Monday, April 27, 2020

வாழு வாழவிடு

ஊரினிலே ஒரு ஆலமரம்
வெயில்,மழைக்கு
அடைக்கலம் தரும் மரம்
பல பறவைகள் கூடு கட்டி
வாழும் மரம்
பஞ்சாயத்து பல
இதன் பீடத்தில்
தீர்த்துள்ள மரம்..
ஆயினும்
சிறு செடியினையும் தன் நிழலில்
வாழவிடாத மரம்

Saturday, April 25, 2020

நாடகப்பணியில் நான் - 1

நாடகப்பணியில் நான் -1
---------------------------------------------
என் நாடக அனுபவங்களை எழுத வேண்டிய அளவிற்கு, தமிழ் நாடக உலகில் என்ன சாதித்துவிட்டேன் என்ற கேள்வி, இத் தொடரை ஆரம்பிக்கும் முன் எனக்குத் தோன்றியது.
அதே நேரம், ஆயிரக்கணக்கான வானரங்களுடன், ஸ்ரீராமன் சேது பாலம் அமைத்த போது, தான் மண்ணில் உருண்டு, அதனால் ஒட்டிய மணலை பாலம் கட்டும் மணலுடன் சேர்த்ததால், தன் முதுகில் ஸ்ரீராமனால் தடவிக் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே அணிகளின் மேல் இன்றும் காணப்படும் கோடுகள் என்று கதை உண்டு.தவிர்த்து,அதுவே, பெரும் காரியங்களில், ஒரு சிறு உதவியினை நாம் செய்தாலும், அணில் பங்கு என போற்றப்பட்டது
தமிழ் நாடகக் கடலில் ஒரு துளியான நான் என் அணில் பங்கு அனுபவங்களைக் கூறுவதில் தவறில்லை என எனக்கு உணர்த்தியது..
இனி என் அனுபவங்கள்
நாடகம் எனும் போதைக்கு நான் எப்போது அடிமை ஆனேன்.என் எண்ணச் சிறகை நாடக வானில் பறக்க விட்டேன்.
அப்போது என் வயது 11..அம்பத்தூர் சர் இராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.எங்களது பக்கத்து வீட்டில் ராகவேந்திரன் என்னும் இளைஞர் ஒருவர் இருந்தார்.
அவரை நாங்கள் எல்லாம் "ராகவேந்திர அண்ணா" என்றே அழைப்போம்.அவர் அவ்வப்போது அம்பத்தூர் குப்தா பள்ளியில் நாடகம் போட்டு வந்தார்.அவரது நாடகங்களுக்கு எங்கள் குடும்பம் முழுவதற்கும் இலவச பாஸ்.(அன்றே ஓசியில் நாடகம் பார்க்கத் தொடங்கியது, இன்று வரை தொடர்கிறது)
அவர் ஒருநாள் என்னிடம்,"தம்பி, உனக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறதா?" என வினவினார்.
அதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை எனக்கு.உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், படிப்பைத் தவிர வேறு எது செய்தாலும் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் தலையைவலம் இடமாகவும் மேலும் கீழுமாக ஆட்டினேன்.அந்த அண்ணன் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும் என.
அந்த அண்ணனுக்கு என்ன புரிந்ததோ, ஆனால் என்னிடம், "உங்க அப்பா கிட்ட நானே கேட்கிறேன்" என்றார்.அத்துடன் நில்லாது, எனது தந்தை அன்று அலுவலகத்திலிருந்து திரும்பியதுமே"சார், உங்க பையனை நான் அடுத்ததாகப் போடப்போகும் நாடகத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாமா?" என்று கேட்டார்
கோபத்துடன் என்னைப் பார்த்த அப்பா, சாந்தத்துடன் அவரிடம், "படிக்கிற வயசுலே அவனுக்கு இதெல்லாம் வேண்டாம் " என்று சொல்லிவிட்டார்.
அந்த அண்ணனுக்கு ஏமாற்றம்.எனக்கும் ஏமாற்றம்.கூடவே அம்மாவைப் பார்த்தேன்.அம்மாவிற்கும் ஏமாற்றம் என முகம் சொல்லியது.
தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஆவலை ஏற்படுத்தியதே என் அப்பா, அம்மாவின் ஆதரவு தான்.குடும்பப் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லையாயினும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கண்ணன், கல்கண்டு என பத்திரிகைகளை வாங்கிக் குவித்தவர்கள் அவர்கள்.அந்த வயதிலேயே, அமரதாராவையும், மலைச்சாரல் மாதவியையும், தில்லானா மோகனாம்பாளையும், உன் கண்ணில் நீர் வழிந்தாலையும் படித்து தேர்ந்தவன் நான் .
இரு நாட்களாக நான் சோகமாக இருப்பதைப் பார்த்த அப்பாவிற்கு என்ன தோன்றியதோ.'உனக்கு நடிக்க ஆசை இருந்தால் , இந்த ஒரு நாடகத்தில் நடி பரவாயில்லை.ஆனால் படிப்பு கெடக்கூடாது" என அனுமதி அளித்தார்
நான் உடனே ஓடிப் போய் , ராகவேந்திர அண்ணனிடம் சொல்ல, அவரின் "பிரேமாவின் சபதம்" என்ற நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார்.
என்ன பாத்திரம் என் கிறீர்களா. கதாநாயகி பிரேமாவின்..பதின்ம பருவப் பாத்திரம் .
ஆம்..எனது முதல் நாடகத்தில், பெண் வேடம் பூண்டு நடித்தேன்
(தொடரும்)

Thursday, April 9, 2020

விபரீத ஆசை (ஓரு பக்கக் கதை)

ஒவ்வொருவருக்கு..ஒவ்வொரு விபரீத ஆசை இருக்கும்.

அதுபோல சங்கருக்கு ஒரு ஆசை உண்டு..தான் இறந்தால் அது செய்தியாக ஊடகங்களில் வரவேண்டும் என்று.

அவனுக்கு நிரந்தரமாக எந்த வேலையும் இல்லை.திரைப்படங்களில் நடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் ஒருநாள் அவன் என்னிடம் வந்து, "கணேசா...எனக்கு ஒரு படத்துல நடிக்கற சான்ஸ் கிடைச்சு இருக்கு" என்றான்.

நான் உண்மையிலே மகிழ்ந்து ,"யார் படம்?" என்றேன்.

பிரபல கதாநாயகன் ஒருவரின் பெயரைச் சொன்னான்.

நாட்கள் கழிந்தன.

அவன் சொன்ன திரைப்படம் வந்தது.அவனுடன் போய்ப் பார்த்தேன்.அதில் ஒரு காட்சியில், கதாநாயகனுக்குத் திருமணவிழா காட்சி.."பார்..பார்.நான் வருவேன்" என்றான்.

அக்கட்சியும் வந்த்து.நான் பார்த்தேன்..திருமணத்திற்கு வந்தவர்களிடையே இவனும் அமர்ந்திருப்பது போல இருந்தது.

உடன் காமெரா கோணம் மாற, "என்னைப் பார்த்தியா?" என்றான்.

அவன் மனம் நோகக்கூடாது என்பதற்காக "பார்த்தேன்" என்றேன்.

பின் சில மாதங்கள் அவனை நான் பார்க்கவில்லை.

ஒருந்தாள்...தினசரி ஒன்றில் "பிரபல தமிழ் நடிகர் மரணம்" என்ற தலைப்புச் செய்தியைப் பார்த்து பத்திரிகை வாங்கினேன்..

அதில்...

"பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கர் மரணம் என்றும்.அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தி போட்டுவிட்டு...இவர் (அந்த பிரபல நடிகர் நடித்த திரைப்படப் பெயரைப் போட்டுவிட்டு) இந்த படத்தில் பிரகாசுடன்  நடித்துள்ளார்" என்று போட்டிருந்தது.

எது எப்படியோ.."நான் இறந்தால் ஊடகங்களில் செய்தியாக வரவேண்டும்" என்ற அவன் ஆசை நிறைவேறியது ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தது. 

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 100

நம்மில் பலருக்கு இந்து குணம் உண்டு.

நம் நண்பர்களைப் பற்றியோ அல்லது உறவினர்களைப் பற்றியோ அவர்கள் இல்லாதபோது குறை சொல்வது அல்லது புகார் சொல்வது.

இது புறங்கூறுதல் எனப்படும்.ஆனால் இது போல செய்வது மிகவும் தவறு.ஆகவேதான் வள்ளுவரும் இதற்கென புறங்கூறாமை எனும் ஒரு அதிகாரத்தை வைத்துள்ளார்.
 
இந்த குறளினைப் பாருங்கள்


கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க

முன்னின்று பின்னோக்காச் சொல் (184)புறங்கூறாமையில் நான்காவது குறள்.கண்,கண்,சொல்,சொல் என்னும் சொற்களை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளர்.

நேருக்கு நேர் ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாமாம்..ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றி குறை கூறுவது தவறு...என்கிறார்.

வேறு சிலர் இருக்கிறார்கள்..

அவர்கள், நம்மைப் பார்க்கையில் நம்மை மிகவும் உயர்வாகப் பேசுவார்கல் ஆனால் நாம் இல்லாதபோது நம்மைப் பற்றி வேறுவிதமாகச் சொல்வார்கள்.
இப்படி அவர்கள் உயிர் வாழ்வதை விட செத்து மடியலாம் என்கிறார்..

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும் (183)

கண்ட இடத்தில் ஒன்றும் காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று..

நம்மிடம் புறங்கூறும் தவறு இருந்தால் அதனை விட்டொழிப்போமாக 

(இத்துடன் தினம் ஒரு தகவல் 100 முடிகிறது.சில நன்பர்கள் கேட்பதுண்டு.நீ இவ்வளவு சிரமப்பட்டு எழுதுகிறாயே! அது எந்த அளவிற்கு மற்றவர்களுக்கு போய்ச் சேகிறது என? அவர்களுக்கு நான் சொல்லும் பதில்..ஒருவருக்கு போய்ச் சேர்ந்தாலும் போதும் என்பதே!)

Wednesday, April 8, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 99


ஒரு முட்டாள் இருக்கிறான்.அவனுக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்துக் கொண்டு அறிந்தோரிடம், தனக்கும் எல்லாம் தெரியும் போல நடந்துக் கொள்கிறான்.அவனை அறிவுடையோன் ஒருவன் அறிவுடையவனாக்க முயற்சிக்கிறான்..அந்த சமயத்தில் அறிவுடையோனும், அறிவற்றவனாகவே தன்னை ஆளாக்கிக் கொள்ள நேரிடும்..

உதாரணத்திற்கு..சேறும் சகதியுமான இடத்தில்..தண்ணீர் தேங்குமாயின் அதுவும் சேற்றின் நிறம் அடையும்..(செம்புலப்பெயல் நீர்),இதில் சேறு அறிவற்றவன்..தண்ணீர்.. அறிவுடையவன்.இப்போது இந்த குறளைப் படியுங்கள
..
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு (849)

காணாதான்,காணான்,காணாதான்,கண்டானாம்,கண்டவாறு..அடடா..சொல்லழகும்,சொல் விளையாட்டும் ..இந்த ஒன்றே முக்கால் அடியில்..இது வள்ளுவனன்றி வேறு யாரால் முடியும்!!!!

இதன் பொருள்-

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு த ன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான்.அவனை உண்மையிலேயே அறிவுடையனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்

சேரும் இடம் பார்த்து சேர வேண்டும்.

Tuesday, April 7, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 98

நீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கு ஒன்று வருகிறது.அதற்கான தீர்ப்பு சொல்ல வேண்டிய நாள்.

இரு பக்கத் தரப்பும் செல்வம் மிக்கவர்கள்..அவரவர்க்கென அவர்களுடன் ஒரு கூட்டத்தையே தங்களுக்கு ஆதரவாக வைத்துக்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என ஒவ்வொரு தரப்பும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில்..தீர்ப்பு வழங்கப்போகும் நீதிபதி என்ன செய்ய வேண்டும்..

வள்ளுவர் சொல்வதைப் பார்ப்போம்..

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி (118)

என்கிறார்.

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள்போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

அந்த நீதிபதி நியாயம் யார்பக்கம் உள்ளட்ஹோ அவருக்கு ஆதரவாக நீதி வழங்க வேண்டும்.

 அதுதான்  நடுவுநிலையாளருக்கான தகுதியாகும்.

பகைவர்,அயலோர்,நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

தகுதி எனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின் (111) 

Monday, April 6, 2020

வள்ளுவத்திருந்து தினம் ஒரு தகவல் - 97

நாம்  ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறோம். அதிலிருந்து வெளிவர இயலாது தவிக்கின்றோம்.

இந்நிலையில், நம் உறவினர் ஒருவரோ..அல்லது நண்பரோ உடனடியாக உதவிக்கு வந்து நம்மைக் காக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.

சரியான நேரத்தில் அவர்கள் செய்த உதவி இந்த உலகினைவிட பெரியதாக மதிக்கப்பட வேண்டுமாம்..வள்ளுவர் சொல்கிறார்..

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (102)

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும் அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

, அதுமட்டுமல்ல்..அந்த..நண்பரோ...உறவோ நமக்கு செய்த உதவி மிகச் சிறியதாக இருந்தாலும்..அது செய்யப்பட்ட காலத்தை நினைப்போமானால் அச்சிறு உதவியும்..பெரிய உதவி போலவாம்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயந்தெரி வார் (104)

ஓருவர் செய்யும் திணையளவு சிறிய நன்மையைக் கூட, அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவர்.

அதேசமயம் அந்த உதவியைப் பெறும் நாம், இறுதிவரை அந்நண்பரை..உறவை மறக்கக் கூடாதாம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110)

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு.ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.. விடுவது நல்லது.

சரி..ஒருவர் நமக்குட் தீங்கு செய்துவிட்டார்..என வைத்துக் கொள்வோம்..அப்போது என்ன செய்வது..

அப்படிப்பட்டவருக்கும் வள்ளுவர் சொல்கிறார்..

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)

ஓருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல.அவர் தீமைசெய்திருந்தால் அதை அக்கணமே மறந்து விடுவது நல்லது.

Friday, April 3, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 96

கூடாநட்பு

----------------------

உலகிலேயே சிறந்த உறவு நட்புதான்.

அது எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு ஆபாத்தானதும் கூட.

சரியான நண்பர்கள் நமது வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல உதவுவார்கள்.

நண்பர்களை தவறாக தேர்ந்தெடுத்து விட்டால், அது போன்ற ஆபத்தும் இல்லை.

அதை வள்ளுவர் கூடா நட்பு என்கிறார். அதற்கு 10 பாடல் எழுதி இருக்கிறார் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள  முடியும்.

தவறான நண்பர்கள், நம்மை தீய வழியில் கொண்டு சென்று தாங்க முடியாத துன்பத்தில் அழுத்தி விடுவார்கள்.

"நீங்க பணத்தை மட்டும் போடுங்கள், உழைப்பு என்னது. உங்களுக்கு இலாபத்தில் பங்கு " என்று ஆசை காட்டி நம் பணத்தை கவர்ந்து கொள்வார்கள்.

"இதுல போடுங்க, உங்க பணம் ஒண்ணுக்கு இரண்டாகும் " என்று தேவையில்லாத இடங்களில் நமது பணத்தை முதலீடு செய்ய வைத்து நம்மை நட்டத்தில் கொண்டு செலுத்தி விடுவார்கள்.

இவர்கள் எல்லாம் பார்க்க நல்லவர்கள் போலவும், நண்பர்கள் போலவும்  இருப்பார்கள்.

நம்ம நல்லதுக்குத்தானே சொல்கிறார்கள் என்று நாம் நினைப்போம்.

அந்த மாதிரி ஆள்களை "பட்டடை" போன்றவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பட்டடை என்றால் என்ன தெரியுமா ?

இரும்பை சூடாக்கி அடிக்க அந்த சூடான இரும்பின் கீழ் ஒரு இரும்பு பலகையை வைத்து இருப்பார்கள். அதன் மேல் வைத்துதான் இரும்பை அடிப்பார்கள். அந்த அடிப் பலகைக்கு பெயர் பட்டடை.அது போல சில பேர் நம் வாழ்வில் நமக்கு நல்லது செய்பவர்கள் போல இருப்பார்கள். ஆனால், அவர்களால்தான் நமக்கு அனைத்து துன்பங்களும்  வரும்.

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு (821)

மனதார இல்லாமல்  வெளியுலகிற்கு நண்பரைப்போல நடிப்பவரின் நட்பானது ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்புத் துண்டாக்கத் தாங்கு பலகை போல இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.அந்த மாதிரி ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதவி செய்கிறேன் பேர்வழி  இல்லாத துன்பத்தில் எல்லாம் நம்மை ஆழ்த்தி விடுவார்கள். 


Thursday, April 2, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 95

இனிமை..பேசவும்..கேட்கவும் இனிமை
-----------------------------------------------------
அது ஒரு அழகான பசுஞ்சோலை.

கனி கொடுக்கும் மரங்கள்.ஒவ்வொரு மரத்திலும் பூவும், காயும், கனியுமாய் ..பிறவி எடுத்த பயன் பூர்த்தியானதில் மகிழ்ந்து குலுங்கும்சோலை.

அங்கு ஒருவன் வருகிறான்..அவனுக்கோ அகோரப் பசி.அந்த மரங்களோ..என்னிடம் இருக்கும் கனியைப் புசி உன் பசிக்கு என்று சொல்வதுபோல காற்ரில் அசைகிறது.

அவன்..ஒரு மரத்திலிருந்து ஒரு காயைப் பறித்து உண்ணுகின்றான்.

அந்த மரம், பக்கத்து மரத்திடம் சொன்னது..'எவ்வளவு ருசியான கனிகளை நான் இவனுக்கு கொடுக்க எண்ணுகின்றேன்..ஆனால்..மூடன் இவனோ காயினைப் பறித்து உண்ணுகின்றானே" என அவனைக் கேலி செய்தது.

நம்மில் பலரும் அவனைப் போலத்தான் இருக்கிறோம்.

நம்மிடம் பேச இனிமையான இன்சொல் இருக்கையில் அதை மறந்து, பிறரை நமது கொடுமையான சொற்களால் ஏசுகிறோம்.

அப்படிப்பட்ட நமக்கும்..உண்ண சுவையான கனி இருக்கையில்..அதை விடுத்து  காயினைப் பறித்து உண்பவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.இதைத்தான் வள்ளுவர் இக்குறளில் சொல்லிட்யுள்ளார்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று (100)
என...

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கிவிட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்..

இனிய சொற்கள் இனபத்தை அளிக்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன் படுத்த வேண்டும்??  எனக் கேட்கிறார்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது (99)
Wednesday, April 1, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 94


வீட்டில் செல்வம் தங்க..!
-----------------------------------
உங்கள் வீட்டில் செல்வம் என நாம் போற்றும் திருமகள் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டுமா?

அதற்கும் வள்ளுவர் ஒரு வழியினை சொல்கிறார்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல (84)

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்

ஒரு விவசாயி இருக்கின்றான்.வறுமையில் வாடுகின்றான்.மழை பொய்த்துவிட்டது.அந்த ஆண்டு விளைச்சல் ஏதுமில்லை.அடுத்து விதைக்கும் பருவத்திற்காக விதைநெல்லை மட்டும் வைத்திருக்கின்றான்.

அச்சமயம் அவன் வீட்டிற்கு விருந்தினர் வந்து விடுகின்றனர்.அப்போது அவன் என்ன செய்வான்? பண்பாளன் அவன்.விருந்தினரை உபசரிப்பவன்.அவன் .வரும் விருந்தை வரவேற்று,தன் நிலத்தில் விதைக்க வைத்திருந்த விதைநெல்லை எடுத்து சமைத்து அளிப்பானாம்.இதைத்தான் கீழே சொல்லியுள்ள குறள் சொல்கிறது.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிகியவான் புலம் (85)

விருந்தினருக்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக் கூட விருந்தோம்பலுக்கு பயன்படுத்தாமல் இருப்பானா?

சாகாத மருந்து நமக்குக் கிடைக்கிறது.அதேநேரம் விருந்தினர் வருகின்றனர்.
அந்த நேரம் அவர்களை வெளியே விட்டுவிட்டு அந்த சாகா மருந்தினை தான் மட்டும் உண்ண மாட்டானாம் பண்பாளன்.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (82)

விருந்தினர் வந்தால் முகம் கோணாமல் வரவேற்போக!