Monday, November 30, 2009

வெற்றியும்..தோல்வியும்..


நாம் ஒரு போட்டியில் கலந்துக் கொள்கிறோம்..அதில் வெற்றிக் கனியை நம்மால் பறிக்க முடியவில்லை என்பதால்..மனம் துவண்டுவிடக் கூடாது.

ஒருவனுக்கு தோல்விகள் வரலாம்..ஆனால்..தோல்வி மனப்பான்மை வரக்கூடாது.

மின்சார பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அதை தன் முதல் முயற்சியிலேயே கண்டுபிடிக்கவில்லை.அவர் இரவு, பகல் பாராது..மெய் வருத்தம் பாராது,பசி பற்றி கலைப்படாது,தூங்காது,காலம் பற்றி கவலைப்படாது கருமமே கண்ணாக ஆராய்ச்சி செய்தார்.கடைசியில் பல்பை வடிவமைத்துவிட்டு..ஆய்வு செய்யும் போது அது வேலை செய்யவில்லையாம்.

இத்தனை காலம் தன் உழைப்பு வீணாகி விட்டதே என அவர் கவலைப் படவில்லையாம்.மாறாக அதை ஒளிர வைக்க மேலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

கிட்டத்தட்ட ஆயிரம் முறைகளுக்கு மேல் முயன்ற பின் பல்பை எரிய வைத்தார்.

அப்போது அவரிடம் ஒருவர் கேட்டாராம்..'இத்தனை முறை தோல்வியடைந்த பிறகும், எப்படி விரக்தி அடையாமல் இருந்தீர்கள்?' என்று.அதற்கு எடிசன் சொன்னாராம்,'எனக்கு அவை தோல்வியில்லை.அந்த பரிசோதனைகள்..மின்சார பல்பை எப்படியெல்லாம் தயாரிக்கக் கூடாது..என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது' என்றாராம்.

தோல்விகள் ஒருவனுக்கு பின்னடைவு அல்ல..படிப்பினை..

தோல்விகள் வெற்றியை அடையச் செய்யும் படிக்கட்டுகள்.

அதற்கு உதாரணம் ஆபிரஹாம் லிங்கன்..

அவருக்கு 21 வயதில் வியாபாரத்தில் தோல்வி..22 வயதில் மாநில தேர்தலில் தோல்வி.26 வயதில் நரம்பு தளர்ச்சி நோய் 28 வயதில் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி..33 வயதில் மக்களவை தேர்தலில் தோல்வி..46 வயதில் உதவி ஜனாதிபதி தேர்தலில் தோல்வி..48 வயதில் செனட் தேர்தலில் தோல்வி..50 வயதில் அமெரிக்க அதிபராக வெற்றி..

எந்த நிலையிலும் உற்சாகத்தை இழக்காமல் முயன்றால்..வெற்றிக்கனி நம் மடியில் தானாக விழும்.

Sunday, November 29, 2009

அன்பளிப்பு (சிறுகதை)

எங்கள் வங்கியின் ஆண்டிப்பட்டி கிளைக்கு என்னை அதிகாரியாக மாற்றியிருக்கிறார்கள்.

உடன் வேலையில் சேர்ந்து அந்தக் கிளையில் தற்போது உள்ள சுப்புராமன் ஒரு வாரத்திற்குள் பொறுப்பிலிருந்து விடுவித்து சென்னை பிரதானக் கிளைக்கு அனுப்புமாறு எனக்கு உத்தரவு.

அடுத்த நாள் காலை..ஆண்டிப்பட்டிக்குப் போய் சுப்புராமனை சந்தித்தேன்..அவர் எனக்கு அந்தக் கிளையைப் பற்றியும், வாடிக்கையாளர்கள் பற்றியும் கூறிக்கொண்டிருந்தார்.

அப்போது...

'ஐயா கும்புடறேனுங்க' என்று சொல்லியபடியே ஒரு கிராமவாசி கையில் ஒரு பெரிய பூசணிக் காயையும், இரண்டு கிலோ தக்காளி கொண்டுவந்து சுப்புராமனிடம் அவற்றை வைத்துவிட்டு சென்றான்.

இதெல்லாம் என்ன என்றேன்

'கணபதிராமன்..நாம சிறு வியாபாரிகளுக்கு கடன் கொடுக்கிறோம்..அதை வைச்சு அவங்க வியாபாரம் பண்ணி முன்னுக்கு வராங்க.இப்ப வந்து போனானே அவன் ஒரு காய்கறி வியாபாரி.நான் அவனுக்கு வங்கிக்கடன் கொடுத்ததாலே இந்தக் காய்களை அன்பளிப்பா கொடுத்துட்டுப் போறான்..'

'இது போல நாம வாங்கறது தப்பில்லையா?'

'நான் அவன் கிட்ட பணமா வாங்கறேன்..தவிர நாம கொடுக்கற பணத்தால அவங்களுக்கு ஆயிரக்கணக்கில லாபம் வர்றப்போ..நமக்காக கொஞ்சம் செலவு பண்ணினா என்ன தப்பு ?'

நான் அவரிடம் பதில் ஏதும் பேசவில்லை.

அடுத்த நாள் அலுவலகம் செல்ல சட்டையைத் தேய்க்க சலவைக் கடைக்கு போன போது..என்னிடமிருந்து பணம் வாங்க மறுத்துவிட்டார் கடைக்காரர்.

'ஐயா..வங்கிக்கு வந்திருக்கிற புது அதிகாரி நீங்க..எனக்கு நீங்க இதுக்கெல்லாம் காசு தரவேணாம்..சுப்புராம ஐயா போல இந்த ஏழை மேல கருணை வைச்சா போதும்' என்றார் கடைக்காரர்.

மேலும் விசாரித்த போது ரிக்சாக்காரர் ஒருவருக்கு கடன் கொடுத்ததால்..சுப்புராமன் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சென்றுவர இலவச ரிக்சா சவாரி.

சுப்புராமனால் பயனடைந்த தையல்காரன் இவரது குழந்தைகளுக்கு பள்ளி சீருடை தைத்துக் கொடுத்திருக்கிறான்.மளிகைக் கடைக்காரன் ஒருவன் அவரது மாதாந்திர மளிகைச் செலவுகளைக் கவனித்துக் கொள்கிறான்.

நான் விசாரித்த வரையில் சுப்புராமன் கடன் வழங்கி அதற்கு பதிலாக எந்த அன்பளிப்பையும் கொடுக்காதவர் ஒருவர் மட்டுமே இருந்தார்..

சுப்புராமனைப் பற்றி மேலிடத்தில் புகார் செய்யலாமா..வேண்டாமா..எனக் குழம்பிக்கொண்டிருந்த எனக்கு..அவரை..அவரது இல்லத்தில் சென்று பேசினால் என்ன? என்ற எண்ணம் எழ அவரது வீடு நோக்கிப் போனேன்.

வீட்டின் வாசலில் சிறு கும்பல்..சுப்புராமனுக்கு திடீரென இரவு மாரடைப்பு வந்து..மருத்துவர் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டதாம்.

'நான் கடன் வழங்கினவங்க எல்லாரும் அன்பளிப்பு கொடுக்கறாங்க..ஆனால் உன்னால் மட்டும் எதுவும் தரமுடியாதுடான்னு சொல்வீங்களே..ஆனா நான் இப்ப இலவசமா கொடுக்கப்போற சவப்பெட்டிலதான் நீங்க போகணும்' என்று கூறியபடியே அழுது கொண்டிருந்தான் ஒருவன்.

'அவன் யார்?' என்று அருகிலிருந்தவரை விசாரித்தேன்.அவன் பெயர் அந்தோணி..சவப்பெட்டி தயாரிக்கிறவன்.சுப்புராமன் அவனுக்கும் வங்கிக் கடன் கொடுத்திருக்கிறார்' என்றார் அவர்.

செத்தும் கொடுத்தான் சீதக்காதின்னு படிச்சிருக்கிறேன்..ஆனால் இந்த சுப்புராமன் தனக்கு வர வேண்டிய அன்பளிப்பை செத்தும் பெற்றுக் கொண்டார்.

Saturday, November 28, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 9

ராமனுக்கு முடிசூட்டு விழா நடக்கிறது..அயோத்தியில் அரசகுரு வசிஷ்டர் ராமனுக்கு மணிமுடி சூட்டுகிறார்.இது எல்லா ராமாயணத்திலும் பொதுக் கருத்து.இதற்குமேல் கம்பனின் கற்பனையைப் பாருங்கள்.

வசிஷ்டரோ..அரச வம்சத்தினரின் குரு..எனினும் அரச மணிமகுடத்தைத் தானே எடுத்துச் சூட்டும் உரிமை அவருக்கில்லை.உயர்ந்தோர் எடுத்துக் கொடுக்க அதனை வாங்கிச் சூட்டும் உரிமையே அம்முனிவனுக்குரியது.

மணிமகுடத்தை எடுத்துக் கொடுக்கும் தகுதி வாய்ந்த உயர்ந்தோர் யார்? உலகம் என்னும் அழகிய தேர் இனிது இயங்க உதவும் அச்சாணி போன்றோரே வேளாளர் என்று அழைக்கப்பட்ட விவசாயிகள் .அவர்கள் வாழ்வு உயர்ந்தால் தான் அரசு உயரும்.

போர்க்களத்தில் கூட அஞ்சாது நின்று எதிர்த்துப் பகைவரை புறங்கண்டு துரத்தும் பகை வீரர் வெற்றியும்..விவசாயிகள் கலப்பை ஊன்றி உழுது விளையும் நெல்லின் பயனே ஆகும்.இதையே சங்கப்புலவர் வெள்ளைக்குடி நாகனார்..புறநானூறில் கூறுகிறார்.

வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தருஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே

இதையே கவிஞர் மருதகாசி

மண்ணிலே முத்தெடுத்து வழங்கும் குணமுடையோன் விவசாயி ...என்கிறார்.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

என்கிறார் திருவள்ளுவர்.

வள்ளுவனைப் பின்பற்றி எழுபது பாடல்களில் அவ் ஏரைப் புகழ்ந்து ஏரெழுபது பாடியவர் கம்பர்...விவசாயியே உயர்ந்தவர் என்று உறுதிக் கொண்டவர் ஆனார்.

அதனால் மணிமகுடத்தை எடுத்து வசிஷ்டர் கையில் கொடுக்க ..விவசாயிகளின் தலைவராய்த் திகழும் சடையப்ப வள்ளலின் மரபினரே தகுதியானவர் என எண்ணுகிறார்.

சடையப்ப வள்ளலின் முன்னோர் மகுடத்தை எடுத்து வாழ்த்தி..வசிஷ்டர் கையில் கொடுக்க..அவர் அதனை ராமனுக்கு சூட்டினார் என்கிறார் கம்பர்.

வள்ளுவனும், ஔவையும்,கம்பரும் போற்றிப் புகழும் விவசாயிகள் அனைவரும் போற்றிப் புகழ வேண்டுகிறார் அருணாசலக் கவிராயர் தன் ராம நாடகத்தில்.

மீட்சிசெய்த சீதாச மேதன் ஆகவேஓங்கி
வீறும்சிங் காசனம்மேல் மேவிக் கருணைதேங்கி
மாட்சிபெறுஞ் சடையன் மரபோர் கொடுக்கவாங்கி
மணிமகு டத்தைஞான வதிட்டர் தரிக்கத்தாங்கி
காட்சியு டனேராமன் தாழ்ச்சியில் லாமல்அர
சாட்சிசெய் திருந்தானே
_ராமநாடகம்

கம்பர் முடிசூட்டுவிழாவை எப்படிச் சொல்கிறார்...

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப்
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன்றங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி

வாய் விட்டு சிரியுங்க..

1.தலைவர்..பொருளாதாரம் பலமாக இருக்கிறது...பலஹீனமாக இருக்கிறது என இரண்டு தலைப்பிலும் பேச்சை தயாரிக்கச் சொல்லி இருக்கார்..ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..எதிர்க் கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசிடலாம்னு.

2.என் மனைவியை கண் கலங்காம வைச்ச்க்கணும்னு பார்த்தேன்..முடியலை
ஏன்?என்ன ஆச்சு
அவ மெகா சீரியல் நடிகையா இருக்கறதாலே..வீட்ல எது பேசினாலும்..கண்ணீரோடத்தான் பேசறா

3.கடைக்காரர்-இலவச இணைப்பை 'கேட்'டு வாங்குங்கன்னு சொல்றது..இந்த சின்னப் புத்தகத்தாங்க..வீட்டு 'கேட்"டு இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்களே

4.உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
என்னன்னு
காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு

5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே

6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும்.

Friday, November 27, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (27-11-09)

ஒரு செடியின் வேர் மண்ணுக்குள்.அதன் தாகம் நீருக்குள்..அத சுவாசம் காற்றுக்குள்..அதன் ஏக்கம் சூரியன் என்ற நெருப்புக்குள்..அதன் இலட்சியம் ஆகாயம் நோக்கி....ஒரு செடிக்குள் ஐந்து பூதங்களும்.

2)உலகம் முழுதும் மதுபானங்கள் வாங்க ஒரு ஆண்டில் மக்கள் செலவிடும் தொகை 1,26,000 கோடி ரூபாய்.சிகரெட்,சுருட்டு என போதை வஸ்துக்களுக்காக ஒரு ஆண்டில் செலவிடும் தொகை 1,02,000 கோடி ரூபாய்.அபின்,கஞ்சா,ஓபியம் என சட்ட விரோத போதைப் பொருள்கள் வாங்க உலகம் செலவிடும் தொகை 75,000 கோடி ரூபாயாம்.

3)யார் என்ன சொன்னால் என்ன..உண்மையில் நம்மிடம் தவறு இல்லாதவரை..யாருடைய விமரிசனத்திற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.பிறர் ஒன்றைச் சொல்வார்களே என்று கவலைப்பட்டுக் கொண்டிராமல் நம் மனதிற்கு சரியென்று தோன்றுவதைத் தீர்மானமான முடிவுடன் செய்ய வேண்டும்.

4)கவிதை என்ற சொல்..பொருளுடைய சொல்.அதிலிருந்து ஒரு எழுத்தை எடுத்துவிட்டாலும் பொருள் கொடுக்கும் சொல்.'க' என்ற எழுத்தை எடுத்தால்..'விதை' கிடைக்கும்.'வி'யை எடுத்து விட்டால்
கதை கிடைக்கும்.'தை'யை எடுத்து விட்டால் கவி கிடைப்பான். - கலைஞர்

5)ஒரு ஜோக்
ஊரைச் சுற்றி கடன் வாங்கிட்டியே இனிமே என்ன பண்ணப்போறே?
ஊருக்கு நடுவே வாங்குவேன்

Tuesday, November 24, 2009

நான் என்ன படிக்கணும்?

கண்டிப்பா கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சேர்க்கணும்- என்றார் அப்பா.

'போடா...மடையா...இன்னிக்கு சாஃப்ட்வேர்க்கு மவுஸ் இருக்குன்னு சேர்த்துட்டா...எதிர்காலத்தில எப்படி
இருக்குமோ..யாருக்குத் தெரியும்? இப்பவே பெரிய பெரிய சாஃப்ட்வேர் கம்பேனி எல்லாம் ஆள்
குறைப்பு ன்னு நியூஸ் வருது' என்றார் தாத்தா.

'ஏங்க..வேணும்னா..B.Com.,படிச்ச்ட்டு CA பண்ணட்டுமே....நம்ம நாட்டிலே என்னிக்குமே
கறுப்பு பணத்தை ஒழிக்க முடியப் போறதில்லை..அதனாலே வருமானவரி கட்டாம எப்படி
ஏய்க்கலாம்ங்கற மனப்பான்மை நம்ம மக்கள் கிட்ட மாறப்போறதில்லை.
அப்படிப்பட்டவங்களுக்கு CA உதவி கண்டிப்பா தேவை இருக்கும் என்னிக்கும்' என்றாள்
படுக்கையில் இருந்தபடியே தங்கமணி.
'இல்ல..இல்ல..நம்ம குடும்பத்திலே டாக்டர் யாரும் இல்லை..அதனால டாக்டருக்குத்தான்
படிக்கணும்'இது அம்மா.

'அவன் என்ன நினைக்கிறானோ..அதை படிக்கட்டுமே..அவனை தொந்தரவு பண்ணாதீங்க'
என்றாள் பாட்டி.

'அடடா..நான் பிறந்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை..அதுக்குள்ள நான் என்ன படிக்கணும்னு
என்ன சர்ச்சை..முதல்ல என் பர்த் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்க'என்று கூற நினைத்து..
அதை எப்படி இவர்களுக்கு சொல்வது எனத் தெரியாமல் அழ ஆரம்பித்தது..காலையில்
தான் இந்த உலகத்துக்கு வந்த பாப்பா.

Monday, November 23, 2009

பார்த்துப் போ!!


இப்போதெல்லாம்

பொறுமையாய் இருக்கிறேன்

கோபம் வருவதில்லை

நா எனக்கு அடங்குகிறது

யாரைக் கண்டாலும் மகிழ்கிறேன்

பணத்தை

தலையிலா கொண்டு போகப்போறோம் - என

தாராளமாய் இருக்கிறேன்

ஏன் இப்படி ஒரு மாற்றம்?

பெரிசு பார்த்துப்போ என்கிறான்

துவி சக்கர இளைஞன்

இறுதிவரை பிரியாதிருக்க...


இன்று

உன் மணநாள்

இறுதிவரை துணையிருப்பாய்

என்றிருந்தேன்..

ஆயின்..வேறொருவன் துணையானாய்

மரணமே...

இனி என் துணை

மறு பிறப்பென்று ஒன்றிருந்தால்

மறவாமல் உனக்கு

மகனாய் பிறந்திடுவேன்..

அப்போதேனும்..

உன் இறுதி வரை

உனைவிட்டு பிரிய வேண்டாமே!!!!

Sunday, November 22, 2009

மனிதா..எறும்பாய் இரு..


எறும்புகளிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.ஒருவரின் எடை 75 கிலோ என்றால் அவரால் அதிகப் பட்சம் 40 கிலோ எடையைத்தான் தூக்க முடியும்.ஆனால் எறும்புகள் தன்னைவிட பல மடங்கு எடையை சர்வ சாதாரணமாக தூக்கிக் கொண்டு ஓடும் வல்லமை வாய்ந்தவை.அவை அப்படி ஒடும் போது சிறு தடையை நாம் ஏற்படுத்தினாலும்..அதைப் பற்றிக் கவலைப் படாமல் அந்த தடையின் மீது ஏறியோ அல்லது தடையை சுற்றிக் கொண்டோ தன் இலக்கை நோக்கி செல்வதில் குறியாய் இருக்கும்.இச்சமயம் கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது..

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா

தவிர எறும்புகளின் அணி வரிசை..அடடா..இவர்களுக்கு ஒழுக்கத்தை யார் கற்றுக் கொடுத்தார்கள்?

அவை வசிக்கக் கட்டும் புற்று..எறும்பில் கூட சிவில் எஞ்சினீயர்,ஆர்கிடெக்ட் உண்டா என அதிசய வைக்கும். வெளியே எத்தனை உஷ்ணமாய் இருந்தாலும் உள்ளே குளிமையாய் இருக்கும்.எறும்புகள்
திட்டமிடுவதிலும் கில்லாடிகள்.மழைகாலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே சேமித்து வைக்கும்.இப்படி திட்டமிடுதல் எவ்வளவு மனிதர்களிடம் இருக்கிறது? எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் ஊக்கம் வேண்டும் உயர்வுக்கு.இதையே வள்ளுவர்..

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு

என்கிறார்.தண்ணீர் எந்த அளவு குளத்தில் உள்ளதோ அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் அவ்வளவே இருக்கும்..அதுபோல மனிதரின் வாழ்க்கை உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் உயர்வே இருக்கும்.

ஊக்கத்துடன் செயல்படும் போது..நடுவே சோம்பேறித்தனம் வரக்கூடாது.மனிதனுக்கு அதைவிட பெரிய வியாதி எதுவும் இல்லை எனலாம்.எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போடாமல் உடனே செய்ய வேண்டும்.முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பித் திரிபவர்கள் வாழ்வில் இகழ்ச்சிக்கு ஆளாவர்கள்.இதையே..வள்ளுவர்

இடிபுரிந் தெள்ளஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்

என்கிறார்.

எறும்பு பற்றி பாரதி என்ன சொல்கிறார்..

சிற்றெறும்பைப்பார் - எத்தனை சிறியது
அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா
அவயங்களும் கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர் - மகாசக்தி
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன
எறும்பு உண்ணுகிறது..உறங்குகின்றது
மணம் செய்துக் கொள்கிறது..குழந்தை பெறுகிறது
ஓடுகிறது..தேடுகிறது..போர்செய்கிறது..நாடு காக்கிறது
இதற்கெல்லாம் காற்றுதான் ஆதாரம்
மகாசக்தி காற்றைக் கொண்டுதான்
உயிர் விளையாட்டு விளையாடுகிறாள்

சரி..இப்பொது இடுகையின் தலைப்பிற்கு வருவோம். எறும்பைப் போல சுறுசுறுப்பும்,ஒழுக்கமும்,ஊக்கமும்,திட்டமிடுதலும் இருந்தால் ஒவ்வொருவரின் வாழ்விலும் முன்னேற்றம் உண்டு.

கலைஞர் என்னும் கலைஞன் - 8(இறுதிப் பகுதி)

1988ல் வந்த படம் பாடாத தேனீக்கள்.பூம்புகார் தயாரிப்பு.இளையராஜா இசை,சிவகுமார்,அம்பிகா நடித்திருந்தனர்.

1989ல் வந்த படம் தென்றல் சுடும்..ராதிகா,நிழல்கள் ரவி நடிக்க மனோபாலா இயக்கம்

1989ல் வந்த மற்றொரு படம் பொறுத்தது போதும்..பி.கலைமணி இயக்கம்.விஜய்காந்த் நடித்தது..இளையராஜா இசை

1989ல் வந்த படம் நியாயத் தராசு.கே.ராஜேஷ்வர் இயக்கம்.மேனகா பிக்சர்ஸ் தயாரிப்பு.நிழல்கள் ரவி,ராதா நடிக்க சங்கர்-கணேஷ் இசை

1989ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் ஹனீஃபா இயக்கத்தில் சிவகுமார்,ராதிகா நடிக்க இளைய ராஜா இசையில் பூம்புகார் தயாரிப்பு பாச மழை

1990ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பிரபு,நிரோஷா நடிக்க இளையராஜா இசையில் சந்தான பாரதி இயக்கத்தில் வந்த படம் காவலுக்கு கெட்டிக்காரன்

1993ல் வந்த படம் மதுரை மீனாட்சி.கலைஞர் திரைக்கதை, வசனம்

1996ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் செல்வா,சுகன்யா நடிக்க வந்த படம் புதிய பராசக்தி

பின் 9 ஆண்டுகள் கழித்து 2005ல் வந்த படம்..கண்ணம்மா..கலைஞர் கதை வசனத்தில் பிரேம் குமார்,மீனா நடிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாபா இயக்கத்தில் வந்த படம்

2008ல் வினீத்,கீர்த்தி சாவ்லா நடிக்க கலைஞர் திரைக்கதை,வசனத்தில் இளையராஜா இசையில் இளவேனில் இயக்கத்தில் வந்த படம் உளியின் ஓசை

இப்போது பெண் சிங்கம்,பொன்னர் சங்கர் தயாரிப்பில் உள்ளன.

தவிர மனோகரா(1954) தெலுங்கு,ஹிந்தி திரைக்கதை கலைஞருடையது.பராசக்தி(1957) தெலுங்கு திரைக்கதை கலைஞருடையது

1951ல் ஆடா ஜென்மா,தெலுங்கு(தேவகி)1957ல் வீர கங்கனம் தெலுங்கு (மந்திரிகுமாரி)1967ல் ஸ்திரீ ஜன்மா தெலுங்கு (பூமாலை) ஆகிய படங்களுக்கு கதை,திரைக்கதை கலைஞருடையது.

இடைவிடாமல் 85 வயது இளைய கலைஞர் இன்னமும் கலைத்துறைக்கு ஆற்றிவரும் தொண்டு பாராட்டுக்குரியது. (முற்றும்)

Saturday, November 21, 2009

வாலி என்னும் வாலிப கவிஞன்




திரையுலக முடிசூடா கவிஞனாக கண்ணதாசன் இருந்த போது உள்ளே நுழைந்தவர் வாலி.

குதப்ப கொஞ்சம் வெற்றிலை, சீவல் ..எழுத பேப்பர்..பேனா கிடைத்தால் போதும்...சுற்றுப்புறம் பற்றி கவலையில்லை.. கவிதை எழுத ஆரம்பித்து விடுவேன் என்பார் இவர்.ஒவியன் ஆகணும்னு சின்ன வயசிலே ஆசை..அப்போ விகடன்ல மாலின்னு ஒரு ஓவியர் இருந்தார்..அவர் மாதிரி புகழ் பெறணும்னு வாலி ன்னு என் நண்பன் எனக்கு புனைப்பெயர் வைச்சுட்டான்..என்கிறார்..ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்ற பெயர் கொண்ட வாலி.

திருச்சி வானொலியில் வேலை செய்துக்கொண்டிருந்த இவரை..டி.எம்.எஸ்., சென்னைக்கு வந்துடு என்றாராம்.

எம்.ஜி.ஆருக்கு..ஓடும் மேகங்களே.வும்...நான் ஆணையிட்டால் எழுதும் போதே...மச்சானைப் பார்த்தீங்களா எழுதினேன்.ஏ.ஆர்.ரஹ்மானுக்கு..சிக்கு புக்கு ரயிலே..எழுதினேன்..யுவனுக்கு தத்தை தத்தை
எழுதினேன்.என்னை கிராஸ் பண்ணாமல் எந்த புயலும்...தென்றலும் செல்லமுடியாது என்கிறார்.

என் பாட்டை தாத்தா ரசித்தார்,அப்பா ரசித்தார்,மகன் ரசித்தான்..இப்போது பே
ரனும் ரசிக்கிறான் என்கிறார் 78 வயது இளைஞரான இவர்.

விருதுகளைப் பற்றிக் கூறுகையில்...எழுதுகிற பாட்டுக்கு ரெமெனரேஷன் கிடைக்கிறதா என்றுதான் பார்ப்பேன்,,ரெககனைசேஷன் எதிர்பார்க்க மாட்டேன் என்கிறார்.

அம்மா என்று அழைக்காத பாட்டுக்கு கிடைத்த பாராட்டுகளை விட விருது என்ன பிரமாதம்..என்கிறார்.

இவர் ஆத்திகமா..நாத்திகமா என்றால்...'நான் நாத்திகன்னு எந்த இடத்திலும் வேஷம் போடலை.திராவிட இயக்கக் கொள்கைகள் பிடிக்கும்...கடவுள் இல்லை ங்கிற ஒரு கருத்தில் மட்டுமே பெரியாரிடத்தில் எனக்கு வேறுபாடு' என்கிறார் பளீச்சென்று.

அரசியல் ஈடுபாடு பற்றி கூறுகையில்..கண்ணதாசன்தான் இதிலும் எனக்கு குரு என்கிறார்...

அரசியலுக்குப் போனதால் என்னவெல்லாம் இழந்தேன் என்று அவர் எனக்கு பலவற்றைக் கூறியுள்ளார்.எனக்கு மூன்று அறிவுரை சொன்னார்..சொந்த படம் எடுக்காதே, புலனடக்கம் முக்கியம், அரசியல்வாதிகளிடம் நட்பாய் இரு..அரசியல்வாதி ஆகிவிடாதே..அம்மூன்று அறிவுரையும் இன்றும் ஃபாலோ செய்கிறேன்.

வாலி என்னும் இவ் வாலிப கவிஞரை கொள்ளுபேரனும் ரசிக்கட்டும்.

(வாலியின் பத்திரிகை பேட்டிகளின் தொகுப்பு)

(மீள்பதிவு)

Friday, November 20, 2009

நாம் லட்சியத்தை அடைவது எப்படி....


அவனுக்கு பறவைகள் என்றால் பிடிக்கும்.,
தினமும் காலை ஜன்னலைத் திறந்தால்..அவனுக்காக காத்திருக்கும் புறாக்கள்..
அவனைக் கண்ட சந்தோஷத்தில்..கா கா என கூவி தன் இனத்தை அழைத்து அவனைக் காணச்சொல்லும் காகங்கள்.,
சில கிளிகள்..மரங்கொத்திகள்,குருவிகள்..சுருங்கச் சொன்னால்..அவன் ஒரு பறவைகளின் சரணாலயமாகவே திகழ்ந்தான்.
அவைகள் அவன் கொடுக்கும் தானியங்களையும்,பழங்களையும்...அவன் பக்கத்தில் வந்து உண்ணும்.

ஒருநாள் அவன் மகன் 'அப்பா..எனக்கு விளையாட ஒரு கிளி பிடித்துத் தாயேன்' என்றான்.

மறுநாள் அவன் லாவகமாக ஒரு கிளியைப் பிடித்து மகனிடம் கொடுத்தான்..அவனை அக்கிளி பயந்தபடி பார்த்தது.மற்ற பறவைகள் பறந்து செல்ல கிளியின் கண்களில் ஒரு ஏக்கம்.
மறுநாள் காலை..ஜன்னலைத்திறந்தான்...
பறவைகளை காணவில்லை.
மீண்டும் அவை வரவேயில்லை.
மனதில் இரக்கம் இருந்தவரை பறவைகளின் சரணாலயமாக திகழ்ந்தவன்..இரக்க குணத்தை விட்டதும்...தண்ணீர் அற்ற இடம் என எண்ணி அவை வரவில்லையோ?

பிறர்க்கு தொல்லை கொடுக்கும் போது..அவருக்கு வேண்டியர்களால் வெறுக்கப்படுகிறோம்.,
ஒரு லட்சிய பாதையில்..வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால்..நாம் லட்சியத்தை அடையும் காலம் நம்மை விட்டு அகன்றுக் கொண்டே இருக்கும்.

காளமேகமும்..நகைச்சுவையும்..


காளமேகப்புலவர்.நகைச்சுவை மன்னர்.

ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.

உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.

மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ மூன்று அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.

கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

Thursday, November 19, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (20-11-09)

1) ஒரு பறவை கிளையில் அமரும்போது
அது எந்த கணத்தில் முறிந்துவிடும்
என்ற பயத்தில் அமர்வதில்லை
ஏனென்றால் அது நம்புவது
அந்தக் கிளையை அல்ல
தன் சிறகுகளை

-ஜென்

2)குஜராத் மாநிலத்தில் தப்தி நதியின் தென்கரையில் தொடங்கி, மகாராஷ்டிரா,கோவா,கர்நாடகா,கேரளா மாநிலங்களின் வழியாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முடிவடையும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மொத்தப் பரப்பளவு 1,60,000 சதுர கிலோ மீட்டர்கள்.

3)பத்து கோடி இந்தியர்களுக்கு ரத்த அழுத்த நோய் உள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.அதாவது நீங்கள் சந்திக்கும் பதினொன்று நபர்களில் ஒருவர் ரத்த அழுத்தம் உள்ளவர்.

4)வாழ்க்கை என்பது கடல்..புயல் இல்லாத கடல் இல்லை
வாழ்க்கை என்பது வேள்வி..தீயில்லாத வேள்வி இல்லை
வாழ்க்கை என்பது போராட்டம்..புண் இல்லாத போராட்டம் இல்லை
-காண்டேகர்

5)சிரிப்பு நடிகர்களான லாரலும்-ஹார்டியும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர்.இவர்கள் நட்புடன் மட்டும் 51 தடவைகள் திரையில் தோன்றி சிரிப்பு மூட்டியுள்ளார்கள்.125 பக்கெட் தண்ணீர் இவர்கள் முகத்தில் அடிக்கப் பட்டுள்ளது.இவர்கள் வாங்கிய உதைகள் 537. (தகவல்-ஆனந்த விகடன்)

6)கொசுறு..ஒரு ஜோக்

தலைவர் தைரியமாக எதற்கும் தயார்னு சொல்லியிருக்காரே!
பதவிக்காக எந்த கொள்கையும் விட்டுக் கொடுக்க தயார்னு சொல்லியிருக்கார்

Wednesday, November 18, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 8


அருணாசலக் கவிராயர்

அருணாசலக் கவிராயரின் ராம நாடகத்தில் இன்பச்சுவைக்கு அளவே இல்லை.

திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக் காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் 'மங்கையர் கட்டழகில் மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென நினைத்துப் பார்த்து ஏறி தம் காதலியை அடையும் காதலர் எத்தனை பேர்?அவ்வாறிருக்க சீதையின் பேரழகில் மயங்கிய ராமன்..இந்தச் சிறு வில்லை மட்டுமா ஒடிப்பான்? ஏழுமலையையும் கொடுத்தாலும் பிடித்து, எடுத்து ஒடிப்பானே' என்கின்றனர்.

மூவுலகமும் செலுத்தும் ராவணனுக்குப் பண்டு
முத்தி கொடுக்கவந்த சித்திர வடிவைக்கண்டு
தேவியிவள் என்றாள் ராகவன் இந்தச் சின்ன
சிலையோ ஒடிப்பான் ஏழுமலையும் ஒடிப்பான் என்ன
-ராம நாடகம்

என்பது சீதையிடம் ராமன் கொண்ட காதலின் பெருமையைக் கவிஞர் சுவைபடத் தீட்டும் கவிச்சித்திரமாகும்.

சீதை ராமனிடம் கொண்ட காதலையும் நாடகத்தமிழுக்கு ஏற்ப கவிராயர் சுவைப் படக் கூறுகிறார்.

ராமன் தன் சிற்றன்னையின் கட்டளையைத் தலைமேற்கொண்டு வனம் செல்ல ஆயத்தமாகிறான்.தனது பிரிவைத் தன் காதலி சீதைக்கு உணர்த்துகிறான்.

தலைவனைப் பிரிந்து தான் உயிர் வாழ இயலாத காதல் நிலையை...

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

-திருக்குறள்
பிரிந்துசெல்வதில்லை என்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல்..நீ போய்த்தான் தீரவேண்டுமாயின்..நீ திரும்பிவரும்போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்...என்கிறாள் திருக்குறள் தலைவி தன் தலைவனிடம் குறிப்பாக .

ஆனால் கவிராயரோ மேலும் ஒரு படி செல்கிறார்..

தான் தலைவனைப் பிரிந்து வாழ இயலாத காதல் மிகுதியை சீதை புலப்படுத்துவதுடன் மற்றொன்றும் கூறுகிறாள்..

என்னைப் பிரிந்துசெல்லத் துணிந்தீர்..ஆயின் நீர் பிரிந்து சென்று தங்கும் காட்டின் பெயரையேனும் எனக்குக் கூறிச் செல்லுங்கள்.நீர் பிரியின் நான் இறப்பது உறுதி.இறப்பின் மீண்டும் பிறப்பது உறுதி நீர் பிரிந்துறையும் காட்டின் பெயரை அறிவிப்பின் அதனை நினைத்துக் கொண்டே நான் இறக்க நேரும்.அப்படி பெயரை நினைத்துக் கொண்டே இறந்தால் அதே காட்டில் மீண்டும் பிறந்து உங்களை அடைந்து மகிழ்வேன்..என்கிறாள்

நாடிநீர் போயிருக்கும் வனத்தின்பேர்
சொல்லவேணும் - அதை
நான்நினைத்துக் கொண்டிறந்தால்
அங்கே பிறக்க லாங்காணும்
-ராமநாடகம்

என்பது கவிராயர் படைத்த சீதையின் காதல்மொழி..

இறக்கும்போது நினைப்பது அடுத்த பிறவியில் கைகூடும் என்பது தத்துவ நூலார் கூறும் கருத்து.அக்கருத்தை இங்கு புகுத்தி சீதையின் காதல் மிகுதியை சுவைபடக் கூறுகிறார் கவிராயர்.

வாய் விட்டு சிரியுங்க...

கணவன்_(திருமணம் ஒன்றில்) நாடு எப்படிப்போகுது பாரு..மணமேடையில் தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு ஜாக்கெட் கூட போடாம பொண்ணு உட்கார்ந்து கிட்டு இருக்கு
மனைவி- நல்லா கண்ணடியை போட்டுக்கிட்டுப் பாருங்க..அது பொண்ணு இல்ல..புரோகிதர்

2.உன் உடம்புலே எல்லாம்..திட்டுத் திட்டா படைபோல இருக்கு.,அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாம இருக்கே
எனக்குத்தான் ஒரு தம்பி இருக்கானே! தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..கேள்விபட்டதில்லையா?

3.தொண்டர்களே...உஷாராய் இருங்கள்..எதிக்கட்சியினர் 'புதியதோர் உலகம் செய்வோம்'என்கிறார்கள்..பழைய இந்த உலகத்தை எடுத்து சென்றிட அவர்கள் போடும் திட்டம் இது.

4.டாகடர்(நோயாளியிடம்)உங்க உடம்பு நல்லா ஆகணும்னா..ஆஃபீஸூக்கு லீவ் போடாம போங்க..அங்கபோய் நல்ல தூக்கம் போட்டா சரியாயிடும்.

5.என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒரே தொந்தரவு
யாரு..உன் காதலனா?
இல்லை...என் அம்மாவும்..அப்பாவும்

6.உனக்கும் உன் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வராதா?
வரும்..ஆனால் நான் ஒரு வார்த்தை சொன்னதும் அவ சரியாயிடுவா
என்ன சொல்வே
நீ சொல்றதுதான் சரின்னு சொல்லிடுவேன்

Tuesday, November 17, 2009

உறுப்புகள் தானம்...


துணைமுதல்வர் ஸ்டாலினும்..அவரது மனைவியும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளது பழைய செய்தி.ஆனால் அவர்களைத் தொடர்ந்து..பேராசிரியர் அன்பழகனும் தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விழா ஒன்றில் பேசுகையில் கூறினார்.

உடல் தானம் செய்ய விரும்புபவர்..அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகளிலோ..அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ அமைப்புகளையோ தொடர்புக் கொண்டு பதிவு செய்யலாம்.

அப்படி விண்ணப்பிக்கும் போது..'டொனேட் கார்டு' எனப்பதும் அடையாள அட்டை தரப்படும்.இதை உடன் வைத்திருக்க வெண்டும்.

உடல் உறுப்பு தானத்திற்கு விண்ணப்பித்தவர் இறக்கும் சமயம்..சம்பந்தப்பட்ட அமைப்புகளை மற்றவர்கள் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

விண்ணப்பதாரார் 18 வயதிற்குட்பட்டவராயின் அவரது பெற்றோர் அல்லது காப்பாளரின் அனுமதி கையெழுத்து அவசியம்.

ரத்தக் கொதிப்பு,சர்க்கரை நோய்,புற்று நோய்,இதய நோய்,எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உடல் தானம் செய்ய முடியாது.

உடல் உறுப்பு தானத்தை மூவகையாக பிரிக்கலாம்..

1.உயிரோடு இருக்கும் நிலை

2.இறந்த பிறகு

3.மூளை இறப்பிற்கு பிந்தைய நிலை

உயிரோடு இருக்கும் நிலை - உயிருடன் இருக்கும் ஒருவர் தனது ரத்தம்,எலும்பு,மஜ்ஜை,சிறுநீரகம்,கல்லீரல்,மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்தும் மகிழ்ச்சியாக வாழலாம்

இறந்த பிறகு - இறந்துபோன ஒருவரின் உடலிலிருந்து கண்கள்,தோல் மற்றும் முக தசைகள்,இதய வால்வுகள்,எலும்புகள்,தசைநார்கள்,குருத்தெலும்புகள்,ரத்தக்குழாய்கள்.காதின் மைய எலும்பு உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்யலாம்.

மூளைச்சாவு என்னும் மூளை இறப்பு நிலை - விபத்தில் மூளைச்சாவு எட்டியவரின் உடலில் இருந்து கண்கள்,சிறுநீரகம்,கல்லீரல்,மண்ணீரல்,நுரையீரல்,சிறுகுடல்,கைகள் எலும்புகள்,நரம்புகள்,விரல்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளை பெறலாம்.

சர்வதேச அளவில் வாகன விபத்துகளில் ஆறு விழுக்காடு இந்தியாவில்தான் நடக்கிறது.மூளைச்சாவு அடைந்ததும் உடல் உறுப்புகளில் இதயம் நான்கு மணி நேரம்,கல்லீரல் 24 மணி நேரம், நுரையீரல் 6 மணி நேரம்,கணையம் 24 மணி நேரம்,சிறுநீரகம் 48 மணிநேரம் இடைவெளிக்குள் எடுத்து மற்றவருக்கு பொருத்திவிட முடியும்.

உடல்தானம் மிகவும் உன்னதமானது.நம் உடல் உறுப்புகள் ஒரே பிறவியில் பல வாழ்க்கை நிலையை எட்டும் பாக்கியம் இருக்கிறது.அதோடு மரணத்திற்கு போராடுபவர்களுக்கு உயிர் கொடுப்பதன் மூலம் இறை நிலை அடையலாம்

உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் முதலிடம் வகிக்கிறது.

டிஸ்கி- எல்லாம்சரி..கண்தானம்,உறுப்புதானம் என்றெல்லாம் சொல்கிறோமே..தானம் என்பதைவிட வேறு ஏதேனும் சொல் உபயோகிக்கலாமே

கேபிளாரின் பதிவும்..அதற்கான பதிலும்..

இணையதள பதிவாளர்கள் அனைவருக்குள்ளும், அடுத்த பதிவர்கள் மீது இனம் புரியா நட்பு உள்ளது..இந்த நட்பு எப்படி ஏற்பட்டது என்பதை சற்று சிந்தித்தோமானால்..ஒவ்வொருவர் முகம் கூடப் பார்த்ததில்லை..ஆனால் அவரவர் எழுத்துத் திறமை மற்றவர்களை நட்பு பாராட்ட வைத்தது.ஒவ்வொருவர் மீதும் பாசம்,நட்பு கொள்ளச் செய்து விட்டது.

எழுத்து நம்மிடம் மனித நேயத்தை வளரவைத்து விட்டது.அதனால்தான் தொடர்ந்து பதிவிடுபவர்கள் ஒரிரு நாட்கள் பதிவிடவில்லையெனில் ..அவருக்கு என்ன ஆயிற்றோ என மனம் பதைக்கிறது.ஒருவருக்கு ஏதேனும்சிரமம் என்று பதிவு வந்தால்..ஆறுதல் கூறி பல பின்னூட்டங்கள்.

என்னே எழுத்தின் மகிமை..

அதனால்தான் சிங்கை நாதன் உடல்நிலைக் குறித்து தெரிந்ததும்..நர்சிம் மணிக்கட்ட தொடர்ந்தனர் பதிவர்கள்.'இளா' அவர்களிடம் இது பற்றி ஒரு முறை பேசிய போது அவர் என்னிடம் சொன்னார் 'சொன்னால் நீங்க நம்பமாட்டீங்க..சிங்கைநாதன் பற்றிக் கேள்விபட்டதுமே..பதிவுலகிற்கு சம்பந்தமில்லா ஒரு நண்பர்..தன்னை வெளிக்காட்டாமல் ஆயிரம் டாலர் உதவினார்' என்றார்.(என் வலைப்பூவில் ஆன்லைனிலேயே என்னால் முடியாத ஒரு மாற்றத்தைச் செய்துக் கொடுத்தார் இளா)

ஆம் மனித நேயம் சாகவில்லை.

இனி கேபிள் சங்கர் பற்றி..அவர் தந்தை அமரர் ஆனதும் பதிவுலக நண்பர்கள் வந்திருந்து..அவருக்கு ஆறுதல் சொன்னதையும்..உதவியதையும் இந்த பதிவில் எழுதி இருந்தார்.சற்று யோசித்தால் அப்பதிவே தேவையற்றது என்றே தோன்றுகிறது.நண்பர்களிடையே இது தங்களது கடமை என்று எண்ணியதின் வெளிப்பாடே இது..இதற்காக அவர் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை.

அவருக்கு மட்டுமன்றி 'நட்பு' பற்றி வள்ளுவன் சொன்ன பத்துக் குறள்களின் உரையை அனைவருக்கும் இவ்வேளையில் நினைவூட்டுகிறேன்

1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்
அது ஏற்ற செயலாகும்.

2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.
அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.

3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்
நட்பு இன்பம் தரும்.

4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போது
இடித்து திருத்துவதற்கும் ஆகும்.

5.நட்புக்கொள்ள ஒருவருடன் தொடர்பும்..பழக்கமும் இருக்க வேண்டும் என்பதல்ல..
அவருடைய ஒத்த மன உணர்ச்சியே போதுமானது.

6.முகமலர்ச்சி மட்டும் நட்பு அல்ல..நெஞ்ச மலர்ச்சியும் உண்மையான நட்புக்கு தேவை.

7.அழிவைத் தரும் தீமையை நீக்கி..நல்ல வழியில் நடக்கச்செய்து அழிவு காலத்தில் உடனிருந்து
துன்பப்படுவதே நட்பாகும்.

8.அணிந்திருக்கும் உடை நெகிழும்போது..கைகள் உடனடி செயல்பட்டு சரி செய்வதுபோல
நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கிக் களைவதே சிறப்பு.

9.மன வேறுபாடு கொள்ளாது தன்னால் முடியும் போதெல்லாம் உதவி செய்து நண்பனை
தாங்குவதே நட்பின் சிறப்பாகும்.

10.நண்பர்கள் ஒருவருக்கொருவர்..இவர் இப்படி..நான் அப்படி என செயற்கையாக புகழும்போது
நட்பின் பெருமை குறையும்.

Monday, November 16, 2009

வீணை எஸ்.பாலசந்தர் என்ற நடிகர்..



1930 களில் ஏழு வயது சிறுவனான பாலசந்தர் சீதா கல்யாணம் படத்தில் நடித்தார்.இசைக்கலையில் தேர்ச்சியும்..சினிமாக்கலையில் அனுபவமும் அந்த வயதிலேயே அவருக்கு ஏற்பட்டு விட்டது.

தனது இருபத்திமூணாம் வயதில் 'என் கணவர்' என்ற படத்தை இயக்கினார்.ஆனாலும் அந்த நாள் படம் தான் இவரது திறமையை வெளிப்படுத்தியது.அந்தக் காலத்திலேயே புரட்சிகர கதை அமைப்புடன்,பாடல்களே இல்லாமல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் இது.ஏவி.எம்.தயாரிப்பான இப்படத்தில் சிவாஜி நடித்திருந்தார்.

பிறகு அவனா இவன்? பெண்..போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும்..புது நடிகர்களை நடிக்க வைத்து 'பொம்மை' என்ற சஸ்பென்ஸ் நிறைந்த படத்தை எடுத்தார்.இது இவரது சொந்த படம்.கதை,திரைக்கதை,வசனம்,இசை,இயக்கம் என எல்லாப் பொறுப்பையும் ஏற்றார்.படம் முடிந்தும்..வியாபாரம் உடனே ஆகவில்லை.

ஆனால் படம் வெளிவந்த போது..எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களும் வந்தன.ஆனால் இவர் படம் மட்டுமே வெற்றி பெற்றது.சென்னை கெயிட்டி திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது .

படம் ஒட வேண்டுமானால்..நல்ல கதையம்சம் இருந்தால் போதும் என் உணர்த்திய படம் .இந்த படத்தில்தான்..ஜேசுதாஸ் அறிமுகமானார்.அவர் இதில் பாடிய பாடல் 'நீயும் பொம்மை நானும் பொம்மை'என்ற பாடல்.

பின் இவர் எடுத்த 'நடு இரவில்' என்ற திரில்லர் படமும் வெற்றி பெற்றது.

ஆனாலும் சினிமா இயக்குநர் என்பதைவிட..வீணை வித்வானான தன்னை வீணை பாலசந்தர் என்று சொல்வதையே விரும்பியவர் இவர்.

ஸ்ரீதரின் 'கலைக்கோவில்' படத்திற்கு..கதாநாயகனுக்கு வீணை வாசிக்க இவரைக் கேட்ட போது மறுத்ததுடன்'வீணை ஆராதனைக்காக..சினிமா சாதனைக்காக' என கடைசிவரை வாழ்ந்தவர் இவர்.

நான் முற்பிறவியில் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..அதனால் வீணை கிடைத்தது..நிறைய பாவம் செய்திருக்க வேண்டும் அதனால் சினிமா வாய்த்தது என்பார்.

கலைஞர் என்னும் கலைஞன் -7

1983ல் இது எங்க நாடு..படம் வெளியானது.ராம நாராயணன் இயக்கம் சுரேஷ்,சுலக்க்ஷனா நடிப்பு.

1984ல் திருட்டு ராஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு.ராமநாராயணன் இயக்கம்.

1984 காவல் கைதிகள் ..பூம்புகார் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு..ராம நாராயணன் இயக்கம்.

1985ல் குற்றவாளி என்ற படம் வந்தது.ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.ரவீந்தர்,விஜி நடிப்பு

1986ல் பூம்புகார் தயாரிப்பில் காகித ஓடம் வந்தது. ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.

1986ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பாலைவன ரோஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு..மணிவண்ணன் இயக்கம்.இளையராஜா இசை.பிரபு,நளினி நடித்தது.

1987ல் நீதிக்கு தண்டனை. கலைஞர் திரைக்கதை வசனத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சங்கர்-கணேஷ் இசையில் நிழல்கள் ரவி,ராதிகா நடித்தது.

1987ல் வந்த மற்றொரு படம் ஒரே ரத்தம்.கார்த்திக்,ராதா நடிக்க கே,சொர்ணம் இயக்கம்

1987ல் வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் திரைக்கதை வசனம் ராம நாராயணன் இயக்கம்.ராதரவி நடிப்பு. இசை
- எஸ்.ஏ. ராஜ்குமார்.

1987ல் வந்த படம் சட்டம் ஒரு விளையாட்டு.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம்.விஜய்காந்த் நடிக்க திரைக்கதை வசனம் கலைஞர்

1987ல் புயல் பாடும் பாட்டு.பூம்புகார் தயாரிப்பு.மணிவண்ணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசனம் இளைய ராஜா இயக்கம்.

1987ல் நான்கு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கலைஞர்,இது ஒரு சாதனை.

1988 மக்கள் ஆணையிட்டால் ராம நாராயணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசம்.விஜய்காந்த் நடித்தது.இசை
- எஸ்.ஏ. ராஜ்குமார்.


1988 பாசப்பறவைகள் வி.எம்.சி.ஹனிஃபா இயக்கம்.இளையராஜா இசை.திரைக்கதை வசனம் கலைஞர்.சிவகுமார்,லட்சுமி,ராதிகா நடித்தது.

1988ல் வந்த மற்றொரு படம் இது எங்கள் நீதி.கலைஞர் திரைக்கதை,வசனம்.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம் இளையராஜா இசை.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

Sunday, November 15, 2009

நினைவில் நிற்கவேண்டியவை


அவள் அதி புத்திசாலி பெண்..தனக்கு எல்லாம் தெரியும் என்று சற்று கர்வமும் உண்டு..திருமண வயதை எட்டியதும்..தந்தை அவளுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்தார்.ஆனால் பெண்ணோ..'என் அறிவிற்கு..இந்த உலகில் மிகவும் உயர்ந்த ஒருவரைத்தான் நான் மணப்பேன்..'என்று தந்தைப் பார்த்த வரனை புறக்கணிக்க..தந்தையும்..'சரி உன் விருப்பப்படி ஒருவனைத் தேர்ந்தெடுத்துச் சொல்' என்றார்.

மகள் தேட ஆரம்பித்தாள்..உலகில் உயர்ந்த ஒருவர் வேண்டும்..அது யாராய் இருக்கக் கூடும்..என எண்ணியவளுக்கு..அந்நாட்டு இளவரசர் பட்டத்து யானை மீது பவனி வரும் காட்சி பட்டது.'ஆகா..இவர்தான் உயர்ந்தவர்..எனக்குத் தகுதியானவர்' என்று எண்ணிய போது..யானை மீது வந்த இளவரசர் கீழே குதித்து..எதிரே வந்த சந்நியாசி ஒருவர் காலில் விழுந்தார்.

அப்படியெனில்..இந்த சந்நியாசியே உயர்ந்தவர்..என அவள் எண்ணியபோதே..அந்த சந்நியாசி பக்கத்தில்..ஒரு ஆலமரத்தினடியில் இருந்த கடவுளை வணங்கினார்.

அப்போது அந்த சந்நியாசியைவிட அந்த சிலை உயர்ந்தது என எண்ணினாள்.அந்த நேரம் ஒரு நாய் வந்து..தன் ஒரு காலைத் தூக்கியது..சிறுநீர் அபிஷேகம் சிலைக்கு..

ஆகா..இந்த நாயே உயர்வானது என நினைக்கும் நேரத்தில்..ஒரு சிறுவன் கல்லால் நாயை அடித்து விரட்ட..அந்த சிறுவனே உயர்ந்தவன் என நினைத்தாள்.

அப்போது அந்த சிறுவனை ஒரு இளைஞன் வந்து.."ஏன் அந்த நாயைக் கல்லால் அடிக்கிறாய்?' என கண்டித்தான்.

உடன் அவள் அந்த இளைஞன் தான் உயர்ந்தவன் என தீர்மானித்து தந்தையிடம் சொல்ல..அவன் வேறு யாருமல்ல.முதலில் தந்தைப் பார்த்த மாப்பிள்ளையே என அவள் அறியவில்லை.

உயர்ந்தவர் ..தாழ்ந்தவர் என்பதை யார் தீர்மானிப்பது..அதற்கான அளவுகோல் என்ன..

ஒரு கோவில் திருவிழா...புகழ் வாய்ந்த அக்கோவில் தேர்த்திருவிழா..ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ளனர்...நூறு அடிகளுக்கும் மேலான உயரத் தேர்.வடம் பிடித்து நூற்றுக்கணக்கான நபர்கள் இழுக்கின்றனர்.தேர் நகர்கிறது..ஆனால் அது நகர ஆதாரமான அச்சாணி சமர்த்தாக வாயை மூடிக் கொண்டிருக்கிறது. ஆணவத்தோடு..தேரோட்டத்திற்கு நான் தான் காரணம் என ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.ஆகவே இங்கு உயர்ந்தது அச்சாணியே..தேர் அல்ல..இதையே வள்ளுவர்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்கிறார்.

செய்யும் செயல்களே எதையும் தீர்மானிக்கிறது..

Saturday, November 14, 2009

கம்பனும்...தமிழும்...

ஒரு முறை கம்பனால் அவமானம் அடைந்த சோழ மன்னன்..பதிலுக்கு அவரை அவமானப்படுத்த காத்திருந்தார்.தன் எண்ணத்தை பொன்னி என்ற விலைமகளிடம் சொன்னார்.உடன் அவள் 'கம்பர் கையால்..அவர் எனக்கு அடிமை என எழுதி வாங்கி விடுகிறேன்' என்றாள்.

பின் தன் வேலைக்காரியை கம்பனிடம் அனுப்பி...உடன் அழைத்து வரும்படிக் கூறினாள்.கம்பரும்...என்னவோ..ஏதோ..என அங்கு சென்றார்.

அவரை அன்புடன் வரவேற்றவள்..அவரை கட்டித் தழுவினாள். கம்பர் 'பெண்ணே..நீ அரசர்க்குரியவவள்..என்னை அணைப்பது குற்றம்" என்றார்.ஆனால் பொன்னி அதை செவிசாய்க்கவில்லை. 'இதைத் தவிர வேறு நீ எதைச் சொன்னாலும் கேட்கிறேன்' என்றார்.

அவ்வாறாயின்..தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை..என எழுதித் தாருங்கள்..என்றாள்.

கம்பனும்..அப்படியே எழுதிக் கொடுத்துவிட்டு வீடு சென்றார்.

பொன்னி அந்த ஓலையை மன்னரிடம்..தர..மன்னன் மகிழ்ந்தான்.

மறுநாள் கம்பனிடம் அவ்வோலையைக் காட்டி..இது நீர் எழுதியது தானே..என்றான் மன்னன்.

ஆமாம் என்றார் கம்பர்.

உடன் மன்னன் ஒரு பணியாளிடம் அதைக்கொடுத்து உரக்க படிக்கச் சொன்னான். பணியாளும் 'தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை' என உரக்கப் படித்தான்.இதைப்பார்த்து கம்பன் அவமானத்தால் கூனிக் குறுகுவார் என எதிர்ப்பார்த்த மன்னன் ஏமாற்றம் அடைந்தான்.

'கம்பரே..நீர் தாசி பொன்னிக்கு அடிமையா?' என்றான் மன்னன்.

ஆமாம்..அதில் என்ன ஐயம்...-கம்பர்.

"பார் புகழும் புலவன் நீர்..கேவலம்..ஒரு தாசிக்கு அடிமை என எழுதிக்கொடுத்துள்ளீர்களே' என ஏளனமாக மன்னன் வினவ..கம்பனோ...

'நான் ஏன் வெட்கப்பட வேண்டும்...அதற்காக பெருமை அல்லவா பட வேண்டும்...அதன் உண்மைப் பொருள் அறிவீரா?' என்றார்.

மன்னா! தா-தாயாகிய , சி- அழகிய. பொன்னிக்கு-திருமகளுக்கு ...அதாவது தாயாகிய அழகிய திருமகளுக்குக் கம்பனாகிய நான் அடிமை..என்று விளக்கம் தந்தார்.

கம்பனை..அவமானப் படுத்த நினைத்த மன்னன் தலை கவிழ்ந்தான்.

(மீள்பதிவு )

Friday, November 13, 2009

தேங்காய்...மாங்காய்...பட்டாணி...சுண்டல் (13-11-09)

மனோவசிய வல்லுநர்களில் சிலர் தங்களிடம் வருபவர்கள் விரும்பினால் அவர்களது பூர்வ ஜென்ம நினைவுகளை வரவழைப்பதாகக் கூறுவதைக் கேள்விப் பட்டிருக்கிறோம்.ஆனால் விரைவில் 'ராஸ் பீச்லே
ஜனம் கா' என்ற டி.வி. நிகழ்ச்சிவர இருக்கிறதாம்.இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்களை கேமிரா முன் வசியப்படுத்தி அவர்களது முந்தைய பிறப்புகளை வெளிப்படுத்தப் போகிறதாம்.இதற்கு ஒப்புக்கொண்டுள்ள ஒரு பிரபலம் சுஷ்மிதா சென் ஆவார்.

2)வாழ்க்கை முறை நோய்கள் ஊழியர்களை பாதிப்பதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சில உடல் நலத் திட்டங்களை பின் பற்றுகிறதாம்.ஊழியர்கள் தொப்பையைக் குறைத்தால் பெப்சிகோ வெகுமதி அளிக்கிறது.மாருதி சுசுகி,எல்.ஜி., ஆகிய நிறுவனங்கள் காலை நேர உடற்பயிற்சியை ஊக்குவிக்கிறதாம்.பார்தி ஏர்டெல் தொடர் ஓட்டங்களையும் TCS தியானத்தையும் ஊக்குவிக்கிறது.

3)யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.முழுதும் தசையால் ஆனது.துதிக்கை அதிகப்பட்சம் எட்டு அடி நீளம் இருக்கும்.ஒரே நேரத்தில் துதிக்கையின் மூலம் இரண்டு காலன் தண்ணீரை உறிஞ்சும் ஆற்றல் உடையது.நாள் ஒன்றுக்கு நாற்பது கேலன் தண்ணீரைக் குடிக்கும்.யானையின் ஆயுள் நூறு ஆண்டுகள்.

4)ஒரு நாள் போட்டிகளில் 17000 ஓட்டங்களும்..டெஸ்ட் போட்டிகளில் 12773 ஓட்டங்களும் எடுத்து சாதனை புரிந்திருக்கும் சச்சின் 1989ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம்நாள் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார்.இத்தொடரின் நாலாவது டெஸ்டில் வக்கார் யூனிஸ் வீசிய பந்து சச்சினின் முகத்தாடையை தாக்கியது.மூன்று..நான்கு பற்கள் உடைந்துவிட்டதாம்.ரத்தத்தை நிறுத்த ஐஸ் கட்டியை வைத்து விட்டு..பிட்ச்சில் விழுந்த பற்களை பேட்டால் ஒதுக்கித் தள்ளிவிட்டு..ரத்தம் படிந்த பகுதியை மண்ணால் மூடிவிட்டு வலியை பொறுத்துக் கொண்டு 57 ஓட்டங்களை எடுத்தாராம்.

5) ஒரு சமயம் காந்தி காலை நேரத்தில் வேகமாக நடந்துக் கொண்டிருந்தார்.வழியில் அவரைப் பார்த்த ஒரு நண்பர் 'இத்தனை வேகமாக எங்கே போகிறீர்கள் ' என்றார்.அதற்கு அண்ணல் 'சற்று தூரத்தில் தெரியும் என் வாலிபத்தைச் சந்திக்கத்தான் விரைவாக ந்டந்து சென்றுக் கொண்டிருக்கிறேன்' என்றார்.

6)ஒரு ஜோக்

நீதிபதி- மிக சாமர்த்தியமாக கோடிக்கணக்கான ஊழலை எப்படி செஞ்சீங்க?
அமைச்சர்(குற்றவாளி)-ரொம்ப புகழாதீங்க..கூச்சமா இருக்கு..என்னையே இப்படி புகழற நீங்க என் தலைவனை எப்படி புகழ்வீங்க..!!

Thursday, November 12, 2009

ஃபோன் அழைப்பும் ..அஞ்சு லார்ஜும்


காலை மணி எட்டு

இரவு முழுதும் தூக்கம் வரவில்லை.குமட்டிக் கொண்டே இருந்தது.கண்களில் எரிச்சல்...கண் மூடிக் கிடந்தேன்..சற்று விழித்தாலும் இமைகளின் பாரம் கண்களை அழுத்தியது.

நடு ஹாலில் மனைவியின் பேச்சுக் குரல் கேட்டது. 'அடிப்பாவி..காலங்கார்த்தால ஃபோன் போட்டு வரவழைச்சுட்டாளோ'

உள்ளே கொஞ்ச நஞ்ச மிச்சமிருந்த போதையும் திடீரென இறங்கியது.தலைக்குமேல் மின் விசிறி சுற்றியும்..வியர்த்தது.

எப்படிப் போய் அவர் முகத்தில விழிப்பது.எழுந்ததும் வேகமாக அவசர வேலை இருக்கிறது என கிளம்பிடலாமா?..அதுவும் முடியாதே..ஞாயிற்றுக்கிழமை ஆயிற்றே!

சே..

கீதா உள்ளே வந்தாள்.'உங்க கிட்டே அவங்க பேசணுமாம் ..' என்றாள்.

படுத்தவாறே சற்று கண்களைத் திறந்து..'என்ன திடீர்னு வந்திருக்கார்?' என்றேன்..ஏதும் தெரியாதவன் போல.கடுமையாக என்னைப் பார்த்தாள் கீதா..அவளது கண்கள் சிவந்திருந்தன..அவளும் தூக்கமில்லாமல் இருந்திக்க வேண்டும்..அல்லது அழுதிருக்க வேண்டும்..கன்னம் சற்று வீங்கி இருந்தது.

'நான் தான் ஃபோன் போட்டு வரவழைத்தேன்' என்றாள்..என் முகம் இறுக..'சீக்கிரம் வாங்க டிபன் சாப்பிட ' என்றபடியே வெளியேறினாள்.

எழுந்து பாத்ரூமிற்குப் போனேன்..

இப்போது என்ன ஆகி விட்டது என பஞ்சாயத்துக் கூட்டியிருக்கிறாள்.நேற்று உடன் வேலை செய்பவர் ஒருவர் வீட்டு திருமண ரிஷப்சன் சென்றிருந்தேன்.உடன் வந்த நண்பர்கள்..ஆசையைத் தூண்டிவிட..ஒரு லார்ஜ்..இரண்டு லார்ஜ்..என மட மட வென ஐந்து லார்ஜ் பொன்னிற திரவத்தை குடித்துவிட்டேன்.வெறும் வயிற்றில் சாப்பிட்டிருக்கக் கூடாது.தொடர்ந்து கல்யாண வீட்டு டின்னர் முடிந்ததும்..வயிறு கடமுடா பண்ண..தலை கனக்க..குமட்டல்..வாந்தி வருவது போல இருந்தது.

எப்படியோ..ஒரு ஆட்டோவைப் பிடித்து..ஆட்டோவிற்கு எவ்வளவு பணம் கொடுத்தேன்..50 ஆ 100 ஆ..

வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியதும்..கீதா கதவைத் திறந்தாள். அதற்கெனவே காத்திருந்தது போல 'குபுக்' என வாந்தி..மதுவாடை..யுடன்.

'குடித்துவிட்டு வந்திருக்கீங்களா" என அலறினாள் அவள்.அத்துடன் நில்லாது..என்னை பரம்பரைக் குடிகாரான் போல எண்ணி அழ ஆரம்பித்தாள்.

'சீ..வாயை மூடு..'என கன்னத்தில் பளாரென அடித்தது லேசாக ஞாபகம் இருக்கிறது..பின் அவள்..'கார்த்தால உங்களுக்கு வெச்சுக்கிறேன்' என்றாள்..

பாவி அதற்காக இப்படியா செய்வாள்.

ஷவரை திறந்து நின்றேன்..வந்தவர் முகத்தில் எப்படி விழிப்பேன்..ஏதாவது கேட்டால்..கோபம் வந்து எதுவும் சொல்லிவிடக் கூடாது.அது ஒரு பெண்ணின் வாழ்வையே பாதிக்கலாம்.வார்த்தையில் சற்றுக் கடுமையைக் காட்டினால்..வேண்டாம்..வேண்டாம்..என் பர்சனல் மேட்டர்ல தலையிடாதீர்கள் என்றால்...

இப்படி பலவற்றை எண்ணியபடியே..குளித்து முடித்தேன்..உடலில் சற்று தெம்பு வந்தாற் போல இருந்தது.

டைனிங் டேபிள் பக்கம் வந்த நான்..அங்கு தயாராய் அமர்ந்திருந்தவரிடம்..'வாங்க..எப்போ வந்தீங்க? என்ன திடீர்னு?' என்றேன்.

பதிலுக்கு ஒற்றைவரியில் 'நல்லா இருக்கீங்களா" என்று மட்டுமே கேட்டார்.

சூடான பொங்கல்..வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது. இறுக்கமான சூழ்நிலை..

அதைக் கலைத்தவராக..'ஒண்ணுமில்ல..நேர்த்திக் கடன் ஒன்னு பாக்கி இருக்கு..அதை முடிச்சுடணும்னு' என்றார்.

'என்ன நேர்த்திக் கடன்..' என்றவாறே கீதாவின் முகம் பார்த்தேன்.முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

'கல்யாணம் முடிந்ததுமே..குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரணும்னு..அதுதான்..உங்களுக்கு லீவ் கிடைக்கும்னா நாளைக்கே போயிட்டு வந்துடலாம்..நேத்திக்கே அத்தைக் கிட்ட கேட்டேன்..இன்னிக்கு காலைல ஃபோன் பண்ணி..உங்க கிட்ட சொல்லச் சொன்னாங்க..நான் தான் ஞாயிற்றுக் கிழமை ஆச்சேன்னு..நேர்ல வந்தேன்'

'அதனால என்ன மாப்பிள்ள..நல்ல காரியம் நாளைக்கே போகலாம்..'இன்னும் கொஞ்சம் பொங்கல் வைச்சுக்கங்க' என்றபடியே கீதாவை பார்க்க..

அவள் என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.

Wednesday, November 11, 2009

நினைவில் நிற்க வேண்டியவை

மனிதர்களில் ஒவ்வொருவரும் ஒரு ரகம்..

ஒருவருக்கு..தனக்கே எல்லாம் தெரியும் என நினைப்பு..மற்றவருக்கோ தனக்குத் தெரிந்தவை சரிதானா..அதை சபையில் சொல்ல முடியுமா..அப்படியே சொன்னாலும் எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா என்று பயம்.வேறு ஒருவருக்கோ..தான் சத்யசந்தன்..என்றும் மற்றவர்கள் தவறிழைப்பவர்கள்..ஏதும் அறியாதவர்கள் என்றெல்லாம் எண்ணம்.

ஒரு சிறுகதை..

ஒரு பிரபல தொழிலதிபர் இருந்தார்..அவருக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம்..ஊர் உலகும்..இவ்வளவு சின்ன வயதில்..பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டாரே..அவர் புத்திசாலிதான் என்று புகழாரம் சூட்டின.ஒருநாள்..முக்கிய கருத்தரங்கிற்குச் செல்ல தன் காரில் விரைந்தார்..தனிமையான பகுதி ஒன்றில் கார் நின்றுவிட்டது.எவ்வளவோ முயற்சித்தும் வண்டி கிளம்பவில்லை.குறித்த நேரத்தில் கருத்தரங்கிற்குச் செல்லவேண்டும்..இல்லாவிடின்..பல அறிஞர்கள் கூடும் இடத்தில் இவருக்கு கெட்ட பெயர் ஏற்படலாம்..பண நஷ்டம் ஏற்படலாம்..என்ன செய்வது எனத் தெரியவில்லை..அப்போது ஒருவன் சைக்கிளில் வந்தான்..அவரைப் பார்த்துவிட்டு..என்ன சார் கார் ரிப்பேரா? என வினவ..அவரும் தன் நிலையை விளக்கினார்.உடன் அவன் காரின் பானட்டைத் திறந்து..பரிசோதித்தான்..ஒரு இடத்தில் நாலு தட்டு தட்டினான்.கார் ஸ்டார்ட் ஆனது.

தொழிலதிபர் 50 ரூபாயை எடுத்து நீட்டினார்.அவனோ ஆயிரம் ரூபாய் கேட்டான்..'என்னப்பா..இரண்டு தட்டு தானே தட்டின..அதுக்கு ஆயிரமா?'என்றார் அதிபர்.

அவன் சொன்னான்..'ஐயா..நான் தட்டிய இரு தட்டுக்கு ரேட் 50 ரூபாய்தான்..ஆனா..எந்த இடத்தில் தட்டணும்னு தெரிஞ்சு தட்டினதற்கு ரேட் 950 என்றான்.

எல்லாம் தெரிந்த அதிபருக்கு..கார் ரிப்பேர் தெரியவில்லை..அப்போதுதான் அவர் உணர்ந்தார்..'கற்றது கை மண் அளவு..கல்லாதது உலகளவு' என்று.

மேலும் ஒரு காரியத்தை எல்லோராலும் செய்துவிட முடியாது...ஒவ்வொரு வேலையை ஒவ்வொருவர் திறமையாய் செய்வர்..இதைத்தான் வள்ளுவர்..

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்

என்றார்.ஒரு காரியத்தை இவரால் செய்து முடிக்க முடியும் என்பதை ஆராய்ந்து பார்த்து..அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.


வேறு சிலர் உள்ளனர்..திறமைசாலிகளாய் இருந்தும்..வேலை எதற்கும் செல்லாமல் ..என்னைவிட திறமை குறைந்தவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள்..எனக்கு அதிர்ஷ்டமில்லை என வீட்டினுள் இருந்து புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.இவர்களுக்காக திருவள்ளுவர் சொல்கிறார்..

இலமென் ரசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

எனக்கு வாழ வழியில்லை..அதிர்ஷ்டம் இல்லை என்றெல்லாம் புலம்பியவாறு விட்டிற்குள்ளேயே சோம்பி இருப்பாரைக் காணின் பூமித்தாயானவள் கேலி செய்து சிரிப்பாளாம்.

வாய் விட்டு சிரியுங்க..

1.காதலன்-நான் நேர்மையானவன்..என் அலுவலகத்திலே நான் மட்டும் தான்..லஞ்சம் வாங்காதவன்
காதலி-..நல்லவேளை..இப்பவாது சொன்னீங்களே..பிழைக்கத் தெரியாத உங்களை..கல்யாணம் பண்ணிக்க இருந்தேனே

2.அந்த டாக்டர்..இப்பவெல்லாம் யாருக்கும் ஷாக் டிரீட்மெண்ட் கொடுக்கறதில்லை
ஏன்,..
இப்பவெல்லாம் தான்..எப்பவும் கரண்ட் கட் இருக்கே

3.அந்த ஓட்டல்ல மட்டும்..'ஆம்லெட்' ரொம்ப சீப்பா தர்றாங்களே..எப்படி?
ஓட்டல் முதலாளி..ஒரு அரசியல்வாதியாம்..அவர் கூட்டங்கள்லே பேசறப்ப..அவர் மேல வீசப்படற முட்டைகளை பொறுக்கி எடுத்து வந்துடுவாராம்

4.அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..
அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.

5.கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம்
மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு..
கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்

6.அரசியல்வாதி-(கூட்டத்தில் பேசும்போது)என்னை வெற்றிபெறச் செய்தால்..இந்த தொகுதியை மேம்படுத்துவேன்..தவறினால்...நீங்கள் என்னை தூக்கிலிடலாம்..
கூட்டத்தில் ஒருவன்- தலைவா...இந்தா கயிறு

Tuesday, November 10, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 7

பேசுவது எளிது.அதையே உரைநடையாய் எழுதுவது அரிது.அந்த உரைநடையை இசையுடன் கூடிய கவிதையாக ஆக்குவது என்பது அதனெனினும் அரிது.பாமரர்களுக்கும் புரியும் வகையில் பாடல்களை எழுதுபவரே மக்கள் கவிஞர் எனப் போற்றப்படுபவர்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கவிஞர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்..தமிழகத்தில் பிறந்து..வளர்ந்த அருணாசலக் கவிராயர் ஆவார்.இவர் தன் வாழ்நாள் முழுதும் கம்ப ராமாயணம் படித்தும்,பாடியும்,சொற்பொழிவு ஆற்றியும் வந்தவர்.இவரது ராம நாடகத்தில் சூர்ப்பணகையின் காமவெறியை நகைச்சுவைக் கலந்துக் கூறுகிறார்.அதைப் பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தில் கம்பர் காதலுணர்வின் சிறப்பினைச் சீதையின் வாயிலாகவும்..காமவெறியின் இழிவினை சூர்ப்பணகையின் வாயிலாகவும் புலப்படுத்தியுள்ளார்.அவற்றையே காண்போர் சுவைக்க நாடகமாக்கினார் கவிராயர்.

ராமனின் அழகில் மயங்கி..பேரழகான வடிவொடு ராமர் முன் வருகிறாள் சூர்ப்பணகை.ராமர் மசியவில்லை.சரி..இளையோனையாவது மயக்கலாம் என லட்சுமணனிடம் வருகிறாள்.அவளை அறநெறியில் அகற்ற முடியா லட்சுமணன் மறநெறியைக் கையாண்டு அவளது மூக்கை அறுத்து துரத்துகின்றான்.மூக்கறுப்பட்டும்..காமம் அழியாமல் மீண்டும் ராமனிடம் வருகிறாள் சூர்ப்பணகை.அவனிடம் சொல்கிறாள்...

'உங்கள் தந்திரத்தை நான் தெரிந்துக் கொண்டேன்..கட்டழகுக் கன்னியான என்னை..வேறு எவரும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவும்..மற்றவர் கண்ணேறு என் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும்..என் பேரழகை சற்றுக் குறைக்க தம்பியிடம் சொல்லி என் மூக்கை அரியச் செய்தீர்கள்.நீங்கள் என்னை விரும்புவது எனக்குத் தெரிகிறது.உங்கள் இளையக் காதலியான நான் மூத்தவளைவிட அழகானவள்.அதனால் சீதைக்குக் கோபம் வரும் என்பதால்..அவளது வாயை அடக்க நீர் செய்த தந்திரம் என் மூக்கை அறுத்தது..மேலும் சீதைக்கு இடை மிகவும் சிறியது.அந்த குறை என்னிடம் இல்லை.அதனால் எனக்கும் ஒரு சிறு குறையை உண்டாக்கி..இருவரையும் சரிநிகர் சமானம் ஆக்கிவிட்டீர்கள்.சீதையைப்போல் இடைக் குறையை எனக்கு உண்டாக்க முடியாது.இடையைக் குறைப்பதை விட மூக்கைக் குறைப்பது எளிது என இக்காரியம் செய்து விட்டீர்.இதன் மூலம் நீங்கள் என் மீது கொண்டுள்ள காதல் புரிகிறது.' என காதற்சுவை சொட்டச் சொட்டக் காமவெறியுடன் சொல்கிறாள் சூர்ப்பணகை.

என் உருவினில் கொஞ்கம் கொய்தீர்
எனக்கென்ன தாழ்ச்சி நீர் செய்தீர்?

அன்னியளாக என்னைப் பிரிய விடாமல்- என்
அழகு கண்டொருவர் கண்ணேறு படாமல்
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்

இடுப்பு சீதைக்குக் கொஞ்சம்
மூக்கிவ ளுக்குக் கொஞ்சம்
என்றெவர்க்கும் சரிக் கட்டவோ - எண்ணி
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்..

- கவிராயரின் ராம நாடகம்

என்கிறாள் இன்மொழியுடன் சூர்ப்பணகை.சூர்ப்பணகையின் காமவெறியாகிய காதற்போலியை நகைச்சுவைக் கலந்து நாடகமாக்கினார் கவிராயர்.

அடுத்த பதிவில் சீதையின் காதலுணர்வை எப்படிக் காட்டியுள்ளார் எனப் பார்ப்போம்.

விசும்பு


வாவெனில் வராய்

வந்து விட்டாலோ

செல்லெனினும் செல்லாய்

வராவிடினும் நீ

வந்திடும் பஞ்சம் - வந்து

அதிகம் தங்கிவிடினும்

அளப்பறிய நாசம்

எங்கள் அன்பு நண்பா

எங்கள் வாழ்வு

உன்கையில் என

உணர்ந்து

ஆண்டுதோறும் தவறாது

அளவோடு வந்திடு

நாங்கள் வசைபாடும் முன்

நாட்டைவிட்டு சென்றிடு

விசனத்தால்

விசும்ப வைத்திடாதே!!!

Monday, November 9, 2009

எனக்கு பன்றிக் காய்ச்சலா...

ஆறுமாத அமெரிக்க வாழ்வு முடிந்து கிளம்பும் நாள் வந்தது.மாலை ஆறு பதினைந்திற்கு ஃப்ளைட்.பிரிட்டிஷ் ஏர் வேஸ்..மூன்று மணிக்கே வாஷிங்டன் IAD விமான நிலையம் வந்துவிட்டேன்.எனது பேக்கெஜ்களை போட்டுவிட்டு..போர்டிங் பாஸ் வாங்கி..கேபின் பேக்குடன் செக்யூரிட்டி செக்கப்பிற்கு நின்றேன்.அவர்கள் கேட்ட சில கேள்விகள் சரிவர புரியாததால்..யா..யா..என பதிலளித்தேன்.உடன் அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது..எனது பையை திறக்கச் சொன்னார்கள்..

'ஆஹா..நாமும் இன்று சாருக்கான் ஆகிவிட்டோம்..நம்மைப் பற்றியும் செய்திகள் பறக்கும்..இந்திய வெளித்துறை,உள்துறை அமைச்சகம் அமெரிக்காவிற்கு தன் கண்டனங்களைத் தெரிவிப்பார்கள்.ஓரே நாளில் புகழ் அடைந்துவிட்டோம்' என்ற கனவில் கல்லைப்போட்டாற் போல என் பையிலிருந்த டூத் பேஸ்டை எடுத்து வெளியே வீசினார் ஒரு அதிகாரி.அந்த டூத் பேஸ்டை வைத்து நான் பிளேனை ஹைஜாக் செய்துவிடுவேன் என எண்ணினார்கள் போலும்..ஹைஜாக் என்றாலே வடிவேலு பாணியில் அவ்வ்வ்வ் என ஓடுபவன் நான் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.பின்னர் எனது பை என் வசம் கொடுக்கப்பட்டது.

விமானத்தில்..விஜிடேரியன் உணவு என குறித்திருந்தும்..எனக்கு கை காலுடன் ஒரு உணவு வந்தது.இது குறித்து விமான பணிப்பெண் தேவதைகளுடன்..மனமில்லையாயினும் தர்க்கத்தில் ஈடுபட்டேன்.கடைசியில்..முழு கத்திரிக்காய் அப்படி சிக்கன் போல தெரிந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு..வாயில் இட்டு விழுங்கினேன்.

லண்டனில் சென்னைக்கு கனெக்டிங் ஃபிளைட்.அங்கும் எனது பை மாட்டியது.உடன் ஒரு தீவிரவாதியை பிடித்து விட்டாற் போல அதிகாரிகள் சூழ்ந்துக் கொண்டனர்.பயணிகள் சிலர் வேடிக்கைப் பார்க்க சூழ்ந்தனர்.எந்த ஊராயிருந்தாலும் மக்கள் குணம் ஒன்றுதான் போல இருக்கிறது.எனது காமிரா, மொபைல் எல்லாம் ஆராயப்பட்டன. விட்டால் கைரேகை நிபுணரை வரவழைத்திருப்பார்கள்.அதற்குள் ஒரு அதிகாரி எனது பையைத் திறந்து..யுரேகா..யுரேகா எனக் கத்தினார்..நல்லவேளை ஆடையுடன் தான்.அவர் கண்டுபிடித்தது..காலம் காலமாய் என் மீசையை அழகாக திருத்த வைத்திருந்த என் கத்திரிக்கோலை.

AK47 வைத்திருந்ததைப் போல என்னைப்பார்த்து..அக்கத்திரியை எடுத்து வெளியே வீசிய அதிகாரி..பையை என்னிடம் ஒப்படைத்தார்.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல ஒரு நிகழ்ச்சி சென்னையில் காத்திருந்தது.

விமானத்திலேயே ஒரு படிவம் கொடுக்கப் பட்டு..அதில் எனக்கு பன்றிக் காய்ச்சல் வந்ததா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.இல்லை என எழுதினேன்.(ஆகா..என்ன புத்திசாலித்தனம்...அப்படியே ஒருத்தருக்கு காய்ச்சல் வந்திருந்தாலும்..அவர் உண்மையைச் சொல்லி..தண்டையார் பேட்டை மருத்துவமனைக்குச் செல்ல ஆசைப்படுவாரா என்ன)

சென்னை விமான நிலையத்தில்..Immigiration க்கு முன்..ஒரு மருத்துவர் உதவியாளருடன் அமர்ந்து..நம் படிவத்தைப் பார்த்து பேசாமல் (வாயில் பாதுகாப்பு ) சர்டிஃபைட் என ரப்பர் ஸ்டாம்பை அடித்து நம்மிடம் தந்தார்.பன்றிக்காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையாம் :-)))

நான் சென்னை மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் தான் ..எவ்வளவு நல்லவன் என அறிந்தேன்..மழை கொட்ட ஆரம்பித்தது.

சரி..ஒரு பதிவு போடலாம்..என எண்ணிய போதுதான்..யார் புண்ணியத்தாலோ ஹாத்வே தன் சேவையை நிறுத்திவிட்டு ஊரை விட்டு ஓடியது ஞாபக வர..வேறு சிறந்தது எது என மனதிற்குள் பட்டிமன்றம் ஒன்று நடத்தி..சாலமன் பாப்பையாப் போல எல்லாமே பரவாயில்லை என முடிவுக்கு வந்து ஏர்டெல் இணைப்புப் பெற்றேன்.

வாய் விட்டு சிரியுங்க..

1.யூனியன் தலைவர்- நம் அலுவலகத்தில் நம் மேல் திணிக்கப்படும் வாலண்டரி ரிடைர்மெண்டை எதிர்க்கும் விதத்தில் நான் முதலில் இந்த ஸ்கீமில் வெளியேறி நிர்வாகத்திற்கு ஒரு பாடம்
கற்பிக்க உள்ளேன்.

2.நான் உங்கிட்டே சொல்லாதேன்னு சொன்ன ரகசியத்தை நீ சுஜாதாகிட்ட சொல்லிட்டதா சொன்னாளே
நான் சுஜாதா கிட்டே சொன்னதை உங்கிட்டேசொல்லாதேன்னு சொன்னேனே சொல்லிட்டாளா
சரி...சரி..நான் அவ கிட்ட உன் கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லி இருக்கேன்..அதனால நான் அவ சொன்னதை உன் கிட்ட சொன்னதை அவகிட்ட சொல்லிடாதே
(படிக்கும் ரங்கமணிகளுக்கு தலை சுற்றுகிறதா)

3.அந்த தமிழ் படம் பார்க்கிறவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன புத்தகம் தர்றாங்களாமே
அது..அந்த படத்தில வர தமிழ் பாட்டுக்களுக்கு தமிழ் அர்த்தம் போட்டிருக்காங்களாம்.

4.குழந்தை-(சிரசாசனம் செய்யும் தந்தையைப் பார்த்துவிட்டு)அம்மா...அம்மா..சீக்கிரம் வாயேன்..அப்பாவுக்கு தலை இருக்க வேண்டிய இடத்திலே கால் இருக்கு..கால் இருக்க வேண்டிய இடத்திலே தலை இருக்கு.

5.என் பையன் என்னைவிட தைர்யசாலி..என் மனைவி எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசுவான்.

6.நீ காதலிக்கிற பெண்ணைப்பற்றி என் அபிப்பிராயம் எதுக்கு தம்பி கேட்கிறே?
அந்த பெண்ணைப்பற்றி எனக்கு ஒரு வருஷமாகத்தான் தெரியும்...உங்களுக்கு இருபது வருஷமா தெரியுமே!

Monday, November 2, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.எங்க ஆஃபீஸ்ல யார் தப்பு பண்ணினாலும் உடனே வீட்டுக்கு அனுப்பிடுவாங்க..
இப்போ நீங்க வேற வேலை தேடறீங்களா?

2.என்னோட பையன்..எப்போதும்..be indian..buy indian தான்
அவ்வளவு தேச பக்தியா?
ஆமாம்..படிப்பில கூட..இந்தியர்கள் கண்டுபிடித்த '0" தான் வாங்குவான்.

3.வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்
நாலு செண்ட் தான்
ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே

4.டாக்டர்- உங்க வயற்றில எப்படி இவ்வளவு தீப்புண் ஏற்பட்டது
நோயாளி- பையன் +2 ல நல்ல மார்க் வாங்கணுமேன்னு..இவ்வளவு நாள் வயத்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்

5.டாக்டர் என் மூக்கு பலமடைய ஏதாவது மருந்து கொடுங்க.என் மூக்கு கண்ணாடி வைட்டக் கூட மூக்கால தாங்க முடியல

6.வர வர ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வர்றீங்களே..என்ன காரணம்
நான் என்ன செய்யறது...ஒரு பயலும் போறப்ப எழுப்பிவிடாம போயிடறாங்க..

Sunday, November 1, 2009

இறைவன் ஒரு பச்சோந்தியா...

இறைவன் இருக்கின்றானா
இருந்தால்
அவன் நிறம் என்ன?
அறிவிலி ஒருவன் வினவினான்
அவன் பச்சை நிறம்
மரம்,செடி,கொடி,புல்
அவன் நீல நிறம்
வானத்தைப் போல
அவன் பழுப்பு நிறம்
பாறை, மலையைப் போன்று
அவன் வெண்மை நிறம்
உச்சியிலிருந்து விழும் நீரானபோது
அவன் சிவப்பு நிறம்
கீழ் வானத்தில் சூரியன்
வந்திடும் போது
அவன் மஞ்சள் நிறம்
வெயில் சுட்டெரிக்கும் போது
சூரியன் மறைந்ததும்
அவன் நிறம் கருப்பு
வானவில்லாய் தோன்றும் போது
பல நிறங்கள்
என்றதும்
பேதை கேட்டான்
அப்போது அவன் ஒரு
பச்சோந்தியா என
அவன் செம்புலப்  பெயல் நீர்
என்றிட்டேன்.

தீபாவளியும் நானும்...

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த பழனியிலிருந்து சுரேஷிற்கு நன்றி

1)உங்களைப் பற்றி சிறுகுறிப்பு..
பாவம்ங்க..பசங்க..இப்பவே நிறைய படிக்க வேண்டியிருக்கு..என்னைப் பற்றி வேற எழுதி..தேர்வில் கேள்விகள் வேறு கேட்டால்...என்னால் அவர்களது படிப்பு சுமை ஏற வேண்டாம்.

2)தீபாவளி என்றதும் உங்கள் நினைவிற்கு வரும் சம்பவம்..
கண்ணன் என்கவுன்டரில் நரகாசுரனை போட்டது

3)2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள்/இருக்கிறீர்கள்
தீபாவளிக்கு இவ்வருஷம் அமெரிக்காவில் இருக்கிறேன்

4)தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடப்படும் தீபாவளிப் பற்றி ஒரு சில வரிகள்..
இங்கு ஒன்றுமில்லை..தமிழ் அன்பர்கள் அதிகம் உள்ள கம்யூனிட்டியில் ஃபைர் ஒர்க்ஸ் இருந்தது

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள்..அல்லது தைத்தீர்கள்
தீபாவளிக்கு புத்தாடை வாங்கும் வழக்கம் பல வருடங்களுக்கு முன்னரே போய் விட்டது

6)உங்கள் வீட்டில் என்ன பலகாரங்கள் செய்ய்யப்பட்டது/வாங்கினீர்கள்
குலாப் ஜாமுனும்..முறுக்கும் செய்தார்கள்.ஆமாம்..எனக்கு ஒன்று புரியவில்லை..இந்த பண்டிகைகளுக்கு கடையில் பலகாரங்கள் (பழைய) வாங்கும் பழக்கம் சரிதானா?

7)உறவினர்களுக்கும்..நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துகளை தெரிவித்தீர்கள் (மின்னஞ்சல்,தொலைபேசி,வாழ்த்து அட்டை)
மின்னஞ்சல் தான்..மற்றபடி தபால்துறையை நம்புவதில்லை..எனெனில்..இப்போது அஞ்சல் துறையை அதிகம் அரசியல்வாதிகள் தான் பயன்படுத்துகின்றனர்..(கடிதம் எழுதுவது,தந்தி அனுப்புவது இப்ப்டி)

8)தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களை தொலைத்து விடுவீர்களா?
தொலைக்காட்சி அதிகம் பார்ப்பதில்லை..ஆகவே வெளியேதான் சுற்றுவது

9)இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில் அதைப் பற்றி சில வரிகள்..தொண்டு நிறுவனங்கள் எனில் அவற்றின் பெயர்,முகவரி,வலைத்தளம்..
தீபாவளிக்கு என்று செய்வதில்லை..மற்றபடி..திருமண நாள்,தாய்..தந்தை நினைவு நாள்..எனக்கே தோன்றும் தினம் ஆகிய நாட்களில்..உதவும் கரங்கள், மயிலையில் உள்ள அன்னை இல்லம் என்ற முதியோர் இல்லம் ஆகியவற்றிற்கு முடிந்த உதவி செய்வதுண்டு.

10)நீங்கள் அழைக்கும் இருவர்..அவர்களின் வலைத்தளங்கள்
கோமா - ஹா..ஹா..ஹாஸ்யம் (மகளிருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என எண்ணுவதால்)
மங்களூர் சிவா -the only 'colourful'blog (அப்படியாவது ஒரு பதிவு போடட்டுமே..என்ற எண்ணத்தில்)