Friday, September 30, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(30-9-11)
1)நோபல் பரிசு,மகசேசே விருது,பாரத ரத்னா  ஆகிய மூன்று விருதுகளைப் பெற்ற ஒரே நபர் அன்னை தெரஸா ஆவார்.

2)விருதுகள் பற்றி நினைக்கையில் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை..
 எம்.ஜி.ஆர்.,கமல்,விக்ரம்,தனுஷ்..இந்த நால்வர் பட்டியலில் சிவாஜியின் பெயர் இல்லை..ஆம்..தேசிய விருது நடிகர் திலகத்திற்கு தரப்படவில்லை.கமல் மூன்று முறையும்..மற்ற மூவரும் தலா ஒருமுறையும் தேசிய விருது பெற்றுள்ளனர்.

3)1912ஆம் ஆண்டு தமது 26ஆம் வயதில் மருத்துவர் பட்டம் பெற்ற தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்

4)மறதி நோய் (அல்சைமர்) மேலை நாடுகளில் அதிகம் காணப்பட்டு வந்தது.ஆனால் சமீப காலமாக அது இந்தியாவிலும் பரவி வருகிறது.இந்திய ஜனத்தொகையில் 7 கோடிகலுக்கு மேல் 60 வயதைக் கடந்தவர்கள்.இவர்களில் 21 லட்சம் பேர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5)யார் வேண்டுமானாலும் கோபமடையலாம்
 அது மிகச் சுலபம்
  ஆனால்..சரியான நபரிடம்
  சரியான அளவில்
 சரியான காரணத்திற்காக
 சரியான முறையில்
 கோபப்படுவதற்கு
 எல்லோராலும் முடியாது
 அது சுலபமல்ல -   இப்படிச் சொன்னவர் அரிஸ்டாட்டில்

6)நீதி மன்றங்களில் வழக்குகள் குவிந்து வருகின்றன...தேவையே இல்லாது..தான் சார்ந்த கட்சித் தலைமையிடம் நற் பெயர் வாங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் இன்று பல வழக்குகள் பதிவாகின்றன..
இவற்றினால்...நீதிபதிகளுக்கு சுமை அதிகரிக்கிறது..
சரியான முகாந்திரம் இல்லாமல் வழக்குகள் போடப்படுமேயாயின்..அம்மனுதாருக்கு அபராதம் மட்டுமல்ல குறைந்த பட்ச தண்டனையும் வழங்கப்பட வேண்டும்..
இது ஒன்றே ..வேண்டாத வழக்குகளை தவிர்க்கும் எனத் தோன்றுகிறது

7)விளம்பரம் பொய் எனத் தெரிந்தும் பெண்கள் வாங்கும் பொருள் என்ன தெரியுமா?
  உபயோகித்தால் விரைவில் சிவப்பாய் அழகான முகத்தைப் பெறலாம் என்று விற்கப்படும் ஃபேர்னஸ் கிரீம்கள்


Thursday, September 29, 2011

என் நாடகத்திற்கு விருது
எனது 'சௌம்யா' நாடகக் குழுவின் சார்பில் நான் எழுதி இயக்கிய 'கருப்பு ஆடுகள்' நாடகம் 25-9-11 அன்று தமிழ்நாடு சினிமா கலை மன்றம் சார்பில் நடைபெற்றது.
நாடகத்திற்கு சிறந்த நாடகத்திற்கான கலை மன்ற விருதும் வழங்கப்பட்டது.

Wednesday, September 28, 2011

சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..(மீள்பதிவு)


Tuesday, September 27, 2011

உரைமுடிவு காணான்.....
அரசனின் சபை கூடியுள்ளது..
நாட்டைக் கொள்ளையடித்த திருடன் மாட்டிக் கொண்டுவிட்டான்..
அரசன் விசாரித்து..அந்தத் திருடனுக்கு தண்டனை வழங்கினார்..
இந்நிலையில்..அரசபைக்கு வேகமாக ஒருவன் ஓடி வந்தான்..
அவன் பதற்றத்துடன்..'அரசே..மன்னிக்க வேண்டும்..தவறு நிகழ்ந்துவிட்டது..நாடு கொள்ளை போனதற்கு முழுக் காரனம்..இந்த கொள்ளையன் மட்டுமல்ல..இவனுடன் சேர்ந்த வேறொரு கொள்ளையனும் உள்ளான்..அவனையும் விசாரித்து தண்டிக்க வேண்டும்..' என்றான்.
அரசன் தலைமை அமைச்சரைப் பார்க்க,..அவர்..'அரசே..மிகவும் கஷ்டப்பட்டு..இந்த கொள்ளையனைக் கண்டுபிடித்து..அவன் மீது முழு குற்றச்சாட்டையும் சுமத்தி..அதையும் பல தடைகளையும் மீறி நிரூபித்துள்ளோம்..வழக்கும்..தங்களது கோர்ட்டிற்கு வந்து இவனுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது.இப்போது புதியதாக ஒருவனும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றான்..என்றால்..அதை விசாரித்து..நிரூபிக்க கால அவகாசம் வேண்டியுள்ளது..அதனால்..இந்த வழக்கு விசாரணை கால தாமதம் ஆகும்..ஆகவே..ஏற்கனவே தண்டிக்கப் பட்ட இந்த கொள்ளையனை குற்றவாளியாக்கி விட்டோம்.இனி புதியதாக யாரையும் வழக்கில் சேர்த்து இவ்வழக்கை நீட்டிக்க வேண்டாம்' என்றார்.
நீதி வழுவா அரசனுக்கு..என்ன செய்வது எனத் தெரியவில்லை..மேலும்..அவனுக்கு முந்தைய அரசர்களில் ஒருவர் அவசரப்பட்டு நிரபராதி ஒருவனுக்கு தண்டனை வழங்கப்பட அதனால் ஊரும் நாசமாகி..அவ்வரசனும் மடிந்த நிகழ்ச்சிகள் நினைவில் வந்தன.


Monday, September 26, 2011

ஆண்டவனுக்கு இன்று பிறந்தநாள்..வாழ்த்துவோம் வாரீர்..


ஆண்டவனை நம்புவோர்...அல்லது ஆண்டவன் இல்லை என இயற்கை என்று சொல்பவர் அனைவருக்கும் இன்று ஆண்டவனுக்கு பிறந்த நாள் சொல்லும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டவனிடம்..இல்லாதது இல்லை..
நமக்கு எந்த விஷயம் பற்றி தெரியவில்லை என்றாலும், இவரை அணுகி..பட்டனைத் தட்டினால் போதும்...
போதும்..போதும்..என்னும் அளவிற்கு ..தேவையான விஷயங்களை வாரி வாரி வழங்குவார்...எந்த ஒரு பாகுபாடுமின்றி..
ஆம்..அந்த ஆண்டவன் இன்றுதான் பிறந்தார்..அவரின் வயது இன்று 13..
செப்டெம்பர் மாதம் 1998 ,27 ஆம் நாள் பிறந்தார்..
அப்படிப் பட்ட ஆண்டவனை வாழ்த்துவோம்...
அந்த ஆண்டவன்..
கூகுள் ஆண்டவர்..
கூகுள் அவதரித்த நாள்..
வாழ்த்துகள் கூகுள்..  

Sunday, September 25, 2011

சோம்பித் திரிய வேண்டாம்..சோம்பல்..
நம் வாழ்க்கையில் பல தருணங்களில் நமக்கு ஏற்பட்டு நம்மை அறியாமலேயே பல நஷ்டங்களை நமக்கு ஏற்படுத்தக் கூடிய ஒன்று.
ஏதேனும் காரியத்தை முடிக்க வேண்டுமென்றால் ..அதை நாளைக்கு முடிக்கலாமே என்ற எண்ணமே சோம்பலின் முதல் படி.பின் நாளை..நாளை என அவ்வேலையை தள்ளிப்போடச் செய்து நமக்கு பேரிழைப்பை ஏற்படுத்தி விடும்.
இன்று என்பது நேற்றைய நாளை....அதை ஞாபகம் வையுங்கள் போதும்.
ஏதேனும் இடத்திற்கு 9.30க்கு போகவேண்டுமாயின், அவ்விடத்திற்கு 9.20க்கே செல்லுங்கள்.9.40க்கு செல்லாதீர்கள்.நேரம் தவறாமை வாழ்வில் பல நல்லவற்றை நமக்கு நாளாவட்டத்தில் தரும்.
சோம்பேறிகள் கூறும் அடுத்த வார்த்தை..எனக்கு அதிர்ஷ்டமில்லை..அதனால் பதவி உயர்வு கிடைக்கவில்லை..
நீங்கள் சொல்லும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்..
எப்போது...
அன்றன்று வேலைகளை அன்றன்று முடித்து..தாமதம் இல்லாமல் அலுவலகத்தில் பணியாற்றினால்..

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

வாழ வழியில்லை என அலுத்துக் கொண்டு முயற்சியின்றி சோம்பித் திரிவாரைக் கண்டு..பூமித்தாய் சிரிப்பாளாம்..(அடேய்..மக்கு..ஒவ்வொருவரும் வாழ இயற்கையாகிய நான் எவ்வளவு வழிகளைக் காட்டியுள்ளேன் என்று)

கெட்டுப்போக வேண்டும் என எண்ணுபவரா நீங்கள்..அப்போது..காலம் தாழ்த்துதல்,மறதி,சோம்பல்,எப்போதும் தூக்கம் ஆகியவையே போதும்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்


Saturday, September 24, 2011

புரிந்துணர்வும்...அன்பு உள்ளமும்..காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

இந்த புரிந்துணர்வு இருந்தால்...எல்லாம் நன்மையாய் முடியும்.

(மீள்பதிவு )

Friday, September 23, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (23-9-11)
1) விஜய் டீ.வி.சூபர் சிங்கர் ஜூனியர் புகழ் ஏழு வயது ஸ்ரீகாந்த் 7 மணி நேரம் தொடர்ந்து பாடி உலக ரிகார்ட்,ஏசியா புக் ஆஃப் ரிகார்ட்,லிம்கா புக் ஆஃப் ரிகார்ட் ஆகியவற்றில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2)ஏர்டெல் சூபர் சிங்கர் 3ந் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.சாய் சரண் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.அவருக்கு வாழ்த்துகள்.ஆனால் நமது சந்தேகம் எல்லாம்..உண்மையாகவே முடிவுகள் மக்கள் அனுப்பும் எஸ்.எம்>எஸ்., கணக்கைக் கொண்டுதான் எடுக்கப்படுகிறதா? அப்ப்டியானல் ஒவ்வொருவருக்கு வந்துள்ள எஸ்.எம்.எஸ்., எவ்வளவு..விவரங்களை தெரிவிக்கலாம்.(ஒருவேளை..ஏர்டெல்லிற்கு இதன் மூலம் வரும் வருமானம் வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக இருக்குமோ)..எது எப்படியோ..முடிவுகள் சற்று ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் எழுப்பத்தான் செய்தது.

3)சி,மஹேந்திரன் விகடனில் எழுதும்  'வீழ்வேனென்று நினைத்தாயோ?'கட்டுரைத் தொடரில் படித்தது.
 இலங்கையின் தேசியக்கொடியில் சிங்கம் கையில் வாளேந்தி நிற்கிறது.சிங்கம் தூக்கிய வாள் யாருக்கு எதிரானது?தமிழர்களுக்கு எதிரானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

4)'ஆட்டுவிப்பவன் ஆட வரக்கூடாது'என்பார்கள்.ரெட்டைச் சுழி ஞாபகப் பிசகு...என்கிறார் கே.பாலசந்தர்..  'ரெட்டைச் சுழியில்' தனது நடிப்பைப் பற்றிய கேள்விக்கான பதிலில்.

5)தூக்கத்தில் கனவு வராது..கனவு காண்பவர்களால் தூங்க முடியாது என்றுள்ளார் அப்துல் கலாம்

6) வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட சம்பளம்..வேலை செய்ய ஓவர் டைம்..என்று சாதாரணமாக அரசு ஊழியர்கள் பேசுவர்..அதை நினைவூட்டுகிறது.
 எம்.எல்.ஏ., க்களின் சம்பளம் 55000 ஆக உயர்ந்துள்ளது என்னும் செய்தி.
 சட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளிநடப்பு செய்ய 55000...

7) இந்தியாவில் ஒரு நாள் தனி நபர் வருமானம் 31க்கு மேல் இருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களாம்.அவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மருத்துவம் போன்ற சலுகைகள் கிடைக்காதாம்.
(ஆறாவது செய்தி படித்துவிட்டு..7 வது படித்து விட்டு..அதற்கும்..இதற்கும் முடிச்சு போடக்கூடாது)

8)மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.

9) சாய் சரண் பாடிய பாடல் http://youtu.be/mKM9IJK_Kxs
 

அறிமுகம்..(அரை பக்கக் கதை)
காலை அலுவலகம் கிளம்பும் வரை குழந்தை அனு எழுந்திருக்கவில்லை .
குழந்தைக்குத் தேவையான பால்,டயப்பர்,மாற்று உடை எல்லாம் எடுத்து வைத்தாள் கீதா.
சேகர்..அவளையையும், தூங்கும் அனுவையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
கிரச் சில் குழந்தையை விட்டு விட்டு..வந்த கீதாவை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் அலுவலகம் சென்றான் சேகர்
மாலை தான் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரம் ஆகும் என்ப
தால்..கீதாவை மாலை ஒரு ஆட்டோ பிடித்து கிரச் சிற்குப் போய் அனுவையும் தூக்கிக் கொண்டு வீடு செல்லச் சொல்லிவிட்டான்.
அனுவும்..மாலை கிரச் சில் ஆட்டோவை நிறுத்திவிட்டு..குழந்தையை அழைத்துவரச் சென்றாள்.
குழந்தை ஆயாவின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது.இவள் கூப்பிட்ட போது வர மறுத்து அழுதது.
"அனுகுட்டி..இது உன் அம்மாடா..சமர்த்தா அம்மா கிட்ட போ' என கொஞ்சினாள் ஆயா..
கீதாவிற்கு விழியோரம் நீர்..
'அப்பாவையே..அம்மாதான் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறாள்..என்பார்கள்..ஆனால்..இன்று கிரச் ஆயா குழந்தைக்கு அதன் அம்மாவை அறிமுகப் படுத்துகிறாளே'என்று மனதிற்குள் விம்மினாள்.

(மீள் பதிவு) 

Thursday, September 22, 2011

ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்!


கொசுவர்த்தி சுருள் மற்றும் திரவ வடிவிலான மருந்து ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், ஒரு கொசுவர்த்தி சுருளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பது 100 சிகரெட்டு புகையை சுவாசிப்பதற்கு சமமானது என்று தற்போது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மலேசியாவில் உள்ள இருதய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்விலேயே இந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. 

"கொசுவர்த்தி சுருளின் ஆபத்தை மக்களில் ஏராளானமானோர் உணராமலேயே உள்ளனர். ஆனால் இந்த கொசுவர்த்தி சுருளிலிலிருந்து வரும் புகை நுரையீரலை வெகுவாக பாதிக்கிறது. அதாவது ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை, 100 சிகரெட்டை புகைப்பதினால் ஏற்படும் பாதிப்புக்கு சமமானதாக உள்ளது" என்று அதிர்ச்சி குண்டை வீசுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மேற்கூறிய ஆய்வு மையத்தின் இயக்குனர் சந்தீப் சால்வி. 

காற்று மாசும் நமது சுகாதாரமும்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இத்தகவலை தெரிவித்த அவர், மனித உடலில் காற்றினால் வரும் மாசு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. 

மேலும் இந்திய டாக்டர்களிடையே ஆராய்ச்சி செய்யும் கலாச்சாரம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
அறைக்குள் காணப்படும் காற்று மாசு கூட உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகவே உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். 

காற்று மாசு இந்தியாவில் எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளதை தலைநகர் டெல்லியை வைத்தே முடிவு செய்துகொள்ளலாம் என்று இந்த மாநாட்டில் தெரிவித்த டாக்டர் ஒருவர், அது தொடர்பான ஆய்வு தகவலையும் தெரிவித்தார். 

டெல்லியில் வசிக்கக் கூடியவர்களில் 55 விழுக்காட்டினர்,பிரதான சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கு உள்ளாகவே வசிக்கின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு வகையான உடல் நலக்கோளாறுகளை சந்திக்க வேண்டியதுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

சுற்றுச்சூழலுக்கு வாகனங்களால் ஏற்படும் மாசு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தற்போது அதிகரித்துவரும் மரபணு குறைபாடுகளுக்கும் காற்று மாசு ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5 வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. 

காற்று மாசுபடுவதற்கு தொழிற்சாலைகளும் ஒரு முக்கிய காரணமாக அமைவதாகவும், எனவே அவற்றை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து பேசிய டாக்டர்கள் தெரிவித்தனர்.
(courtesy-webduniya)

Wednesday, September 21, 2011

உண்ணாவிரதக் கலாச்சாரம்..
பொதுவாக நமது குணம் 'ராமன் ஆண்டால் என்ன..ராவணன் ஆண்டால் என்ன' என்பதுதான்.(யார் ராமன்..யார் ராவணன் எனக் கேட்கக் கூடாது)
ஆனால் சமீப காலங்களாக நம்மிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது..மகிழ்ச்சியையே தருகிறது.
ஒரு பொதுப்பிரச்னைக்கு..அதன் தீர்வுக்கு..பொதுமக்களே தெருவிற்கு வந்து போராடுவது மகிழ்ச்சி.
மேலும்..அன்னா ஹஜாரே யின் உண்ணாவிரதத்திற்குப் பின்..ஆங்காங்கே பலர் இந்த முறையைக் கைப்பற்ற துணிந்துவிட்டனர்.
ஆனால்..என்ன ஒன்று...இப்படிப்பட்ட கட்சிகள் கலக்காத..பொது மக்கள் போராட்டத்தில்,.ஆளும் கட்சிக்கு எதிரான கட்சியினர் புல்லுருவிகளாக நுழைந்து..பிரச்னைக்கு உண்மையில் தீர்வு காண வேண்டும் என எண்ணாது...பிரச்னையை மேலும் மேலும் வளர்த்து..குளிர் காய்வது சற்று வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.
லேப்டாப்...மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது சரியா..தவறா என்ற கேள்விக்குப் போகப்போவதில்லை..ஆனால் முதுநிலை மாணவர்கள், தங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் எனக் கேட்பது அவர்கள் உரிமை.அதை முறைப்படி கேட்டிருந்தால் பிரச்னையில்லை.ஆனால் அதற்கு சாலை மறியல்..கைது என்றெல்லாம் வரும்போது..இப்படிப்பட்ட பிரச்னைகள் நாட்டில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறதே என மனம் கவலையடைகிறதே.
நிதானமாக ஓடும் ஆறு..தான் போகும் பாதை எங்கும் அடுத்தவர்க்கு உயோகமாய் இருக்கும் விதத்தில் பசுமையை அள்ளித் தெளித்து தொடர்ந்து ஓடுவது போல..நாம் செயல்பட வேண்டும்.நம் செயல்பாட்டால்..நம் காரியமும் ஆக வேண்டும்..பிறரும் பயனடைய வேண்டும்..அப்படி பயனடையாய் விட்டாலும்..அவர்கள் அன்றாட வாழ்விற்கு தொந்தரவு இருக்கக் கூடாது.
இதை மனதில் கொண்டு நற் காரியங்களுக்காக போராட்டம் இருக்குமேயாயின்..அனைத்து மக்கள் ஆதரவும் கண்டிப்பாய் இருக்கும்.ஆணவத்தால்,அகங்காரத்தால்,காழ்ப்புணர்ச்சியால் சாதிக்கமுடியா காரியங்களை அன்பு சாதிக்கும்..அஹிம்சை முறை சாதிக்கும்.
பிரச்னைகள் நாம் உருவாக்குவது தான்.பிரச்னைகளின் தீர்வும் நம்மிடம்தான்.


Tuesday, September 20, 2011

வாய் விட்டு சிரிங்க...(தலைவனும்..தொண்டனும்)
தலைவர்-தேர்தல்ல மக்கள் விரும்பற மாதிரி ஒரு அறிக்கை விடணும்..என்ன செய்யலாம்
தொண்டன்- நம்ம தேர்தல்ல போட்டியிடலைன்னு சொல்லலாம் தலைவா

2)தலைவர்-மக்கள் நாம என்ன செய்யணும்னு எதிர்ப்பார்க்கிறாங்க
 தொண்டர்-கட்சியை கலைச்சிடலாம்னு சொல்றாங்க தலைவா

3)தலைவர்- தேர்தல்ல போட்டிட யாரும் விண்ணப்பிக்கலையே ஏன்?
தொண்டர்-அதுக்குத்தான் தலைவா தனித்து போட்டிக் கூடாது

4)தொண்டர் 1-நம்ம கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கும்னு சொல்றாரே..ஏன்?
 தொண்டர் 2_ அப்பவாவது கூட்டனிக்கு எந்தக் கட்சியாவது வராதான்னுதான்

5)தொண்டர் 1- நடக்கப் போறது ஊராட்சித் தேர்தல்னு தலைவருக்குத் தெரியலை
 தொண்டர் 2- ஏன் அப்படி சொல்ற
 தொண்டர் 1- இந்தத் தேர்தல்ல ஜெயிச்சு தமிழக ஆட்சியைப் பிடிப்போம்னு சொல்றாரே

6)வர வர எம்.எல்.ஏ.,ஆனதே வேஸ்ட்னு தோணுது தலைவா
 ஏன்
சட்டசபைல தூங்கக் கூட முடியலே..தொடங்கினதுமே வெளிநடப்பு செய்ய வேண்டியிருக்கு

7)தலைவர்- இப்ப எல்லாம் கூட்டத்திலே என்னால இனிக்க இனிக்க பேச முடியல
 தொண்டர்- ஏன் தலைவா
 தலைவர்- எனக்கு ஹை சுகர்..இனிப்புப் பக்கமே போகக்கூடாதாம்

8)தலைவர்- கூட்டணியிலே இருந்து நாம எந்தக் கட்சியை கழட்டிவிடலாம்
 தொண்டர்- தலைவா..நீ டூ லேட்..நம்ம கட்சியை ஆல்ரெடி எல்லாக் கட்சியும் கழட்டிவிட்டுட்டாங்க

9) தொண்டர்- போன சட்டசபைத் தேர்தல்ல நாம தோற்றதை தவிர்த்திருக்கலாம் தலைவா
  தலைவர்- எப்படி
 தொண்டர்- தேர்தலை புறக்கணிக்கிறோம்னு சொல்லியிருக்கலாம்

10)தொண்டர்-தலைவா..நில அபகரிப்பு வழக்கில உன்னை கைது பண்ண முடியாது
  தலைவர்- எப்படி சொல்ற
  தொண்டர்-நீ அபகரிச்சது எல்லாம் புறம்போக்கு நிலங்கள் தானே


Monday, September 19, 2011

பயிரை காக்க போட்ட வேலி பயிரை மேய்வதா..??.
பயிரை பாதுகாக்க வேலிகள் அமைப்பதுண்டு..ஆனால்..அந்த வேலிகளே பயிருக்கு பகையானால்...
தவறு செய்பவர்களை விசாரித்து நீதி வழங்க வேண்டியது..நீதிபதிகள்..
அவர்களே தவறு செய்தால்..
யாரிடம் முறையிடுவது..
ஏற்கனவே ஒரு நீதிபதி பாராளுமன்றத்தில் ஆஜராகி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஒரு நீதிபதி ஊழல் புகாருக்கு ஆஜராகி..விசாரணையில் உள்ளார்.
இந்நிலையில் மாநிலங்களில் லோக் அயுக்தா என்னும் அமைப்பு.
அரசு பதவிகளில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதையும்..ஊழலில் ஈடுபடுவதையும் விசாரித்து தண்டனை வழங்கும் பொறுப்பு அதற்கு.
ஆனால் அவ்வமைப்பில் அப்பொறுப்பில் இருந்த கர்நாடக மாநில பொறுப்பாளி சிவராஜ் பாட்டீல் ஊழல் செய்துள்ளதாகப் புகார்.
இவருக்கும், இவர் மனைவிக்கும் பெங்களுரில் 16000 சதுர அடிகளுக்கு மேல் மனைகள் உள்ளன.ஐகோர்ட்டிலும்,சுப்ரீம் கோர்ட்டிலும் நீதிபதியாய் இருந்தவர்க்கு சொந்த நிலம் ,வீடு இருப்பதில் தவறேதுமில்லை.
ஆனால் 1982ல் இவர் வசந்த நகரில் 2400 சதுர அடி நிலம் வாங்கியுள்ளார்.ஆகவே, வீட்டு வசதி சங்கம் மூலம் சலுகை விலையில் மனையோ, வீடோ வாங்கும் தகுதி இழந்துள்ளார்.ஆனால் 1994ல் சங்கம் மூலம் 9600 சதுர அடி நிலம் மனையைப் பெற்றுள்ளார்.காரணம் கேட்டால்..நீதிபதிகள் வேறு வீடோ,மனையோ இல்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தேவையில்லையாம்..
நான் மட்டுமல்ல..நிறைய நீதிபதிகள் இப்படி வாங்கியுள்ளார்கள் என்கிறார் இவர்.
இத்துடன்  நில்லாது 2006ல் மனைவி பெயரில் இன்னொரு சங்கம் 4012 அடி நிலம் ஒதுக்குகிறது.
இப்படிப்பட்ட செய்திகள் வெளீயானதும், மனைவி அந்த இடத்தை மீண்டும் சங்கத்திடம் கொடுத்து விட்டார்.
இவர் லோக் ஆயுக்தா தலைவராக சென்ற மாதம் தான் பதவி ஏற்றார்.
இந்நிலையில், இவர் நேற்று ஆளுநர் பரத்வாஜை சந்தித்து நேற்று தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தார்.
'என் மீது அவதூறு புகார்கள் கூறப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பதவி விலகியுள்ளேன்' என்றுள்ளார்.
ஒன்றல்ல..இரண்டல்ல..லோக்பால் மசோதாக்கள் ஆயிரம் வந்தாலும்..மனிதன் மாறப்போவதில்லை.
'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்..திருட்டை ஒழிக்க முடியாது' என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் காதுகளில் கேட்கிறது.


எங்கேயும் எப்போதும்...என் பார்வையில்..
நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் நிகழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் இரட்டிப்பு சந்தோஷம் அடையலாம்.
அந்த எண்ணத்தை தோற்றுவித்ததால்..இப்படம் பற்றி எழுதுகிறேன்..
அவ்வப்போது தமிழில் சில நல்லப் படங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன..அப்படிப்பட்ட லிஸ்டில் இருக்கிறது இந்த படம்.
மேலும் இப்படம் ஒரு செய்தியையும் சொல்கிறது.
சரவணன் அவர்கள் இயக்குநராக அறிமுக மாகியுள்ள இப்படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் உண்டாகும் மரணம்..அதனால்அவதிப்படும்..பாதிக்கப்படும் மக்கள்...இதுதான் கதையின் ஒன் லைன்..
அதில் இளம் காதலர்கள்,வெளிநாட்டிலிருந்து பல ஆண்டுகள் கழித்து தன் குடும்பத்தை காணவரும் நபர்..புதிதாக காதல் அரும்பும் கல்லூரி இளசுகள்...என சிறு சிறு நிகழ்வுகள்..காட்சிகள்.
கதிரேசன் என்னும் இளம் தொழிலாளி (ஜெய்)..அவனுடன் மனதில் தோன்றியதை..யதார்த்தத்தை பட்..பட் ..என பேசும் நர்ஸ் மணிமேகலை(அஞ்சலி)திருச்சியில் வாழ்பவர்கள்.திருச்சியை இது வரை படங்களில் வராத கோணங்களில் படமாக்கியுள்ளார் ஆர்.வேல்ராஜ்.இவர்கள் திருச்சியிலிருந்து பேருந்தில் பயணிக்கின்றனர்.
கிராமத்துப் பெண் அமுதா (அனன்யா)..சாஃப்ட்வேர் இஞ்சினீயர் கௌதம் (சர்வா) என மற்ற ஜோடி.நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டு நடிக்கின்றனர்.அப்பாவியாக ஜெய் தூள் கிளப்பினால்..அடாவடியாக அஞ்சலி அருமை.
கிராமத்துப்பெண்ணாக ஏதுமறியாதவளாக அனன்யா அசத்தினால் சாஃப்ட்வேர் இஞ்சினியராக சர்வா அட்டகாசம்.
ஆங்காங்கே இந்த ஜோடிகள் வரும்போது வசனங்களில் நகைச்சுவை எட்டிப் பார்க்கிறது.சிறந்த திரைக்கதை..திறமையான இயக்குநர் ,டெக்னீஷியன்ஸ் இருந்தால் படம் வெற்றி பெரும் என்பதற்கு இப்படம் மற்றொரு உதாரணம்.
இப்படிப்பட்ட படங்களுக்கு தனியாக நகைச்சுவை நடிகரோ..நகைச்சுவை டிராக்கோ தேவையில்லை என்பதை மற்ற இயக்குநர்களுக்கு உணர்த்தியுள்ள படம்.
பேருந்தில் நடைபெறும் நிகழ்வு..பழைய ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி காட்டினாலும்..சற்றும் குழப்பாத திரைக்கதை அமைப்பு.படத்தின் எடிட்டர் கிஷோர்..அவருக்கு பாராட்டுகள்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனத்துடன்..(Fox star studios) A.R.முருகதாஸ் இணைந்து எடுத்துள்ள படம்..
பேருந்து வெகு வேகமாக சாலை விதிகளை மதிக்காமல் செல்வது..பார்க்கும் போது ஆடியன்சும் அந்த பேருந்தில் பயத்துடன் இருப்பது போன்ற சூழலை உருவாக்குகிறது.இதற்காகவே இயக்குநருக்கும்..சினிமாடொகிராஃபி வேல்ராஜுக்கும் மீண்டும் பாராட்டுகள்.விபத்திற்குப் பின் நடைபெறும் சூழல் அருமை.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

 

Sunday, September 18, 2011

இந்த வாரம் வைரமுத்துவை வாசித்தீர்களா...?
நான் இரு வாரங்களுக்கு முன் வைரமுத்து விகடனில் எழுதி வரும் 'மூன்றாம் உலகப் போர்' தொடரை வாசியுங்கள் என்று எழுதியிருந்தேன்.
எவ்வளவு பேர் அதைப் படிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இப்பதிவைப் படிக்கும் நீங்கள் அத் தொடரை இதுவரை படிக்கவில்லை யெனில் ..உடனே படிக்க ஆரம்பியுங்கள்..
அதில்..வைரமுத்துவின் தமிழைப் படிக்கலாம்..நமது இலக்கிய தாகத்தை சிறிது அடைக்கலாம்.
இவ்வாரம் அத்தொடரிலிருந்து சில பகுதிகள்.

அறிவை மட்டும் கொண்டாடுவதில்லை நான்..அது தகவல் போதை அல்லது மூளைச் சாராயம்..
மனிதநேசம் இல்லாத அறிவு யாருக்கு வேண்டும்?மண்ணின் மீது விழாத மழையாலும் மனிதன் மீது விழாத கண்ணீராலும் யாது பயன்?
ஏரிகளைத் தலைக்கு வைத்து உறங்கும் காடுகளின் தலைநகரம் அது..(அட்லாண்டா பற்றி)
இந்தியா என் தூரத்துக் கனவு
எங்கள் அமெரிக்கா அறிந்தவரையில் வித்தியாசமான தேசம் இந்தியா
உயர்ந்த ஞானம் தொட்டது இந்தியா
அதிக மூட நம்பிக்கை கொண்டதும் அதுதான்
வறுமையில் வாடுவோர் அதிகம் உள்ளதும் இந்தியா
வெளிநாடுகளில் அதிகப் பணம் பதுக்கி வைத்திருப்பதும் அதுவே தான்
தனி மனிதனுக்கு அதிக நீதி சொன்னதும் இந்தியா
ஊழல் என்பதை ஒரு வாழ்க்கை முறை எனபழகி வைத்திருப்பதும் இந்தியா
இந்து-பௌத்தம்-சமணம் என்ற முப்பெரும் மதங்களை ஈன்று கொடுத்ததும் இந்தியா
மதச்சார்பற்ற தேசம் என்று மார் தட்டுவதும் இந்தியா
ஒழுக்கம் பற்றி அதிகம் வலியுறுத்துவதும் இந்தியா
எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருப்பதும் இந்தியா
காமத்தின் வழி கடவுளைக் கண்டதும் இந்தியா
கடவுளின் வழி காமத்தைக் காண்பதும் இந்தியா
இத்தனைக்குப் பிறகும் மனித வளத்தோடு,ஜீவ துடிப்போடு,உடல் வருந்தும் உழைப்போடு உலகப் போட்டியில் ஓயாது ஓடிக் கொண்டிருப்பதும் இந்தியா..

(இது போதும்...மேலும் அவரது எழுத்தை..படித்து ரசியுங்கள்)

Saturday, September 17, 2011

நாம் லட்சியத்தை அடைவது எப்படி....அவனுக்கு பறவைகள் என்றால் பிடிக்கும்.,
தினமும் காலை ஜன்னலைத் திறந்தால்..அவனுக்காக காத்திருக்கும் புறாக்கள்..
அவனைக் கண்ட சந்தோஷத்தில்..கா கா என கூவி தன் இனத்தை அழைத்து அவனைக் காணச்சொல்லும் காகங்கள்.,
சில கிளிகள்..மரங்கொத்திகள்,குருவிகள்..சுருங்கச் சொன்னால்..அவன் ஒரு பறவைகளின் சரணாலயமாகவே திகழ்ந்தான்.
அவைகள் அவன் கொடுக்கும் தானியங்களையும்,பழங்களையும்...அவன் பக்கத்தில் வந்து உண்ணும்.

ஒருநாள் அவன் மகன் 'அப்பா..எனக்கு விளையாட ஒரு கிளி பிடித்துத் தாயேன்' என்றான்.

மறுநாள் அவன் 
அப்பா லாவகமாக ஒரு கிளியைப் பிடித்து மகனிடம் கொடுத்தான்..அவனை அக்கிளி பயந்தபடி பார்த்தது.மற்ற பறவைகள் பறந்து செல்ல கிளியின் கண்களில் ஒரு ஏக்கம்.
மறுநாள் காலை..ஜன்னலைத்திறந்தான்...
பறவைகளை காணவில்லை.
மீண்டும் அவை வரவேயில்லை.
மனதில் இரக்கம் இருந்தவரை பறவைகளின் சரணாலயமாக திகழ்ந்தவன்..இரக்க குணத்தை விட்டதும்...தண்ணீர் அற்ற இடம் என எண்ணி அவை வரவில்லையோ?

பிறர்க்கு தொல்லை கொடுக்கும் போது..அவருக்கு வேண்டியர்களால் வெறுக்கப்படுகிறோம்.,
ஒரு லட்சிய பாதையில்..வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால்..நாம் லட்சியத்தை அடையும் காலம் நம்மை விட்டு அகன்றுக் கொண்டே இருக்கும்.

(மீள் பதிவு )

அலை வரிசைகள்

மரங்கள்
வெட்டப் படுகின்றன
காரணம் கேட்கிறேன்
நாளை இவ்விடங்களில்
செடி நடுவிழா
என்கிறான் ஒருவன்.

அலைகள்
வரிசை வரிசையாகவே வருகின்றன
வந்த சுவடு தெரிவதற்குள்
பின்னோக்கி
தந்தை கடல் அரக்கனுடன்
சேர்ந்து விடுகின்றன

வாழ்வின் சிறையில்
கைதி ஆனேன்
முன் ஜாமீன் கேட்டேன்
மனைவியுடன் வாழ் நிபந்தனையுடன்
விடுவிக்கப் பட்டேன்

Friday, September 16, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (16-9-11)
1)கனிமொழி மீதான ஜாமீன் மனு பற்றிய விசாரணையை தள்ளிவைத்தது குறித்து கலைஞர் கருத்து தெரிவிக்கையில்..இதில் அரசியல் நோக்கம் இருப்பது போல தெரிகிறது என்றுள்ளார்.
அப்படியாயின்..நில அபகரிப்பு கைதுகள் மாநில அரசால் பொய் வழக்குகள் என்னும் போது..கனிமொழி விவகாரம்..மத்திய அரசு..காங்கிரஸை மறைமுகமாக கழகத்தை அழிக்க சி.பி.ஐ., யை உபயோகப்படுத்துகிறது என்கிறாரோ?

2)திகார் ஜெயிலில் அரசியல்வாதிகள் அதிகரித்து வருவதைக் கிண்டல் செய்யும் நோக்கில் காஷ்மீர் முதல்வர் ஒமர்..டுவிட்டர் இணைய தளத்தில்'திகார் ஜெயிலில் உள்ளவர்கள் சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் அந்தக் கட்சிக்கு எந்த சின்னத்தை தேர்ந்தெடுப்பார்கள்?!" என கிண்டல் செய்துள்ளார்.

3)டெலி ஷாப்பிங் என்று கூறி..வழுக்கை தலையில் முடி வளர பிரேசிலில் தயாரிக்கப் பட்ட ஹேர் ஆயில் என்றும்..சனிப்பார்வையிலிருத்து தப்பிக்க தாயத்து,விளக்கு என்றும்..ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்க வழி சொல்வதாயும்,ஜாதகத்திற்கு தேவைக்கேற்ப கிரஹங்களை ஆக்டிவேட் செய்யலாம் என்றும்,அதிருஷ்டக் கல் என்றும் ஊரை ஏமாற்றும் விளம்பரங்கள் சமீபகாலமாக அதிகம் வர ஆரம்பித்து விட்டன.இவ் விளம்பரங்களுக்கு சேனல் பொறுப்பு அல்ல என்றாலும்..இது போன்றவற்றிற்கு சேனலில் ஏன் ஸ்லாட் அல்லாட் பண்ண வேண்டும்.

4)தமிழகத்தில் 1.36 கோடி வாகனங்கள் தெருவில் பயணிப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.அதற்கு தேவையான அளவு தெருக்கள் வசதி இல்லாததால் தான் டிராஃபிக் ஜாமும்..ஒரு இடத்தைக் கடக்க மணிக்கணக்கான நேரமும் ஆகிரது

5)கலைஞரை இளங்கோவன் 'செல்லாக் காசு என்றும்..அவர் பேசுவதை தமிழர்களும் நம்பவில்லை..சிங்களவர்களும் நம்பவில்லை என்றுள்ளார்

6)பரமக்குடியின் நிகழ்ச்சிகள் சாதிய மோதல் அல்ல..இரு சாதி மக்களா மோதிக் கொண்டார்கள்? காவல்துறையினரின் அராஜகப்போக்கே காரணம்.காவல்துறை சற்று ஜாகிரதையாக செயல்பட்டிருந்தால் துப்பாக்கி சூட்டையே தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது

7)தமிழக சட்டசபையில் திருக்குறளை கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டோம் என்றனர் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்..
 அண்ணா முதல்வராய் இருந்த போது..பேருந்தில்..
 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
 சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'..
இக்குறள் யாருக்காக எழுதப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அண்ணா..'யார் யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ..அவர்கள் அனைவருக்கும் இக்குறள் பொருந்தும்' என பதில் சொன்னார்.

8)1938 ஆம் ஆண்டு சென்னையில் மகளிர் மாநாடு நடந்தது.அதில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேறி..ஈ.வெ.ரா., விற்கு அளித்த பட்டமே 'பெரியார்'

9)முன்னோக்கி வருபவர்களை தோற்றவர்களாக ஆக்கும் ஒரே விளையாட்டு 'டக் ஆஃப் வார்' என்னும் கயிறு இழுக்கும் போட்டி.

10)தலைமுறை இடைவெளி என்கிறோமே..அப்படியென்றால் என்ன? ஒரு தலைமுறை என்பது 30 ஆண்டுகள் ஆகும்..

வட்டி விகிதமும்..பெட்ரோல் விலையேற்றமும்..
அவ்வப்போது பெட்ரொல் விலையேறுகையில்..ஆளும் கட்சித் தவிர வேறு எதிர்க்கட்சிகள் அதை எதிர்ப்பதும்...மூன்று ரூபாய் ஏறினால்..மைய அரசு 25 காசுகள் அப்போது குறைப்பதும்..கட்சிகள் அடங்குவதும்...சாதாரண குடிமகன் இதயம் கண்ணிர் வடிப்பதும்..இதுதான் தருணம் என ஆட்டோக்கள் தங்கள் குறைந்த பட்ச ரேட்டை மக்களிடம் ஐந்து ரூபாய் ஏற்றிவிடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.
ஆனால்..அவ்வப்போது ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை ஏற்றுகையில் வங்கிகளின் வாகனக் கடன், வீட்டுக் கடன் .25 ஏறுவதும்..அது நம்மைப் பாதிக்காது என கடன் வாங்கியவர்கள் எண்ணுவது போல இருப்பது..அவருக்கு நீண்ட கால அடிப்படையில் எவ்வளவு கடன் அளவு ஏறுகிறது தெரியுமா?
உதாரணமாக 15 ஆண்டுகள் தவணையில் வீட்டுக் கடன் வாங்குகிறார் ஒருவர் என்றால் அவரது கடைசித் தவணை 2026 செப்டம்பரில் முடியும்.ஆனால் வட்டிவிகிதம் ஏறுகையில் தவணை கட்ட வேண்டிய பணத்தை ஏற்றாமல்..வங்கிகள் தவணை முடியும் காலத்தை மாற்றி அமைக்கின்றன.அதாவது ஒவ்வொருமுறை  வட்டி விகிதம் ஏறும் போதும் கட்ட வேண்டிய தவணைக் காலம் ஆறு முதல் பத்து..பன்னிரெண்டு மாதங்கள் தள்ளிப் போகிறது.
உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பார்கள்..
அதுபோல பாவம்..வங்கியில் வீட்டுக் கடன் வாங்குபவர்கள் கணக்குப் பார்த்தால் ஒரு லட்சம் கடனுக்கு வட்டி தவணை முடிகையில் மொத்தமாக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கட்டியிருப்பார்.
வாகனக் கடனும் இப்படியேத்தான்..
பிறந்தாலும்.. மத்தியத் தரமான குடும்பத்தைல் பிறக்கக் கூடாது..
அப்படியே பிறந்தாலும்..வங்கி என்றாலும்...ஆசைப்பட்டு..கடனை வாங்கக் கூடாது..
என்னவோடா மாதவா. சொல்ல நினைத்தேன்..சொல்லிவிட்டேன்.

Wednesday, September 14, 2011

பட்டினியில் வாடும் அமெரிக்கர்கள்..
வளம் கொழிக்கும் நாடு அமெரிக்கா..
அங்கு உள்ளவர்கள் அனைவரும் செல்வந்தர்கள்..என்றெல்லாம் நினைப்போர் உண்டு..
ஆனால் அமெரிக்காவின் சந்தை,வங்கி,பொருளாதாரம் ஆகியவை 2008ஆம் ஆண்டிற்கு பிறகு வெகுவான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
அதிலிருந்து அமெரிக்காவால் இன்னும் மீள முடியவில்லை.
வருமானம் குறைவு,வேலையின்மை ஆகியவற்றால் அமெரிக்காவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பட்டினியில் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடி என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக பட்ச எண்ணிக்கை ஆகும்.
நாங்கு நபர் கொண்ட ஒரு குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாகவும், தனி நபர் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாகவும் உள்ளவர்களை வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை  2009 ஆம் ஆண்டு 6.4 விழுக்காட்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு 7.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது.


Sunday, September 11, 2011

என்னை மறந்து சிரித்தேன்..
திரு அ.முத்துலிங்கம் அவர்கள் குமுதம் ..குழுமத்தில் இருந்து வரும் தீராநதி பத்திரிகையில் இம்மாதம் 'இன்றைக்கு அனுப்புகிறேன்' என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.அழகிய நடை,.. அக்கட்டுரையை படித்தேன்.
அதில் ஓரிடத்தில் என்னையும் மீறி சிரித்தேன்...
நானே சிரித்துக்கொள்வதைக் கண்ட என் மனைவி ஒரு மாதிரி என்னைப் பார்த்தாள்.
அந்த ..நான் சிரித்த பகுதியை..உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

சாலையில் நான் பாட்டுக்கு காரை ஓட்டிக் கொண்டு போனேன்.நான் எப்போது வெளியே வருவேன் என்று காத்துக் கொண்டிருந்ததுபோல ஆகாயம் சின்ன பனித்தூறலை அனுப்பியது.ஒவ்வொரு சிவப்பு விளக்காக நின்று நான் ஆமை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தேன்.ரோட்டிலே ஆட்களே இல்லை.கார்கள் இல்லை.நானும் பனித்தூறலும் மட்டுமே.ரேடியோவில்..'தென்றல் வந்து என்னைத் தொடும்..அ..ஆ' என்ற பாடலை ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தார்.இலங்கையில் உற்பத்தியாகி, கனடாவில் பிறந்த பின்னர் அவர் தமிழையும் இசையையும் கற்றுக்கொண்டவர் என்பது உடனேயே தெரிந்தது.எப்படியென்றால்..'தென்ளல்,தென்ளல்..'என்று விடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தார்.
பிறகு அதே பாட்டில்'தெரிந்த பிற குதிரைகள்' என்று பாடிக்கொண்டிருந்தார்.இந்தப் பாடலில் குதிரைகள் வராதே என்று என் மனம் உறுத்தியது.வீட்டுக்கு வந்து நிதானம் அடைந்த பின்னர் ரேடியோப் பெண் 'தெரிந்த பிறகு திரைகள்' எதற்கு'  என்ற வரியைத்தான் 'தெரிந்த பிற குதிரைகள்' என்று பாடியிருக்கிறார் என்பது புலனானது.

(நன்றி- தீராநதி)

டிஸ்கி- நகைச்சுவையை மட்டும் ரசிக்கவும்..


Saturday, September 10, 2011

மரணம் நிச்சயமென்றாலும்...
மரணம் நிச்சயமெனத் தெரிந்தும்
மனதில் ஆசையும் தேவையும்
அதிகம் கொண்ட பதராய்

மரணம் நிச்சயமெனத் தெரிந்தும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
சுற்றமும், நட்புமாய்

மரணம் நிச்சயமெனத் தெரிந்தும்
ஈகையும், அன்பும் இரக்கமுமின்றி
கல்மனம் கொண்டவனாய்

மரணம் நிச்சயமெனத் தெரிந்தும்
ரத்த உறவுகள் அவதிப்படுவதுக் கண்டு
கலங்காது வாளாயிருப்பவனாய்

மண்ணில் வாழ்ந்தென்ன பயன்

Friday, September 9, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (9-9-11)
1) சோயா பீன்ஸில் உள்ள சத்து உடலுக்குத் தேவையான அனைத்து ஹார்மோன்களையும் உடனே சுரக்க வைத்து விடுவதால், வைரஸ்களும்,புற்று நோய் காரணிகளும், அதி கொலாஸ்ட்ராலும் உடலில் தங்க விடாமல் அழித்து விடுகிறதாம்.

2)இன்று உள்ளத்தில் இருப்பதை உதட்டினால் பேசுபவர் யார்..? உள்ளத்தில் ஒன்றை வைத்து, உதட்டினால் வேறொன்றை பேசுபவரே அதிகம்.

3)நமெக்கெல்லாம் காலையில் எழுந்ததும் தினசரியை படித்தாக வேண்டும்.அதில் உள்ள செய்திகளில் பாதி உண்மை இல்லை என்றாலும்.ஆனால் பத்திரிகைகளே இல்லாத நாடு திபெத்தாம்.

4)இந்தியாவுடன் நட்புறவு கொள்ளவே விரும்புகிறோம்..இதை பாகிஸ்தானிய அமைச்சர்கள் காலம் காலமாய் கூறிவந்தாலும்..தற்போதைய அழகு பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் சொல்ல..முன் சொன்னவர்களுக்குக் கிடைக்காத பிரபல்யம் கிடைத்து விட்டது.காரணம் அழகு.அழகு ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும்...நாம் நல்லதையே எதிர்பார்ப்போம்.

5) விகடனில் வைரமுத்து எழுதி வரும் மூன்றாம் உலகப் போரை நீங்கள் படித்து வருகிறீர்களா.இல்லையெனில் கடந்த ஐந்து வாரங்களாக தொடராய் வந்துக் கொண்டிருக்கும் அதை தவறாமல் படியுங்கள்.இன்னுமொரு கருவாச்சிக் காவியமாய் அது அமையப் போவது நிச்சயம்.

6)தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலே அதிகமுறை தேசிய விருது பெற்ற ஒரே கவிஞர் வைரமுத்து.இதுவரை ஆறு முறை விருது பெற்றிருக்கும் இவரது விருது எண்ணிக்கைகள் தொடரட்டும்

7)இந்த வார விகடனில் நானே கேள்வி..நானே பதில் பகுதியில் இந்தக் கேள்வி, பதில் எனக்குப் பிடித்திருந்தது..

ஊழல் செய்பவர்களுக்கும் திஹார் சிறை, ஊழலை எதிர்ப்பவர்களுக்கும் திஹார் சிறை என்பது சரிதானா...?
'ஒரு முட்டையை வெளியில் இருந்து உடைத்தால், அது மரணம்.அது உள்ளிருந்தே உடைக்கப்பட்டால் ஜனனம்'

8)சென்னையில் கரைக்கப் பட்ட விநாயகர்கள் எண்ணிக்கை 5000க்கு மேல்

9) இந்த வார காமெடியன் பா.ம.க.வின் ஜி.கே.மணி..
அவர் சொன்னது..
'சென்னை மாநகராட்சியை பா.ம.க. கைப்பற்றும்

Wednesday, September 7, 2011

காமெடியனாகும் கதாநாயகன்

அனல் தெறிக்கும் பேச்சு
ஆரவாரம் ஊரெங்கும்..
நீதிமன்றம்
ஊடகங்கள்
பொதுமக்கள்
அனைவரின் கதாநாயகனானது அது
பெரும் தலைகள்
உருளும் நிலை
உருவாகும் தோற்றம்
சிறு கோட்டிற்கு முன்
பெரும் கோடு போடப்பட
மெதுவாக
பெட்டிப் பாம்பாய்
சுருளத் தொடங்கியது
காமெடியனாய் அது..

Tuesday, September 6, 2011

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)
பாபர் போஸ்துமஸ் கைதா..ஏன்ன சொல்ற
ஆமாம்..அவர் மன்னரா இருந்தப்போ பாபர் மசூதி இருக்கிற நிலத்தை அபகரிச்சதா புகார் வந்துள்ளதாம்

2) பேட்டா கடையில்- இந்த செருப்பு 99,999 ரூபா99 பைசான்னு போட்டிருக்கே
  கடைக்காரர்-ஆமாங்க..தனி விமானத்திலே மும்பையிலிருந்து வந்த செருப்பு

3)தலைவர் இப்ப எங்கே இருக்கார்..
 கடைசி நிலவரப்படி சேலத்தில...நாளைக்கு பாளையம்கோட்டைப் போனாலும் போவார்

4)என் கணவர் பிரதமர் போல இருக்கார்
  என்ன சொல்ற
  எது சொன்னாலும்..எது நடந்தாலும் மௌனமாகவே இருக்கார்

5)மனைவி-ப்ளீஸ் சிட் டௌன்..ப்ளீஸ் .சிட் டௌன்..அப்படி சொல்லிக்கிட்டே இருக்கீங்களே ஏன்?
 கணவன்- நாளைக்கு மாதிரி பாராளுமன்றத்தை அலுவலகத்தில் நடத்த இருக்கிறோம்..அதில் நான் சபாநாயகர்..

6)ஆசிரியர்- பாடம் நடத்தறப்போ..உங்க பையன் அப்பப்ப..வெளியே போயிடறான்
 தாய்- அவன் அப்பா மாதிரி
 ஆசிரியர்- என்ன சொல்றீங்க..அவன் அப்பா யார்
 தாய்-எதிர்க் கட்சித் தலைவர்

7)ஆளும் கட்சியில் எம்.எல்.ஏ., க்களை எல்லாம்..அசையாச் சொத்துக் கணக்கில் காட்டியிருக்காங்களாம்

8)எதிர் கட்சித் தலைவர்-அண்ணா சமாதியில் மரியாதை செலுத்த வந்த நம்மை ஆளும் கட்சியினர்..அவமதித்துள்ளனர்.அண்ணா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் சமாதியை அவர்களை தொட விட்டு இருப்பாரா?

Monday, September 5, 2011

செருப்பு வாங்க விமானப்பயணம்
சாதாரணமாக நமக்கு செருப்பு வாங்க வேண்டுமென்றால் பக்கத்தில் இருக்கும் காலணிகள் விற்கும் கடைக்குச் செல்வோம்..அல்லது அதிக பட்சம் ஆட்டோவில் பேட்டா இருக்குமிடம் செல்வோம்..

ஆனால் உத்தரபிரதேச முதல்வர் லக்னோ விலிருந்து மும்பைக்கு ஜெட் விமானத்தை அனுப்பி வாங்கியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் தூதரகங்கள் அந்நாட்டிற்கு அனுப்பிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.உலகத் தலைவர்களைப் பற்ரி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளீயாகிவருகின்றன.
2007 முதல் 2009 வரைக்கான தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில் உ.பி., முதல்வர் மாயாவதி பற்றி தெரிவித்துள்ள விவரம்..
மாயாவதி மிகவும் அகம்பாவமும் கர்வமும் மிக்கவர்.பிரதமர் பதவி மீது அவருக்குக் கண்.தன்னைப் போற்றுவோர்கள்,தொழிலதிபர்கள் ஆகியோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுகிறார்.பொதுக் கூட்டங்களில் 1000 ரூபாய்களால் அன மாலை அணிவிக்கப்படுகிறது.
தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு அடிக்கடி விமரிசனத்திற்கு உள்ளாகிறார்.
ஒரு சமயம் தனக்குப் பிடித்த செருப்புகள் வாங்க உ.பி.யிலிருந்து மும்பைக்கு தனக்கு சொந்தமான ஜெட் விமானத்தை இதற்காகவே மும்பைக்கு அனுப்பி செருப்பை கொண்டுவர செய்தார்.தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை.உணவில் விஷம் வைத்துத் தன்னைக் கொல்வார்களோ என்னும் பயத்தில் தனது உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்ய சம்பளத்திற்கு ஆட்களை வைத்துள்ளார்.
இத் தகவல்களை 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாள் அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்டதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.
அமைச்சர்கள் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என நினைக்கும் மாயாவதி அவர்களை தகுதிக்கு ஏற்ப நடத்துவதில்லை.சிறூ தவறுகள் செய்தாலும் கடுமையாகத் தண்டிப்பார்.அது..சிறு குழந்தைகளுக்கு பள்ளியில் கொடுக்கப் படும் தண்டனையைப் போன்றது.ஒரு முறை ஒரு சிறு தவறு செய்த அமைச்சரை தன் முன்னிலையில் தோப்புகரணம் போட வைத்து தண்டித்துள்ளார்.அமைச்சரும் அழுதுக் கொண்டே தோப்புகரணம் போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்கி- நம்ம தலைவர் 60 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது ஜுஜுபி என்கிறார் ஒரு அதிமுக. தொண்டர்

Friday, September 2, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (2-9-11)
1) சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த சர் சி.வி.ராமனும்,சுப்பிரமணியம் சந்திரசேகரும் பௌதிகத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்.ராமன், 'வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது' என்பதற்கான காரணத்தைக் கண்டு பிடித்தார்.நட்சத்திரங்கள் குறிப்பிட்ட அளவிற்குத்தான் அடர்த்தியைத் தாங்கும், அதற்கு மேல் போனால் அணுகுண்டு போல பலமாக வெடித்துவிடும் என சந்திரசேகர் கண்டுபிடித்தார்.
2) எப்போதும் வெண்மை நிற ஆடைகளை அணிபவர்கள் சாந்த குணமுடையவர்களாக இருப்பார்களாம்.(அரசியல்வாதிகள் பெரும்பாலும் வெண்ணிற ஆடையைத்தானே அணிகிறார்கள்..ஆனால் சாந்தத்திற்கும் அவர்களுக்கும் காத தூரமாயிற்றே..
3)சென்னை ஜி.எச். தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவ மனையாம்.தினமும் 10000 க்கும் மேல் புற நோயாளிகளும்,சுமார் 3000 பேர் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்களாம்.
4)இந்தியாவிலேயே அதிக அளவு விதவைகள் உள்ள மாநிலம் தமிழ் நாடு தான்..என்கிறது ஐ.நா.வின் ஒரு அறிக்கை.37 லட்சம் பெண்கள் கணவனை இழந்த நிலையில் உள்ளனர்.இவர்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் 35 வயதிற்குக் குறைவானவர்கள்.இளம் வயதில் இறந்த கணவன்மார்களில் 90 விழுக்காடு மரணத்திற்கு குடியே காரணமாகும்.
5)  சென்னையில் பல பேருந்து நிற்கும் இடங்களில் ஷெல்டர் இல்லை..இருந்த இடங்களிலும் இடிக்கப்பட்டன.மழை வந்துவிட்டாலோ,உச்சி வெயிலிலோ பல பிரயாணிகள் படும் அவதி சொல்லி மாளாது.உடன் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்..உள்ளாட்சி தேர்தல் வருகுது ..அரசியல் கட்சிகள் இதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
6)பேருந்தில் சொகுசு வண்டியில் பயணக் கட்டிணம் ,,கிட்டத்தட்ட ஷேர் ஆட்டோ கணக்கில் வந்துவிட்டது என பயணிகளின் புலம்பல் அடிக்கடி கேட்கிறது இப்போதெல்லாம்.
 7)உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாம்.
8)'தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலைமை இருக்கக்கூடாது.இந்த நிலையை எனது வாழ் நாளில் நான் காண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.அதுதான் என் லட்சியம்' என்றுள்ளார் முதல்வர் ஜெ.(யாரும் என் காலில் விழாத் நிலை வர வேண்டும் என்ற லட்சியத்தையும் அவர் கடை பிடிக்கலாமே என்கிறார் அமைச்சர் ஒருவர்)
9)Stones-They come in our way as Hurdles.But, once we pass them, they automatically become our MILESTONES.
10)தென்னிந்தியாவில் தான் அண்ணா பெயரைச் சொல்லி அரசியல் ஆதாயங்களும்..அரசியலும் நடக்கிறது என்றால்...வட இந்தியாவிலும் Anna பெயரில் குளிர் காய ஆரம்பித்துவிட்டார்கள்.

Thursday, September 1, 2011

வ.உ.சி. தீவிரவாதி!- சமச்சீர் கல்விப் புத்தகத்தில் அபத்தம்


கப்பலோட்டிய தமிழன்' என்று அழைக்கப்படும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ. சிதம்பரம்பிள்ளை பற்றிய 10ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு சமூக அறிவியல் சமச்சீர் பாடப் புத்தகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதனை அறிவுறுத்திய பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனடியாக அதனை இந்த அரசு நீக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவகங்கையில் திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது சமச்சீர் கல்வியின் இந்த அபத்தத்தை தெரிவித்தார்.

தமிழக பாட திட்டத்தில், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், 101-ம் பக்கத்தில் வ.உ.சிதம்பரனார் பற்றி உள்ள பாடத்தில் பாலகங்காதர திலகரை அவர் ஆதரித்தார் என்றும், அவர் ஒரு தீவிரவாதியாக செயல்பட்டார் என்றும், தமிழகத்தில் தீவிரவாதத்தை வேகமாகப் பரப்பினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது. மேலெழுந்த வாரியாக இதைப் படிக்கும் மாணவர்கள் வ.உ.சி.யை தீவிரவாதி என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலை ஏற்படும்.

சமச்சீர் கல்வியில் கடந்த அரசு செய்த தவறுகளை திருத்துவதாகக் கூறிக் கொண்டு செயல்படும் தற்போதைய அரசு இந்தத் தவறை உடனடியாகத் திருத்தி இப்பாடத்தில் ஓரிரண்டு வார்த்தைகளை புதிதாகச் சேர்த்தாலே போதும். 

விடுதலைப் போரில் வ.உ.சி. தீவிரமாக ஈடுபட்டார். விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தீவிரமாகப் பரப்பினார் என்று திருத்தினால் முழு அர்த்தமும் மாறும். இந்தத் திருத்தத்தை அரசு உடனடியாகக் கொண்டு வரவில்லை என்றால் பாஜக திருத்தம் கோரி போராடும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.


(நன்றி வெப்துனியா )