Monday, September 30, 2013

நீரிழிவு நோயால் அவதிப்படும் தமிழ் இதழ்கள்..ஒருவர் திடீரென காரணமில்லாமல் இளைத்து விட்டால், சாதாரணமாக, "உங்களுக்கு சுகர் இருக்கிறதா?" என விசாரிப்போம்..

அதுபோல தமிழ் இதழ்களும் இன்று இளைத்து விட்டன..

தமிழ் வார இதழ்கள், தங்களுக்கே உரிய அளவுடன்..அதிகப் பக்கத்துடன், நிறைய கதைகள், தொடர்கதைகள், அரசியல், சினிமா, இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் என அனைத்தையும் தாங்கி வந்து, வாசகர்களை அவை என்று வருகிறது என ஆவலுடன் எதிர்ப்பார்க்க வைத்த காலங்கள் உண்டு.

ஆனால்...என்று விகடன், தன் அளவை அதிகரித்தானோ, அன்றே தரத்திலும் சற்று குறைந்து விட்டது. ஆனாலும் சில இலக்கியத் தரம் வாய்ந்த கட்டுரைகள், விமரிசனம் என சுவாரஸ்யம் சற்று இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.ஆனால்..144 பக்கங்கள் வரை வந்த அது, இன்று மிகவும் இளைத்து விட்டது.

அடுத்து அதிகம் வருத்தப்பட வைத்துள்ளது கல்கி. நல்ல பாரம்பரியத்துடன், ஜன ரஞ்சகப் பத்திரிகையா அல்லது இலக்கியமா அல்லது பொது அறிவா என்று அதிசியப்படும் அளவிற்கு வந்த பத்திரிகை.இன்று மிகவும் இளைத்து 48 பக்கங்களே தாங்கி வருகிறது.இப்படியே போனல், கல்கி..வரும் தலைமுறையினரிடம் ஒரு காலத்தில் வந்த பத்திரிகை என்ற பெயர் எடுத்துவிடுமோ என அஞ்சப்பட வேண்டியுள்ளது.

தன் பங்குக்கு கலைமகளும், அமுதசுரபியும் கூட இளைத்து விட்டன.

ஓரளவு, குமுதமும், குங்குமமுமே இன்று சிறப்பாக வருகிறது எனலாம்.(குமுதத்தில் இன்று வரும் செய்திகளில் நாம் உடன்படுகிறோமா , இல்லையா இன்பது வேறு விஷயம்)

இதற்குக் காரணம் என்ன? சர்குலேஷன் குறைந்து விட்டதா? என்றால், அப்படியும் சொல்ல முடியாது.

வேறு என்ன காரணம்..

நான் அறிந்த வரை..அவற்றில் வரும் விளம்பரங்கள் தான் காரணமாய் இருக்கக் கூடும்.

முன்பெல்லாம் இதழுக்கு, இருபது , முப்பது பக்கங்கள் விளம்பரம் வரும்.அதனால் விஷயங்களும் அதிகப் பக்கங்கள் வந்தன.இன்றோ வார இதழ்களில் விளம்பரங்களை அதிகம் காணமுடிவதில்லை.

சென்ற வார 'கல்கி' யில், வெளியார் விளம்பரம் என மூன்று பக்கங்கள் தான் வந்துள்ளது.தவிர்த்து, விளம்பரங்கள் இல்லாததாலும்,காகித விலை உயர்வு, நிர்வாகச் செலவு என கட்டுக்கடங்காத செலவுகள் அதிகரித்ததாலும் இந்நிலை என நிர்வாகிகள் கூறக்கூடும்.

ஆனால்

இனி பழைய தரத்தில் கல்கியையோ, விகடனையோ பார்க்க முடியாதா..என..தமிழ் வாசகர்கள் வருத்தமே அடைகின்றனர்.

Sunday, September 22, 2013

தவறு செய்பவரா நீங்கள்...மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா?

வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.

ஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..

நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.

சில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.

வாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.

நான்..ஒரு சமயம்...ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.

ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.

தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.


Friday, September 20, 2013

அண்ணா....பல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.

அப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.

படிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.

படிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.

எப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.

சந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.

இடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.

1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.

17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.

நாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.

அண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது எனலாம்.அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.

அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.

எதையும்..தாங்கும் இதயம்..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!

ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.

Tuesday, September 17, 2013

அவரவர் பார்வையில்... (சிறுகதை)அவள்:-

நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.

எனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.

ஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம்.

அம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று.

அவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.

இன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

ரவியின் தாயார்:-
-----------------
என் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த பெண்ணை திருமணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கிடணும்.

அவன்:-
----------
நான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28 வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.

திடீரென ஒருநாள் இரவு 9 மணிக்கு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால் அமர வைத்துவிட்டு 'இந்த தொடரை கொஞ்சம் பாரேன்'என்றாள்.
நானும் பார்த்தேன்.
பாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம் குடிகொண்டிருந்தது.
அம்மா கேட்டாள் 'டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம் வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி முடித்து விடலாமா?'

'வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால் இந்த பெண் எனக்கு வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.

Sunday, September 15, 2013

எல்லாம் இன்ப மயம்..(ஒரு பக்கக் கட்டுரை)


நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்...பின்  .........பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

Thursday, September 12, 2013

ஆதலால் அன்புடன் இருப்பீர்..காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு (79)

அன்பு எனும் அகத்துறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாய் இருந்து என்ன பயன்?

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (80)

அன்பு நெஞ்சகத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்.இல்லையேல் அது எலும்புத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்

Tuesday, September 10, 2013

வாய் விட்டு சிரிங்க...சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.Monday, September 9, 2013

நலம்..நலம் அறிய ஆவல்...
பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகள்லே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்தோட நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா.


Thursday, September 5, 2013

உண்மையும்...பொய்யும்...


எல்லோரும் ஊழல்வாதிகள்...உண்மையாய் நாட்டுக்கு உழைப்பவர் இன்று யாரும் இல்லை..இப்படி
பல விஷயங்களில்..நாட்டு நடப்புக்களைப் பார்த்து நாம் சொல்லும் வார்த்தைகளே இவை.
இன்று...உண்மை மட்டுமே பேசுவேன்..என்று ஒருவன் சொல்வானானால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.
பொய் பேசாதவர்களே இன்று இருக்க முடியாது.
அலுவலகத்தில் விடுமுறை தேவையானால்..எற்கனவே செத்துவிட்ட நம் தாத்தா,பாட்டிகள் உதவிக்கு வந்து..அன்றுதான் மீண்டும் சாகிறார்கள்.
தான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.
5000 ரூபாய்க்கு ஒரு புடவையை வாங்கிவிட்டு அத விலை 3000 என்று சொல்லாத மனைவிகள் இருக்கிறார்களா?
தன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர்,
சுருங்கச் சொன்னால்..பொய் ..நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்டது.
நாம் பேசுவது பொய் என்று தெரிந்துவிட்டால்...
தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறான் வள்ளுவன்.,'பொய்மையும் வாய்மை இடத்தே என்று வள்ளுவனே சொல்லி இருக்கார்'என அவரை துணைக்கு இழுத்து விடுவோம்.

ஒரு சமயம்..அக்பர்..பீர்பாலிடம் 'உண்மைக்கும் பொய்க்கும் அப்படி என்ன வித்தியாசம் என்றார்.
உடனே பீர்பால்'நான்கு விரற்கடை வித்தியாசம்'என்றாராம்.
நான்கு விரல்களை காதுக்கும்,கண்ணுக்கும் இடையில் வைத்து'காதால் கேட்பதெல்லாம் உண்மையாகி விடாது..ஆனால் கண்ணால் காண்பது நிஜம்.அதனால் காதுகளால் கேட்பதை வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது..கண்ணால் பார்த்து தீர விசாரித்தே உண்மையை நிர்ணயிக்க முடியும்'என்றார்.
அதனால் காதிலே கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது.
ஆமாம் கண்ணால் பார்த்தால் அது நிஜமா...தெரியவில்லையே..
'கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்..'என ஒரு கவிஞன் சொல்லி இருக்கானே!!!!

Wednesday, September 4, 2013

கனிப்பேச்சு SPB..


 சூபர் சிங்கர் 4..
இதைப் பற்றி பேசாதவர்களோ..நிகழ்ச்சியைப் பாராதவர்களோ மிகச் சிலரே இருப்பர் என எண்ணுகிறேன்.
என்னமாய் பாடுகிறார்கள் இளைஞர்கள்.
கடந்த மூன்று நாட்களாக சிறப்பு விருந்தினராக பிரபல பாடகர் , இசையப்பாளர் S.P.பாலசுப்பிரமணியம் பங்கேற்றார்.
பெருக்கத்து வேண்டும் பணிவு என்பார் வள்ளுவர்.
பாலசுப்பிரமணியிடம், அது காணப்பட்டது.
சில பாடகர்கள் பாடியதில் உள்ள சிறு குறைகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டிய போதும், இவர்," சூப்பரா பாடின தம்பி.நாங்க எல்லாம் பாடினபோது கூட பல டேக்குகள் வாங்கிய பாடல்களை நீங்க எல்லாம் சுருதி சுத்தமா லைவ்வா எப்படி பாடறீங்க..' என்று வியந்தார்.
எந்த ஒரு போட்டியாளரையும், கடுமையாய் விமரிசித்து...மன வேதனை அடையச் செய்யவில்லை.
சிறு வயதில் தான் செய்த தவறுகளையும் சொன்னார்.
அவர் சிறப்பு விருந்தினராய் இருந்தாலும், போட்டியாளர்களிடம் ஒரு தந்தைக்குறிய பாசத்துடன் செயல்பட்டார்.
காய் கவராத கனியாய் இருந்தது அவர் பேச்சு.
மற்ற நீதிபதிகளும்..போட்டியாளர்களிடம் இவர் காட்டிய மனித நேயத்தைக் காட்டுவார்களா? 

Tuesday, September 3, 2013

வாய் விட்டு சிரிங்க...1.நேற்று டைபிஸ்ட் நளினி ஏன் உன்னை திட்டினாள்?
அவளோட மாமியார் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு'உன் மகிழ்ச்சியில்
பங்குக் கொள்கிறேன்' என்று சொன்னேன் அதனால்தான்..

2.கோட்டையை கைப்பற்றுவோம்னு தலைவர் பேசினாரே..என்னாச்சு
கோட்டையை கோட்டை விட்டுட்டார்.

3.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை சிம்பாலிக்கா எப்படி தெரிவிச்சிருக்கார்
தெரியுமா?
எப்படி
மகாநாட்டிற்கு தொண்டர்கள் பிணி பிணியாய் வருக என்று..

4.நேற்று என் மாமியார் என்னை கட்டிப்பிடிச்சு ஆனந்தக்கண்ணீர் விட்டாங்க
அப்படி என்ன பண்ணினே?
அவங்களுக்கு சமமா நானும் சண்டை போடறேனாம்..

5.முதல் நாளே நீங்க எடுத்த படம் நொண்டுதே
அதனால்தான் படத்துக்கு சுளுக்கு என்று பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

6.எங்க வீட்ல ஒரே நேரத்திலே எங்க பாட்டி,எங்க அம்மா,என் பொண்ணு வாந்தி
கங்கிராட்ஸ்..உங்களுக்கு சித்தப்பா,தம்பி,பேரன் எல்லாம் பிறக்கப்போறாங்களா?


உடல், மனம் ஆரோக்கியம் அடைய நினைக்க வேண்டியன - பாரதியார்
நான் நோயில்லாதவன்... நான் வலிமையுடையவன்.என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகசக்தியின் வீடுகளாயின.

என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.

நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.

நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..

என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.

நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.

தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.

எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.

நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்

(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)

Monday, September 2, 2013

மிருகங்களே...மனித ஆசை தவிர்...நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...