Monday, July 30, 2018

நாடகப்பணியில் நான் - 17

இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் மூலம் அறிமுகமாகி வெள்ளிவிழா படங்களின் நாயகனாகத் திகழ்ந்தவர் ரவிச்சந்திரன் ஆவார்.

அவரும் ஒரு நாடகத்தில் நடித்துள்ளார்.

ஏதேனும் புதுமை என்றால் ,அது எப்படி இருக்கும் என்றும் பாராது முதலிலேயே ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நான்..அந்த நாடகம் குறித்து அறிவிப்பு வந்ததுமே, அதற்கான ஒத்திகை நடைபெறும் இடத்திற்குச் சென்றேன்.

எங்கு ஒத்திகை என்கிறீர்களா? அடையாறு காந்திநகரில்தான்.அன்று பிரபல வழக்குரைஞராகத் திகழ்ந்த நீதியரசரான அமரர் கே எஸ் பக்தவத்சலம் இல்லத்திற்குத்தான்.ஏனெனில் அந்நாடகத்திற்கு அவர்தான் தயாரிப்பாளர்.

அவர் நான் போனே அன்றே, அம்பத்தூரில் நடத்த தேதி கொடுத்தார்.

நாடகத்தின் பெயர் "பார்த்த ஞாபகம் இல்லையோ".ரவிச்சந்திரன் முன் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்க (கல்யாணராமன் கமல்போல) ஒரு அவலட்சண நாயகனாக நடித்தார்.

நாடகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றதா என்ற கேள்வியைவிட ரவிச்சந்திரன் நடித்தார் என்பதற்காகவே சபாக்கள் அனைத்திலும் போடப்பட்டது.

அதைத்தவிர்த்து அந்த நாடகத்தை சபாக்கள் ஆதரிக்கக் காரணம்..அந்நாடகத்தின் இயக்குநர் ஒய்ஜிபி அவர்களுடன் நீண்ட நாள் அவர் குழுவில் இருந்த பட்டு என்பதால்தான்,  

Sunday, July 29, 2018

நாடகப்பணியில் நான் - 16

எனது சபாவின் ஆண்டுவிழாவிற்கு சோ, மேஜர் நாடகங்களைப் போட்டதைச் சொன்னேன் அல்லவா?

அடுத்த ஆண்டுவிழாவை ஒரே நடிகரின்  நாடகங்களை நடத்த முடிவெடுத்தோம்.அதுவும் நகைச்சுவை நாடகங்களாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம்.

அந்த சமயத்தில் காத்தாடி ராமமூர்த்தி யின் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் , situation comedy யில் அரசனாகத் திகழ்ந்த கே கே ராமன்/சாரதிஎழுதிய நாடகங்களைப் போட்டு வந்தனர்.எல்லா நாடகங்களுமே மாபெரும் வெற்றி நாடகங்கள்

"Goodbye to Love", "Matchless Matches" "Run away Husband" படி தாண்டிய பதி ஆகிய நாடகங்களை ஏற்பாடு செய்தோம்.

முதல் மூன்று நாள் நாடகங்கள் மக்கள் மகிழ நடந்து முடிந்தது.மூன்றாம் நாள் நாடகம் நடக்கையில் ராமமூர்த்திக்கு சிறு காய்ச்சல்.

அவர் நிலை கண்டு நான், "வேண்டுமானால் அடுத்த நாள் நாடகத்தை கேன்சல் செய்யலாமா?" என்றேன்

"வேண்டாம்..வேண்டாம்...ஆண்டுவிழாவிற்கு என்னை நம்பி நாடகங்கள் போட்டு இருக்கிறாய்.நான் நடித்து கொடுக்கிறேன்" என்று அடுத்த நாள் நாடகத்தை மிகவும் இயலாத நிலையில் நடித்து முடித்தார்.

அடுத்து இருபது நாட்களுக்கு அவரால் நாடகம் போட இயலாமல் மஞ்சள்காமாலை"நோயால் பாதிக்கப்பட்டார்.

உடல்நிலையையும் பாராது மற்றவர்கள் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணிய காத்தாடியின் மனிதநேயம் இன்றும் என்னால் மறக்கமுடியாத ஒன்றாகும்

Saturday, July 28, 2018

நாடகப்பணியில் நான் - 15

"சோ" அவர்கள் என்னைக் கடிந்து கொண்ட நிகழ்ச்சி என்ன? என்ற ஆவலா...சொல்கிறேன்..

அதற்கு முன்..

எனது சபாவின் ஆண்டுவிழா நிகழ்விற்கு, நான் எழுதிய "Wanted a Bridegroom" , நாடகமும்

அடுத்து, திருவல்லிக்கேணியில் தேவனின் துப்பறியும் சாம்பு நாடகத்தில் சாம்புவாக நடித்து மக்களால் "சாம்பு"நடராஜன் என்று அழைக்கப்பட்டவருமான நடராஜ ஐயர் அவர்கள் என் எஸ் என் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவினை நடத்தி வந்தார்.அவர் நாடகங்களில் மேஜர் சுந்தரராஜன் நடித்து வந்தார்.அப்படி நடந்த நாடகங்களில் "டைகர் தாத்தாச்சாரி" என்ற நாடகமும்

மூன்றாவதாக சோ அவர்களின் "நேர்மை உறங்கும் நேரம்" நாடகமும் நடத்துவதாகத் தீர்மானித்தோம்.

எனது நாடகமும், சோ அவர்களின் நாடகமும் அம்பத்தூரிலும், மேஜரின் நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா அரங்கில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது

ஆண்டுவிழா நாள் என் நாடகம் சிறப்பாய் நடந்தது.அடுத்த நாள் திருவல்லிக்கேணியில் மேஜர் நாடகமும் நடந்தது.

மூன்றாம் நாள் சோ நாடகம் அம்பத்தூரில்.

நாடகத்தன்று காரில் வந்து இறங்கியவரை நான் வரவேற்றபோது, சற்றே கோபத்துடன் "என் கிட்டே பேசாதே! சோ உனக்குக் கிள்ளுக்கீரை ஆயிட்டான் இல்ல" என்றபடியே உள்ளே சென்றார்.

ரங்காச்சாரியிடம் காரணம் கேட்டேன்.அவர் "எனக்கு அது எல்லாம் தெரியாதுப்பா" என நழுவினார்.

நாடகம் முடிந்து நான் பணம் கொடுக்கச் சென்ற போது அவர்"நான் ஏன் கோபப்பட்டேன் தெரியுமா? இந்த சோ நாடகம் போட அம்பத்தூர் வரணும், ஆனால் மேஜர் நாடகத்தை சென்னையிலேயே நடத்துவ..இல்ல" என்றார்.

உடனே நான், 'சார்..உங்க நாடகம் இங்கே நடத்தினா எனக்கு கேட் கலெக்க்ஷன் இருக்கும்.ஆனா மேஜருக்கு இருக்காது.அதுவும் மேஜருக்கு அம்பத்தூர் நாடகத்திற்கு பணமும் அதிகம் தர வேண்டும்" என்றேன்.

என் பதிலால் சற்று சமாதானம் அடைந்தவர், எவ்வளவு கேட்? என்றார்.சொன்னேன்..

"சென்னையில் இதைவிட அதிகாக ஆகியிருக்கும்" என்று சொல்லி விட்டு...என் முதுகில் தட்டி"சும்மா கோபப்பட்டேன்..எனக்கு உன் மேல கோபமே இல்லை" என்றார்.

சோ வின் குழந்தை உள்ளத்தைக் கண்டு மகிழ்ந்தேன்

Friday, July 27, 2018

நாடகப்பணியில் நான் - 14

"சோ" அவர்கள் என்னைக் கடிந்து கொண்ட நிகழ்ச்சி என்ன? என்ற ஆவலா...சொல்கிறேன்..
அதற்கு முன்..
எனது சபாவின் ஆண்டுவிழா நிகழ்விற்கு, நான் எழுதிய "Wanted a Bridegroom" , நாடகமும்

அடுத்து, திருவல்லிக்கேணியில் தேவனின் துப்பறியும் சாம்பு நாடகத்தில் சாம்புவாக நடித்து மக்களால் "சாம்பு"நடராஜன் என்று அழைக்கப்பட்டவருமான நடராஜ ஐயர் அவர்கள் என் எஸ் என் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவினை நடத்தி வந்தார்.அவர் நாடகங்களில் மேஜர் சுந்தரராஜன் நடித்து வந்தார்.அப்படி நடந்த நாடகங்களில் "டைகர் தாத்தாச்சாரி" என்ற நாடகமும்

மூன்றாவதாக சோ அவர்களின் "நேர்மை உறங்கும் நேரம்" நாடகமும் நடத்துவதாகத் தீர்மானித்தோம்.

எனது நாடகமும், சோ அவர்களின் நாடகமும் அம்பத்தூரிலும், மேஜரின் நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா அரங்கில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது

ஆண்டுவிழா நாள் என் நாடகம் சிறப்பாய் நடந்தது.அடுத்த நாள் திருவல்லிக்கேணியில் மேஜர் நாடகமும் நடந்தது.

மூன்றாம் நாள் சோ நாடகம் அம்பத்தூரில்.

நாடகத்தன்று காரில் வந்து இறங்கியவரை நான் வரவேற்றபோது, சற்றே கோபத்துடன் "என் கிட்டே பேசாதே! சோ உனக்குக் கிள்ளுக்கீரை ஆயிட்டான் இல்ல" என்றபடியே உள்ளே சென்றார்.

ரங்காச்சாரியிடம் காரணம் கேட்டேன்.அவர் "எனக்கு அது எல்லாம் தெரியாதுப்பா" என நழுவினார்.

நாடகம் முடிந்து நான் பணம் கொடுக்கச் சென்ற போது அவர்"நான் ஏன் கோபப்பட்டேன் தெரியுமா? இந்த சோ நாடகம் போட அம்பத்தூர் வரணும், ஆனால் மேஜர் நாடகத்தை சென்னையிலேயே நடத்துவ..இல்ல" என்றார்.

உடனே நான், 'சார்..உங்க நாடகம் இங்கே நடத்தினா எனக்கு கேட் கலெக்க்ஷன் இருக்கும்.ஆனா மேஜருக்கு இருக்காது.அதுவும் மேஜருக்கு அம்பத்தூர் நாடகத்திற்கு பணமும் அதிகம் தர வேண்டும்" என்றேன்.

என் பதிலால் சற்று சமாதானம் அடைந்தவர், எவ்வளவு கேட்? என்றார்.சொன்னேன்..

"சென்னையில் இதைவிட அதிகாக ஆகியிருக்கும்" என்று சொல்லி விட்டு...என் முதுகில் தட்டி"சும்மா கோபப்பட்டேன்..எனக்கு உன் மேல கோபமே இல்லை" என்றார்.

சோ வின் குழந்தை உள்ளத்தைக் கண்டு மகிழ்ந்தேன்


Tuesday, July 24, 2018

நாடகப்பணியில் நான் - 13

ரங்காச்சாரி சொன்னது போல அன்று மாலை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கிற்குச் சென்றேன்.

சோ மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்.என்னை சோ விடம் அறிமுகப்படுத்தி விட்டு ரங்காச்சாரி , அம்பத்தூரில் அவரது சபாவிற்கு நம்ம "யாருக்கும் வெட்கமில்லை" நாடகத்தைப் போட தேதி கேட்கிறார் என்றார்.

சோ உடன் என்னிடம் அம்பத்தூரில் பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் செய்ய முடியுமா? என்றார்.

நானும் கண்டிப்பாக செய்து தருவதாகக் கூறினேன்

உடன் , அவர் தன் குழுவினைச் சேர்ந்த திரு எஸ் வி சங்கரனிடம் , "என்ன தேதி கொடுத்திடலாமா?" என்றார். பின் ஒரு ஞாயிற்றுக் கிழமை நடத்தித் தருவதாகக் கூறி, ரங்காச்சாரியிடம் தேதி கொடுக்கச் சொன்னார்

அம்பத்தூரில் நாடகம் போட வரும் குழுவினருக்கு சென்னையில் கொடுக்கப்படும் சன்மானத்தைத் தவிர வண்டி வாடகை என அதிகப்படியாகக் கொடுப்பதுண்டு.அதை மனதில் வைத்து நான் , "எவ்வளவு ரெம்யூனரேஷன் கொடுக்கணும்?" என்றேன்.

அதற்கு சோ "நான் கேட்டதைக் கொடுப்பியா..அப்ப பத்தாயிரம் கொடுத்துடு" என்றவர், பின் சிரித்தபடியே ரங்காச்சாரியிடம், சென்னையில் வாங்கும் பணமே வாங்கிக் கொள் என்றார்.

அது எவ்வளவு என நினைக்கிறீர்கள்? ஆயிரம் ரூபாய் அவ்வளவுதான்

நாடகத்தன்று கணக்கில் அடங்காக் கூட்டம்.அதிகப்படியான நாற்காலிகள் போட்டேன்.கிட்டத்தட்ட கேட் கலெக்க்ஷன் இரண்டாயிரம் ஆனதாக ஞாபகம்.

பாதுகாப்பாக 4 போலீஸே வந்து விட்டது.

நாடகம் முடிந்ததும்  சோ, "என்ன சந்தோசமா" என்றார்.மிகவும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினேன்

பின் தொடர்ந்து அவரது நாடகங்களை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டேன்

அப்படிப்பட்ட சோ வும், ஒருமுறை நாடகத்தன்று என்னைக் கூப்பிட்டு கடிந்து கொண்டார்?

அது ஏன்? அப்படி என்ன தவறு இழைத்தேன் நான்..

விவரங்கள் அடுத்த பதிவில்

(தொடரும்)

நாடகப்பணியில் நான் - 12

முந்தைய பதிவில் எம் ஆர் ராதா பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.
இனி சோ அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்.
என்னுடன் ஸ்டேட் பேங்கில் ஜெயசந்திரன் என்னும் நண்பர் பணி புரிந்து வந்தார்.அவரிடம் என் சபா குறித்து நான் அவ்வப்போது பேசுவேன்.
அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், சோ வின் அப்போதைய நாடகம் "யாருக்கும் வெட்கமில்லை" பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.அவர் நாடகம் நடக்கையில் வேண்டுமென்றே அன்றைய அரசால் மின் வெட்டு எற்படும்.கலாட்டா நடக்கும்
நான் ஜெயச்ந்திரனிடம், "என் சபாவில் சோ வின் நாடகம் நடத்த வேண்டும்.இந்த சமயத்தில் தெரிந்தவர் யாரேனும் சொன்னால்தான் சோ அம்பத்தூரில் தேதி தருவார்" என்றேன்.
உடனே அவர், உணவு இடவேளையில் "வா..கொஞ்சம் வெளியே போயிட்டு வருவோம்" என்றார்.
நானும் அவருடன் கிளம்பினேன். நேராக பீச் ஸ்டேஷன் எதிரே இருந்த ஹாங்காங் வங்கிக்குச் சென்றார்.அங்கு ஒரு நண்பருடன் பேசினார்.பின் என்னைக் கூப்பிட்டு அந்த நண்பருக்கு அறிமுகம் செய்தார்.
அந்த நண்பர் "ஓகே! மாலை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நாடகம் இருக்கிறது .அங்கே வாருங்கள்.தேதி ஃபைனலைஸ் பண்ணிடலாம் " என்றார்.
அன்று அறிமுகமான அந்த நண்பருடன், இறுதிகாலம் வரை என் நட்பு தொடர்ந்தது
அவர் "ரங்காச்சாரி" .சோ வின் நெருங்கிய நண்பர்.விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் தேதிகள் அவரே கொடுத்து வந்தார்.
மிகவும் எளிமையானவர்.ஒருவரிடம் நட்பு பாராட்டி விட்டால் கடைசிவரை அந்நட்பைப் பேணிக் காப்பவர்.
அன்று மாலை நான் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சென்றேனா? சோ வை சந்தித்தேனா? அம்பத்தூரில் சபாவிற்கு தேதி கிடைத்ததா? 
அடுத்த பதிவில்.

(தொடரும்)


'சோ' வும்..அவரது கோபமும்

நான் அம்பத்தூரில் சபா நடத்திக் கொண்டிருந்த நேரம்.சமீபத்தில் 1974ல்(டோண்டு சார்..தாக்கம்)எனது சபாவின்
ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு..மேஜர் சுந்தரராஜனின் 'டைகர் தாத்தாச்சாரி'நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா ஹாலிலும்,'சோ'வின் 'யாருக்கும் வெட்கமில்லை' அம்பத்தூரிலும்(சென்னையிலிருந்து அம்பத்தூர்16km தூரம்)ஏற்பாடு செய்திருந்தேன்.முதல் நாள் நாடகம் முடிந்தது.அடுத்த நாள் 'சோ'நாடகம்.
6 மணி அளவில் அம்பத்தூர் வந்த "சோ' வை வரவேற்றேன்.காரிலிருந்து இறங்கிய அவர் என்னைப் பார்த்ததும்
முகத்தை திருப்பிக் கொண்டார்..சிறிது நேரம் கழித்து என்னைகூப்பிட்டு,கோபமாக"சோ உனக்கு கிள்ளுக்கீரையா?"
என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவரே தொடர்ந்தார்'மேஜர் நாடகம் சென்னையில்..என் நாடகம் இவ்வளவு
தொலைவில்"என்றார்.அப்போதுதான் அவர் கோபத்துக்கான காரணம் தெரிந்தது.நான் சொன்னேன்'மேஜருக்கு இங்கு
gate collection இருக்காது..ஆனால் உங்களுக்கு இருக்கும்.அந்த collection ஐ வைத்து என் சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.அதனால்தான்'.அவர் பின் என்னிடம் ஏதும் பேசவில்லை.
நாடகத்திற்கு நல்ல கூட்டம்..நல்ல வசூல்..
நாடகம் முடிந்ததும் என்னை கூப்பிட்டார்.."எவ்வளவு gate collection என்றார்.சொன்னேன்(3000 என்று ஞாபகம்.அது அந்த காலத்தில் பெரிய அமௌண்ட்)'
சென்னையில் போட்டிருந்தால்..இன்னும் அதிகம் இருக்கும்..என்றவர்..தன் நாடகக்குழு நிர்வாகி திரு.ரங்காச்சாரி யை கூப்பிட்டு நம் city rate1000 வாங்கிக்கொள் போதும் என்றார்.(அம்பத்தூருக்கு குழு வந்த செலவே அதிகமிருக்கும்)
சோ விற்கு திடீரென கோபம் வரும்..வந்த வேகத்தில் மறையும் என்று ரங்காச்சாரி என்னிடம் கூறினார்.அவர் சொல்ல மறந்தது சோ பெருந்தன்மையானவர் என்பதை.

Saturday, July 21, 2018

நாடகப்பணியில் நான் - 11

1973ல்  தொடங்கப்பட்ட " Ambattur Cultural Academy" 1978 வரை நாடகங்களை தன் உறுப்பினர்களுக்கு அளித்தது.

கிட்டத்தட்ட 75 நிகழ்ச்சிகள்..எவ்வளவு பிரபலங்களின் தொடர்பு...எவ்வளவு மனம் நெகிழ்வு கொண்ட நிகழ்வுகள்.

என்னால் மறக்கமுடியா நிகழ்ச்சிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நடிகவேள் எம் ஆர் ராதாவின் "ரத்தக்கண்ணீர்" நாடகத்தை ,
அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சில நாட்களில் அம்பத்தூரில் நடத்தினேன்.
அது பற்றி ஒரு குறிப்பு..

நானும்..நடிகவேள் ராதாவும்..ரத்தக்கண்ணீரும்

M.G.R.,சுடப்பட்டதும்..ராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகவும் வழக்கு நடந்து ..ராதாவும் தண்டிக்கப்பட்டு
சிறையிலிருந்து வெளிவந்த நேரம்.,ராதா அண்ணாமலைபுரத்தில் அவரது இல்லத்தில் தங்கியிருநதார்.மூட்டுவலியால்
அவதிப்பட்டு வந்தார்.

அந்த சமயத்தில்..எனது சபாவில் அவரது ரத்தக்கண்ணீர் நாடகம் போட்டால் என்ன..என்ற எண்ணம் தோன்ற
அவரை அவரது இல்லத்தில் சந்தித்து தேதி கேட்டேன்.

என்னைப்பற்றி விசாரித்தார்.நான் state bankல் வேலை
செய்வதாகவும்..அம்பத்தூரில் 2 வருடங்களாக சபா நடத்திவருவதாகவும் கூறினேன்.

அவர் உடனே'தம்பி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்களே..என்று சொல்லிவிட்டு 'நீங்க என்ன ஜாதி" என்றார்.

எனக்கோ..இப்படி "பட்" டென்று கேட்கிறாரே..என ஆச்சர்யம்.உடன் சொன்னேன்.சரி என்றவர்..நாடகத்திற்கான
தேதியும் கொடுத்தார்.

ஒரு பெரிய கண்ணை கலரில் வரைந்து..அதிலிருந்து ரத்த நிறத்தில் கண்ணீர்த்துளிகள் வருவதுபோல..பிரமாதமாக
சுவரொட்டி போட்டு அம்பத்தூர் தெருக்களில் ஒட்டினேன்.

பின்னர்தான்..அதுபோல சுவரொட்டிகள் சென்னை சபாக்களில் அவர் நாடகம் போட்டபோது..போடப்பட்டன.

நாடகத்தன்று..காலையிலிருந்தே என் வீட்டிற்கு மக்கள் டிக்கட் வாங்க படையெடுத்தனர்.

மாலை...நாடகம் ஆரம்பிக்கும் நேரம் ராதா என்னைகூப்பிட்டு..இடைவேளையில் எனக்கு ஒரு மாலை போடு என்றார்.

நானும் சரி என தலையாட்டிவிட்டு....இவர் மரியாதையை கேட்டு வாங்குகிறாரே என எண்ணிக்கோண்டேன்.

இடைவேளையில்..சபா சார்பில் மாலை அணிவித்தேன்.பின் அவர் பேசினார்..
'M.G.R.,பற்றி குறிப்பிடும்போது மக்கள் கை தட்டினர்.சிவாஜி பற்றி குறிப்பிடும்போது வாளா யிருந்தனர்.ஏன்..இவருக்கு கை தட்டக்கூடாதா..என்றார்..பிறகு என்னைப்பற்றிக் குறிப்பிட்டார்.'இந்த பையன்.(என் ஜாதியை குறிப்பிட்டு) இந்த ஜாதி..ஆனாலும் தைர்யமா என் நாடகம் போடறான்..என்னை தெரிஞ்சவங்கக்கூட இப்போ
என்னைப்பார்க்கிறதை தவிர்க்கும்பொது ........ர ஜாதிப்பையன் தைர்யமா வந்து நாடகம் போடறியான்னு கேட்டான்.

அவனை பாராட்டறேன்னு சொல்லிவிட்டு தன் கழுத்தில் இருந்த நான் போட்ட மாலையை கழட்டி எனக்கு அணிவித்தார்.

என்னைப்பாராட்டத்தான்..இடைவேளையில் மாலை போட சொல்லியிருக்கிறார்.
அவரை தப்பாக நினைத்து விட்டோமே என எண்ணினேன்.

பின்..பல சபாக்களில் நாடகம் தொடர்ந்தது.ஆனாலும் சிறையிலிருந்து வந்ததும் முதலில் போடப்பட்டது எனக்குத்தான் என்ற இறுமாப்பு இன்றும் எனக்கு உண்டு.

அடுத்து சோ அவர்களுடன் ஆன என் அனுபவம்..

(தொடரும்)

Friday, July 20, 2018

நாடகப்பணியில் நான் - 10

"youngsters Cultural Association" என்ற எங்களது Association ன் தூண்களில் மூன்று தூண்கள் விட்டுவிட்டு சென்றுவிட்டதும், எஞ்சியிருந்த ஒரேதூணான என்னால் தொடர்ந்து நடத்தமுடியா நிலையில் அக்குழு தானாகவே மடிந்தது.

பின் சில காலம் நானும் என் அலுவலகம் உண்டு வீடு உண்டு என இருந்து விட்டேன்.

ஆனால் அவ்வப்போது நாடகத்தின் மீதான என் ஆர்வம் தலைதூக்கும்.அந்த ஆர்வம் ஒரு சபாவை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த, சில நண்பர்கள் உதவியுடன் , வீடு வீடாக சென்று வருடம் 150 ரூபாய் சந்தா.வருடம் 15 நிகழ்ச்சிகள் உத்தரவாதம் எனக் கூறி அங்கத்தினர்களைச் சேர்த்தேன்.

அம்பத்தூர் டி ஐ சைக்கிள் நிறுவனத்தில் personnel Manager ஆக இருந்த திரு எஸ்.பஞ்சாபகேசன் அவர்களைத் தலைவராகக் கொண்டும், என்னை செகரட்டரி ஆகக் கொண்டும் ஆகஸ்ட் 1973ஆம் நாள் அம்பத்தூர் கல்சுரல் அகடெமி என்ற பெயரில் சபாவின் துவக்கவிழா நடந்தது.

அன்றைய உயர்நீதிமன்ற நீதிபதியாய் இருந்த மாண்புமிகு சதாசிவம் அவர்கள் தலைமையில், நடிகர் வி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் சபா தொடங்கியது.

பொதுவாக ஏ ஜிஸ் ஆஃபீஸ், தலைமைச் செயலகம், வங்கிகள் ஆகியவற்றில் வேலை செய்துவருபவர்களே பெரும்பாலும் நாடகக் கலைஞர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.அப்படி ரிசர்வ் வங்கியில் வேலை செய்து வந்த ஒருவர் கீதா ஸ்டேஜ் என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தார்.அவர் "கல்யாணத்தில் கலாட்டா" என்ற நாடகத்தை நடத்தி வந்தார்.
அவர் அனைவராலும் ராது என அறியப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவர் ஆவார்.

அவரது "கல்யாணத்தில் கலாட்டா" நாடகம் எங்களது முதல் நாடகமாக அமைந்தது.அந்நாடகத்திற்கு நான் அளித்த சன்மானம் ரூ 450/-

அன்று எனக்கும் ராதுவிற்கும் ஏற்பட்ட நட்பு அவரின் இறுதி நாட்கள் வரை நீடித்தது.

அடுத்து சபா நிகழ்ச்சிகளும், அதன் மூலம் எனக்கு தெரியவந்த பிரபலங்கள் பற்றியும் இனி வரும் பதிவுகளில்.

(தொடரும்)   

Tuesday, July 17, 2018

நாடகப்பணியில் நான் - 9

மௌலி, யூ ஏ ஏ குழுவில் busy ஆகிவிட்டார்.

எங்கள் youngsters cultural association ஆண்டுவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது.

இவ்வாண்டு என்ன நாடகம் போடலாம்? என் தீர்மானிக்க நண்பர்கள் ஒன்று கூடினோம்.

மௌலி ."இந்த ஆண்டு விசு நமக்காக ஒரு நாடகம் எழுதுவார்" என்றார்.விசுவும் சம்மதித்தார்.

விசுவின் பேனா எழுதிய முதல் நாடகம்"யார் குற்றவாளி" ஒரு திரில்லர் .

இதில் விசு முக்கியப்பாத்திரம் ஏற்க, நானும், சீதாராமன் என்ற நண்பரும் நகைச்சுவை வேடம் ஏற்றோம்.மௌலி, தன் வழக்கத்திற்கு மாறாக ஒரு முக்கிய குணச்சித்தர வேடம் (வேலைக்காரன்) ஏற்றார்.

நாடகம் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சபா அரங்கில் நடந்தது.

ஒய் ஜி பி, திருமதி ஒய் ஜி பி, லட்சுமி ஆகியோர் நாடகத்திற்கு வருகை புரிந்தனர்.

இந்நிலையில், விசு தனக்கென "விஸ்வசாந்தி" என்ற குழுவினை நிறுவி நாடகங்கள் போட ஆரம்பித்தார்.

நண்பர்கள் அனைவரும் சென்னைக்குக் குடி பெயர்ந்தனர்.

குடும்ப சூழ்நிலை, குடும்ப பொறுப்புகள் ஆகியவற்றினால் என்னால் அவர்களை பின் தொடர இயலவில்லை.

ஒருமுக்கிய சந்திப்பில், நாலுசாலைகள் பிரியும்போது, அவரவருக்கான சாலையைத் தேர்ந்தெடுத்து அவர்கள் செல்ல, நான் செய்வதறியாது நின்றேன் தனிமரமாக.

உண்மையைச் சொல்வதானால், இளமையில் வறுமை என்னைக் கட்டிப்போட்டது.என்னை கட்டாய ஓய்வில் வைத்தது.ஆனால், என் நண்பர்களின் முன்னேற்றம் மன மகிழ்ச்சியைத் தந்தது.

அடுத்து நான் என்ன செய்தேன்,,?

அடுத்த பதிவில்

(தொடரும்)


நாடகப்பணியில் நான் - 8

வாணிமகாலில் அரங்கேறிய எங்களது "BON VOYAGE" நாடகம் மௌலியின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்

1952ல் தன் நண்பர் பத்மநாபன் என்ற பட்டு வுடன் திரு ஒய் ஜி பார்த்தசாரதி அவர்கள் இணைந்து யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தார்.தமிழ் நாடகவுலகின் முதல் அமெச்சூர் குழு இதுதான் எனச் சொல்லலாம்.இன்றும் ஒய் ஜி மகேந்திரன் தொடர்ந்து நாடகம் நடத்தி வரும் இக்குழுவின் சிறப்பு என்னவெனில்..

பல பிரபல நட்சத்திரங்கள் இக்குழுவில் நடித்துள்ளனர்.பல பிரபலங்கள் உருவாகியுள்ளனர்.இன்றும் பல நாடகக் கலைஞர்களின் நதிமூலம் பார்த்தால் அதில் அக்குழுவின் பங்கு இருக்கும்

ஒய்ஜிபி தன் குழுவில் இளைஞர்களை அறிமுகப்படுத்த எண்ணினார்.அப்பொறுப்பை ஏ ஆர் ஸ்ரீனிவாசன் ஏற்றார்.
அவர் எங்களது "BON VOYAGE" நாடகத்தை அன்று பார்த்தார்.
மௌலியின் நகைச்சுவை எழுத்தும், நடிப்பும் பிடித்துப்போக அவரை யூ ஏஏ வில் சேர்த்துக் கொண்டார்.

அப்போது யூ ஏ ஏ வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "கண்ணன் வந்தான்" நாடகத்தை அரங்கேற்ற இருந்தனர்.அந்நாடகத்தின் நகைச்சுவைப் பகுதியை மௌலி ஏற்றார்.(இந்நாடகமே பின்னாளில் சிவாஜி நடிக்க கௌரவம் என்ற திரைப்படமாக வந்தது)

மௌலியின் graph  ஏறத்தொடங்கியது.மௌலியுடன் விசு, கணேஷ் ஆகியோரும் அக்குழுவில் இணைந்தனர்.

பின்னர் ஃப்ளைட் 172, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, பத்ம வியூகம், குருக்ஷேத்திரம் போன்ற நாடகங்களை யூ ஏ ஏ விற்காக மௌலி எழுதினார்.

ஆமாம்...அம்பத்தூரில் எங்களது "youngsters cultural association" நிலை என்னவாயிற்று?

அடுத்த பதிவில்.

(தொடரும்)

Sunday, July 15, 2018

நாடகப்பணியில் நான் - 7

அடுத்து உள்ளூரிலேயே கிணற்றுத்தவளையாய் சுற்றிக் கொண்டிருந்தால் போதாது என தீர்மானித்த நாங்கள் அம்பத்தூரைவிட்டு சென்னையில் ஒரு நாடகத்தை நடத்தத் தீர்மானித்தோம்.

என்ன நாடகம் போடுவது? என்ற கேள்வி எழுந்த போது, ஏற்கனவே ஒரு மணிநேர குறு நாடகத்தை, நடிகர்திலகம் ரசித்த நாடகத்தையே இரண்டுமணி நேரத்திற்குக் காட்சிகளை சேர்த்தால் என்ன? என எண்ணினோம்.

மௌலி அதற்கு ஒப்புக் கொண்டு, மேலும் சில நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து "BON VOYAGE"  என்ற பெயரில் முழு நேர நாடகமாக்கினார்

சென்னை வாணிமகாலை ஒருநாள் வாடகைக்கு எடுத்தோம்.டிக்கட்டுகளை விற்றோம். நாடகத்திற்கான போஸ்டர்களைப் போட்டோம்.இரவில் போஸ்டர்களை நாங்களே ஒட்டினோம்.
நாடகத்தை எம் ஆர் ராஜாமணி இயக்கினார்.

நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.ஸ்ரீனிவாசன். முன்னிலை ஹேமமாலினி(!!).

தனது, தலைமையுரையில் பேசிய திரு ஏ எல் எஸ்., அவர்கள், மௌலியின் எழுத்தையும், நடிப்பையும் பார்த்து "இந்த நடிகர் கண்டிப்பாக எதிர்காலத்தில் திரையுலகில் பிரகாசிப்பார்' என்றார்.

அவர் வாக்கு அப்படியே பலித்துள்ளதை நாம் அறிவோம்.

தவிர்த்து அன்றைய நாடகம் மௌலியை பின்னாளில் பிரபல நகைச்சுவை நாடக எழுத்தாளராக ஆக பிள்ளையார் சுழி போட்டது.

அது எப்படி என அடுத்த பதிவில்

(தொடரும்)

Saturday, July 14, 2018

கர்மவீரர் காமராஜர்


1)காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.பேச்சிப்பாறை,மணிமுத்தாறு,வைகை,ஆழியாறு,பரம்பிக்குளம்,குந்தா,கீழ்-மேல் பவானி,கிருஷ்ணகிரி,சாத்தனூர்,கோமுகி அணைகள் கட்டப்பட்டன. அவர் அதனால் அணைகளின் நாயகன் எனப்பட்டார்.
2)காமராஜர் தனது 27 ஆவது வயதில் முதன்முறையாக சிறை சென்றார்.1930ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.பின் பல முறை சிறை சென்றுள்ளார்.தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார்.தவிர்த்து..நாட்டின் விடுலை எண்ணத்திலேயே இருந்து தன் திருமணத்தை புறந்தள்ளியவர்.
3)அமெரிக்க அதிபராய் இருந்த நிக்சன் இந்தியா வந்த போது காமராஜரைப் பற்றி கேள்விப் பட்டு அவரை சந்திக்க விரும்பினார்..ஆனால் காமராஜர் அதற்கான நேரத்தை ஒதுக்கவில்லை.உதவியாளர் 'ஐயா உலகே பெருமைப்படும் அமெரிக்க அதிபரே வலிய வந்து பார்க்கத் துடிக்கும் போது...'என இழுத்தார்.
காமராஜர் அவருக்கு பதில் அளித்தார்..'அவர் பெரிய ஆளா இருக்கலாம்னேன்..ஆனா நம்ம ஊர் அண்ணாதுரை அமெரிக்கா போனப்போ நிக்சனைப் பார்க்க விருப்பப்பட்டார்..நிக்சன் பார்க்கமுடியாதுன்னு சொல்லிட்டார்.நம்ம ஊர்க்காரரை பார்க்க விரும்பாதவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றார் த்ன்மானத் தலைவர்.
4)பள்ளியில் படிக்கவரும் மாணவர்கள்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு உடையில் வருவதால் அவர்கள் மனதில் வேற்றுமை ஏறபடும் என்பதால், குழந்தைகள் மனதில் பணக்காரன்,ஏழை என்ற ஏற்றத்தாழ்வு வராமல் தடுக்க என்ன செய்யலாம் என எண்ணிய காமராஜரின் சிந்தனையில் உதித்ததுதான் இலவச சீருடைத் திட்டம்
5)ரஷ்யா செல்லும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது..மாஸ்கோவில் குளிர் வாட்டி எடுத்தும், அவர் கோட் அணியாது எளிய கதர் வேட்டி,சட்டையுடன் இருந்தார்..'நான் எந்நேரத்திலும் எந்நிலையிலும் ஓர் ஏழை இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன்' என்றார்.
6)1956ல் பள்ளியில் இலவச உணவு திட்டமும்..1960ல் பள்ளியில் இலவச கல்வியும் இவர் காலத்தில்தான் அமுலாக்கப்பட்டது.
7)காமராஜர் கடைசிவரை எம்.டி.டி. 2727 என்ற எண்ணுள்ள ஒரே சவர்லே காரை உபயோகித்தார்...சென்னையில் வாடகை வீட்டிலேயுமே இருந்தார்..தன்னலமற்ற தலைவர் அவர்.
8)காமராஜர் பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது

Friday, July 13, 2018

நாடகப்பணியில் நான் - 6

அம்பத்தூர் மக்களிடையே எங்களைப் பற்றிய புகழ் பரவியது என்றேன் அல்லவா? அதற்கானக் காரணம் என்ன?

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் கலைத்தாய் தமிழர்களுக்கு அளித்த கலைப்பொக்கிஷம் ஆவார்.

அவர் 288 படங்களில் நடித்து பல தேசிய விருதுகள் பெற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி படங்களில் நடித்தவர்.1966ல் பத்மஸ்ரீ,1984ல் பத்மபூஷன்,1995ல் ஃபிரான்ஸ் நாட்டு செவாலியே விருதுகளைப் பெற்றவர்.1995ல் தாதா சாஹேப் பால்கே விருது இவருக்கு அளிக்கப்பட்டது.இவர் பெருமைகளையும், சாதனைகளையும் எழுத வேண்டுமானால் ஒரு புத்தகமே எழுத வேண்டும்.

விஷயத்திற்கு வருகிறேன்..

கலைத்தாயின் மூத்த புதல்வனுக்கு 1966ல் பத்மஸ்ரீ விருது கிடத்ததும்..எங்களது youngsters cultural association சார்பில் அவருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்த தீர்மானித்தோம்.

ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் அவரும் தேதி ஒதுக்கித் தந்தார்.பாராட்டுவிழா எப்படியும் ஒரு மணிநேரத்தில் முடிந்து விடுமே..வேறு என்ன செய்யலாம்? என யோசித்த போது..நாமே ஏன் ஒருமணி நேரத்திற்கு நகைச்சுவை நாடகம் ஒன்று போடக்கூடாது எனத் தோன்றவே..மௌலி எழுத "love is Blind"  என்ற நாடகத்தை நடத்த தீர்மானித்தோம்

சிவாஜி கணேசனை,  விசுவின் தந்தை ராமசாமி ஐயர் அழைத்துவர, நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நடிகர் ரஞ்சனையும், முன்னிலை வகித்த பிரபல ஆர்கிடெக்ட் ரவால் கிருஷ்ண ஐயர்  அவர்களையும்எங்கள் நண்பர்களின் இரு உறவினர்கள் அழைத்து வந்தனர்

பூர்ணகும்ப மரியாதையுடன் சிவாஜிக்கு பாராட்டு விழா அமர்க்களமாக நடந்தது.

மௌலியின் நாடகத்தையும் திலகம் மிகவும் ரசித்தார்.
அந்த நாடகத்தில் விசுவும் நடித்தார்.நான் ஒரு பத்திரிகை நிருபராக நகைச்சுவை வேடத்தில் நடித்தேன்

இந்த நிகழ்ச்சி எங்களது நாடக ஆர்வத்தை மேலும் தூண்ட அடுத்து நாங்கள் செய்தது அடுத்த பதிவில்

(தொடரும்)  

நாடகப்பணியில் நான் - 5

படிப்பு, வேலை என சில ஆண்டு காலம் கழிந்தன.

இந்நிலையில், தமிழக சுற்றுலாத்துறையில் முக்கிய அதிகாரியாக வேலை செய்து வந்த திரு ராமசாமி ஐயர் என்பவர், திருவல்லிக்கேணியில் இருந்து அம்பத்தூருக்குக் குடியேறினார்.

அவர்.....

திரு ராஜாமணி, விசு, கிஷ்மூ ஆகியவர்களின் தந்தை.விசுவும், ராஜாமணியும் என்னைவிட சற்று சீனியர்கள்.கிஷ்மூ என்னவிட ஜூனியர்.இவர்களுடன் என் பள்ளித் தோழர்களான சந்திர மௌலி, கணேஷ் (பிரியதர்ஷினி),நான் ஆகிய அனைவரும் சேர்ந்து youngsters Cultural Association என்ற சங்கத்தைத் தொடங்கினோம்.மற்ற நண்பர்கள் சிலரும் கூடினர்

அம்பத்தூரில், அச்சமயம் சற்று திருட்டு பயம் இருந்தது.நாங்கள் காவல்துறையுடன் சேர்ந்து இரவில் ரோந்து வருவோம்.இதனால் மக்கள் ஆதரவினைப் பெற்றோம்.

சில காலம் கழித்து, ராமசாமி ஐயர் கொடுத்தத் தெம்பில், டிகேஎஸ் குழுவினர் நடத்திவந்த இயக்குநர் ஸ்ரீதரின் ரத்தபாசம் ஸ்கிரிப்டை முறைப்படி அனுமதி பெற்று மேடை ஏற்றினோம்.நாங்கள் ஒத்திகைப் பார்த்த இடம் எது தெரியுமா.

அம்பத்தூரில் நடந்த வந்த ஒரே டூரிங் டாக்கீஸ் ஆதிலக்ஷ்மி திரையரங்கில்தான்.இதன் மூலம் நீங்கள் ஓரளவு அம்பத்தூரில் எங்களுக்கு இருந்த ஆதரவை அறியலாம்.

நாடகம் நடந்தது வழக்கம் போல குப்தா பள்ளியிலேயே!

விசுவின் தந்தை எங்கள் மீது கொண்ட அன்பும், ஆதரவும் எல்லாவற்றிற்கும் முக்கியக் காரணியாக அமைந்தது.

ரத்தபாசம் நாடகம் மாபெரும் வெற்றி பெற்றது எங்களுக்கு

அடுத்து எங்களின் முயற்சி..

மேன் மேலும் மக்களின் ஆதரவினைப் பெற்று தந்தது.அது என்ன..அடுத்த பதிவில் பார்ப்போம்

(தொடரும்) 

Thursday, July 12, 2018

நாடகப்பணியில் நான் - 4

?

தளர்த்தப்பட்ட நிபந்தனை..

நான் படித்து முடிக்கும் வரை நாடகம், ஒத்திகை என அலையக் கூடாது.
வேண்டுமானால், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறையில் பள்ளி நண்பர்களுடன் ஏதேனும் நாடகமோ, விளையாட்டோ வீட்டின் எல்லைக்குள்ளேயே செய்து கொள்ளலாம் என்பதே அது

எங்கள் வீடு ஓட்டு வீடு.ஆனால் நீளமான திண்ணை உண்டு

இந்த நிபந்தனைகள் எனக்கு வெல்லமாக அமைந்தது

முதலில், "கலைவாணி" என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி ஒன்றைத் துவக்கினேன்.அதில், நானும், பள்ளி நண்பர்களும் கதை எழுதினோம்.படங்களை நானே வரைந்தேன்

பின்னர் அதில் நான் எழுதிய "விருந்து" காட்டில் தீபாவளி ஆகிய கதைகளை நாடகமாக திண்ணையில் போட்டோம்

என் தந்தையின் வேட்டியே முன் திரை.காட்சிகளுக்கு எங்களது போர்வைகளும், அக்காளின் தாவணிகளும் உபயோகப்பட்டன

சணல் கயிற்றை, திண்ணையின் அகலத்துக்குக் கட்டி   திரையும் ,காட்சிகளும் அமைத்தோம்.

பின்னர், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம்.அட்டையை வெட்டி கிரீடமும், வாளும் தயாரிக்கப் பட்டன.ஒட்டுவத்ற்கு சரிகைப் பேப்பர் வேண்டுமே...என்ன செய்வது என யோசித்தோம்.அப்போதெல்லாம் கிளிக்கூண்டு போன்றவை செய்ய காலி சிகரெட் பெட்டிகளை சேமித்து செய்வோம்.அதுவே இப்போது பயன் பட்டது.அந்த நாளில் சிகரெட் பாக்கெட்டுகளில், சரிகைப் பேப்பரில் வைத்துதான் சிகரெட்டுகள் வரும்

அந்த சரிகைப் பேப்பரை பெட்டிக் கடைகளில் கெஞ்சி வாங்கி வந்து வெட்டி ஒட்டி கிரீடம், வாள் தயார்  செய்தோம்

நாடகம் அரங்கேறியது.பார்வையாளர்கள் நண்பர்களும், நண்பர்களின் சகோதர, சகோதரிகளும் தான்.

அதன் பிறகு..நாடகங்கள் போட தமிழாசிரியர் போதித்த செய்யுள்கள் உதவின.

தமயந்தி சுயம்வரம் (நாற்குணமும் நாற்படையா பாடல்)
கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திற்கு கண் கொடுத்தல் (பேறினி இதன் மேல் உண்டோ.செய்யுள்).ஒரு நண்பன் சிவ லிங்கமாய் உட்கார்ந்து கொள்ள, அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி வந்த குங்குமத்தை தண்ணீரில் கரைத்து கன்னங்களில் வழியவிட்டு ,கண்ணப்பன் கண் கொடுக்கும் காட்சியை நாடகமாக்கினோம்

இப்படி மாதம் ஒரு நாடகம் போட்டோம்.

பள்ளி இறுதியாண்டு முடிக்கும் வரை இந்நிலையே நீடித்தது.

(தொடரும்)


Monday, July 9, 2018

தமிழ்நாடகமேடை தோற்றமும் வளர்ச்சியும்

சங்ககாலம் முதல் தமிழ்நாடகங்கள் தோற்றம்..அடைந்த வளர்ச்சி குறித்தும்..இன்று நாடகங்கள் அரங்கேற்றும் குழுக்கள் வரை நான் எழுதியுள்ள நூல்

ஆராய்ச்சி மாணவர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் மிகவும் உபயோகப் படும்வகையில் அமைந்துள்ளது.

பிரபல விமரிசகர்கள் வீயெஸ்வி, திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டுதல்களைப் பெற்றது

தினமலர், கல்கி, குமுதம் ஆகிய பத்திரிகைகளில் பாராட்டுதல்களைப் பெற்றது.

நூலின் விவரம்

"தமிழ்நாடகமேடை தோற்றமும் வளர்ச்சியும்"
திருவரசு புத்தக நிலையம்
தொலைபேசி- 24342810
விலை ரூ 100/-

நல்லி செட்டியார், டி கே எஸ் கலைவாணன் ஆகியோர் அணிந்துரையுடன் வெளியாகியுள்ளது

வாங்கிப் பயனடையுங்கள்

Sunday, July 8, 2018

நாடகப்பணியில் நான் - 3

அந்த நாளில் "காதல்" என்ற பெயரில் பத்திரிகை ஒன்று வந்து கொண்டிருந்தது.அதன் ஆசிரியர் அரு.ராமநாதன்.இவர் எழுதிய "வீர பாண்டியன்மனைவி" என்ற சரித்திரத் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.

அரு.ராமநாதன், "ராஜ ராஜ சோழன்" நாடகத்தையும் எழுதினார்.அதை டி.கே எஸ் சகோதரர்கள் நாடகமாக நடித்தனர்.இன்றும் டி கே எஸ் கலைவாணனும்,புகழேந்தியும் இந்நாடகத்தை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்நாடகமே , முதல் தமிழ் சினிமாஸ்கோப் படமாக நடிகர்திலகம் நடிக்க வெளியானது.

"ஆமாம்..இந்தப் பதிவிற்கும், இதெற்கெல்லாம் என்ன சம்பந்தம் எனக் கேட்கிறீர்களா?" சொல்கிறேன்

"அடாது மழை" நாடகத்தில் நான் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்தது..எனது பள்ளிவரை எட்டிவிட்டது.

திரு ஸ்ரீனிவாசன் பிள்ளை என்பவர் எனது வகுப்பு ஆசிரியர்.தமிழ் மீது மிகவும் பற்று கொண்டவர்.அவர் என்னிடம் இடைவேளையில் தன்னை வந்து ஆசிரியர்கள் அறையில் பார்க்கச் சொன்னார்.எதற்கு வரச் சொல்கிறார்? என பயந்தபடியே சென்றேன்

"என்ன நாடகங்களில் எல்லாம் நடிக்கிறயாமே!" என்றார்.பின், "பயப்படாதே..நாம இந்த ஆண்டு பள்ளி ஆண்டு விழாவில் "ராஜ ராஜ சோழன்" நாடகம் போடறோம்.(சென்ற ஆண்டு ஆண்டு விழாவிலும் அதே நாடகத்தை நடத்தினார்.அந்நாடகம் மீது அவ்வளவு பற்று).அதில் "மேதீனி ராயன்" என்ற நகைச்சுவை புலவன் வேடம் வருது.அந்த வேடத்தை நீ செய்" என்றார்.

பள்ளி ஆண்டுவிழா என்பதால், தந்தையின் அனுமதி எளிதில் கிட்டியது

நாடகம் அனைவரின் பாராட்டுதலைப் பெற்றது.அந்நாடகத்தின் டைடில் சாங் இன்றும் பசுமரத்தாணியாய் ஞாபகத்தில் உள்ளது..

"வேங்கை நாட்டு
மன்னர் மன்னன்
மாலை சூடினான்
மன்னன்
மாலை சூடினான்
தமிழ் அன்னை
வண்ண சிலை அமைத்து
வாழ்த்து பாடினான்
மன்னன்
வாழ்த்து பாடினான்"

என ஆரம்பிக்கும்
.
பள்ளி விடுமுறை முடிந்து நான் 9th standard சென்றேன்.

பெரிய கிளாஸ்..இனிமே நாடகம் கீடகம்னு சுத்தாதே என்று என் நாடக ஆசைக்கு இடைக்கால தடை விதித்தார் அப்பா.

தடையை விலக்கக் கூறி அம்மா விடம் அப்பீல் செய்தேன்.
பின், அம்மா, அப்பா இருவர் அமர்வு, இடைக்காலத் தடையை நீக்காமல்..சில கன்டிஷன்ஸை தளர்த்தினார்கள்.

அது என்ன? அடுத்த பதிவில்

(தொடரும்)

Friday, July 6, 2018

நாடகப்பணியில் நான் - 2

என் முதல் நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடித்தேன் என எழுதியிருந்தேன் அல்லவா?

அது பொய். நான் நடித்தேனா? நடிப்புப் பற்றி 11 வயதில் எனக்கு என்ன தெரியும்.? நான் என்ன கமல் ஹாசனா? எழுதிக் கொடுத்த வசனங்களை ஒப்புவித்தேன்.ஆங்காங்கே அதுவும் மறந்துவிட side ல் இருந்து prompt .அதை வாங்கிப் பேசினேன்.மொத்தத்தில் அன்றைய நாடகம்..இன்றைய மொழியில் சொல்வதானால் ஒப்பேற்றப்பட்டது

ஆனால், அதற்கே எவ்வளவு பாராட்டுகள்.என் அம்மாவிடம் ,பெண்கள், "உங்க பையனுக்கு சுத்திப் போடுங்க" என்றனர்.
என் தந்தையிடம் , அறிமுகமில்லாதவர்களும் வந்து தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தனர்

ஆனால், நானோ, அந்த நாடகக்கம்பெனி
கொடுத்த உப்புமாவை ருசித்துக் கொண்டிருந்தேன்.நான், ஒரு நடிகன் ஆகவில்லை..ஆகவே தான் பாராட்டுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை

ஒரு கலைஞனுக்கு, அவன் திறமைக்குக் கிடைக்கும் புகழ், பாராட்டுதல்கள் அளிக்கும் மகிழ்ச்சி அவனுக்கு அளிக்கப்படும் சன்மானத்தைவிட அதிகமானது..உயர்வானது என்பதை உண்மையாகவே நான் நடிக்க ஆரம்பிக்கையில் உணர்ந்தேன்.

ராகவேந்திர அண்ணனுக்கு போட்டியாக இன்னொரு நாடகக்குழுவும் அம்பத்தூரில் அன்று இருந்தது

போட்டிகள் இருந்தால்தானே திறமைகள் பளிச்சிடும்.

பாபு என்பவர் (அண்ணன் இல்லை uncle) நடத்தி வந்தார்.அவர் ஒருநாள் வழியில் என்னைப் பார்த்து, அவர் நடத்தப் போகும் ஒரு நாடகத்தில் நகைச்சுவை வேடம் ஒன்றில் என்னால் நடிக்க முடியுமா? என்றார்.

அதை அப்பாவிடம் நான் சொல்ல ,அவர் இந்த முறை தடை சொல்லவில்லை.(ஒருவேளை தன் மகன் ஒரு பெரிய நடிகன் ஆவான் என பகல் கனவு கண்டிருப்பாரோ? பாவம் அவர்)

"அடாது மழை" என்ற அந்த நகைச்சுவை நாடகம் பற்றி அதிகம் நினைவில் இல்லை.ஆனால் நான் பேசிய ஒரு நகைச்சுவை வசனம் பசுமரத்தாணிபோல நினைவில் உள்ளது.

அந்த நாளில் "சேமியா" 100 கிராம் 200 கிராம் என பழுப்புநிற காகிதத்தில் brand name உடன் சுற்றப்பட்டு pack செய்யப்பட்டிருக்கும்.அப்படி ஒரு பாக்கெட்டில் கம்பி ஒன்றினை நுழைத்துவிட்டு நான் பேசும் வசனம்,"வர வர நாட்டுல எல்லாவற்றிலும் கலப்படம் செய்யறாங்க இந்த சேமியா பாக்கெட்டில பாருங்கன்னு அதை உடைத்து அந்த கம்பியை எடுத்துக் காண்பிப்பேன்.

அந்த வசனம் சொன்னதும் அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

அன்று நாடகம் பார்த்த ஒருவர் என் தந்தையிடம், "இந்த வயசிலேயே பையன் சமுதாய ஊழல்களைப் பேசறானே..உங்க மகன் ராதா(கிருஷ்ணன்) எம்.ஆர் ராதா போல வருவான்" என சொல்லியிருக்கக் கூடும்.

ஏனெனில் என் தந்தையின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

(தொடரும்)