பூங்காவில் வாசகம்

பெருமூச்சு விடுகிறாள்

பேரிளம் பெண்


4)குளத்தில்

முழு நிலா

குளிரில் நடுங்குகிறது


5)கல்யாணம் பண்ணும் வரை பிள்ளை

கண்ணை மூடும் வரை பெண்

இது பழமொழியாம்

கண்ணை மூட வைத்ததும் பெண்

அதைச் சொல்ல மறந்ததேன்?

சச்சின் குடும்பம்

இதுவரை நாம் பார்த்திராத அரிய புகைப்படங்கள்..இங்கே பார்க்கவும்

நன்றி tech Sankar

Wednesday, February 24, 2010

கிரிக்கெட் தொடர் பதிவு...

நர்சிம் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.அவருக்கு என் நன்றி..

பதிவை ஆரம்பிக்கும் முன் உங்களுக்கு ஒரு சிறு புதிர்..


இந்த கிரிக்கெட் வீரர் நாற்பத்திரெண்டு ஓட்டங்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன்..நாற்பத்தேழு ஓட்டங்கள் எடுத்து தன் அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கினார்.அந்த மைதானத்தில் இதுவரை இவர் சாதனை முறிக்கப்படவில்லை..இனியும் முறிக்கப்படாது..அந்த வீரர் யார்? அந்த மைதானம் எது? இதற்கான விடை உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் கிரிக்கெட் புலி என ஒப்புக் கொள்கிறேன்..விடை தெரியாதவர்களுக்கு பதிவின் முடிவில் விடை.

இனி தொடர் பதிவு..

1)பிடித்த கிரிக்கெட் வீரர்கள்- (சந்தேகமில்லாமல்) சச்சின் தான்,அடுத்து சந்தர்பால் சொல்லலாம்

2)பிடிக்காத கிரிக்கெட் வீரர் - மனோஜ் பிரபாகர், மியான்தாத்,ஹர்பஜன்

3)பிடித்த வேகப் பந்து வீச்சாளர்- கர்ட்னி வால்ஷ்

4)பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்- யாருமில்லை

5)பிடித்த சுழல் பந்து வீச்சாளர்-அப்துல் காதர் ,ஷேன் வார்ன், முரளிதரன்

6)பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர்- மணிந்தர் சிங்

7)பிடித்த வலது கை துடுப்பாட்ட வீரர்- சச்சின்,ரிக்கி பாண்டிங், வெங்சர்கார்

8)பிடிக்காத வலது கை துடுப்பாட்ட வீரர்- மியான்தாத்

9)பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்- ஆலன் பார்டெர், வடேகர்

10)பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்-வினோத் காம்ப்ளி (திறமை இருந்தும்..நம்பிக்கையின்றி,முயற்சி யின்றி அழிந்தவர்)

11)பிடித்த களத்தடுப்பாளர்-ஒரே சமயம் அணியில் இருந்த அபீத் அலி, சோல்கார், வெங்கட் மற்றும் வடேகர்

12)பிடிக்காத களத்தடுப்பாளர்- பிரசன்னா

13)பிடித்த ஆல்ரவுண்டர்- சச்சின்,ஜெய சூர்யா, ரிச்சர்ட்ஸ்,லாரா

14)பிடித்த நடுவர்- ஆடும் அணியில் தங்களையும் ஒரு அணிக்கு ஆடுபவர் என எண்ணாத அனைத்து நடுவர்களும்

15)பிடிக்காத நடுவர்- ஆடும் அணியில் ஒரு அணியில் தங்களையும் அந்த அணி வீரர் என எண்ணுபவர்களை

16)பிடித்த நேர்முக வர்ணனையாளர்- இன்று ரவி சாஸ்திரி
அன்று ரேடியோ வர்ணனையாளர் ஆனந்த ராவ்..(ஆங்கிலத்தில்)(அப்போது ரேடியோவில் ஹிந்தி வர்ணனை வரும்போது..காஃபீ ஏக் ரன்..காஃபி தோ ரன் என்பார்

கள்..இவர்கள் எவ்வளவுதரம் காஃபி சாப்பிடுவார்கள் என எண்ணியதுண்டு :-)))

17)பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்- சித்து

18)பிடித்த அணி- இந்தியா என்று சொல்ல ஆசைதான்..இருந்தாலும்..அமைதி..ஸ்போர்ட்ஸ் மென்ஷிப் இவற்றை வைத்து வெஸ்ட் இண்டீஸ் பிடிக்கும்

19)பிடிக்காத அணி- ஆஸ்திரேலியா (காரணம் தேவையில்லை என எண்ணுகிறேன்)

20)விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கான போட்டி- ஸ்ரீலங்கா..இந்தியா

21)விரும்பாத அணிகளுக்கான போட்டி- கனடா..ஆஸ்திரேலியா

22)பிடித்த அணித்தலைவர்- ரிச்சர்ட்ஸ், வடேகர்

23)பிடிக்காத அணித்தலைவர்- ரிக்கி பாண்டிங்

24)பிடித்த போட்டிவகை- ஒன் டே மேட்ச்

25)பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- கிரீனிட்ஜ் மற்றும் ஹைன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

26)பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- ரவிசாஸ்திரி.. மனோஜ் பிரபாகர் போன்றவர்கள் ரெகுலர் ஓபனர்ஸுடன் ஓபன் செய்து விரைவில் அவுட் ஆவது பிடிக்காது

27)சிறந்த டெஸ்ட் வீரர்- சச்ச்ன்,திராவிட்,லாரா

28)கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்- கபில்தேவ்...சோபர்ஸ்..ரிச்சர்ட்ஸ்

ஒரு தகவல்-
1978ல் இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்ற போது ஒரு போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அமீன் லக்கானி இரு இன்னிங்ஸிலும் 'ஹாட்ரிக்' எடுத்தார்.இதில் என்ன சிறப்பு என்றால் ,இரு இன்னி
ங்ஸிலும் அவர், அதே ஆட்டக்காரர்களை வீழ்த்தினார்.அந்த ஆட்டக்காரர்கள் மொகிந்தர் (ஸ்கோர் 11 அண்ட் 12),கிர்மானி 0 & 0, கபில்தேவ் 0 & 0

முதலில் சொன்ன புதிருக்கான விடை - ஹி..ஹி..ஹி..அது நானே தான்.அம்பத்தூர் வெங்கடாபுரத்திற்கும் வரதராஜபுரத்திற்கும் இடையே நடந்த போட்டியில் என் சாதனை இது..அந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது அந்த மைதானத்தில்..ஏனெனில் அந்த மைதானம் இருந்த இடத்தில் கான்கிரீட் வீடுகள் வந்துவிட்டன.

Tuesday, February 23, 2010

அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும் (சிறுகதை) பாகம் - 3

(அகநாழிகையின் சிறுகதையின் தொடர்ச்சி..)

வாலிப, வயோதிக அன்பர்களே !

நாம் ஏற்கனவே படித்த ‘அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும்‘ கதையின் மூன்றாவது பாகத்தை தங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நேற்று வெளியான முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் வாசித்து மூன்றாவது பாகமும் பிடித்திருந்தால் பெருவாரியான ஓட்டளித்து இக்கதையை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். (என்னதான் இருந்தாலும் வரலாறு முக்கியம் அல்லவா..) மேலும் இவ்வாறாக செய்வதன் மூலம் இராமசாமி என்கிற ‘தீப்பொறி‘யின் எழுத்துலக வாழ்க்கையில் விளக்கேற்றும்படி கோடானுகோடி இரசிகப் பெருமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

வெற்றி நடை போடுகிறது !
அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும் (சிறுகதை)

பாகம் - 3

ஒரு நாள் இராமசாமி..அலுவலகம் செல்கையில் நண்பன் கதிரேசனை பேருந்தில் சந்தித்தான்..அவன் தலைமைச் செயலகத்தில் வேலை செய்வதாகக் கூறினான்..

இராமசாமியை பார்க்க பரிதாபமாக இருந்தாலும்..அவன் மனதில் ஏதோ பாரம் இருப்பதைப் போல இருந்ததாலும்..'ஏன் இராமசாமி..என்னவாயிற்று உனக்கு?' என்றான் கதிரேசன்.

இராமசாமி தான் எழுத்தாளர் ஆன கதையையும்..புத்தகம் வெளிவந்ததையும்..பின் நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவனிடம் பகிர்ந்துக் கொண்டான்.

கதிரேசனும்..'அடடா..ஆமாம்..துரை கூட என்கிட்ட சொன்னான்..உன் புனை பெயர் கூட ஏதோ அரிசிப்பொரி...' என இழுத்தான்.

இராமசாமிக்கு..கோபம் சுர் ரென தலைக்கு ஏறியது.எழுத்தாளனுக்கான கர்வம் தலைதூக்கியது..'யாரைப் பார்த்து..அரிசிப்பொரி..என்கிறாய்..தீப்பொறி..' என்றான் .முண்டாசுக் கவியின் கோபப் பார்வைகளை படங்களில் பார்த்திருக்கிறானே..அதே போன்று கண்களை உருட்டி ..மிரட்டி..'என் புத்தகத்தின் பெயர் ..அக்கினிக் குஞ்சும் ஆங்கோர் பொந்தும்..'

ஆடிப்போன கதிரேசன்..'அப்படியா..கொஞ்சம் முயன்றால்..உன் புத்தகத்தை நூலகங்களுக்கு அனுப்பலாமே..தமிழக அரசு..இப்போவெல்லாம் ஆயிரம் பிரதிகள் நூலகங்களுக்கு வாங்குகிறதே' என்றதுடன் நில்லாது..'இன்னொரு புத்தகமும் தயாரித்துக் கொள்..இரண்டையும் சேர்த்து நூலக ஆர்டருக்கு முயற்சிப்போம் ஆனால்..என்ன..நாற்பது ரூபாய் புத்தகத்திற்கு..இருபது ரூபாய் போல்தான் விலை நிர்ணயிப்பார்கள்' என்றான்.

பரணில் தூங்கிக்கொண்டிருக்கும் புத்தகங்களுக்கு விடிவு காலம் வந்துவிட்டதாய் இராமசாமி நினைத்தான்.'சரி..கதிர்..இன்னும் ஒரே மாதத்தில் அடுத்த புத்தகம் தயாராய் இருக்கும்..புத்தகத்தின் பெயர் கூட தீர்மானித்து விட்டேன்.."வெந்து தணிந்தது காடு.." ' என்றான்.

அடடா..அருமையான தலைப்பு..என்றான் கதிர்.

மாலை வீடு திரும்பிய இராமசாமி..மீண்டும்..வெள்ளைத் தாள்..பேனா வுடன் அமர்ந்து விட்டான்.இவனுக்கு மீண்டும் என்னவாகிவிட்டது என மனைவி வியந்தாள்.

நடந்த விஷயங்களை கேள்விப்பட்ட துரை..கதிரிடம் " ஏண்டா இப்படி செஞ்சே..நூலக ஆர்டர் வருவது அவ்வளவு எளிதா?' என்றான்..

'அதெல்லாம் பகீரத பிரயத்னம்..ஆனானப்பட்ட பெரிய பதிப்பகங்களே..ஆர்டர் கிடைக்காது அவதிப் படுகின்றன..இராமசாமியைப் பார்க்க பாவமா இருந்தது..எழுத முடியா ஏக்கம் முகத்தில் தெரிந்தது..அதனால்தான் அப்படி சொன்னேன்' என்றான் கதிர்.

இராமசாமியோ..தனது புத்தகங்கள்..இரண்டாம் பதிப்பு..மூன்றாம் பதிப்பெல்லாம் வருவது போல கையில் வெற்றுத் தாளை வைத்துக்கொண்டு..விழித்தபடியே கனவு கண்டான்.

மேலும் ஆயிரம் புத்தகங்களை வைக்க பரணில் இடம் இருக்குமா..? என்பது அவன் மனைவியின் கவலை.

Monday, February 22, 2010

பூ வாசம்நாக லிங்கப் பூவின்

மகரந்த வாசம்

பொன்வண்டாய் நான்

நாட்குறிப்பு பக்கங்களில்

மையின் வாசனை

நுகரா ஏடுகள்

வாசிக்கவும் யோசிக்கவும்

வசப்படாமல்

பொம்மையாய் மனம்

தூங்காதே விழித்திரு

தூரத்தே கேட்கும் குரல்

கண் விழிக்கையில்

அறை முழுதும்

நாகலிங்கப் பூவாசம்

Sunday, February 21, 2010

இந்த பதிவு..யாரையும்..எந்நிகழ்ச்சியையும் குறிப்பிடுவன அல்ல..

வானமெங்கும் சூரியன்

மலைகள் மீது

நீர்க்கடல் மீது

தரையின் மீது

தருக்களின் மீது

சுட்டெரிக்கிறது

ஆயினும் அதை

மிரட்டவோ

முறைக்கவோ

மன்னிப்புக் கேட்க வைக்கவோ

மாநிலத்தவர்க்கு இயலாது.


2) சற்றே மாற்றப்பட்ட பாரதியின் வரிகள் சில...

இரண்டு பாம்புகள் பேசிக்கொள்கின்றன

முதல்பாம்பு- உன்னுடன் இருப்பதில் எனக்கு இன்பமில்லை.உன்னால் என் வாழ்வு விஷமாகிறது

இரண்டாம் பாம்பு-உன்னுடன் இருப்பதால் ..எனக்கும் இன்பமில்லை..உன்னால் என் மனம் வேதனை அடைகிறது

முதல்- நீ என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்

இரண்டாவது- நீதான் மன்னிப்புக் கேட்க வேண்டும்

முதல்- இனி நீ எனக்குப் பகை

இரண்டாவது-நீ என் விரோதி

முதல்-நான் உன்னை அழிக்கப் போகிறேன்

இரண்டாவது-நான் உன்னைக் கொல்லப் போகிறேன்

ஒன்றுடன் ஒன்று அடித்துக் கொண்டு மடிகின்றன..

சூரியனின் பிரகாச ஒளி அவற்றில் பட்டு பிரகாசிக்கிறது.

வாய் விட்டு சிரியுங்க..

1) அந்த டாக்டருக்கு வாஸ்து சாஸ்திரமும் தெரியும்னு எப்படி சொல்ற
நோயாளிக்கு ஆபரேஷன் செய்யறப்போ லிவர் இருக்கிற இடம் சரியில்லை அதை 'லங்க்ஸ்' கிட்ட மாத்திடணும்னு சொல்றாரே!!

2)நல்ல மழையில தலைவர் ஏன் பக்கத்தில இருக்கற பள்ளிக்கூடத்திற்குப் போகணும்னு சொல்றார்
யாரோ அவரை மழைக்குக் கூட பள்ளிக்கூட நிழல்ல ஒதுங்காதவர்னு சொல்லிட்டாங்களாம் அதனாலத்தான்

3)அந்த broadband நிறுவனம் முன்னால அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்கார்
ஆயிரம் ரூபாய்க்கு பில் வந்திருக்காம்..
அது அதிகம்னு சொல்றாரா
இல்லை அவர் வீட்ல அந்தக் கம்பெனியோட broadband இணைப்பேக் கிடையாதாம்.

4)அங்கே நடந்த கொள்ளைக்கு மோப்ப நாய்க்கு பதிலா போலீஸ் ஏன் எறும்புப் படையைக் கூட்டிட்டு வந்திருக்காங்க
கொள்ளைப் போனது பத்து மூட்டை சர்க்கரை..அதனால்தான்

5)அந்தக் கல்யாணம் ரயில்வே போர்ட்டர் வீட்டுக் கல்யாணம்னு எப்படி சொல்ற
முதல் பந்தியில சாப்பிட டவலைப் போட்டு இடம் பிடிச்சு அந்த இடத்தை அஞ்சு ரூபாய்க்கு விற்கிறாரே

6)டாக்டர் ஒரு மாசமா தூக்கமே இல்லை
இவ்வளவு நாள் என்ன செஞ்சீங்க...முதல்லயே வரதுக்கு என்ன
நீங்க பர்மனென்டா தூங்க வைச்சுட்டா என்ன பண்றதுன்னு தான் வரலே

Saturday, February 20, 2010

இறைவன் ஒரு பச்சோந்தியா...

இறைவன் இருக்கின்றானா
இருந்தால்
அவன் நிறம் என்ன?
வினவினான் ஒருவன்
அவன் பச்சை நிறம்
மரம்,செடி,கொடி,புல்
அவன் நீல நிறம்
வானத்தைப் போல
அவன் பழுப்பு நிறம்
பாறை, மலையைப் போன்று
அவன் வெண்மை நிறம்
உச்சியிலிருந்து விழும் நீரானபோது
அவன் சிவப்பு நிறம்
கீழ் வானத்தில் சூரியன்
வந்திடும் போது
அவன் மஞ்சள் நிறம்
வெயில் சுட்டெரிக்கும் போது
சூரியன் மறைந்ததும்
அவன் நிறம் கருப்பு
வானவில்லாய் தோன்றும் போது
பல நிறங்கள்
என்றதும்
பேதை கேட்டான்
அப்போது அவன் ஒரு
பச்சோந்தியா என
அவன் செம்புலப்புயல் நீர்
என்றிட்டேன்.

(மீள்பதிவு)

Friday, February 19, 2010

அறியாமை

அறிவாளி என்றே

அவனைப் போற்றினேன்

பின்னரே தெரிந்தது

அறிவிலி அவனென்று


2)உயரே பறக்கையில்

பாராட்டிய உலகு

கீழே விழுகையில்

அன்றே தெரியும் என

எள்ளி நகைக்கிறது


3)கடவுள் அன்பானவர்னு

சொன்ன அப்பா

தப்பு செஞ்சா

கடவுள் கண்ணைக் குத்தும்னு

சொல்றாரே

இவர்களில் யார் நல்லவர்

யார் கெட்டவர்

அறியாமையில் சிறுவன்


4)கடல் நீரை

குடிநீராக்கி

மேகப் பைகளில்

நிரப்பி அனுப்புகிறது

இயற்கை நமக்காக


5)பேச்சுத் தமிழ்

எழுத்துத் தமிழ்

கவிதைத் தமிழ்

மேடைத் தமிழ்

இலக்கியத் தமிழ்

அனைத்தையும் விட

எனக்குப் பிடித்தது

நீ பேசும்

கொஞ்சும் தமிழ்

தேங்காய். மாங்காய்.. பட்டாணி.. சுண்டல்(19-2-10)

தாய்மையின் குழைவும், தந்தையின் பரிவும் பூமியின் பொறுமையும், பொறுப்புள்ள புன்னகையும், துணை வாடத் தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகிறதோ..அங்கே வாழ்வதுதான் காதல் - கண்ணதாசன்

2)குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தான் கண்ணீர் உற்பத்தியாகிறது.அதாவது tearducts .

3)நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்த போது ஃபோரே என்னும் இருபது வயது பெண் மீது காதல் வயப்பட்டு..அவளை பிரிய மனமின்றி..ராணுவ வீரன் போல அவளுக்கு உடையணிவித்து யுத்தகளத்திற்கு அழைத்துச் சென்றானாம்.நெப்போலியன் காதலித்த பெண்களின் எண்ணிக்கை ஐம்பதற்கும் மேல் ஆகும்.

4)இந்த வருடம் இப்போது நடைபெறும் ஃபெப்ரவரி மாதத்திற்கு ஒரு விசேஷம் உண்டு.அதாவது ஓன்றாம் தேதி..வார முதல் நாள் திங்களன்று ஆரம்பிப்பது போல வரும் மாதம்.இம்மாதம் எல்லாக் கிழமைகளும்..நான்கு..நான்கு வரும்..இது போல பதினோரு வருடங்களுக்கு ஒரு முறை வருமாம்.

5) அந்த பிரபல நடிகர் நடித்த முதல் படத்தில்..எந்தெந்த இடங்களில் அவர் சிறப்பாக நடிக்கவில்லை என நினைத்தார்களோ..அந்தக் காட்சிகளை..சுமார் ஆறாயிரம்..ஏழாயிரம் அடிகள் திரும்பவும் செட் போட்டு ஏ.வி.எம்., ஸ்டூடியோ விலும்..வெளியிலும் சுமார் இருபது நாட்கள் ஒரே மூச்சில் எடுத்து முடித்தார்கள்.அந்தப் படம் 'பராசக்தி' நடிகர் சிவாஜி கணேசன்.

6)ஒரு வருடத்திற்கு 34 முறைகள் மத்திய அமைச்சர்களின் குடும்பங்கள் இலவசமாக விமானப் பயணம் செய்யலாமாம்.

7) கொசுறு- ஒரு ஜோக்

தமிழ் அகராதியை வைத்துக் கொண்டு அமைச்சர் என்ன தேடிக்கொண்டிருக்கிறார்
தான் அடுத்து என்ன பட்டம் வாங்கலாம் என்று பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்

Thursday, February 18, 2010

கொள்ளை..(ஒரு பக்கக் கதை)

காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும்.

கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில் ..ஏதேனும் ஒரு இடத்தில் பட்டப் பகலில் கொலை..கொள்ளை என்றிருக்கிறது.நாடே கெட்டுப் போச்சு..

நான் நினைத்தது சரி....'அசோக் நகரில் நேற்றும் பகல் கொள்ளை' என்றது தலைப்புச் செய்தி.அதைப் பார்த்ததும்..உடன் மனைவையைக் கூப்பிட்டேன்..'பார்த்தியா..நேற்றுக் கூட நம்ம ஏரியாவிலே திருட்டுப் போயிருக்கு..' என்றவாறு ..அவள் கழுத்தில் அணிந்திருந்த கிட்டத்தட்ட பத்து பவுன் சங்கிலியைப் பார்த்தேன்.

'மேல படியுங்க' என்றாள்.

'அசோக் நகர்..18 ஆம் தெருவில் உள்ள சுபிக்க்ஷா அடுக்குமாடி குடியிருப்பில்..இரண்டாம் தளத்தில் உள்ளது 8 ஆம் எண் உள்ள..ஃப்ளாட்.அங்கு வசிக்கும் கந்தசாமி என்பவரும்..அவரது மனைவி லட்சுமியும் வேலைக்குச் செல்லும் தம்பதிகள்.அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம்.நேற்றும்..அப்படிச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர்கள்..வீடு திறந்திருப்பதைப் பார்த்து..உள்ளே சென்று பார்த்த போது..பீரோவை உடைத்து 35 சவரன் நகைகள்..ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்'

படித்து முடித்து..'பார்த்தியா நாம ஜாக்கிரதையா இருக்கணும்' என்றேன்.

திடீரென ..'என்னங்க..நம்ம ஃப்ளாட்டும் 18ஆவது தெருதானே..' என்றாள் சகதர்மணி .

'சுபிக்க்ஷா' நம்ம ஃப்ளாட் தானே.'

'நம்ம வீட்டு நம்பர் 7..அப்போ 8..அடடே..நம்ம பக்கத்து வீடுங்க..' என்றாள் படபடப்பாக

Wednesday, February 17, 2010

சிறு பட்ஜெட் படங்களை விழுங்கும் தமிழ்ப்படங்கள்

2010ம் ஆண்டு பிறந்து 45 நாட்களுக்குள் சில நல்ல தமிழ்ப் படங்கள் வந்துள்ளன.ஆனாலும் அவை எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை.அவற்றிற்கு பல காரணங்கள் சொல்லப் பட்டாலும்..முக்கியக் காரணமாக நான் நினைப்பது திரையரங்கங்கள் பற்றாக்குறை.படங்கள் வரும் அளவிற்கு திரையிட அரங்குகள் இல்லை.

அந்த நாட்களில் படங்கள் வந்தாலும்..சென்னையை பொறுத்த மட்டில்..ஒரு படம் அதிக பட்சம் நான்கு அரங்குகளிலேயே வெளியாகும்..வெளியான நான்கு தியேட்டரிலும் நூறு நாட்கள் ஓடும்..அரங்கு நிறைந்த 100 காட்சிகள் என்றெல்லாம் விளம்பரம் வரும்.

ஆனால் இப்போதோ..பிரபல தயாரிப்பாளர்கள்..நடிகர்கள் படம் பல முக்கிய தியேட்டர்களைப் பிடித்துக் கொண்டுவிடுகின்றன.தவிர்த்து..திரைக்கு வந்து சில நாட்கள் தினமும்..மொத்தத் தியேட்டரிலும் நாளொன்றுக்கு 100 காட்சிகள் ஓடுகின்றன..அதாவது..படம் தோல்வியுற்றாலும்..மக்களிடமிருந்து..அதிக பட்சம் பணம் சில நாட்களில் கறந்து விடுகிறார்கள்.சமீபத்திய உதாரணங்கள்..கந்தசாமி,வேட்டைக்காரன்,ஆயிரத்தில் ஒருவன்,குட்டி ஆகியவற்றைச் சொல்லலாம். சமீபத்தில் வந்த அசல்,தீராத விளையாட்டுப் பிள்ளை ஆகியவை இப்போது கிட்டத்தட்ட 70 காட்சிகள் தினம் நடைபெறுகின்றன.

இந்தப் போக்கால்..மீடியம் பட்ஜெட் படங்கள்..நன்றாக இருந்தாலும் தியேட்டர் கிடைப்பதில்லை.அப்படியே கிடைத்தாலும்..இப்படங்கள் அவற்றில் ஒரிரு காட்சிகளே ஒரு நாளைக்கு நடைபெறுகின்றன.இதற்கு உதாரணமாக போர்க்களம்,நாணயம் ஆகியவற்றைச் சொல்லலாம்.இவையும் நல்ல வரவேற்பு பெற வேண்டிய படங்கள்.சின்ன மீனை பெரிய மீன்கள் சாப்பிட்டு விட்டன.தவிர்த்து..ஒரு மினிமம் பட்ஜெட் படத்திற்கு பெரிய தியேட்டரில் 150 ரூபாய் கொடுக்க நம்ம ஆளுங்க தயாராய் இல்ல.

தீராத விளையாட்டுப் பிள்ளை பெரிய பேனர் என்பதால்.. சில படங்கள் வசூல் சற்று திருப்திகரமாக இருந்தும் அவற்றை எடுத்துவிட்டு இப்படம் போடப்பட்டுள்ளது.

ஜக்குபாய், தியேட்டர் கிடைக்காததால் பொங்கலன்று வெளியாகவில்லை..அன்று வெளியாகி இருந்தால்..இன்னும் சில லட்சங்கள் அதிகம் வசூலித்திருக்கும்..

தமிழ்ப்படம்..வெளிவந்த அன்று..அதற்கு வழிவிட குட்டி படம் சில தியேட்டர்களிலிருந்து எடுக்கப்பட்டது.

சமீபத்தில்..பண்டிகைகளில் நான்கு படங்கள் வரவேண்டும்..மாதம் இவ்வளவு படம் வரவேண்டும் என்றெல்லாம் தீர்மானித்த பட அதிபர்கள்..ஒரு படம் அதிக தியேட்டர்களை எடுத்துக் கொண்டு..மற்ற படங்களுக்கு தியேட்டர் இல்லை என்ற நிலையையும் மாற்ற வேண்டும்..

இல்லையேல்..இதே போக்கு நீடித்து..பெரிய பேனர்..நல்ல சேனல் விளம்பரம் உள்ள படங்கள் மட்டுமே..தரம் தாழ்ந்திருந்தும் வரும் நிலை ஏற்படும்.தரமுள்ள மீடியம் ,குறைந்த பட்ஜெட் படங்கள் வெளிவரா நிலை ஏற்படும்.

Tuesday, February 16, 2010

கேபிள் சங்கரின் சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை

கேபிள் சங்கரின் வலைப்பூவை படிப்பவர்கள் கண்டிப்பாக 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' படித்திருப்பார்கள்.ஆனால் அந்தப் பெயரைத் தாங்கி வந்திருக்கும் அவரின் சிறுகதைத் தொகுப்பு..அவரை அறியாத..சராசரி வாசகர்கள்..இப் புத்தகத் தலைப்பைக் கண்டு..பிறமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட கதைகள் போலும்..என்று என்ன வாய்ப்புண்டு.

இத் தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் தரிசன..சாரி..நிதர்சனக் கதைகள்.

1) முத்தம்- 'ஹலோ..9840071..' கேபிள்ஜியா..கதையை அழகு நடையில் எழுதியுள்ளீர்கள்.ரமேஷிற்கு அவள் முத்தமிட்ட உதடுகளில் லேசான வலி என்ற முடிவின் போது..அந்தப் பெண்ணை எண்ணி நமக்கும் மனதில் சற்று வலிக்கவே செய்கிறது.

2)லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்- சிலர் புத்தகம் படிக்கையில்..கடைசி பக்கத்திலிருந்து படிப்பார்கள்.அதுபோல் படிப்பவர்கள்..இக்கதையின் கடைசி இரு வரிகள் படித்தால்..'உங்க வயசை தெரிஞ்சுக்கலாமா? என்றதற்கு..சிரித்தபடியே..சுற்றிலும் உள்ள பெண்களையும் பார்த்து ரகசியமாய் சொல்வதுபோல என் காதருகே 'எழுபது' என்று கத்தினான்..
எங்கே எழுந்துட்டீங்க..இந்தக் கதையைப் படிக்கத்தானே..

3)கல்யாணம்-இக்கதையைப் பற்றி..ஆறாவது மாடியில் இறங்கிட்டு..அஞ்சாவதுக்கு நடந்து வந்துடுங்க என்ற கேபிளின் வரிகளே என் விமரிசனம்

4) ஆண்டாள்-ஆண்டாள் TVS50ல போகும்போது அசுர வேகத்தில சைக்கிள்லப் போய் அவ முன்னால நின்றேன் என்னும் வரிகள்..சங்கர் கண்டிப்பாக தமிழ்ப்பட இயக்குநர் ஆகும் தகுதியை பெற்று விட்டார் என்பதைக் குறிக்கிறது.

5)ஒரு காதல் கதை.. இரண்டு கிளைமாக்ஸ் - இந்தக் கதைக்கு இரண்டு முடிவு..இரண்டும் அருமை.."ஏற்கனவே வெடித்து..வழிய தயாராய் இருக்கிற குலுக்கிய ஷாம்பெயின் பாட்டில் போல் பொங்கி நுரைத்து.." சங்கர் எப்படி இப்படியெல்லாம்ம்..ம்..ம்...ம்..!!!!

6)தரிசனம்-யதார்த்தமான கதை..கடவுளின் அவதாரங்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஏமாற்று பேர்வழிகள் என்பதை நாசுக்காக சொல்லும் கதைகள்..'துரைமுருகன்' ஞாபகத்தில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

7)போஸ்டர்- எனக்கு மிகவும் பிடித்திருந்தது.நல்ல நடை..எதிர் பாரா முடிவு..வெல்டன்

8)துரை-நான்-ரமேஷ் சார்- துணை நடிகைப் பற்றிய கதை.அவள் படும் துன்பங்கள்..கணவன் துரையின் போக்கு..இயக்குநரின் எதிப்பார்ப்புகள்..நடுவே ரமேஷ் போன்றவர்கள்..பாத்திரப் படைப்புகள் அருமை. கேபிள்..இக்கதைக்காக பிடியுங்கள் பூங்கொத்து

9)என்னைப்பிடிக்கலையா- காதலித்து மணந்த கணவனிடமிருந்து..திருமணத்திற்குப் பின் அங்கீகாரம் கிடைக்கவில்லையெனில்...சிலர் வாழ்வு தடுமாறிப் போகலாம் என்பதை சொல்லும் கதை

10)காமம் கொல்-ஆகா..கேபிள்..இதை இணையத்தில் படித்திருந்தாலும்..அச்சில் படிக்கையில்..தைரியம்தான் உங்களுக்கு..

11)ராமி-சம்பத்-துப்பாக்கி - விமரிசிக்க ஒன்றுமில்லை

12) மாம்பழ வாசனை- கேபிளாருக்கான தனித்தன்மையான வாசனை இக்கதை

13)நண்டு-இந்த கதையின் முடிவை , முதலிலேயே யூகிக்க முடிந்தாலும்..கடைசி பத்தி படிக்கையில் மனம் சற்று சங்கடப் படவே செய்தது..அநேகமாக மார்பு என்ற சொல் இக்கதையில் மட்டுமே இல்லை எனலாம்.

அருமையான விருந்துக்கு அமர்ந்துக் கொண்டிருக்கும் போது..இலையின் நடுவில் இனிப்பைப் போட்டுவிட்டு..ஓரத்தில் அன்னம் வைத்ததைப் போல..சற்று திகட்டவே செய்கிறது அளவிற்கு அதிகமாக சில இடங்களில்.

கேபிளாரின் திறமைக்கு..இன்னும் பல அருமையான தொகுப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.

பரிசலின் புத்தகம்..ஒரு பறவையின் கண்ணோட்டத்தில்

பரிசல் இணையதளத்தில் எழுதிய கதைகளும்..ஒன்றிரண்டு விகடனில் வந்தவையும் சேர்த்து மொத்தம் 17 சிறுகதைகளின் தொகுப்பாக நாகரத்னா பதிப்பகத்தின் சார்பில் சக பதிவர் குகன் பதித்துள்ள புத்தகம்'டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்"

இதில் இரு கதைகளைத் தவிர மற்றவை மிகச் சிறியக் கதைகள்.

தனிமை கொலை தற்கொலை- விக்னேஷ்,அமுதன் இரு நண்பர்கள்.விக்னேஷ்..மிருதுளா என்ற பெண்ணிடம் நட்பு பாராட்ட..அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமுதன்..நண்பனைப் பற்றி மிருதுளாவிடம் போட்டுக் கொடுக்க..நட்பில் விரிசல் ஏற்படுகிறது.இதனால்..தன் நண்பன் அமுதனைக் கொல்ல விழைகிறான் விக்னேஷ்..ஆனால் அமுதனோ தன் நண்பன் தன் நண்பன் தன்னை விட்டு விலகுவதுக் கண்டு..வேறு ஒரு முடிவு எடுக்கிறான்..கொஞ்சம் பரிசல் நடை..கொஞ்சம் சுஜாதா நடை

2)காதல் அழிவதில்லை- இதிலும் நண்பர்கள் இருவர்..மகேஷ்வரி என்னும் பெண்..காதல் வயப்படும் காதலன் என்னவெல்லாம் பேசுவான்..எப்படியெல்லாம் பேசுவான்..என்பதையெல்லாம் இயல்பாக எழுதியுள்ளார்..உண்மைக் காதல் என்றும் அழியாது என்கிறார் போலும்..

3)காதலிக்கும் ஆசை இல்லை- இரு பெண்கள்..ஒரு ஆண்..கேசவ் வை திவ்யா காதலிக்க..அவளுடன் அந்த எண்ணத்தில் பழகாத கேசவ் அதை நாசுக்காக அவளுக்குத் தெரிவிக்கிறான்..இது கதை..திவ்யாவின் தோழியின் பெயர் தீபா என்று இருப்பதால் இது சாத்தியமாகிறது.

4)பட்டெர்ஃபிளை எஃபெக்ட்- கதையில் வரும் சிறுமிகள் மீரா..மேகா..வேலைக்கு செல்லும் அம்மா உமா..பரிசலின் உண்மைக்கதையாய் இருக்கக்கூடும்..மீரா தி கிரேட் என்று சொல்லவைக்கும் கதை.

5)இருளின் நிறம்- மின்வெட்டை ஆதரிக்கும் பேரப்பிள்ளைகளிடம் பாசமுள்ள பாட்டியின் கதை..விகடனில் வெளிவந்து பாராட்டுப் பெற்றது.

6)நான் அவன் இல்லை- சார்லி..வேலை தேடப்போய் வம்பில் மாட்டிக் கொள்ள..அவனை காவல் துறையிடம் இருந்து காப்பாற்ற யாருமே இல்லை..மணிமாறன் அதிர்ஷ்டக்காரன்..அவன் யார் என்கிறீர்களா..சார்லி சொல்லும் 'நான் அவனில்லை' யில் இருக்கிறது விடை

7)மாற்றம்- தான் சிறுவனாயிருந்தபோது முடி வெட்டிக் கொள்ள சென்ற முடிதிருத்தகத்தையும்..கால மாற்றத்தில்..அந்த கடைகள் எல்லாம் நவீன வசதிகளுடன் மாறிவிடுவதையும்..அப்படி தான் சென்ற ஒரு கடையின் முதலாளி பழைய கடையின் ஆளே என்று அறிகிறான் அவன்..காலத்தின் மாற்றம்..அந்த மனிதனின் ஒரு பழக்கத்தை மட்டும் மாற்றவில்லை என்கிறது கதை.

8)மனிதாபிமானம்-மனிதநேயம் பற்றி பேசுகிறோம்..ஆனால்..மனிதாபிமானம் நிறைந்த ஒருவர்..அதனால் பயனடைந்த குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அடையும் மனவேதனையை அற்புதமாகச் சித்தரிக்கும் கதை.

9)நட்பில் ஏனிந்த பொய்கள்?-இரு நண்பர்கள் பற்றிய கதை..தான் உயர்ந்த நிலையில் இருப்பதாகப் பொய் சொல்லும் நண்பனை, அவன் சொல்வது பொய் எனத் தெரிந்தும்..கற்பனையில் அவன் அப்படியே வாழட்டும் என எண்ணுகிறான் மற்ற நண்பன்.

10)கைதி- ஒரு பக்கக் கதை ..எதிர்பாரா முடிவு..

11)ஜெனிஃபர்- இத்தொகுப்பில் உள்ள பெரிய கதை..இணையத்தில் படித்திருந்தும்..மீண்டும் படிக்கையிலும் சுவை குன்றாத நடை.ஒருவர் மேல் உள்ள பொசசிவ்னஸ் அவரை திருமணம் செய்துக்கொண்டால்..நாளடைவில்..விரும்பாத காரியங்கள் செய்கையில் கோபத்திற்கு ஆளாகக் கூடும்..அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இரண்டு பேரும் சேர்ந்து இருக்கிறோம்..அதற்கு குந்தகம் ஏற்படக் கூடாது..என்ற 46வயது முதிர்கன்னியின் கதை..இக் கதை ஆக்கியோனின் கருத்து இது என்று கொள்ளாமல்..ஜெனிஃபரின் கருத்து என எண்ணினால் விமரிசிக்க ஏதும் இல்லை.

12)கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்- கதையின் ஆரம்பத்திலெயே முடிவு தெரிந்து விடும் சிறுகதை..விசேஷமாக ஏதும் இல்லை.

13)டைரிக்குறிப்பும்..காதல் மறுப்பும்- ஒரு பாரகிராஃப் முடித்து அடுத்ததை விடுத்து..அடுத்ததை தொடர்புக்கு படிக்கும் யுக்தியில் அமைந்த கதை..இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம்..ஆனாலும் முடிவு பாதியிலேயே தெரிந்து விடுகிறது.இக்கதையை ஏன் புத்தகத்தின் தலைப்பாய் பரிசல் தேர்ந்தெடுத்தார்?..கதையின் தரத்திற்கா..அப்படியெனில் ..சாரி ..பரிசல்..நீங்கள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டிய தலைப்பு..இவற்றில் ஒன்றாய் இருந்திருக்கலாம்..
பட்டெர்ஃபிளை எஃபெக்ட்...அல்லது மனசுக்குள் மரணம்

14)மனசுக்குள் மரணம்- இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த கதை.முன்னரே படித்திருந்தாலும்..பரிசலின் அருமையான நடை மீண்டும்..மீண்டும் படிக்க வைத்தது..சுஜாதா இன்று இல்லை..ஆனால்..அவர் விட்டு விட்டு சென்ற பாணியை பரிசல் முயன்றால் ஓரளவு நிரப்பலாம்..இக் கதையை விமரிசிப்பதைவிட..புத்தகம் வாங்கி படியுங்கள்..

15)ஸ்டார் நெம்பர் ஒன்- ஒரு பிரபல கதாநாயகி..சில வருஷங்கள் கழித்து நிலை மாறியதும்..குணம் மாறிவிடுகிறாள்..ஆனால் அவளால் ஒரு காலத்தில் அவமானப்படுத்தப்பட்ட அசிஸ்டண்ட் டைரக்டர் இயக்குநர் ஆகி எடுக்கும் படத்தில் அவளுக்கு நேரும் கதியும்..இயக்குநர் அவளை நடத்திய விதமும்..இக்கதை சொல்கிறது.

16)நட்சத்திரம்- பணக்கார வீட்டு சிறுமியும்..ஏழை சிறுமியும் பற்றிய கதை.பணக்கார வீட்டு பெண்ணிடம் இருந்து கிடைத்த நட்சத்திர ஸ்டிக்கருக்கு பதில்..ஏழை சிறுமிக்கு இரவில் ஃபிளாட்ஃபாரத்தில் படுத்தவாறு..போர்த்திக் கொண்டிருக்கும் கிழிந்த போர்வையில் வானத்து நட்சத்திரங்கள் தெரிகின்றன.

17)சமூகக்கடமை- சமூகக்கடமைப் பற்றி பேசும் சுயநலவாதியின் கதை..

பரிசலின் இச்சிறுகதைத் தொகுப்புக் கதைகள் அனைத்தும் முன்னரே படிக்கப்பட்டதாய் இருந்தாலும்..மீண்டும் படிக்கையில் சுவாரஸ்யமாகவே உள்ளது.ஆனாலும்..பதிவர்களின் எழுத்துகளை புத்தகமாகக் கொண்டுவரும் பதிப்பகத்தார்..அவர் இணையத்தில் எழுதாத சில கதைகளையும் இணைக்கலாம்.

இப்புத்தகம் வாங்கலாமா? என்கிறீர்களா..கண்டிப்பாக வாங்கலாம்..17 கதைகள் வெறும் 50 ரூபாய்க்கு..நீங்கள் வாங்குவதோடு நில்லாது..உங்கள் நண்பர்கள் இல்ல விழாவிற்கும்..பணமாய் மொய் எழுதுவதற்கு பதில் இது போன்ற புத்தகங்களை வாங்கி பரிசளிக்கலாம்..

மொத்தத்தில்..சின்ன சுஜாதாவின் புத்தகம் படித்த திருப்தியை இப்புத்தகம் ஏற்படுத்தியது.

Monday, February 15, 2010

மௌனராகம்

சம்மதத்திற்கும்

தர்க்கம் தவிர்க்கவும்

மௌனமே

மௌனமாய் அமர்கிறது


2) பெயரோ ஸ்ரீமதி

இன்னமும் அவள்

செல்வி


3)கர்ப்பிணிப் பெண்

மெதுவாக நடக்கிறாள்

வெண்மேகத்தின் வேகத்தை விட

சூல் கொண்ட

கார்மேகம் வேகம் குறைவுதானே!


4)என் இதயம் உன்னிடம்

என்றவளைக் காணவில்லை

இதயம் இல்லாதவள்

யாரையேனும் கண்டால்

தெரிவியுங்கள்

திரும்ப அனுப்பிவிடுகிறேன்


5)கடிகாரம்

நாட்காட்டி - இவை

காலம் காட்டினாலும்

காலனை நினைப்பதில்லை

கல் நெஞ்சர்கள்

Sunday, February 14, 2010

தமிழ்ப் படமும்...தமிழ்ப் பதிவர்களும்..


கேபிள் சங்கர், பரிசல்காரன் இருவரும் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள் புத்தக வெளியீட்டு விழாவில்..கலந்துக் கொண்ட பிரமிட் நடராஜன் பேசுகையில்..

தான் கேபிள் சங்கருக்கு சித்தப்பா முறை உறவு என்றும்..1959ல் சென்னை வந்த தன்னை கேபிளாரின் தந்தை கொடுத்த ஆதரவையும் நினைவுக் கோரினார்.மேலும் பேசுகையில்..அன்று வெளியிடும் புத்தகங்கள் முழுதும் தான் படிக்கவில்லை என்றும்..ஆயினும் கேபிளின் எழுத்தில்..50-55 வயதான எழுத்தாளருக்கான முதிர்ச்சி இருக்கிறது என்றும் கூறினார்.இச் சமயம் மற்றொரு பிரதம விருந்தினரான தமிழ்ப் பட இயக்குநர் சி.எஸ்.அமுதன் உள்ளே நுழைந்தார்.

கலைஞருக்கான விழாவில்..ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது..ரஜினி உள்ளே நுழைந்தால்..எந்த அளவு கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்படுமோ..அப்படியான சலசலப்பு எழுந்தது.,

அதற்கு பின் புத்தக வெளியீட்டு விழா..சிறிது நேரம் 'தமிழ்ப் பட.'.வெற்றிக்கான பாராட்டு விழாவாக மாறியது .பிரமிடார்..தான் இதுவரை அப்படம் பார்க்கவில்லை என்றும்..காரணம் டிக்கெட் கிடைக்கவில்லை என்றுக் கூறியதுடன் நில்லாமல்..'இன்று கூட மாயாஜாலில் டிக்கெட்டிற்கு முயன்றதாகவும்..அதன் நிர்வாகிகள் எந்த படத்திற்கான டிக்கெட் வேண்டுமானாலும் தருவதாகவும்..தமிழ்ப்பட டிக்கெட் இல்லை என்று சொன்னது...சாரி..சார்..உங்களுக்கே இது கொஞ்சம் மிகையாகத் தெரியவில்லை.இதை என்னைப்போன்றவர் சொல்லியிருந்தாலும் ஒப்புக்கொண்டிருக்கலாம்.

அடுத்து பேசிய இயக்குநர்..தான் தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார் பின்..இணையத்தில் தன் படம் பற்றி விமரிசனம் எப்படி வருகிறது என பார்த்ததாகவும்..தான் பார்த்த முதல் தமிழ்ப்படத்திற்கான விமரிசனம் பரிசலுடையது என்றும்..அதைப் படித்தபின் படம் வெற்றி என எண்ணியதையும் குறிப்பிட்டார்.அவர் மேலும் பேசுகையில்..பதிவர்கள் செய்யும் விமரிசனம் உயர் தரத்தில் இருப்பதாகவும்..பத்திரிகைகள் விமரிசப்பதைவிட தரமானதாகவும்..எதை சொல்ல வேண்டுமோ அதைச் சொல்வதாகவும்..சில குறிப்பிட்ட காட்சிகள் பற்றிய சஸ்பென்ஸை வெளியிடாமல் திரையில் பாருங்கள் என்று எழுதுவதையும் பாராட்டினார்.கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பார்வையாளர்களை இணையதள விமரிசனங்கள் திரையரங்கிற்கு வரவைப்பதாகக் கூறினார்.தன் பெயரை..கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் என்று போட்டுக் கொண்டாலும்..அவற்றில் பெரும்பங்கு நம் சக பதிவர் சந்துருக்கு இருக்கிறது என்று சொன்ன இயக்குநர் பாராட்டுக்கு உரியவர்.எவ்வளவு இயக்குநர்கள் இப்படி உண்மையைச் சொல்வார்கள்?

வெளியிட இருக்கும் புத்தகங்கள் இரு நாட்கள் முன்னதாகவே தனக்கு கிடைத்திருந்தும்..தன்னால் வேலைப்பளு காரணமாக படிக்க முடியவில்லை என்றும்..தான் கூடிய விரைவில் படித்து..அதை எழுதியவர்களை தொடர்புக் கொண்டு..தன் கருத்தைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

பின் அஜயன்பாலா பேசினார்...பேசினார்..பேசினார்..

பொன்.வாசுதேவன் பேசுகையில்..பதிப்பகத்தார் இன்னலைக் கூறினார்..இன்னமும் தன் பதிப்பகத்தில் ஒரு அறை முழுதும்..புத்தகங்கள் தேங்கிக் கிடப்பதாகக் கூறியவர்..நர்சிம் எழுதிய புத்தகம் நன்கு மூவ் ஆவதாகவும்..அடுத்து பா.ரா., வின் புத்தகமும் விற்கிறது என்றார்.

அடுத்து புத்தகங்களை வெளியிட்ட நாகரத்னா பதிப்பக உரிமையாளரும்..சக பதிவருமான குகன்..பரிசலுக்கும்..சங்கருக்கும் நன்றியை தெரிவித்தார்.

சங்கரின் வரவேற்புரை..மண வீட்டில் புது மணப்பெண்ணிடம் காணும் கூச்சத்துடன் இருந்தது.

பரிசல்..ஏற்புரையில்..தன்னை எழுதத் தூண்டிய நண்பர்களை நினைவுக் கூர்ந்தது அழகு.

நிகழ்ச்சியை இந்தவார தமிழ்மண நட்சத்திர பதிவாளரான சுரேகா தொகுத்து வழங்கினார்..அருமையாக இருந்தது அவர் வழங்கிய முறை.

இநிகழ்ச்சிக்கும்..தமிழ்ப்படத்திற்கு ஹவுஸ்ஃபுல் ஆவது போல் ஹால்ஃபுல் லாக பதிவர்கள்.ஒவ்வொருவரையும்..தனித்தனியே பெயரிட்டால்..பலர் விட்டுப் போக வாய்ப்புண்டு..ஆகவே அதை தவிர்க்கிறேன்..அதே சமயம்..நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்தார் பரிசல்.தவிர கோவையிலிருந்தும்,திருப்பூரில் இருந்தும்வந்திருந்த வடகரை வேலன்,சஞ்செய்,வெயிலொன்,சொல்லரசன், ஈரவெங்காயம் ஆகியவர்களுக்கு பாராட்டுகள்.

இந்நிகழ்ச்சியைப் பற்றி நான் சொல்ல விரும்புவது..

1)பதிவர்களே! உஷார்..ஏனோ தானோ என எழுதாதீர்கள்..உங்கள் எழுத்துகள்..பத்திரிகைகளாலும்..திரைத்துறையினராலும் படிக்கப் படுகின்றன..பொறுப்புணர்ந்து செயல் படுங்கள்.

2)நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலர் வெறும் கையுடன் திரும்பினர்..அவர்கள் எல்லாம்..புத்தகங்களை வாங்கிச் செல்லுங்கள்..அப்போதுதான் நாளைக்கு நீங்கள் எழுதும் புத்தகங்களும் வாங்கப்படும்.

3)இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரதம விருந்தினர்கள்..அன்று வெளியிடப் படும்..புத்தகங்கள் பற்றி மட்டுமே பேசுங்கள்.. உங்களுக்கு புத்தகங்கள் முன்னதாகக் கொடுக்கப் படுகின்றன..உங்களுக்கு வேலைப்பளு இருந்தாலும்..புத்தகத்தைப் படித்துவிட்டு அது பற்றி மேடையில் பேசுங்கள்.தடம் மாற வேண்டாம்.

ஆமாம்..நீ புத்தகங்கள் பற்றி ஏதும் சொல்லவில்லையே என்கிறீர்களா?

பரிசலின் 'டைரிக்குறிப்பும் காதல்மறுப்பும்' (மொத்தம் 17 சிறுகதைகள்)

கேபிள் சங்கரின்'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்..'(13 சிறுகதைகள்)

இரண்டு புத்தகங்களையும் நேற்றுதான் வாங்கியுள்ளேன்..படிக்காமல் விமரிசிக்க நான் என்ன பிரதம விருந்தினரா..படித்துவிட்டே எழுதுகிறேன்..

(புகைப்படம் மோகன்குமார் இடுகையிலிருந்து சுடப்பட்டது)

Saturday, February 13, 2010

ஆதலினால் காதல் செய் ...

1.பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உனக்காக ஒரு பூ கத்திருக்கிறது.அதை தேர்ந்தெடுக்கிறாயே..அதுதான் காதலின் சக்தி.

2.காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.

3.காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.

4.இரவில் கவிதை
கவிதையான இரவு
கனவில் நிலவு
நிலவு பற்றி கனவு
தனிமையில் சிரிப்பு
சிரிப்பில் தனிமை
இதுதானா காதல்?

5.காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.

6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.

7.அழகு..அறிவு..எல்லாவற்றிலும்..கடந்த மென்மையான உணர்வு காதல்.

8.காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்

9.பறக்கத் தெரியும்
திசை தெரியாது
காதல் ஓர்
இலவம் பஞ்சு

_ கபிலன்

(மீள்பதிவு)

Friday, February 12, 2010

வாடா மலர் (காதலர் தின ஸ்பெஷல்)


1)தங்கமானவளை நம்பாதே

செம்பு போன்றவளை நம்பு

அவளிடம் தான்

கலப்படம் இல்ல2) இன்று பூத்து

நாளை வாடிவிடும்

மலரல்ல காதல்

சாகாவரம் பெற்ற

வாடா மலர் அது


3)ஊரறியாமல்

சன்னல் வழியே காதலியுடன்

உரையாடுவதாக எண்ணாதே

எதிர் சன்னல் வழியே

ஊர் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது


4)நீ நடக்கையில்

உன் கொலுசு சப்தமும்

உன்னைக் காதலிக்கிறேன்

உன்னைக் காதலிக்கிறேன் - என

உன்மத்தம் பிடித்து உளருகிறது


5)கவிதை என்றால்

என்ன என அறியாதவன்(ள்)

உன்னை காதலிக்க ஆரம்பித்ததும்

எழுதித் தள்ளுகிறேன்

கவிதை என்ற பெயரில்


6)நான் அன்பானவள்

நான் அன்பானவள்

சொல்லிக் கொண்டே இராதே

செயலில் காட்டு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பனிப்பொழிவுதேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (12-2-10)

1) அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? என அவரிடம் கேட்கப்பட்டது..அதற்கு அவர் 'அடுத்த வீடுகளில் ஒழுக்கமில்லாத பெண்கள் குடியிருந்தால்..நம்ம வீட்டிலும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை' என்றார்.அவர் சின்ன அண்ணாமலை

2)68 வகை சாப்பாடு..25 வகை ஊறுகாய்..17 வகை பாயசம்..15 வகை அப்பளம்..இனிப்பு அல்வா விலிருந்து ஜாங்கிரி வரை..இவ்வளவும் ஒரு திருமண வீட்டு கல்யாண சாப்பாடு.கல்யாணம் முடிந்ததும்..எந்தெந்த சாப்பாடுக் கூடத்தில் என்னென்ன உணவு என்பதற்கு பட்டியலுடன் ஒரு மேப்பே கொடுக்கப் பட்டதாம்.
அந்தத் திருமணம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்களின் இல்ல வீட்டு திருமணம்.
அது சரி பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான்.

3)தண்ணீர் எந்த அளவு குளத்தில் உள்ளதோ..அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் அவ்வளவே இருக்கும்.அதுபோல மனிதனின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

4) எத்தனை லட்ச ரூபாய் கார் நம்மிடமிருந்தாலும்..உற்பத்தி செய்ய முடியாத இறைவன் அளித்துள்ள காற்று இல்லையேல் கார் ஓடாது..என்னதான் புத்தி ஓங்கி நின்றாலும்..விதி துணை இல்லாமல் வீதி கூட ஏற்றுக்கொள்ளாது. - கண்ணதாசன்

5) நமது புராணக்கதைகள் நையாண்டி செய்யப்படுகின்றன.இவை கற்பனைக் கதைகள் தான்.கற்பனை என்பதே புளுகு தானே..ஆனால் மோசடி இல்லையே..அந்த புரிதலோடு படித்தால் புராணக்கதைகளும் சுவையாக இருக்கும்.

6)கொசுறு ஒரு ஜோக்

ஓட்டலில் உணவு அருந்துக் கொண்டிருப்பவர்..சாம்பாரில் ஒரு பல்லி இருப்பதைப் பார்த்துவிட்டு..அதைக் காட்டி கோபத்துடன்..- இந்தாப்பா சர்வர் இதுக்கு என்ன அர்த்தம்..?

சர்வர்- பல்லி விழும் பலன் எல்லாம் எனக்குத் தெரியாது சார்

Thursday, February 11, 2010

அசையும் வளைவுகள்

விதியை

மதியால் வெல்லலாம்

என்றவர்கள் கூட

செத்துத் தொலைத்திருக்கிறார்கள்

மதியின்றி


2)தேங்கிய மழைநீரில்

பேருந்தின் டீசல் சிந்தி

தரையில் வானவில்


3)ஒன்றுக்கு போகக்கூட

ஒன்றுமில்லாதவனால் முடியாது

அதற்கும் வேண்டும்

அம்பது காசு


4)தாய் பசித்திருக்க

தன் நலமாய் இராதே

நீ பசித்திருக்கையில்

நாளை உன் மகன் செய்வான்

உனக்கு


5)அசையும் வளைவுகள்

அசையாத வளைவுகளாய்

இட்ட கோலங்கள்

சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...

வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

Wednesday, February 10, 2010

புழுக்கம்
நூறு கிடைத்தது

இரு நூறுக்கு ஆசை

இரண்டாயிரம் கிடைத்ததும்

நாலாயிரத்திற்கு ஆசை

அதுவும் கிடைத்ததும்

நாசிக்கிற்கு ஆசை2)கரிகாலன் காலைப்போல

கருத்திருக்கு குழலு..

என்றதும்

என்னைத்தான் சொல்லியுள்ளான்

கவிஞன்

என்கிறது குழலில் உள்ள

பேன்


3)மலர் பூக்கிறது

மணம் வீசுகிறது

வண்டு வருகிறது

மலரில் அமர்ந்து

தேனை சுவைக்கிறது

அடுத்த நாள்

மலர் வாட

வந்த வண்டு

அம்மலரை தவிர்த்து

அருகில் மலர்ந்துள்ள

புத்தம் புது பூவில்

அமர்கின்றது

அதன் தேனை சுவைக்க


4)கடற்கரையில்

மக்கள் வெள்ளம்

காற்றுக்கு புழுக்கம்

அகநாழிகை - குகன்- ஒரு ஆலோசனை

பதிவர்களின் பதிவுகளை அச்சில் கொண்டுவரும் செயலை முதலில் வாசுதேவன் ஆரம்பித்து வைக்க குகன் தொடர்ந்துள்ளார்.

கேபிள் ஷங்கர், பரிசல்காரன் ஆகிய பதிவர்கள் எழுதிய சிறுகதைகளை நாகரத்தினா பதிப்பகம் மூலம் குகன் அவர்கள் 14-2-10 அன்று வெளியிடுகிறார்.விவரங்கள் இங்கே..

யூத் பதிவர் என சொல்லிக் கொள்ளும் கேபிளாரும், யூத் பரிசலாரும் இந்த ஆண்டு காதலர் தினத்தை மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

இப்போது தலைப்பிற்கு வருகிறேன்..

சிவராமனும், ஜ்யோவ்ராமும் இணைந்து உரையாடலுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் 250 சிறுகதைகள் வந்தன.பெரும்பாலான கதைகளை நான் படித்திருக்கிறேன்..அனைத்துமே தரமானவை.அகநாழிகையோ, குகனோ..அந்த 250 சிறுகதைகளையும் தொகுத்து புத்தகமாக கொண்டு வரலாம்.கண்டிப்பாக 1000 பக்கங்கள் வரை வரும்.புத்தகத்தின் விலையையும் அதற்கேற்றாற் போல வைக்கலாம்.பதிவர்கள் ஒத்துழைப்பில்..வெளியாகும் பிரதிகள்..முதல் பதிப்பு விற்று விடும்.யாருக்கும் இலவச பிரதிகள் கிடையாது எனலாம்.வேண்டுமானால்..யார் யாருக்கு புத்தகம் தேவை எனக் கேட்டு..முன் பணமும் பெறலாம்.ஆகவே இதற்கான மூலதனம் கண்டிப்பாக நஷ்டத்தை ஏற்படுத்தாது.

இந்த யோசனை பிடித்திருந்தால்..இதைப் படிப்பவர்கள் தங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

அதை வைத்து அவர்கள் சாதகமான முடிவை எடுக்க வைக்க முயற்சிக்கலாம்.

Tuesday, February 9, 2010

நீதி வழங்குவது யார்?


பாய் விரித்து

பணம் பெற்று அணைப்போரை

பிணம் என்கிறான் வள்ளுவன்

பணம் பெற்று

வாக்களிப்போரை

என்னவென்பது?


2)விளக்குகள் அணைவதில்லை

திரியை தீண்டிவிடுவோரும்

எண்ணெய் ஊற்றுவோரும்

இருக்கின்றவரை


3)அரசியல்வாதிக்கு

இதய நோயாம்

அவனுக்கு ஏது இதயம்


4)காற்றடித்தது

தூசு பறக்கிறது

மலை அப்படியே இருக்கிறது


5) நீதி வழங்குமுன்

நீதிபதி சென்ற இடம்

நீதிமன்ற வளாக

நீதி வழங்கும்

நித்ய வினாயகரைத் தேடி

ஊடுதல் காமத்திற் கின்பம் (கொஞ்சி விளையாடும் தமிழ்-14)தலைவன் தலைவியை தற்காலிகமாகப் பிரிந்து வெளியூர் செல்கிறான்.அவன் திரும்பி வரும் நாளை எதிர் நோக்கிக் காத்திருக்கிறாள் தலைவி.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்கேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு

நெடுந்தொலைவு சென்று காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய்த் தெரிகிறது.

அவர் எப்போது வருவார்..எப்போது வருவார்..என நெஞ்சம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.அவரை என்று காண்பேன்..அவரைக் கண்ட பின்னரே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும் என்கிறாள் தலைவி.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறுமென் நெஞ்சு

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு

என்றெல்லாம் வாடுகிறாள்..வரட்டும்..அவர்..ஒருநாள் வந்துதானே ஆகவேண்டும்..வந்தால் என் துன்பம் முழுதும் தீரும் வகையில் அவரிடம் இன்பம் துய்ப்பேன் என்கிறாள்..

வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட

தலைவன் வருவதாகச் சொன்ன நாட்களில் எல்லாம் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறாள்.தினம் தினம் ஏமாற்றமே..வந்தால் அவருடன் பேசக்கூடாது..ஊடல் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறாள்.ஆனாலும் தனிமை அவளை வாட்டுகிறது.அச்சமயம் அவன் வந்துக்கொண்டிருக்கும் செய்தி எட்டுகிறது.

கண்ணின் மணியாம் காதலர் வந்ததும் பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல் கொள்வேனா...அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனா..அல்லது ஊடுதல்..கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனா..ஒன்றுமே புரியவில்லையே..எனக்கு..இன்பம் கட்டுக் கடங்காமல் போனதால்..எனமனதில் இன்பம் பொங்க செய்வதறியாது இருக்கிறாள்.

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்

Monday, February 8, 2010

'தல' நீ தான் அசல் (விமரிசனம் அல்ல)


கூட்டத்தில் பேச சந்தர்ப்பம் கிடைத்தால்..அதுவும் தலைவர்கள் நிரம்பியுள்ள கூட்டத்தில் பேசும் சந்தர்ப்பம் வந்தால்...தலைவரை ஆகா..ஒஹோ..என புகழ்ந்து தலைவரின் இதயத்தில் இடம் பிடிக்க நினைக்கும் காக்கைகள் கூட்டத்தின் நடுவே சில குயில்களும்..தன் பாணியில் கூவும்..அப்படி ஒரு குயிலின் கூவல் கேட்டது சனியன்று நடந்த முதல்வருக்கு பாராட்டு விழாவில் . அந்தக் குயில் 'தல'யுடையது.

இதற்குமுன் நடந்தவை என்ன....

விழா நடப்பதற்கு சில நாட்கள் முன் ..நிகழ்ச்சிக்கு வராத நடிக..நடிகையர்க்கு ரெட் கார்ட் போடப்படும் என சிலர் பேட்டி கொடுக்க..கலைஞர்கள் நடுவே..இது பெரிய பாதிப்பை உண்டாக்கியதாம்.நடிகர்கள் சங்க நிர்வாகிகளும் வருத்தப் பட்டனராம்.சங்கமே அப்செட் ஆனது தெரிந்த விழா அமைப்பாளர்கள் வருத்தம் தெரிவித்துவிட்டு..நிகழ்ச்சிக்கு அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் கேட்டுக் கிட்டாங்களாம்.

சினிமா நிகழ்ச்சிகள்லே கலந்துக்காத அஜீத் திற்கும் மிரட்டல் போயிற்றாம்.இதை அஜீத், கலைஞர்பாராட்டு விழா அன்று மேடையில் பேசியதும்,. மேடையில் இருந்த ரஜினியே எழுந்து நின்று கை தட்டினாராம்.

அஜீத் பேச்சின் சுருக்கம்...

அறுபது வருடத்திற்கும் மேலாக..தமிழ் மக்களுக்கும்..தமிழ் நாட்டிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவரை பாராட்ட வந்திருக்கிறேன்.தமிழர்கள் பொங்கலன்று சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது போல..இந்த சூரியனுக்கு நன்ன்றி தெரிவிக்கிறேன்..சினிமா உலகிற்கு நிறைய சலுகைகள் செய்துள்ளீர்கள்.

சமிப காலங்களாக சினிமா துறையினர் மீது கோபம் இருக்கிறது.தேவையில்லா விஷயங்களில் அவர்கள் தலையிடுவதால்..சென்சிடிவ்வான விஷயங்களில் அவர்கள் தலையிட வேண்டாம் என சொல்லுங்கள்.இங்கிருக்கிற சிலர் கட்டாயப்படுத்தி எங்களை அழைக்கின்றனர்.நாங்களும் வருகிறோம்.எங்களுக்கு அரசியல் வேண்டாம்.காவிரியில் தண்ணீர் விடவில்லையெனில் நீங்கள் இருக்கிறீர்கள்.பார்த்துக் கொள்ளுங்கள்.நாங்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது.ஒரு பக்கம் எங்களை அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள்.வந்தால் மிரட்டுகிறார்கள்.நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

கலைஞர் பேசுகையில்..அஜீத் பெயரைக் குறிப்பிடாமல்..இது பற்றி பேசுகையில்..

நாம் கலைக்குடும்பம் என்ற வகையில் சேர்ந்திருக்கிறோம்..இதில் அரசியலை நுழைக்க விரும்பவில்லை.தானாக நுழைந்தால் நான் பொறுப்பல்ல.இந்த துறையில் அரசியலை நுழைத்து கெடுத்து விடாதீர்கள்.அரசியல் நுழைந்து ஆமை புகுந்த வீடாய் திரைப்படத் துறை ஆகிவிடக் கூடாது.யாரையும் வலியுறுத்தி வருகிறாயா..இல்லையா..எனக் கேட்க வேண்டாம்.வந்தவர்களை வாழ்த்துவோம் என்றார்.

மனதில் தோன்றியதை 'பளீச்' என ஒளிக்காமல் பேசிய அஜீத்தை பாராட்டுவோம்.

டிஸ்கி- கலைஞருக்கு பாராட்டுவிழா நடந்த அதே நாள்..தில்லியில் விலைவாசி பற்றி நடந்த..பிரதமர் கலந்துக் கொண்ட..மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழக சார்பில் துணை முதல்வர் கலந்துக் கொண்டார்.

Sunday, February 7, 2010

ஏழ்மை
அவனாக நினைத்தான்

அவனாக ஏங்கினான்

அவனாக அழுதான்

ஒரு தலைக்காதல்


2)குடித்துவிட்டு காரோட்டி

விமானத்தில் அழைக்கிறான்

காலதேவனை

3)வட்ட வட்டமாய்

குடிசைக்குள்

சூரிய நாணயங்கள்

தங்கக் காசுகள்

கொட்டுவது போல

தனலட்சுமி

மண்சுவற்றில்

4)உடல் வற்றிப்

பசியுடன் அலைகையில்

அவளைக் கண்டதும்

ஏற்பட்டது காமப் பசி

Saturday, February 6, 2010

வாய் விட்டு சிரியுங்க...

1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.

2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.

3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.

4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..

5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..

6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?

Friday, February 5, 2010

இறைவன் இரக்கமற்றவன்
அவள்

அன்றலர்ந்த மலராகவே உள்ளாள்

நலமா என்கையில்

மாமாவிற்கு வணக்கம் சொல்லு

பணிக்கிறாள்

பக்கத்து சிறுவனிடம்


2) காற்று இல்லை

மூச்சு முட்டுகிறது

ஜன்னலைத் திறக்கையில்

ஜன்னல் அளவே

உள்ளே நுழைகிறது


3)துன்பம் வந்தது

துன்பப் பட்டு

விட்டு ஓடியது


4)இறைவன் இரக்கமற்றவன்

வாங்கி வந்த மாடு

பால் கறக்கவில்லை

காரணம்

காளையாம் அது

மேடையில் பேசுவது எப்படி..? - 2முதல் பகுதி

நல்ல கருத்துகள் சொற்பொழிவுக்கு அவசியம்.நாம் பேசுவது மக்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால்..அவை நல்ல கருத்துகள் கொண்டதாய் இருக்க வேண்டும்.பண்பற்ற..பயனில்லா சொற்களை மறந்தும் பேசக் கூடாது.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

பயனற்றதும்..பண்பற்றதுமான சொற்களை பலர்முன் சொல்வது மகிழ்ச்சியைக் குலைத்து..நன்மையை மாய்க்கும்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

பேச்சுக்கு கருத்துகளை எப்படி அமைப்பது.அதற்கு ஒரு வழி..

முதலில்..இன்று நாம் எதைப்பற்றி பேச வேண்டும்..என்னென்ன பேச வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.முதல் கேள்விக்கான விடை தலைப்பாகவும்..அடுத்தக் கேள்விக்கான பதில் கருத்தாகவும் அமையும்.

அதை ஒரு சிறு அட்டையில் குறித்துக் கொண்டு 1, 2 என இலக்கமிட்டு முறைப்படுத்தி மனனம் செய்துக் கொள்ள வேண்டும்.பின் மேடை ஏறியதும் மனப்பாடம் செய்ததை வரிசைப் படுத்தி பேச வேண்டும்.இது வெற்றிகரமான பேச்சாக அமையும்.ஆரம்ப பேச்சாளர்கள்..இரண்டு அல்லது மூன்று கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு..ஐந்தாறு நிமிடங்களுக்குள் பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் இது நமக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.

குறிப்புகள் எடுக்கையில் பேச வேண்டிய கருத்துகள் ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு சொற்களுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.அதுதான் மனதில் பதியும்.மனதில் பதிந்ததைப் பேசி முடித்ததும்..நம் குறிப்பை எடுத்து..எல்லாம் பேசி விட்டோமா என்று பார்க்கலாம்.ஏதேனும் விட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை.ஏனெனில் நம் பேச்சை கேட்டவர்களுக்கு அது தெரியப் போவதில்லை.
தொடக்கப் பேச்சாளர்கள்..எழுதியிருக்கும் குறிப்பை இடையிடையே பார்த்து பேசலாம்..ஆனால் இதுவே பழகிவிடக் கூடாது.

மேடைப் பேச்சில் எழுதிப் படிக்கிறார்களே பொறுப்பானவர்கள் என்று கேட்கலாம்..பொறுப்பான பதவியில் உள்ளவர்கள்..வேறு ஏதும் பேசிவிடக் கூடாதே என்பதற்காக கையாளும் முறை இது.ஆனால் பேச்சாளர்களுக்கு ஏற்றதல்ல இது.பார்த்து படிப்பது படிப்பதாகவே இருக்குமேயன்றி..அது பேச்சாக இராது.அதில் உணர்ச்சியும் இராது..

இப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்களாக ஆகவே முடியாது.

Thursday, February 4, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(5-2-10)

1)இந்தியாவின் குடியரசுத் தலைவர் அதிகாரபூர்வ அலுவலகமாகவும், இல்லமாகவும் திகழும் ராஷ்டிரபதி பவனின் மொத்த பரப்பு 4.5 ஏக்கராகும்.இதில் 340 அறைகள்,74 லாபிகள்.டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 104 பேர் அமர்ந்து சாப்பிடலாம்.பரிமாற இரண்டு பேருக்கு ஒரு சர்வர்.சைனீஸ்,இத்தாலியன்,மெக்ஸிகன்,ஐரோப்ப,தென்னிந்திய உணவுகள் என 24 மணி நேரமும் கிடைக்கிறதாம்.37 செயற்கை நீரூற்றுகள், வெந்நீர் நீச்சல் குளம் உண்டு.மாளிகையின் உள்ளே 900 சீருடை பணியாளர்கள் உள்ளனர்.இவர்களின் லாண்டெரி செலவு மாதத்திற்கு ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாயாம்.

2)மணமாகி வீட்டிற்கு வரும் மணமக்களை நுழைவாயிலில் வலது காலை எடுத்துவைத்து வா என்கிறார்கள்.இப்படி எல்லாவற்றிலும் வலம் முதலிடம் பெறுவது ஏன் தெரியுமா? பூமி வலப்பக்கமாக சுற்றுகிறது என்பதாலேயே ஆகும்

3)தமிழுக்கு இனம் மூன்று.அவை வல்லினம்,மெல்லினம்,இடையினம் என்பதாம். நம் மொழியின் பெயரில் மூன்று இனங்களும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.த- வல்லினம்., மி-மெல்லினம்.,ழ்-இடையினம்.

4) ஒரு மனிதன்
கோபமாய் பேசினால் குணத்தை இழப்பான்
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பான்
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பான்
வேகமாய் பேசினால் வேலையை இழப்பான்
ஆணவமாய் பேசினால் பெயரை இழப்பான்
சிந்தித்து பேசினால் சிறப்புடன் இருப்பான்

5)மனித உடலில் மிகவும் தூய்மையான ரத்தம் சிறுநீரகச் சிறையில்தான் இருக்கிறது

6)ஒரு ஜோக்
ஒரு விவாகரத்து நீதிமன்றத்தில் நடந்துக் கொண்டிருந்தது.கணவனிடமிருந்து விவாகரத்துக் கேட்ட பெண்மணியைப் பார்த்து நீதிபதி'உனக்கு உன் கணவனிடமிருந்து மாதம் எவ்வளவு ஜீவனாம்சம் வேண்டும்' என்றார்.அதற்கு அப் பெண்மணி 'எனக்கு ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம்..என்னை கல்யாணம் செய்துக் கிட்ட போது..நான் எப்படியிருந்தேனோ..அதே போல என்னை விட்டா போதும்' என்றாள்.இதைக் கேட்டுக் கொண்டிருந்த கணவன் 'அது எப்படி முடியும்..இவளைக் கல்யாணம் பண்ணினப்போ அவ விதவையா இல்ல இருந்தா..!!'என்றான்

வாய் விட்டு சிரியுங்க

சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.

Wednesday, February 3, 2010

அன்று ஆணாதிக்கம்..இன்று பெண்ணாதிக்கம்


அக்கிரமம் தலையெடுக்கயில்

அவதரிப்பேன் என்றான்

கீதையில் கண்ணன்

அக்கிரமமும்..அநியாயங்களும் தான்

இன்று நாட்டில்

சொன்னார் போல் அவன் எங்கே?

வாக்குத் தவறிய

அவனும் ஒரு அரசியல்வாதியே!!


2)நிலவை அழைத்து

குழந்தைக்கு

சோறூட்டினாள் அன்னை

நிலவைப் பிடித்து

கறையைத் துடைத்த

முகம் உனது

என்றவன் ஞாபகத்தில் வர..


3)கற்புக்கரசிகளாய்

கண்ணகி

நளாயினி

சீதை

தவிர்த்து யாரேனும்

அறிவாயா நீ

வினவினான் இல்லாளிடம்


4)அன்று

அப்பாவின் கோபம்

அம்மாவின் காது கிழிந்தது

கணவனின் கோபம்

முக வீக்கம் மனையாளுக்கு

இன்றோ

அவளின் கோபம்

நீதிமன்ற வாசலில் ஏறியது

Tuesday, February 2, 2010

மேடையில் பேசுவது எப்படி..?


நமக்கெல்லாம்..மேடையில் பேச வேண்டும் என்றும்..நாம் பேசுவதை நான்கு பேர் கேட்டு பாராட்ட வேண்டும் என்றும் உள்ளூர ஒரு விருப்பம் இருக்கும்.

பேசுவது என்பதே ஒரு கலை.அதற்காக பேசுவதையெல்லாம் கலை என்று சொல்லிவிட முடியாது.அதுவும்..மேடையில் பேசுவது என்பது...!!! எளிய நடையில் பலர் முன் நின்று மேடையில்..உயர் கருத்துகளைச் சிறந்த முறையில்..கேட்போர் உள்ளத்தில் அழகாக பதிய வைப்பதே ஆகும்.

மேடைப்பேச்சை 'சொற்பொழிவு' என்பர்.சொற்களைத் தேடிப் பிடித்து..எளிய நடையில்..அமைதியாக பொழிவது தான் சொற்பொழிவு.

மழை பொழிகிறது என்கிறோம்....மழை நீர்த் துளிகள்..ஒன்றன் பின் ஒன்றாக சீராக..நேராக..அமைதியாக பெய்வது தான் 'பொழிதல்' எனப்படுவது.அழகாக ஒன்றன் பின் ஒன்றாக வரம்பு மீறாமல் இருப்பதுதான்.வரம்பு கடந்தால் மழை பொழிதலும்..மழை அடித்தல், மழை கொட்டல் என்றெல்லாம் ஆகிவிடும்.

அதுபோலவே தான் சொற்பொழிவும்..வரம்பு கடந்தால்..மக்களிடமிருந்து..கிண்டல்,கத்தல்,திட்டுதல் என்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டு விடும்..

ஒருவர் பேசும் சொற்கள் அனைத்தும் நல்ல சொற்களாக, பண்பட்டவைகளாக இருந்தாக வேண்டும் என்ற கவலை சொற்பொழிவாற்றுவோருக்கு இருக்க வேண்டும்.சொற்கள் பற்றி வள்ளுவன்
சொல்வன்மை என்ற அதிகாரத்தையே வைத்துள்ளார்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லிங்கட் சோர்வு

ஆக்கமும், அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால்..எந்த ஒரு சொல்லிலும் குறைபாடு நேராது கவனமாக இருக்க வேண்டும்...என்கிறார்.

நாம் சொல்வதை பிறர் எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.எவ்வளவு நேரம் பேசினோம் என்பதை விட..நாம் என்ன பேசினோம் என்பது மக்களுக்குப் புரிகிறதா என்பதே முக்கியம்.

நாம் கற்றதை ..பிறர் உணரும் வண்ணம் சொல்லத் தெரியாதவர்..கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லா மலருக்கு ஒப்பாவர்..(யாருக்கும் பயன் தரா மலர்) என்கிறார் வள்ளுவர்.

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்

ஒருவனின் உண்மைத் தோற்றத்தைக் காட்டுவது அவன் வாய்ச் சொற்களே..மற்ற அனைத்தும் போலித் தோற்றங்கள்.ஆகவே..பிறரிடம் பேசும்போது..அதிலும் குறிப்பாக மேடையில் பேசும்போது மிக விழிப்புடன் இருக்க வேண்டும்..இல்லையேல்..நமக்கு வீழ்ச்சியே ஏற்படும்.

எதைக் காப்பாற்றாவிடினும் நாக்கை காப்பாற்ற வேண்டும்..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும்..நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவரது துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.

(மேடைப் பேச்சு தொடரும்)

Monday, February 1, 2010

தமிழில் பேச மறுத்த தமிழர்

தமிழன் தமிழ் மாநிலத்தைத் தவிர..வேறு மாநிலங்களில் ஒரு தமிழனைப் பார்த்தால்..உளம் மகிழ்ந்து பேசத் துவங்குவான்..என்றளவில் மகிழ்வேன் நான்..

ஆனால்..ஒரு தமிழன் ..வேறு ஒரு மாநிலத்தில்..தமிழில் கேட்டதற்கு தமிழில் பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறான் என்றால்..அதுவும் தமிழ்ப்பற்றுள்ள ஒருவன்..

எல்லாம் பதவி படுத்தும் பாடு...

புதுதில்லியில் நிருபர்களிடம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் பேசினார்..அப்போது ஒரு நிருபர்..'தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப் படுகிறார்களே..' என்று தமிழில் கேள்வி கேட்டார்..

அதற்கு சிதம்பரம்..'தமிழில் கேள்வி கேட்கக் கூடாது..அது இங்கு மற்றவர்களுக்கு புரியாது..ஆங்கிலத்தில் கேட்டால் மட்டுமே பதில் சொல்வேன்' என்று அக்கேள்விக்கு பதிலளிக்க வில்லை.

ஆனால்..அதுவே.. இவருக்கே தெரியாத ஹிந்தியில் நிருபர்கள் கேட்ட போது..தன் செயலாளர் உதவியுடன் அவர்களுக்கு பதில் அளித்தார்.

மகாராஷ்டிர மக்களுக்கே மும்பை சொந்தம் என்று கூறுவதை ஏற்க முடியாது..எல்லா இந்தியருக்கும் அது சொந்தம் என்று ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர்..ஒரு மாநில மொழி..இந்தியா முழுவதிலும் பேசலாம்..அதைத் தெரிந்தவருக்கு.. அந்த மொழியிலேயே பதிலளிக்கலாம் என்ற எண்ணம் இல்லாமல் போனதற்கு என்ன காரணம்.

உண்மையிலேயே..தமிழில் சொன்னால் மற்றவர்க்கு புரியாது..என்ற எண்ணம் ப.சி.,க்கு இருந்திருந்தால்..ஹிந்தி புரியா நிருபர்கள் என்ன செய்வார்கள் என்று அதற்கும் மறுத்து ஆங்கிலத்தில் மட்டுமே சொல்வேன் என்று சொல்லாதது ஏன்?

எல்லாமே பதவிக்குதாண்டா..