Wednesday, August 31, 2011

மங்காத்தா...ஒரு ரிபோர்ட்..தல அஜீத்தின் 50 ஆவது படம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில்..
படத்தின் தலைப்பை வைத்து..படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று ஊகித்துக்கொள்ளலாம்.
ஆனால் இந்தப் பதிவு அதைப்பற்றியோ..பட விமரிசனமோ அல்ல..
சூதாட்டம் என்றாலே..சாதாரணமாக..கையில் கொண்டு செல்லும் பணத்தையெல்லாம்..அன்றைய நாள் யாருடைய நாளோ அவரிடம் இழந்து மற்றவர்களெல்லாம் திரும்பும் ஆட்டம்.
மங்காத்தா படமும் கிட்டத்தட்ட அப்படித்தான்.
சென்னை..சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர் மாவட்டங்களில் தியேட்டர்களில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 400 காட்சிகளுக்கு மேல் மங்காத்தா தான்.
படம் வெளியான நேற்றும், இன்றும் அரசு விடுமுறை.நாளை வேலை நாள் ஆனாலும்..பெரும்பாலும் பலர் விடுப்பு எடுத்திருப்பர்.அடுத்து சனி,ஞாயிறு..
ஆக...5 நாட்கள் ..விடுமுறைக் கோலம்..
அதனால்..படம் கண்டிப்பாக ஐந்து நாட்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாக போகும்.
அப்போது ஒரு நாளைக்கு 400 காட்சிகள் என்றால்..2000 அரங்கு நிறைந்த காட்சிகள்.
பெரும்பான்மையான அரங்குகள் கட்டணம் அதிகம் உள்ள அரங்குகள்..ஆகவே..ஒரு காட்சி நிறைந்தால்  சராசரியாக 20000 ரூபாய் நிகர கட்டணம் என்று வைத்துக் கொண்டாலும்..ஐந்து நாள் வசூல் கண்டிப்பாக 4 கோடியைத் தாண்டும்.இந்த நான்கு கோடி..சென்னை, திருவள்ளூர் மட்டிலுமே.
மீண்டும் மாறன் அண்ட் கோ..வியாபாரத்தில் தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள்...ராடன் மீடியா மூலம்..
அஜீத் திற்கு வெற்றி படம்..
வெங்கட் பிரபு..அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர்களால் மொய்க்கப்படுவார்.
மங்காத்தா ஆட்டத்தில்..வெற்றி இவர்களுக்கே..
பணத்தை இழந்தவர்கள்...உழைக்க அலுவலகம் செல்ல திங்கள் முதல் தயாராகுங்கள்..  

Tuesday, August 30, 2011

மரணதண்டனை..சில விவரங்கள்
சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை இந்தியாவில் 52 பேர் மரணதண்டனை (தூக்கிலிடப்பட்டதாக) அடைந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
1995ல் ஆடோ சங்கர் தூக்கிலிடப்பட்டார்.2004ல் ஆகஸ்ட் மாதம் தனஞ்செய் சட்டெர்ஜி என்பவர் தூக்கிலிடப்பட்டார்.அதன் பின் இ துவரை தூக்குதண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1992 முதல் 29 கருணை மனுக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதில் சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகியோர் மனுக்களும் அடக்கம்.
அரிதினும் அரிதான வழக்கில்தான் மரணதண்டனை வழங்க வேண்டுமென 1983 ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுவரை 96 நாடுகள் மரணதண்டனையை நீக்கிவிட்டன.34 நாடுகள் தண்டனையை நீக்காவிடினும் இது போன்ற தண்டனையைக் கொடுக்கமாட்டோம் என அறிவித்துள்ளன.ஆனால் அமெரிக்கா,இந்தியா,சீனா உட்பட 58 நாடுகள் இன்னும் தூக்குதண்டனையை விடவில்லை.
பஞ்சாப் முதல்வராய் இருந்த கெய்ரோன்சுட்டுக் கொல்லப்பட்டார்.இவ்வழக்கில் தயாசிங் என்பவர்க்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.இவரது கருணைமனுவும் நீண்ட நாட்கள் கழித்து நிராகரிக்கப்பட்டது.ஆகவே அவர் 1991 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.அதை மனுவாக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தயாசிங் நீண்ட காலம் சிறையில் இருந்து விட்டதால்.விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
அதேபோன்று விஷ ஊசி வழக்கில் காலதாமதம் ஆனதால் 8 ஆண்டுகள் சிறையில் இருந்த வைத்தி என்னும் குற்றவாளி மனு செய்தார்.அவர் தண்டனையையும் ஆயுள் தண்டனையாய் நீதிமன்றம் குறைத்தது.
அதே போன்று தான் ராஜீவ் கொலை வழக்கும்.இதிலும் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க தாமதமாகியுள்ளது.குற்றம் நடந்து 20 ஆண்டுகளுக்கும் மேல் முருகன், சாந்தன் ,பேரறிவாளன் ஆகியோர் சிறையில் உள்ளனர்.இப்போது மரணதண்டனையையும் நிறைவேற்றினால் ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டனை கொடுப்பது போலாகும்..

டிஸ்கி-
ராஜீவ் இருந்திருந்தா இவர்களை மன்னித்திருப்பார்னு தலைவர் சொல்றாரே!
அவர் இருந்திருந்தா ..அவரைக் கொன்றதற்கான தண்டனையை எப்படிக் கொடுக்க முடியும்? இவர்கள் குற்றவாளியே ஆகி இருக்க முடியாதே !!

Monday, August 29, 2011

படங்களின் தோல்வியும்..நடிகர்களின் சம்பளமும்..
2010-2011 ஆம் ஆண்டுகளில் வந்துள்ள பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும் 25.குறைந்தபட்சம் 20 கோடியில் தொடங்கி அதிக பட்சம் 120 கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்டவற்றில் ஏறல்லுறைய 20 படங்கள் படு தோல்வியடைந்துள்ளன.
ஒரு படத்தின் வெற்றியோடு தங்களை இணைத்துக் கொள்ளும் நடிகர்கள் தோல்வியிலிருந்து விலகிக் கொள்கின்றனர்.
சில படங்களும்..அவை தயாரிக்க ஆன செலவும்..முக்கிய நடிகரின் சம்பளமும்..நஷ்டமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மன்மதன் அம்பு  பட்ஜெட் 45 கோடி ஹீரோ சம்பளம் 20 கோடி நஷ்டம் 20 கோடி
ராவணன்   பட்ஜெட் 45 கோடி ஹீரோ சம்பளம் 12 கோடி நஷ்டம் 30 கோடி
அசல்      பட்ஜெட் 35 கோடி ஹீரோ சம்பளம் 14 கோடி நஷ்டம் 20 கோடி
சுறா  பட்ஜெட் 40 கோடி ஹீரோ சம்பளம் 20 கோடி நஷ்டம் 20 கோடி
ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் 32 கோடி ஹீரோ சம்பளம் 8 கோடி நஷ்டம் 12  கோடி
வேங்கை 22 கோடி பட்ஜெட் ஹீரோ சம்பளம் 8 கோடி நஷ்டம் 10 கோடி
வானம் பட்ஜெட் 20 கோடி ஹீரோ சம்பளம் 8 கோடி நஷ்டம் 10 கோடி
அவன் இவன் பட்ஜெட் 18 கோடி ஹீரோ சம்பளம் 5 கோடி நஷ்டம் 7 கோடி

பெரிய ஹீரோக்கள் நடித்த சிங்கம்,பையா போன்ற ஓரிரெண்டு படங்களே பட்ஜெட் தாண்டி வெற்றி பெற்றுள்ளன.ஆதவன்,மதராச பட்டணம் ஆகியவை போட்ட முதலீட்டை எடுத்தன.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராம அண்ணாமலை என்ன சொல்கிறார்...
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் 'விகிதாச்சார அடிப்படையில் சம்பளம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஒரு படத்தின் பட்ஜெட் 30 கோடி என்றால் அதில் 10 கோடி ஹீரோவிற்கு போய் விடுகிறது.இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் தரும் மினிமம் கேரண்டித் தொகை கன்னாபின்னா வென ஏற்றப்படுகிறது.டிக்கெட் இலையை ஏற்றச் சொல்லி நெருக்கடி தரப்படுகிறது.டிக்கெட் விலை ஏறினால் மக்கள் வருவது பாதிக்கப் படுகிறது.கடைசியில் பாதிக்கப்படுவது திரையரங்கு உரிமையாளர்கள் தான்.
1990 களில் 2800 அரங்குகள் இருந்தன.இன்று 1300 ஆக அவை குறைந்துவிட்டன.95 விழுக்காடி டூரிங் தியேட்டர்கள் மூடப்பட்டு,கிராமங்களில் திரையரங்குகளே இல்லா நிலை எற்படுகிறது.காரணம்..தயாரிப்பு செலவுகளும்,நடிகரின் சம்பளமும் என்று விவாதிக்கப் படுகிறது.
கடந்த ஆண்டு 181 படங்கள் வெளியாகி 5 விழுக்காடே வெற்றி பெற்றன.
எங்கள் சங்க தீர்மானப்படி ஒரு கோடியும் அதற்கு மேலும் சம்பளம் கேட்கும் நடிகர்களுக்கு அவர்கள் மார்க்கெட் நிலவரம் பார்த்து ஒரு தொகை முன்பணமாக வழங்கப்படும்.படத்தின் வசூலில் இத்தனை விழுக்காடு என தீர்மானித்து பிறகு அதனைக் கொடுக்கலாம்.இதை இந்தத் துறையில் உள்ளவர்கள் பேசி முடிவெடுக்கலாம்,.சினிமாத் துறையின் மொத்த ரிஸ்க்கையும் நாங்களே ஏற்கிறோம்.நடிகர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.தங்கள் படம் வெற்றி பெற வேண்டும் என்ற அக்கறை இருந்தால் தான் தரமான படங்களில் நடிக்கும் முயற்சி ஏற்படும்.அது சினிமாவிற்கு நல்லது'...என்றுள்ளார்.
இதுபற்றி நடிகர் சத்தியராஜ் கூறுகையில்..'தயாரிப்பாளர்கள் தான் போட்டி போட்டு நடிகர்களின் சம்பளத்தை ஏற்றுகிறார்கள்.நடிகர் எவ்வளவு கேட்டால் என்ன? இவ்வளவுதான் தரமுடியும் ..என்று சொல்லுங்கள்.ஏற்கவில்லையெனில் வேறு நடிகரைப் பாருங்கள்.முடிந்தால் தயாரிப்பாளரும் நடிகரும் பேசி சதவீத டிப்படையில் சம்பளத்தை முடிவு செய்யுங்கள்'என்கிறார்.
ஒரே ஆறுதலான விஷயம்..சிறிய பட்ஜெட் படங்களான மைனா,களவாணி,தமிழ்ப்படம் ஆகியவை 4 கோடி செலவில் எடுக்கப்பட்டு 10 கோடிவரை வசூல் செய்துள்ளன.
ஆனால் பல நேரங்களில் சிறிய பட்ஜெட் படம் பர்ரிய ரிபோர்ட் வருவதற்குள் படம் தியேட்டரிலிருந்து வெளியேறிவிடுகிறது.இதற்கு உதாரணம்..தென் மேற்கு பருவக்காற்று, ஆரண்யகாண்டம் ஆகியவை.
சர்வாதிகாரத்தனங்கள் மிகுந்த தமிழ்த் திரையுலகை ஜனநாயகப் படுத்த வேண்டியது காலத்தின் கட்டாய.இந்த வேலையில் முனைந்திருக்கிறது திரையரங்கு உரிமையாளர் சங்கம்.கூடியவிரைவில் முறைகேடுகள் சீர் ஆகும் என நம்புவோம்.

(தகவல் ஆதாரங்கள்- இந்தியா டுடே)Sunday, August 28, 2011

சி.பி.செந்தில்குமாருக்கு பாராட்டுகள்..
சி.பி.செந்தில்குமார்...சென்னிமலை..என்ற பெயரில் பாக்யா இதழில் இவரின் துணுக்குகள், ஜோக்ஸ் ஆகியவற்றை நிறைய படித்துள்ளேன்.
சென்ற ஆண்டு தமிழா தமிழா வலைப்பூ தமிழ்மணம் திரட்டியில் 9ஆம் ரேங்க் வாங்கியிருந்தது.
இது குறித்த  எனது ஒரு பதிவின் பின்னூட்டத்தில் செந்தில்குமார்..உங்களைவிட நான் இரண்டு இடம் தான் பின் தங்கியுள்ளேன்..விரைவில் அந்த இடத்தைப் பிடிப்பேன் என்று பொருள் பட சொல்லியிருந்தார்.
அவரின் இந்த உத்வேகம் எனக்குப் பிடித்திருந்தது.
இப்போது பார்க்கையில் கடந்த சில மாதங்களாக அவரின் பதிவுகளுக்கான வருகை அதிகரித்துள்ளது.
தமிழ்மணத்தின் ஒவ்வொரு வாரமும் டாப் 20யில் அநேகமாக முதலிடத்தையே பிடித்து வருகிறார்.
சொன்னதை சாதிக்கும் திறமை இவருக்கு இருப்பது தெரிகிறது.
அதற்காக இவரைப் பாராட்டுகிறேன்.
இன்று இவர் எழுதுவதை படிக்க அநேகர் இருக்கிறார்கள் இப்போது..ஆதலால்...பத்திரிகைகளில் வரும்..மக்களைக் கவரும் செய்திகளை இனியும் இவர் கட் அண்ட் பேஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை..
இந்த ஒன்றை இவர் தவிர்த்தால்  போதும்..
கண்டிப்பாக இந்த ஆண்டு தமிழ்மணத்தில் இவரது வரிசை முதல் எண்ணாய் இருக்கும்..
அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
வாழ்த்துகள் செந்தில்..  

Saturday, August 27, 2011

கலைஞரை எதிர்க்கிறாரா தங்கபாலு..
"நான் தூக்கு தண்டனை என்பதே கூடாது என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன்.அது இந்த மூன்று பேருக்கும் பொருந்தும்.குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர்.அவர்கள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களை தூக்குதண்டனையிலிருந்து காப்பாற்ற நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும்.தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் 3 பேரின் உயிரைக் காக்க உருக்கத்துடன் செயல் பட வேண்டும்.காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்னையில் அக்கறையுடன் 3 உயிர்களை காக்க முன்வர வேண்டும்.இந்த மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்'
மேற் சொன்னது கலைஞரின் அறிக்கை.
ஆனால்.. தமிழக காங்கிரஸ் தலைவர்(??!!) அறிக்கையைப் பார்ப்போம்..
மரணதண்டனை விவகாரத்தில் சில அரசியல் தலைவர்கள் சுயநலத்திற்காக போராட்டம் நடத்துகிறார்கள்.இதனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழ் உணர்வு எங்களுக்குத்தான் இருக்கிறது..நாங்கள் தான் தமிழர்கள், நாங்கள்தான் தமிழிற்கும், தமிழ் மொழிக்கும் சொந்தக்காரர்கள் என உரிமை கொண்டாடுகிறார்கள்..(கலைஞரைச் சொல்கிறாரா??!!)தமிழ் அவர்களுக்கு மட்டும் சொந்தமில்லை..எங்களுக்கும் அந்த உரிமை உண்டு.நாங்களும் தமிழர்கள்தான் (வெட்கம்..வெட்கம்)
அவர்களது குடும்பத்தினர் யாராவது ராஜிவ் காந்தியைப் போல படுகொலை செய்யப்பட்டிருந்தால்,அந்த கொலையாளியை விடுவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வார்களா? (என்ன ஒரு கொடூர எண்ணம்..)
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்..
என்றுள்ளார்..
இவர் அறிக்கையில்..ஆர்ப்பாட்டம், போராட்டம்..என்ற வார்த்தைகளை புத்திசாலித்தனமாக சேர்த்துள்ளார்.
இவர் கலைஞரை பற்றியும் சொல்கிறார்..ஆனால் வினா எழும்பினால்..'நான் கலைஞரைச் சொல்லவில்லை...ஆர்ப்பாட்டம் செய்பவர்களைத்தான் என்று சொல்லிக் கொள்ளலாம்....
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஜனநாயகத்தை அனுமதிக்காதவர் இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வருவது பற்றி அச்சப்படுகிறாராம்.
நடப்பது நடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையிலே வையுங்கள் என்ற கதைதான்.

Friday, August 26, 2011

உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு உரிமை உண்டா..?
ஒரு பழைய நாடகமொன்றில் வரும் வசனம் இது...

கடற்கரையில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள ஒருவன் செல்கிறான்.அதை ஒரு போலீஸ்காரர் பார்த்துவிடுகிறார்.அவரிடம் சென்று சொல்கிறார் "ஏம்பா..உனக்கு ஒரு குழந்தை இருந்தா அதை சாகடிக்கும் உரிமை உனக்கு உண்டா?"
"இல்லை"
"நீ பெத்த குழந்தையையே சாகடிக்க உனக்கு உரிமை இல்லை என்னும் போது..உங்கப்பா பெத்த குழந்தையை சாகடிக்க உனக்கு உரிமை ஏது?" என்பார்.
படிக்க..இது நகைச்சுவையாய் தெரிந்தாலும்..பல அர்த்தங்களை உள்ளடக்கியது இது.
இயற்கை படைத்த ஒன்றை அழிக்க நமக்கு உரிமை உள்ளதா?
ஒரு மரத்தை வெட்டக்கூட நமக்கு உரிமை கிடையாது...
வருஷக்கணக்கில் கோமா வில் இருக்கும் ஒரு நோயாளியின் வாழ்வு இறுதிவரை அப்படித்தான் என்ற நிலையிலும் கருணைக்கொலை செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை.
அப்படிப்பட்ட சட்டத்தில்..மரணதண்டனை மட்டும் ஏன் இருக்கிறது..
ஒரு உயிரை பறித்தவனுக்கு தண்டனை அவன் உயிர் என்றால் அது நியாயமா?
கண்ணுக்கு கண், கைக்கு கை, உயிருக்கு உயிர் ...என்றால் நாமெல்லாம் இன்னும் கற்காலத்திலா இருக்கிறோம்..
ஒரு உயிர் போனதற்கு இந்தியா பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் உயிர் போவதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததே..அது போதாதா..
அப்படியே...உயிருக்கு உயிர் என்ற காட்டுமிராண்டித்தன வாதத்தை , வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும்...
அந்த உயிர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன.
இப்போது இருப்பவை உயிரை எடுத்தவை அல்ல..
எய்தவனே இல்லாத போது..வெறும் அம்புகளை தண்டிப்பது முறையா?
உடனே..சம்பந்தப்பட்டவர்கள்...குறிப்பாக தமிழக அரசு குறிக்கிட வேண்டும்..
தமிழுக்காக வாழ்கிறேன் என்று வெறும் சொல்லாக இல்லாமல்..மத்தியில்..தான் சொல்வதைக் கேட்பார்கள் என்னும் தலைவர் ஆவன செய்ய வேண்டும்..
அப்பாவி உயிர்கள் காக்கப்பட வேண்டும்..
செய்வார்களா?

Thursday, August 25, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (26-8-11) ரமலான் ஸ்பெஷல்
1)குரான் என்ற அரபுச் சொல்லுக்கு "ஓத வேண்டியது" என்று பொருள்.அல் கிதாப்,அல்பயான்,அல் புர்கான்,அல் திக்ரு,அல் நூர்,அல் ஹக்கு,அல் ஹகீம்.அல் ரூஹ்,அல் முபாரக்,அல் திஹ்ரா என பல்வேறு பெயர்களிலும் குரான் அழைக்கப்படுகிறது.குரான் அருளப்பட்டது புனித ரமலான் மாதத்தில் தான்.

2)மசூதிகளில் இருக்கும் உயரமான கோபுரங்கள், 'மினார்' எனப்படும்.உச்சிக்குச் செல்ல பாதையும். மேல் பகுதியில் மாடமும் இருக்கும்.பழங்காலங்களில், ஆங்காங்கே வேலைகளில் ஈடுபட்டிருப்போரை சரியான நேரத்தில் தொழுகைக்கு அழைக்க இம்மாடத்தில் ஏறி நின்று குரல் கொடுப்பார்கள்

3)மனிதரிடம் இரண்டு குணங்களை அல்லாஹ் விரும்புகிறார்..அவை , சகிப்புத்தன்மை,நிதானத்துடன் செயல்படுவது.இவ்விரண்டு குணங்களும் நோன்பு இருப்பதால் கிடைக்கின்றன.

4) இஸ்லாமிய சகோதரர்களுக்கு இறைவன் கொடுத்த கடமைகள் ஐந்து..அவை இறை நம்பிக்கை,தொழுகை,நோன்பு,ஜகாத்(ஈதலறம்),ஹஜ்

5) ரமல் எண்ர அரபுச் சொல்லில் இருந்து பிறந்ததே ரமலான்.ரமல் என்றால் எரித்தல் என்று பொருள்.நோன்பு இருப்பதால் பாவங்கள், தீமைகள் எரிக்கப்படுகின்றனவாம்.நோன்பு ரமலான் மாதம் 30 நாட்கள் கடைப் பிடிக்கப்படுகிறது.

6)30 பகுதிகளில் 114 அத்தியாயங்களில் 6666 வசனங்கள் கொண்ட திருக்குர் ஆன், ரமலான் மாதம்  அருளப்பட்டது.(. குரானின் முதல் வசனம் இந்த மாதத்தில் அருளப்பட்டது என்பதாலேயே இந்த மாதம் சிறப்பு பெறுகின்றது. மற்றப்படி குரான் 23 ஆண்டு கால இடைவெளியில் எல்லா காலக்கட்டங்களிலும் அருளப்பட்டது. இந்த முதல் வசனம் இறக்கப்பட்ட இரவு லைலதுல் கத்ர் எனப்படுகின்றது, இது பிறை 27 என கட்டுரையில் தவறாக குறிப்பிடபட்டுள்ளது. நாயகம் (ஸல்) அவர்கள், லைலதுல் கத்ரை பிறை 21,23,25,27,29 ஆகியவற்றில் தேடிக்கொள்ள சொன்னார்கள்)

7) இம்மாதம் அதிகத் தொழுகைகள் நிறைவேற்றப்படுகின்றன.வழக்கமான ஐந்து வேளைத் தொழுகைகளுடன் தராவீஹ் என்னும் உபரித் தொழுகையும்,தஹஜ்ஜத் என்னும் பின்னிரவுத் தொழுகையும் முப்பது நாட்களும் நிறைவேற்றுகின்றனர்.தவிர்த்து தினமும் திருக்குர்ரானை ஓதுகின்றனர்.

8)ஒருவர் செல்வத்தில் தனது தேவைகள் போக எஞ்சியுள்ளதில் இரண்டரை விழுக்காடு ஜகத்தாக கொடுக்கப்படுகிறது.ஜகாத் எனில் தூய்மைப்படுத்துதல் ஆகும்.

9)ரமலான் முடிந்து ஷவ்வால் மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் பெருநாள் அன்று பித்ரா கொடுக்கப்படுவதால்தான் அப்பண்டிகைக்கு ஈதுல் பிதர் என்னும் பெயர்

10)அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ரமலான் வாழ்த்துகள்

(தகவல்கள்- ராணி வார இதழ்)

Wednesday, August 24, 2011

அடப் போங்கடா..நீங்களும் உங்க புத்தாண்டும்...
தமிழன் ..தமிழன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்..ஆனால் நம்மில் ஓற்றுமை என்பதே கிடையாது.
பதவிக்கும்..ஆசைக்கும் எல்லையில்லாமல்..நம்மையே நாம் காட்டிக் கொடுப்போம்..
உதாரணத்திற்கு ஒரு சிறு கதை..
இரண்டு தமிழர்கள் இரவில் நடந்துவந்த போது ஒரு பாழும் கிணற்றில் விழுந்துவிட்டனர்.நல்லவேளை தமிழகத்தில் உள்ள பாசனக்கிணறு அது. நில அபகரிப்பில் எல்லா விவசாய நிலங்களும் கட்டிட நிலங்களாய் ஆகிவிட்டதால்.. அதில் தண்ணிர் இல்லை.
விழுந்ததில் ஒருவனுக்கு நல்ல மரம் ஏறும் பயிற்சி உண்டு.,அவன் கிணற்றில் வளர்ந்திருந்த செடிகளைப் பற்றி மெதுவாக மேலே வர முயற்சித்தான்.கொஞ்சம் முன்னேறினான்..ஆனால் கீழே இருந்து அவன் கால்கள் இழுக்கப் பட்டன.'என்ன' என்று பார்த்த போது கீழே இருந்த தமிழன் அவன் காலைப் பற்றி, அவனை முன்னேற விடாமல் தடுத்தான்.'என்னால் வெளியே வர முடியாது? நீ மட்டும் எப்படிப் போகலாம்?' என்றான்.
அதற்கு மற்றவனோ..'நான் மேலே போய் .,உன்னை மீட்க உதவிக்கு ஆட்களை கூட்டிவருகிறேன்' என்றான்.
'உன்னை எப்படி நம்புவது?' என்றான் கீழே நின்றுக் கொண்டிருந்தவன்.
இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும்..'காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்' என குரல் கொடுத்தனர்.
அப்போது அவ்வழியே வந்த வேற்று மொழிக்காரன் ஒருவன்..'அடப் போங்கடா..உங்களைக் காப்பாற்றினாலும்..இருவரும் மேலே வந்து..சண்டையிடப்போகிறீர்கள்.அதை கிணற்றிலேயே செய்துக் கொண்டிருங்கள்' எனச் சென்றுவிட்டான்..
இது கதையென்றாலும்..நடைமுறை உண்மை..
நமது கட்சிகளுக்குள் ஒற்றுமை இருந்திருக்குமேயாயின்...எவ்வளவோ காரியங்களை சாதித்துக் கொண்டிருக்க முடியும்.
தமிழா..இதுதான் உன் தலையெழுத்து..
அதை மாற்ற நமக்குள் ஒன்றுபட்டால்தான் உண்டு..
இல்லையேல் கால காலத்திற்கும் இ.வா. க்களாகவே மற்றவர்க்கு இருப்போம்..
இதைப்பற்றியெல்லாம் இப்போ என்ன கவலை..என்கிறீர்களா?
ஆமாம்..ஆமாம்..
தை முதல் நாள்..தமிழர் புத்தாண்டா..
சித்திரை முதல்நாள் தமிழர் புத்தாண்டா
இந்தக் கவலையே முக்கியம்... நமக்கு.


Tuesday, August 23, 2011

கருப்பு ஆடுகள்( நாடகம்)

30-8-11  அன்று மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கில் மாலை6-45  க்கு 
எனது கருப்பு ஆடுகள் நாடகம் நடைபெற உள்ளது.
பார்க்க விரும்புவோர் என்னை தொடர்பு கொள்ளவும் .

நாடகத்தில் இருந்து சில காட்சிகள்

                                          

Monday, August 22, 2011

வள்ளுவனும் இன்பத்துப் பாலும் -3
காலா வாடா உன்னை காலால் மிதிக்கிறேன் என்றார் பாரதி..
அந்த காலன்,எமன் எப்படியிருப்பான்...
ஆஜானுபாகுவாய்..காளை வாகனத்தில்..பாசக்கயிறுடன்..உயிர்களைப் பறிக்க வருவான்..என்றெல்லாம் பாட்டிக் கதைகள் உண்டு..
ஆனால் வள்ளுவன் எமன் எப்படிப்பட்டவன் என்று சொல்கிறார் ..தெரியுமா..?

எமன் என்பவன் பெண்ணுருவில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவனாம்.

சாதாரணமாக விஷமம் செய்யும் குழந்தைகளை பெற்றோர்கள் 'பொல்லாத எமன் ' என்று கொஞ்சுவார்கள் அல்லவா? கிட்டத்தட்ட அதுபோலத்தான் காதலியை கொஞ்சுகிறது இக் குறள்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)

முன்பெல்லாம் கூற்றுவன் என்கின்ற எமனை எனக்குத் தெரியாது.இப்போது தெரிந்துக் கொண்டேன்..அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

நம்மை விரும்பும் பெண்ணின் விழிப்பார்வை நம் உயிரையே எடுத்துவிடும் அளவிற்கான சக்தியைக் கொண்டது..

அடுத்த குறளிலும் கண்கள் உயிரைப் பறிக்கக் கூடியவை என்றார்..

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண் (1084)

பெண்மையின் வார்ப்படமாகத் திகழும் இப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே..ஏன்?

பெண்ணின் கண்கள் சக்தி வாய்ந்தவையாம்..

Saturday, August 20, 2011

MONEY பற்றி மணி செய்திகள்
1)சென்னை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் கணக்கில் காட்டாத 100 கோடி மதிப்புள்ள பொருள்களை இருப்பு வைத்திருந்ததை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது.இதுதவிர கணக்கில் காட்டப்படாத 15 கிலோ தங்கம்,1.5 கோடி ரூபாய் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

2)கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அலட்சியத்தால் நெசவாளர் சங்கங்களில் 67 கோடி மதிப்புள்ள பட்டுச் சேலைகள்,கைத்தறி வேட்டிகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளன

3)1.5 லட்சம் கிளைகள். அவற்றில் 90 சதவிகிதம் கிராமங்களில்..ஆம்..நாட்டின் மிகப் பெரிய வங்கியாக அஞ்சல் துறை மாற இருக்கிறது.ஏடிஎம், டெபிட் கார்ட் என்று எல்லா வசதியும் உண்டாம்.

4)பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 2010-11 ஆம் ஆண்டில் 8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் கவுன்ஸில் ஆஃப் கிராஜூவேட் ஸ்கூல் தெரிவித்துள்ளது.

5)இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் 55 மில்லியன் கூடுதல் வேலைவாய்ப்புகளுக்கான தேவை ஏற்படுமாம்.

6)கரன்ஸி நோட்டுகளில் போலியை கண்டுபிடிக்க இப்படி ஒரு வழி இருப்பது தெரியுமா?
 நோட்டுகளின் வெற்றிடத்தில் அசோக சக்கிரத்திற்கு மேல் மதிப்பிற்கேற்றபடி தொட்டு உணரும் வண்ணம் குறியீடு இருக்கும்.20 ரூபாயானால் செவ்வகமாகவும்,50 ரூபாய்   சதுரமாகவும், 100 ரூபாய் முக்கோணமாகவும், 500 ரூபாய் வட்டமாகவும், 1000 ரூபாய் டயமண்ட் ஆகவும் இந்தக் குறியீடு இருக்கும்.10 ரூபாய்க்கு இருக்காது.

7) ஆசிய கண்டத்தில் அதிக கடன் சுமை உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.அதாவது மொத்த உள்நாட்டூ உற்பத்தி மதிப்பில் கடன் 68 சதவிகித பங்கு வகிப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது.மத்திய அரசுக்கு 39.3 லட்சம் கோடி கடன் உள்ளது.    

Friday, August 19, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (20-8-11)
1)வாடிகன் நகரில் மூன்று மொழிகள் புழக்கத்தில் உள்ளன.பேச்சுக்கு இத்தாலி,சடங்கு, சம்பிரதாயங்களுக்கு லத்தீன்,தகவல்கள் அனுப்ப ஃபிரெஞ்ச்

2) ஒரு இயந்திரம் ஐம்பது சாதாரண மனிதர்களின் வேலையைச் செய்து விடும்.ஆனால் ஐம்பது இயந்திரங்கள் சேர்ந்தாலும் ஒரு அசாதாரண மனிதனின் வேலையைச் செய்யமுடியாது.

3) சென்னையில் சேரும் குப்பைகளையும், குப்பையைக் கொட்டும் இடங்களையும் ஹெலிகாப்டெர் மூலம் பார்வையிட்ட ஜெ.. இன்னும் மூன்று மாதங்களில் போர்க்கால அடைப்படையில் குப்பைகள் அகற்றப் படும் என்று கூறினாலும்..கூறினார்..'உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா' என்பதுபோல ..தினமும் குப்பையை எடுக்கும் சென்னை நகராட்சியும் சரி, டிசம்பர் வரை காண்ட்ராக்ட் உள்ள நீல் மெட்டலும் சரி..குப்பையை அள்ளுவதையே விட்டு விட்டாற் போல தெரியுது..சென்னைத் தெருக்கள் எல்லாம் நாற்றம் அடிக்கின்றன

4) பொதுவாக அனைத்துக் கட்சியினரும்..புதியதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகக் கட்டிடம் மருத்துவக் கல்லூரியாகவும், மருத்துவ மனையாகவும் ஆகும் என்ற முதல்வரின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.கலைஞரும் அதில்..தனக்கு அதிருப்தி இல்லை என்று சொன்னாலும்..சென்னை மேயர்..ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.."சரியாக கட்டப்படவில்லை..அவசரத்தில் கட்டப்பட்டது..அதன் உறுதித் தன்மைப் பற்றி கேள்விக்குறையாய் உள்ளது' என்றெல்லாம் சொன்ன முதல்வர் ஒரு மருத்துவமனை அமைக்கும் அளவு கட்டிடம் உறுதியாய் உள்ளதாய் நினைக்கிறாரா? அப்போது முந்தி சொன்னது என்னாச்சு? என்ற பொருள்பட பேசியுள்ளார்.
என்னவோடா மாதவா..பொதுமக்களுக்கு நல்லது நடந்தா சரி

5)அன்னா ஹசாரேவிற்கு இந்த அளவு ஆதரவு இருக்கும் என மத்தியில் யாரும் எதிர்பார்க்கவில்லை.அன்னா செய்தது..செய்வது ..சரியா..தவறா..என்ற கேள்விக்குப் போகப்போவதில்லை..ஆனால்..மக்கள் வெகுண்டால்...மக்கள் சக்தியை யாராலும் அடக்கமுடியாது.

6) நேற்றைய தினசரிகளில்..இரண்டு நீதிபதிகள் குறித்து செய்திகள் வந்துள்ளன.தவிர்த்து..ஏற்கனவே இரு நீதிபதிகள் பற்றிய புகாரும் சில நாட்களுக்குமுன் தினசரிகளில் வந்தது..இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில்..லோக்பாலில்..நீதிபதிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தவறு என தோன்றுகிறது.

7)ராஜா,கனிமொழி,சரத்குமார் ஆகியோர் பற்றிய செய்திகள் இப்போது அடங்கிவிட்டன..அடங்கிவிட்டதா..அடக்கிவாசிக்கப்படுகிறதா...தெரியவில்லை.

8)சமச்சீர் கல்வி..இது தானா..
 முதல்வகுப்பு மாணவனிடம் அ. அம்மா.ஆ ஆடு..சொல்லச் சொன்னேன்...ஊ..வந்ததும்..ஊழல் என்றான்


Thursday, August 18, 2011

கபில்சிபல் காப்பாற்றிய நீதிபதி
கையாடல் குற்றச்சாட்டு சூட்டப்பட்டுள்ள கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் பதவியை பறிப்பதற்கான கண்டனத் தீர்மானம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்திற்கு ஆதரவாக 189 வாக்குகளும் எதிர்த்து 17 வாக்குகளும் பதிவாகின.
சவுமித்ரா சென், வக்கீலாக இருந்த போது வழக்கு ஒன்றில் நீதிமன்ற அதிகாரியாக உயர் நீதிமன்றம் நியமித்தது.அப்போது அவர் 33.23 லட்சம் கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.அவர்  உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதும் விவகாரம் கிளறப்பட்டது.இக்குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஸன் ரெட்டி தலைமையில் ஒரு குழுவை மாநிலங்கள் அவை தலைவர் ஹமீத் அன்சாரி நியமித்தார்.அதில் கையாடல் பண்ணியது உண்மை எனத் தெரிய வந்தது.
இந்நிலையில், மாநிலங்கள் அவையில் கண்டனத் தீர்மானத்தை சீதாராம் யெச்சூரியும் அருண் ஜெட்லியும் கொண்டு வந்தனர்.தன் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்க சென்னிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.இதற்காக அவை நீதி மன்றமாக மாற்றப்பட்டது.தான் குற்றமற்றவன் என்றும் (குற்றவாளிகள் தான் குற்றவாளி என எப்போது ஒப்புக்கொண்டுள்ளனர்)தன்னை பலிகடா ஆக்க முயலுவதாகவும் சென் வாதாடினார்.இதைத் தொடர்ந்து அவையில் விவாதம் நடந்து..இறுதியில் கண்டனத் தீர்மானம் நிறைவேறியது.நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்வதற்காக தீர்மானம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை.
இத் தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.அங்கும் அது நிறைவேறினால் சென் ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
ஒரு வேளை இரு அவைகளிலும் தீர்மானம் வெற்றி பெற்றால், இந்தியாவிலேயே நாடாளுமன்றம் மூலம் பதவி நீக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயர் சென்னுக்குக் கிடைக்கும்.

முன்னதாக1993ல் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பதவி நீக்கத் தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டது.அப்போது ராமசாமிக்கு காங்கிரஸ் ம ற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆதர வு  அளித்ததால் அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்து ராமசாமியின் பதவி தப்பியது.

டிஸ்கி- ராமசாமிக்கு அவர் சார்பில் வாதாடியவர் கபில்சிபல் என்பது நினைவில் கொள்ள வேண்டியது..


தங்கம் பற்றி தங்கமான செய்திகள்..
1) உலகளவில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2000 முதல் 2250 டன் வரை தங்கம் வெட்டி எடுக்கப்படுகின்றது.இதில் மூன்றில் ஒரு பகுதி தங்கத்தை இந்தியா மட்டுமே பயன்படுத்துகிறது.

2) கடந்த ஆண்டு 2060 டன் தங்கம் எடுக்கப்பட்டது.இதில் 746 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்தது.

3)உலகளவில் 50 சதவிகிதம் தங்கம் நகைகளுக்கும், 40 சதவிகிதம் முதலீடுகளுக்கும், 10 சதவிகிதம் தொழிற்சாலைகளில் கருவிகளை தயாரிக்கவும் பயன்படுகிறது.

4)இந்தியாவில் உள்ள பெண்களில் 75 சதவிகிதம் பேர் புதுப்புது நகைகளை நாடிச் செல்வதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாம்.

5)தங்கத்தின் விலை விண்ணை நோக்கி பறந்துக் கொண்டிருக்கிறது.தீபாவளிக்குள் ஒரு கிராம் தங்கம் 3000 த்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் தங்கம் விற்பனையாளர்கள்

6)உலகத் தங்க கவுன்சில் லண்டனில் உள்ளது.இங்குதான் தினமும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.அமெரிக்க டாலரின் மதிப்பில் ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கத்திற்கு விலை வைக்கப்படும்.காலை 10 மணிக்கு ஒருமுறையும், பிற்பகல் 3 மணிக்கு ஒருமுறையும் விலை அறிவிக்கப்படும்.

7) கடந்த ஆண்டு இந்தியா 745.70 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.சைனா 428 டன்,அமெரிக்கா 128.61 டன் என்ற அளவில் வாங்கின.

8) ஒரு பவுன் தங்கம் அதாவது 8 கிராம்  வாங்கச் சென்றால், 9 கிராம் அளவிற்கு பணம் கொடுக்க வேண்டும்.ஏனெனில் 1  கிராம் சேதாரமாக எடுத்துக் கொள்ளப் படும்.தவிர்த்து செய்கூலியும் கொடுக்க வேண்டும்.

9)உலகில் அதிகமாக தென் ஆப்ரிக்காவில்தான் தங்கம் கிடைக்கிறது வைரமும் இங்குதான் அதிகம்.இந்தியாவில் 100 இடங்களில் தங்கப்படிவு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவை ஆழமான பகுதியில் இருப்பதால், கிடைக்கும் தங்கத்தை விட வெட்டியெடுக்கும் செலவு அதிகம்.

10)ஒவ்வொரு சராசரி இந்தியரின் குடும்பச் சொத்தில் 20 சதவிகிதம் தங்கம் இர்ப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் -தேவி வார இதழ் 


Monday, August 15, 2011

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை


மணற்கேணி 2010 ஆம் ஆண்டில் அறிவித்த போட்டிக்கு நான் எழுதிய கட்டுரை.

பரிசு பெறவில்லை என்றாலும்..உங்கள் பார்வைக்கு..


தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை – டி வி இராதாகிருஷ்ணன்

எல்லோரும் கடவுளின் குழந்தைகள்.ஆனால் அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கமுடியாது என்பதற்காக தாயைப் படைத்தான் என்பார்கள் பெரியவர்கள்.தாயை தெய்வம் என்பார்கள்.அதுபோல கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும்..அந்த கடவுள் என்று சொல்லப் பட்ட இயற்கை..உண்ண உணவு,உடுக்க உடை யும் ஏகத்திற்குக் கொடுத்துள்ளது.ஆனால் ஒவ்வொருவருக்கும் நேரில் வந்து அதனால் கொடுக்க முடியாததால்..விவசாயிகளை படைத்தது என்பேன் நான்.
ஆம்..இப் பூமியில் வாழும் அனைவருக்கும்..மேட்டுக்குடியாயினும் சரி..பரம ஏழையானாலும் சரி..படித்தவனாயினும் சரி பாமரன் ஆயினும் சரி..தொழிலதிபரானாலும் சரி..கூலியாளி ஆனாலும் சரி..அனைவருக்கும்..நெற்றி வேர்வை நிலத்தில் விழ..மண்ணிலே நெல் மணி எனும் முத்தெடுத்துக்
கொடுப்பவன் அவன்.
ஆனால்..சமீப காலமாக அவன் வாழ்வில் நிம்மதி இல்லை..பல்லாயிரக்கணக்கானோர் வறுமை தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். காரணம்..எல்லாவற்றிலும் புகுந்துவிட்ட செயற்கத் தனம்..விவசாயத்திலும் புகுந்து விட்டதுதான்..ஆம்…இயற்கை வேளாண்மை அழிந்து..ரசாயன உரங்கள்
,மரபணு ஆகியவை வேளாண்மையில் புகுந்துக் கொண்டதே காரணம்.
ஆனாலும்..அதை ஈடுகட்ட விவசாயிக்கு அரசு தரும் உதவியும் அவன் ஏற்கமாட்டான்..காரணம்..அவன் கையைத்தான் பிறர் எதிர்பார்க்க வேண்டும்..பிறர் கையை அவன் எதிர்பார்க்க மாட்டான்.
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (1035-திருக்குறள்)
(தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர்,பிறரிடம் சென்று கையேந்த மாட்டார்.தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவர்)
இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் போன்றது.அதே நேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட.அரசுகள் அக்கறையுடன் செயல் பட்டு நில வளத்தை ஆரோக்கியமாக பாராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை ஆரோக்கியமாக பூர்த்தி செய்யும்.விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எப்போதும் திகழும் என்பது உலக முழுதும் உள்ள இயற்கை
விவசாயிகளின் ஆத்ர்ஷ புருஷராகத் திகழ்ந்த புகோகா வின் வார்த்தைகள்.
இயற்கை வேளாண்மைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் ‘வேளாண்மை’ என்பதற்கான பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உதவி ஆம்..திருவள்ளுவர் வேளாண்மை என்ற சொல்லை உதவி என்பதற்கு பயன்படுத்தினார்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
(விருந்தோம்பல்..குறள் 81)
இல்லறத்தைப் போற்றி வாழ்வது..விருந்தினரை வரவேற்று அவர்க்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காகவே.
அதுபோல இயற்கையும்..மனிதன் வாழ செய்யும் உதவியே இயற்கை வேளாண்மை.ஆம்..மனிதன் வாழ இயற்கை தன் செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. இயற்கையில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து..மண் வளத்தையும்,சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மகசூலை அதிகப் படுத்தும் முறை இயற்கை வேளாண்மை எனலாம். சுருங்கச் சொன்னால்..நிலம்,நீர்,மரம்,பூச்சி இவைகளை அப்படியே விட்டு விட்டு விளைச்சல் பெருகுவதே இயற்கை வேளாண்மை எனலாம்.
இது வெற்றி பெற வேண்டுமாயின்..மண்,நீர் வளம் சிறப்பாக அமையவேண்டும்.மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை பயன்படுத்தியும்..வீடுகளிலிருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள். அழுகிய காய்கறிகள் கொண்டு கம்போஸ்டு உரம் தயாரித்தும்..மண் புழுவை உபயோகித்தும் இயற்கை உரங்களைப் பெற வேண்டும். பாரம்பரிய முறை விவசாயம் செய்ய ஆட்கள் தேவை.இயந்திரங்களுக்குப் பதிலாக கால் நடைகளை உபயோகிக்கும் போது மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதனால் வேலையில்லா பிரச்னை..வறுமை காரணமாக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேற மாட்டான் விவசாயி.
இயற்கை விவசாயம் செய்கையில் விவசாயிக்கு தன் நிலத்துடன் ஆன உறவு நெருக்கமாகிறது.தன் நிலத்தில் எந்த இடத்தில் உயிர் சத்துகள் உள்ளன..எந்த நில அமைப்பு மோசமாக உள்ளது என அவன் அறிந்திருப்பான். சாணம், எரு போன்றவை, தொழு உரம்,இவற்றை மக்கச் செய்து பயிருக்குப் போடுவதால் மகசூல் கூடுவதுடன், மண் வளம் காக்கப் படுகிறது. இலைகள்,அழுகிய காய்கறிகள் , சோளத் தட்டு,கடலைஓடு இவற்றை மக்கச் செய்வதால் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.
ஒரே பயிரை திரும்பத் திரும்ப பயிரிடாமல் மாற்று பயிர்களை பயிரிடுவதன் மூலம் நிலத்திற்கு பயிர் சுழற்சி கொடுப்பதுடன்..மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.பூச்சி நோய் தாக்கம் குறைகிறது.இப்படிச் செய்வதால் ஆண்டுக்கு ஒரு முறை உளுந்து,பாசிப்பயிறு,காராமணி ஆகியவற்றை பயிரிடலாம்.
நிலத்தின் மண் பரிசோதனை மிகவும் அவசியம்.மண்ணில் உள்ள சத்துகள் பற்றி அறிந்து அம் மண்ணிற்கு ஏற்ற உரம் இடுவதால் மகசூலை அதிகரிக்கலாம். சிக்கிம் மாநிலத்தில் 2015க்குள் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரசாயன விவசாயமான தற்போதைய விவசாயத்திற்கு விடை கொடுக்கப்படும்.இம் மாநிலத்தில் 1997 முதல் பிளாஸ்டிக்..மற்றும் ரசாயன கழிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வேதியியல் விவசாயத்தை ஒழித்துக் கட்ட வேதியியல் ரசாயன மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறினாலும் இவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பலன் உடனடியாகக் கிடைக்கவில்லை.ஆனால் தொடர் முயற்சியால் தற்போது மலடாயிருந்த மண்வளம் மீட்கப்பட்டு..நற்பலன்கள் இப்போது கிடைக்க ஆரம்பித்துள்ளனவாம். சிக்கிமின் இந்த வெற்றி மெதுவாக இமாச்சல பிரதேசம்,அந்தமான் நிகோபார்
தீவுகளிலும் பரவத் தொடங்கிவிட்டது.
வாழும் சூழலும்..உழவும்..இரண்டுமே மனித வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. பூச்சிக் கொல்லி ரசாயனம்..உப்பு உரங்கள் இவற்றால் லாபமும் கிடையாது, விவசாயிக்கும் கடன் அதிகரிக்கும், விளை நிலமும் தரிசு நிலமாகும்.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறுகையில் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி காடாக இருந்தது.ஆனால் 1986 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்ட ராக்கெட் 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியுள்ளது.அதிலும் மூன்று விழுக்காடு முற்புதர்கள்.(உலகளவில் ஐந்தில் நான்கு பங்கு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன..)
இயற்கை வழி மேலாண்மை என்பது யூரியாவிற்கு பதில் சாணி போடுவதில்லை.உயிர் இல்லா இயற்கை..உயிர் உள்ள இயற்கை இவற்றிற்கிடையே உள்ள உறவுகளை அறிந்து பயிர் செய்வது.எடுத்துக் காட்டாக பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம்.அவற்றை உண்ணும் பூச்சிகளும், குருவிகளுமே உலகில் அதிகம்.பூச்சிகளைக் கொல்ல நஞ்சு தெளிக்கையிலே நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்தன.
ரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்த உற்பத்தி செய்யப்பட்டது அல்ல.உலகப்போரின் போது போர்க்களத்தில் வெடி உப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு..போரில்லாக் காலத்திலும் லாபம் உண்டாக்கவே ரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.அதுபோல பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சிகளைக் கொல்ல கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.இரண்டாவது உலகப் போரில் ரஷ்ய படை வீரர்களைக் கொல்ல கிணற்றிலும்,ஆற்றிலும் கொட்ட ஹிட்லர் படையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அவை.போர் முடிந்த பின்னும் இக் கம்பெனிகள் லாபம் ஈட்ட பூச்சி மருந்து என விவசாயிகளின் தலையில் இவை கட்டப்பட்டன.
இதன் விளைவாக தானியம்,பருப்பு,காய்கறி,இறைச்சி,பால் அவ்வளவு ஏன் ..தாய்ப்பாலும் நஞ்சானது.இதனை 1984ஆம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக் கழகம் கண்டுபிடித்தது.ஆனால் 26 ஆண்டுகள் கடந்தும்..இதுவரை இயற்கை வழிப் பயிர் பாதுகாப்பு பற்றி அரசு புதிதாக எதுவும் முயற்சி எடுக்காதது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
இன்று..
நிறைய விளைச்சல் எடுத்த நிலம் வளமிழந்து தரிசாகி விட்டது.விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியாத விவசாயிகள் வேலை தேடி தங்கள் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். பல விளைச்சல் நிலங்களில்..தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு விட்டன. பல விளைச்சல் நிலங்களில் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டுவிட்டன. பல விளைச்சல் நிலங்களில் குடியிருப்பிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன.
இதையெல்லாம் அறிந்தும் இன்று விஞ்ஞானிகள் மண்ணுக்கும்,உழவிற்கும்,மனித குலத்திற்கும் கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களையும், மரபணு மாற்ற விதைகளையும் பரப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். வணிகத்திற்காக..ரசாயன உரங்கள்,எந்திர வேளாண்மை ஆகியவை புகுந்ததால் தான்
வேலையில்லாத் திண்டாட்டமும் உருவாகிறது, விவசாயிகளும் அழிகின்றனர் காடுகள் அழிந்ததால் மழை அழிந்தது.சாகுபடி இழப்பு,வடிகால்கள்,ஏரிகள்,கண்மாய்கள் தூர் வாராததால் வெள்ளப்
பெருக்கும்..சாகுபடி இழப்புமேற்படுகிறது.
65000 ஏரி,கண்மாய்,குளம்,குட்டைகள் இருந்தன தமிழகத்தில் மட்டும்.ஆனால் இன்று பெரும்பான்மையானவை வரப்புகள் வெட்டப்பட்டு பேருந்து நிலையங்களாகவும், அரசு குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. பூமியை ஆழமாக ஆழ்துளை கிணறு வெட்டி தண்ணீரை எடுத்து, தென்னை,கரும்பு பயிர் சாகுபடியாகின்றன.
மரபணு கத்திரிக்காயில் பூச்சி இருக்காதாம்.எப்படி இருக்கும்..அதில் நச்சுத்தன்மை உள்ளதே!அதனுள் பூச்சி எவ்வாறு வளரும். ஆனால் இயற்கை வளத்தில் பிறந்த கத்திரிக்காயில் பூச்சியைக் கொல்லும் விஷம் இல்லைஅதில் உள்ள புழுவை..நாம் காயை நறுக்குகையில் அப்புறப்படுத்தலாம்.ஆனால் அதேபோல நஞ்சை அப்புறப் படுத்த முடியாதே.
மரபணு மாற்று..
உணவை நஞ்சு உள்ளதாக இருக்க வைக்கும் மனித உடலில் ஒவ்வாமையை உண்டு பண்ணும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழிக்கும் ஆண்மை அற்றவனாக ஒருவனை ஆக்கும்
பீ.டி.மரபணு கத்திரிக்காய் மட்டுமல்ல வெண்டை,நிலக்கடலை,தக்காளி,சோளம்,கடுகு,நெல்,உருளைக் கிழங்கு,வாழை என அனைத்துப் பொருள்களிலும் மாசை ஏற்படுத்தும். மரபணு புகுந்து விட்டால் எதையும் இயற்கையில் விளைந்தது என சொல்ல முடியாது. சர்க்கரை நோய்,புற்று நோய்,ஆண் மலடு,நரம்புக் கோளாறு,சளித்தொல்லை ஆகியவற்றை இவை ஏற்படுத்தும்.
சரி..இயற்கை வேளாண்மைக்கு உடனடியாக மாற முடியுமா?
முடியும்.. இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினால், முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும்.வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும்.
வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும் வேதியல் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக, உயிரியல் பூச்சிக்கொல்லிகளும் பயன் படுத்தப் பட வேண்டும்.டிராக்டர்களுக்குப் பதிலாக கால்நடைகளைக் கொண்டு உழ ஆரம்பிக்கலாம்.நீர்ப்பாசனத்தை நம்பினால் பருவகாலங்களில் மழையின் அளவைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப பயிரை பயிரிடலாம்.
விவசாயத்தில் இதனால் அதிக உள்ளூர் மக்கள் ஈடுபட வேண்டியிருக்கும்.இதனால் விவசாயிகள் நகரங்களுக்கு வெளியேறுவது குறையும். மூன்று வருஷங்களிலிருந்து..ஐந்து வருஷங்களுக்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும்.மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பயிருக்குக் கூடுதல்
விலை கிடைக்கும்.ஆனால் மண்வளம் எப்போதும் பாதுகாக்கப் பட வேண்டும்.
இதற்கு ஒரு உதாரணம்..கியூபா.. கியூபாவில் நாடு முழுதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியது.மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும் அரசு பண்ணைகளும் பயிர் பாதுகாப்பிற்காக
பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்தன. மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப் படுத்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டன.களைகளைக் கட்டுப் படுத்த பயிர் சுழற்சி கடைபிடிக்கப் பட்டது.
மண்ணை வளப்படுத்தி..கால் நடைகளிலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும்,தாவர உரங்களை பயன்படுத்தியும், வீட்டுக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரித்தும்..மண்புழுக்களைக் உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரித்து பயன்படுத்தினர்.உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை உரங்கள் பயன்படுத்தப் பட்டன.
இவ்வாறு மிகப் பெரிய அளவிற்கு இயற்கை வேளாண்மைக்கு கியூபா மாறாமல் இருந்திருந்தால்..சோமாலியாவில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை இங்கும் ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் இயற்கை வேளாண்மை நிலையை உருவாக்க.. மரம்,செடி வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை வேளாண்துறை இலவசமாக தீர்த்து வைத்து..உதவவும் செய்கிறது.
விவசாயத்தில் ஈடுபட இளஞர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இளைஞர்கள் அத்துறையில் நிறைய சாதிக்க முடியும். ஓய்வு பெற்றவர்கள் கிராமப்புறங்களுக்கு வந்து விவசாயத்தைக் கவனிக்க வேண்டும்.அவர்களை அரசும் ஊக்குவிக்க வேண்டும். .மலைக்காடுகள் அழியாமல் ..பசுமைக் காடுகளை உருவாக்கி..இயற்கை வளத்தை மீட்க வேண்டும்.
இப்போது தமிழகத்தில் நம்மாழ்வார் போன்றவர்கலும்..கர்நாடகாவில் பாலேக்கர் ஆகியவர்களும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர். நாடு முழுதும் இயற்கை விவசாயம் மீண்டும் உருவாகி..விவசாயிகள் வாழ்வு தழைத்து..தற்கொலைக்கு அவர்களை விரட்டாத நாள் உருவாக வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும்..
கடைசியாக ..பல அரசுகளை தன் குடையின் கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவன்
விவசாயி..அவனையும்..அவனால் பயிடப்படும் ..நம் வயிற்றை நிரப்பும் கடமை நமக்கு உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியுள்ளது.ஆகவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

Sunday, August 14, 2011

சிவனே போற்றி..(போஸ்ட் கார்ட் கதை)
ஒருநாள் கடவுள்கள் சரஸ்வதி,லட்சுமி,பார்வதி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த நாரதர் அவர்களை வணங்கி.."முப்பெருந்தேவியும் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்...உங்கள் கணவர்களில் யார் சிறந்தவர் என்றா?" என தனது கலகத்தைத் தொடங்கினார்.
இது கேட்ட சரஸ்வதி, " நாரதா! இதில் என்ன சந்தேகம்..படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா தான் சிறந்தவர்" என்றார்.
"அது எப்படி...பிரம்மா படைக்கும் அனைத்து உயிர்களையும் காக்கும் தொழிலைச் செய்கிறாரே..என் கணவர் அவரே உயர்ந்தவர்." என்றார் லட்சுமி..
பார்வதி பார்த்தார்...
"யாக்கை நிலையாமை..என் கணவரான சிவன் அழிக்கும் தொழிலைச் செய்கிறார்...வாழ்வு நிலையாமை என்று தெரிந்தும்..நாட்டில் அராஜகம்,ஊழல் என நாட்டுச் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்களே..இவர்களுக்கு..சாவு மட்டும் இல்லையென்றால்..நாட்டில் என்ன நடக்கும்..யோசியுங்கள்.."
"நினைத்தாலே பயமாய் இருக்கிறது" என்றனர் சரஸ்வதியும்,லட்சுமியும்,நாரதரும் கோரஸாக.
"ஆகவே அழித்தல் தொழில் மேற்கொண்டுள்ள என் கணவர் சிவனே உயர்ந்தவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை" என்றார் பார்வதி.
மறுப்பேதும் சொல்லாது ஒப்புக் கொண்டார்கள் அனைவரும்..

செய்தி - அந்நியர் ஆதிக்கத்திலிருந்து நாடு விடைபெற்ற 65ஆம் சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படுகிறது.


Saturday, August 13, 2011

MONEY பற்றி மணி செய்திகள்..
இன்று பரபரப்பாய் பேசப்படும் ஐ.டி., தொழில் சில ஆண்டுகளில் பபரப்பை இழந்துவிடுமாம்.30 விழுக்காடு 40 விழுக்காடு லாபம் என்பதெல்லாம் போய் மற்ற தொழில்கள் மாதிரி ஆகிவிடுமாம்.

2)பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதால் கடனுக்கான வட்டிகள் உயர்ந்துள்ளன.ஆயினும் நிரந்திர வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது.இதனால் முதலீட்டு விஷயங்களில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இதில் முதலீடு செய்வதன் மூலம் கணிசமாய் வட்டித் தொகையைப் பெறலாம்

3)ஆஸ்திரேலியாவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் படுபயங்கரமாக அதிகரித்து வருகிறதாம்.வேலையில்லாதார் எண்ணிக்கை சுமார் 18 ஆயிரத்திலிருந்து 6 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துவிட்டதாம்

4)அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக மூன்று மாகாணங்களில் பேருந்தில் பயணம் செய்து மக்களின் பொருளாதார நிலை,வேலை வாய்ப்பு சூழல் போன்றவற்றை ஆய்வு செய்யப் போகிறாராம் ஒபாமா

5)டெலிகாம் நிறுவனங்கள் தாங்கள் விற்கும் சிம் கார்டுகளுக்கு சேவை வரி கட்ட வேண்டும் என கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது..இதன் பளூ கடைசியில் யார் மீது விழும் என சொல்ல வேண்டியதில்லை

6)2010 ஆம் ஆண்டில் மட்டும் 3200 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது.ரூபாய் நோட்டுகளில் ஆயிரத்தில் நாங்கு ஓட்டுகள் கள்ள நோட்டுகளாக இருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது

7பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும் ஒவ்வொரு சமயத்திலும்..சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீண்ட காலத்திர்கு முதலீடு செய்துவிட்டு நாட்டில் நடப்பதை வேடிக்கைப் பாருங்கள்.லாபம் அதுவாக உங்களைத் தேடிவரும்.வெறும் வார்த்தைகள் அல்ல இவை..எதிர்காலத்தின் நிஜங்கள்.

(தகவல்கள்- நாணயம் விகடன்)

Friday, August 12, 2011

இவர் யார்...வாய் விட்டு சிரிங்க..
1) சம்பந்தா சம்பந்தம் இல்லாம உளரிக்கிட்டு இருக்காரே! அவர் பெயர் என்ன
  கிருஷ்ணா

2)எது எடுத்தெல்லாம் எனக்குத் தெரியாது..என்கிறாரே! அவர் பெயர் என்ன
 மன்மோகன்

3)எதுக்கெடுத்தாலும் பழங்கதையையே பேசிக்கிட்டு இருக்காரே! அவர் பெயர் என்ன
  கருணாநிதி

4)பழிவாங்கும் உணர்ச்சியோட அலைஞ்சுக்கிட்டு இருக்காங்களே..அவங்க பெயர்
 ஜெயலலிதா

5)என்ன நடந்தாலும் வாயை மூடிக்கிட்டு..தனக்கும்..அதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல இருக்காரே அவர் பெயர்
 சிதம்பரம்

6)தன்னைத் தவிர வேறு யாரையும் பேச விடாத இந்தப் பெண்மணி யார்
 சுஷ்மா

7) கையிலே புத்தகத்தை வைத்துக்கிட்டு பைத்தியம் போல இருக்காரே இவர் யார்?
  தமிழக பள்ளி மாணவன்

8)வீட்லே அடுப்பு எரியலே..செலவு பண்ணி கோவிலுக்குப் போய் அவருக்காக மொட்டை போடும் இவர் யார்
  அந்த நடிகரோட ரசிகன்

8) கோமாளி போல இங்கேயும் அங்கேயும் தாவிவிட்டு இப்போ நடுவே அமர்ந்திருக்காரே..இவர் பெயர்
   ராமதாஸ்

9)தேளு..பாம்பு..என உளறிக்கிட்டு இருக்காரே..இவர் யார்..
  தேவ பிரசன்னம் பார்க்கிறவர்

10)எல்லாரும் ஏமாத்தறாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காரே! இவர் யார்
  இலங்கைத் தமிழர்

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (12-8-11)
குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்வதோ அல்லது தண்டனயை குறைக்கவோ அல்லது தண்டனையை நிறுத்தி வைக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.மரண தண்டனை குற்றவாளிகளுக்கு அவர்களது கருணை மனுவை பரீசலித்து மன்னிப்பு வழங்கவோ அல்லது தண்டனையை நிறைவேற்றவோ முழு அதிகாரமும் இவருக்கு இருக்கிறது.

2)இன்று காலை பைக்கில் செல்லும் ஒருவர்..தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு பயணித்ததைப் பார்த்தேன்..ஆனால் பாவம் கழுத்து மட்டும் 45 டிகிரி சாய்ந்திருந்தது.சாய்ந்த கழுத்தில் ஹெல்மட் மாட்டவும் அவர் எவ்வளவு சிரமப் பட்டிருப்பார் என இரக்கம் மேலிட அவரை பார்த்தேன்.அப்போதுதான் ஹெல்மெட்டிற்கும், காதிற்கும் இடையே மொபைல் தெரிந்தது.அது கீழே விழாது கழுத்தில் முட்டுக் கொடுத்திருந்தார் என்று தெரிந்தது.இப்போது வீட்டிற்குப் போய் ஹெல்மெட்டை கழட்டியதும் கழுத்து வலிக்கப் போகிறதே என்ற கவலை என்னை தொற்றிக்கொண்டது.

3)கீழே விழுந்தவனைப் பார்த்து சிரிக்காதீர்கள்.உங்கள் பாதையும் வழுக்கல் நிறைந்ததுதான்..(ஜப்பானின் சொலவடை)

4)பலவீனர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள்.பலமுடையவரோ காரண,காரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர்

5)இரு அயல் நாட்டவர்களுக்கு இதுவரை நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது அவர்கள் 1987ல் கான் அப்துல் கஃபார் கான் மற்றும் 1990ல் நெல்சன் மண்டேலா

6)தெய்வத் திருமகள் படத்தில் வக்கீலாய் வரும் அனுஷ்காவிற்கு டப்பிங் குரல் கொடுத்தவர் தீபா வெங்கட்..அமலா பாலுக்கு சவீதா. தமிழ் வசனம் பேச தமிழர்களால் தானே முடியும்..ம்ம்ம்ம்

7)அண்ணா நூற்றாண்டு நூலகம் மறைந்த தமிழக முதல்வர் அண்ணா நூற்றாண்டை நினைவு கூறும் விதமாக சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் அமைக்கப் பெற்றது இந்நூலகம் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரியது

8)நண்பர்- சமச்சீர் கல்வி பற்றி உங்க கருத்து என்ன..
 மகளின் திருமண கவலையில் உள்ள தந்தை- அந்தச் சீரைப் பற்றி என்ன கவலை..என் பெண் கல்யாணச் சீர் பற்றிதான் என் கவலை..இதற்கும் சமச்சீர் சட்டம் வந்தா நல்லாயிருக்கும்

 

Wednesday, August 10, 2011

கலைஞரின் சொத்துக் கணக்கு..
சமீபத்தில் பத்திரிகைகளில் கலைஞர் குடும்பத்தின் சொத்துக் கணக்கு வெளியிடப்பட்டு....பிரதமரே..ஆச்சரியப்பட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
இவை எந்த அளவு உண்மை..இல்லை..இக்கட்டுரை எழுதியவர்..தன் அறையில் இருந்தே மோட்டுவளையைப் பார்த்து எழுதுகையில்..அங்கு பிரதமர் வந்து ஆச்சரியப்பட்டுப் போனாரா எனத் தெரியவில்லை.
ஒரு அரசியல்வாதி..அதுவும்..நாட்டை ஆண்டக் கட்சி..அதன் தலைவர் குடும்பம் இன்றைய அரசியல் வாழ்வில்..சொத்துக்கள் குவிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
1967க்கு முன்..அரசியலில் ஈடுபட்டு..ஆண்டு..மந்திரிகளாய் இருந்தவர்கள் எல்லாம் பணக்கார..ஜமீன் குடும்பங்களாய் இருந்தன.இவர்களுக்கிடையே காமராஜ்,கக்கன் போன்ற சாமான்யர்கள் சிலரும் அத்திப்பூத்தாற்போல இருந்தனர்.இவர்கள் கடைசிவரை ஊர் சொத்துக்கு ஆசைப்படவில்லை.மக்கள் நலன் தான் குறிக்கோளாய் இருந்தனர்.இறக்கையிலும் பக்கிரிகளாய் இறந்தனர்.
அதெல்லாம் அந்தக் காலம்..இன்று..சுயநலமில்லா அரசியல்வாதி யார் உளர்..
கலைஞர் சொத்து இவ்வளவு என்றால்..மற்ற தலைவர்கள் சொத்துக்கள் எவ்வளவு என விவரம் இப்பத்திரிகைகள் வெளியிடுமா?
சாதாரண letter pad கட்சி நடத்தும் குட்டித் தலைவர்கள் சொத்துக்களே கோடிக்கணக்கில் இருக்குமே.அவர்களுக்கு எப்படி வந்தது அச்சொத்து.
இப்படியெல்லாம் செய்திகள் வெளியாவதால் பத்திரிகைகளின் சர்குலேஷன் கூடலாம் அவ்வளவுதான்.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களும்..புத்தகங்களும் கோடிக்கணக்கில் விரயம்.
தொண்டர்களின் பணமும்..ஏழைகளின் வயிற்றிலடித்து அடித்து அபகரித்த நிலங்களும் தங்கள் சொத்துக் கணக்கில் ஏற்றிக் கொள்ளும் தலைவர்கள் இன்று எந்தக் கட்சியில் இல்லை.
உங்களில் தவறிழைக்காதவன் கல் வீசட்டும் என்ற ஜீசசின் வரிகளும்
சாகாத வீட்டில் இருந்து கடுகு எடுத்து வாருங்கள் என்ற புத்தரின் வாசகங்ககும் மட்டுமே என் நினைவில் வருகின்றன.
ஆனால் பூனைக்கு மணி கட்டப்போவது யார்? என கேள்வி காதில் விழுகிறது.
யார் மணி கட்ட முயன்றாலும் எலிகள் பூனையின் வதையிலிருந்து என்றும் தப்பிக்கமுடியாது.


Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வி..ஜெ..விற்கு விழுந்த அடியா..
சமச்சீர் கல்வி பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு அ.தி.மு.க., அரசுக்கு விழுந்த அடியா? என்ற கேள்விக்கான பதில் பதிவின் இறுதியில்..
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதற்கான 25 காரணங்களை தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதில் ஒரு காரணம்..
"கடந்த ஆட்சியில் சமச்சீர்கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது.கடந்த 2010 ஆம் ஆண்டு சமச்சீர் கல்வியை ரத்து செய்யக்கூடாது என்ற கல்வித்துரை செயலாளர் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.அவரே  இந்த ஆண்டு உயர் நீதிமன்றத்திலும்,உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார்.இது தவறானது.இப்படிப்பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது'

இந்நிலையில் அரசு வக்கீல் உச்ச நீதிமன்றத்தில்..தமிழக அரசுக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறி பின் இது என் தனிப்பட்டக் கருத்து என்று சொன்னதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போது தலைப்பிற்கு வருவோம்..

இந்தத் தீர்ப்பு ஜெ அரசிற்கு விழுந்த அடியா..

கண்டிப்பாக..அடி என்று சொல்வதுடன்..ஜெ விற்கு ஒரு பாடம் எனலாம்..

இனியாவது ஜெ எது நல்லது..எது கெட்டது என்பதை ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும்..தன்னைத் துதிப்போரையும்..தன்னை திருப்தி படுத்த நினைத்து..தவறான ஆலோசனைகள் தருபவர்களையும் விலக்கி வைக்க வேண்டும்.மக்கள் உங்களை தேர்ந்தெடுத்ததே நல்லாட்சித் தருவீர்கள் என்றுதான்..கடந்த ஆட்சியை பழி வாங்க வேண்டும் என்பதற்கு அல்ல..

இதை உணர்ந்து, இனி வரும் காலங்களில்..எந்த திட்டத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமெனின்..அது யார் ஆட்சியில் கொண்டு வந்தது எனப் பாராமல் அமல் படுத்த வேண்டும்.


Saturday, August 6, 2011

MONEY பற்றி மணி செய்திகள்
1) கடம் கேட்டு சர்வதேச நிதியத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்த நாம், ஐரோப்ப நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்க்க ஒன்பதாயிரம் கோடியை சர்வதேச நிதியத்திடம் கொடுத்துள்ளோம்.

2)இன்றைய தேதியில் அமெரிக்க அரசிடம் இருக்கும் பணத்தைவிட ஆப்பிள் நிறுவனத்திடம் இருக்கும் பணம் அதிகமாம்

3)ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதிப் பிரச்னைகளை சமாளிக்க அதற்கு 1732 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது

4)பார்தி ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டலின் சம்பளத்தை ஆண்டுக்கு 70 கோடியாக நிர்ணயிக்க பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற உள்ளதான் அந்நிறுவனம்

5)இந்தியவின் டாப் 200 ஐடி நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் 25 விழுக்காடு அதிக வளர்ச்சியடைந்து 84 பில்லையன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளனவாம்

6)நாட்டிலுள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற RBI யிடம் உரிமம் பெற உள்ளதாம் மைய அரசு

7)நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் மைக்ரோ சாஃப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் நேர்காணல் மூலம் 3000 பேரை அமெரிக்காவில் வேலை செய்ய ஆண்டு வருமானம் 14 முதல் 16 லட்சம் ரூபாய்வரை பெரும்படியாக வேலைக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாம்.

Friday, August 5, 2011

மக்கள் எனும் மாக்கள்
மக்களுக்குச் செய்கிறேன்
மக்களுக்கு உழைக்கிறேன்
மக்களுக்காக எதையும் செய்வேன்
மக்களுக்கே என் உடல் பொருள்
தலைவன் பேசி முடித்ததும்
தொண்டர்களின் விண்ணதிரும்
கைதட்டல்கள்..
மக்கள் எனில்
மகன்..மகள் என்பதை
மறந்ததேன் தொண்டன்

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (5-8-11)
தமிழகத்தின் 2011-12க்கான பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கப்பட்டது.சாதாரணமாக பட்ஜெட் எப்படியிருந்தாலும் ஆளும் கட்சி கூட்டணி பாராட்டுவதும்..எதிக் கட்சிகள் கூட்டணி குறை சொல்வதும் வழக்கம்.இம்முறையும் தவறாமல் அது நடந்தது.என்னைப் போன்ற சாமான்யன் பார்வைக்கு பட்ஜெட் பரவாயில்லை என்றே தோன்றியது.பட்ஜெட்டின் ஹைலைட்...கூட்டங்களில் காலில் விழும் கலாச்சாரம் சட்டசபையிலும் நடந்தது.வாசித்து முடிந்ததும் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அம்மாவின் அடி பணிந்து வணங்கினார்.(யார் தருவார் இந்த அரியாசனம்,,காரணமோ)

2)பட்ஜெட்டில் சிலத் துளிகள்-
  1) ஓராண்டிற்குள் அதாவது ஆகஸ்ட் 2012க்குள் மின்வெட்டு முற்றிலும் நீக்கப்படும்
  2)தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடியிலிருந்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது
  3)அரிசி பெறத் தகுதியுள்ள 1.83 கோடி குடும்பங்களுக்கு..இலவச மிக்ஸி கிரைண்டர்.2011-12ல் சுமார்  25 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்
  4)சென்னைக் குடிநீர் பிரச்னை நீக்க 3 புதிய ரிசர்வாயர்கள் அமைக்கப்படும்.இதனால் 4.2 TMC தண்ணீர் தேக்கிவைக்க முடியும்
  5)விவசாயிகளுக்கு 3000 கோடிக்கு வட்டியில்லா பயிர்க்கடன் கொடுக்கப்ப்டும்.

3)ஜெ ஆட்சிக்கு வந்த பின்னர் இப்போதெல்லாம் அடிக்கடி சென்னைத் தெருக்களில் மாநகர பேருந்துக்கள் பிரேக் டவுன் ஆகி நிற்பதைக் காணமுடிகிறது..அதற்கான காரணம் தெரியவில்லை...

4)பொய் வழக்குகள் தொடர்ந்தால் தி.மு.க., சிறை நிரப்பு போராட்டம் நடத்தும் என அறிவிக்கின்றனர்..அம்மாவும் அதைத்தானே செய்கிறார்..பின் எதற்கு போராட்டம் (!!!!)

5)ஆடு.மாடுகள் தரப்படுகின்றன..சமச்சீர் கல்வியால் மாணவர்கள் பயில முடியவில்லை..குறிப்பாக எதாவது உணர்த்தப்படுகிறதா...தெரியவில்லை


Wednesday, August 3, 2011

கட் அண்ட் பேஸ்டும்..பதிவர்களும்..
பல பதிவர்கள் சிறந்த பதிவிட வேண்டும் என நிறைய ஹோம் ஒர்க் செய்து தன் பதிவை வலையேற்றுகிறார்கள்.
ஆனால் எந்த கஷ்டமும் இல்லாமல்...பத்திரிகை செய்திகளை கட் அண்ட் பேஸ்ட் செய்து பதிவில் ஏற்றும் சில பதிவர்களின் பதிவுகள் திரட்டிகளில்..அதிக வாக்குகள் பெருவதும்..வாசகர் பரிந்துரையில்..அதிகம் படித்த பதிவுகளாக ஆவதும் இன்று கண்கூடு.அதனால் கட் அண்ட் பேஸ்ட் பதிவிடக்கூடாது என்று சொல்வது நியாயமில்லை.அவர் வலைப்பூவில் அவர் இடுகிறார்.
ஆனால்..அதனால்தான் நாங்கள் பதிவிடுவதில்லை என சில பதிவர்கள் கூறுவது..ஏற்புடையதல்ல.
வாசகர் பரிந்துரையோ...அதிகம் படித்த பதிவோ..அந்த வாரத்தில் முன்னணி பதிவோ..நம் பதிவின் தரத்தை தீர்மானிப்பதில்லை என்பதை பதிவர்கள் உணர வேண்டும்.
என் நட்பு வட்டம் பெரிதா...அப்படியெனில்..நான் இடும் எந்த இடுகையும்...எப்பேற்பட்டதாயினும் அதிக வாக்குகளை பெற்று முன்னணி இடுகையாகிவிடும்.
இந்நிலையில்..இவை எதைப் பற்றியும் கவலைப்படாது..நாம் எழுதிக் கொண்டிருப்போம்..
கிட்டத்தட்ட..இவை நம் டயரிக் குறிப்புகள் என்று எண்ணியே பதிவிடுங்கள்...நம் எண்ணங்களை பதிவிடுவோம்..படிப்பவர் படிக்கட்டும்..பின்னூட்டம் இடுபவர் இடட்டும்.
இலக்கிய பத்திரிகைகள் படிப்பவர் எண்ணிக்கை குறைவுதான்...அதனால் அவை நின்று விட்டனவா..அல்லது தரமிழந்து விட்டதா..
இந்த எண்ணத்துடன் அனைவரும் மீண்டுமெழுத ஆரம்பியுங்கள்.
திரட்டிகளுக்கும் ஒரு சிறு வேண்டுகோள்...
சினிமா சம்பந்தப்பட்டவைகளை தனியாக திரைமணத்தில் வெளியிடுவது போல கட் அண்ட் பேஸ்ட் பதிவுகளை மற்ற பதிவுகளிலிருந்து பிரித்து தனிப் பகுதியாக்கிவிடுங்கள்.
 

Tuesday, August 2, 2011

கறுப்புதான் நமக்குப் பிடிச்ச கலரு..
யாரும் யாருக்கும் இளைத்தவர் இல்லை என்ற நீதிக்கு ஒரு விஷயம்?
இது பாக்யா பத்திரிகையில் ஒரு வாசகரின் கேள்வி
இதற்கு பாக்யராஜின் பதில்..

அதாவது காட்டிலே வண்ணக்கிளி ஒன்னு கருப்பு காக்கையைக் கேலி செய்தது.கறுப்பு கறுப்பு என காக்கையை அவமதிச்சது.காக்கை வருத்தத்தோட..'கடவுள் என்னைப் படைத்தபோது கரண்ட் கட்டாகி இருக்கும்.அதற்கு நான் என்ன செய்ய?'ன்னு சலித்துக்கிச்சு.
அப்போ அங்கே வந்த வேட்டைக்காரன் ஒருத்தர் பல்வேறு வண்ணங்கள்லே மின்னிய அந்தக் கிளியை லபக்குன்னு பிடித்துக் கொள்ள கிளி சிக்கிருச்சு.காக்கை சொன்னது"நல்லவேளை நான் ஃப்ளாக் அண்ட் ஒயிட்' னு பெருமைப்பட்டது.
கிளியை எங்கே கொண்டு போகிறார் என தொடர்ந்து வேவு பார்த்தது.பாவம் கூட்டில் அடைத்து நம்மைப் போல் 'குட் மார்னிங் சொல்லு'ன்னு வேட்டைக்காரர் கிளியைப் பாடாய்ப் படுத்திட்டிருந்தார்.பூண்டிச் சுட்டு கிளியின் நாக்கில் வைத்து நாக்கைப் பதப்படுத்தினார்.வலி தாங்காமல் கிளி அலறியது.
அன்னைக்கு அமாவாசை.வேட்டைக்காரர் மனைவி வாசல் சுவரில் படையல் சோறை படைத்து 'காகா'ன்னு கூவி அழைத்தாள்.காகம் சிலிர்த்துக் கொண்டது.கிளியைப் பார்த்துச் சொன்னது, 'பார்த்தாயா..தன் பாஷையில் உன்னைப் பேச வைக்க உனக்கு நாக்கில் சூடு வைக்கிறான்.ஆனா அவர் சம்சாரமோ என் பாஷையில் என்னைக் கூப்பிட்டு சோறு வைக்கிறாள். I am Great ன்னு காகம் விருந்துண்டு பறந்ததாம்.

 டிஸ்கி - பாக்கியராஜின் இந்த பதில் எனக்குப் பிடித்திருந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


Monday, August 1, 2011

பதிவர்களின் திறமையை அழிக்கும் பஸ் (BUZZ)


பல அருமையான பதிவர்களின் பதிவுகளை இப்போது படிக்கமுடிவதில்லை.
அவர்கள் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்திவிட்டு கூகிள் பஸ்ஸிற்கு சென்றுவிட்டனர்.
அதில்கூட பாதி..ஏன்..80 சதவிகிதத்திற்கு மேல் அரட்டை தான்..இப்படி உரிமையுடன் நான் எழுதியதற்கு அப்பதிவர்கள் மன்னிப்பார்கள் என எண்ணுகிறேன்.
அப்பதிவர்களின் எழுத்துத் திறமையை நான் பல நேரம் படித்து வியந்ததுண்டு..
இவர்களில் பல தி.ஜா.ரா.க்களும் சுஜாதாக்களும், ஆத்மாநாமும், மனுஷ்யபுத்திரங்களும் இருக்கிறார்கள் என எண்ணியதுண்டு.
ஆனால் அவர்கள் முழுத்திறமையையும் தங்கள் எழுத்தில் காட்டுவதை நிறுத்திவிட்டு..வெத்து அரட்டை அடிக்கச் சென்றுவிட்டார்களே என மனம் வருந்துகிறது..
இப்பதிவின் மூலம் அவர்களை மீண்டும் பதிவுலகிற்கு அழைக்கிறேன்..
மீண்டும் உங்கள் பதிவுகளை..உங்கள் வலைப்பூக்களில் இடுங்கள்.திரட்டிகளில் அவை வரட்டும்.
கண்டிப்பாக புகழின் உச்சத்திற்கு உங்களால் செல்லமுடியும்.