Wednesday, April 27, 2011

கூட்டணிக் கண்ணாடி





அநியாயமாய்

செத்துக் கிடக்கிறார்கள்

அப்படியா..!

தெரியவில்லையே..!

அப்பாவி மக்கள்

லட்சக்கணக்கில் ஊனமடைந்ததைப் பார்

அப்படியா..!

தெரியவில்லையே..!

தமிழ்ப் பெண்கள்

கற்பழிக்கப் பட்டுள்ளதையாவதுப் பார்

அப்படியா..!

தெரியவில்லையே..!

குழந்தைகள் பெற்றோரை இழந்து

பரிதவிப்பதைப் பார்

அப்படியா..!

தெரியவில்லையே..!

கூட்டணிக் கண்ணாடியைக்

கழட்டிவிட்டுப் பார்..

ஐயகோ..!!

என் மக்கள்

கொல்லப்பட்டனரே!

என் மக்களைக் கொன்றவனை

கூண்டில் ஏற்றுங்கள்..

இதுவே என் முடிவு..

என் மக்களை

கூண்டில் ஏற்றாமல் இருந்தால்

முடிவை

மறு பரிசீலனை


செய்கிறேன்..!!

Sunday, April 24, 2011

ஊழல்களை ஒழித்திடுவோம் வாரீர்!



இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் ஆயிரக்கணக்கில் ஆரம்பித்த ஊழல்..லட்சக்கணக்கில் வளர்ந்து..இன்று கோடிக்கணக்கில் நிற்கிறது.

இந்நிலை நீடிக்குமேயாயின்..ஒருநாள் நம் நாட்டின் ஜனநாயகமே பறிபோகும் நிலை உருவாகிவிடக்கூடும்.

ஊழலை ஒழிப்பது எப்படி?

பூனைக்கு மணி கட்டுவது யார்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் அறிய...

பதிவர்களே!..இன்று மாலை சென்னை நாரத கான சபா அரங்கிற்கு வாருங்கள்..

எனது 'கறுப்பு ஆடுகள்' நாடகத்தைக் காணுங்கள். ரசியுங்கள்

அனுமதி இலவசம்.

மேலும் விவரம் வேண்டுவோர் என்னை 98402 82115 எண்ணில் தொடர்பு கொள்ளவும்

நன்றி

Wednesday, April 20, 2011

ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என்ற நிலை ஏன்: உச்ச நீதிமன்றம் வினா




“இந்த நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்று செய்திகள் கூறுகின்றன, அதே நேரத்தில் உணவின்றி மக்கள் சாகிறார்கள் என்று செய்தியும் வருகிறது. இந்த நாடு ஏழை இந்தியா என்றும் பணக்கார இந்தியா என்றும் இரண்டாகிக் கிடப்பதை அனுமதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கான பொது விநியோகத் திட்டத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகள் குறித்து மக்கள் குடிமை உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்) தொடர்ந்த பொது நல மனுவை விசாரித்துவரும் இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் கொண்டு நீதிமன்ற அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் நிலையில், 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இன்னமும் 36 விழுக்காடு என்று வைத்திருப்பது ஏன் என்று வினா எழுப்பிய நீதிபதிகள், எந்த அடிப்படையில் வறுமைக் கோடு நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அரசைக் கேட்டுள்ளது.

“இரண்டு இந்தியாக்கள் உள்ளன, அதனை ஏற்க முடியாது. சத்துணவு கிட்டாத நிலைக்குக் காரணமான இந்த முரண்பாட்டை என்னவென்று கூறுவது. நீங்கள் இந்நாட்டை வல்லரசு என்று கூறுகிறீர்கள், மறுபக்கம் உணவின்றி மக்கள் செத்து மடிகிறார்கள். சத்துணவுப் பற்றாக்குறையை முழுமையாக நீக்க வேண்டும்” என்று அரசு வழக்குரைஞர் மோகன் பராசரணைப் பார்த்து நீதிபதிகள் கூறினர்.

“நமது நாட்டின் உணவுக் கிடங்களில் போதுமான அளவிற்கு உணவுப் பொருட்கள் உள்ளன என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதே நேரத்தில் உணவின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனரே, இது என்ன வினோதம்?” என்று கேட்ட நீதிபதிகள், சத்தற்ற உணவு நிலையை குறைக்க, பொது விநியோகத் திட்டத்தை அரசு பலப்படுத்தி வருவதாகவும், அதனால் சத்துணவின்மை குறைந்து வருவதாகவும் மோகன் பராசரன் கூறியதற்கு, “குறைந்து வருகிறது என்றார் என்ன பொருள்? அது முழுமையாக இல்லாத நிலை ஏற்படவேண்டும்” என்று கூறினர்.

நமது நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிவதாக வந்த நாளிதழ் செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “இது மகிழ்ச்சியளிக்கூடிய செய்திதான். ஆனால் அதன் பலன் மக்களுக்கு சென்று சேரவில்லை என்றால் என்ன பயன்?” என்று கேட்டனர்.

என்ன அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அளவிடப்படுகிறார்கள் என்று கேட்ட நீதிபதிகள், இந்த நாட்டில் 36 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளார்கள் என்று 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கை வைத்துக்கொண்டு 2011இல் பேசுகிறீர்கள் என்று கூறிவிட்டு, காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளே தங்கள் மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் அளவு 36 விழுக்காட்டிற்கு மேல் என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர்.

நகர்புறத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.20க்கும் அதிகமான சம்பாதிப்பவர்கள், கிராம்ப்புறங்களில் ரூ.11க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் மக்கள் என்று திட்ட ஆணையம் கூறுவதை ஏற்க முடியுமா என்று வினா எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் கூறும் வருவாய் கிராமத்தில் வாழக் கூட போதுமானதல்ல என்று கூறியுள்ளனர்.

“வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை அளவிட என்ன அடிப்படை கையாளப்படுகிறது என்பதை திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் விளக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

(நன்றி வெப்துனியா )

Tuesday, April 19, 2011

கூடுதல் வாக்குப்பதிவு..யாருக்கு சாதகம்...





1971முதல் 2006 வரை நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் சராசரியாக 60 விழுக்காடு வாக்குகளே பதிவாகி..அதில் 32 அல்லது 33 விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சிகள் ஆட்சி அமைத்து வந்திருக்கின்றன.

இந்நிலையில் 2011க்கான தேர்தலில் பெருவாரியான மாவட்டங்களில் 80 விழுக்காடுகளுக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கான காரணம் என்ன..

ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன..என்று வாக்குப் பதிவு நாளன்று ஒரு நாள் விடுமுறைக் கிடைத்தது என மகிழ்ந்து வாக்களிக்காமல் இருந்த மக்கள் இம்முறை வாக்களித்துள்ளனரா?

அல்லது இலவசங்களால் மனம் மகிழ்ந்த வாக்காளர்கள் வாக்குப் பதிவு விழுக்காடை அதிகரித்துள்ளனரா?

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால்..மனம் மகிழ்ந்து..சுதந்திரமாக அதிக நேரம் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கலாம் என்று பலர் வாக்குச் சாவடி சென்றுள்ளனரா

இந்த முறை 18 வயதை அடந்த முதன் முறை வாக்காளர்கள் காரணமா?

எது எப்படியாயினும்..வாக்குப் பதிவு விழுக்காடு யாருக்கு சாதகமாக அமையும் என இரு அரசியல் கட்சிகளும் புரியாமல் விழித்து வருகின்றனர்.

நான் கடைசியாகச் சொன்ன புது வாக்காளர்கள் கணிசமாய் உயர்ந்துள்ளனர்..இவர்கள் வாக்கு...தொகுதியில் போட்டியிடும் சிறந்த வாக்காளர்களுக்கே போய்ச் சேர்ந்திருக்கும்..அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராய் இருந்தாலும் ஓகே தான்..ஆகவே இம்முறை சுயேச்சைகள் சற்று கூடுதலாய் வாக்குகள் பெற்றிருப்பர்.

'ராமன் ஆண்டால் என்ன.." வாக்குபதிவர்கள்..தங்கள் கடமையை இம்முறை கண்டிப்பாய் ஆற்றவேண்டிய நிலை இருப்பதை உணர்ந்து வாக்களித்திருப்பர்..இவர்கள் வாக்குகளை இரு திராவிடக் கட்சிகளுமே பெற்றிருக்கும்.

இலவசங்கள் ..அரசின் கடமை என்று மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டதால்..யார் வந்தாலும் இலவசங்கள் கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டதால், இம்முறை இலவச அறிவிப்புகள் குறிப்பிட்ட கட்சியின் வாக்குகளை அதிகரிக்கும் என்று தோன்றவில்லை.

கடைசியில் என்னதான் சொல்லவருகிறாய் என்கிறீர்களா..?

கூடுதல் வாக்குப்பதிவால் இரு கட்சிகளின் கூட்டணிகளுக்கும் கணிசமாய் வாக்குகள் அதிகரித்திருக்கக் கூடும்..ஆதலால்..இரு கட்சிகளுமே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்..ஆகவே ஆட்சி அமைப்பதில் இழுபறி தொடரும்..அப்படியே ஆட்சி அமைக்கும் கூட்டணிக்கும்..எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கும் 10 முதல் 20 வரையிலுமான அளவிலேயே மெஜாரிட்டி இருக்கும்..

இதுவரை தமிழகம் சந்தித்து இராத நிலைகள் ஏற்படக்கூடும்.

அடுத்து மக்கள் 2016 வரை அடுத்த சட்டசபத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை மாறி..அதற்கு முன்னரே சந்திக்கக் கூடும்.

இதற்கிடையே..ஆட்சி அமைக்கையில் கூட்டணி கட்சிகளும் கூட்டணி மாறலாம்.

Sunday, April 17, 2011

பதிவுலகம் 'டல்' அடிப்பதேன்....



கடந்த சில மாதங்களாக பதிவுலகம் டல் அடித்து வருகிறது.

அதற்கான காரணங்கள் என்னவாய் இருக்கும் என யோசித்ததில் எனக்குத் தோன்றிய காரணங்களில் முதல் இடம்..

தமிழ்மணம் அறிவித்த முன்னணி வார வலைப்பதிவுகள்..

இதில் இருபதற்குள் வர வேண்டும் என பலருக்கு விருப்பம் ஏற்பட்டதால்..ஒருநாளைக்கு இரண்டு மூன்று என பதிவுகள் இட ஆரம்பித்தனர்.இதனால் பதிவிட சரியான விஷயங்கள் இல்லாததால்..சாரமில்லா பதிவுகள்,நடிகைகள் படங்கள்,பதிவர்களை கலாய்த்தல் போன்ற பதிவுகள் அதிகம் வர ஆரம்பித்து..அவற்றை படிப்பவர்கள் இடையே சலிப்பே ஏற்பட்டது.கமெண்டுகள் அதிகரிக்க..1,2,3,4, என கமெண்டுகள் எண்ணிகையில் போடப்படுகின்றன.

அடுத்த காரணம்..

பதிவர்களின்..ஈகோ..ஒரு காரணம்..

சில பதிவர்கள் வேலையினூடே பதிவிடுபவர்கள்..ஆகவே இவர்களால் அதிகம் பதிவிடமுடியாது..அதனால் முன்னணி பதிவில் இடம் பிடிக்க முடியாது.அது அவர்களின் வலைப்பூவின் தன்மையை குறைத்துவிடுமோ என்ற எண்ணம்.

தவிர்த்து..சென்ற வருடம்..

குறிப்பிட்ட சில பதிவர்கள் பற்றி தரக்குறைவான பதிவுகள் வர..நல்ல எண்ணத்துடன்..பதிவரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நினைத்த சில முக்கிய பதிவர்களை..அவர்களின் எண்ணத்தை கொச்சப்படுத்தியதால்..அந்த பதிவர்கள் பதிவுலகை விட்டே விலகினர்.

இதனால்..இலக்கியத் தரம் மிக்க பதிவினை இட்ட இவர்களை இணையம் இழந்தது.

மீண்டும் பதிவுலகம் எழுச்சி அடைய வேண்டுமாயின்..

பதிவர்களிடையே..ஒற்றுமை அதிகரிக்க வேண்டும்..

வலைப்பதிவர்கள் குழுமம்.கூடி..சிறந்த பதிவர்கள் குழுவை ஏற்படுத்த வேண்டும்..

எந்த சமூக பிரச்னையானாலும்..அதை தனிப்பட்ட மனிதர்கள் கையாள்வதை விட இந்த குழுமம் மூலமாக செயல் படுத்தப் பட வேண்டும்.

வருடம் ஒரு முறையோ..அல்லது இரு வருடத்திற்கு ஒரு முறையோ..இந்தக் குழு மாற்றப்பட வேண்டும்.

பதிவர்களிடையே பிரச்னை என்றால்..இக்குழு மூலம் தீர்க்கப்பட வேண்டும்..

இதியெல்லாம் ஓரளவு வரைமுறைப் படுத்தினால் மீண்டும் பதிவுலகம் புத்துணர்ச்சி பெறலாம்.

எல்லாவற்றையும் விட

இறுதியாக...

தனிமனிதத் துதி ஒழித்திட வேண்டும்..

செய்வோமா?

Saturday, April 16, 2011

ஐ.நா.நிபுணர் குழுவின் நீதியற்றப் பரிந்துரை




இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணையை சர்வதேச சட்டங்களின்படி சிறிலங்க அரசே நடத்த வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை ஐ.நா.பொதுச் செயலர் அமைக்க வேண்டும் என்றும் ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் ஆதரவுடன் சிறிலங்க அரசு நடத்திய அந்த இனப் படுகொலைப் போரில் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல் போயுள்ளனர் என்ற தெளிவான விவரம் சிறிலங்க அரசு அமைத்த ‘கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையம்’ முன்பு நேர் நின்ற மன்னார் பேராயர் ஜோசஃப் ராயப்பு தாக்கல் செய்த பின்னரும், அதற்கு இதுநாள்வரை உரிய பதிலை சிறிலங்க அரசால் தர முடியவில்லை என்ற உண்மையை அறிந்த பின்னரும், விசாரணைப் பொறுப்பை இனப் படுகொலை குற்றச்சாற்றிற்கு ஆளாகியுள்ள அந்நாட்டு அரசிடமே ஒப்படைப்பது என்பது கொலைகாரனிடம், புலனாய்வுப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு ஒப்பானதாகும்.

2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14,15,16ஆம் தேதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் நடந்த போர் குறித்து விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்ட அனைத்தும் - அதாவது சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது, வன்னி முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளது ஆகியன - உண்மையே என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ள நிபுணர் குழு, அந்தக் குற்றங்களை இழைத்தவர்களைக் கண்டறிந்து, அக்குற்றத்திற்கு பொறுப்பாக்கும் முக்கிய நீதிப் பணியை சிறிலங்க அரசிடம் வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை.

2008 செப்டம்பர் முதல் 2009 மே 18ஆம் தேதி வரை நடந்த போரில் அப்பாவி மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும், அதற்குக் காரணம், மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வரமாறு அழைத்து, அவர்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதே என்பதை ஆதாரப்பூர்வமாக அறிந்துள்ள ஐ.நா.நிபுணர் குழு, அதற்கான உத்தரவைப் பிறப்பித்த - அதாவது மனித உயிர்களைப் பற்றிய கவலையை விடுங்கள், வெற்றி என்பது மட்டுமே இந்தப் போரின் இறுதி இலக்கு என்று கூறி, இராணுவத்திற்கு ‘முழுச் சுதந்திரம்’ அளித்த சிறிலங்க அதிபரிடமே, அந்தப் போரில் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை தரலாமா?

மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள், உணவுக்காக நின்றவர்கள் மீது குண்டு வீச்சு, மருத்துவனைகள் இருப்பதை அறிந்தும் திட்டமிட்ட தொடர் குண்டு வீச்சு, போர் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்குத் தேவையான உணவை போதுமான அளவிற்கு கொடுக்காமல் அவர்களைப் பட்டினிப் போட்டுச் சாகடிக்க எண்ணிக்கையை குறைத்துக் கூறியது, அவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களைக் கூட தராமல் மறுத்தது ஆகியவற்றிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று தங்களுடைய அறிக்கையில் கூறியுள்ள ஐ.நா.நிபுணர் குழு, அந்த நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட சிறிலங்க அரசு தலைமையிடமே நேர்மையாக, பன்னாட்டு சட்டங்களின் படி விசாரணை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்கக் கூறுவது எப்படி நியாயமாகும்?
 
இறுதி கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு முக்கிய காரணம், கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதே - அதிலும் குறிப்பாக தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதலே என்று தெளிவாகக் குறிப்பிடும் ஐ.நா. நிபுணர் குழு, கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு, அதனை தன் நாட்டு மக்களின் மீதே பயன்படுத்த - போரை வேகமாக முடிப்பதற்காக - உத்தரவிட்ட அரசுத் தலைமையிடம் விசாரணை பொறுப்பை ஒப்படைக்கலாமா?

இறுதிக் கட்ட போரைப் பற்றி பேசுகிறது ஐ.நா. நிபுணர் குழு. ஆனால் இறுதி கட்டப் போரைத தவிர்க்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சரண்டைய ஒப்புக்கொண்டு, துப்பாக்கிகளை மெளனித்தபோது, அவர்களின் சரணை ஏற்காமல், வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களை சுட்டுத் தள்ள உத்தரவிட்டது மட்டுமின்றி, முள்ளிவாய்க்காலிலும், வட்டுவாகலிலும் காயமுற்று குற்றுயிராகக் கிடந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் கொன்றொழிக்க உத்தரவிட்ட கோத்தபய ராஜபக்சவின் அண்ணனிடமே விசாரணை பொறுப்பை ஒப்படைக்கச் சொல்வது நியாயத்தை வெளிக்கொணரவே அல்லது புதைத்திடவா? இந்த விடயத்தை தனது அறிக்கையில் குறிப்பிடாமலேயே தவிர்த்துள்ளது ஐ.நா.நிபுணர் குழு!

எந்த ஒரு அரசிற்கு எதிராக போர்க் குற்றங்கள் சுமத்தப்படுகிறதோ அந்த அரசிடமே விசாரணைப் பொறுப்பை ஒப்படைக்கும் முறை எப்போதாவது நடந்துள்ளதா? கொசோவோவில் நடந்த படுகொலை விசாரணையை நடத்தியது யார்? பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் விமானங்களில் இருந்து குண்டு மழை பொழிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதே, அப்போது விசாரணைப் பொறுப்பை ஏன் இஸ்ரேலிடம் ஒப்படைக்கவில்லை? இஸ்ரேலை விட ஒரு வல்லரசா சிறிலங்கா? ஐ.நா.வின் போக்கு ஏன் பலவீனமாக இருக்கிறது?

இது நேர்மையல்ல, நியாயமுமல்ல. இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க, அதற்கு பயங்கரவாத முத்திரை இடப்பட்டது என்பது நிரந்தர மக்கள் தீர்ப்பாய விசாரணையில் வெளிவந்த உண்மை. ஆனால் அதைப் பற்றி ஐ.நா. நிபுணர் குழு மூச்சுவிடவில்லை. தமிழர்கள் நாதியற்றவர்கள், அவர்களுக்கென்று பேச ஒரு நாடும் இல்லை என்பதால் ஐ.நா.அநீதியைத் திணிக்கிறதா?

ஐ.நா. நிபுணர் குழு அளித்த பரிந்துரை ஐயத்திற்குரியதாகவுள்ளது. நியாயமுடைய, பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படை புரிந்த ஒரு குழு இப்படிப்பட்ட பரிந்துரையைச் செய்திருக்க நியாயமில்லை. ‘இப்படி ஒரு அறிக்கையை தாருங்கள்’ என்று சொல்லி வாங்கியதுபோல்தான் ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரை உள்ளது. இது ஐ.நா.வின் மனித உரிமை பிரகடணங்கள் அனைத்திற்கு எதிரானது.
(நன்றி வெப்துனியா)














Friday, April 15, 2011

கொலையும்.. சங்கரமடமும்..





காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த சங்கரராமன் கொலையானதும்..அதன் காரணமாக சங்கராச்சாரிகள் கைதானதும் நாம் அறிந்ததே.

அந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் நீதி கிடைக்காது(!!) என புதுச்சேரி க்கு மாற்றப்பட்டதும்..இன்றைய நிலையில் பல சாட்சிகள் சங்கராச்சாரிக்கு ஆதரவாக பல்டி அடித்துவிட்டதும் நடந்துவருகிறது.

இந்நிலையில் மீண்டும் ஒரு கொலை வழக்கு வரப்போகிறது.

புதுக்கோட்டையில் சங்கரமடம் உள்ளது.அதன் காவலாளியாக பழனியப்பன் என்ற 60 வயது முதியவர் இருந்து வந்தார்.பத்து ஆண்டுகளாக இங்கு வேலைசெய்து வந்தார்.சாப்பிட மட்டும் வீட்டிற்கு சென்றுவிட்டு மற்ற நேரங்களில் மடத்திலேயே இருப்பார்.

நேற்று (14-4) இரவு 9 மணிக்கு சாப்பிட்டுவிட்டு மடத்திற்கு வந்து படுத்தார்.அடுத்த நாள் காலை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாய்க் கிடந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இம்முறை பூதம் ஏதும் கிளம்பாது என நம்புவோம்

Thursday, April 14, 2011

இந்தத் தேர்தலில் ஸ்டார் பேச்சாளர் யார்..?



ஒவ்வொரு தேர்தலிலும்..குறிப்பிட்ட சில பேச்சாளர்கள் பேச்சைக் கேட்க மக்கள் விரும்புவதுண்டு.

தி.மு.க., வெற்றிகொண்டான்..அ.தி.மு.க., எஸ்.எஸ்.சந்திரன் இருவர் பேச்சிலும் சற்று ஆபாசம் இருந்தாலும்..வேடிக்கையாகப் பேசு இவர்கள் பேச்சை மக்கள் ரசிப்பதுண்டு.

அவர்கள் இருவரும் இன்று இல்லாத நிலையில்..இந்தத் தேர்தலில் யார் பேச்சு நன்றாக இருந்தது எனப் பார்த்தோமானால்..

தி.மு.க., விற்காக கலைஞரைத் தவிர..பல கூட்டங்களில் ஸ்டாலின்,வடிவேலு,குஷ்பூ ஆகியோர் பேசிய பேச்சுகள் பரவலாக கும்பலைக் கூட்டியது.

குஷ்பூ..தனக்குத் தெர்ந்த தமிழில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இருந்த இலவசங்கள் பற்றி பேசியதுடன் ஜெ பற்றியும் விஜய்காந்த் பற்றியும் சற்று தாக்கியே பேசினார்.

வடிவேலுவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்..அவர் விஜய்காந்தின் மீது உள்ள தனிப்பகையை இந்தத் தேர்தலில் பேசித் திட்டித் தீர்த்துக் கொண்டார்.பல இடங்களில் ஒரே மாதிரியே பேசினார்.தான் படங்களில் தான் கைப்புள்ள..நிஜத்தில் தைரியசாலி என்பதுபோல பல இடங்களில் இவர் பேச்சு இருந்தது.

ஸ்டாலின்..போன இடமெல்லாம் மக்கள் கூட்டம்..ஓரிரு இடத்தில் மட்டுமே ஜெ வை சற்று தரக்குறைவாகப் பேசினாரே தவிர..பெரும்பாலும் பல இடங்களில் அருமையாகப் பேசினார்.தரமானப் பேச்சு.

கலைஞர் இப்போதெல்லாம்..யாரோ எழுதித் தருவதைத் தான் படிப்பது போல உள்ளது.பார்த்தே படிக்கிறார்.

ஜெ..அ.தி.மு.க., வின் ஒரே பேச்சாளர் இம்முறை.இவரும் எழுதியதையேப் படித்தார்..பெரும்பாலும் கருணாநிதி அண்ட் கோ வை திட்டும் பேச்சாகவே அமைந்தது.

விஜய்காந்த்..சாரி..என்ன பேசினார் என்பது..அவருக்கேத் தெரியுமா எனப் புரியவில்லை..அவர் பேசியதற்கான அர்த்தத்தை பண்ருட்டியார் திரும்ப சற்றே மாற்றி சொல்ல வேண்டியிருந்தது.

தங்கபாலு...பல இடங்களில் காங்கிரஸ் என்பதை மறந்து தி.மு.க., துதி பாடினார்.

தா.பாண்டியன் பேச்சு சற்று தேவலாம் ரகம்

மற்ற குட்டிப் பேச்சாளர்கள் எல்லாம் தங்கள்..தங்கள்..தலைவர் துதி பாடுவதே கருமமாய்(!) எண்ணினர்.

ராமதாஸ்..தான் தியாகம் செய்த ஒரு தொகுதி பற்றி பேசியதுடன்..கலைஞர் 6ஆவது முறை முதல்வர் ஆவார் என பேசினார்..மனதிற்குள் 2013ல் அன்புமனி ராஜ்யசபா ஸீட் கொடுப்பார் என எண்ணிக் கோண்டே..

மொத்தத்தில் இந்தத் தேர்தலில் ஸ்டார் பேச்சாளர் என தேர்ந்தெடுக்கும் லிஸ்டில் வடிவேலு..ஸ்டாலின் மட்டுமே உள்ளனர்.

பேச்சின் தரத்தைக் கொண்டு..ஸ்டாலினே ஸ்டார் பேச்சாளர் என நான் தேர்ந்தெடுக்கிறேண்

Wednesday, April 13, 2011

பதிவர்களே தயவுசெய்து ஒன்றுபடுங்கள்..

URGENT>>>

கொடுங்கோலன்..தமிழினத் துரோகி..

ராஜபக்க்ஷேவிற்கு எதிர்த்து வாக்களியுங்கள்..

விவரங்களுக்கு இங்கே செல்லவும்

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100



காங்கிரஸ் கட்சியா?..தங்கபாலு கட்சியா..?!!





கோஷ்டிப் பூசல் தமிழக காங்கிரஸ் கட்சியில் நாளும் இருந்து வருவதுதான்..

ஆனால்..தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கு இவ்வளவு எதிர்ப்பு இருப்பது இதுவே முதன்முறை என எண்ணுகிறேன்.

ஆம்...மயிலை திடீர் வேட்பாளராக மாறிய தங்கபாலு வைத்தான் சொல்கிறேன்.

அவருக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில்..நேற்று மட்டும் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து 19 பேரை நீக்கம் செய்துள்ளார்.

நீண்ட நாளாக காங்கிரஸில் இருந்து வரும் மூப்பனாரின் விசுவாசியாய் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராஜன் அவற்றில் ஒருவர்.இவரும் மயிலை தொகுதியில் வேட்பாளராக விருப்பம் தெரிவித்தவர்.

அடுத்தவர் எஸ்.வீ.சேகர்..நாடகம் நடத்திக் கொண்டிருந்த இவர் சுயேச்சையாய் போட்டியிட்டு டிபாசிட் இழந்தவர் ஒரு காலத்தில்.இவரை எம்.எல்.ஏ.,வாக்கினார் ஜெ.பின் இவர் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பின்..தி.மு.க., வை நெருங்கினார்..பின் என்ன நடந்தது எனத் தெரியாது..தில்லிச் சென்று ராகுல் காந்தியைச் சந்தித்தார்.பின்னர் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.இவரும் மயிலையில் வேட்பாளர் ஆக முயற்சித்தார்.

இவரைத்தவிர இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த விஜயசேகர், மற்றும் 17 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் பாலு.

ஒருபுறம் ராகுல் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் நிலையில்..தங்கபாலுவின் இந்த நடவடிக்கை அவரின் எதேச்சாதிகார போக்கையேத் தெரிவிக்கிறது.

காங்கிரஸிலிருந்து இவர் தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை
 

Tuesday, April 12, 2011

நாளை நாடு இளைஞர்கள் கையில்....உணர்ந்து செயல்படுங்கள்





இளைஞர்களே..விழித்து எழுங்கள்..நாளை நம் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைய தேதியில் மக்கள் 4.7 கோடிகள்.இவற்றில் ஒரு கோடிக்கு மேல் 29 வயதிற்குள் உள்ள இளைஞர்கள்.39 வயதிற்குள் 1.2 கோடிகள்.

அதாவது இன்றைய வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 39 வயதிற்குட்பட்டவர்கள்.

இவர்களை நம்பித்தான் எதிர்கால தமிழகம் உள்ளது.

நீங்கள் சோம்பித் திரியாமல்...பணியாற்றுங்கள்.

தமிழர்கள் தலைவிதியை மாற்றுங்கள். 40 வயதிற்கு மேற்பட்டவர்களே..ஒரு கோடி நீங்கள் இருக்கிறீர்கள்..இன்றைய இளைஞர்களை நல்வழி நடத்தும் பெரும் பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.

பிறகு என்ன..அப்படி நீங்கள் செயலாற்றினால்...

ஒளிமயமான தமிழகம் என்னும் கனவு நனவாகும்...



(கட்சிகளின் இளைஞர் அணி செயலாளர்களின் வயதை வைத்து இளைஞர்களை நான் தேர்ந்தெடுக்கவில்லை.39 வயதிற்குள் இருப்பவர்களையே இளைஞர்கள் என்றுள்ளேன்)

Monday, April 11, 2011

நான் தி.மு.க., தான் ..ஆனாலும் நான் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை...



நான் தி.மு.க., அனுதாபி..

இது நாள் வரை தி.மு.க., விற்கே வாக்களித்து வந்துள்ளேன்.

இம்முறை..தி.மு.க., பல தவறுகள் இழைத்திருந்தாலும்... காமன் மேன் அதனால் பாதிக்கப் படவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னையில்...கலைஞரை..வரலாறு மன்னிக்காது..

ஆனாலும்...அவரைத்தவிர முதல்வர் பதவியில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள்.

பதவியில் தொடர்ந்து இருக்க காங்கிரஸ் கட்சியை விரோதித்துக் கொள்ள கலைஞர் தயாராய் இல்லை..ஏனெனில் அடுத்தக் கட்சி..வடையைக் கவ்வ வாயைத் திறந்து காத்துக் கொண்டிருந்தது.

காங்கிரஸ் மட்டுமே இலங்கைப் பிரச்னையில் தமிழர்களை காப்பாற்றி இருக்க வேண்டும்.காப்பாற்றி இருக்க முடியும்..

அவர்கள் செய்த துரோகத்தை மன்னிக்க முடியாது..

ஆகவே..காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ..காங்கிரஸை தோற்கடிப்போம்..

வள்ளுவனின்..'குணம் நாடி..குற்றம் நாடி' குறள் படி பார்த்தால்..குற்றத்தைவிட குணம் தி.மு.க., பக்கம் சற்று அதிகமாகவே சாய்வதால்..தி.மு.க.,வையே நான் ஆதரிக்கிறேன்.

ஆனாலும் நான் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை..

காரணம்..

நான் சார்ந்துள்ள வேளச்சேரி தொகுதியில் பா.ம.க., நிற்கிறது..

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் தன் கலரை மாற்றிக்கொண்டிருக்கும் அக்கட்சிக்கு வாக்களிக்க மனம் ஒப்பவில்லை.

ஆகவே இம்முறை என் வாக்கு வீணாகப்போகிறது.

Sunday, April 10, 2011

எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா..மற்றும் விகடன்..







விகடனில் பொக்கிஷம் என்ற பெயரில் பழைய விகடன்களில் வந்த செய்தியை பிரசுரிப்பது தற்போது வழக்கத்தில் உள்ளது.

சமீபத்திய விகடனில்..சுட்டபிறகு..எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா சந்திப்பு என்ற தலைப்பில்..இவர்கள் இருவருடன் ஹண்டே,கே.ஏ.கே., ஆகியோர் தரையில் அமர்ந்துள்ள புகைப்படத்தை பிரசுரித்து கே.ஏ.கே., ஹண்டே ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.(இச் செய்தி வெளியானது விகடனின் 4-3-01 இதழில்)

'இது பெரியார் இறந்த தினத்தில் எடுக்கப்பட்டது..பெரியாரின் உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்து வரப்படுவது அறிந்து ராமாவரம் தோட்டத்திலிருந்து புரட்சித் தலைவருடன் நாங்கள் புறப்பட்டு

சென்றோம்..

ஒரு புறம் அமைச்சர்கள் புடைசூழ கலைஞர்..இன்னொருபுறம் காமராஜ் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அப்போது இடதுபுறம் நண்பர்களுடன் அமர்ந்திருந்த எம்.ஆர்.ராதா..புரட்சித் தலைவரைப் பார்த்து,'என்ன தலைவரே' என்றார்.

எம்.ஜி.ஆரும், 'என்ன ராதா அண்ணே' என்றார்.

துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சிகளுக்கு பிறகு முதன் முறையாக அவர்கள் சந்திக்கின்றனர்.எங்கே சண்டை வந்து விடுமோ என்ற அச்சத்துடன் நடந்த பனிப்போர் சந்திப்பு அது..

'எதுக்கு அவர் கிட்ட மோதிக்கிட்டு.தனிக்கட்சி எல்லாம்.உங்க மோதல்ல சிந்து பாடி காங்கிரஸ் குறுக்கே வந்துடப் போகுது' என்ற ரீதியில் ராதா பேசினார்.

'இல்லல்ல..சில காரணங்களால்தான் அரசியலில் இறங்கினேன்.முன் வைச்சக் காலை பின் வைக்கப் போறதில்லை' என்றார் எம்.ஜி.ஆர்., பின் பேச்சு வேறு திசையில் சென்றது.. என்றுள்ளனர்..



இனி நாம்..ராதா சொன்னதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது..

அதற்குப் பின் இரண்டு திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் முதுகில் காங்கிரஸ் சவாரிசெய்துக் கொண்டுதான் உள்ளது.

இது நாள் வரை இவர்கள் தயவை எதிர்பார்த்த கட்சி..இந்த முறை கலைஞரின் பலவீனத்தை அறிந்து ஆரம்பத்தில் தொகுதி பங்கீட்டில் முரண்டு பிடித்தது.

சமீபத்தில் சென்னை வந்த பிரணாப், 'தேர்தலுக்குப் பின் ஆட்சியில் பங்கு பற்றி முடிவெடுக்கப் படும்' என்றுள்ளார்..

'இருக்க இடம் கொடுத்தால் என்னையே நீ பார்க்கிற..

குறுக்கு வழியைத் தேடறே

கோண புத்தியைக் காட்டற'

என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
 

Saturday, April 9, 2011

வாக்காளருக்கு பணம் .. ஜெயலலிதா தொகுதியில்

 ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஓட்டு போட பணம் கொடுத்த 7 திமுகவினரும் அவர்களிடம் பணம் வாங்கிய 6 வாக்காளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அமல்படுத்தி உள்ளது. பறக்கும் படையினரும் ஆங்காங்கே திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.இதுவரை ரூ.42 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஓட்டுக்காக பணம் பெறுவது குற்றம், பணம் கொடுப்பவர்கள் மட்டுமின்றி பணம் வாங்குபவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையில்,

தமிழக சட்டமன்ற தேர்தலில், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப்போட முடியாது. அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பை கொண்டு ஓட்டுப்போடலாம். இதுவரை 95 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் வழங்கிவிட்டோம். மீதமுள்ளவர்களுக்கு அவரவர் ஓட்டுப்போடும் வாக்குச்சாவடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். 100 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இதுவரை 20 ஆயிரம் துணை ராணுவத்தினர் (200 கம்பெனி) வந்துள்ளனர். மேலும், 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் 11ம் தேதி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஓட்டுப்போடுவதற்காக பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் சட்டப்படி குற்றம். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (இ) பிரிவின் கீழ் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும்.

யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் பணத்தைப் போட்டுவிட்டால் அந்தப் பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளாமல், போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்மூலம் நல்ல குடிமகன் என்பதை நிரூபிக்கலாம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு வசதியாக இரவு நேரத்தில் வேண்டுமென்றே மின்தடை ஏற்படுத்துவதாக கூறப்படும் புகார் பற்றி விசாரிக்கப்படும். இதுதொடர்பாக மின்சார வாரியத் தலைவருடன் பேச இருக்கிறேன்.

இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளின்படி எவ்வித பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறது என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதன் முதலாக குறிப்பிட்ட ஓட்டு போட பணம் வாங்கியதாக ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த 6 வாக்காளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் இந்தத் தொகுதியில் வாக்காளர்கள் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார்
கடும் போட்டி நிலவி வரும் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆனந்துக்கு வாக்கு சேகரித்த அதவத்தூர் பஞ்சாயத்து தலைவர் ஆண்டிமணி, அவரது ஆதரவாளர்கள் ராஜேந்திரன், ராமு, எஸ்.ராஜேந்திரன், சேகர், அன்பழகன் , விஜயகுமார் ஆகியோர் 7 பேர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தனர்.

இதையறிந்த தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் அங்கு விரைந்து பணம் பட்டு வாடா செய்த 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் பெற்ற வாக்காளர்கள் செல்வம், பெரியசாமி, நாகவள்ளி, காமாட்சி, சண்முகம், அமிர்தம் ஆகியோரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ஓட்டுக்காக வழங்கப்பட்ட ரூ. 5,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் கூறுகையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் வினியோகித்த 7 பேரும், பணம் பெற்ற வாக்காளர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பணம் பெற்ற வாக்காளர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

மதுரையில்....

அதே போல மதுரை பசும்பொன் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஸ்கரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.5,000 பறிமுதல் செய்யப்பட்டது. புதூர் வாமடிப்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த மாணவர் கபிலன் (20) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.4,900 பறிமுதல் செய்யப்பட்டது.

விளக்குத் தூண் பகுதியில் செல்வக்குமார், குமார் ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.15,000 பறிமுதல் செய் யப்பட்டது.

ரூ. 20 லட்சம் பறிமுதல்:

மதுரை கூடல்நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரிமேட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒத்தக்கடையில் கணபதி (41) என்பவர் கைது செய்யப்பட்டார். ஊமச்சிக்குளத்தில் வேல்பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ரூ.17,000 பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை பகுதிகளில் இதுவரை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலூர் அருகே நயித்தான்பட்டி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் திருஞானம், அந்த பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்ற பெண்ணிடம் ரூ.10,000 தந்து அதை தலா ரூ.200 வீதம் 50 பேருக்கு கொடுக்கும்படி கூறினார். அதன்படி செல்லமுத்து அந்த பகுதியை சேர்ந்த 30 பேருக்கு தலா ரூ.200 வினியோகித்தபோது கீழவளவு போலீசார் செல்லமுத்துவை கையும் களவுமாகப் பிடித்தனர்.

(நன்றி தட்ஸ் தமிழ் )

Friday, April 8, 2011

ஊடகங்கள் நம்பிக்கையானவையா...யாரை நம்புவது!!!





ஒவ்வொரு நாட்டிலும் ஊடகங்கள் ஆற்றும் பணி அளப்பறியது.

ஒரு நாட்டின் தலையெழுத்தையேக் கூட ஊடகங்களால் மாற்றியமைக்க முடியும்.

அப்படிப்பட்ட ஊடகங்கள் இன்று மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்படுகின்றனவா....

இன்றைய இரு தினசரிகளில் ஒரே செய்தி எப்படி..எப்படி வந்திருக்கிறது பாருங்கள்...

தமிழ் தினசரிகள் விற்பனையில் நம்பர் ஒன் என சொல்லிக் கொள்ளும் தினகரனில் வந்துள்ள ஒரு செய்தி..

"ஜாம்பஜாரில் பணப்பட்டுவாடா..அதிமுக. உறுப்பினர் சிக்கினார்



ஜாம்பஜாரில் வாக்காளர்களிடம் பணம் பட்டுவாடா செய்த அதிமுக உறுப்பினர் சிக்கினார்.அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஜாம்பஜார் பகுதியில் சிலர் வாக்காளர்களைக் கவர பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்படி அதிகாரி ராமானுஜம் தலைமையில் சென்ற தேர்தல் அதிகாரிகள் ஜாம்பஜார் முழுதும் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் ஜெஜே கான் தெருவில் மெழுகுவர்த்தி பெட்டியில் ரூ.500,1000 வைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலர் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தவர்களை பிடிக்க முயன்றனர்.4பேர் தப்பி ஓடிவிட்டனர்.ஒருவர் மட்டும் சிக்கினார்.அவரை ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், பிடிபட்டவர் பெயர் பாட்ஷா.இவர் அதிமுக வைச் சேர்ந்தவர் என்றும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.



இதே செய்தி

India's National Newspaper since 1878

என முகப்பில் போட்டுக் கொள்ளும்.."The Hindu" பத்திரிகையில் வந்த செய்தி



Held For distributing Money

Police on Friday detained a DMK functionary on charges of distributing money to voters.

election officials received information that a DMK funcionary was distributing money to voters in the Chepauk-Thiruvallikkeni assembly constituency on Friday.A flying squad team rushed there anad found Batcha in possession of some covers each containing Rs 1000 denomination meeting people of JJ khan Road.

On his information, police searched the office and residential premises of another DMK funcionary.Another person whose name was also Batcha who claimed to be a DMK funcionary was also detained for being in possession of some covers containing Money.

The two were taken away for interrogation



யாரை நம்புவது...



தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(8-4-11)





காரா முள்ளு,சூரா முள்ளு,எலந்த முள்ளு,இண்ட முள்ளு,கருவேல முள்ளு,வேலா முள்ளு,மதுக்கார முள்ளு,முக்குறுணி முள்ளு,கிளுவ முள்ளு,ஓடசாலி முள்ளு,நெருஞ்சி முள்ளு,கள்ளி முள்ளு என முள்ளுகளுக்கு மத்தியில் ஒத்தையடிப் பாதை போற மாதிரி பொலம்பிக்கிட்டே போறா கருவாச்சி..- கருவாச்சி காவியத்தில் வைரமுத்துவின் வைர வரிகள்



2)தமிழக தேர்தல் களத்தில் அதிமுக 43 பேர்,திமுக24 பேர்,பாஜக 19 பேர்,பாமக 14 பேர்,காங்கிரஸ் 6,தேமுதிக 6 என கிரிமினல் பின்னணிக் கொண்ட வேட்பாளர்கள் உள்ளனர்.திமுகவின் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது ஏழு வழக்குகள் உள்ளன.இவர் அந்தியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்



3)சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் யாரையும் வசைபாடாது நாகரிகமாக பிரச்சாரம் செய்பவர் நடிகை ராதிகா மட்டுமே



4)'உடம்பு வாழையிலையைப் போன்றது.இலையில் பலவிதமாய் ருசியான உணவு பருமாறுகிறார்கள்.அவற்றை நாம் சாப்பிட்டு முடித்தப் பின் இலையை பத்திரமாக சுருட்டி வைத்துக் கொள்கிறோமா என்ன? அதன் உபயோகம் தீர்ந்து விட்டால் எச்சில் இலையைத் தூர எறிந்து விடுகிறோம் இல்லையா? அது போலத்தான் நம் உடம்பும் - ரமணமகரிஷி



5)2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை 121 கோடி.இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மொத்தம் 640 மாவட்டங்கள் 7742 நகரங்கள் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 24 கோடி குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட தகவல்.இந்த கணக்கெடுப்புக்கு ஆனத் தொகை 2209 கோடிகள்



6)மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் கீழ்கண்ட அற்புதவரிகள் என்னைக் கவர்ந்தவை..

நீங்கள் எந்த ஒன்றிற்கும் ஆசைப்படுவதற்கு முன்னால்..அதற்கு உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்.



7)திராவிடக் கட்சிகள்..தங்கள் கொள்கைகளைப் பேசாமல்..இலவசங்களைப் பற்றி பேசுவதும்..அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத நடிகர்களை நம்புவதும்...பயன்படுத்திக் கொள்வதும்...தமிழர்களிடம் இவர்கள் வைத்திருக்கும் (அவ) நம்பிக்கையையே உணர்த்துகிறது.தமிழகம் எங்கே போகிறது.

Thursday, April 7, 2011

கறுப்பு ஆடுகள்'





சாரே ஜகான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா...

இது உண்மையா..

இன்று நாடே ஊழல் தீயில் வெந்துக் கொண்டிருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்தபின் ஆயிரக்கணக்கில் ஆரம்பித்த ஊழல்...லட்சக்கணக்காய் ஆகி..இன்று..

கோடிக்கணக்கில் வந்து நிற்கிறது.

ஊழலை ஒழிக்கவே முடியாதா?

முடியும் என்கிறது நான் எழுதியுள்ள சமீபத்திய நாடகம் 'கறுப்பு ஆடுகள்'

25-4-11 ஆம் நாள் மாலை 7 மணி அளவில் சென்னை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் நாடக விழாவில் நாரத கான சபா அரங்கில் இந்த புதிய நாடகம் எனது சௌம்யா தியேட்டர்ஸ் சார்பில் அரங்கேறுகிறது.

அனுமதி இலவசம்..

பதிவுலக நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

Wednesday, April 6, 2011

ஆண்டி எப்ப போவான்..திண்ணை எப்ப காலியாகும்...





180 உலகநாடுகளில் 120 சத்யசாய் பாபா மையங்களை அறக்கட்டளை நிர்வாகத்தில் நிர்வகித்து வருகிறது.இரண்டு பள்ளிகள்,மருத்துவ மனைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

40000 கோடி அளவிளான சொத்துக்களைக் கொண்டுள்ள சாய்பாபாவிற்கு சொந்தமான சத்யசாய் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.அந்த நிர்வாகத்தை ஆந்திர மாநில அரசு எடுத்துக் கொள்ள பரிசீலித்து வருகிறது.

சாய்பாபா குடும்பத்திற்கும்,ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவுக்கு ஆந்திர அரசு வந்துள்ளது.

சாய்பாபாவின் உடநிலைக் குறித்தும் அறக்கட்டளை தெளிவான அறிக்கையும் வெளியிடுவதில்லை.

இந்நிலையில்தான் ஆந்திர அரசு அதிகாரிகள்,மருத்துவர்கள் கொண்ட ஐந்து பேர் கொண்ட குழுவை புட்டபர்த்திக்கு அனுப்பியுள்ளது.இவர்கள் அறக்கட்டளையின் சொத்துக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த அறக்கட்டளை நிர்வகிக்கும் நிறுவனங்கள்..

புட்டபர்த்தி,பெங்களூரு ஆகிய இடங்களில் மருத்துவமனைகள்

பல்கலைக்கழகம்

பிளானட்டேரியம்

ரயில்வே நிலையம்(பராமரிப்பு)

கிரிக்கெட் ஸ்டேடியம்

இசைக்கல்லூரி

விமானநிலையம் (பராமரிப்பு)

உள்ளரங்க விளையாட்டுஅரங்கம்



திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையையும் 1966ல் அரசு இப்படித்தான் கையகலப்படுத்தியது

Tuesday, April 5, 2011

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)


நம்ம கட்சி கொஞ்ச நஞ்சம் வெற்றி பெறுவதையும் தலைவர் கெடுத்துடுவார் போல இருக்கு

ஏன் அப்படி சொல்ற

கூட்டத்தில பேசும்போது எல்லா இடத்திலேயும் 'இந்தத் தொகுதியில் நான் போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள்'னு பேசறாரே!



2)தலைவர் தான் பெரிய தியாகம் பண்ணியிருக்கேன்னு பேசறாரே..முன்னால ஜெயிலுக்குப் போய் இருக்காரா

அதெல்லாம் இல்லை..கூட்டணியில கொடுத்த தொகுதியில ஒன்னை குறைச்சுக்கிட்டு..அந்தத் தொகுதியை தியாகம் பண்ணிட்டாராம்



3)மக்கள் சந்தோஷப்படற மாதிரி ஏதாவது பேசுங்கன்னு கட்சி பேச்சாளர்களுக்கு சொன்னது தப்பாப் போச்சு..

ஏன்

நம்ம கட்சி ஜெயிச்சு வந்தா தலைவர் முதல்வராக மாட்டார்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க



4)இதற்கு முன்னால் ஆண்ட அரசு வரலாறு காணா வகையில் ஊழல் செய்திருக்கிறார்கள்..அதை முறியடிக்க இம்முறை எங்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்



5)தலைவர் ஆனாலும் ரொம்ப மோசம்..

என்ன சொல்ற

வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால்..அனைத்து வாக்காளர்களுக்கும் ஒரு கிராமம் இலவசம்னு அறிவிச்சிருக்கார்



6)தலைவர் பிரச்சாரம் முடிஞ்சு இரவு தண்ணீலே மிதப்பாராமே

ஊர் ஊரா சுத்து..வேர்த்து விறுவிறுத்து இருப்பதால் அரைமணி நேரம் குளிர்ந்த தண்ணீலே குளிப்பார்.அதைத்தான் இப்படிச் சொல்றாங்க



7)தலைவர் கச்சத்தீவை மீட்போம் என்று சொல்லாமல் கச்சையை மீட்போம்னு பேசறார்



8)தலைவா..கட்சி ஆஃபீஸ்ல வாக்காளருக்குக் கொடுக்க வைச்சிருந்த கோடிக்கணக்கான பணத்தை ஒருத்தன் நேற்று கொள்ளை அடிச்சுட்டான்..

இரைந்து பேசாதே..நான் தான் வந்து எடுத்துட்டு போயிட்டேன்..தேர்தல் ஆணையம் ரெய்டுக்கு வரப்போறதா செய்தி வந்தது
 

Monday, April 4, 2011

வடிவேலு பிரச்சாரம் செய்ய தகுதியானவரா....

இன்று..இல்லை..இல்லை..
திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு..கலைஞர்களின் கட்சி பங்கு அதிகரித்துள்ளது குறித்து மகிழ்ச்சியே..
இவர்கள் கட்சியில் ஈடுபடலாமா? என்ற வினாவிற்கு..இவர்களும் இந்திய குடிமகன்களே..ஆகவே..அதற்கான தகுதி கண்டிப்பாக இவர்களுக்கு உண்டு என்பதே பதில்..
அந்த நாளில்..தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்...கே.ஆர்.ராமசாமி.எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., போன்றோர் கட்சி வளர்ச்சியில் ஆர்வம் காட்டி உழைத்தனர்.எம்.ஆர்.ராதா..கடைசிவரை பெரியார் கொள்கைகளை பின்பற்றியதுடன்..தி.மு.க., விற்கும் ஆதரவாய் இருந்தார்.என்.எஸ்.கிருஷ்ணனும்..படங்களிலும்..மேடைகளிலும் தி.மு.க., வை ஆதரிப்பது போல பேச்சுகளை வைத்தார்.
இவ்வளவு கலைஞர்கள் இருந்தாலும்..அவர்கள் பேச்சில்..கண்ணியம் இருந்தது..தனி நபர் தாக்குதல் இல்லை..ஆபாசம் இல்லை..
ஆனால் இன்று...
சிரிப்பு நடிகர்கள் கட்சிக்கு ஆதரவு கூட்டத்தில் பேசினால்..கண்ணியத்தைக் காணமுடியவில்லை..ஆபாசத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.தனிநபர் தாக்குதல்..தனி நபர் விரோதம் என கட்சியை தன் தனி நபர் விரோத போக்கிற்கு பயன் படுத்திக் கொள்கின்றனர்.
இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்..இவர் பேசுகையில் கலைஞரை தனிப்பட்டமுறையில் கேவலமாக பேசியுள்ளார்.
இன்றைய நிலையில்...
வடிவேலு பேசுகையில்...விஜய்காந்தை தனிப்பட்ட விரோதம் காரணமாக மனம் போன போக்கில் பேசி வருகிறார்.எல்லோரும் சேர்ந்து விஜய்காந்தை ஒரு குடிகாரன் என்ற அளவிற்கு முத்திரை குத்தி விட்டார்கள்.
வடிவேலுவிற்கு எதிராக அ.தி.மு.க., அணியில் சிங்கமுத்து என்ற நடிகரை களம் இறக்கியிருக்கிறார்கள்.இவர் நகைச்சுவை நடிகர் எனத் தெரியும்..ஆனால் வடிவேலுவிடம் பகை ஏற்பட்ட பின்னரே இவர் பெயர் சிங்கமுத்து என மக்களுக்குத் தெரியும். வடிவேலு சொல்வதற்கு பதில் சொல்லவே இவரை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.இவரும் மற்ற எதையும் பேசாது..வடிவேலு படத்தில் விஜய்காந்த் காலை அமுக்கினார்...இவர் மாலை 6 மணிக்கு என்ன செய்வார் எனத் தெரியும்..11 மணிக்கு என்ன செய்வார் தெரியும்..அதை அம்பலப்படுத்துவேன் என்ற ரேஞ்சில் பேசி வருகிறார்.
சமீபத்தில் கட்சியுல் இணைந்த பூ நடிகை..முன்னாள் முதல்வராய் இருந்த ஜெ வை ப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்ற அளவில் பேசி வருகிறார்.
தமிழ் பேசக்கூடத் தெரியாத இவர் இன்று நான் ஒரு தமிழச்சி என்கிறார்.
மொத்தத்தில் இன்று தேர்தல் கூட்டம் எல்லாவற்றிலும்..சாதனைகளைப் பற்றியும்..சாதிக்கப் போவதைப் பற்றியும் மட்டுமே பேசி வந்த நிலைப் போய் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையை கேவலமாக பேசும் நிலை ஏற்பட்டதை எண்ணினால் ..
இன்றைய பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்ய தகுதியானவர்களா? என்ற ஐயம் அதிகரிக்கிறது.

Sunday, April 3, 2011

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)





1) தலைவா..நம்ம ஆட்சியிலே தான் இந்தியா உலகக் கோப்பை ஜெயிச்சுதுன்னு அறிக்கை விடலாமா?



2) ஆஃப் அடிச்சா ஆப்பு வைக்கலாம்னு சொல்றாரே..

அப்போ..கட்டிங்க் அடிச்சா..கூட்டணியிலே கட் பண்ணிடுவாங்களா



3)தலைவர் இரவு 11 மணிக்குப் பிறகு என்ன செய்வார்னு அம்பலப்படுத்துவேன்னு பேசினீங்களே..அவர் அப்படி என்னதான் செய்வார்

ம்...தூங்குவார் ..அதைத்தான் சொன்னேன்



4) சிரிப்பு நடிகர் ஓவரா பேசறாரே

நான்தான் அப்பவே சொன்னேனே அவருக்கு ஓவர் ஆக்டிங் தான் தெரியும்னு




5)தலைவா..உங்களை ஒரு குடிகாரன்னே எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்களே..

சொழ்ழரது பொய்னு ஃபுல் அடிச்சாலும் செடியா பேசுவேன்..ம்..ம்.



6)போற இடமெல்லாம் அங்க நம்ம தலைவரோட குடும்பத்தைப் பத்தியே பேசறாங்களே..

அதுக்கு என்ன செய்யறது..எதைப் பேசினாலும் அதில தலைவரோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க யாராவது இருக்காங்களே!



7)தலைவா..இப்படி இலவசம்..இலவசம்னு கொடுத்தா..அதைக் காரணம் காட்டி நம்ம முக்கியமான திட்டங்களுக்குக் கூட வேர்ல்ட் பேங்க் கடன் கொடுக்கமாட்டாங்க

அதனாலென்ன..நம்ம சாமான்யன்..ங்கறதால வேர்ல்ட் பேங்க் கடன் கொடுக்காம சதி செய்யறாங்கன்னு சொல்லிடலாம்.



8) தலைவா..49ஓ ங்கறது..என்ன செக்க்ஷன் தலைவா..சிவிலா..கிரிமினலா...

Saturday, April 2, 2011

ராஜபக்க்ஷேவை கைவிட்ட இறைவன்







வென்று..கோப்பையை இலங்கையில் போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்போம்..என ...இலங்கை தமிழர்களை சகட்டு மேனிக்குக் கொன்ற..பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முடமாக்கிய..பெண்களை காமவெறி கோண்டு சீரழித்த ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்தார் சங்ககாரா போட்டிக்கு முன்.இந்திய மண்ணில் இதைத் தைரியமாகச் சொன்னார்.

ஆனால் எந்த ஒரு இந்திய வீரனும்..போரில் கொல்லப்பட்ட அப்பாவி இந்தியனுக்கு/தமிழனுக்கு கோப்பையை சமர்பிப்போம் என சொல்லத் தெரியவில்லை.அப்படியே சொல்லியிருந்தால்..அப்படி சொன்ன வீரனுக்கு இந்தியன் டீமில் இடமிருந்திருக்காது .

ராஜபக்க்ஷேவோ..வந்ததும் திருப்பதி கோயிலுக்குப் போனார்.எடைக்கு எடை நாணயம் கொடுத்தார்..நாணயம் இல்லாதவர்.

தவிர்த்து..உலகக் கோப்பையில் இலங்கை வெல்ல வேண்டும் என இறைவனை வேண்டினேன் என்றார்.

அந்தோ..பரிதாபம்..இறைவன் கொடூரர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பதில்லை என ஆத்திகர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

ஸ்ரீலங்கா..திறமையான குழுதான்..ஆனால் இவர்களின் இறுமாப்புக்கு கிடைத்த அடிதான் தோல்வி..

இப்படி ஒரு வெற்றியைத் தேடித்தந்த தோனி குழுவினருக்கு வாழ்த்துகள்

Friday, April 1, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(1-4-11)


நமது தேசியச் சின்னமான அசோகச் சக்கரம் கொண்ட உருவம் நாம் அறிவோம்.இச் சின்னத்தில் மூன்று சிங்கங்களின் தலையைத் தவிர்த்து ஒரு குதிரையும், ஒரு மாடும் உள்ளன.



2)மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூன்று கோடி சிற்பங்கள் உள்ளனவாம்



3)சிரியுங்கள்..நகைச்சுவை உணர்வு மன இறுக்கத்தைப் போக்கி உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.நல்ல சிரிப்பு மூளையின் தேக்கத்தை அகற்றும்.உடம்பின் ரத்த ஓட்டம் குறைவான பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.


4)பொதுவாக மனிதக் கண்களுக்கு புலப்படும் எந்த ஒரு பொருளும் நிறமுள்ளதாகவோ அல்லது ஒளியையாவதோ பிரதிபலிக்கின்றன.இரண்டும் இல்லாதது நம் கண்களுக்குத் தெரியாது.இதற்கு உதாரணம் காற்று


5)வெயில் காலம்..வெளியில் அலைந்தால்..கண்ட தண்ணீர், ஜூஸ் அருந்தினால் 'கப்' பென பிடித்துக் கொள்ளும் ஜலதோஷம்.இன்று ஜலதோஷம்..ஆகவே குளிக்கவில்லை என பலர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.ஆனால்..எப்படிப்பட்ட ஜலதோஷம் ஆனாலும் தினமும் குளிப்பதே சிறந்தது.ஏனெனில்..தொற்று நோய்க் கிருமிகளால் தான் ஜலதோஷம் வருகிறது.குளிப்பதால் ஜலதோஷம் அதிகரிக்காது.

6)நடிகர் வடிவேலுவை மிகப் பெரிய ஐந்து கொடுத்து அழகிரி குரூப் வளைத்துவிட்டதாக ஜூனியர் விகடன் கூறுகிறது..ஆனால் தான் பிரசாரத்திற்கு பணம் ஏதும் வாங்கவில்லை என்கிறார் வடிவேலு.



7)கவிதை..



கறை நல்லது

ஆட்காட்டி விரலில்

வைக்கப்படும்

கறை நல்லது

கறை வைக்கச் சொல்லுங்கள்

குடிமகனின்

கடமையை ஆற்றுங்கள்