Thursday, December 31, 2009

பிடித்தம்

என்னை எல்லோருக்கும்

என் குடும்பத்தில் பிடிக்கும்

உன்னை எல்லோருக்கும்

உன் குடும்பத்தில் பிடிக்கும்

என்னை உனக்கு பிடித்ததும்

உன்னை எனக்கு பிடித்ததும்

நம்மை யாருக்கும் பிடிக்கவில்லை

2009ல் தமிழ் சினிமா..


2009ல் 124 நேரடி தமிழ்ப்படங்கள் வந்துள்ளன.இவற்றுள் எவை வெற்றி படங்கள்..எவை வசூல் சாதனை புரிந்தவை..எவை தோல்வி படங்கள் என்பதைப் பற்றி அல்ல இப்பதிவு.

படத்தயாரிப்பு, ஸ்டூடியோ தொழிலாளிகள்,திரையரங்க ஊழியர்கள் என ஆரம்பித்து போஸ்டர் ஒட்டுபவர்கள் என லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ள துறை இது.இதில் வெல்ல வேண்டும் என மெய் வருத்தம்,பசி பாராது கண்துஞ்சாது உழைக்கும் வர்க்கம் நிறைந்த துறை இது.இதன் ஒளி..பல விட்டில் பூச்சிகளை அழித்தது உண்டு..ஆனலும் இதன் கவர்ச்சியில் மயங்காதார் இல்லை எனலாம்.

முன்பெல்லாம் ஒரே ஹீரோ நடித்த6 அல்லது 7 படங்கள் வருவதுண்டு..அனால் இப்போது பெரிய நடிகர்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.இதுவே அதிகம் புதியவர்கள் நுழைய வழி வகுத்துள்ளது எனலாம்.

இந்த ஆண்டு மட்டும் 45 புது ஹீரோக்கள் அறிமுகமாகியுள்ளனர்.50 ஹீரோயின்கள் உருவாகியுள்ளனர்.69 புதிய இயக்குநர்கள் படங்கள் வந்துள்ளன.

பசங்க பட இயக்குநர் பாண்டிராஜ் இந்த வருட புது இயக்குநர்களில் வெற்றி இயக்குநராகத் திகழ்கிறார்.சமுத்திரக்கனி,அறிவழகன் போன்று சிலர் திறமை மிக்கவர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

45 புதிய இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளனர்.கருணாஸ்,ஸ்ருதி கமல் போன்றவர்கள் பாராட்டு பெற்றுள்ளனர்.

ஆனாலும் ஒரு செய்தி வருத்தத்தையே அளிக்கிறது.வெளிவந்த படங்களில் 10 சதவிகிதப் படங்கள் கூட வெற்றி படங்களாகத் திகழவில்லை.

காரணம்..புதிய சிந்தனை இல்லை.மாறுபட்ட சிந்தனைப் படங்கள் சில வெற்றி பெற்றுள்ளதே இதற்கு சான்று.மாறுபட்ட சிந்தனையுடன் குறைந்த பட்ஜெட்டில் வந்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வில்லை.

தமிழ்ப் பட உலகில் பல புது கதாசிரியர்கள் உருவாக வேண்டும்.அரைத்த மாவையே அரைத்த காலம் அல்ல இது.புதுப்புது சிந்தனைகள் வரவேண்டும்..அதுதான்..வீட்டு டிராயிங் ரூமிலிருந்து மக்களை திரையரங்கிற்கு இழுக்கும்.அப்படிப்பட்ட படங்கள் வந்தால்..யார் நடித்திருந்தாலும்..குறைந்த பட்ஜெட் படமானாலும் வெற்றி பெறும்.

.இந்த இண்டஸ்ட்ரியை நம்பி..லட்சக்கணக்கானோர் வாழ்வு பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது.அவர்கள் நலனுக்காவது நல்ல படங்கள் வரட்டும்...பல புது தயாரிப்பாளர்கள் உருவாகட்டும்.

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

Wednesday, December 30, 2009

சந்ததிப்பிழைகள்

(சற்று பொறுமையாக படிக்கவேண்டிய பதிவு)
அலிகள் என சமுதாயத்தில் ஓரம் கட்டப்பட்டவர்கள் இவர்கள்.பின் அரவாணிகள் என்றும்..இன்று திருநங்கைகள் என்றும் அழைக்கப் படுகின்றனர்.இவர்களை நா.காமராசன் அவர்கள் காகிதப் பூக்கள் என்கிறார்.அவர்களைப் பற்றி அவர் எழுதிய உருவகக் கவிதையைப் பாருங்கள்.

காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப்பாலின் சரித்திரத்தில்
சதுராடும் புதிரானோம்

விதைவளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சதைவளர்க்கும் பிணம்நாங்கள்
சாவின் சிரிப்புகள்

மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதிவைக்க
முடவன் கை எழுதியதை
முழுக்குருடர் படித்ததுண்டோ?

மூங்கையின் பாட்டானோம்
முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்

சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்

தலைமீது பூவைப்போம்
தாரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.

திருநங்கைகள் பற்றிய உருவகக் கவிதை இது.இனி இதன் அர்த்தத்தைப் பார்ப்போம்

காலம் என்ற மழைத்தூரலில் களையாகப் பிறப்பெடுத்துள்ளோம்.தாய்ப்பாலின் சரித்திரத்தில் சதுராடும் புதிராக ஆனோம்.விதை வளர்த்த முள்ளாக ஆனோம்.சுடர் விளக்கின் இருளாக ஆனோம்.சதை வளர்க்கும் பிணங்கள் நாங்கள்.சாவின் சிரிப்புகள் ஆனோம்.

ஊமை பாட்டிசைக்க, கையில்லா முடவன் அதை எழுதிவைக்க,முழுக்குருடர் அதனைப் படிப்பதால் என்ன பயன் விளையும்?அப்படிப்பட்ட பயனற்ற வாழ்வு எங்களுடையது.

நாங்கள் சந்திப்பிழை போன்ற சந்ததிப் பிழைகள்.காலமென்னும் ஏட்டில் நிகழ்ந்துவிட்ட பிழைகள்.எங்கள் வாழ்வு பிழையுள்ள,பொருளற்ற வாழ்வு.

நாங்கள் பூச்சூடினால் கல்லறைக்குப் பூ வைத்ததுபோல் இருக்கும்.பூச்சூடி உலவினாலும் கூட, நாங்கள் பூத்த கல்லறை போன்று உயிரற்ற சடலத்தின் மீது பூ வைத்தது போல இருக்கும்.

எங்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், தாய்மை மணப்பதனால் மணம் வீசும் முல்லைப்பூ போன்றவர்கள்.தனிமலடியாக விளங்கும் ஒவ்வொருவரும் தாழம்பூப் போன்றவர்கள்.வாய்ப்பேச்சால் வக்கணையாகப் பேசும் நாங்களோ மணம் சிறிதும் அற்ற காகிதப்பூக்கள்

இனி நாம்..
இன்றைய காலகட்டத்தில்..அரசு திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்துள்ளது.திருநங்கை என்ற அழகான பெயர் சூட்டியுள்ளது.சமுதாயத்திலும் மக்களிடையே இவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவருகிறது.

ஆயினும்..காமராசனின் இக்கவிதை..அவர்களது மனக்குமறலை அழகாக எடுத்துக் கூறுகிறது.நா.காமராசன் பற்றி அடுத்த பதிவு தொடரும்

Tuesday, December 29, 2009

2010 மனதிற்குள் தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள்


ஜெயலலிதா - எப்படியாவது காங்கிரஸை தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேற வைக்கணும்.நம்ம கூட்டணியில் அவங்களை கொண்டு வந்தால்தான்..2011ல் முதல்வராக ஆகக் கூடிய சந்தர்ப்பம் வரும்.அதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ராமதாஸ்- பெண்ணகரம் இடைத்தேர்தல்ல தனியா நின்னு எப்படியாவது 10000 ஓட்டாவது வாங்கிடணும்.அப்போதான் அதை வைத்து திரும்ப கூட்டணியோட சேர்த்துக்க கலைஞர் எண்ணுவார்.நாமும் அப்பதான்2011 ல கொஞ்சம் அதிகம் தொகுதிக்கு பேரம் பண்ணலாம்.

விஜய்காந்த்- இந்த மேடம்..இல்ல அந்த மேடம் தான்..வேற வழியில்லை.இனியும் கடவுளோட கூட்டணின்னா .. தேர்தல்ல நிற்க சொன்னா நம்ம ஆளுங்க ஓடுவாங்க. இந்த மேடம்னா துணை முதல்வர் கேட்கணும்.அந்த மேடம்னா முதல்வரே முயற்சிக்கலாம்.

தங்கபாலு-கோஷ்டி பூசல் ஒழிந்தால் தான்..அடுத்த தேர்தல்ல நம்ம வாய்ஸ் எடுபடும்.அதுக்கு அச்சாரமா வாசன் பொறந்த நாளை கொண்டாடிட்டோம்.இனி இளங்கோவன்,சிதம்பரம்,சுதர்சன நாச்சியப்பன்,கிருஷ்ணசாமி,பிரபு,பீட்டர்..இவங்க பொறந்த நாளையும் கொண்டாடிவோம்.

இரு கம்யூனிஸ்டுகள்- நம்ம பலம் நாம தனியா நின்ன 5 இடைத்தேர்தல்ல தெரிஞ்சுப் போச்சு.அதனால கொஞ்ச நாள் அடக்கி வாசிப்போம்.அப்பதான் அடுத்த சட்டசபை தேர்தல்ல..எந்த கூட்டணிக்குப் போனாலும்..அவங்களுக்கு ஏற்றார்போல பேசமுடியும்.அதுவரைக்கும் நம்ம கொள்கைகள் பற்றி யாராவது கேட்டா செவுடு மாதிரி இருந்துடுவோம்.

கலைஞர்-நம்மை இன்னும் யாருமே சரியா புரிஞ்சுக்கலையே.ஜூன்மாதத்திற்குப் பிறகு ஓய்வுன்னதும் நம்பிட்டாங்களே.பரவாயில்லை..அப்புறம்..அண்ணா கனவுல வந்தார்..பெரியார் வந்தார்..நெஞ்சில் தைச்ச முள்,இதயம் அழுதது,கண்கள் பனித்தன.மௌன அழுகை இப்படி அப்படின்னு சொல்லி பதவில நீடிச்சிடலாம்.

ஸ்டாலின்-ஜூனிற்குப் பிறகு நாமதான் முதல்வர்.அழகிரி போட்டிக்கு வராம இருக்கணும்..அப்படி வந்துட்டா அவர் 6 மாசம் நான் 6 மாசம்னு பேசிக்கலாம்..இல்ல.மதுரைக்கு அவரை முதல்வர் ஆகிடலாம்..கனிமொழிக்கு..ராஜ்ய சபா எம்.பி., இன்னும் கொஞ்சம் வருஷம் இருக்கும்.அப்புறம் பார்த்துக்கலாம்.

வைகோ-ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.விஜய்காந்த், காங்கிரஸ் ,அம்மாவை நெருங்கிட்டா..நம்மை கழட்டி விட்டுடுவாங்க..திரும்ப கலைஞர் கிட்ட ஓடணும்.அவர் கொஞ்சம் தொகுதி கொடுத்தாலும் ஒத்துக்கணும்.ஏன்னா அவர் கொடுக்கிற தொகுதிக்கே நிற்க நாமதானே வேட்பாளரை தேடணும்.

சரத்குமார்-கலைஞரை மீண்டும் நெருங்கிட்டோம்.தேர்தல்ல டிக்கட்டுக்கு ராதிகாவை விட்டு அப்பாகிட்ட பேச சொல்லணும்.இல்லேனா..திரும்ப ராஜ்யசபா சீட்டாவது கேட்கச் சொல்லணும்.பதிலுக்கு கலைஞர்ல ஒரு மெகா சீரியல் செஞ்சுடச்சொல்லிடலாம்

Monday, December 28, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1)தலைவர் என்னை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்றார்
ஏன்
அப்போதான் என் தொகுதியிலே..இடைத்தேர்தல் வருமாம்..தலைவர் பலத்தைக் காட்டமுடியுமாம்

2)ஆனாலும் அந்த நீதிபதிக்கு பக்தி அதிகம்..குற்றவாளிக் கூண்டில் நிற்கிற அர்ச்சகர் கிட்ட தன்னோட பெயர்,கோத்ரம் எல்லாம் சொல்லி வழக்கை ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே தன் பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொல்றார்.

3)தமிழுக்கு துரோகம் செய்யறாங்கன்னு தலைவர் யாரைச் சொல்றார்
அசின்..திரிஷா..வைத்தான்..அவங்க ஹிந்தி படத்தில நடிக்கப் போறாங்களாம்..அதனாலத்தான்

4)அந்த அமைச்சருக்கு திடீர்னு ஏன் நெஞ்சுவலி வந்துது
அவரோட செக்யூரிட்டிக்கு வந்த போலீஸைப் பார்த்ததும்..தன்னைக் கைது பண்ண வந்திருக்காங்கன்னு தப்பா நினைச்சுட்டாங்களாம்

5)நேற்று புதுசா வந்திருக்கிற அந்த படத்தோட டிக்கெட் கிடைச்சும் நீங்க ஏன் போகலை
அதுக்குள்ள எனக்கு வேற ஒரு கஷ்டம் வந்துடுத்து

6)அந்த பல் டாக்டர்கிட்ட மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்
அவர்தான் நம்ம சொத்தைப் பத்தி விசாரிக்காம சொத்தையைப் பற்றி விசாரிக்கிறாராம்

7) தலைவருக்கு மருத்துவர்கள் என்ன திடீர்னு அட்வைஸ் பண்றாங்க..
தலைவர் மௌனமாய் அழறேன்னு அறிக்கைவிட்டதாலே..அப்படி உணர்ச்சிகளை அடக்கக்கூடாது..உடலுக்கு கெடுதல்..வாய் விட்டு அழுதுடுங்கன்னு அட்வைஸ் பண்றாங்க

Sunday, December 27, 2009

எறும்பு வரிசை


1)நான் கோடு போட்டா
ரோடு போடுவாள்
நான் புள்ளி வைச்சா
கோலம் போடுவாள்
நான் காதலிச்சேன் - அவள்
திருமணம் செய்துச் சென்றாள்

2)இரயில் நிலையத்தில்
வரவேற்க வந்தவரின்
பார்வையோ
என் கை மஞ்சள் பையில்

3)பிஞ்சுக் கைகளில்
பிடிக்கு அடங்கா மூங்கில்
பஞ்சு பாதங்களை
பதம் பார்க்கும் கயிறு
கழைக்கூத்தாடி சிறுமி

4)அவசர அவசரமாக
செல்லும் போதும்
எதிரில் வருபவரை
குசலம் விசாரிக்கும்
எறும்பு வரிசை

5)விடியலின்
பனித்துளிகள்
போதையில்
மலர்கள்

6)உயிர்மெய் எழுத்தென்ன
கேட்டதும் சொன்னது
காகம்

மக்களை முட்டாளாக்கும் மெகாசீரியல்கள்...


தொலைக்காட்சி ஒரு நல்ல மீடியா..இதன் மூலம் பல நல்ல..அறிவு பூர்வமான செய்திகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும்..அதே சமயம் மக்கள் மூளையை மழுங்கடிக்கும் செயலையும் செய்ய முடியும்.

அந்த இரண்டாவது வேலையைத்தான் இன்றைய தொலைக்காட்சி சேனல்கள் செய்துக் கொண்டிருக்கின்றன.பல நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாகச் சொன்னாலும்..குறிப்பாக மெகா சீரியல்கள் இந்த வேலையைச் செய்துக் கொண்டிருக்கின்றன.

தனியார் சேனல்கள் துவங்குவதற்கு முன்னால்..தூர்தர்ஷன்..தொடர்களை வழங்கி வந்தது அவை 13 வாரங்களில் முடிந்து விடும்..சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து..கதையின் கருத்திலிருந்து நகராமலிவை இருந்தன.பின் ஜுனூன் போன்ற ஹிந்தி மெகாசீரியல்கள் தமிழ்ப் படுத்தப் பட்டு வந்தன.இங்குதான் விநாச காலம் ஆரம்பித்தது எனலாம்.

இதற்குப் பின்னர் தனியார் சேனல்கள் குவிய ஆரம்பித்தன.நிகழ்ச்சிகள் குப்பையாய் ஆனது.மக்கள் விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் வெளியே செல்வது குறைந்தது.தொடர்கள் பார்க்க வேண்டி இரவு சமையல் காலையிலேயே செய்து முடிக்கப் பட்டது.வீட்டிற்கு வரும் விருந்தினரை சிக்கிரம் கிளப்பும்படி ஆனது.கோவில்களில் கூட்டம் குறைந்தது...இன்று ஏதேனும் கோயிலில்..சாதாரண நாளில் கூட்டம் இருந்தால்..அங்கு டி.வி., தொடர் ஷூட்டிங் நடக்கிறது எனப் பொருள்.

சரி..இந்த சீரியல்கள் அப்படி என்னதான் சொல்கின்றன..என்றால்..உருப்படியாக எதுவும் இல்லை..திரைப்படங்களில் லாஜிக் இல்லை என்பது போல் இவையும் எந்த நோக்கும் இன்றி தறி கெட்டு ஓடுகின்றன.

உதாரணத்திற்கு..இரு உதாரணம் எடுத்துக் கொள்வோம்..சமீபத்தில் முடிந்த கோலங்கள்..இதன் சாதனை ஒன்றே ஒன்றுதான்..1533 எபிசோடுகள்..மிகப்பெரிய சீரியல் என்ற ஒன்றுதான்..கடைசி எபிசோடில்..அபி பாத்திரம் எடுத்த முடிவை..முதல் 10 எபிசோடுகளிலேயே எடுத்திருக்கலாம்.ஆதியும் தற்கொலை புரிந்துக் கொண்டிருக்க வேண்டாம்..பாஸ்கரும் இறந்திருக்க மாட்டான்.என்ன ஒன்று..தெய்வயானிக்கும்,திருச்செல்வத்திற்கும் அவ்வளவு சம்பாதித்திருக்க முடியாது. ..அந்த நடிகைக்கு இரு குழந்தைகள் பிறந்து..அவர் கருவுற்றிருந்த காலங்களில் தேவையின்றி வேறு பாத்திரங்களைப் புகுத்தி...அப்பா...போதுமடா சாமி....(தேய்வயானிக்கு ஒரு எபிசோடிற்கு 60000 சம்பளமாம்)

இதுதான் இப்படி என்றால்..இன்னுமொரு சீரியல் வருகிறது பாருங்கள்...அது மக்களை முட்டாளாக்குவது போல இதுவரை எந்த சீரியலும் ஆகியிருக்காது.இப்படிப்பட்ட கற்பனைக்கு இவர்களுக்கு கின்னஸ் புத்தகத்திலேயே இடம் தரலாம்.அந்த சீரியல் கஸ்தூரி..

இதில் கஸ்தூரி என்ற பாத்திரத்தின் முகத்தில்..வில்லன் ஆசிட் ஊற்ற..முக மாற்று சிகிச்சைக்கு சிங்கப்பூர் செல்கிறார்.முகம் முழுதும் மாற்றப்பட்டு ..சிறிதும் ஹீனமில்லாமல்..மழு மழு என திரும்ப வருகிறார்(இப்பாத்திரத்தில் வேறு நடிகை நடித்திருந்தார்) சரி..தொலைகிறது..இதை நம்புவோம் என்றால்..மாற்று நடிகை உயரம்..பருமன் எல்லாமே முதல் நடிகைக்கு மாறுபட்டது.நம் மக்கள்..அப்பவும் விடாது பார்த்தார்கள்..திரும்ப முகம் மாறி வந்த பாத்திரத்தின் மீது வில்லன் வேறொருவன் ஆசிட் ஊற்ற..இம்முறை..முக மாற்று சிகிச்சையில்..பழைய நடிகையின் முகமே மீண்டும் வந்து விட்டதாம்..முகத்தில் மச்சம்..மரு உட்பட அப்படியே முகம் திரும்பிவிட்டது.அடப்பாவிகளா..அதற்கு பதிலாக..இவருக்கு பதில் அவர் என்று போட்டிருந்தாலே எங்களுக்குப் போதுமே..ஏமாற நாங்கள் இருக்கிறோம் என்பதற்காக இப்படியா...

அய்யா..சேனல் உரிமையாளர்களே..மெகாசீரியல் தயாரிப்பாளர்களே..மக்களை கொஞ்சம் அறிவுடன் வாழ விடுங்கள்

Saturday, December 26, 2009

இலவசம்..இலவசம்..தேவையா?

பக்கத்து வீட்டிற்கு வந்த செய்தித்தாளை இரவல் வாங்கி படிக்கும் போதுதான்..அந்த போட்டி பற்றிய அறிவிப்பை படித்தேன்.இலவசங்கள் தேவையா? என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதச் சொல்லி இருந்தார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை யாக வேறு இருந்ததால்..என்னை நண்பன் ஒருவன் சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்..அவனுடன் சாப்பிட்டவாறே இப்போட்டியைப் பற்றிக் கூறினேன்.அவன் கண்டிப்பாகக் கலந்துக் கொள் என்றான்..அப்போதுதான் மேசையில் கிடந்த பேனாவைப் பார்த்தேன்.அதைக் கையில் எடுத்து அதையும், நண்பனையும் மாறி மாறி பார்த்தேன்.வேணுமானால் வைத்துக் கொள் என்றான்.பதிலுக்கு 'நன்றி' என்றவாறே என் சட்டையில் அப்பேனாவைக் குத்திக்கொண்டேன்.

அடுத்த நாள்..அலுவலகம் வந்ததும்..மேசையைத் திறந்து இரண்டு வெள்ளைத்தாள்களை எடுத்தேன்.

'இலவசம்' பற்றி என்ன எழுதுவது..என்று யோசித்த படியே..பக்கத்து மேசை ரகுவைப் பார்த்தேன். தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து ஆடாக மாறி இருந்தான்.அவனிடம் சென்று..இரண்டு வெற்றிலையையும்,சீவலையும் எடுத்து வாயில் போட்டு மென்றவாறே என் இருப்பிடம் வந்து கற்பனை ஆமையை (எவ்வளவுநாள் குதிரை என்று சொல்வது..மேலும்..எனது கற்பனை மெதுவாகவே வருவதால்..ஆமை என்பதே சரி) தட்டிவிட்டேன்.

பொங்கலுக்கு அரசு இலவசமாகத் தரும் வேஷ்டி..சட்டைப் பற்றி எழுதலாமா? இல்லை நண்பகல் இலவச உணவு பற்றி..வேண்டாம் ..வேண்டாம் ..அது குழந்தைகளுக்கு..அதில் கை வைக்க வேண்டாம்.இலவச சைக்கிள் ,இலவச டி.வி., இலவச நிலம் ..எதைப் பற்றி எழுதுவது?

ஆமை ஓட மறுத்தது..

அந்த சமயம் அலுவலகம் கொடுக்கும் இலவச தேநீர் வந்தது.அதைக் குடித்துவிட்டு..வெளியே வந்தேன்..வெளியே நண்பன் ஒருவன் புகைத்துக் கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிகரெட் ஓசி வாங்கினேன்..அவனே பற்றவும் வைத்தான்.சிறிது நேரம் அரட்டை அடித்தேன் அவனிடம்.திரும்ப மேசைக்கு வந்தேன்.

எண்ணம் இலவசம் பற்றியே இருந்ததால்..அலுவலக வேலை ஓட மறுத்தது..மதியம் ஒரு மணி..

பக்கத்து மேசை ரகு..சாப்பிடப் போகலாமா? என்றான்.உடன் தலையாட்டினேன்.ஏனெனில்..அவன் யாரிடமும் எதையும் இலவசமாக பெறமாட்டான்..நான் ஹி..ஹி..ஹி..

அதைத் தவிர ரகு..அவனோடு யார் வந்தாலும்..அவர்களுக்கு செலவு செய்வான்..(பிழைக்கத் தெரியாதவன்)

சாப்பிட்டுவிட்டு..வந்ததும் மேலதிகாரி கூப்பிட்டு வங்கிக்குச் சென்று..கவனிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றைச் சொன்னார்.'மிகவும் அவசரம்..வண்டியில் சென்று விடுங்கள்'என்றார்.

'சார்..நான் இன்று வண்டி கொண்டுவரவில்லை' என ஒரு சின்ன பொய்யைச் சொன்னேன்.'சரி..சரி..ஆட்டோவில் சென்று விடுங்கள்' என்றார்.அப்பாடா..நூறு ரூபாய் கிளைம் பண்ணலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.வங்கி வேலைகளை முடித்துவிட்டு..திரும்ப மணி நாலாகிவிட்டது.இனி எழுதினாற்போலத்தான்..என எண்ணிய போது..நண்பன் ஒருவன் தொலைபேசினான்.அன்று மாலை திரைப்படம் ஒன்றிற்கு இரண்டு டிக்கட் இருப்பதாகவும்..வருகிறாயா? என்றான்..

கரும்பு தின்னக் கூலியா? 'சரி' என்றேன்.அலுவலகம் விட்டு கிளம்பும் போது ஞாபகமாக வெள்ளைத்தாள்களை எடுத்துக் கொண்டேன்.

சினிமா..இரவு டின்னர் எல்லாம் நண்பன் செலவில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததும்..எழுதத் தொடங்கினேன்...

"ஏழைகளுக்கு..இலவசம்..இலவசம் என்று கொடுத்து அரசு அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டது..' என ஆரம்பித்தேன்....

Friday, December 25, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1. டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்

2.டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.

3.அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..duedate ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்

4.இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..

5.மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.

6.டாக்டர்- சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்
ஏன் டாக்டர்
ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே

Thursday, December 24, 2009

என்னவென்பது..


1) எனக்கும் உனக்கும்

ஏற்பட்ட பந்தம்

எண்ணில்

இரண்டை விரட்டியது

2)எழுத்தில் பிழையிருந்தும்

ஏற்றுக் கொள்கிறது

இணைய தளமெனும்

சங்கப் பலகை

3)உளறிடுவார்

திறனிழப்பார்

தூற்றப்படுவார்

டாஸ்மாக்கிற்கு

அடிமையானார்

4)ஊன்

உயிர்

உணர்வு

மனசெல்லாம் நீ

அப்போது

நான் யார்

5) கல் பார்த்து

கால் தூக்குவதை

நாய் என்றால்

சுவர் பார்த்ததும்

ஜிப் அவிழ்ப்பவனை

என்னவென்பது

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (25-12-09)

1)டிசம்பர் 24 மற்றும் 25 ஆப்த நண்பர்களாகவும்..கொள்கைகளில் இரு துருவங்களாயும்..நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்த இருவரும் 94ஆம் வயதில் அமரர் ஆனார்கள்.அவர்கள் பெரியார் மற்றும் ராஜாஜி ஆவர். ஆச்சர்யமான மற்றொன்று 24..புரட்சி தலைவர் மறந்த நாள் வேறு.இப்படி அமைவது அபூர்வம்.அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள்..அன்று பிறந்த மற்றொரு காந்தியவாதி லால் பகதூர் சாஸ்திரி.காலா காந்தி என்று அழைக்கப்பட்டவரும்..காந்திய வாதியுமான காமராஜர் மறைந்த தினமும் அக்டோபர் 2.

2)1812ல் பிரிட்டனும்..அமெரிக்காவும் யுத்தமிட்ட போது கனடாவில் இருந்த அமெரிக்க ராணுவத்திற்கு நியூயார்க்கிலிருந்து ஆண்டர்சன் என்பவர் உணவிற்கு இறைச்சி அனுப்பிக் கொண்டிருந்தார்.நல்ல இறைச்சியாக 'பேக்' செய்வதில் வில்சன் சாமுவேல் என்பவர் அவருக்கு உதவியாய் இருந்தார். யு.எஸ்.என்று பேக் செய்து வரும் பெட்டிகளை ராணுவ வீரர்கள் தமாஷாக அங்கிள் சாம் அனுப்பிய இறைச்சி வந்ததா என்பர்.இதுவே நாளடைவில் அமெரிக்காவிற்கு 'அங்கிள் சாம்' என்ற செல்லப் பெயர் ஏற்பட்டு விட்டது.

3)தாய்மொழிக் கல்வி பற்றி ஜெயகாந்தனை ஒருமுறைக் கேட்டபோது..தாய்மொழி என்பது பயிலப்பட வேண்டிய ஒன்றல்ல.அது இயல்பாக பாண்டித்யம் பெற வேண்டிய ஒன்று.நான் ஒரு தமிழ்ப்புலவன் அல்ல..ஆனால்..உங்க வாத்தியார்களிடமோ..உங்கள் பள்ளிக்கூடங்களிலோ நான் படிக்கவில்லை.அறிவாளியாவதோ..முட்டாளாவதோ அவரவர் விருப்பம் என்றார்.

4)இந்திய விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலும், 12 ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,4 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்,9 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும்,இருமுறை இந்திய பிரதமரை உருவாக்கிய ஒரே தமிழராகவும் இருந்த காமராஜர் இறந்த போது வாழ்வில் அவருக்கு எஞ்சியது
60 ரூபாய் 10 கதர் வேஷ்டி, சட்டைகள் மட்டுமே

5)சந்தோஷம் என்பது விரும்பியதை சொந்தமாக்கிக் கொள்வதில் இல்லை.கிடைத்த பின் அதை அனுபவிப்பதில் தான் இருக்கிறது.

6)தோல்விகளுக்கு இடையேதான் வெற்றி இருக்கிறது.குழப்பங்களுக்கிடையே தான் நம்பிக்கை இருக்கிறது.பிரச்னைகளுக்கு இடையே தான் சத்தியம் இருக்கிறது - அப்துல் கலாம்

7) ஒரு கவிதை

படித்தான்

படித்தாள்

கை நிறைய சம்பாதிக்கிறான்

கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்

மழலைகள்

8)ஒரு ஜோக்

தலைவர் ஏன் கோபமாய் இருக்கார்

சிறந்த நடிகருக்கான விருதை எதிர்ப்பார்த்தாராம்...வசனத்திற்கான விருது மட்டுமே கிடைத்ததாம் அதனால்தான்..

Wednesday, December 23, 2009

உணவும்..செரிமானமும்

நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

கவிதை என்றால் இது கவிதை

கடற்கரையில்

மீன்களின் கவுச்சி நாத்தம்

என்றவன்

வீடுவந்ததும்

அடுக்களையில் இருந்த

இல்லாளிடம்

மீன் குழம்பு வாசனை

பிரமாதம் என்றான்

2) ஏரிகளின் மீது

கட்டப்பட்ட கல்லறைகள்

அடுக்குமாடி கட்டிடங்கள்

3)நேற்று வறட்சி

இன்று மழை வெள்ளம்

நாளை வரப்போவது

மீண்டும் வறட்சி

4)ஏழையின்

ஈர்க்குச்சிக் கால்கள்

எலும்பு கைகள்

ஒட்டிய கன்னம்

வயிற்றுச் சுருக்கங்கள்

உருக்குலைந்த மேனி

இதில்

வறுமைக்கோட்டை

தீர்மானிக்கப் போகும்

அளவுகோல் எது

Tuesday, December 22, 2009

ஈரோடு திருவிழா


நான் சில நேரங்களில்..சில நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும் என தீர்மானித்திருப்பேன்..ஆனால் நிகழ்ச்சியன்று மறந்திருப்பேன்..அல்லது வேறு முக்கிய நிகழ்ச்சி வந்து..இருகோடுகள் தத்துவத்தில் அதி முக்கியநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வேன்.அல்லது..கொல்லன் பட்டறையில் ஈ க்கு வேலையில்லை என தெரிந்தால்..நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமாட்டேன்.

ஈரோடு நகரில் பதிவர் சங்கமம் நிகழ்ச்சிப் பற்றி கேள்விப்பட்டதுமே..ஈரோடு பதிவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சி அது என நினைத்தேன்.பின் வந்த பதிவுகளையும்..செய்திகளையும் பார்த்துவிட்டு..இது ஒரு மா பெரும் விழாவாக இருக்கும் என நினைத்தேன்.உடன் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் எண்ணம் வந்தது.அப்துல்லாவோ,கேபிளோ ஒரு வார்த்தை சொல்லி இருந்தால்..கண்டிப்பாக அவர்களுடன் வந்திருப்பேன்.

ஒரு கதை உண்டு..

ஒரு நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது.நாட்டு மன்னன் ஒரு தொட்டியைக் கட்டி..மக்கள் ஒவ்வொருவரும் ஒரு குவளை பாலைக் கொணர்ந்து அதில் கொட்ட வேண்டும் என கட்டளையிட்டான்.வறுமை நிலையில் மக்கள் பாலுக்கு எங்கே போவார்கள்?நாம் ஒரு குவளைத் தண்ணீரைக் கொட்டினால்..பாலுடன் தண்ணீர் கலந்துவிடும்..மன்னனுக்கும் தெரியாது என ஒவ்வொருவரும் எண்ணி தண்ணீரைக் கொண்டு வந்துக் கொட்டினர்.காலையில் மன்னன் பார்த்தால் தொட்டி முழுதும் தண்ணீர்.

அதுபோல நாம் ஒருவர் போகாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என எண்ணிவிட்டேன்.ஆனால் நிகழ்ச்சி முழுதும் மக்கள் பாலைக் கொட்ட..தண்ணீரைக் கொட்ட நினைத்த எனக்கே நஷ்டம்.

..நடந்த நிகழ்ச்சிகளையும்..விருந்தோம்பலும் பார்க்கும் போது எவ்வளவு முக்கிய நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பிருந்தும்..அதை இழந்திருக்கிறேன் என்ற வருத்தம் ஏற்பட்டது.

தனித்தனியாக பெயர் குறிப்பிடாமல்..நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் மீது சற்று பொறாமை ஏற்பட்டாலும்..யாம் பெறாத இன்பத்தைப் பெற்ற அவர்களுக்கு பாராட்டுகள்.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை ஈரோடு பதிவர்கள் எனக்கு கொடுக்காமலா இருந்துவிடப் போகிறார்கள்.பார்த்துக் கொள்ளலாம்.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துகள்.

Monday, December 21, 2009

வாய் விட்டு சிரியுங்க ..

ஊர்லே பவர் கட்டுன்னு எல்லாரும் மந்திரியையே திட்டறாங்களே ..அதைப்பற்றி என்ன நினைக்கிற..
சரிதான் போப்பா..என் மனைவி என் பவரை கட் பண்ணி ரொம்ப நாளாச்சு

2.வர வர எங்க மாதர் சங்கத்திலே தேவை இல்லாததுக்கு எல்லாம் கூட்டம் போடறாங்க
அப்படி என்ன தேவையில்லா விஷயம்
கணவனுக்கு அடங்குவது எப்படி ன்னு இன்னிக்கு கூட்டம்.

3.இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கல்யாண ஆசையே இல்லை
எப்படி சொல்ற
நிறைய பொண்ணுங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்து பார்த்துட்டேன்..நோ ரெஸ்பான்ஸ்

4.தலைவர் ஏன் சுடுகாட்டில மீட்டிங் வைக்கணும்னு சொல்றார்
அங்க அடக்கமானவங்க பெயர் எல்லாம் வோட்டர்ஸ் லிஸ்ட்ல இருக்காம்

5.என் மனைவி என்னை மனுஷனாகவே மதிக்க மாட்டேன்னு சொல்றா
எதை வைச்சு சொல்ற
இலை போட்டிருக்கு..சாப்பிட்டு வாங்க ன்னு சொல்றா

6.உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

Sunday, December 20, 2009

யாமெய்யாக் கண்டவற்றுள்...

பொய் பேசுவது என்பது இப்பொழுதெல்லாம் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.பொய்யையும் சொல்லிவிட்டு..வள்ளுவரே சொல்லியிருக்கிறார்..

பொய்ம்மையும் வாய்மை யிடத்தே புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

குற்றமில்லா நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும் கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்..என வள்ளுவனை துணைக்கழைப்பது நம் வழக்கமாய் விட்டது.

அதே வள்ளுவன்

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

மனதால் கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள் மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்..என்று சொன்னதை வசதியாக மறந்து விடுவோம்.

பொய் பேசுவது என்பது தவறான செயல் என்பது கூட தெரியாமலே செய்கிறோம்.சமுதாயத்தில் எல்லோராலும் செய்யப்படுகின்ற செயல் என அது நியாயப் படுத்தி விட்டோம்.நடைமுறை வாழ்வில் ஒன்றிவிட்ட அது தவறானதாக நமக்குத் தெரிவதில்லை.நம்மையும் அறியாது நாம் செய்யும் பாவச் செயலாக அமைந்து விட்டது.

இன்றைய உலகில் பொய் பேசாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்திட முடியாது.இன்றைய சமுதாயத்தில் அது கடினமும் கூட.அதனால்..அதற்காக அந்தப் பாவத்தை சர்வசாதாரணமாக ஒரு நாளைக்கு எவ்வளவு முறை செய்வது?

சாதாரண விஷயத்திற்கெல்லாம் பொய் பேச மாட்டேன்.மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே பொய் பேசுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.அதை நடைமுறைப் படுத்துங்கள் .ஒவ்வொரு நாளும் பேசும் பொய்களின் எண்ணிக்கையைக் குறையுங்கள்.

படிப்படியாகக் குறைத்து ஒரு நாளைக்கு ஒரு பொய் என்று கொண்டு வாருங்கள்.பிறகு இரண்டு நாளுக்கு ஒரு பொய்..பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு பொய்..என உங்களை சுத்தப் படுத்திக் கொள்ளுங்கள்.பொய் பேசுவதை மிகவும் குறைத்துக் கொள்வேன் என உறுதி பூண்டு..அதை நடைமுறை வாழ்க்கையில் அமுல் படுத்தினால்..அந்த செயல் உங்களை பெரிய அளவில் உயர்த்தி விடும்.உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.

இவ்வளவிற்கு பிறகும்..பொய் சொல்லிக் கொண்டே..நாம் பொய்யே சொல்லமாட்டேன் என்பீர்களானால்..நானும் வள்ளுவனை துணைக்கு அழைப்பேன்.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

(மனசாட்சிக்கு எதிராக பொய் சொல்லக் கூடாது.அப்படிச் சொன்னால் ,சொன்னவரின் ம்னமே அவரைத் தண்டிக்கும்) 

Saturday, December 19, 2009

நாங்களும் எழுதுவோம்ல..

1)நேற்றுவரை நீ யாரோ
உன் அருகாமையில்
இன்று நான் யாரோ!!

2) நீ யாரை நேசிக்கிறாய் என்றேன்
என்னை ஏறிட்டாய்
வேறு பெயரை சொல்லிடாதே!!!

3)உலகத்து பெண்களில்
நீயும் ஒருத்தி - எனக்கோ
உலகமே நீ ஒருத்தி

4)மெகா சீரியல்
நாயகி கண்ணீர் - பார்த்த
மக்கள் அழுகை
டி ஆர் பி ரேட்டிங் உச்சம்
தயாரிப்பாளர் வெற்றி சிரிப்பு

5)போ..போ..போ..
நீ போகுமிடமெல்லாம்
நானும் வருவேன்
உனைவிடமாட்டேன் என்றது
அவனது நிழல்

அதிபுத்திசாலி அண்ணாசாமியும்... சிறுகதைப் போட்டியும்..

சிறுகதைப் போட்டி பற்றிய அறிவிப்பு ஒன்று வந்திருந்தது.

அதைப்பார்த்ததும் அதி புத்திசாலி அண்ணாசாமியின் இல்லாள்..அவரை அதில் கலந்துக் கொள்ளச் சொன்னாள்.ஆனால் அண்ணாசாமிக்கு அதற்கான திறமை தனக்கு இல்லை என்று தெரியும்.ஆனால் அவரது மனைவியிடம் மிகவும் திறமைசாலியைப் போல இதுநாள் வரை நடந்து வந்திருந்தார்.

ஆகா..அப்படி நாம் நடந்துக் கொண்டதால்..இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டோமே..இப்போது சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிட்டதே என மனதிற்குள் புலம்பினார்.

தான் அனுப்பும் படைப்பு..பத்திரிகைகளில் சாதாரணமாக பிரசுரம் ஆவதற்கே தகுதி வாய்ந்ததா என்று தெரியாது..இதில் போட்டியில் வேறு கலந்துக் கொள்ள வேண்டுமா?என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாலும்..சகதர்மணிக்காக ஒரு குயர் வெள்ளைத்தாளும்..பேனாவுமாக உட்கார்ந்துக் கொண்டார்.

அடுத்து என்ன எழுதுவது என்ற பிரச்னை..எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற விதி இருந்ததால் ..நகரங்களில் காணாமல் போய் உள்ள சிட்டுக் குருவிகள் பற்றி எழுதலாமா? அல்லது ..சாதியத்தை வைத்து எழுதலாமா..என மண்டையை உடைத்துக் கொண்டார்.

ஆனால்..எதைப்பற்றி எழுதினாலும்..அது நன்றாய் இருக்கிறதா..இல்லையா..என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது..சரி..சரி..அதைப் பற்றி என்னக் கவலை..அதை தீர்மானிக்க வேண்டியவர்கள் நீதிபதிகள்.அவர்கள் கவலை அது.

பேனாவை அமுக்கி (பால் பாயிண்ட் ஆயிற்றே) சிட்டுக் குருவி பற்றி எழுத ஆரம்பிக்க..அது கழுகு ரேஞ்சிற்கு வந்தது.அதை மனைவிக்கு படித்துக் காண்பித்தார்..

பொறுமையாகக் கேட்டவள்..'என்ன எழுதி இருக்கீங்க..என்ன சொல்ல வரீங்க..ஒன்னுமே புரியலையே..இதை அனுப்பினால் நிதிபதிகள் ஒன்றும் புரியாமல் முழுதும் கூட படிக்க மாட்டார்கள்.குப்பைத் தொட்டிக்குத்தான் போகும்' என்றாள்.

'அப்படியா..அப்படியா..ஒன்னுமே புரியலையா?' என மிகவும் மகிழ்ச்சியுடன் அண்ணாசாமி கேட்டார்.மனைவியும் ஆமாம் என்பது போல தலையை ஆட்டினாள்.

'அப்போ பரிசு எனக்குத்தான்..ஒரு சாதாரண வாசகனால் படித்துப் புரிந்துக் கொள்ள முடியா கதை என்றால்..நடுவர்களுக்கும் புரியும் சான்ஸ் இல்லை.ஒரு சமயம் இந்தக் கதையில் ஏதோ விஷயம் இருக்கிறது..நாம் புரியவில்லை என்று காட்டிக் கொண்டால்..நம்மை முட்டாள் என எண்ணிவிடுவார்கள்..என்று ஒவ்வொரு நடுவரும் மனதில் நினைத்துக் கொண்டு என் கதையை பரிசுக் கதையாக தேர்ந்தெடுப்பார்கள்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது' என்றார் மனைவியிடம்.

அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் சாதனைக்காரன்..

தமிழ்ப் படங்களில் ரஜினி படங்கள் வசூலில் சாதனைப் படைப்பது என்பது ஆச்சரியமில்லை.ஆனால்..சமீப காலமாக ஆதவன்,கந்தசாமி,அயன் ஆகியபடங்களும் வசூல் சாதனைப் படைத்தன.

அந்த நாட்களில் சிவாஜி,எம்.ஜி.ஆர்., படங்கள்..சென்னையில் வெளியிடப்பட்ட நான்கு தியேட்டர்களிலும் நூறு நாட்கள் ஓடினால்..அதை சாதனையாக விளம்பரப் படுத்தியது உண்டு,ஆனால் இப்பொதெல்லாம் ஒரு படம் நூறு நாட்கள் ஓடுவதோ..சில்வர் ஜூபிலி ஓடுவதோ சாதனையாக இருப்பதில்லை.கந்தசாமி நொண்டி..நொண்டிதான் கடைசியில் பகல் காட்சியாகி நூறு நாட்கள் ஓடியதாக கணக்கில் காட்டப்பட்டது.

படம் ஓடாமல்..வசூல் சாதனை எப்படி..என்று கேட்டால்..

இப்போதெல்லாம்..பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் 600 பிரிண்டுகள் போடப்படுகின்றன.ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப் படுகின்றன.வெளியான ஓரிரு வாரங்களில் நல்ல வசூலுடன் சாதனைப் படைப்பதுடன்..தயாரிப்பாளர்,விநியோகஸ்தர்,தியேட்டர் உரிமையாளர்கள் என எந்த அக்ரிமெண்டில் இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது லாபம் தரத் தொடங்குகின்றன.

வேட்டைக்காரனும் அதே வழியைப் பின்பற்றுகிறான்..

படத்தில் புதுமை ஏதும் இல்லை..சுமார் தான் என செவி வழிச் செய்திகள் கிடைத்தாலும்..600 பிரிண்டுகளுடன் உலகம் முழுதும் ஒரே நாளில் வெளியாகி உள்ள இப்படம்..சென்னையில் மட்டும்..ஒரே நாளில் 126 காட்சிகளுக்கு மேல்நடைபெறுகிறது.மாயாஜாலில் ஒரு நாளைக்கு 42 காட்சிகள்.

குறைத்து மதிப்பிட்டு..ஒரு காட்சிக்கு 50000 நிகர வருமானம் என வைத்துக் கொண்டாலும்..ஒரு வாரத்தில் சென்னயில் மட்டும் 4 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளும் என்று நம்பலாம்.

இதுவரை வசூல் சாதனைப் படைத்துள்ள படங்கள் எல்லாவற்றையும் தாண்டி வேட்டைக்காரன் வசூல் அள்ளுவான் என சென்னை நகரம்,சேலம் விநியோக உரிமை பெற்றுள்ள அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

விஜய் படத்திற்கு முன் எப்போதும் இல்லா அளவிற்கு இப்படம் ஓபனிங் கொடுத்துள்ளதாம்.

எல்லாருக்கும் தேங்க்ஸ்ணா என்கிறாரா விஜய்..

வாய் விட்டு சிரியுங்க

1.நண்பர்-(அலுவலக மதிய உணவு இடைவேளையில்)இன்னிக்கு நீ லஞ்ச் கொண்டுவரலியா?
நண்பர்2-கொஞ்சம் gas டிரபுள்..அதுதான் கொண்டுவரல்ல
நண்பர்- இப்பத்தான் சொன்ன உடனே gas கொண்டு வந்துடறாங்களே

2.இந்த வாரம் @@ சானல்ல
உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையா...
என்ன படம் போடப்போறாங்க
தமிழில் 1931ல் வந்த முதல் படம் காளிதாஸ்

3.மனைவி(கணவனிடம்)- ஏங்க ...நம்ம மகனுக்கு தலையிலே மூளை கிடையாது..களிமண்ணுதான்னு சொல்வீங்களே..உண்மைதாங்க...தலையிலே செடி முளைச்சிருக்கு

4.டாக்டர்-(நோயாளியிடம்) வயிற்றுவலியா...மோஷன் எல்லாம் ஃப்ரீயா போறீங்களா?
நோயாளி-ஃப்ரீயா..எங்க டாக்டர் போக முடியுது..இப்பக்கூட இரண்டு ரூபா கொடுத்துத்தான் பப்ளிக் டாய்லட்லே போயிட்டு வரேன்.

5.மனைவி-(கணவனிடம்)என்ன அநியாயம்..பாருங்க..நம்ம பையன் மேத்ஸ் ஹோம் ஒர்க் சரியா செய்யலைன்னு..உங்கப்பாவை கூட்டிக்கிட்டு வான்னு சொன்னாங்களாம்...நியாயமாப்பார்த்தா...நீங்க தானே உங்கப்பாவை கூட்டிக்கிட்டு போகணும்.

6.உன் புடவை எல்லாம் எப்படி இவ்வளவு வெளுப்பா இருக்கு?
என் புடவையை என் கணவர் துவைக்கறப்போ சண்டை போட்டுடுவேன்...என் மேல் உள்ள கோபத்தை துணிகளில் காட்டி அடி அடி ன்னு அடிச்சு தோய்ச்சுடுவார்.

Thursday, December 17, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (18-12-09)

ஒரு நாட்டுப்புறக் கதை...

மகன் ; அப்பா இந்த யானை எப்படி செத்துப் போச்சு

அப்பா- தந்தம் எடுக்கறதுக்காக கொன்னுட்டாங்க

மகன்-தந்தம் எடுத்து என்ன பண்ணுவாங்க...அப்பா

மகன்-யானை பொம்மை செய்வாங்க..

அதாவது உயிருள்ள யானையைக் கொன்று..ஷோ கேசில் வைக்க பொம்மை யானை தயாரிப்பார்கள் நாகரிக மனிதர்கள்.

2)பலமுடையவர்கள் உழைப்பில் நம்பிக்கை வைக்கிறார்கள்.பலவீனமானவர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள்

3)வாழ்க்கையில் செல்வம் குறைந்துப் போனால் அது ஒரு இழைப்பே அல்ல.ஆரோக்கியம் குறைந்தால் ஓரளவு இழப்பு.உற்சாகம் குறைந்தால் எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்

4) இழி மொழியால் எவரையும் தாக்கத் தேவை இல்லை.தமிழை அத்தகைய தகாத செயலுக்கு பயன் படுத்துதல் கூடாது.நமது உள்ளத்தை திறந்துக் காட்ட, உறுதியை வெளிப்படுத்தவே தமிழைப் பயன் படுத்த வேண்டும். -அறிஞர் அண்ணா

5) காலத்திற்கேற்ப கோபத்தையும்..பொறுமையையும் மேற் கொள்ள வேண்டும்.தண்ணீரை அளவுடன் சூடு பண்ணிக் குளிப்பது போல கோபம் அளவுடன் இருக்க வேண்டும்.சீறும் நாகங்கள் தான் பூஜிக்கப் படுகின்றன.

6)ஒரு கவிதை

கோடாரியுடன்

வெட்ட வந்தவன்

வியர்வை காய

இளைப்பாறினான்

விரிந்த மரத்தின்

பரந்த நிழலில்

- ராஜகுமரன்

7)ஒரு ஜோக்

தலைவர் தினமும் ஏன் கடற்கரைக்குப் போகிறார்

அனுதாப அலை இருந்தால் தேர்தலில் வெல்லலாம் என ஜோதிடர் சொன்னாராம்.அனுதாப அலை வீசுகிறதா எனப் பார்க்கவே தினமும் போகிறார்

இடது மூலை

இப்போதெல்லாம்

செய்தித் தாள் வந்ததும்

அவசர அவசரமாக

கண்கள்

விளையாட்டுப் பகுதி பக்கத்தின்

இடது மூலையைப்

பார்க்கவே விரும்புகிறது

தெரிந்தவர்கள் பெயர்

என்னைவிட

வயது குறைந்தோர்

பெயர் வருகிறதா என்று

Wednesday, December 16, 2009

கலைஞரின் மருத்துவக் காப்பீடு திட்டம்

சிறந்த மருத்துவமனைகள் இந்தியாவில் சிறப்பாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக தமிழ்நாடு மருத்துவத்தில் தலை சிறந்து விளங்குகிறது.

அப்பல்லோ,விஜயா,ராமசந்திரா,சங்கர நேத்ராலயா,டாக்டர் அகர்வால்,ஃப்ரண்ட்லைன்,மெட்ராஸ் மெடிகல் ,மியாட் என சென்னையில் பிரபல தனியார் மருத்துவ மனைகளும்..ராயப்பேட்டா,ஸ்டான்லி,பொது மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவ மனைகளும் சிறப்பாக செயல்பட்டு வரும் சில மருத்துவமனைகள்.

சென்னைக்கு, இந்தியாவில் இருந்து மட்டுமல்ல மற்ற வெளிநாடுகளிலிருந்தும் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் சிறுமிக்கு..சென்னையில் இலவச சிகிச்சை, இராக் குழந்தைக்கு சென்னை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை என குறிப்பிட்டுள்ள மருத்துவமனைகளின் புகழ் செய்தித் தாள்களில் அவ்வப்போது வந்துக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் 2004ஆம் ஆண்டு கணக்குப்படியே 5 லட்சத்திற்கும் அதிக மருத்துவர்கள்,ஏழு லட்சத்திற்கும் அதிக நர்ஸுகள் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சொல்கிறது.இப்போது மேலும் அதிகரித்திருக்கக் கூடும்.

நம் நாட்டில் அறுவைசிகிச்சைக்கான மருத்துவ செலவு குறைவு. உதாரணமாக அமெரிக்காவில் இதய அறுவை சிகிச்சைக்காக பதின்மூன்று லட்சம் செலவாகிறது என்றால்..அதே அறுவை சிகிச்சை நல்ல தரத்துடன் இந்தியாவில் இரண்டரை லட்சத்தில் செய்திட முடிகிறது.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள்,திறமை மிக்க மருத்துவர்கள்,அன்பான நர்ஸ்கள் அனைத்திற்கும் மேலாக குறைவான செலவு போன்ற காரணங்களுக்காக உலகத்தின் பல மூலைகைளிருந்தும் நம் மருத்துவமனைத் தேடி வருகிறார்கள்.

அது சரி..வசதி இல்லாதவர்கள்..வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் நிறைந்த நம் நாட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகள் இருந்து என்ன பயன்? என்று கேட்கறீர்களா?

அமெரிக்காவில் உள்ளது போல மருத்துவத்திற்கான இன்ஷ்யூரன்ஸ் திட்டம் இங்கும் வரவேண்டும்.

அதற்கு முதன்முதலாக கலைஞரின் அச்சாரம் போட்டுள்ளது எனலாம்.இத் திட்டத்தை பலர்..பலவிதமாக விமரிசிக்கலாம்.ஆனாலும்..ஆண்டிற்கு 72000 க்குள் வருமானம் உள்ளவர்கள் குடும்பத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை என்பது கண்டிப்பாக சிறந்த திட்டம்.தயவு செய்து இதில் யாரும் அரசியலை புகுத்த வேண்டாம்.போகப் போக வருமான வரம்பும்..சிகிச்சைக்கான பணமும் அதிகரிக்கக்கூடும்..இது போன்ற திட்டங்கள் இந்தியா முழுதும் அமுல் படுத்தப் பட வேண்டும்.

இது போன்ற திட்டத்தில் மத்திய அரசின் பங்கும் இருக்க வேண்டும் .

நாட்டில் மருத்துவ வசதியின்றி இறக்கும் மக்கள் என்ற ஒன்று இருக்கவே கூடாது.

இலவச திட்டங்கள்...தேவையில்லா இடைத் தேர்தல்கள் ஆகியவற்றைக் குறைத்து..இது போன்ற திட்டங்களை மாநில அரசுகளும்..மத்திய அரசும் செயல் படுத்த வேண்டும்..

நடக்குமா?

பேசும் கண்கள்

கசாப்புக் கடையில்

உரித்து தொங்க விட்டிருந்த

ஆட்டின் கண்கள் கேட்டன

கசாப்பு கஜாவை

எண்ணில் அடங்கா உயிர்களை

நொடிக்குள்

சிதறடிக்கும் உன்னால்

ஒரே ஒரு முறை

ஓய்ந்து நின்ற என் இதயத்தை

இயக்கிட முடியுமா சொல்..

அதனை செய்து

புலால் உண்ணுபவனிடம்

அருளில்லை என்ற

பொய்யாமொழிப் புலவனின் வாக்கு

பொய்யென நிரூபி..

Tuesday, December 15, 2009

என்னவாயிற்று ஹுசைனிற்கு? (ஒரு பக்கக் கதை)

நான் ஒரு இந்தியன் என வார்த்தைக்கு வார்த்தைக் கூறி பெருமைப்பட்டுக் கொள்பவன் ஹுசைன்.

அரசின் தாராளமயமாக்கல் கொள்கையில் பல வெளிநாட்டுப் பொருள்கள் இந்தியாவில் கிடைத்தாலும்..ஹுசைன் தரம் பற்றிக் கூடக் கவலைப் படாமல் இந்திய பொருள்களையே வாங்குவான்.கேட்டால்..இது இந்திய தயாரிப்பு..என் சகோதரன் ஒருவன் கையால் உருவாக்கப்பட்டது..பி இந்தியனாய் இருந்தால் மட்டும் போதாது..பை இந்தியனாய் இருக்க வேண்டும் என்றும் கூறுவான்.

அப்படிப்பட்டவனுக்கு திடீரென என்னவாயிற்று என்று தெரியவில்லை..'நான் ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்றிருக்கிறது..நான் பாகிஸ்தானில் பிறந்திருக்கக் கூடாதா ?' என்று சிறிது நாட்களாக புலம்ப ஆரம்பித்திருந்தான்.

'சுதந்திரம் கிடைத்ததும் ..என் முன்னோர் பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு குடி உரிமை பெற்றிருக்கலாமே..தவறு செய்து விட்டார்கள்' என்றான் ஒருநாள் என்னிடம்..கண்களில் முட்டிக் கொண்டிருக்கும் கண்ணீருடன்.

இவ்வளவு நாட்களாக இந்தியன் என்று பெருமையாகப் பேசியவனை எது மாற்றியது..என அறியாது திகைத்தேன் நான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை..

ஹுசைனைப் போய் பார்க்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல..பெரம்பூர் ஜமாலியாவிற்குச் சென்றேன்.

வாசல் வழியாகவே வந்து என்னை வரவேற்றான்..அவன் மனைவி ரஷீதாவிற்கு குரல் கொடுத்தான்'ரஷீதா குமரன் பாயி வந்திருக்கார் பாரு".ரஷீதா வந்து 'கைசே ஹோ பாயி?'என்றாள் கையில் சாய் உடன்.

அவனது இரண்டு வயது மகன்..ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் குட்டிப்பையனைப் போல..அப்படியே சாப்பிடுவேன் போல..இருந்தான்.அவனுடன் சிறிது நேரம் விளையாட ஆரம்பித்தேன்.

'குமரா..இவனுக்கு இதயத்தில் கோளாறு..ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யணுமாம்..கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் செலவாகுமாம்..அதற்குத்தான் என்ன செய்யறதுன்னு தெரியலை" என்று மனம் திறந்தான் ஹுசைன் என்னிடம்.

அப்படியா? என்று கேட்டுவிட்டு..அவனது வருத்தம் தோய்ந்த முகத்தைப் பார்க்க முடியாது என் பார்வையை டீபாய் மீது இருந்த ஒரு பழைய செய்தித்தாள் மீது செலுத்தினேன்.

'பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தை ஒன்றுக்கு இலவச இருதய மாற்றுச் சிகிச்சை..சென்னை மருத்துவர்கள் சாதனை' என்று கொட்டை எழுத்துக்களில் இருந்த செய்தி கண்ணில் பட்டது.

ஹுசைனின் திடீர் மன மாற்றத்திற்கான காரணம் புரிந்தது.

Monday, December 14, 2009

நம்பிக்கைதான் விளக்கு

யானையின் பலம் எதிலே
தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே
நம்பிக்கையிலே

இப்படி ஒரு சினிமா பாடல் உண்டு.மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்..அப்போதுதான் அவனால் வாழ்வில் முன்னேற முடியும்.எந்த காரியத்தையும் செய்ய என்னால் முடியும் என்ற எண்ணம் வேண்டும்.ஒரு சின்னக் கதை

இரண்டு தவளைகள்..ஒரு பெரிய அடுக்கில் இருந்த பாலில் விழுந்து விட்டன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்கமுடியாது என்று நம்பியது ஒரு தவளை.இது அவ நம்பிக்கை கொண்ட தவளை.
பாலில் அடிப்பாகம் சென்று அங்கேயே செத்து மடிந்தது.

ஆனால் அடுத்த தவளையோ நம்பிக்கை உள்ளது.

பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்தது.உதைத்தது.நீச்சல் போட்டது.உந்தி உந்தி கலக்கியது.பால் கலங்க ஆரம்பித்து ஆடை படர்ந்தது.மேலும் மேலும் நீந்தியது.சிறிது சிறிதாகத் திரண்ட வெண்ணெய் பாலில் மிதந்தது.

நம்பிக்கை இழக்கா தவளை வெண்ணெய் மீது அமர்ந்துக் கொண்டது.வெளியே தாவி பாய்ந்து தப்ப சிறிது ஓய்வு கிடைத்தது.

பால் பாத்திரத்தை விட்டு தாவி குதித்து ஓடியது..இது நம்பிக்கை.

பாலின் அடியில் சென்றது செத்து மடிந்தது அவநம்பிக்கை.

நம்மை ஒரு துன்பம் சூழும் போது துவண்டுவிடாமல்..அதிலிருந்து வெளிவரும் நம்பிக்கை இருந்தால் வாழ்வில் நமக்கு வெற்றியே கிடைக்கும்.

இதையே வள்ளுவர்..

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்

என்கிறார்..

துன்பம் சூழும் போது துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்

Sunday, December 13, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் -11 (அழுகையில் நகை)

நகையும்..அழுகையும் ஒன்றோடொன்று மாறுபட்ட சுவைகள் ஆகும்.பிற சுவைகளோடு நகைச்சுவை கலத்தல் அரிதாகும்.ஆயின் அழுகைச் சுவையோடு..நகைச்சுவையைக் கலந்து கொடுப்பது இலக்கியச்சுவை ஆகும்.இரு முரண்பட்ட சுவையை கம்பர் சித்தரிக்கிறார்.ராமன் சிரித்ததை எண்ணி, அசோகவனத்தில் சீதை அழும் காட்சி.

ராமன்..ஏன் சிரித்தான்..எங்கு சிரித்தான்..

ராமனும் , சீதையும் லட்சுமணன் தொடரக் காடு செல்கின்றனர்.வழியில் ஏழி எளியவர்க்கு வேண்டியவற்றை வாரி வழங்கிய படி செல்கிறான் ராமன்.

ராமனிடம்..வேண்டுவோர்..வேண்டியதைப் பெரும் தருணம்..திரிசடன் என்னும் முனிவன் வெளியே போயிருந்தான்.நீண்ட நேரம் கழித்து இல்லம் திரும்பிய அவனை..அவன் மனைவி..'காடு செல்லும் ராமனிடம்..எல்லோரும் எல்லாம் பெற்று செல்கின்றனர்..நீ எங்கே போனாய்..நீயும் அவனைத் தேடிப்போய் எதாவது வாங்கிக்கொண்டு வா..' என துரத்துகிறாள்.

ராமன் செல்லுமிடம் அறிந்து முனிவனும் விரைந்து ராமன் முன் நின்று..'எல்லோருக்கும் எல்லாம் தருகிறாயே..எனக்கும் ஏதேனும் ஈ.' என ஈ என இளிக்கிறான்.

ராமன் காடு செல்வது பற்றி அவனுக்குக் கவலை இல்லை..தனக்கு ஏதேனும் கிடைக்க வேண்டுமென்ற கவலை.'அங்கே அரண்மனை பசுக்கள் ஆயிரக்கணக்கில் மேய்கின்றன..அவற்றுள்..இரண்டு அல்லது மூன்று பசுக்களை எடுத்துச் செல்' என்கிறான் ராமன்.

ஆனால் பேராசை முனிவனோ..தன் கையிலுள்ள தடியைச் சுற்றி எறிந்தால் அது எங்கு சென்று விழுகின்றதோஅதுவரையில் உள்ள பசுக்களை எனக்குக் கொடு..என்கிறான்.

மண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றை ஒழித்ததாகக் கூறும் முனிவன் மாட்டாசை பிடித்து அலைகிறான்.ராமனும்..உன் ஆசையை நிறைவேற்றிக் கொள் என்கிறான்.

முனிவன் முற்கி..முனைந்து முழு வீச்சில் கைத்தடியை வீச..ஐநூறு பசுக்களுக்கு அப்பால் சென்று விழுந்தது தண்டம்.அப்போதும் ஆசை தீராது..எல்லாப் பசுக்களையும் கவரும் வலி தனக்கில்லையே என வெறுத்துக் கொண்டான் முனிவன்.முற்றும் துறந்தவன்.

ஆனால்...இப்போது நாட்டையும்..அரசையும்,முடியையும் துறந்து பற்றற்று நிற்கும் உண்மை முனிவனான ராமன் ,.ஐநூறு பசுக்களைப் பெற்றும் ஆசை ஒழியா போலி முனிவனின் நிலைக் கண்டு வாய் விட்டு சிரித்தான்.இந்த அரியக் காட்சியை..

பரித்த செல்வம் ஒழியப் படருநாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவன்
கருத்தின் ஆசைக் கரையின்மை கண்டிறை
சிரித்த செய்கை நினைந்தழும் செய்கையால்
(கம்ப ராமாயணம்..சுந்தர காண்டம்)

என்று தன் கவியில் காட்டுகிறார் கம்பர்.ராமன் சிரித்த காட்சியை எண்ணி சீதை அழுதாலும்..கம்பரின் இக்காட்சி..அழுகைக்கிடையே நமக்கு சிரிப்பைத் தருகிறது..அழுகைச் சுவையோடு.நகைச்சுவை கலந்த அழகுக் காட்சி இது.

Saturday, December 12, 2009

வாய் விட்டு சிரியுங்க

1.அந்த டாக்டர் ஐயப்ப பக்தர்னு எப்படி சொல்ற..
தலைவலின்னு போனாக்கூட படிப்படியா 18 நாள் மருந்து சாப்பிடணும்னு சொல்வார்.

2.அந்த டாக்டர் முன்னாலே சினிமா டைரக்டரா இருந்தார்னு எப்படி சொல்ற
நோயாளிகிட்டே 4 ரோல் எக்ஃஸ்ரே ஃபிலிம் எடுத்துடுங்கன்னு சொல்றாரே!!

3.புயல் மழையாலே மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே..ஏன்?
மாமூல் வாங்கறவங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதை அப்படி சொல்றாங்க போல யிருக்கு.

4.தயாரிப்பாளர்-கண்ணே..கலைமானே ங்கிற பாட்டை நீங்க எழுதினீங்களா?
கவிஞர்- ஆமாம்
தயாரிப்பாளர்- வாங்க கண்ணதாசன் ஐயா...இவ்வளவு நாட்கள் நீங்கள் அமரர் ஆகிட்டீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

5.உன் பையன் புதுசா..ஏதோ பிஸினஸ் ஆரம்பிக்கப்போறதா சொன்னியே..என்ன பிசினஸ்
மெகா சீரியல் பார்க்கறச்சே எப்படி அழணும்னு சொல்லிக்கொடுக்கப் போறானாம்.

6.கல்யாணம் ஆனதிலே இருந்து..வனஜாவுக்கு கர்வம் ரொம்ப அதிகமாயிடுச்சு
ஏன்
அவ புருஷன் அருமையா சமைக்கிறானாம்.

Friday, December 11, 2009

வாழ்த்துகளா..அனுதாபமா


மகளின் மணம்

சீர் செனத்தியென

ஐம்பது பவுன் நகை

ஐம்பதாயிரம் வராததட்சணையாக

வெள்ளி பித்தளை

உங்க பொண்ணுக்குத்தானே

உள்குத்து பேச்சுடன்

சாப்பாட்டுச் செலவு

சத்திர வாடகை

பதிவு செய்ய கையூட்டு

இத்தியாதி..இத்தியாதி..

வாழ்நாள் சேமிப்பு

ஒரே நாளில் கரைகிறது

குழம்பில் கலக்கப்படும்

பெருங்காயமாய்..

வந்தவர்கள் சொல்கின்றனர்

வாழ்த்துகளை

பெண்ணின் தந்தையிடம்

அவர் காதுகளில்

ஒலி அலைகள் மாறி

அனுதாபங்கள் என்றே

ஒலிக்கிறது

Thursday, December 10, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (11-12-09)

உலகில் விளைகின்ற காய்கறிகளில் 13 சதவிகிதம் இந்தியாவில் விளைகின்றன.அதுபோல பழங்களில் 12 சதவிகிதம் இந்தியாவில் விளைகின்றன.குறிப்பாக மாம்பழம்,வாழைப்பழம் போன்ற பழங்கள்..பச்சைப் பட்டாணி,முந்திரி,வெங்காயம் ஆகியவை.ஆனால் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 1.38 சதவிகிதம் மட்டுமே.

2)மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே சங்க இலக்கியங்களைப் படைத்துப் பெருமை பெற்ற மொழி நம் தமிழ் மொழி.கி.பி.14 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இலக்கியப் பின்னணியைப் பெற தொடங்கிய ஆங்கில மொழி 600 ஆண்டுகள் மட்டுமே பழமை கொண்டது.

3)பாரதிக்குப் பின் தமிழுக்குப் பெருமை சேர்க்க வந்தவர்களில் கண்ணதாசன் மிக முக்கியமானவர்.5000க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் 6000 கவிதைகள் 232 புத்தகங்கள்,நாவல்கள்,நாடகங்கள் என முத்தமிழையும் வளர்த்த மாபெரும் கவிஞர் ஆவார்.
'நிரந்திரமானவன் அழிவதில்லை -எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை'
என்றவர் அவர்.

4)விலங்குகள் எல்லாம் காலால் நடக்கிறபடியால் 'கால்நடை' என்று அழைக்கப் படுகின்றன.மனிதனும் காலால் தான் நடக்கிறான்.அவனை ஏன் கால்நடை என்று சொல்வதில்லை? மனிதன் காலால் மட்டும் நடக்காமல்..மனத்தாலும் நடக்கிறான்..நாவினாலும் நடக்கிறான்..இந்த மனநடையும், நானடையும் விலங்குகளுக்கு இல்லை.

5)இருக்கும் தலைமுறைக்கு மட்டுமில்லாமல்..பிறக்கும் தலைமுறைக்கும் பயன்பட்டவர்களைத்தான் வாழ்ந்தவர்களாக வரலாறு கருதுகிறது.

6)வேலை நேரத்தில் பேசினால் உருப்படமாட்ட என்று தந்தை கண்டித்தும் அப்பாவிற்கு சவால் விட்டு..வேலை நேரத்திலும் பேசி சம்பாதிக்கிறான் அவன்..
அவன் தொழில்... வக்கீல்

7) இந்த வாரம் கல்யாண்ஜி கவிதை ஒன்று

ஓலைக் காற்றாடி சுழல
ஓடி வந்து
அண்ணாந்து பார்த்து
கண் இடுங்கச் சிரிக்கலாம்
அலுமியப் பறவைகளை.
எந்த குண்டும் இதுவரை
இங்கே விழுந்ததில் லையே!!

(நன்றி-ஆனந்த விகடன்)

Wednesday, December 9, 2009

அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்


டிசம்பர் 30 முதல் ஜனவரி 10ஆம் நாள்வரை நடைபெற உள்ள 33ஆவது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வர உள்ளன.விவரம் வருமாறு..

நாள் - டிசம்பர் 11 மாலை 5.30 அளவில்

இடம் - டிஸ்கவரி புக் பேலஸ்
6,மகாவீர் வணிக வளாகம்
முனுசாமி சாலை
கே.கே.நகர் (மேற்கு)
(பாண்டிச்சேரி ஹவுஸ் எதிரில்)
சென்னை - 60078

அனைத்து புத்தகங்களும் வெளியீட்டுவிழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் மேடைநாடகங்கள் உயிரிழந்துக் கொண்டிருக்கின்றன..என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும்..விஞ்ஞான வளர்ச்சிகளை தடுக்க முடியாது.ஆனால் இன்றும் நாடகங்கள் இங்கொன்றும்..அங்கொன்றுமாய் நடந்துக் கொண்டுதான் வருகின்றன.

சி.டி., டி.வி.டி., வருகையால் திரைப்படங்கள் பாதிக்கப் படும் என்று சொல்லப்பட்டது.இந்த கூற்றிலும் உண்மை இருந்தாலும்..நல்ல திரைப்படங்களை மக்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கவே விரும்புகின்றனர்.அதனால்தான் சமீபத்திய சில படங்கள் போட்டி போட்டுக்கொண்டு வசூலில் சாதனைகள் செய்து வருகின்றன.

..இணையத்தில் தினசரிகளும்,பத்திரிகைகளும் படிக்கும் வாய்ப்பிருந்தாலும்..வீடு தேடி அச்சு வாசனையுடன் காலையில் வரும் தினசரிகளைப் படிப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.கண்களுக்கு அதிகம் சிரமத்தைக் கொடுக்காமல் அச்சிட்ட பத்திரிககளையே படிக்க விழைகின்றனர்.

இந்நிலையில் நண்பர் பொன்.வாசுதேவன் இணைய எழுத்தாளர்களின் படைப்பை அச்சில் கொண்டுவந்து..அப்புத்தகங்கள் வெளீயீட்டு விழாவை நடத்துகிறார்.அவரின் இம் முயற்சிக்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

வாசு..உங்களுக்கு எங்கள் வாழ்த்துகளும்..பாராட்டுகளும்..

நாமும் அவரின் இம்முயற்சி வெற்றிபெற ..மேன்மேலும் சிறக்க..வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வதுடன்..அப்புத்தகங்களையும் வாங்கி..நம் ஒத்துழைப்பை அவருக்கு தர வேண்டும்.

அன்று வெளிவர இருக்கும் புத்தகங்கள்...

கவிதைகள்

1.கருவேல நிழல் - பா.ராஜாராம்

2.கோவில் மிருகம்- என்.விநாயகமுருகன்

3.நீர்க்கோல வாழ்வை நச்சி - 'உயிரோடை' லாவண்யா

4.கூர்தலறம் - டி.கே.பி.காந்தி

சிறுகதைகள்

1.அய்யனார் கம்மா - நர்சிம்

கட்டுரைகள்

1.பார்ப்பன சிபிஎம்+அமார்க்கியம் = ஈழ விடுதலை எதிர்ப்பு அரசியல் -தொகுப்பாசிரியர் வளர்மதி

புத்தகங்களை எழுதியுள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும்..உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

கலைஞரும்..குஷ்புவும்..அண்ணாசாமியின் சந்தேகமும்..

அதிபுத்திசாலி அண்ணாசாமிக்கு திரைப்பட விருது வழங்கு விழா நிகழ்ச்சிகள் குறித்து சில சந்தேகங்கள் ஏற்பட்டதாம்.அவை..அண்ணாசாமியே சொல்கிறார்..

2007 மற்றும் 2008 க்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.70க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு முதல்வர் விருதுகள் வழங்க..சிறந்த உரையாடலுக்கான விருதை கலைஞருக்கு ரஜினி,கமல்,வாலி,வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.அரசின் விருது..அரசில் சம்பந்தப் படாதவர்கள் வழங்குவது சரியா என தெரியவில்லை.

சரி..தலைப்புக்கு வருவோம்..விழாவில் கலைஞர் பேச்சில் ஒரு துளி...

உடலுக்கு, உயிருக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்படாது என்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.எனக்கு மருந்தாக அமைவது கலையுலகம்தான்.இங்கு விவேக் ஒரு கற்பனை நாடகத்தை நடத்தினார்.தமிழை காப்பாற்றியே தீருவோம் என்றார்.குஷ்பு பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழ் மொழியின் வல்லமை எத்தகையது என உணரலாம்.அத்தகைய சக்தி தமிழுக்கு உண்டு.உலகம் முழுதும் பரவிய மொழி தமிழ்.மற்ற மொழி போல ஆதிக்கம் செலுத்த வந்த மொழி இல்லை.அதுதான் நம் தாய் மொழி.செம்மொழி தமிழ்.இதை காப்பாற்ற பல போராட்டம் நடத்தி நாம் வென்றோம்.

இனி அவரின் சந்தேகங்கள்...

தமிழ் அழியாத மொழி என்றால் போராட்டம் நடத்தி வென்றோம் என்றால் ....கலைஞர் சொல்ல வருவது புரியவில்லை.

குஷ்பு தமிழ் பேசத் தெரியாதவர் என்றால்..அரசு விழாவில் தொகுத்து வழங்க அவரை ஏற்பாடு செய்தது யார்.

ஒரு வேளை ஜெயா டி.வி.,யில் குஷ்பு நிகழ்ச்சிகள் நடத்துவதால் அதை மறைமுகமாக கலைஞர் கிண்டல் செய்தாரா?

குஷ்பு பேசியே தமிழ் அழியாது என்றால்..படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைத்தால் வரிச்சலுகை ஏன்?

வரிச்சலுகையை நியாயப்படுத்தி பேசினால்..தமிழ்ப் படங்களில் தமிழ் நடிக..நடிகர்கள் நடித்தால் மேலும் சில சலுகைகளை அறிவிக்குமா அரசு.

இங்கு ஒரு லட்சம் அல்லது இரு லட்சம் தருவார்கள் அதை ஏழை எளிய மக்கள் வாழ்வதற்கும்..முதல்வர் நிவாரண நிதிக்கும் வழங்கலாம் என நினைத்தேன்.ஆனால் அப்படித்தராமல் தங்கப் பதக்கம் அணிவித்தனர்..என்று முதல்வர் பேசியுள்ளார்..தன் அரசு வழங்கும் விருது பதக்கமா..பணமா என்பது கலைஞருக்கு முன்னமே தெரியாதா?

Tuesday, December 8, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 10


கவிஞர்கள், கலைஞர்கள் இயற்கையைக் கடவுளாகக் கண்டனர்.அன்பின் முதிர்வாம் காதல் கண்டனர்..மாந்தர் வாழ்வில் உள்ள தீமைகள் இன்றிப் புள்ளினங்கள் நடத்தும் நலவாழ்வு கண்டனர்.

அத்துடன் நில்லாது,இத்தகையக் காட்சிகளை செந்தமிழ் நடையில்..பாட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார் கவமணி தேசிக விநாயகம் பிள்ளை.

அவருக்கு பசுவின் செயல்கள் பெரு வியப்பை ஏற்படுத்துகின்றனவாம்.சுவையற்ற புல்லைத் தின்கிறது பசு.அதனைச் சுவை மிக்க வெண்ணிற பாலாக்கி தருவதற்கு..அது என்ன செய்கிறது..

அத்துடன் மட்டுமின்றி..கன்று ஈனும் பசு..ஈன்றதும்..அக்கன்று மூச்சு ..பேச்சின்றிச் சோர்ந்து கிடக்கிறது.தனது அன்புக் கன்றை உச்சி மோந்து நாவால் நக்குகிறது தாய்ப்பசு.அவ்வளவுதான்..

ஆயின் என்ன விந்தை? உடனே உயிர் பெற்று எழுந்து துள்ளுகின்றது கன்று..தாய்ப்பசுவின் நாவில் உள்ள உயிரெழுப்பும் மாயம் என்ன? இதையெல்லாம் பசுவைப் பார்த்து கேட்பது போல கேட்கிறார்.

பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தரநீ என்ன
பக்குவஞ்செய் வாயதனைப் பகருவையோ பசுவே..
உச்சியுடன் நக்கி யீன்ற உடன் உனது கன்றை
உயிர் எழுப்பும் மாயம் ஏதோ உரைத்திடுவாய் பசுவே..
(மலரும் மாலையும்)

அடுத்து கிளியிடம் வருகிறார்.அக்கிளியின் மொழியில் எவ்வளவு இனிமை.அவ் இனிமை உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றதாம்.அது தனது மொழியுடன் எவ்வாறு பண்ணின் இனிமையைக் கலந்து பக்குவம் செய்தது.யாரும் அதற்கு இனிமையை பயிற்றவும் இல்லை.நாள் தோறும் உண்ணும் கனிகளின் இனிமையைத் தன் மொழியில் கலந்து குழைத்துக் கூட்டி அம்மொழியை பன்மொழி ஆக்கிகின்றதே..உண்ணும் கனியின் நாச்சுவையைக் கேட்கும் மொழியின் பாச்சுவையாக்கி அளித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.இதற்கு கிளி செய்யும் பக்குவம் என்ன..அதையேக் கேட்கிறார் கவிமணி..

உண்ணும் கனியிலெழும் - சுவையினை
உள்ளம் களிகோ ளவே
பண்ணிற் கலந்திட நீ - தெரிந்து செய்
பக்குவம் ஏதடியோ
(மலரும் மாலையும்)

வாய் விட்டு சிரியுங்க

1.கணவன்- எனக்கு இதுவரைக்கும் தலைவலிகூட வந்ததில்லை
மனைவி-உங்களுக்கு எப்படி வரும்..உங்களாலே மற்றவங்களுக்குத்தானே தலைவலி.

2.கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா?ஏன்?
எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை.

3.தலைவர்-(பொதுக்கூட்டத்தில்)இவர்கள் ஆட்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் பள்ளியில் கற்றுக்கொடுக்கிறார்கள்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கம்ப்யூட்டர் ஜியாகரபியும் சொல்லித் தருவோம்.

4.அந்த டாக்டர் முன்னலே ஹோட்டல் வைச்சிருந்தார்னு எப்படி சொல்றே
வெளியில போர்டுலே'வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது" ன்னு போட்டிருக்காரே

5.தலைமறைவா இருக்கும் தீவிரவாதியை பிடிக்க மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும்னு போலிஸ் கமிஷனர் சொல்றாரே..ஏன்?
வலை வீசி தேடச்சொல்லி உத்தரவாம்

6.இந்த இஞ்செக்ஷன் ரொம்ப வலிக்கும்...பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கங்க
அப்போ..முதல்லே பல் டாக்டரைப் பார்த்து பற்களை கட்டிக்கிகிட்டு வந்துடறேன் டாக்டர்

Monday, December 7, 2009

ரஜினிகாந்த் 60

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு டிசம்பர் 12ஆம் நாள் 60 வயது ஆகிறது..அவருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். 2)சிவாஜிராவ் கெய்க்வாட் பெங்களூரில் பிறந்தார்.தந்தை நானோஜி ராவ்,தாய் ராம்பாய் 3)இவர் மராட்டியை தாய்மொழியாகக் கொண்டவர் 4)26-2-81 ஆம் ஆண்டு லதாவை மணந்து தமிழக மாப்பிள்ளை ஆனார் 5)இந்திய அரசின் பத்மபூஷண் விருதை 2000ஆம் ஆண்டு பெற்றார் 6)ஒன்பது வயதிலேயே தாயை இழந்த இவர் பசவன்குடியில் ஆசார்ய பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார் 7)மராத்தி இவர் தாய்மொழியாய் இருந்தாலும் இதுவரை எந்த மராத்தி படங்களிலும் இவர் நடித்ததில்லை 8)பெங்களூர் போக்குவத்து கழகத்தில் இவர் பேருந்து நடத்துநராக ஆரம்பகாலங்களில் பணி புரிந்திருக்கிறார் 9)இவர் நடை,உடை,பாவனை,ஸ்டைல் ஆகியவற்றைப் பார்த்த இவரது பேருந்தில் வரும் பயணிகள் இவரை நடிகராக ஆகலாம் என ஊக்குவித்தனராம் 10)இவர் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் 1974ல் சேர்ந்தார் 11)தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி,ஆங்கிலம்,பெங்காலி ஆகிய மொழி படங்களில் நடித்திருக்கிறார் 12)இவர் நடித்து இதுவரை வந்துள்ள மொத்த படங்கள் 152.தமிழ் 103,கன்னடம் 8,தெலுங்கு 14,ஹிந்தி 25,ஆங்கிலம்,பெங்காலி தலா ஒன்று 13)முதல் தமிழ் படம் அபூர்வராகங்கள் (1975) ஹிந்தியில் அந்தா கானூன்(1982) 1988ல் 'Blood Stone' ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார் 14)ஜப்பான்,ஜெர்மனி படங்களில் சிறு வேடங்களில் வந்துள்ளார் 15)1995ல் வந்த முத்து படம் ஜப்பான் மொழியில் 'டப்' செய்யப்பட்டு..ஜப்பானில் இவருக்கு ரசிகர்கள் உருவாகக் காரணமாய் அமைந்தது. 16) சந்திரமுகி படம் ஜெர்மன் மொழியில் 'டப்' செய்யப்பட்டது 17)1975ல் பாலசந்தரால் அறிமுகமான இவர் இன்றும் தன் குரு பாலசந்தர் என்று சொல்லி செய்நன்றி மறவாதவராய் இருக்கிறார் 18)1977ல் புவனா ஒரு கேள்விக்குறி,1978ல் முள்ளும் மலரும்,1979லாறிலிருந்து அறுபது வரை ஆகிய படங்கள் இவரது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தினார் 19)இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இவரை அதிகம் இயக்கியவர்.அவரது இயக்கத்தில் இருபது படங்கள் நடித்துள்ளார். 20)கமல்ஹாசனுடன் 16 வயதினிலே,மூன்று முடிச்சு,அவர்கள் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 21) கே.பாலாஜி தயரித்த 'பில்லா' படம் இவரது மாபெரும் வெற்றிபடமாக திகழ்ந்தது.ஆங்கிலத்தில் 'ப்ளாக்பஸ்டர்" எனப்பட்டது. 22)இவரது 100 ஆவது படம் ராகவேந்திரா 23) ரஜினி தானே கதை,திரைக்கதை எழுதி, சிறு வேடத்தையும் ஏற்று நடித்த படம் 'வள்ளி' 24)இப்படம் உடன் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட படம் 25)ரஜினி ந்டித்து மாபெரும் தோல்வி என்னும் வார்த்தையை சுமந்த படம் 'பாபா' மற்றும் 'குசேலன்" 26) மேற்கண்ட படங்கள் தோல்வியால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாம் 27)இவர் நடித்து நீண்ட நாட்கள் ஓடிய படம் 'சந்திரமுகி' சாந்தி திரையரங்கில் பகல் காட்சியாக 1000 நாட்களுக்குமேல் ஓடியது 28)இங்கிலாந்தில் வெளியான டாப் 10 படங்களில் ரஜினியின் 'சிவாஜி' படமும் இடம் பெற்றுள்ளது 29) சிவாஜி படத்தில்..சிவாஜியாகவும், எம்.ஜி.ஆராகவும் பெயர் தாங்கி ரஜினி வருவார் 30)ரஜினிக்கு இரு மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யா 31)ரஜினிமகள் சௌந்தர்யா 'சுல்தான் தி வாரியர் ' என்ற அனிமேஷன் படம் தயாரிக்கிறார்.இதில் ரஜினியின் உருவப்படம் வருவதோடு..ரஜினி குரலும் கொடுத்துள்ளார். 32)1984ல் ஃபிலிம்ஃபேர் விருது..சிறந்தநடிகருக்கானது..நல்லவனுக்கு நல்லவன் படத்திற்கு.மீண்டும் 1994ல் முத்து படத்திற்கு அதே விருது 33)1977 முதல் 2005 வரை பல விருதுகள்..தமிழ்நாடு ஸ்டேட் விருதுகள்,சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்,ஃப்லிம் ஃபேன் அஸ்ஸோஷியேசன் விருதுகள் என பல விருதுகள். 34)2007ல் ராஜ்கபூர் விருது மகாராஷ்டிரா அரசிடமிருந்து 35)1982ல் மூன்று முகம் படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார். 36) 12 படங்களில் இரட்டை வேடம் ஏற்றுள்ளார்..அவை பில்லா,ஜானி,முத்து,அருணாச்சலம்,சந்திரமுகி,போக்கிரி ராஜா, தர்மத்தின் தலைவன்,ராஜாதி ராஜா,எஜமான்,பாபா.கூன் கா கார்ஜ்(ஹிந்தி),அதிசய பிறவி ஆகியவை 37)இவர் மனைவி லதா தி ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறார்.மகள்கள் ஐஸ்வர்யா..நடிகர் தனுஷை மணந்துள்ளார்.சௌந்தர்யா படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் 38)தில்லுமுல்லு படத்தில் ஒரே பாத்திரம்..ஆனால் இரண்டு பெயர்களில் நடித்திருப்பார்.இந்திரன்,சந்திரன் என்று.நகைச்சுவை பாத்திரங்களிலும் சோபிக்கமுடியும் என நிரூபித்தார் இப்படத்தில். 39)கமல்ஹாசனுடன் 11 படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்.அவை அபூர்வ ராகங்கள்,மூன்று முடிச்சு,அவர்கள்,16 வயதினிலே,ஆடு புலி ஆட்டம்,இளமை ஊஞ்சலாடுகிறது,வயசு பிலி சிண்டி(தெலுங்கு),தப்புத் தாளங்கள்,அவள் அப்படித்தான்,நினைத்தாலே இனிக்கும்,அலாவுதீனும் அற்புத விளக்கும் ஆகும் 40)நடிகர் திலகத்துடன் 6 படங்கள் இணைந்து நடித்துள்ளார்.அவை..ஜஸ்டிஸ் கோபிநாத்,நான் வாழவைப்பேன்,படிக்காதவன்,விடுதலை,படையப்பா மற்றும் உருவங்கள் மாறலாம் (கெஸ்ட் ரோல்) 41)காவிரி நதிநீர் பிரச்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்.நதிநீர் இணைப்பை அரசு செய்யுமேயாயின் தான் உடனே ஒரு கோடி நன்கொடை தருவதாக அறிவித்தார். 42)சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வாலி பாடல் எழுத ஜேசுதாஸ் பாட ரஜினி நடித்த மன்னன் படப்பாடலான 'அம்மா என்று அழைக்காத' பாடல் மிகப் பிரபலம் ஆனது. 43)ஒகனேக்கல் பிரச்னையின் போது ரஜினி கன்னட அரசியல்வாதிகளுக்கு சொன்னது..மக்கள் அனைவரும் கடவுளுக்கு சமம்.அவர்களை எப்பவும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது..அவர்களும் எப்போதும் மௌனமாய் இருக்க மாட்டார்கள். 44)இயக்குநர் ஸ்ரீதர் ரஜினியை வைத்து இரு படங்களை இயக்கினார்.அவை இளமை ஊஞ்சலாடுகிறது,துடிக்கும் கரங்கள் 45)நாம் உயர உயர நமது பண்புகளும் உயர வேண்டும் என அடிக்கடி சொல்பவர் ரஜினி 46)கலைஞானம் தயாரிப்பில் ரஜினிகாந்த் முழுக்கதாநாயகனாக நடித்த முதல் படம் பைரவி.இப்படத்தின் சென்னை விநியோகஸ்தர் எஸ்.தாணு (இப்போது கலைப்புலி தாணு என அழைக்கப் படுபவர்)அவர் இப்படத்திற்கான சுவரொட்டிகளில் முதன் முறையாக ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று விளம்பரப் படுத்தி இருந்தார்.அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் இவர்தான். 47)ரஜினி தன் ரசிர்களிடம் சொல்வது 'முதலில் உங்க குடும்பத்தைப் பாருங்க..பிறகுதான் மற்றவை எல்லாம்.உங்க மனைவிக்கு நல்ல கணவனா இருங்க.உங்க குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா இருங்க என்பதுதான். 48)ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி.சிறுவயது முதல் ராகவேந்திரர்,ராமகிருஷ்ணர் போன்றவர்களின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்து வருவதாகக் கூறுவார். 49)அவர் அடிக்கடி இமயமலையில் உள்ள ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு சென்று ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 50)ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும்..கெட்டவனாக மாறுவதற்கும் நட்புதான் காரணம்.ஒருவரோட பழகும் முன் அவன் நல்லவனான்னு முதல்ல பார்க்கணும்..அப்படி ஒத்துக்கிட்டு அவன் நட்பை பெற்றதும் அதை கடைசி வரை காப்பாத்தணும்..என்று நட்புப் பற்றி அடிக்கடி கூறுவாராம். 51)இமயமலையில் இருப்பது நேச்சுரல் வைப்ரேஷன்..இங்கே இருப்பது ஹியூமன் வைப்ரேஷன்.பாபாஜி குகைக்குப் போறப்போ அமைதி தானா வந்துடும்.அங்கே இருக்கும் கல்லு,மண்ணு ஒவ்வொன்னும் ஒரு சங்கதி சொல்லும்.அங்க அமர்ந்து சும்மா கங்காதேவியை பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும் என்கிறார் அடிக்கடி இமயமலைக்கு செல்வது குறித்து சொன்ன பதிலில். 52)வாழ்க்கை என்பது துன்பம்.வாழ்க்கையே துன்பம் தான்.அதுல இன்பம் அப்பப்ப வந்துட்டுப் போகும்.இதைப் புரிஞ்சுக்கிட்டால் போதும்.எதையும் ஜஸ்ட் லைக் தட் தாண்டிப் போயிடலாம் என்பார் நண்பர்களிடம் 53)1996ல் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.,உடன் கூட்டணி அமைத்தது..தி.மு.க.,மூப்பனாரின் டி.எம்.சி.,யுடன் கூட்டு.ரஜினி தி.மு.க.,கூட்டணியை ஆதரித்தார்..ரஜினி அண்ணாமலையில் சைக்கிளில் வருவார்.டி.எம்.சி.,யின் தேர்தல் சின்னமும் சைக்கிள்..அதை கட்சி பயன்படுத்திக் கொண்டது.ரஜினியின் ஆதரவு அணி வெற்றி பெற்றது. 54)ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபம்..தனியாக சேரிடபுள் டிரஸ்ட் அமைத்து அதனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் வரும் வருவாய் தர்ம காரியங்களிக்கு பயன் படுத்தப் படும். 55)ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என சில கலையுலக நண்பர்களும், ரசிகர்களும் விரும்புகின்றனர்.இதில் முடிவெடுக்க ரஜினி தயங்குகிறார்.அரசியல் ஆர்வம் அவருக்கு இல்லை என்றே தெரிகிறது. 56)இவர் படங்களின் மூலமே பஞ்ச் டயலாக் வர ஆரம்பித்தது எனலாம்..அவற்றுள் சில..'இது எப்படி இருக்கு' நான் ஒருதரம் சொன்னா நூறு தரம் சொன்னமாதிரி,ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்யறான்.. 57)ராஜ்பஹதூர் என்பவர் இவரது ஆப்த நண்பர்.இவர் டிரைவராய் இருந்த பேருந்தில் ரஜினி கண்டக்டர்..சினிமாவில் நடிக்க தான் தான் அவரை ஊக்குவித்து சென்னை அனுப்பியதாக சொல்கிறார் 58)தயானந்த சரஸ்வதி சாமிகளுக்கு ரிஷிகேஷில் சொந்தமான காட்டேஜ் உண்டு.ரஜினி அங்கு செல்லும் போது வழக்கமாக அங்கு தங்கும் அறையின் பெயர் 'ரஜினி காட்டேஜ்'.ரிஷிகேஷ் செல்லும் வழியில் சொந்த ஆஸ்ரம் கட்ட ரஜினி இடம் வாங்கிப் போட்டிருக்கிறார் 59)கிருஷ்ணகிரி மாவட்டம்..நாச்சிக்குப்பத்தில் அம்மாவிற்கு ஒரு நினைவு மண்டபம் கட்டும் திட்டத்தில் இருக்கிறார்.அடிக்கல் நாட்டியாய் விட்டது.அந்த கிராமத்து மக்களுக்கு இலவச கல்யாண மண்டபம்.குடிநீர் வசதிகள் செய்திருக்கிறார் 60)வாழ்வில் ரஜினி நினைத்ததெல்லாம் கிடைத்திருக்கு..ஒன்று மட்டுமே கிடைக்கவில்லை.அது அம்மா பாசம்..அதுக்காக..அந்த அன்புக்காக இந்த நிமிஷம் கூட அவர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்..என்கிறார் இவரைப் பற்றி முழுதும் அறிந்த எஸ்.பி.முத்துராமன்

Sunday, December 6, 2009

திருவள்ளுவருக்கு வந்த சோதனை


வாழ் அவன் பெயர் வரலாற்றில் இடம் பெற்றிருக்காது.

ஒருவன் தேர்வில் தோல்வியடைகிறான்.ஆனால் அவனுக்கு நல்ல வேலைக் கிடைத்து விடுகிறது.தேர்வில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்று தேறும் மற்றவனுக்கோ நான்கு..ஐந்து நேர்காணல்கள் சென்றும் தோல்வியையே சந்திக்க வேண்டியிருக்கிறது.அவ்வளவு ஏன்..அவதாரமனிதன் ராமனுக்கே..சோதனை மாரிசன் உருவில் வந்தது.

வேதங்களுக்கு இணையாக பேசப்படும் திருக்குறளுக்கும்..திருவள்ளுவருக்குமே சோதனை ஏற்பட்டது தெரியுமா?

மதுரையில் சுந்தரேஷ்வரரால் கொடுக்கப்பட்ட பலகை ஒன்று கடைச் சங்கத்தில் இருந்தது.அதற்கு சங்கப்பலகை என்று பெயர்.அதில் உட்கார ஒரு தகுதி வேண்டும்.தகுதியற்றவர்கள் அமர்ந்தால் அது அவர்களைத் தள்ளி விட்டுவிடும்.

திருவள்ளுவரும் திருக்குறளை எடுத்துக் கொண்டு அந்த சங்கத்திற்குப் போனார்.திருக்குறளை சங்கப் பலகையில் வைக்கச் சொன்னார்கள்.சங்கப்பலகை அதை ஏற்றுக் கொண்டால்தான் அது இலக்கியத் தரம் வாய்ந்தது என ஒப்புக் கொள்ளமுடியும் என்றார்கள் புலவர்கள்.

திருவள்ளுவரும் அதற்கு ஒப்புக் கொண்டு திருக்குறளை பலகையில் வைத்தார்.பலகை முன்னால் இருந்த சுவடிகளை எல்லாம் தள்ளிவிட்டு விட்டு திருக்குறளுக்கு மட்டுமே இடம் கொடுத்தது.திருவள்ளுவர் தாம் படைத்த இலக்கியம் தகுதி வாய்ந்தது என்பதாலேயே இச் சோதனைக்கு சம்மதித்தார்.

அதுபோல நாமும் நமக்கு ஏற்படும் சோதனைகளையும்..தன்னம்பிக்கையுடன் எதிர்க் கொண்டு..அதைக் கடந்துவரவேண்டும்.

அதற்கு..நாம் செய்யும் செயல்கள் நல்லவையாக இருந்தால் போதும்.தீயவையாக இருந்தால் தீமையே உண்டாகும்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

தீய செயல்கள் தீமையையே விளைவிக்கும் என்பதால் அச்செயல்களை தீயைவிடக் கொடுமையாக எண்ணி அவற்றைச் செய்திட அஞ்ச வேண்டும்.

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சோதனைகளை கடந்து வராதவர்களே இருக்க முடியாது.வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மனம் உடைந்து விடக் கூடாது.தோல்விகளைக் கண்டு கஜினி முகமது மனம் உடைந்திருந்தால்

Friday, December 4, 2009

உண்மையா..பொய்யா..என்னவோ நடக்குதுபல விஷயங்களில்..நாட்டு நடப்புக்களைப் பார்த்து நாம் சொல்லும் வார்த்தைகளே இவை.
இன்று...உண்மை மட்டுமே பேசுவேன்..என்று ஒருவன் சொல்வானானால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.
பொய் பேசாதவர்களே இன்று இருக்க முடியாது.
அலுவலகத்தில் விடுமுறை தேவையானால்..எற்கனவே செத்துவிட்ட நம் தாத்தா,பாட்டிகள் உதவிக்கு வந்து..அன்றுதான் மீண்டும் சாகிறார்கள்.
தான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.
5000 ரூபாய்க்கு ஒரு புடவையை வாங்கிவிட்டு அத விலை 3000 என்று சொல்லாத மனைவிகள் இருக்கிறார்களா?
தன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர்,
சுருங்கச் சொன்னால்..பொய் ..நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்டது.
நாம் பேசுவது பொய் என்று தெரிந்துவிட்டால்...
தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறான் வள்ளுவன்.,'பொய்மையும் வாய்மை இடத்தே என்று வள்ளுவனே சொல்லி இருக்கார்'என அவரை துணைக்கு இழுத்து விடுவோம்.

ஒரு சமயம்..அக்பர்..பீர்பாலிடம் 'உண்மைக்கும் பொய்க்கும் அப்படி என்ன வித்தியாசம் என்றார்.
உடனே பீர்பால்'நான்கு விரர்கடை வித்தியாசம்'என்றாராம்.
நான்கு விரல்களை காதுக்கும்,கண்ணுக்கும் இடையில் வைத்து'காதால் கேட்பதெல்லாம் உண்மையாகி விடாது..ஆனால் கண்ணால் காண்பது நிஜம்.அதனால் காதுகளால் கேட்பதை வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது..கண்ணால் பார்த்து தீர விசாரித்தே உண்மையை நிர்ணயிக்க முடியும்'என்றார்.
அதனால் காதிலே கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது.
ஆமாம் கண்ணால் பார்த்தால் அது நிஜமா...தெரியவில்லையே..
'கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்..'என ஒரு கவிஞன் சொல்லி இருக்கானே!!!!

Thursday, December 3, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (4-11-09)


1)இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 2000 ஆண்டில்தான் மேட்ச் ஃபிக்சிங் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.அகப்பட்டுக் கொண்ட ஹன்சி குரோனி தலை குனிந்தார்.அப்போதுதான் நம் வீரர்கள் அசாருதீன்,ஜடேஜா ஆகியோரும் கருப்பு ஆடுகள் எனத் தெரிந்தது.தன் சுயநலத்திற்காக நாட்டின் மானத்தோடு விளையாடிய அசாருக்கு இதற்குக் கிடைத்த வெகுமதி எம்.பி.,பதவி..
அதுசரி..ஊழல்வாதி என்ற தகுதி ஒன்று போதுமே இப்பதவிகளுக்கு.

2)நேற்று பாலசந்தரின் 'ஒரு கூடைப் பாசம்' நாடகம் பார்த்தேன்.பாலசந்தரின் பழைய படங்களில் இருந்து இங்கொன்றும்..அங்கொன்றுமாய் காட்சிகளை உருவி நாடகம் ஆக்கியிருக்கிறார்.உதாரணமாக..
ரேணுகா பாத்திரம்..'அவள் ஒரு தொடர்கதை' அக்காள் கவிதா சாயல்...ஹார்பிக் விற்கும் சேல்ஸ் கேர்ள் பாத்திரம் மெடிமிக்ஸ் விற்கும் 'அபூர்வ ராகங்கள்' ஜெயசுதா..
நாடகத்திற்கு சினிமா இயக்குநர்கள் பலர் வந்திருந்தனர்.பதிவர்கள் ஜாக்கி சேகர்,உண்மைத் தமிழன்,கேபிள் சங்கர்,நிலா ரசிகன் வந்திருந்தனர்.

3)பாரதியாரின் கம்பீர உருவப் படத்தை நாம் பார்க்கிறோமே..உணர்ச்சி ததும்பும் அந்த ஓவியத்தை தீட்டியவர் ஆர்யா என்ற ஓவியர் ஆவார்.

4)when you are in light, every thing will follow you.But when you enter dark..even your own shadow will not follow you - Hitler

5)நாம் பிரார்த்தனை செய்யும் போது ஏன் கண்களை மூடிக் கொள்கிறோம் தெரியுமா..?
பிரார்த்தனை என்று மட்டுமில்லை..நாம் அதீத மகிழ்வுடன் இருக்கும் போது..கனவு காணும்போது கூட கண்களை மூடிக் கொள்கிறோம்..வாழ்வின் அற்புத தருணங்களை கண்களால் பார்க்க முடியாது..மனதால் மட்டுமே உணர முடியும்.

6)கூகுள் ஆண்டவரிடம் இல்லாத தகவல்கள் இல்லை எனலாம்.நமக்குத் தேவையான தகவல்களைத் தேடினால்..அது பற்றிய செய்திகளை வாரி வழங்குவார் வஞ்சனையின்றி.இந்த ஆண்டு கூகுள் இணைய தளத்தில் இந்தியர்கள் அதிக அளவு தேடியுள்ள தகவல் என்ன தெரியுமா..?
'முத்தம் கொடுப்பது எப்படி' :-)))

7)ஒரு ஜோக்...

குரைக்கற நாய் கடிக்காது தெரியுமா?
தெரியுமே! ஒரே நேரத்தில் அதனால் எப்படி இரண்டு வேலை செய்யமுடியும்.

Wednesday, December 2, 2009

ஆ(ற)ரத்தழுவினேன்


கடலலைகள்

கரையைக் கண்டு மிரண்டு

கரைந்து உள்ளிடுதலும்

கார்முகில் கண்டு

கலாபம் விரிக்கும் தோகையும்

விடியலில் விண்ணின்

வண்ணக் கலவையும்

ஆலம் விழுதுகளின்

ஆகம் தழுவலும்

விதிமீறல் அன்று

இயற்கை

இல்லா ஒன்றை நாடும்போது

இருக்கும் ஒன்றையும்

இழக்கலாமா

வெற்றி இலக்கிற்காக

வீறு கொண்டு முயன்றால்

தோற்பது யார்..

விட்டுக்கொடுத்தேன் வெற்றியை

அனைவரும் வெறுக்கும் தோல்வி

அணங்கை

ஆ(ற)ரத் தழுவினேன்

(இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

Tuesday, December 1, 2009

வள்ளுவனின் இலக்கிய அழகு

அவன் அவளைக் காதலித்தான்.பணி நிமித்தம் சில காலம் அவளை பிரிய நேரிடுகிறது..அவளின் பிரிவு அவனை நெருப்பாய் சுடுகிறது.

அவன் திரும்ப வந்து அவளை அடையும் போது அவளுடன் சேர்ந்ததும் குளிர்ச்சியாய் இருக்கிறது.

அவளிடம் நெருப்பு உள்ளதாக எண்ணுகிறான்.ஆனால் இவ்வுலகில் உள்ள நெருப்பு அதன் அருகில் சென்றால் சுடும்..அதைவிட்டு நீங்கிச் சென்றால்..சுடாது..குளிர்ச்சி பெறலாம்.ஆனால் தன் காதலியிடம் உள்ள நெருப்போ..அத்தகையது அல்ல..அவளருகில் சென்றால் குளிர்கிறது..பிரிந்தால் சுடுகிறது..உலகத்தில் இல்லாத இத்தகைய அதிசயத் தீயை இவள் இந்த உலகத்திலிருந்து பெற்றிருக்க முடியாது.வேறு எந்த உலகத்திலிருந்து இந்த அற்புத நெருப்பை இவள் பெற்றாளோ அறியேன்..என வியப்படைகிறான்.

இதையே வள்ளுவர்..

நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

என்கிறார்.

ஒரு பொருளை உலகியலுக்கு மாறுபட்ட ஒன்று போல எடுத்துக் காட்டி அப்பொருளின் உண்மை இயல்பை புலப்படுத்துவது வள்ளுவரில் காணும் இலக்கிய அழகாகும்..

காமம் நெருப்புப் போல சுடுவது என்பதை இலக்கியத்தில் காணலாம்.ஆனால் வள்ளுவரோ காமத்தை உலகத்தில் இல்லாத ஒரு நெருப்பு என்று வியப்புச் சுவை அமைத்துக் காட்டுகிறார்.