Friday, November 27, 2020

யார் நல்லவர்..யார் கெட்டவர்

" டோக்கன் நம்பர் 24"


வெளியே பெஞ்சில் காத்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தின் காதுகளில் இது விழுந்தது.


தன் கைகளில் வைத்திருந்த அட்டை டோக்கனைப் பார்த்தார்.அவருடையது தான்..


எழுந்து டாக்டரைப் பார்க்க உள்ளே நுழைய இருந்த அவருக்கு உதவியாளர் கதவைத் திறந்து விட்டார்.


அவரைப் பார்த்ததும் சாம்பசிவம்.."உன்னைப் பார்த்தால் நல்லவனாகத் தெரியவில்லையே! வந்து உன்னை பேசிக் கொள்கிறேன்" என உள்ளே நுழைந்தார்.


அவரை டாக்டர் ரவீந்திரன் "வாங்க" என வரவேற்றார்.


"ஆமாம்..ஆமாம்..எங்களை வாங்க..வாங்கன்னு நீங்க கூப்பிடறதே எங்கக் கிட்ட இருந்து அநியாயத்துக்கு வாங்க..வாங்கதானே!" என்றார்.


இது போன்று பேசும் நோயாளிகள் பலரைப் பார்த்திருந்ததால், அவர் சொல்வதை சட்டை செய்யாமல் புன்முறுவலுடன் "உங்களுக்கு என்ன உடம்புக்கு?" என்றார்.


சிறிது நேரம் யோசித்தவர்"டாக்டர்..எனக்கு..இப்ப எல்லாம் யாரைப் பார்த்தாலும் நல்லவங்களாத் தெரியறதில்லை" என்றார்.


"எவ்வளவு நாளாக இப்படி இருக்கு?"



"யாரைப் பார்த்து என்ன கேட்கற.நான் உன்னை நல்லவன்னு நினைச்சேன்.இப்படி கேடு கெட்டவனா இருக்கியே.நீ ஒரு ஃபிராடு.உங்கிட்ட வந்தேன் பாரு..என் புத்தியை செருப்பால அடிக்கணும்"      என்று சொல்லிய படியே வெளியேறினார்.

Wednesday, November 25, 2020

"காலத்தினால் செய்யா உதவி"

"கணேஷ்..ஒரு ஆயிரம் ரூபாய் கடனாகக் கொடேன்.கண்டிப்பாக அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் கொடுத்துடறேன்.குழந்தைக்கு ஜுரம்.டாக்டர் கிட்ட உடனே எடுத்துட்டுப் போகணும்" என்றான் பாஸ்கரன்.


பர்ஸில் பணமிருந்தும்..பணத்தைக் கொடுக்க மனது இல்லாததால்.."சாரி பாஸ்கர்..எனக்கே கஷ்டம்."என்று சொல்லி விட்டேன்.பலமுறை இப்படி அவன் கேட்டு நான் கொடுத்திருக்கின்றேன்.ஆனால் கொடுத்த பணம் திரும்பி வராது அவனிடமிருந்து.


பாஸ்கர், "குழந்தைக்கு உடம்பு சரியில்லை" என பலரைக் கேட்டான்..யாரும் கொடுக்கவில்லை.அவனுக்கு கொடுக்கும் பணம் ஒரு வழிப் பாதை என்பதை அனைவரும் அறிந்திருந்ததால்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி "இல்லை" என்று சொல்லி விட்டனர்.


வெறும் கையுடன், அலுவலகத்தில் லீவு சொல்லி விட்டுச் சென்று விட்டான் அவன்.


இரண்டு மணி நேரம் சென்றிருக்கும்.அவன் மனைவியிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது.."கணேஷ் சாரா..பாஸ்கர் உங்களுக்கு ஃபோன் பண்ணச் சொன்னார்.குழந்தை.....டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போக பணம் இல்லாததால்..ஜுரம் அதிகமாகி.....இறந்து போச்சு.ஆஃபீஸ்ல எல்லார் கிட்டேயும் சொல்லச் சொன்னார்.."என்று அழுதபடியே சொல்லி முடித்தாள்.


பகீரென்றது எனக்கு.எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டேன்.


உடனே..ஆஃபீஸில் ஒவ்வொருவரும் பணம் போட்டு..ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் போனோம்


"என் குழந்தையைக்  காப்பாற்ற பணம் கேட்டேன்..ஆனா..ஆனா..அடக்கத்துக்கு கொண்டு வந்து கொடுத்து இருக்கீங்களே!"என்று அழும் அவனை எங்களால் தேற்ற முடியவில்லை     

Monday, November 2, 2020

அம்மா என்றால் அம்மாதான்

 


தனக்கு முன்னால் தட்டில் கொண்டுவந்து வைக்கப்பட்ட அந்த ஸ்வீட்டைப் பார்த்தான் பிரபு.அவன் அம்மாவின் முகம் அதில் தெரிந்தது.


அவனுக்கு இந்த ஸ்வீட் பிடிக்கும் என எவ்வளவு நாட்கள் அம்மா அதை செய்து கொடுத்திருக்கிறாள்.அம்மாவுக்கு மட்டுமே செய்ய தெரிந்த இனிப்பு அது.

அதெல்லாம் பழைய கதை.

அவனுக்கு திருமணம் ஆனவுடன் அம்மா அவனுடைய மனைவி மைதிலியிடம் " இதோ பாரும்மா: இனிமேல் அவனை கவனிக்கவேண்டியது உன் பொறுப்பு.ஆனா இந்த ஸ்வீட் சமாசாரத்தை மட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன்.இதை நான் செய்தால் தான் அவனுக்கு பிடிக்கும்." என்று கூறிவிட்டாள்.


ஆனால்...மைதிலிக்கும்..அம்மாவிற்கும் ஒத்து வராததால் தனிக்குடுத்தனம் வந்து விட்டான் அவன்.

அப்போது கூட..'அம்மா..அந்த ஸ்வீட் பண்றதை மைதிலிக்கு சொல்லிக்கொடு' என்று அவன் கூற..அம்மா செய்முறையை எழுதி அவளிடம் கொடுத்தாள்.

அதற்குப் பிறகு மைதிலி எவ்வளவோமுறை அதை செய்துக் கொடுத்து விட்டாள்..ஆனாலும் அம்மா செய்வது போல இல்லை..அந்த கைப் பக்குவம் வரவில்லை.இதை மைதிலியிடம் அவனாக சொல்லாவிட்டாலும்,அவளுக்கும் தெரிந்தே இருந்தது.

அதனால் எவ்வப்போது அவனுக்கு அந்த ஸ்வீட் சாப்பிட ஆசையோ அப்பவெல்லாம் அம்மாவைப் பார்க்க கிளம்பி விடுவான்.

***** ***** ****** ***** *****

அன்று அவனது பிறந்த நாள்.அம்மா சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள்.கண்டிப்பாக அந்த ஸ்வீட் இருக்கும்.மைதிலியுடன் கிளம்பினான் பிரபு.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது..அம்மா குளியலறையில் இருந்தாள்.

அவனும்,மைதிலியும் அடுக்களையை நோட்டம்விட்டனர்.அம்மாவின் பழைய டயரி ஒன்று கிடைத்தது.அதை எடுத்து புரட்டுகையில்...பக்கத்தில் அந்த ஸ்வீட் செய்முறை இருந்தது.

அதை படித்த மைதிலி...ஆச்சரியத்துடன் "பார்த்தீங்களா:ஸ்வீட்டில் இந்த பொருட்களையெல்லாம் சேர்க்கணும்னு உங்க அம்மா சொல்லித்தரல்லை.அதனால்தான் உங்க அம்மா செய்வதுபோல வரல்லை'என்றவாறு தேவையான பொருட்கள் எழுதியிருந்த பகுதியை சுட்டிகாட்டி அம்மா மீது குற்றம் சாட்டினாள்.

அதை பார்த்த பிரபுவின் முகத்தில்...கோபம்...வருத்தம்...குழ்ப்பம்...

ஆம்...அம்மா முழுமையாக மைதிலிக்கு சொல்லித்தரவில்லை.ஒருவேளை மைதிலி தன்னிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடாது என்பதற்காகவா? ...ச்சே...அப்படிபட்டவளா அம்மா என்று எண்ணியவன் வாயிலிருந்து அவனை அறியாமலேயே வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

நடந்ததை எல்லாம் அடுக்களையின் வாயிலிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அம்மா...கண்களில் கண்ணீர் கொப்பளிக்க "பிரபு: என்னை மன்னிச்சுடுடா..நீ தனி குடித்தனம் போனதும் .இந்த ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே என்னை பார்க்க வர்றே..ஒரு வேளை மைதிலியும் என்னைப்போல செய்ய ஆரம்பித்துவிட்டால் ..நீ வர்றதையும் நிறுத்திவிடுவே...உன்னை பார்க்காமல் என்னால் இருக்கமுடியாதுடா... அதனால்தான் இப்படி கீழ்த்தரமாக நடந்துண்டுட்டேன்..தப்புன்னா மன்னிச்சுடுடா"கூப்பிய கைகளுடன் வார்த்தைகள்...துண்டு துண்டாக குமுறலுடன் வந்தன.

அம்மான்னா அம்மாதான் என்றவாறே நாத்தழுதழுக்க அம்மாவை அணைத்துக்கொண்டான் பிரபு.

Tuesday, October 27, 2020

என்னவென்று சொல்ல...

 "அம்மா..அம்மா..நேரமாயிடுச்சு..ஒர்க் ஃபிரம் ஹோம்னா வேலை குறைச்சல்னு நெனைக்காதே.வேலை அதிகமாயிடுச்சு.ஒன்பது மணிக்கே லேப்டாப் முன்னால உட்காரணும்..தெரிஞ்சுக்க.." என கத்திக் கொண்டிருந்தான் சுரேந்தர்.

'எனக்குத் தெரியும்.முதல்ல டிஃபனை சாப்பிடு" என்றார் அம்மா.



"இல்லைம்மா..அதுக்கெ எல்லாம் நேரமில்லை.என்னைப் போல சாஃப்ட் வேர் பீப்புள் எல்லாம் நேரம் காலம் பார்க்காம வேலை செய்யறதாலத்தான்..கம்பெனியால எங்கள் எல்லாருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பளம் கொடுக்க முடியுது.இதையெல்லாம் நீ எப்ப தெரிஞ்சுக்கப் போறியோ...அப்பா..அப்பா..கொஞ்சம் தள்ளி நில்லு..வீடியோ கான்ஃபெரென்ஸ்..நீ தெரியறபார்.."என பேசிக் கொண்டே இருந்தான் சுரேந்தர்.


"கம்பெனிக்கு ஏகப்பட்ட லாஸ்னு வேலையை விட்டு இவனை அனுப்பின அதிர்ச்சிலே இருந்து இவன் இன்னமும் மீளலையே! இன்னிக்கும் வேலைக்குப் போறாப் போல ஒர்க் ஃபிரம் ஹோம்னு சொல்லிட்டு பைத்தியம் போல பேசிக்கிட்டு இருக்கானே..எப்ப பழைய நிலைமைக்கு வருவானோ..?' என அம்மாவிடம் வருத்தப் பட்டுக் கிட்டு இருந்தார் அப்பா. 


Monday, October 26, 2020

எங்கே போச்சு..?

 "இங்க தானே வைச்சிருந்தேன்..எங்கே போச்சு?..வாணி..வாணி..நீ பார்த்தியா?"என்றான் ஹாலிலிருந்து சுரேஷ்.


"நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க..எங்கே வைச்சீங்கன்னு


"ஆமாம்.. இங்கதான் வைச்சேன்..நீதான் எதையும் இடம் மாறி..இடம் மாறி வைக்கறவளாச்சே"


"ஆமாம்.எது காணும்னாலும்..நான்தானா? உங்க பொருளை நான் ஏன் எடுக்கப் போறேன்?"


"அப்போ.கால் முளைச்சு அதுவே..ஓடிடுத்தா?"என்றான் கோபத்துடன்.


அதற்குள் சமையலறையில் இருந்து வெளியே வந்தவள்..டீபாயின் மீது வைத்திருந்த டிவி ரிமோட்,செய்தித் தாள்..என ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்துவிட்டு வைத்தாள்.


அதற்குள் வெளியே கிளம்பத் தயாரானவன்.."ஏன்..வேணும்னா என் பேன்ட் பாக்கெட்டிலும் தேடேன்" என பேன்ட் பாக்கெட்டினுள் கையை விட்டவன்"இதோ இருக்கு.."என அசடு வழிய எடுத்தான்.


போன தடவை வெளியே போயிட்டு வந்துட்டு ஃபேஸ் மாஸ்க்கை அப்படியே பேக்கட்ல போட்டுண்டு கத்தறதைப் பாரு"என தன் பங்குக்குக் கத்திவிட்டு சமையலறைக்குள் மீண்டும் நுழைந்தாள் வாணி.

Saturday, October 24, 2020

கடல்


தனியாக
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
இந்த
நதிகள்தான்
ஓடி வந்து
ஒருகை ஓசையாக
அதனுடன்
சங்கமிக்கின்றன

மழையில் நனையவே
ஆசைப்படுகின்றேன்
விண்ணின்
கொடைக்கு
குடை
எதற்கு..

காலம் ஓடுகிறது
மிகப் பெரியவன் சொல்ல
நடுவனோ
சற்றே விரைந்து
செயல்பட
சிறியனோ
நிதானமாய் கடக்கின்றான்
காலக் கடிகாரத்தை

உனக்கென்ன
மலர்ந்து
மணம் விசி விட்டாய்
மொக்காய் நிற்கும் என்னை
மலர விடுவார்களா
அழித்து விடுவார்களா
பாவிகள்

மழையும்..மனிதனும்..
------------------------------
மழை
பெய்து கொண்டிருக்கிறது
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
நொறுக்குத் தீனியுடன்..
பாழாய்ப்போன மழை
வெளியே செல்ல இயலவில்லை
என்கின்றேன்..
தொலைபேசியில் அழைப்பவனிடம்..
நல்லது செய்யும்
மனிதன் மட்டுமல்ல
மழையும்
சபிக்கப்படும் போல.

பெண்களை வர்ணித்தே
கவிதை எழுதப்படுகிறதாம்
கவிஞர்களால்....
வேறு என்ன செய்ய
மாற்றி எழுதினால்
அவனா நீ
என்கிறீர்களே

இதழ்கள்
முத்தத்திற்குக் காத்திருந்தாலும்
தேனை மட்டுமே உறிஞ்சி
பறக்கிறது
வண்டினம்

கலாமும், கனவும்
--------------------------------------
இத் தரணியில்
இளைஞர்களை
நல் கனவுக் காணச் சொன்னார்
நமது கலாம் எனும் மகான்...
கண்ட கனவை
நனவில் நிறைவேற்றிட
நாளும் உழைத்திடுவீர் என்றிட்டார்....
செய்யும் தொழிலில் நேர்மையாய் இருந்திட்டால்
செய்ய வேண்டாம்
கையூட்டு அதிகாரிகளுக்கு சல்யூட்டு
இலட்சிய நாயகன் சொன்னார்....
இனிய வார்த்தைகளில்
விதைத்துவிட்டு சென்றிட்டார் கனவுகளை
வளரும் இளைஞர் மனதில்...
நாளை அவை..
நாளும் வளர்ந்து
அறுவடைக்கு தயாராயிடும்
அன்னை நாடு சிறந்திட...
வாழ்க எம் கலாம் புகழ்
வையகம் இருந்திடும் வரை

கவிதைக்கான
கருவினைத் தேடி
கவிஞனே அலையாதே!
இயற்கை என்னிடம்
இல்லா
கவிதைக் கருவா
உனக்கு
வெளியே கிட்டிடும்


நாட்கள்
நகர்ந்து
கொண்டுதான் உள்ளன
சில
நட்புகளின்
இழப்புகளுடன்

அவர்
நாண
நன்னயஞ் செய்து விட்டாலும்
கண்ணாடியில் விழுந்த
விரிசலாகவே உள்ளது
நட்பு..


அழகிய கண்ணே..
----------------
இதயத்தின் வாசல் அது
இன்பமாய் வரவேற்றிடும்..
காந்தமாய்
கவர்ந்திழுக்கும்..
கவிஞனாய்
கவிதை பேசும்...
கதாசிரியனாய்
கதைபலக் கூறும்..
நடிகனாய்
நவரசமும்
நன்குக் காட்டிடும்...
தூண்டில் போட்டு
தூய மனதினையும்
தூண்டில் புழுவாக்கிடும்..
சாதித்திடும் அனைத்தையும்
தன் கண்ணீரினால்

சக பயணிகள் அவ்வப்போது
இறங்குகிறார்கள் - நானோ
இறங்க வேண்டிய இடம்
எப்போது வரும்
எனத் தெரியாமல்..
பயணித்துக் கொண்டிருக்கிறேன்...


மண்ணில் கிடந்தது நேற்றைய சருகு
மரத்தில் இன்று துளிர்த்த இலை
அதனைக் கண்டு கண்ணீர் விட்டது
தாயின் சோகத்திலும் சற்று மகிழ்ச்சி
தாண்டவமாடியது சற்று.
தாயின் ஆட்டத்தில்
சருகு மறைந்தது.

கூண்டுக்குள் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்
சிறிது சிறிதாக
சிறகுகள்
முளைத்துக் கொண்டிருக்கின்றன
கூண்டைவிட்டு
வெளியேறச் சொல்லி
படபடக்கின்றன

Friday, October 23, 2020

வேலை இல்லை

 முன்னர் இருந்தது போல இல்லாமல் அவனது வேலை வெகுவாகக் குறைந்திருந்தது.


இதேநிலை நீடிக்குமெயானால், ஒரு கட்டத்தில் வேலையை விட்டே அனுப்பிவிட்டாலும் அனுப்பி விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. தனக்கு மட்டுமின்றி, தன்னைச் சேர்ந்தவர்களும் இதனால் பாதிக்கப்படுவரே என வருந்தினான்.


ஒருவேளை..தனக்கேத் தெரியாமல் தன் வேலையை அவுட் சோர்சிங் முறையில் வெளியே கொடுத்து விடுகிறார்களோ என்ற சந்தேகமும் இருந்தது.


எப்படியாவது தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தவன், தனது மேலதிகாரியைக் காணச் சென்றான்.அவரைப் பார்த்து..


"பூவுலகில் கொரோனா  உயிரை எடுக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதால், தனக்கு வேலை பளு குறைந்துள்ளது.என்னை நம்பியுள்ள வர்களும்  தங்களுக்கு வேலை போய்விடுமோ எனக் கவலைப்படுகின்றனர்.நீங்கள்தான் தலையிட்டு கொரோனாவிடமிருந்து எங்களது வேலையை மீட்டுத் தர வேண்டும்" என கிங்கரர்களுடன் வந்திருந்த யமன் விஷ்ணுவிடம் வேண்டினான்.

Wednesday, October 21, 2020

பயம்

 புது மனைவி மாலதியை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தான் ரகு.அவனுக்குத் திருமணமாகி ஒரு வாரமே ஆகியிருந்தது.


அலை அலையாய் வந்திருந்த மக்கள்..தண்ணீரில் நின்றுக் கொண்டு அலைகள் வந்து தங்கள் கால்களை நனைத்து காலடி மண்ணை எடுதுதுக் கொண்டு மீண்டும் கடலுக்குள் செல்வதை ரசித்த படி இருந்தனர்.


அப்போதுதான் சற்று தள்ளி அவனுடன் வங்கியில் வேலை செய்யும் அவனது மேலதிகாரி வேதாசலத்தைப் பார்த்தான்.


உடனே..முகம் சற்றே மாற, "மாலதி வா..வா..நேரமாச்சு..போகலாம்" என அவளை அவசரப் படுத்தினான்.


"இவ்வளவு நேரம் சந்தோஷமாய் இருந்தவர் ஏன் கலவரமாய்க் காணப்படுகிறார்? என்ன ஆச்சு இவருக்கு?" என புரியாது விழித்தாள் மாலதி.


அவளை "தர தர.." என் இழுத்துக் கொண்டு ராணி மேரி  கல்லூரி அருகில் ஒரு ஆட்டோ பிடித்து ஏறிய பின்னரே..நிம்மதி பெருமூச்சு விட்டான்.


வங்கியில் மெசஞ்சராகப் பணி புரியும் அவன்..மாலதி வீட்டாரிடம் கிளார்க் வேலையில் இருப்பதாகக் கூறி மணம் முடித்திருத்தான்..வேதாசலம், இவனைப் பார்த்ததும் ,உண்மையை மாலதியிடம் சொல்லிவிடப் போகிறாரே! என்ற பயம்தான் காரணம்.

Tuesday, October 20, 2020

தன்னைத்தான் காக்கின்...

 வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டு வெளியே வந்த கற்பகம்,ஆட்டோவிலிருந்து இறங்குபவளைக் கண்டாள்."இன்னிக்கும் ஆரம்பிச்சாச்சா? என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.


ஆட்டோவிற்குக் காசு கொடுத்து விட்டு, கையில் ஒரு சிறு பெட்டியுடன் அழுதபடியே வீட்டினுள் வந்தாள் மீனாட்சி.


"என்ன ஆச்சு? ஏன் அழறே? அழாம விஷயத்தைச் சொல்லு " என்றாள்மீனாட்சியிடம்.


"இப்போ ஒன்னும் கேட்காத..சாயங்காலம் என்னைத் தேடி இங்கே வருவார்.அப்போ அவர் கிட்ட கேளு.இனிமே நான் அங்கே போக மாட்டேன்..உனக்கு பாரம்னா சொல்லு வேற எங்கேயாவது போய்க்கிறேன்" 


கடந்த சில மாதங்களாக..கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு மீனாட்சி அடிக்கடி அங்கு வருவது வழக்கமாகி விட்டது.


மாலையில் சுந்தரம் வந்தார்.அவரைப் பார்த்த கற்பகம், "இது உங்களூக்கே நல்லாயிருக்கா?" என்றாள்.


"என்னை என்ன பண்ணச் சொல்ற.என் கோபம்தன உனக்குத் தெரியுமே..ஆனா கோபம் வந்தா அடுத்த வினாடியே அது மறந்துடும்.முன்னெல்லாம் நான் கோபப்பட்டா அம்மா அதை புரிஞ்சுண்டு மௌனமா இருப்பா.ஆனா, இப்ப எல்லாம் இவளும் பதிலுக்குப் பதில் கோபப்படறதால சண்டை வலுத்து இது போல ஆகிவிடறது.சரி..சரி.. மீனாட்சி..கிளம்பு..இனிமே கோபப்பட மாட்டேன்" 


அப்பாவும்..அம்மாவும் கிளம்பிச் செல்வதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம்..

Thursday, October 15, 2020

அப்துல் கலாம்.

 கலாமும், கனவும்

--------------------------------------
இத் தரணியில்
இளைஞர்களை
நல் கனவுக் காணச் சொன்னார்
நமது கலாம் எனும் மகான்
கண்ட கனவை
நனவில் நிறைவேற்றிட
நாளும் உழைத்திடுவீர் என்றிட்டார்
செய்யும் தொழிலில் நேர்மையாய் இருந்திட்டால்
செய்ய வேண்டாம்
கையூட்டு அதிகாரிகளூக்கு சல்யூட்டு
இலட்சிய நாயகன் சொன்னார்
இனிய வார்த்தைகளில்
விதைத்துவிட்டு சென்றிட்டார் கனவுகளை
வளரும் இளைஞர் மனதில்
நாளை அவை..
நாளும் வளர்ந்து
அறுவடைக்கு தயாராயிடும்
அன்னை நாடு சிறந்திட...
வாழ்க எம் கலாம் புகழ்
வையகம் இருந்திடும் வரை

Wednesday, October 14, 2020

நம் செயலில் கவனம் வேண்டும்

ஒருவன் எந்தக் காரியத்தில் ஈடுபட நினைத்தாலும்..முயற்சியும், அச்செயலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும் வேண்டும்.

இவை இரண்டுடன் நாம் உழைத்து..முடிவை இறைவனிடம் விட்டு விடுவோமாக. இறைவன் கை விட மாட்டான்.

ஒரு சிறு கதையினைப் பார்ப்போம்..

கருவுற்ற மான் ஒன்று குட்டி போட வேண்டிய தருணம்.

அது, அதற்கான இடத்தைத் தேடி காட்டில் அலைந்தது.அப்போது ஒரு அடர்ந்த புல்வெளியினைக் கண்டது.அதன் அருகே ஒரு ஆறு.இதுதான் சரியான இடம் என நினைத்தது.

அப்போது அங்கு கரு மேகங்கள் சூழ்ந்தன.மான் பயந்து தன் இடப்பக்கம் பார்த்தது.அங்கு ஒரு வேடன் தன் அம்பினை மானை நோக்கி குறி வைத்து நின்று கொண்டிருந்தான்.


வலப்பக்கமோ ஒரு புலி மானை நோக்கிப் பாய தயார் நிலையில் இருந்தது.

கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் அந்த சமயம் பார்த்துக் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.

என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈனுமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?

மான் இறைவன் என்ன நினைக்கின்றானோ அது நடக்கட்டும் என தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.

அப்போது என்ன நடந்தது தெரியுமா?

மின்னல் ஒன்று வெட்டியது.

மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு குறி தவறி புலியை தாக்கி அது இறந்தது.
தீவிர மழை காட்டு தீயை அழித்தது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுத்தது.
..
அந்த மானின் கவனம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.


நம் செயலில் நம் கவனம் செலுத்துவோம்.
பின்நடப்பவை நல்லபடியே நடக்கும்

Monday, October 12, 2020

ஆணவம்

 பல வண்ணங்கள் கொண்ட கிளி ஒன்றும் காகம் ஒன்றும் நட்புடன் இருந்தன.


ஆனாலும் கிளி அவ்வப்போது காக்கையை அதன் நிறத்தைச் சொல்லி கேலி செய்து வந்தது.


ஒருநாள், வேடன் ஒருவன் கையில் அக்கிளி சிக்கிக் கொண்டது.


அவன் அதை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதன் நாக்கை வழித்து வழித்து..மிளகாயினலௌம், பூண்டினாலும் வழித்து..தமிழில் பேசு..தமிழில் பேசு என துன்புறுத்திக் கொண்டிருந்தான்.


அதைக் கண்ட காகம் வருந்தியது.அப்போது வேடனின் மனைவி, சாத உருண்டை ஒன்றைக் கொண்டு வந்து வைத்து.."காகா..காகா" என இதைப் பார்த்துக் கூவினாள்.


காகம் ,கிளியைப் பார்த்துச் சொன்னது..


"பார்த்தியா..அவனது மொழியில் பேசச் சொல்லி அவன்  உன்னை துன்புறுத்துகிறான்.ஆனால், அவன் மனைவியோ என் பாஷையில் என்னியக் கூப்பிட்டு சோறு வைக்கிறாள்.காரணம் உனது அதீத அழகும், ஆணவமும்..சில நேரத்தில் அவை நமக்கே ஆபத்தாக அமையும்..என சொல்லி விட்டுப் பறந்தது.

Sunday, October 11, 2020

"ஒரே போடு.."

 அண்ணா நகர்..


தனி பங்களா."சாந்தி  நிலையம்"..எனும் பெயரைத் தாங்கி நின்றுக் கொண்டிருந்தது இரும்புக் கதவுகளுடன் இணைந்திருந்த கான்கிரீட் தூண்.


அப்பங்களாவின் கதவினைத் திறந்து வெளியே வந்த மாணிக்கம்..கீழே போடப் பட்டிருந்த செய்தித் தாளை எடுத்துக் கொண்டு..அருகில் வரந்தாவில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்கத் தொடங்கினார்.


ஒரு ஆட்டோ வெளியே வந்து நின்றது.அதிலிருந்து இறங்கியவன், இரும்புக் கதவினைத் தள்ளிக் கொண்டு அவரின் எதிரே வந்தான்.


அவனைப் பார்த்தார்.சதுர முகம்.அடர்த்தியான மீசை..மஞ்சள் பனியன்..பனியனில் எலும்புக் கூட்டின் படம்..


அவனைப் பார்த்து, "யாரப்பா நீ? யாரைப் பார்க்கணும்?" என்றார்.


"ம்..நீதான் வேணும்"என்றபடியே..முதுகுப் பக்கத்திலிருந்து எடுத்த அரிவாளால், அவரை ஒரே போடு பாட..அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.


"கட்..கட்.." என்று இயக்குநர் குரல் கொடுக்க , அதுவரை ஓடிக் கொண்டிருந்த காமிரா நிறுத்தப்பட்டது.


ஒரு பெரிய காட்சி ஒரே டேக்கில் முடிந்த மகிழ்ச்சி அந்த மெகா சீரியல் படபிடிப்பு குழுவினர் முகத்தில் தெரிந்தது.

கம்பனின் "ஏரெழுபது"

 வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூல் "ஏரெழுபது" ஆகும்.அதிலிருந்து இன்று பாடலைப் பார்ப்போம்)


அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்


அழுகின்ற குழந்தைக்கு தான் கொண்ட அன்பின் மிகுதியால் பால் கொடுத்து பசியாற்றும் தாயினைப் போல எல்லா உயிர்களின் மேலும் உருவாகின்ற அருளாகிய குணம் உடைய விவசாயிகள் உலக உயிர்களுக்கெல்லாம் உணவுக் கொடுத்துக் காக்கும் உகழ்ச்சி உடையவர்கள் ஆவார்கள்.மேலும் உழவு செய்யப் பயன்படும் கலப்பையின் நுனியில் இருக்கும் (கொழு) இரும்புக் கருவியில் நெற்பயிரின் கரு சிறப்படைந்து, உலகில் உயிரினங்கள் தோன்றுமாறு வளம் பொருந்திய திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மன்..உழவுத் தொழில் புரியும் விவசாயிகளைப் படைத்து உலக உயிர்களைப் படைத்துள்ளான்,வேறு புகழ்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டு விளங்கும் உயர்வினை உடையவர்கள் இவர்கள் ஆவர்

Tuesday, October 6, 2020

அடைக்கும் தாழ்....

அவளைப் பார்க்காமல் சஞ்செயால் ஒருநாள் கூட இருக்கமுடியாது

அவளுக்கும் அப்படித்ததான்..அவனைக் காணாவிட்டால் வாடி விடுவாள்.

"பால் நினைந்து ஊட்டும் சாலப் பரிந்து.."என்ற திருவாசகம் அவனுக்குத் தெரியும்.

உலக உறவுகளில் தாய்,சேய் உறவிற்கு மேற்பட்ட உறவு ஏதுமில்லை.குழந்தையின் பொருட்டாகத் தன்னையே அர்ப்பணித்தல்..தாய் ஒருத்திக்கே உண்டு.

ஆனால், அவனைப் பொறுத்தவரை அவனது தாய் முகம் கூட அவனுக்கு நினைவில் இல்லை.பிறக்கும் போதே தாயன்பைப் பெறாதவன் அவன்..

அவனைப் பொறுத்தவரை அன்பு என்பதை அவள் மூலமே அறிந்தவன்.அப்படிப்பட்டவள், தன்னைவிட்டு ஒரேயடியாக விலகிச் செல்லப் போகிறாள் என்பதை அந்த விநாடி வரை எதிர்பார்க்கவில்லை.

யாரோ வரும் ஓசை கேட்கிறது.

"சாதனா வெளியே வா..இதோ பார் இனிமே இவங்கதான் உனக்கு அப்பா..அம்மா"என இருவரை ஆதரவற்ற குழந்தைகள் விடுதி காப்பாளர் அன்னபூரணி அம்மாள் காட்ட..அந்த எட்டு வயது சிறுமி தத்து கொடுக்கப் படுகிறாள் .

தன்னிடம் தனி அன்பு செலுத்தி வந்த சாதனா..கண்களில் நீர் வழிய சஞ்செயிற்கு "டா..டா" காட்டிவிட்டு செல்கிறாள்

"சஞ்செய், உள்ளே வா.." என்ற அன்னபூரணிஅம்மாளின் குரல் கேட்கிறது அவனுக்கு.

Friday, October 2, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் -6" (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)

 



மன்னன் ஆவலுடன் பாய்ந்து அப்பெண் மோதிரத்தை எப்படிக் கைப்பற்றுகிறாள் என உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.


எந்நேரமும், அந்நிகழு நேரிடலாம் என்பதால்..மக்கள் கூட்டமும் நிசப்தமாய் அப்பெண்ணையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அச்சமயம், அரசி..மன்னனின் பார்வையை, அப்பெண்ணிடமிருந்து விலக்க எண்ணி, மன்னனின் தோள்களில் மயங்கி விழுந்தாள்...இல்லை..இல்லை..மயங்கியது போல நடித்தாள்.


உடன், மன்னனின் பார்வை அரசியின் மேல் செல்ல..அந்த இமைப் பொழுதில் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ந்து..அப்பெண் மோதிரத்தைப் பறித்துக் கொண்டு மூங்கிலின் உச்சிக்குச் சென்று விட்டாள்.


சில நொடிகள் கழித்து அரசி கண் விழித்தாள்.சற்று நிம்மதியடைந்த மன்னன், நிகழ்ச்சி முடிந்து..அனைவரும் அப்பெண்ணைப் புகழ்வதைக் கேட்டான்.


உடனே அவளை அருகே அழைத்து,அந்த வித்தையைத் தான் பார்க்கத் தவறிவிட்டதாகவும்..தனக்காக மீண்டும் ஒருமுறை செய்துக் காட்டும் படியும்..அதற்காக மீண்டும் ஒரு மோதிரத்தைத் தருவதாகவும் கூறினான்.


ஆனால் அப்பெண்ணோ மன்னனிடம், "மன்னா..ஆறுமாத அளவு சுவாச பந்தனம் எனும் மூச்சை அடக்கிப் அழகும் பயிற்சியைச் செய்து தேகத்தைப் பலப்படுத்திக் கொண்ட பின்னரே..என்னால் மீண்டும் இவ்வித்தையினியச் செய்ய முடியும்.அதை மீறி உடனே செய்தால் நன இறந்து விடுவது உறுதி" என்றாள்.


அதனைப் புரிந்து கொள்ளாத அரசனோ..உடனடியாகச் செது காட்டும்படி வலியுறுத்தினான்.


வேறு வழியின்றி..அரசனின் ஆணையால் சாகத் துணிந்த அப்பெண்..கழை ஏறி..மீண்டும் விச்சுளிப் பாயத் தயரானப் போது..ஆகாயத்தில் பறந்து செல்லும் பறவைகள் சிலவற்றினைக் கண்டாள்.


அப்போது சடையநாத வள்ளல் தன்னை கவிதைகள் எழுதச் சொன்னதையும், அடுத்த முறை அவரைக் காண் அவரும்போது ஒரு வண்டியில் அவற்றைத் தனியாகக் கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்னதும் ஞாபகம்  வர..அந்த காரியத்தை செய்ய முடியாது போகிறதே..வள்ளலுக்கு தன் நிலையைத் தெரிவிக்க வேண்டுமே என அப்பறறைகளிடம் கீழே குறிப்பிட்டுள்ள செய்யுளைக் கூறுகிறாள்.  

“மாகுன்றவாய பொற்றோளான் வழுதிமன் வான்கரும்பின் பாகொன்று சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன் பையப் பையப் போகின்ற புள்ளினங்காள்! புழற்கோட்டம் புகுவதுண்டேல் சாகின்றனளென்று சொல்வீர் அயன்றைச் சடையனுக்கே” 


 (“பறவைகளே பாண்டியனின் மனைவி, என் மேல் பொறாமை கொண்டு பாண்டியனைத் தன் பக்கம் திருப்பி, எனது அரிய வித்தையைப் பாராமல் இருக்கச் செய்து விட்டான். அதனால் நான் மீண்டும் அந்த வித்தையை இப்போது செய்து காட்டிச் சாகப் போகிறேன். நீங்கள் தொண்டை மண்டலத்தின் புழல் கோட்டத்திற்குப் போவீர்களானால், அயன்றை நகரில் வாழ்பவனும், எத்தகைய பொருள் கேட்டாலும் இல்லை என்னாது கொடுப்பவனுமாகிய சடையநாதப் பிரபுவைக் கண்டு இங்கு நடந்த இந்தச் செய்தியைச் சொல்லுங்கள்” என்பது கருத்து)

இப்படிப் பாடி விட்டு வித்தையைச் செய்து காட்டி விட்டு அவள் இறந்து போனாள்.

இந்தச் செய்தியை தொண்டை மண்டலச் சதகம் கீழ்க்கண்ட பாடல் மூலம் தெரிவிக்கிறது:-

“பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
யாலன்று பாண்டியன்முன்

நோகின்ற சிற்றிடை வேழம்

கூத்தி கொடிவரையில்

சாகின்றபோது தமிழ் சேர்

அயன்றைச் சடையன்றன்மேல்

மாகுன்றெனச் சொன்ன பாமாலை
யுந் தொண்டை மண்டலமே”

தொண்டை மண்டலத்தின் பெருமைகளைக் கூறும் நூறு பாடல்களில் முக்கியமான விச்சுளி வித்தையை விளக்கும் பாடல் 33வது பாடலாக அமைகிறது.

இந்த வித்தையை மனக்கண்ணால் ஒரு முறை கற்பனை செய்து பார்த்தால் எவ்வளவு பெரிய அரிய செயலைத் தமிழ்ப் பெண் ஒருத்தி செய்து காண்பித்திருக்கிறாள் என்பதை உணரலாம்.

மனித சக்தி எவ்வளவு எல்லையற்ற ஆற்றல் உடையது என்பதைக் காண்பிக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக விச்சுளி வித்தை அமைந்துள்ளது அல்லவா?

  

Thursday, October 1, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் -5" (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)


 

அந்த விச்சுளிப் பாயும் பெண்ணீன் விச்சுளிப் பாய்ச்சலை மட்டுமின்றி..அவள் அழகைனையும் காண ஆடவர்கள் கண்கள் விரும்பிக் கொண்டிருப்பதை அவர்களுடன் வந்த மனைவியர்கள் உணர்ந்தார்கள்.


பாண்டியனின் மனைவியும்..மனதிற்குள் "அடடா..இவள் எவ்வளவு அழகு" என வியந்தாள்.அடிக்கடி மன்னனைப் பார்த்தாள்.ம்ன்னனாய் இருந்தால் என்ன, அவனும் ஆடவன்தானே! அவள் அழகை ஆசைத் தீர பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனின் கண்கள் வேறு எந்தப் பக்கமும் பாராது, அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பதை எண்ணிய அரசி அவனை தன் பக்கம் திருப்ப முயன்றாள்.


அந்த கழைக்கூத்தில் அவளின் ஒவ்வொரு விளையாட்டினையும் மக்கள் ரசித்தனர். இப்போது அவளின் விச்சுளிப் பாய்ச்சல் மட்டுமே மீதமிருந்தது.அதற்கான ஆயத்தங்களைக் குழுவினர் செய்து கொண்டிருந்தனர்.


ஒருவேளை ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால்..அதற்காக, பாதுகாப்பாக அவர்கள் ஒரு முரட்டுப் படுதா ஒன்றை பிடித்தபடி நின்றனர்.தவறி விழுந்தால் அதன் மீது விழலாம்.ஆனால், அதுவும் பாதுகாப்பானது என சொல்லிவிட முடியாது.


பாண்டிய மன்னன் தன் கையில் இருந்த மோதிரம் ஒன்றை ,ஒருவனிடம் கொடுத்து..அவள் பாயும் போது அதை வீசச் சொன்னான்.அப்படி அவன் வீசுவதை, அவள் பாய்ந்து பிடிக்க வேண்டும்.


அரசியாரோ, "மோதிரம் வேண்டாம்.வேறு ஏதேனும் கொடுக்கலாமே! வேண்டுமானால் என் அணிகலன்களில் ஒன்றினைத் தருகிறேன்" என்றாள்.


மன்னன் அவளை, "எனக்கு எதைக் கொடுப்பது எனத் தெரியும்..நீ பேசாமல் இரு" எனக் கடிந்து கொண்டான்.


வீசி எறியும் பொருள் அதைப் பிடிக்கும் அப்பெண்ணுக்கே சொந்தம் என்பதால் மன்னனின் மோதிரம் அவளுக்கு செல்வதை ராணி விரும்பவில்லை.


இதுநாள் வரை தன்னைக் கடிந்து கொள்ளாத மன்னன் இப்போது கடிந்து கொள்வதைக் கண்டு அரசியாரின் அச்சம் அதிகரித்தது.அப்பெண்ணை மன்னன் மனம் நாடுகிறது..ஒரு கழைக்கூத்தியை அவன் விரும்புவதா"  அரசியின் உடல் நடுங்கியது.


இப்போது அப்பெண் கம்பத்தின் உச்சியில் பாய்ச்சலுக்குத் தயாராய் ஏறிக் கொண்டிருந்தாள்.


அவள் ஏறும் நளினம் தான் என்ன?அவள் உடல் மெழுகால் ஆனதோ?அவள் வலிமையினைப் பார்த்தால், இரும்பின் உரம் இருக்க வேண்டும்.ஆனாலும் வளைவும், நெளிவும் கொடி போலத்தான் இருக்கிறது  என்றெல்லாம் அரசிக்குத் தோன்றியது.


அவள் இப்போது கம்பத்தின் உச்சியில் இருந்தாள்.


அரசன் கொடுத்த மோதிரத்தை கீழே ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தான்.மீன் குத்திப் பறவையினைப் போல அவள் அந்த மோதிரத்தை அவனிடம் இருந்து பறித்துச் செல்ல வேண்டும்.


அப்போது, மன்னனின் பார்வையை அவளிடம் இருந்து விலக்க அரசியார் ஒரு தந்திரம் செய்தாள்..


அந்த தந்திரம்..எதிர்பாராத நிகழ்ச்சிகளெல்லாம் நடைபெற வித்திட்டவிட்டதை விதி என்று தானே சொல்ல வேண்டும்.

Wednesday, September 30, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் -4" (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)

 



மூத்த இருளன் நிகழ்ச்சி பற்றி சொல்லி முடித்ததும்..இளைஞன் ஒருவன் மேலத்தைத் தட்டி நிறுத்தினான்.


அனைவர் கண்களும் அந்த இளம் பேரழகியின் மீது.


பாவம் என்ற கண்கள், பச்சாதாபக் கண்கள், இரக்கக் கண்கள், பாசக் கண்கள்,காமக் கண்கள் என பலரின் கண்கள் பல செய்திகளைக் கூறியபடி அப் பெண்ணின் மீது நிலைத்திருந்தது.


சபையினருக்கு நடுவே வந்து நின்ற பெண், அனைவருக்கும் தன் இரு கரங்களைக் கூப்பி வணங்கினாள்..பின்..


"கர கர" என மூங்கிலின் உச்சிக்கு ஏறிச் சென்றாள்.


வள்ளல் மூச்சியப் பிடித்துக் கொண்டார்.


காதணியை கழற்றி எறிந்தாள். பின் பறந்து வந்து அக் காதணி தரையைத் தொடுமுன் கையில் பற்றினாள்.மீண்டும் மூங்கிலின் முனைக்குச் சென்றாள்.


எல்லாமே..சில கண் இமைக்கும் நேரங்களில் நடந்து முடிந்தது.மக்கள்..விடாது கரவொலி எழுப்பி..தங்கள் மகிழ்ச்சியினையும்,பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.


சடையநாத வள்ளல்..மனம் மகிழ்ந்து பலப்பல பரிசுகளைத் தந்தார்.


பின் இருளர் கூட்டம் அவரிடம் இருந்து விடைப் பெற்றது.நெகிழ்ந்து போன வள்ளல்..அப்பெண்ணை நோக்கி.."தாயே! உனக்கு அந்த சரஸ்வதி கடாட்சம் இருப்பதால்..உன் கவி புனையும் ஆற்றலை வளர்த்துக் கொள்.கூடிய விரைவில் மீண்டும் இங்கு வா.வருகையில் நீ புனைந்த கவிதைகள் அனைத்தினையும் ஒரு தனி வண்டி மூலம் எடுத்து வர வேண்டும்..புரிந்ததா..?"என வாஞ்சனையுடன் வழி அனுப்பினார்.


அப்பெண்ணும் அவரிடமிருந்து கண்ணீருடன் விடை பெற்றாள்.


வள்ளலின் அன்பும், தமிழ் போற்றும் குணமும் அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்து இருந்தது.


அடுத்து அந்த கூட்டம் பாண்டிய நாடு செல்லத் தீர்மானித்தது.மதுரையில் வழுதிப் பாண்டியனிடம் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்தி..பரிசினைப் பெற வேண்டும் என்பது அக்கூட்டத்தினரின் நீண்ட நாள் ஆசையாகும்.


மதுரை வந்ததுமே..விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ச்சியும் நடத்த முடிவானது.


மக்கள் திரளாகக் காத்திருந்தனர்.


நிகழ்ச்சி ஆரம்பிக்கு முன் வழக்கம் போல மூத்த இருளன் நிகழ்ச்சி பற்றி அறிவித்தார்.மேளம் தட்டப்பட்டது.


இளம் பெண் வந்து அனைவரையும் வணங்கினாள்.


மன்னன்..தனது அரசியுடன் வந்திருந்தான்.அரசி தொழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.மன்னன்..அந்தப் பெண்ணைப் பார்த்த விழிகளை அவளிடமிருந்து அகற்றாமல், அவளது பேரழகை ரசித்துக்கொண்டிருந்தான்.


தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த ராணி அதனைப் பார்த்து..விரைவாக வந்து மன்னனின் அருகே அமர்ந்தாள்.விரக தாபத்துடன் மன்னன் அப்பெண்ணியப் பார்ப்பதை அவள் விரும்பவில்லை.


நடந்த நிகழ்வுளை அப்பெண்ணும் ஓரளவு புரிந்து கொண்டாள்.


மேளம் தட்டி முடிக்கப் பட்டதும் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போகீறது..


பாவம்..அந்தப் பெண் நிகழ்ச்சிக்குப் பின் தனக்கு ஆகப் போகும் நிலையை உணரவில்லை.


மூங்கிலின் உச்சிக்குச் சென்று பாய்ச்சலுக்குத் தயாரானாள்.    

Tuesday, September 29, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் - 3 (ஓருகழைக்கூத்தாடி பெண்ணின் கதை)

 



"விச்சுளிப் பாய்ச்சலா?" அது என்ன வித்தை?" வள்ளல் ஆர்வத்துடன் கேட்டார்.


"சாமி..விச்சுளிப் பாய்ச்சல் மிகவும் ஆபத்து நிறைந்த வித்தை.ஒரு நெடிய மூங்கிலின் உச்சிக்கு இவள் ஏறி அந்தரத்தில் நிற்பாள்.அங்கிருந்தபடியே தன் காதணியைக் கழட்டி நிலத்தில் எறிவாள்.அல்லது யாராவது கையில் ஒரு மோதிரத்தை வைத்திருப்பார்கள்.."


"அப்புறம்.." வள்ளலுக்கு ஆவல் அதிகமானது.


"எறியப்பட்ட காதணி..நிலத்தில் விழு முன்னர்..மின்னலாய்க் கீழே பாய்ந்து..அதை கைக் கொண்டு ஒரு நொடியுள் மீண்டும் மூங்கில் உச்சிக்கு பழையபடி சென்றிருப்பாள்.அல்லது, மோதிரம் வைத்திருப்பவர் கையில் உள்ள மோதிரத்தைப் பறித்து மேலே மீண்டும் சென்றிடுவாள்'


"அதெப்படி சாத்தியம்?"



"உச்சத்தில் ஏறிய பின், ஒரு யோகப் பிரயோகத்தினால் மூச்சை அடக்கி தன் உடலை ஒரு இறகைப் போல லேசாக எடுத்துக் கொள்வாள்"


"ஆச்சர்யம்...கொஞ்சம் ஆபத்தான வித்தைதான்.."வள்ளல் ஒப்புக் கொண்டார்.


'ஆபத்து கொஞ்ச நஞசம் இல்லை சாமி.உயிரையே பறித்து விடும் அபாயம் உண்டு.ஒருமுறை செய்வதற்கு ஆறு மாத காலம் மூச்சடக்கும் யோகப் பயிற்சியை கடுமையாகச் செய்ய வேண்டும்.ஒருமுறை இப்பாய்ச்சலை செய்து விட்டால் மீண்டும் இந்த வித்தையை ஆறு மாதத்திற்குப் பின்னர்தான் செய்ய வேண்டும்.அப்படியில்லாமல் உடனே செய்யத் துணிந்தால் அந்தக் கணமே மரணம் உண்டாகும்" என்றார் இருளன். 


'இந்த விச்சுளிப் பாய்ச்சலுக்கு மட்டுமே இவளைத் தயார் செய்து, வேறொன்றிற்கும் லாயக்கில்லாமல் செய்து விட்டாயா?"


"இல்லை சாமி! இவள் வயது பெண்கள் கற்க முடிந்ததெல்லாம்..இவளும் கற்று வந்திருக்கிறாள்.அதுமட்டுமல்ல..பாக்கள் புனைவதிலும்..முறையாக தமிழாசாங்களிடம் பாடம் பயின்றிருக்கிறாள்"


"ஓஹோ...பாபுனையவும் தெரியுமோ? அதைச் சொல்லு.நீங்கள் அனைவரும் இன்று என் விருந்தினர்.விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள்.நாளைமுதல் காலை வேளைகளில் சிறிது நேரம் இவளின் தமிழைனை ரசிக்கிறேன்"


"சாமி..விச்சுளிப் பாய்ச்சலை எப்போ வைத்துக் கொள்ளலாம்?"


"சொல்கிறேன்.."என்ற வள்ளல்..அன்று முதல் அந்தப் பெண்ணின் செய்யுளியற்றும் வேகத்திலும், செறிவான கருத்துகளிலும் தன்னை மறந்தார்.அந்தப் பெண்ணின் மேல் அவருக்கு அபிமானமும், அளவற்ற வாஞ்சையும் ஏற்பட்டது.அவளைத் தன் மகளைப் போலவே நடத்த முற்பட்டார்.


பின் ஒருநாள்..இருளன் மீண்டும் கேட்டுக் கொண்டதால்  "வருகின்ற வெள்ளிக் கிழமை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.


அன்றே பறை மூலம் ஊர் முழுதும் அறிவித்து..வெள்ளியன்று மக்கள் அந்த வித்தையினைக் காணக் கூடினர். 


இருளன் கணீர்க் குரலில், பாய்ச்சல் நிகழும் விதம் குறித்து அறிவித்தார்..


"மாபெரும் மக்கள் கூட்டமே..இச்சிறு பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே பாய்ந்து,ஒரு நொடியில் கீழே விழும் தன் காதணியை கைக் கொண்டு மீண்டும் மூங்கில் உச்சிக்கே சென்றிடுவாள்.ஆகவே அனைவரும் அவளதுகவனம் சிதறாமல் இருக்க மௌனமாகவும்அதே நேரத்தில் தக்கையில் வைத்த கண்களைப் போல பாய்ச்சலையும் கண்டு ரசியுங்கள்" என்றார்.

Monday, September 28, 2020

விச்சுளிப் பாய்ச்சல் - 2(ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)


 

தொண்டை மண்டலம் 24 கோட்டங்களைக் கொண்டதாகத் திகழ்ந்தது.அதில் ஒன்று புழல் கோட்டம்.அக்கோட்டத்தில் அயின்றை (இன்றைய சென்னையில் அயனாவரம் பகுதி) எனும் சிற்றூரில் வேளாண் குடிப் பிறந்த சடையநாத வள்ளல் என்பவர் விறலியர் வகுப்பினரை ஆதரித்து வந்தார்.

ஒருநாள் கிட்டத்தட்ட பத்து இருளர்கள் அவரது இல்லத்திற்கு வந்தனர்.

வள்ளலின் கணக்குப் பிள்ளை அவர்களைக் கண்டு, "நீங்களெல்லாம் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றார் .

கூட்டத்தில் சற்று வயதான் இருளன், "ஐயா..நாங்க எல்லாம் கழைக் கூத்தாடிங்க.உங்க புழல் கோட்டம் பார்த்திராத வித்தையெல்லாம் செய்து காட்ட வந்தோமுங்க..ஒருமுறை வள்ளல் ஐயாவைப் பார்த்துட்டுப் போயிடறோம் சாமி"என்றான்.

"ஐயாவை..இந்த நேரத்திலா.."எனத் தயங்கினார் கணக்கு.

ஆனால் அதே நேரம் தந்த வேலைப்பாடுகள் செய்யப் பெற்ற பெரும் கதவினைத் திறந்து வெளியே வந்தார் சடையநாத வள்ளல்.

கலியுகக் கர்ணனாய், கேட்போருக்கு அள்ளி வழங்கி வருபவர் அவர்.புலவர்களும், கலைஞர்களும் அவரை நாடி வந்து..ஆதரவினைப் பெற்று வந்தனர். 

"யார் இவர்கள்?"என்றவர் முன், அனைவரும் வணங்கி எழுந்தனர்.

மூத்த இருளன் சொன்னார், "அய்யா..நாங்க கழைக் கூத்தாடிங்க.இந்தக் களையின் குறைந்து வரும் சில கரணங்களை என் மகள் மிகவும் அநாசயமா செய்வாள் சாமி.உங்க முன் ஒருமுறை அவ திறமையைக் காட்ட சந்தர்ப்பம் கொடுக்கணும்"

அப்போதுதான் அவர்களுடன் நின்று கொண்டிருந்த அந்தச்சின்னப் பெண்ணைப் பார்த்தார் வள்ளல்.பதினாறு வயதே நிர்ம்பியவள்கொள்ளை அழகு.மினு மினுக்கும் கருப்பு நிறம்.அடர்ந்த கரு கரு கூந்தல்..காந்தக் கண்கள்..வண்டினம் நம் இனம் சேர்ந்த இருவர் அவள் கண்களில் புகுந்து விட்டனரோ..என எண்ணும் கருவண்டு கண்கள்.நீங்கள் எள்ளுப் பூவினைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில்  அது  இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும்..கூர்மையான நாசி.மேல் தோல் பிரிந்தாற் போன்ற நாவல் பழ உதடுகள்.அதனுள் முத்துப் பரல்களா? மாணிக்கப் பரல்களா என வியக்க வைக்கும் வெந்நிற பற்கள்.இவள் கழுத்தினைப் பார்த்த பின்னர்தான் கழுத்திற்கு சங்கு என்ற சொல் வந்திருக்குமோ? என்ற சந்தேகத்தை உருவாக்கும் கழுத்து.தாமரை மொக்கு போன்ற மார்பகங்கள்..மொத்தத்தில்  அழகுச் சிலையாய் இருந்தாள் அவள்.

அந்தப் பெண்ணைப் பார்த்து வள்ளல்,"இந்த சிறு பெண்ணா?.இவளுக்கு என்ன வித்தைத் தெரியும்?"என்றார்.

"கழைக்கூத்தில் மிகக் கடினமான விச்சுளிப் பாய்ச்சல் எனும் வித்தையை சிறுவயதிலேயே இவளுக்குக் கற்பித்திருக்கிறோம் "

"விச்சுளிப் பாய்ச்சலா? அது என்ன வித்தை?"என்றார் வள்லல் ஆர்வத்துடன்.

(தொடரும்)

 

Sunday, September 27, 2020

"விச்சுளிப் பாய்ச்சல்" - 1 (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)



முகலாய மன்னர் ஜஹாங்கீர்..ஒரு சமயம் கயிறு ஒன்று செங்குத்தாக நிற்க அதில் ஒரு பையன் எறிக் காட்டும் கயிறு வித்தையைப் பார்த்து வியந்ததாகக் குறிப்பொன்று சொல்கிறது.

இன்று அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானதானது இந்தியாவில் தோன்றிய யோகா வாகும்.

தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் அற்புதங்கள் ஏராளம்..ஏராளம்...அத்தோடு தமிழகத்தில் பெரும் கலைஞர்கள் ஜலஸ்தம்பனம்,வாயு ஸ்தம்பனம் ஆகிவற்றுள் தேர்ச்சிப் பெற்று அவற்றின் அடிப்படையான வித்தைகளை செய்து காட்டி,வியக்க வைத்தனர்.

அப்படிப்பட்ட ஒன்றுதான் விச்சுளி வித்தை.

விச்சுளி...அம்பு விரைந்து பாயும் பாய்ச்சல்.

வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு விச்சுளி என்பது.அவ்வாறு பாய்ந்து செல்லும் பறவை விச்சுளிபறவை.அதாவது நாமெல்லாம் அறிந்த மீன் குத்திப் பறவையின் பெயர்.சுள் என்றால்..விரைந்து எனப் பொருள்.

கழையாட்டத்தில் ஒரு ஆட்டமாகத் திகழ்வது விச்சுளிப் பாய்ச்சல்.ஓரிடத்தில் இருந்து வெளியேறி மீண்டும் விண்ணேறி ஓரிடத்தில் தாவிப் பிடித்து பற்றுவது விச்சுளிப் பாய்ச்சல்.

கழைக்கூத்து என்பது தமிழகத்தில் சிறந்து விளங்கிய கூத்து எனும் கலை.பழைய பாரம்பரியம் மிக்க கூத்துகளில் கழைக்கூத்தும் ஒன்று.

வலிமையும்,உயரமும் வாய்ந்த இரண்டு மூங்கில்களை நட்டு ,அவற்றிற் கிடையே உறுதியான கயிற்றை இணைத்துக் கட்டி ஆடவரும், பெண்களும் அதன் மீது நின்று அந்தரத்தில் ஆடிச் சாகசங்கள் செய்வதேக் கழைக்கூத்தாகும்.

இந்தக் கழைக்கூத்தினுள் "விச்சுளிப் பாய்ச்சல்" இருந்ததாக தனிப்பாடல்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.விச்சுளிப் பாய்ச்சல் வித்தை மரண அபாயம் மிக்கது.உயிரைப் பெரிதாக மதிக்காதவர்கள் மட்டுமே நிகழ்த்திபடக் கூடியதாகும்.

கூத்தாடுபவர் கழை மீது ஏறி அதிலிருந்த படியே பல வித்தைகள் செய்து காட்டுவர்.பின் யோகப் பயிற்சியால் மூச்சினை அடக்கித் தம் உடலின் பளுவை கயிற்றின் பளுவிற்கு சமன் செய்து கொண்டு வர வேண்டும்.பின்னர், கயிற்றினின்று மேலே தாவி,பறவை போல சிறகு விரித்து..முப்பது இமைப்பொழுதுகளில் அந்திரத்தில் நிலைத்துக் காட்டிய பின்னர் கணப்பொழுதும் யோசிக்காமல் கயிற்றுக்கு வந்து விட வேண்டும்

இந்த அபாய வித்தையை எந்தக் காரணம் கொண்டும், ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் செய்யக் கூடாது.மீறிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்பது இவ்வித்தையப் பயிற்றுவிக்கும் ஆசான்களின் முதல் எச்சரிக்கையாக இருக்குமாம்.

இந்த எச்சரிக்கையையும் மீறி.பெண் ஒருத்தி..மன்னரின் ஆணையால்..இரண்டாம் முறையாக அந்த வித்தையை நிகழ்த்தி..உயிரினைத் தியாகம் பண்ணிய வரலாறும் தனிப்பாடல் ஒன்றின் மூலம் சொல்லப் படுகிறது.

நினைத்துக் கூட பார்க்க முடியாத கலை.இப்படி விச்சுளி வித்தையைச் செய்து காட்டுபவர்கள் பலர் தமிழகத்தில் இருந்தார்கள் என்பதே நமக்கு ஆச்சரியத்தினைத் தருகிறது.

அடுத்தப் பதிவில் அந்தப் பெண்ணினைக் குறித்துப் பார்க்கலாம். 



 

Thursday, August 20, 2020

என்னுரை
-------------------

சங்கக்காலம் முதல் இலக்கிய உலகில் பெண்களின் பங்களிப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

மதம், இனம் கடந்து அனைத்துத் துறைகளிலும் சாதித்த, சாதித்துக் கொண்டு இருக்கும் பெண்கள் ஏராளம்.

                    "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
                       பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
                      எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
                       இளைப்பில்லை"

என்று சொல்லிச் சென்ற பாரதியின் கனவினை நனவாக்கும் பெண்கள் இன்று ஈடுபடாதத் துறைகள் இல்லை எனலாம்.அனைத்திலும்..நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும், பல பெண்களின் திறமைகள் சரியாக பதிவிடப்படாமல் போய் இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

தமிழ் இலக்கியம் என்று வந்தால் சென்ற  நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்திலிருந்து,தங்களை கட்டி வைத்திருந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து..பல சமுதாய சீர்கேடுகளையும் தங்கள் எழுத்துகள் மூலம் ."சமுதாயத்தில் சாதாரண குடிமகனுக்கு இருக்கும் பொறுப்பைவிட ஒரு எழுத்தாளருக்கு பொறுப்பு அதிகம்' என உணர்ந்து சீறி எழுந்துள்ளார்கள் பல பெண் எழுத்தாளர்கள்.

அப்படி என்னைக் கவர்ந்த நாற்பதற்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் குறித்த நூலே இது.


இந்நூலை அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என விரும்புவதுடன், இந்நூலில் குறிப்பிடப்ப்ட்டுள்ள எழுத்தாளர்களின் எழுத்துகளையும், தேடிச்சென்று படித்து இன்றைய வளரும் நிலையில் உள்ளவர்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்


இந்நூல் உருவாக உறுதுணையாய் இருந்த நண்பர் வானதி ராமநாதனுக்கும்,பதிப்பக ஊழியர்களுக்கும்,முகப்பு அட்டையை வடிவமைத்த ஓவியருக்கும் என் நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.

Tuesday, August 4, 2020

மென்கொடியும் மெலிஇடையும்

தென்றல்
மலர்ந்தாடும்
மென் கொடி பூ ஒன்று
தன் தாயினும்
மெலிந்த இடையால்
தளிர் விரலில்
தாயிடமிருந்து
தன்னைப் பறிப்பதை
தடுக்க இயலாது
தவிக்கின்றது.

Wednesday, July 8, 2020

இயக்குநர் சிகரம் கேபி - 91

இன்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள்.

அவரின் சாதனைகள்..அவரது அனைத்துப் படங்கள் பற்றிய சிறு குறிப்புகள் என அனைத்தையும் நூல் வடிவத்தில் கொண்டு வந்த பெருமை எனக்கு உண்டு.

"ஆவர் அனைத்தையும் ஆவணப்படுத்த விரும்பினார்.நண்பர் ராதாகிருஷ்ணனின் முயற்சியால் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது' என்றுள்ளார் அவரது புதல்வி திருமதி புஷ்பா கந்தசாமி அவர்கள்..எனது "இயக்குநர் சிகரம் கேபி" என்ற நூலில்.மேலும் அவர் சொல்கிறார்..

"Accurate information is the key to motivation"..திறமையும்,உழைப்பும் மட்டுமே மூலதனமாக இருந்த கேபி அவர்களுடைய வாழ்க்கையை மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கிறது இப்புத்தகம்.

மேலும் சில பாலசந்தர்களை உருவாக்க இது உதவும் என்பது உறுதி..என் கிறார்.

கேபி புரிந்த இமாலய சாதனைகளைச் சொல்லும் இந்நூலிலிருந்து சிலத் துளிகள்.

கதை,திரைக்கதை,இயக்கம் எனபல்வேறு துறைகளில் பாலச்சந்தர் பணியாற்றியுள்ள படங்கள் 125.தமிழ் 87,தெலுங்கு 19,இந்தி 7,கன்னடம் 8,மலையாளம் 4.

இரு கோடுகள், அபூர்வ ராகங்கள்,தண்ணீர் தண்ணீர்,அச்சமில்லை அச்சமில்லை ஆகிய நான்கு படங்களும் இவருக்குத் தேசிய விருதினைப் பெற்றுத் தந்துள்ளன.

தேசிய விருது, பத்மஸ்ரீ,மாநில விருது, அண்ணா விருது,கலைஞர் விருது,கலைமாமணி,ஃபில்ம் ஃபேர் விருதுகள்,பல்கலைக் கழகங்கள் வழங்கிய டாக்டர் பட்டங்கள் ஆகிய பல விருதுகளைப் பெற்ற்வர் இவர். மைய அரசின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே அவார்ட் விருதினையும் பெற்றுள்ளார்

65 நடிக,நடிகையர்களையும், 36 தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.ஆரம்பக் காலங்களில் ஒவ்வொரு படத்திலும் நான் கு புதுமுகங்களையாவது அறிமுகப்படுத்திய இயக்குனர் இவர்

எதிர் நீச்சல்,மேஜர் சந்திரகாந்த்,நாணல், நீர்க்குழுமி உட்பட 38 நாட்கங்கள் எழுதியுள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்களான ரயில் ஸ்நேகம்,கையளவு மனசு, மர்ம தேசம் போன்றவை இன்றளவும் பேசப்படுகின்றன.


இவர் படங்களில் நடித்த காதாநாயகிகளின் பாத்திரத்தின் பெயர் நினைவில் இன்றும் நமக்கு இருக்கிறதெனில்..அது அப்படைப்பின் வெற்றியல்லவா?

அவள் ஒரு தொடர்கதை (கவிதா)
அரங்கேற்றம்  - லலிதா
தாமரைநெஞ்சம் - கமலா
மனதில் உறுதி வேண்டும் - நந்தினி
அபூர்வ ராகங்கள்- பைரவி
சிந்து பைரவி- சிந்து
அச்சமில்லை அச்சமில்லை- தேன்மொழி
வறுமையின் சிறம் சிவப்பு - தேவி
புன்னகை மன்னன் - மாலினி,ரஞ்சனி

கதாநாயகிகள் மட்டுமல்ல கதாநாயகனின் பெயர்கள்
எதிர்நீச்சல் -மாது
நவக்கிரகம்- சேது
மன்மத லீலை- பிரசன்னா
உன்னால் முடியும் தம்பி- உதயமூர்த்தி

இப்படி சொல்லிக் கொண்டேப் போகலாம்

சிவாஜிராவ் எனும் நடிப்புக் கல்லூரி மாணவனுக்கு ரஜினி காந்த் என்று பெயர் சூட்டி 1975ல் அறிமுகப்படுத்திவர்.சூபர் ஸ்டாராகபின்உருவெடுத்த ரஜினி..பாலசந்தர் தயாரிப்பில் பல வெற்றிப் படங்களில்  நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது 5ஆம் வயதில் அறிமுகமான கமல்ஹாசனை1973ல் அரங்கேற்றம் படம் மூலம் இளைஞனாக அறிமுகப்படுத்த்னார்..

இப்படி நூற்றுக்கணக்கான கேபியைப் பற்றிய செய்திகளைக் கொண்ட நூல்.."இயக்குநர் சிகரம் கேபி"

அவர் பிறந்தநாளான இந்நாளில் இக்குறிப்புகள் அவரின் சாதனைகள் எனும் தேன்கூட்டிலிருந்து சிதறிய சிலத் துளிகள் ஆகும்

திரைப்படங்கள் வாழும்வரை..இவர் புகழும் வாழும்..போற்றப்படும்.

வாழ்க கேபி...வளர்க அவரது புகழ்

Sunday, July 5, 2020

கலைஞரின் கலைப்பயணம்

கலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்.அவரது பாடல்களில் மிகவும் பெயர்ப் பெற்ர சில பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

1)ஊருக்கு உழைப்பவன்டி..ஒரு குற்றம் அறியான்டி - மந்திரிகுமாரி

2)என் வாழ்வினிலே ஒளி ஏற்றும்தீபம் - பராசக்தி

3)பூமாலை நீ ஏன் புழுதி மண்மேலே   - பராசக்தி

4)புதியதோர் பாதையை வகுப்போமா - நாம்

5) வாழ்க..வாழ்க..வாழ்கவே  - நாம்

6)எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - நாம்

7)மாரி..மகமாயி..மாரி..மகமாயி - நாம்

8)சொப்பனத்தில் வந்த கடவுளின் அருளால் - நாம்

9) பேசும் யாழே..பெண் மானே - நாம்

10)மணமில்லா மலர் நானம்மா- நாம்

11) பேசும் யாழே (பாடியவர்- ராஜா-ஜிக்கி  -நாம்)

12)ஹா..ஹா..வருவாய்..வருவாய் (நாம்)

13)அம்மையப்பா அருள்வாய்..(அம்மையப்பன்)

14)காதல் புறா காதிலே (அம்மையப்பன்)

15)சின்ன புது மலரே (அம்மையப்பன்)

160நீலக் கடல் பாரு பாப்பா (அம்மையப்பன்)

17)பொதுநலம்..என்றும் பொதுநலம் (ரங்கோன் ராதா)

18)ஓடையில் ஒரு நாள் (ரங்கோன் ராதா)

19)ஆயர்பாடி கண்ணா நீ (ரங்கோன் ராதா)

20) வான் மலர்ச் சோலையிலே  (ரங்கோன் ராதா)

21)தமிழ்த் தேனே..கண்ணே தாலேலோ (ரங்கோன் ராதா)

22)மணிப்புறா..புது மணிப்புறா (ராஜா ராணி)

23) வேலை இல்லாத தொல்லை (ராஜா ராணி)

24) ஆழி சூழ் உலகம்(ராஜா ராணி)

25)வாங்க..வாங்க..எல்லோரும் வாங்க..(ராஜா ராணி)

26)கண்ணற்ற தகப்பனுக்குப் பெண்ணாக (ராஜா ராணி)

27)அலையிருக்குது கடலிலே..ஆசையிருக்கிறது உடலிலே (ராஜா ராணி)

28)வெல்க நாடு  வெல்க நாடு..வெல்க..வெல்கவே (காஞ்சித்தலைவன்)

29)நீர்மேல் நடக்கலாம்..நெருப்பிலே நடக்கலாம் (காஞ்சித் தலைவன்)

30)வாழ்க்கை எனும் ஓடம்  (பூம்புகார்)

31)கன்னம்  கன்னம்..சந்தனக் கிண்ணம் (பூமாலை)

32)ஒன்று கொடுத்தா ஒன்பது கிடைக்கும் (மறக்க முடியுமா?)

33) காகித ஓடம் கடலலை மீது (மறக்கமுடியுமா/)

34)நெஞ்சுக்கு நீதியும்..தோளுக்கு வாளும் (நெஞ்சுக்கு நீதி)

35)குடி உயர கோல் உயரும் (தூக்கு மேடை)

36)ஆயிரம் பிறைகள் காணும் வரை (தூக்குமேடை)

37)குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்கிறது (தூக்குமேடை)

38)ஒரு பேரொளியின் பயணமிது (தூக்குமேடை)

39)சுருளி மீசைக்காரண்டி (வீரன் வேலுதம்பி)

40)ஆடி அமரக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு

Thursday, July 2, 2020

# TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 10 - லதா



பொன்னியின் செல்வன் தொடர் முதன் முதலாகக் கல்கியில் வந்த போது..கல்கியின் எழுத்தையும், அதனுடன் அதற்கான மணியம் அவர்களின் ஓவியங்களுடன் ஒன்றிப் போனார்கள் அன்றைய கல்கி வாசகர்கள்.

அதுபோல சில பிரபல எழுத்தாளர்கள் கதையென்றால் அதற்கு ஓவியம் இவராகத்தான் இருக்க வேண்டும் என்பது அந்தநாளின் பத்திரிகை ஆசிரியர்களின் விருப்பமாகவும் இருந்தது..வாசகனின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

எழுத்தாளர் சாண்டில்யனின் இயற்பெயர் பாஷ்யம் ஐயங்கார். அவர் எழுத்துக்கு என்று அமைந்து போன பத்திரிகிய குமுதம் எனலாம். முன்னதாக அவர் அமுதசுரபி இதழில் "ஜீவ பூமி".மலைவாசல்" அகியத்தொடர்களை எழுதியிருந்தாலும்..காலத்தால் மறக்கமுடியா அவரின் தொடர்கள்
கன்னிமாடம், கடல் புறா,யவன ராணி  போன்றவை.

இவரின் தொடர்களுக்கு ஓவியம் வரைந்தவர் லதா ஆவார்.இந்த கூட்டனி ரசிகர்கள் விரும்பிய கூட்டனி.சாண்டில்யனின் வர்ணனைகளுக்கேற்ப லதாவைத் தவிர வேறொருவரின் ஓவியத்தை நினைத்துக் கூட பார்க்கமுடியா அளவிற்கு லதாவின் ஓவியங்கள் இருந்தன என்றால் மிகையில்லை.

சாண்டில்யன் வர்ணித்த மஞ்சள் அழகியை ஓவியமாகத் தீட்டி..இன்னமும் நம்மை மறக்கமுடியாமல் ஆக்கிய லதா பாராட்டுக்குரியவர்.







Wednesday, July 1, 2020

#TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 9 -சித்ரலேகா



ஆனந்த விகடனில் அந்தக் காலக்கட்டத்தில் பிரபல் ஓவியர்கள் பட்டாளமே இருந்தது.

மாலி தலைமையில், சில்பி,கோபுலு, ஸாரதி,ராஜூ,ஸிம்ஹா,வாணி .இவர்களுடன் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஓவியர் சித்ரலேகா ஆவார்.

நாராயணசாமி எனும் இயற் பெயர் கொண்ட இவர்..இதிகாச, சரித்திர நாயகர்களின் ஓவியங்கள் வரைவதில் மிகவும் திறமைசாலியாய் இருந்தார்.

விகடனில் பி.ஸ்ரீ.எழுதிய "சித்திர ராமாயணம்" என்ற தொடருக்கு இராமாயணக் காட்சிகளை அருமையான சித்திரங்களாக வரைந்தார் இவர்.

கி.வா ஜ...விகடனில் எழுதிய இலக்கியச் சித்திரத் தொடர் "சித்திர மேகலை" என்ற பெயரில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை 40 வாரங்களுக்குத் தொடராக எழுதினார்.அதற்கு சித்ரலேகா தான் ஓவியர்.

அவர் வரிந்த ஒவியங்களை இணைத்துள்ளேன்.

சித்திரலேலாவின் மகன் நா.ராஜேந்திரன், கும்பகோணம் காந்தி பூங்காவிற்கு வடக்கேயுள்ள வெங்கட்ரமணா ஹோட்டலில் அன்றாட மெனுவிற்கான பலகையில் பல ஓவியங்களை தினசரித் தீட்டி பார்வையாளர்களை கவர்ந்து வருவதாக ஒரு செய்தி கூறுகிறது.

Tuesday, June 30, 2020

#TVR தமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் -8



1928ல் பிறந்தவர் வெங்கட் ரமணி.

இவரது1953ஆம் ஆண்டு கோவிந்தன் எனும் இவர் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு திருவாரூர் சென்ற இவர் தாத்தாவிடம் Joy this year.Boy next year ' என்று அலங்கார எழுத்துகளில் ஒரு வாழ்த்துமடலை எழுதி கோவிந்தனிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.

அந்தத் திருமணத்திற்கு விகடன் அதிபர் எஸ் எஸ் வாசனும் சென்றிருந்தார்.அவரிடம் தாத்தா நடேச ஐயர், பேறன் வரைந்திருந்த அழைப்பிதழினைக் காட்டி.."ஏன் பேரன் எழுதியது..எவ்வளவு அழகாக எழுதியிருக்கின்றான் பாருங்கள்" என்று சொன்னதுடன் நிற்காது, "அவனுக்கு உங்க விகடனில் ஒரு வேலைப் போட்டுத் தாருங்களேன்" என்றிருக்கிறார்.

வாசனும், "அதற்கென்ன ..கொடுத்தால் போயிற்று..நாளைக்கு காலை 8 மணிக்கு அனுப்பி வையுங்க" என்றுருக்கிறார்.

உடனே தாத்தா..பேரனுக்கு தந்தையடித்து..வரச் சொல்ல, வெங்கட் ரமணியும் வந்தார்..

அவரைப் பார்த்த வாசன்,''உன் படங்கள் எல்லாம் பார்த்தேன். நன்றாக இருந்தது. தேவனிடம் சொல்லியிருக்கிறேன். நீ நேரே ஆனந்த விகடன் ஆபீசுக்குப் போய் தேவனைப் பார்!'' என்றார் .

அங்கு,தேவனின் அறைக்கு. சற்றுத் தள்ளி ஒரு ஷெட்டில் கோபுலு, சித்ரலேகா, சில்பி, சிம்ஹா, ஸாரதி ஆகிய ஓவியர்கள் இருந்தார்கள். அங்கேயே இவருக்கும் ஒரு மேஜை, நாற்காலி போட்டுக் கொடுத்தார்கள். சுற்றி இருந்தவர்களோ ஓவிய உலகில் பெரிய ஜாம்பவான்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு கொசு மாதிரி இவர் ஒடுங்கி உட்கார்ந்தார்.

இவர் பெயர் வெங்கடரமணி என்பதால், 'ரமணி’ என்ற பெயரில் அந்தப் படத்தை வரைந்திருந்தார். ஆனால், அந்தக் காலத்தில் ரமணி என்று வேறு ஒரு புகழ்பெற்ற ஓவியர் இருந்தார். அவர் பெயர் சுப்பிரமணி. அவர் சுப்பு என்ற பெயரிலும், ரமணி என்ற பெயரிலும் படங்கள் வரைவார். அதனால், இவரை வேறு பெயரில் வரையச் சொன்னார் தேவன். 

''நீங்களே ஏதாவது பெயர் சொல்லுங்களேன், சார்!'' என்று கேட்டார் இவர்.உடன் இவரின் ஆங்கிலப் பெயரில் முதல் எழுத்தையும் கடைசி மூன்று எழுத்துக்களையும் சேர்த்து, வாணி என்று வைத்துவிட்டார்



சில்பி இவர் படம் வரைவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருப்பாராம். அவர் பார்க்கிறார் என்று தெரிந்ததும் இவருக்கு உள்ளுக்குள் உதறலாக இருக்கும். ஒரு நாள் அவர் இவரைக் கூப்பிட்டு, ''எத்தனை நாளைக்குத்தான் ரூமுக்குள்ளேயே இருந்து வரைவாய்? வெளியே நாலு இடங்களுக்குப் போய் நேரடியாகப் பார்த்து லைஃப் ஸ்கெட்ச் பண்ணு. அப்பத்தான் கை பழகும்'' என்று சொன்னாராம்.. அதன்படியே விகடன் அலுவலகத்தில் அலவன்ஸ் வாங்கிக் கொண்டு வெளியே போய் வரையத் தொடங்கினார். வரைந்ததை மறுநாள் ஓவியர் கோபுலுவிடம் கொண்டு வந்து காண்பிப்பார். அவர் இன்னின்ன இடத்தில் இப்படி வரையணும் என்று சொல்லிக் கொடுத்துத் திருத்தித் தருவாராம்..

ஆர்ட்ஸ் ஸ்கூல் எதிலும் சேர்ந்து இவர் படிக்கவில்லை.சித்திரமும் கைப் பழக்கம் என்பது இவருக்கு சரியாய் இருக்கும்


எங்கே படம் வரையச் சென்றாலும், சில்பிஇவரையும் உடன் அழைத்துப் போவார். அவர் வரைவதை அருகிலிருந்து கவனிக்கச் சொல்வார். கரன்ட் கம்பம், எருமை மாடு, சைக்கிள் ரிக்ஷா என்று கண்ணில் பட்டதையெல்லாம் வரையச் சொல்வார். 'சைக்கிள் ரிக்ஷா தலைகீழாகப் புரண்டிருந்தால் எப்படி இருக்கும்னு வரை, பார்க்கலாம்!’ என்பார்.

'என்ன சார் இது, எப்படி வரைய முடியும்?’ என்பார் வாணி புரியாமல்.

 'சைக்கிள் ரிக்க்ஷா அடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு வரை!’ என்பாராம் சில்பி.. 'ஒரு கதையில் இருவர் சைக்கிள் ரிக்க்ஷாவில் போகும்போது விபத்து ஏற்பட்டு, ரிக்க்ஷா உருண்டு புரண்டுவிட்டது என்று சீன் வந்தால் எப்படி வரைவாய்? அதனால், இப்போதே  வரைந்து பழகிக்கொள்ள வேண்டும்’ என்பாராம். அதே போல், 'ஒரு சிம்னி விளக்கை வரைவதானால், வெறுமே அதை நேராக அப்படியே வரையாதே! படுக்கப்போட்டு வரை. முதுகுப்புறம் இருந்து வரை. இப்படிப் பல ஆங்கிளில் வரைந்தால்தான் அதன் உருவம் மனதில் பிடிபடும்’ என்பாராஒரு நாள் தேவன் இவரைக் கூப்பிட்டு, ஒரு சிறுகதைக்குப் படம் வரையச் சொன்னார். சித்தார்த்தன் என்கிற எழுத்தாளர் எழுதிய 'கோமதியின் நெஞ்சம்’ என்கிற கதை. அதை எடுத்துக்கொண்டு போய் கோபுலுவிடம் கொடுத்து, ''சார், இதுக்கு என்னைப் படம் போடச் சொல்லியிருக்கிறார். எப்படிப் போடணும்னு சொல்லித் தாங்களேன்'' என்று கேட்டார் வாணி

 அவரும் ரஃப் ஸ்கெட்ச் செய்து காண்பித்து, ''இப்படிப் போடு'' என்று ஐடியா கொடுத்தார்.

அதை அப்படியே வாங்கி, அதன் மீதே அழகாக வரைந்து எடுத்துக்கொண்டு போய் தேவனிடம் கொடுத்தார் ''பிரமாதமா வரைஞ்சிருக்கியே!'' என்று பாராட்டினார். அந்த வார ஆனந்த விகடனில் அந்தப் படம் பிரசுரமாயிற்று. ஆனந்த விகடனில் இவர்வரைந்த முதல் படம் அது.

பின்னர் வாணிக்கு ஏறுமுகம்தான்.

தொடர்கதைகள்,சிறுகதைகள்,இவரே ஜோக்ஸ் எழுதி வரைந்த ஓவியங்கள் என விகடனை அலங்ககரிக்கத் தொடங்கின இவரது ஓவியங்கள்.மணியன்,மெரீனா உட்பட பல பிரபலங்களின் படைப்புகளுக்கு இவர் ஓவியம் வரைந்தார்
.

விகடன் வளர்ச்சிக்கு எழுத்தாளர்கள் மட்டுமின்றி..ஓவியர்களும் பெரும் பங்குப் பெற்றனர் என்பதற்கு வாணியும் ஒரு உதாரணம் ஆகும்.
2017ஆம் ஆண்டு அமரர் ஆனார்.

Sunday, June 28, 2020

#TVR தமிழ் இதழை அலங்கரித்த ஓவியர்கள் 7- மாலி

மாலி என்று அறியப்பட்ட மூத்த ஓவியராய் திகழப்பட்ட மகாலிங்கம் ஆனந்த விகடனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

ஆனந்த விகடன் என்பது எப்படிப்பட்ட பத்திரிகை..அதன் காரெக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்றுவரை நம் கைகளில் தவழும் விகடனுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தவர் இவர்தான்.

ஸ்ரீனிவாசன் என்பவரை சில்பியாக மாற்றியவர் இவர்

கோபாலனை, கோபுலுவாக்கியவர் இவர்

நாராயணசாமியை ராஜு என்று ஆக்கியவர்

கிருஷ்ணமூர்த்தி என்பவரை வாண்டுமாமா ( கௌசிகன்) வாக்கி பல குழந்தைகளுக்கான சித்திரக்கதைகளை எழுத வைத்தவர்.

மாலி, அரசியல், சித்திரம், ஃபோட்டோ,நேர்காணல் என அணைத்திலும் திறமையுடையவராய்த் திகழ்ந்தார்.

பிரபல கவிஞர் வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.சிறுவயதில் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவராய்த் திகழ்ந்த இவர்...மாலியின்மீது உள்ள ஆர்வத்தில் அவரைப் போல ஆகவேண்டும் என எண்ணி
தன் நண்பன் சொல்லியபடி தன் பெயரை வாலி என மாற்றிக் கொண்டார்

மாலி,உயிரும், உணர்ச்சியும் கொண்ட சித்திரங்களைப் போல கர்நாடக சங்கீத வித்வான்களை நம் கண்முன் நிறுத்தியவர் ஆவார்,இதற்குமுன் எந்த தமிழ் இதழ்களிலும் இப்படிப்பட்ட ஓவியங்கள் வந்ததில்லை எனலாம்.

27-3-1928ல் சி வி மார்கன் ஒரு ஜோக்கர் விகடனார் படத்தை வரைந்தார்.அதுதான் இன்றைய விகடன் தாத்தாவின் முதல் ஓவியம் ஆகும்.அடுத்த ஆண்டு தாத்தாவின் உருவத்தில் லேசாக மாற்றம் செய்து அவரது நெற்றியில் இருந்த சந்தனத்துக்குப் பதிலாக விபூதி..குங்குமம் இடப்பட்டது.அவர்தான் "விகடனார்" என்பதற்கு அவரது சட்டையில்"ஆனந்த விகடன்" என எழுதப்பட்டது.

நான்கு மாதங்களுக்குப் பிறகு..விபூதி, குங்குமத்திற்குப் பதிலாக நாமம் வரையப்பட்டது..

1932ல் மாலி ஜோக்கர் தொப்பியை எடுத்துவிட்டு விகடனாரைக் குடுமி வைத்த தாத்தாவாக்கினார்.1933ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ஆம் நாள் உருவம் உருவானது.

இப்படி ஆனந்தவிகடன் என்றாலே..அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியா சக்தியாய் விளங்கியவர் மாலி ஆகும்.

Friday, June 26, 2020

#TVR தமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் - 6- கல்பனா



பல எழுத்தாளர்கள் படைக்கும் பாத்திரங்களை வர்ணிப்பதற்கேற்ப ஓவியங்களை வரைந்து, அவர்களின் படைப்புகளுக்கு அழ்கினை சேர்ப்பவர்கள் ஓவியர்கள்.

ஆனால், எழுத்தாளர்களை அறியும் நம்மால் அதேபோல  ஓவியர்களை அறிகிறோமா? என்பதற்கு, 'இல்லை" என்று வருத்த்ஸ்த்துடனேயே பதிலைத் தரவேண்டியுள்ளது.

அப்படி நாம் மறந்த ஒரு ஓவியர்..கல்கியில் ஓவியங்களை வரைந்து வந்த "கல்பனா" ஆவார்.

வினு வின் கலகட்டத்திலேயே இவரும் ஓவியங்களை வரிந்துள்ளார்.

ஜெகசிற்பியனின் "கிளிஞ்சல் கோபுரம்" "ஜீவ கீதம்"

உமாசந்திரனின்"முள்ளும் மலரும் " (பின்னர் இக்கதை திரைப்படமானபோது..காளி, வள்ளி பாத்திரத்தில் நடித்தவர்கள்..அப்படியே கல்பனாவின் ஓவியத்தில் இருந்தவர்களைப் போலவே இருந்தனர்)

கு அழகிரிசாமியின் "தீராத விளையாட்டு"

கல்கி ராஜேந்திரனின் "ஸைக்கோ சாரநாதன்"

ஆகிய தொடர்களுக்கு கல்பனா ஓவியம் வரைந்துள்ளார்.

அவரைப் பற்றிய அதிக விவரங்கள் தெரியவில்லை.ஏதேனும் புதிதாகத் தெரிந்தவர்கள்பின்னூட்டம் இட்டால்..அவற்றை பதில் சேர்த்துவிடுகின்றேன்.