Wednesday, February 28, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்

திருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று-


எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்
அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்
முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்


அப்பாலும் பாழென்று அறி .
எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் வயிற்று நீர். அந்த ஊரைப் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியாதா? (எங்கும், என்றும், எதுவுமாக இருப்பவை மூன்று பாழ்-வெளிகள். அவை காலம், இடம், அறிவு என்பவை) இந்த மூன்று பாழ்-வெளியும் பாழாகி முடிவில் ஒரு சூனியமாய்ப் போய்விட்டது. அந்தப் பாழ்-வெளி மீண்டும் பாழாகி (பொருள், இடம், காலம்) என உரு எடுத்துள்ளது


இந்தப் பாடலை நான் பார்த்ததும்,"காட்டு ரோஜா: "என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளில் வந்த கீழ்கண்ட பாடல் ஞாபகம் வந்தது
எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல்..எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)

தமிழின் விளையாட்டை ரசித்தீர்களா?

ஆ(ற)ரத் தழுவினேன்கடலலைகள்

கரையைக் கண்டு மிரண்டு

கரைந்து உள்ளிடுதலும்

கார்முகில் கண்டு

கலாபம் விரிக்கும் தோகையும்

விடியலில் விண்ணின்

வண்ணக் கலவையும்

ஆலம் விழுதுகளின்

ஆகம் தழுவலும்

விதிமீறல் அன்று

இயற்கை

இல்லா ஒன்றை நாடும்போது

இருக்கும் ஒன்றையும்

இழக்கலாமா

வெற்றி இலக்கிற்காக

வீறு கொண்டு முயன்றால்

தோற்பது யார்..

விட்டுக்கொடுத்தேன் வெற்றியை

அனைவரும் வெறுக்கும் தோல்வி

அணங்கை

ஆ(ற)ரத் தழுவினேன்

Tuesday, February 27, 2018

வறுமைக் கோடுகுச்சிக் கால்கள்

எலும்பு துருத்தியகைகள்

ஒட்டிய கன்னம்

வயிற்று சுருக்கங்கள்

உருக்குலைந்த மேனி

இதில்

வறுமைக்கோட்டை

தீர்மானிக்கப் போகும்

அளவுகோல் எது

வெற்றியை அடையும் வழி

எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.
எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும்.
ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள்.
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்..
என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள்.
ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும்.
எடுத்தக் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது.
எந்த வழியைப் பற்றியேனும் வெல்ல வேண்டும் என எண்ணினால்..அப்படிப்பட்ட வெற்றியைக் காணும் உடன் இருப்போர் மெல்ல மனம் மாறி நம்மை விட்டு விலகும் அபாயம் உள்ளது.இப்படிப்பட்ட வெற்றி உதறித் தள்ள வேண்டும்.
வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இருக்க வேண்டும்.சிறந்த வழியின் மூலம் கிடைக்கும் பலன் சிறிதானாலும்..அது ஞாலத்தின் மாணப் பெரிதாகும்.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை
(புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்)
பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.
வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.அத்னால் தான் வள்ளுவனும்..
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார்.

Monday, February 26, 2018

உணவும் செரிமானமும்

நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

நாச்சியார் திருமொழி -3

மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே

மத்த நன்னறு மலர் - நறுமணம் கொண்ட ஊமத்தமலர்
முருக்கமலர் கொண்டு - (கல்யாண) முருங்கை மலர் கொண்டு
முப்போதும் முன்னாடி வணங்கி(த்)- மூன்று பொழுதுகளும் உன் அடி தொழுது
தத்துவம் இலி என்று- உண்மையில்லாதவன் என்று
நெஞ்சு எரிந்து- மனம் வெந்து
வாசகத்தழித்து உன்னை-(நீ  சொன்ன சொல் காப்பாற்றுபவன் எனும் எண்ணத்தை) உனை நெஞ்சிலிருந்து அகற்றி
வைதிடாமே- உன்னை திட்டிவிடுவதற்குள்
கொத்து அலர் பூங்கணை-மலர்க் கொத்துக் கொண்ட அம்புகள் தொடுத்து
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி- கோவிந்தன் என அதில் பெயரினை எழுதி
வித்தகன்- பல வித்தைகள் கற்றவன்
வேங்கடவாணன் என்னும்- வேங்கடவன் என்ற பெயர் பெற்ற
விளக்கினில் புக என்னை-(என் வாழ்விற்கு வெளிச்சம் தரும்)விளக்கானவனிடம் புக என்னை
விதிக்கிற்றியே- எய்து விடேன்

(தனக்குக் கிடைத்த) ஊமத்த மலர், முருங்கை மலர் கொண்டு மூன்று பொழுதும் அவனது திருவடிகளை வணங்கி தொழுதவனை, பொய்யானவன். சொன்ன சொல் தவறியவன் என திட்டிவிடும் முன்னர் பூங்கணையைத் தொடுத்து வேங்கடவனிடம் என்னைப் புக வைத்துவிடு என் கிறார்

(முதல் இரண்டு பாடல்களில் கெஞ்சும் தோரணையில் சொன்னவர், இதில் சற்றே மிரட்டல் பாணியில் சொன்னது ரசிக்க வைக்கிறது)

Saturday, February 24, 2018

விதுர நீதியும்..வள்ளுவ நீதியும்


பீஷ்மர்..அம்புப் படுக்கையில் இருந்தபடியே தருமருக்குச் சொன்னது பீஷ்ம நீதி
கண்ணன், அர்ச்சுனனுக்கு உரைத்த நீதி ஸ்ரீமத் பாகவதம்
ஆனால்..
விதுரர், திரிதராஷ்டிரருக்குச் சொன்னவை விதுர நீதி
அதே போன்று..
வள்ளுவன் மக்களுக்கு சொன்ன நீதி திருக்குறள் என்ற பெயரில்..வள்ளுவ நீதி..
விதுரர் சொன்னதையும், வள்ளுவர் சொன்னதையும் தொகுத்து எளிய அழகுத் த்மிழில் நான் எழுதி வெளி வந்துள்ள நூல்
:விதுர நீதியும், வள்ளுவ நீதியும்"
திருவரசு பதிப்பகம் வெளியீடு
இப்புத்தகம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம்

நாச்சியார் திருமொழி= 2


பாடல் - 2

வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே

வெள்ளைநுண் மணற்கொண்டு - வெள்ளைநிறக் கோலப்பொடியைக் கொண்டு
வெள்வரைப்பதன் முன்னம்- வெள்ளென வெளிச்சம் வருவதற்கு முன்னர்
துறை படிந்து - குளத்தின் படித்துறைக்குச் சென்று.
முள்ளுமில்லாச் சுள்ளி எரி மடுத்து-முட்களற்ற மரக் குச்சிகள் எடுத்து
முயன்று உன்னை- முயன்று உன்னை
நோற்கின்றேன் காமதேவா-நோன்பு இருக்கின்றேன் காமதேவா
கள் அவிழ்- தேன் வடியும்
பூங்கணை- பூக்களால் செய்யப்பட்ட அம்பு தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி-கடலின் நிறம் கொண்ட நீலவண்ணன் பெயரெழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர்- பகாசுரன் என்ற அரக்கன் கொக்கு வடிவம் எடுத்து வந்த போது அவ்வரக்கன் வாய் பிளந்தவன் மீது
இலக்கினிற் பகவென்னை- இலக்கு வைத்து என்னை அவன் மேல்
யெய்கிற்றியே- எய்து விடேன்


தெருவில் அழகான வெள்ளை நிறக் கோலப்பொடிக் கொண்டு கோலமிட்டு ,வெளிச்சம் வரும் முன் குளத்தின் படித்துறைக்குச் சென்று குளித்து, முட்களற்ற சுள்ளிகளை பொறுக்கி எடுத்து தீ மூட்டி காமதேவா! உன்னை நோற்கின்றேன் (நோன்பு இருக்கின்றேன்).தேன் வடியும் பூக்களால் செய்யப்பட்ட கணைகள் கொண்டு தொடுத்து அதில் கடல் நிறம் கொண்ட நீலவண்ணனின்   பெயர் எழுதி.புள்ளெனவந்த அரக்கனின் வாய் பிளந்தவன் மார்பினை இலக்காகக் கொண்டு அடையுமாறு அதில் என்னையும் வைத்து எய்துவிடேன்

Monday, February 19, 2018

நாச்சியார் திருமொழி

தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ  வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வெங்கட வற்கென்னை விதிக்கிற்றியே..

பொருள்
================
பாடல் - 1


தையொரு திங்களும்  - தை மாதம் முழுவதும்
தரை விளக்கித் - தரையைத்  தூய்மைப்படுத்தி
தரை மண் தலம் இட்டு- குளிர்ந்த நீர் தெளித்த மண் தரையில்
                                                   இட்டு
மாசி முன்னாள் - மாசி முதல் நாள்
ஐய நுண் மணற்கொண்டு - அழகிய நுண்ணிய மணல்                                                                         கொண்டு (கோலம்)
தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து- தெருவில் இட்டு
                                                                           அழகாய் அலங்கரித்து
அனங்க தேவா  - காம தேவனே
உய்யவு மாங்கொலோ என்று சொல்லி- உன்னைத்                                                                                                           தொழுவதால்
உய்யலாமோ என்று எண்ணி- இந்தத் துன்பத்திலிருந்து
                                                               தப்பிக்கலாமோ என எண்ணி

உன்னையும் உம்பியையும்- உன்னையும் உன் தம்பியான
                                                             சாமனையும்
தொழுதேன்   - தொழுதேன்
வைய்யதோர் தழலுமிழ்- வெப்பமுடைய நெருப்பை உமிழும்
சக்கரக்கை வேங்கடவற்கு  - சக்கரத்தைக் கையில்
                                                        கொண்ட வேங்கடவனுக்கு என்னை  - என்னை
விதிக்கற்றியே- விதித்து விடேன் (அவனுக்கே உரியவள்
                                                                            என்றாக்கி விடேன்)

தை மாதம் முழுவதும் தரையைத் தூய்மைப் படுத்தி. குளிர்ந்த நீர்த் தெளித்த மண்தரையில் மாசி முதல் நாள்..தெருவில் அழகிய கோலமிட்டு அலங்கரித்து , காமதேவனே! உன்னைத் தொழுவதால் , இந்தத் துன்பத்திலிருந்து தப்பிக்கலாமோ என எண்ணி, உன்னையும், உன் தம்பியுமான சாமனையும் தொழுதேன்.
வெப்பமுடைய நெருப்பை உமிழும் சக்கரத்தைக் கையில் கொண்ட வேங்கடவனுக்கு என்னை உரியவள் ஆக்கிவிடு.

Saturday, February 3, 2018

அடங்காத கை

சொன்னால்
கேட்பதில்லை
என் கை
எப்போதும்
ஏதேனும்
எழுது
எழுது
என
தொல்லை
கொடுத்துக்
கொண்டிருக்கிறது
எழுதுகோலோ
ஓய்வு
கேட்கிறது