Sunday, August 25, 2019

நாடகப்பணியில் நான் - 1

என் நாடக அனுபவங்களை எழுத வேண்டிய அளவிற்கு, தமிழ் நாடக உலகில் என்ன சாதித்துவிட்டேன் என்ற கேள்வி, இத் தொடரை ஆரம்பிக்கும் முன் எனக்குத் தோன்றியது.

அதே நேரம், ஆயிரக்கணக்கான வானரங்களுடன், ஸ்ரீராமன் சேது பாலம் அமைத்த போது, தான் மண்ணில் உருண்டு, அதனால் ஒட்டிய மணலை பாலம் கட்டும் மணலுடன் சேர்த்ததால், தன் முதுகில் ஸ்ரீராமனால் தடவிக் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே அணில்களின் மேல் இன்றும் காணப்படும் கோடுகள் என்று கதை உண்டு.தவிர்த்து,அதுவே, பெரும் காரியங்களில், ஒரு சிறு உதவியினை நாம் செய்தாலும், அணில் பங்கு என போற்றப்பட்டது

 தமிழ் நாடகக் கடலில் ஒரு துளியான நான் என் அணில் பங்கு அனுபவங்களைக் கூறுவதில் தவறில்லை என எனக்கு உணர்த்தியது..

இனி என் அனுபவங்கள்

நாடகம் எனும் போதைக்கு நான் எப்போது அடிமை ஆனேன்.என் எண்ணச் சிறகை நாடக வானில் பறக்க விட்டேன்.

அப்போது என் வயது 11..அம்பத்தூர் சர் இராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.எங்களது பக்கத்து வீட்டில் ராகவேந்திரன் என்னும் இளைஞர் ஒருவர் இருந்தார்.
அவரை நாங்கள் எல்லாம் "ராகவேந்திர அண்ணா" என்றே அழைப்போம்.அவர் அவ்வப்போது அம்பத்தூர் குப்தா பள்ளியில் நாடகம் போட்டு வந்தார்.அவரது நாடகங்களுக்கு எங்கள் குடும்பம் முழுவதற்கும் இலவச பாஸ்.(அன்றே ஓசியில் நாடகம் பார்க்கத் தொடங்கியது, இன்று வரை தொடர்கிறது)

அவர் ஒருநாள் என்னிடம்,"தம்பி, உனக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறதா?" என வினவினார்.

அதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை எனக்கு.உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், படிப்பைத் தவிர வேறு எது செய்தாலும் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் தலையைவலம் இடமாகவும் மேலும் கீழுமாக ஆட்டினேன்.அந்த அண்ணன் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும் என.

அந்த அண்ணனுக்கு என்ன புரிந்ததோ, ஆனால் என்னிடம், "உங்க அப்பா கிட்ட நானே கேட்கிறேன்" என்றார்.அத்துடன் நில்லாது, எனது தந்தை அன்று அலுவலகத்திலிருந்து திரும்பியதுமே"சார், உங்க பையனை நான் அடுத்ததாகப் போடப்போகும் நாடகத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாமா?" என்று கேட்டார்

கோபத்துடன் என்னைப் பார்த்த அப்பா, சாந்தத்துடன் அவரிடம், "படிக்கிற வயசுலே அவனுக்கு இதெல்லாம் வேண்டாம் " என்று சொல்லிவிட்டார்.

அந்த அண்ணனுக்கு  ஏமாற்றம்.எனக்கும் ஏமாற்றம்.கூடவே அம்மாவைப் பார்த்தேன்.அம்மாவிற்கும் ஏமாற்றம் என முகம் சொல்லியது.

தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஆவலை ஏற்படுத்தியதே என் அப்பா, அம்மாவின் ஆதரவு தான்.குடும்பப் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லையாயினும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கண்ணன், கல்கண்டு என பத்திரிகைகளை வாங்கிக் குவித்தவர்கள் அவர்கள்.அந்த வயதிலேயே, அமரதாராவையும், மலைச்சாரல் மாதவியையும், தில்லானா மோகனாம்பாளையும், உன் கண்ணில் நீர் வழிந்தாலையும் படித்து தேர்ந்தவன் நான் .

இரு நாட்களாக நான் சோகமாக இருப்பதைப் பார்த்த அப்பாவிற்கு என்ன தோன்றியதோ.'உனக்கு நடிக்க ஆசை இருந்தால் , இந்த ஒரு நாடகத்தில் நடி பரவாயில்லை.ஆனால் படிப்பு கெடக்கூடாது" என அனுமதி அளித்தார்

நான் உடனே ஓடிப் போய் , ராகவேந்திர அண்ணனிடம் சொல்ல, அவரின் "பிரேமாவின் சபதம்" என்ற நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார்.

என்ன பாத்திரம் என் கிறீர்களா. கதாநாயகி பிரேமாவின்..பதின்ம பருவப் பாத்திரம் .

ஆம்..எனது முதல் நாடகத்தில், பெண் வேடம் பூண்டு நடித்தேன்

(தொடரும்)

Monday, August 19, 2019

துனை நடிகை

நாயகியைச் சுற்றி
நடனமாட
துணை நடிகைகள்
துடிப்புடன்...
அவர்கள்
தொப்புளை
நெருக்கத்தில் காட்டுங்கள் - என
இயக்குநர்
இயம்ப
புகைப்படக் கருவி
நெருங்குகிறது அதனிடம்...
எக்ஸ்ரே கருவியெனில்
காலியாய்
இருக்கும்
இரப்பையைக்
காட்டியிருக்கும்