Friday, August 31, 2018

நாடகப்பணியில் நான் - 44

அடுத்து பொதிகையில் என் நாடகம் செப்டெம்பர்11

இந்நாடகம் அமெரிக்காவில் டுவின் டவர் தாக்கப்பட்டதும், அதனால் உயிரிழந்த ஒரு இந்திய வாலிபன் பற்றியது.

இந்நாடகம் பற்றி ..

சென்னையில் ஒரு வயதான தம்பதிகள்.அவர்கள் மகன் அமெரிக்காவில்.

மாதா மாதம் அவர்களுக்கும் அங்கிருந்து பணம் அனுப்பிவிடுவான்.அவனுக்கு ஒரு திருமணம் செய்து விட வேண்டும் என பெற்றோர் எண்ணுகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் வீட்டினுள் பேயிங் கெஸ்டாக நுழைகிறாள் ஒரு பெண்.

அவளது அழகு, குணம் ஆகியவற்றைப் பார்த்த தம்பதிகள் அப்பெண்ணை தன் மருமகளாக ஆக்கிக் கொள்ள எண்ணுகின்றனர்.

ஆனால்..அப்பெண்ணோ..அமெரிக்காவில் உள்ள இவரது மகன் அவர்களுக்குத் தெரியாமல் மணம் செய்துக் கொண்ட பெண்.

செப்டெம்பர் 11 நிகழ்வில் அந்த டவரில் வேலை செய்து கொண்டிருந்த மகன் இறந்து விட, அப்பெண் வயதான தன் மாமனார், மாமியாரைக் காக்க அந்த விட்டினுள் வந்துள்ளாள்.

விஷயம் தெரியவர என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை

இதில் சாய்ராம், மீரா கிருஷ்ணன், பிரியதரிசினி ஆகியோர் நடித்திருந்தனர்.

சமீபத்தில் சாய்ராமை நான் சந்தித்த போது..இக்கதையை என்னிடம் சொன்னார்.

உண்மையில்..என்னைவிட என் கதையை இன்னமும் அழகாக ஞாபகத்தில் வைத்துள்ள அக்கலைஞனை மனம் போற்றியது.

இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்.

Thursday, August 30, 2018

நாடகப்பணியில் நான் - 43

அடுத்ததாக நான் கிருஷ்ணசாமி அஸ்ஸோசியேட்சிற்காக பொதிகைக்கு எழுதிய நாடகம் "விநாடி முள்"

ஸ்ரீனிவாசன் ஒரு பிரபல நிறுவனத்தில் அதிகாரியாய் இருக்கிறார்.மிகவும் கண்டிப்பான பேர்வழி. அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் அவரைக் கண்டால் மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கு நடுக்கம் தான்.

அவர் அலுவலகம் கிளம்பும்வரை வீட்டில்புயல் அடிக்கும், அவர் வெளியே வந்ததும் புயல் கடந்த பூமியாம் அமைதியாகும் வீடு.

இந்நிலையில், அவர் ஒருநாள் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அவர் ஓய்வு..அவர் வாழ்க்கையையே மாற்றிப் போடுகிறது.

வீட்டில் மரியாதையை இழந்ததாக எண்ணுகிறார்.
காலையில் பால் வாங்க அவர்தான் செல்ல வேண்டும்.
காய் வாங்க அவர்தான் செல்ல வேண்டும்
ஈபி கட்ட, சொத்துவரிகட்ட இப்படி பல வேலைகள் அவர் தலையில்.

அத்துடன் இல்லாது பேரனை பள்ளியில் காலையில் விட்டுச் சென்று, மாலையில் அவரே அழைத்து வர வேன்டும்.

இதனால் மனம் உடைந்த ஸ்ரீனிவாசன், ஒரு தன் நண்பரை ஒருவரைப் பார்த்து தன் மனக்குமறலை வெளியிடுகிறார்.
நண்பரும், தன் நிலையும் அப்படித்தான் என்று கூறி...என்ன செய்வது..அதிகாரம் செய்து கொண்டிருந்தோம்..இப்போது அவர்கள் அதிகாரம் என்கிறார்

மனம் நொந்து வீடு திரும்பியவர்.. வீட்டினுள் நுழையும் முன் மனைவி, மகள், மருமகள் ஆகியோர் தன்னைப் பற்றி ஏதோ பேசுவதை உணர்ந்து, அவர்கள் பேசுவதைக் கேட்கிறார்.

மகன் சொல்கிறான் "பாவம்மா..அப்பா..இத்தனை நாள் ஒன்றும் தெரியாமல் இருந்துவிட்டார், இன்று எல்லாவற்றிற்கும் அவரை அலைக்கழிக்கிறோம்"

மருமகளும், மாமனாரை வேலை வாங்குவதை எண்ணி வருந்து கிறாள்

அப்போது அவரது மனைவி சொல்கிறாள்.."நாம் வேணும்னு இப்படிச் செய்யல.அன்னிக்கு டாக்டர்  ..அப்பாவிற்கு சுகர், பிபி எல்லாம் இருக்கும்.தினம் ஒரு மணிநேரமாவது வாக் போகணும்னு சொல்லல.ஆனா..அதைச் சொன்னா அபப கேட்கமாட்டார்.அதனால இப்படியெல்லாம் வேலை வாங்கினா..அதன் மூலம் கொஞ்சமாவது உடற்பயிற்சி செஞ்ச மாதிரி ஆச்சு இல்லையா? ..நமக்கு அவர் முக்கியம்.நாம் இப்படி செய்யறதால அவருக்கு நம்பமேல கோபம் வந்தா, வரட்டும்..பொறுத்துப்போம்"

இவர்கள் பேச்சினைக் கேட்ட ஸ்ரீனிவாசன்..நம் குடும்பம் நம்மை வெறுக்கவில்லை.நம்ம நலனுக்காகவே வேலை வாங்கிகிறார்கள் என்பதை உணருகிறார்.

அடுத்த நாள் முதல் அவர்கள் சொல்லாத வேலைகளையும் எடுத்துப்போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பிக்கிறார்.

ஸ்ரீனிவாசனாக ஏ ஆர் எஸ் நடிக்க, மனைவியாக விஜயதுர்கா, மகனாக மாப்பிள்ளை கணேஷ் நடித்தனர் 

Tuesday, August 28, 2018

நாடகப்பணியில் நான் - 42

கிருஷ்ணசாமி அஸ்ஸோசியேட்ஸ் தயாரிப்பில். பொதிகையில் எனது 4 நாடகங்கள் ஒலி/ஒளி பரப்பானது என்று சொல்லிவிட்டு..அதன் கதைகளைச் சொல்வதாகக் கூறினேன் அல்லவா?

முதல்கதை- உறவு

கணவனை இழந்தவள் லட்சுமி.அவளது மகனை கஷ்டப்பட்டு, தனக்குத் தெரிந்த சமையல்வேலை செய்து வளர்த்தாள்.நல்ல கல்வியும் கொடுத்தாள்.மகன் நல்ல வேலையிலும் அமர்ந்தான்

மகனுக்கு திருமணம் நடந்தது.மருமகள் வந்துவிட்டாள்.ஆனால் அன்று முதல் லட்சுமிக்கு பிரச்னைகளும் வர  ஆரம்பித்தது.

தினமும், மருமகளுக்கும், மாமியாருக்கும் சண்டை.மகனோ நிம்மதி இழந்தான்.

அன்றும் அப்படிதான்...

அவன் அலுவலகம் கிளம்பும் சமயம் சண்டை.மனைவி சொல்லிவிட்டாள் "இதோ பாருங்க..ஆஃபீசை விட்டு திரும்பி வந்ததும் ஒரு முடிவெடுங்க.ஒன்னு, நான் இந்த வீட்ல இருக்கணும் இல்ல உங்கம்மா இருக்கணும்" என வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்ச் சொல்லி விட்டாள்.

அதையே எண்ணியபடி இருந்தவனை, அவனது பக்கத்து இருக்கை நண்பன் காரணம் விசாரிக்க, இவனும் உண்மையைச் சொன்னான்.

நண்பன் - இதற்கா வருத்தப்படறே! கவலைபப்டாதே...எனக்குத் தெரிந்த ஒரு ஆதரவற்றோர் இல்லம் உள்ளது..அதில் உங்கம்மாவை சேர்த்துவிடலாம்

மகனும் அடுத்த நாள் அம்மாவை இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.இல்ல நிர்வாகியோ, அம்மாவிற்கு மகன் இருப்பதால், அவர் அனாதை இல்லை என சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அம்மா, தன் மகனை சற்று வெளியே இருக்கச் சொல்லிவிட்டு ஆதரரவற்றோர் இல்ல நிர்வாகியிடம் "ஐயா! என்னைத் தெரியலையா உங்களுக்கு.25 ஆண்டுகளுக்கு முன் விதவையாய் இந்த வீட்டிற்கு வந்த எனக்கு தைரியத்தை வூட்டி..என் கையில் ஒருவயது குழந்தையையும் கொடுத்து, வாழ்வில் எனக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்திக் கொடுத்தீர்களே! அன்று என் கையில் நீங்கக் கொடுத்த குழ்ந்தைதான் 26 வயது வாலிபனாய் வெளியே நிற்பது.உண்மையில் நான் ஒரு அனாதை.என்னை இந்த இல்லத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றாள்.

அம்மா, என்ன பேசப்போகிறாள் தன்னை வெளியே அனுப்பிவிட்டு என்று எண்ணிய மகன் அம்மா சொன்னதைக் கேட்டதும், ஓடி வந்து"அம்மா1 என்னை அம்ன்னிச்சிடு"ன்னு அம்மா காலில் விழுந்தான்

அம்மாவாக வத்சலா ராஜகோபாலும், மகனாக அச்சமில்லை கோபியும், நண்பனாக மாப்பிள்ளை கணேஷும் , மருமகளாக டிவி நடிகை சீதாவும் நடித்தனர்

அடுத்த கதை அடுத்த பதிவில்

Monday, August 27, 2018

நாடகப்பணியில் நான் - 41

வார்த்தை தவறிவிட்டாய் நாடக வெற்றிக்குப் பிறகு, எனது நாடகப்பணியில் மீண்டும் ஒரு சிறு தேக்கம்.
அலுவலகப் பணி, வீட்டில் சிறு சிறு பிரச்னைகள் , மகள் மேல் படிப்பு செலவுகள் போன்றவை என்னைக் கட்டிப் போட்டன.
இதனால் என் கற்பனை சற்று வறண்டது

இதனிடையே, வார்த்தை தவறிவிட்டாய் கதாநாயகி பாத்திரத்தை உல்டா செய்து, கதாநாயகன் இரட்டை வேடம் என மாற்றி, திரைப்படமாக்க தயாரிப்பாளரைத் தேடினேன்.

ஆனால்..ஒரு சில காரணங்களால் அது ஈடேறவில்லை.வெள்ளித்திரைக்கு முயன்ற எனது இரண்டாம் முயற்சியும் தோல்வி.

இந்நிலையில் கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனம் பொதிகை தொலைக்காட்சிக்காக "ஊரறிந்த ரகசியம்" என்ற தொடர் நிகழ்ச்சி நடத்தி வந்தது.அதாவது வாரம் ஒரு சிறுகதையைத் தயாரித்து அளித்து வந்தது.

நான் அந்நிகழ்ச்சிக்காக நான்கு சிறுகதைகளை எழுதிக் கொடுத்தேன்.

ஒவ்வொரு சிறுகதையும் முத்துகள்.

என்ன நானே சொல்கிறேனே என்று பார்க்கறீர்களா? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என் கிறீர்களா?

அதுதான்..இல்லை..நான் ஒவ்வொரு நாடகத்தின் கதையைச் சொல்கிறேன்.அடுத்த பதிவிலிருந்து.நீங்கள் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்


Saturday, August 25, 2018

நாடகப்பணியில் நான் - 40

வேதம் புதிதல்ல வெற்றிக்குப் பிறகு .சௌம்யா குழுவின் 10ஆவது தயாரிப்பாக வந்த நாடகம் "வார்த்தை தவறி விட்டாய்"

கதை, வசனம். இயக்கம் வழக்கம் போல என் பொறுப்பு.

இந்நாடகத்தில் நாடக நடிகை ஷீலா இரட்டை வேடம் ஏற்று நடித்தார்.தாய், மகள் என.

மத்தியத் தர குடும்பம் ஷங்கரனுடையது.அவருக்கு டிவியில் ஒலி/ஒளி பரப்பாக இருக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கான பார்வையாளர் பாஸ் கிடைக்கிறது.தன் மனைவியுடன் அதற்கு செல்கிறார்.மனைவி சற்று அழகானவள்..வயது 35க்கு மேல்.ஆனாலும் மிகவும் இளமையாய் தெரிபவள்.இருபது வயதிலேயே ஷங்கரை மணந்தவள்.14வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

ஒரு பிரபல இயக்குநர் ஒருவர் தன் படத்திற்கு சற்று வயது கூடிய கதாநாயகியின் பாத்திரத்திற்கு ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்.அப்போது டிவியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கிறார்.பார்வையாளர்களைக் காட்டிக் கொண்டிருந்த காமிரா ஷங்கரின் மனைவியையும் காட்டுகிறது.அவளைப் பார்த்ததுமே அவளே தன் படத்தின் நாயகி எனத் தீர்மானிக்கிறார்.

மிகவும் தூண்டப்பட்டதால், அவளும் நடிக்க சம்மதிக்கிறாள்.
படம் வெளியாகிறது.ஓகோ என புகழ் பெறுகிறாள்.தமிழ்த் திரையுலகில் அவளது ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது.
இந்நிலையில் பிரபல கதாநாயகன் ஒருவன் அவளை தன் இச்சைக்கு உட்படுத்த எண்ணுகிறான்.அவள் மறுக்கிறாள்.
அதானால் கோபமுற்ற கதாநாயகன் , தனது  வில்லத் தனத்தைக் காட்டி அவள் முகத்தில் திராவகத்தைக் கொட்டுகிறான்.அது ஏதேச்சையாக நடந்தது போல சித்தரிக்கப்படுகிறது.

சிகைச்சைக்காக வெளிநாடு சென்ற நடிகை, மீண்டும் பொலிவுடன் திரும்பி வருகிறாள்.திரைப்படத்தில் தான் விட்டுச் சென்ற இடத்தை மீண்டும் நிரப்புகிறாள்.

இதனிடையே, அவளின் மகளைக் காதலிப்பவன், தன் காதலியைக் காணாது தவிக்கின்றான்.காவல்துறைக்கு புகார் அளிக்கின்றான்  .

அவன் காதலி என்ன வானாள்?  நடிகையின் முகம் மீண்டும் பொலிவினை எப்படிப் பெற்றது ஆகிய விவரங்கள் மீதிக்கதை.

அனைத்து மக்களாலும் இந்நாடகம் பாராட்டுதல்களைப் பெற்றது

நடிகர்களில், குறிப்பாக ஷீலா வின் நடிப்பு, திராவகம் கொட்டப் பட்ட முகம், மற்றும் மகள் பாத்திரம் ஆகிய பாத்திரங்களில் அவள் தூள் கிளப்பினார் என்று சொன்னால் அது மிகையல்ல 

மணிபாரதிநடிகையின் கணவனாகவும், நான் திரைப்பட இயக்குநர் ஆகவும் நடித்தோம்.

நாடகப்பணியில் நான் - 39

வேதம் புதிதல்ல- நாடகத்தின் கதை.(எனது ஞாபக டயரியில் இருந்து,கைவசம் ஸ்கிரிப்ட் இல்லை)

மணி ஒரு ஏழை குருக்களின் மகன்.அவனது நண்பன் ஜோசப்.

மணிக்கு கிராமத்தில் பெண் பார்க்கப்படுகிறது.பெண்ணின் பெயர் வேதம்.பெண்ணைப் பார்க்க மணி தன் நண்பன் ஜோசப்புடன் செல்கிறான்.

பெண்ணை அவனுக்குப் பிடித்து விடுகிறது.அதை பெண்ணின் தந்தையிடம் கூறிவிட்டு மணி , நண்பனுடன் கிளம்ப இருக்கையில் இடி, மின்னல், மழை.

வேறு வழியில்லாமல் அந்த இரவு இருவரும் அவர்கள் வீட்டிலேயே தங்க நேர்கிறது.

நள்ளிரவு.மணி நல்ல உறக்கத்தில் இருக்க ஜோசப்பிற்கு தொடர் இருமல் ஏற்படுகிறது.தண்ணீர் குடிக்க வெளியே வந்து.."தண்ணீர்..தண்ணீர்" எனக் குரல் கொடுக்க ,தூங்கிக் கொண்டிருந்த வேதம் எழுந்து வந்து தண்ணீர் தருகிறாள்.அதைக் குடித்து முடித்த ஜோசப், வேதத்தைப் பார்த்து மயங்குகிறான்.அவளிடம் அத்து மீறுகிறான்.

விடியலில் மணியும், ஜோசப்பும் அவளது தந்தையிடம் விடை பெறுகின்றனர்.

அடுத்த சில மாதங்களில் கல்யாண ஏற்பாடுகள் நடைபெறும் சமயம், மணி மீண்டும்  வேதத்தின் வீடு வருகிறான்.
அப்போது வேதத்தின் தந்தை அழுதுக் கொண்டிருக்கும் வேதத்திடம் "யார் காரணம்? யார் காரணம்" என அடிக்கிறார்.
வேதம் 3 மாதக் கருவை சுமந்து கொண்டிருக்கிறாள்.
இதை கேள்யியுற்ற மணி, அதற்குக் காரணம் "நான் தான்" எனக் கூறி, அவளது தந்தையிடம் மன்ன்னிப்புக் கேட்கிறான்.
திருமணம் நடைபெறுகிறது.

இடைப்பட்ட காலத்தில் வேதம் ஒரு பெண் குழந்தையைப் பெற்று மணியிடம் ஒப்படைத்து விட்டு மறைகிறாள்.
மணி, தன் தந்தைக்கு அடுத்து அந்த ஊர் கோயில் குருக்கள் ஆகிறான்.

அவன் வசிக்கும் இடத்தில் ஒரு சர்ச் வருகிறது.வேதத்தின் மகள் அந்த சர்ச் பாதிரியின் மகனை விரும்புகிறாள்.மணியும் சம்மதித்து அந்தப் பையனின் தந்தையைக் காணச் செல்கிறார்.

சென்றவர்க்கு அதிர்ச்சி..

அந்த பாதிரி ஜோசப்.மணியின் பழைய நண்பன்.

வீட்டிற்குத் திரும்பிய மணி, தன் மகளிடம் அந்தத் திருமணம் நடக்காது எனக் கூறி, அதற்கான காரணம் அவள் காதலிப்பவன் அவனது சகோதரன் முறை என் கிறார்.
தானும் ஒரு கிறித்துவனுக்குப் பிறந்தவள்.தான் காதலித்தவன் தன் சகோதரன் என்று அறிந்தவள், அந்த மன வேதனையில் சர்ச்சிற்குச் சென்று அதே பாதிரியிடம் பாவமன்னிப்பு கோருகிறாள்.

ஆனால்...உண்மையில்..மணிக்கு இழைத்த துரோகத்தால் மனம் வாடி ஜோசப் அந்த ஊரிலிருந்து ஓடிவிடுகிறான்.தான் செய்த தவறால், தான் வேறு மணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான்.ஆனால் மனநிம்மதிக்காக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றான்.அக்குழந்தையே மணியின் பெண் காதலிக்கும் ஆள் எனத் தெரிகிறது.

இதுவே வேதம்புதிதல்ல கதை ஆகும்.

மணியாகவும் பின் வயதான கோயில் குருக்களாகவும் நான்.ஜோசப்பாகவும், பாதிரியாராகவும் மணிபாரதி, வேதம் ஆகவும் வேதத்தின் மகளாகவும் காவேரி.ராஜேந்திரன் ( டப்பிங்ஆர்டிஸ்ட் சங்கத்தின் தலைவராய் இருந்தவர்), குருக்களின் உதவியாக ராம்கி நடிகர்கள் பட்டியல் ஆகும்  

Friday, August 24, 2018

நாடகப்பணியில் நான் - 38



வேதம் புதிதல்ல நாடகம் குறித்து சில விவரங்களைக் கூற ஆசைப்படுகிறேன்.

கிறித்துவர் ஒருவர் தன் நண்பனுக்கு, தவறிழைத்து விடுகிறார்.அந்நண்பர் பின்னர் ஒரு கோவில் குருக்கள் ஆகிறார்.பின் பல ஆண்டுகள் குறித்து பாதிரியார் ஆகிவிடும் கிறித்துவ நண்பரிடம், அவர் தவறிழைத்ததால் பாதிக்கப் பட்ட பெண் பாவமன்னிப்பு பெற வருகிறாள்.  வேதம் என்ற அந்தப் பெண் ஃபாதரைப் பார்க்கிறாள்.கதை ஃபிளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது.

இப்படிப் போகும் நாடகம்.

இந்த நாடகத்திற்கு அப்போது பிராமணர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த மேற்கு மாம்பலம்வாசியான திரு ராமநாதன் என்பவர் எனக்கு தொலைபேசி, நாடகம் பிராமணர்களை துவேசிப்பதாகக் கூறி நாடகத்தை நிறுத்த வேண்டும் என்றார்.(இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெங்கட் அவர்களுக்கும் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்தது)

நான் அவரிடம் கேட்டேன் "நீங்கள் நாடகம் பார்த்தீர்களா?"

"இல்லை" - அவர்

"இந்த வாரம் சனிக்கிழமை வாணிமகாலில் நாடகம் நடைபெறுகிறது.வந்து பாருங்கள்" என்றேன்.

இதனிடையே, வீயெஸ்வி அவர்களுக்கு தொலைபேசி, நாடகத்தில் ஆட்சேபத்துரியக் காட்சிகள் ஏதேனும் உள்ளதா?" எனக் கேட்டேன்.அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றிட்டார்.

நாடகத்தைக் காண வந்த ராமநாதன், நாடகம் முடிந்ததும், தனக்குத் தவறான தகவல் வந்தது என்று கூறியதுடன் அல்லாது நாடகத்தைப் பாராட்டினார்

மற்றொரு செய்தி..

அந்நாடகத்திற்கு எங்களுக்குக் குறிக்கப்பட்ட சன்மானத்தொகை ரூபாய் 800 ஆகும்.
ஆனால், ஓம்விக்னேஷ்வரா கல்சுரல் அகடெமி சார்பில் நாடகம் மியூசிக் அகடெமியில் நடந்து முடிந்தது.அச்சபாவின் செயலாளராய் இருந்த திரு இராமசுப்ரமணியம் என்பவர் நாடகம் முடிந்ததும்..ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

நான் அவரிடம் இருநூறு ரூபாய் அதிகம் கொடுத்துள்ளீர்கள் என்றேன்.தெரியும்...இந்நாட்கத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்றார்.

ஒரு கலைஞனுக்கு இதைவிட மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வு வேறு என்ன இருந்துவிட முடியும்.

இதே போன்று நிகழ்வு பின்னாளில் வேறு ஒரு சபாவிலும் எனக்கு நிகழ்ந்தது.அது குறித்து அப்போது சொல்கிறேன்

நாடகப்பணியில் நான் - 37



குடும்பம் ஒரு சிலம்பம் நாடகம் 100 ஆவது காட்சியை முடித்ததும் அடுத்த நாடகம் பற்றி குழுவினருடன் ஆலோசித்தேன்.

ஒரு அருமையான கதை என்னிடம் உள்ளது.அதை நாடகமாக்கம் செய்ய வேண்டும் என கதையினை முழுதும் விவரித்தேன்.அனைவருக்கும் கதை பிடித்திருந்தது.

இந்நிலையில், எங்கள் நாடக ஆஸ்தான நடிகனாய் இருந்த ராம்கி, இம்முறை நான் நாடகமாக்கம்-வசனம் எழுதுகிறேனே என்றார்.

அவரின் திறமையை நான் அறிந்தவன் ஆதலால், அதற்கு இசைந்தேன்.

நான் எதிர்பார்த்ததற்கு மேலாக அருமையாய் ஸ்கிரிப்ட் வந்தது.

இப்போது சென்ற பதிவின் இறுதியில் சொன்னேனே! நாடகத்தின் தலைப்பினைக் கேட்டு கேபி சிரித்தார் என்று.அந்த தலைப்பினைக் கூறுகிறேன்..

சில மாதங்களுக்கு முன்னர்தான் நண்பர் வேதம் புதிது கண்ணன் , கதை,வசனத்தில் வந்து மாபெரும் வெற்றியினைப் பெற்ற படம் "வேதம் புதிது"

என் நாடகத்தின் தலைப்போ..."வேதம் புதிதல்ல"
..இதைச் சொன்னதும் அவர் சிரித்தார்.அதற்கான அர்த்தம்.. ம் ஹூம்..இதுவரை நான் அறியவில்லை.

நாடகம் வெற்று நாடகமாக அமைந்தது

வீயெஸ்வி அவர்கள் நாடகத்தினைப் பார்த்து,பாராட்டி விமரிசித்தார்..கூடவே என் தலையில் அவரது மோதிரக்கையினால் ஒரு குட்டினை வைத்தார்.

கதையில் முடிச்சுகள் இருக்கலாம்...ஆனால் இக்கதையில் கதை முழுதுமே முடிச்சுகள் என்றார்

அந்த விமரிசனத்தை நான் மிகவும் ரசித்தேன்.


Wednesday, August 22, 2018

நாடகப்பணியில் நான் - 36



"குடும்பம் ஒரு சிலம்பம்" நாடகம் மாபெரும் வெற்றி நாடகமாக அமைந்ததுடன் அதன் 100ஆவது காட்சிக்கு வந்திருந்தார் ஒரு பிரபலம்.
அவர்...
அனைத்து கலைஞர்களாலும் போற்றப்பட்டவர்/போற்றப்படுபவர்.

அத்துடன் இல்லாது, அந்த பிரபலம் என் நாடக உலகின் தந்தையாய்  நான் எண்ணி வருபவருக்கு சௌம்யா குழுவின் சார்பில் "நாடகப் பேரரசு" என்ற விருதினையும் அளித்து சிறப்பித்தார்,

வருகை புரிந்த பிரபலம் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்.
விருதினைப் பெற்றவர் கார்த்திக் ராஜகோபால் ஆவார்.

என் வாழ்நாளில் என்னால் மறக்கமுடியா நாடக நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

தவிர்த்து பின்னாளில்..

இயக்குநர் சிகரம் கேபி பற்றி நான் ஒரு புத்தகம் எழுதுவேன் என்றும்,

சங்ககாலம் முதல் இந்நாள் வரையிலுமான "தமிழ்நாடகமேடை தோற்றமும் வளர்ச்சியும்" குறித்து ஒரு நூல் எழுதுவேன் என்றும் அதை என் நாடகத்தந்தை ராஜகோபால் அவர்களுக்கு சமர்ப்பிப்பேன் என்றும் எண்ணவில்லை.

அந்த இரண்டு இமயங்களை அன்று மேடையில் அலங்கரித்து மகிழ்ந்தேன்.

அதே மேடையில் இயக்குநர் சிகரத்திடம் என் அடுத்த நாடகம் பற்றி சொல்லி, அத்ன் தலைப்பைச் சொன்னதும் வாய்விட்டு சிரித்தார்.

அவரை அப்படி சிரிக்க வைத்த அந்நாடகத் தலைப்பு என்ன?
அடுத்த பதிவில் 

Tuesday, August 21, 2018

நாடகபப்ணியில் நான் - 35



சௌம்யாவின் அடுத்த நாடகம் முந்தைய நாடகமான "காயத்ரி மந்திர"த்தைவிட சிறப்பாக இருக்க வேண்டுமென தீர்மானித்து , கதை விவாதத்தில் ஈடுபட்டோம்.

அச்சமயம், எங்கள் குழுவின் பொருளாளராய் இருந்த (பொருளாளரா..என வியக்கிறீர்களா? ஆம்..பொருளாளர்தான்.ஒவ்வொரு நாடகமும் 100 ஐத்தொடும் நாட்கள் அவை.ஒருவரே தேதி வாங்குவது, ஒத்திகைப் பார்ப்பது.கலைஞர்களுக்கு அறிவிப்பது, சபாவில் பணம் வாங்கி அதைப் பிரித்து அனைவருக்கும் வழங்குவது..என பல வேலைகளை செய்வது கடினம் என்பதால்..ஒவ்வொரு குழுவிற்கும் செயலாளர்,பொருளாளர் இருந்த காலம் அது) கச்சாலீஸ்வரர் கான சபாவினைச் சேர்ந்த டி ராதாகிருஷ்ணன் என்னிடம் வந்து, வெங்கட் ஒரு அருமையான கதை சொன்னார், அதை நாடகமாக்கச் சொல்லலாமா? என்றார்.

வெங்கட் மிகவும் பிசியாக இருப்பவர்.நானும், அவரும் ஒரே வங்கியில் வேலைபுரிந்து வருபவர்கள்.எல்லாவற்றையும் விட நெருங்கிய நண்பர்கள்.ஆகவே அவரிடம் இது பற்றி பேசினேன்.

அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு "குடும்பம் ஒரு சிலம்பம்" என்ற நாடகத்தை எழுதியதுடன் நில்லாது இயக்கவும் செய்தார்.

மணிபாரதி, ராம்கி, சுந்தர் பிரசாத், காவேரி ஆகியோருடன் நானும் முக்கிய வேடத்தில் நடித்தேன்.(நண்பர் விஸ்வதானன் ரமேஷிற்காக ஒரு புகைப்படமும் இணைத்துள்ளேன்)

நாடகம் மாபெரும் வெற்றி.. இந்நாட்கம் போட்டதற்காக நான் மிகவும் பெருமையடைகிறேன்.

அந்த ஆண்டு(1989) மைலாப்பூர் அகடெமி, சிவகாசி ஃபைன் ஆர்ட்ஸ் ஆகியவை இந்நாடகத்தை  சிறந்த நாடகமாக தேர்ந்தெடுத்தன.மணிபாரதி, காவேரி ஆகியோருக்கும் நடிப்பிற்கான விருது கிடைத்தது.

இந்நாடகத்தை ,நான் சந்திக்கும் போதெல்லாம் பாராட்டிய ஒரு சபா காரியதரிசி இருந்தார்..அவர்..

கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் செயலர் சுந்தர்ராமன் ஆவார்.அவரை நன்றியுடன் நினைக்கிறேன்.

Monday, August 20, 2018

நாடகப்பணியில் நான் - 34

எங்கள் குழுவினரிடமிருந்து குடும்ப நாடகங்கள்தான் வேண்டும் என ரசிகர்கள் கூறிவிட்டார்கள் என்றேன் அல்லவா?

அத்னால், அவர்களைப் பிழியப் பிழிய அழ விட தீர்மானித்தேன்.

பிறந்தது "காயத்ரி மந்திரம்" நாடகம்
.
நாட்கம் முடிந்து பார்த்தால், விளக்கு வெளிச்சத்தில் சற்றே வெட்கத்துடன் அனைவரும் கண்களில் நீரை துடைத்துக் கொண்டிருப்பர்.

நாடகம் மாபெரும் வெற்றி
.
சென்னையில் "பாலாஜி ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற சபா திருவாளர்கள் சி எஸ் ராஜு, பி ஆர் ஸ்ரீனிவாசன் ஆகியோரை செயளர்களாகக் கொண்டு இயங்கி வந்தது.

இந்த சபா, ஒவ்வொரு வருடமும் சிறந்த நாடகத்திற்கான விருதினை வழங்கி வந்தது.

அதற்கான ஷீல்ட், கோப்பையை எனது சௌம்யா குழு அளித்திருந்தது.

எங்களது அந்த கோப்பை எங்களுக்கே காயத்ரி மந்திரம் நாடகத்திற்காக வழங்கப்பட்டது.அதை வழங்கியவர்அன்றைய பிரதம அழைப்பாளரான திரு எஸ் ராஜாராம் ஆவார்கள்

நாடகத்தில் நடித்த நடிகர்களை இங்கு கூறாவிடில், இப்பதிவு முற்று பெறாது.

மணிபாரதி, பிரேமா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர்.ரிசர்வ் பேங் ஸ்ரீனிவாச ராவ் முக்கியமான குணசித்திர வேடமொன்றை ஏற்றார்.ரமேஷ், தேவிலலிதா, ஊட்டி குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்தனர்.

ஈரோடு கவிதாலயாவும் இந்நாடகத்திற்கு விருதினை வழங்கியது.

மைலாப்பூர் அகடெமியுடன் எனக்கு சிறு மனஸ்தாபம் அந்த வேளையில் இருந்ததால், அந்த ஆண்டுக்கான அவர்கள் விருதுபோட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை

Sunday, August 19, 2018

நாடகப்பணியில் நான் -33

எனது சௌம்யா குழுவினரின் 6ஆவது நாடகம் "இதயம்வரை நனைகிறது"

நகைச்சுவை சற்று தூக்கலாக அமைந்த நாடகம்.

ஆனதாண்டவபுரம் ஆதிகேசவலு என்ற நகைச்சுவை பாத்திரத்தை முன்னணியாகக் கொண்ட நாடகம்.

எனது குழுவில் நகைச்சுவை வேடத்தை செய்ய நடிகர்கள் இருந்தாலும்...குழுவில் இல்லா ஒருவரை அப்பாத்திரத்தில் நடிகக் வைத்தால், நாடகம் பார்ப்பவர்களால் மேலும் அப்பாத்திரத்தை ரசிக்க முடியும் என நான் எண்ணியதால், திரு எம் ஆர் கிருஷ்ணசுவாமி என்ற எம் ஆர் கே வை அப்பாத்திரத்தில் நடிக்க வைத்தேன்.

அவருடன் எங்களது நடிகர்கள் நான், மணிபாரதி, ரமேஷ் ஆகியோரும் நடித்தனர்

நாடகம் நான் எதிர்பார்த்தது போல சூப்பர் ஹிட்.

மேடையேறிய இடமெல்லாம் பாராட்டுதல்கள்.

ஆனால்..நாடகத்தை ரசித்தாலும், மக்கள் நாடகம் முடிந்ததும் '"உங்கள் குழுவினரிடமிருந்து எனகளுக்குத் தேவை சிறந்த குடும்ப நாடகங்களேதவிர, நகைச்சுவை நாடகங்கள் அல்ல" என்றனர்.

அப்போதுதான், மக்கள் நம்மைப் பற்றி ஒரு முடிவெடுத்து விட்டால் , அதை மீண்டும் மாற்ற நினைப்பது கடினம் என்பதை உணர்ந்தேன்.

அதற்கேற்றாற் போல அடுத்த நாடகத்தை அரங்கேற்ற, அது மாபெரும்  வெற்றியினைப் பெற்றது.

அது குறித்து அடுத்த பதிவில்

Saturday, August 18, 2018

நாடகப்பணியில் நான் - 32

ஒரு நாடகக்குழு நாடகம் போடுவது எனில், அக்குழுவினருக்கு பல பல விதத்தில் .ஒவ்வொரு காட்சியின் போதும் சிறு சிறு சோதனைகள் வந்துக் கொண்டுதான் இருக்கும்.

ஒவ்வொரு தயாரிப்பளரும் ,இயக்குநரும், நடிகர்களும், டெக்னீஷியன்ஸ்களும் அவற்றை அவரவர் திறமைக்கு ஏற்ப சமாளித்துவிடுவார்கள்.

ஆனால்..இப்போது நான் சொல்லப்போகும் சோதனை ஒன்று, படிப்பதற்கு பெரிய சோதனையாய் தெரியும்.ஆனால் நாடகக் குழுக்களைப் பொறுத்தவரை இதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.இல்லவிடின், குழுவினை நடத்தவே தகுதியற்றவர் ஆகிவிடுவோம்.

எங்களது "புதியதோர் உலகம் செய்வோம்" நாடகம் திருப்பத்தூர் (N A DT) மேகாலயா சபாவில் நடைபெற இருந்தது.

அனைத்து செட் property, Light and Mike எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆகவே, ஒரு தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்தேன்.அனைத்துப் பொருள்களையும் பேருந்தின் மேல் ஏற்றிவிட்டு பயணித்தோம்.

ஆனால், பேருந்தோ சரியான பாதையில் போகாது சுற்றிப் போவதை உணர்ந்தேன்.ஓட்டுநரிடம் கேட்ட போது "நீங்க ஏன் கவலைப்படறீங்க! உங்களை 5 மணிக்கு கொண்டு போய் சேர்த்துவிடுகிறேன் "என்றார்.

ஆனால் 5 மணிவாக்கில் திருப்பத்தூர் செல்ல மேலும் 10 கிலோமீட்டர் இருந்தது.

அப்போதுதான் வந்தது சோதனை.

சில அதிகாரிகள் பேருந்தை நிறுத்தினர்.ஓட்டுநரிடம் பர்மிட் இருக்கா என்றனர்.ஓட்டுநர் விழித்ததுடன் அல்லாது, தான் நெல்லூரிலிருந்து வருவதாக பொய் சொன்னார்.

அந்த அதிகாரி என்னிடம் வந்து கேட்டபோது நான் உண்மையைச் சொன்னேன்.உடன் அந்த அதிகாரி பேருந்தை பறிமுதல் செய்வதாகக் கூறினார்.

அவரிடம் நான் திருப்பத்தூரில் 7 மணிக்கு நாடகம் இருப்பதாகக் கூறி..அதற்கு போகவேண்டும் என கெஞ்சினேன்.

அதனால் இரக்கப்பட்ட அதிகாரி, "உங்களை திருப்பத்தூரில் இறக்கிவிட்டு விட்டு பேருந்தை எடுத்து சென்று விடுவேன்" என்றார்.

தலைக்கு வந்தது தலைப்பாகையுட போன கதையாக நானும் இசைந்தேன்.

நாடகம் முடிந்ததும், அத்தனை செட் பொருள்களை எப்படி சென்னைக்கு எடுத்துப் போவது எனத் தெரியாது விழித்தேன்

பிறகு விடியலில் பெருந்து நிலையம் சென்று சென்னை செல்லும் பேருந்தைத் தேடிச் சென்று, அந்த ஓட்டுநர், நடத்துநரிடம் விஷயத்தைச் சொன்னேன்.அவர்கள், அரங்கத்திற்கு வந்து அவற்றை ஏற்றிச் செல்வதாகவும், பேருந்து பிராட்வே செல்ல இருப்பதால் அண்ணாமலை மன்றத்தில் அவற்றை இறக்கி விடவேண்டும் என்றும் சொன்னார்.

நல்லவேளை.எங்களுக்கும் அந்த வாரம் மன்றத்தில் நாடகம் இருந்தது வசதியாய் போய்விட்டது.

என்ன! இதைப் போய் சின்ன சோதனை என சொல்கிறேனேஎன்கிறீர்களா? ஆமாம்..இரு கோடுகள் தத்துவம்தான்.இதைவிட பெரிய சோதனைகளைப் பார்த்து விட்டதால் இது சிறிய சோதனையாகவே பட்டது

Friday, August 17, 2018

நாடகப்பணியில் நான் - 31

உயிருள்ள இறந்த காலங்கள் நாடகத்திற்குப் பின் அடுத்த நாடகம் பற்றி ஆலோசிக்கையில் எனக்கு ஒரு சிறுஅதிர்ச்சி ஏற்பட்டது.

தொடர்ந்து எங்கள் குழுவினருக்கு 3 வெற்றி நாடகங்களை எழுதிக் கொடுத்த பரத் அவர்களுக்கு வேறு குழுக்களுக்காக ஸ்கிரிப்ட் எழுத வேண்டிய நிலை உருவானது.தவிர்த்து பரத் அவர்களும் ராஜ சேகர் நடிக்க ஒரு புதுக் குழுவினைத் தொடங்கினார்.

இந்நிலையில் அடுத்த நாடகம் எங்களது எது? என ஆலோசித்தோம்.

எற்கனவே, சபா நடத்தும் போது "தேவை ஒரு மாப்பிள்ளை" என்ற நாடகத்தை எழுதிய அனுபவமும் எனக்கு இருந்ததால், இனி சௌம்யாவிற்காக நாமே நாடகங்களை எழுதலாம் என தீர்மானித்து எழுதுகோலை கையில் எடுத்தேன்.

"புயல் கடந்த பூமி" என்ற நாடகம் உருவானது.மணிபாரதி, ரமேஷ்,ஓமகுச்சி நரசிம்மன் ஆகியோருடன் சுமதி என்பவரும் நடித்தார் .

நாடகம் வெற்றி நாடகமாகி 100 க்கும் மேல் காட்சிகள் நடந்தது.

இந்நாடகத்திலும் மறக்கமுடியா ஒரு நிகழ்வு நடந்தது.
கலைவாணர் அரங்கில் நாடகம்.5-30வரை சுமதி வரவில்லை.தொலைபேசியபோது, தனக்கு திடீர் என உடல்நிலை சரியில்லை,ஆகவே வர இயலாது என்றிட்டார்.

என்ன செய்வது? எனத் தெரியவில்லை.

அந்த நேரத்தில் அகஸ்டோ நாடகங்களில் சுவர்ணலதா என்ற நடிகை நடித்து வந்தார்.அவரைத் தொடர்பு கொண்டு உடனே அரங்கிற்கு வரச் சொன்னோம்.

அவரும் வந்தார்.நாடகத்தின் அனைத்துக் காட்சிகளிலும் அவரை அரங்கின் வலது பக்கமே நிற்கச் சொல்லி, அவர் பேச வேண்டிய வசனங்களை prompt பண்ணினோம்.அவர் அதை வாங்கி பேசினார்.

யாருக்குமே அன்று திடீரென அவர் நடிக்க வந்தார் என அறியாது, நாடக அரங்கேற்றம் முதல் அப்பாத்திரத்தில் அவரே நடித்து வந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் அவர்.

அந்த நாட்களில் அனைவரிடமுமே தொழில் பக்தி இருந்தது.

சௌம்யாவிற்காக நான் எழுதிய முதல் நாடகமே வெற்றி நாடகமாக அமைந்த போது, 25க்கும் மேற்பட்ட நாடகங்கள் நான் மேடையேற்றப் போகிறேன் என நான் அறியவில்லை.

அடுத்த நாடகம் பற்றி அடுத்த பதிவில்..

(தொடரும்)  

Thursday, August 16, 2018

நாடகப்பணியில் நான் -30

உயிருள்ள இறந்தகாலங்கள்..

இந்நாடகம் பற்றி மேலும் சொல்வதாகக் கூறினேன் அல்லவா?சொல்கிறேன்..

எல்லையில் ராணுவ முகாம்.மலையின் பின்னணியில் மூன்று நான் கு டென்டுகள்.ஒரு டென்டிற்கு மட்டும் உள்புறத் தோற்றம்.

ஹெலிகாப்டர்..பறக்கையில் பாம் வெடித்து சிதறும் காட்சி
என அதிரடி அரங்க அமைப்பு.அனைத்து ராணுவ வீரர்கள் கையிலும் ராணுவ துப்பாக்கி

அந்த நாடகத்தில் உளவாளியாக நடித்தவர் நடிகை குட்டி பத்மினி.

திராவிடமணியின் இளமைப் பருவத்தில் நடித்தார் ஒரு புதுமுக இளைஞர்.

அன்று சௌம்யாவில் நடிக்க ஆரம்பித்தவர் இன்றுவரை எனக்கு தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த இளைஞர் பி டி ரமேஷ்..

முதல்  நாடகத்திலேயே மைலாப்பூர் அகடெமியின் விருதினைப் பெற்றவர், இன்றுவரை தன் நடிப்பால் பல நிறுவனங்களின் விருதுகளைப் பெற்று வருகிறார்.

இதுவரை சௌம்யா குழுவின் நாடகங்களில் என் மனதிற்குப் பிடித்த நாடகங்களில் இதற்கு முதலிடம் உண்டு.

ஆனாலும், எனக்கு ஏமாற்றம்.இந்த நாடகம் அதிகளவில் பேசப்படவில்லை.அதிகக் காட்சிகளும் நடைபெறவில்லை

அதற்குக் காரணமாய் நான் நினைப்பது..

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வரவேண்டிய நாடகம், பத்து ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டதுதான் என்பதே,

இந்நாடகம் பற்றி முடிப்பதற்கு முன், ராணுவ வீரர்களின் முதல் எழுத்துகளை கூட்டினால் INDIAN என்று வரும் எனச் சொன்னேன் அல்லவா?

அது மட்டுமல்ல..
இந்திரஜித் - பஞ்சாபி
நாராயணன் - மலையாளம்
திராவிடமணி - தமிழ்
ஐசக் - கிறித்துவர்
அஞ்சையா- தெலுங்கு

இனி அடுத்த நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் எனக்கு சிறு அதிர்ச்சி..

அது என்ன..அடுத்த பதிவில்

(தொடரும்)

Wednesday, August 15, 2018

நாடகப்பணியில் நான் - 29

எனது சௌம்யா குழுவின் நான்காவது நாடகம் ஒரு "trend setter"  என பத்திரிகைகளாலும், சபாக்களாலும் பாராட்டப்பட்டது,
அப்படி என்ன நாடகத்தில் என் கிறீர்களா?

இந்நாடகத்தின் கதையினையே சுருக்கமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன்..

மணி...ஒரு மேல்வகுப்பினைச் சேர்ந்தவன்.மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தை உடையவன்.ஆனால், அதிக மதிப்பெண்கள் பெற்றும் , அவன் சார்ந்த ஜாதியால் அவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

அவன் தன் பெயரை திராவிடமணி என் மாற்றிக்கொண்டு ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறான்.
அவனுடன், இந்திரஜித், நரசையா,அஞ்சையா,ஐசக் என்பவர்கள் ராணுவ வீரர்களாக உள்ளனர்.இந்திரஜித்தும், திராவிடமணியும் முன்னமேயே நண்பர்கள்.ஆனால் திராவிடமணி விரும்பிய ஒரு பெண்ணினால் விரோதிகளாக ஆயினர்.

ஆனால் ராணுவத்தில் மேஜர் திராவிடமணியின் கீழ் இந்திரஜித் வேலை செய்ய நேரிடுகிறது.

அச்சமயம் அவர் தங்கியுள்ள பகுதியில் ஒரு பெண் வருகிறாள்.அவள் பார்க்க திராவிடமணியின் காதலி போலவே தெரிகிறாள்.ஆனால், இந்திரஜித் அந்தப் பெண்ணை நம்பவில்லை.

ஆனால், திராவிடமணி அப்பெண்ணை நம்புகிறார்.அதனால் ராணுவ ரகசியங்களை அவளிடம் கூறுகிறார்.அப்பெண் அந்த ரகசியங்களுடன் ஹெலிகாப்டரில் பறக்கிறாள்.அவள் பாகிஸ்தான் உளவாளி.

அவளிடம் ரகசியங்களைக் கூறியதால், திராவிடமணி எவ்வளவு கூறியும் கேட்காது இந்திரஜித் அவரை சுட்டுவிடுகிறான். அதே சமயம் அந்தப் பெண் சென்ற ஹெலிகாப்டர் வானில் வெடிக்கிறது.

திராவிடமணி அப்பெண் பாகிஸ்தான் உளவாளி என்று தெரிந்துதான் அந்த ஹெலிகாப்டரில் பாம் செட் செய்துள்ளார் என இந்திரஜித்திற்குத் தெரியவர இந்திரஜித் மனம் வருந்துகிறான்.

அவர்கள் பெயர்களைப் பாருங்கள்..

இந்திரஜித், நரசையா,திராவிடமணி.ஐசக், அஞ்சையா
அவர்கள் பெயரின் ஆங்கில முதல் எழுத்துகள் I N D I A

பரத் எழுதியிருந்த இந்நாடகத்தின் பெயர் "உயிருள்ள இறந்த காலங்கள்"

இந்நாடகம் பற்றி மேலும் விவரங்கள் அடுத்த பதிவில்

(தொடரும்)

Tuesday, August 14, 2018

நாடகபப்ணியில் நான் - 28

நெஞ்சங்கள் வாழ்த்தட்டும் நாடகத்தை திரைப்படமாக்க முடியுமா? என நானும் ,பரத்தும் யோசித்தோம் அல்லவா? அது என்னவாயிற்று என்பதற்கு முன் ஒரு நிகழ்வு.

வீரபாகு என்ற பாத்திரத்தில் ராம்கி.கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளிலும் வருவார்.

நாடகம் அரங்கேறிய நாளுக்கு அடுத்த தேதி எர்ணாகுளம் சபாவில்.

கிளம்பிய நாள் அன்று ராம்கி டிரெயினைத் தவறவிட்டு விட்டார்.எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அவ்வளவு காட்சி வசனங்களையும் யார் பேசமுடியும்? நடிக்க முடியும்? ஒரே நாளில்...

எர்ணாகுளத்தில் இறங்கியதுமே, ஒரு 60பக்க நோட்புத்தகத்தை வாங்கினேன்.தங்க வைக்கப்பட்டிருந்த ஓட்டல் அறையில், அப்புத்தகத்தில் வீரபாகுவிற்கான வசனங்களை மட்டும் குறிப்பெடுத்தேன்.அந்த பாத்திரம் எப்போதும், எதிலும் கணக்கு பார்க்கும் பாத்திரம் என்ற வசனத்தில் முதலில் ஓரிடத்தில் சேர்த்தேன்.

பின், நாடகம் முழுதும் கணக்கு எழுதுவது போல, வசனங்களைப் பார்த்து, பார்த்து பேசி நடித்தேன்.

வந்திருந்த ரசிகர்களுக்கும். சபா நிர்வாகிகளுக்கும் கூடத் தெரியாமல் அன்றைய நாடகம் வெற்றிகரமாய் அமைந்தது.

சரி..திரைப்பட விஷயத்திற்கு வருவோம்..

அந்நாடகத்தை திரைப்படமாக்கத் தீர்மானித்து, சுலோசனா,சுரேஷ், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பேசி முடித்தோம்.

அந்நாளில் "காலிக் பிரதர்ஸ்" என்ற ஃபைனான்சியர்ஸ் இருந்தனர்.அவர்கள் படத்திற்கு ஃபைனான்ஸ் செய்வதாகக் கூறி..பதினைந்து    நாட்கள் கழித்து வரச் சொன்னார்கள்.

இடைப்பட்ட காலத்தில் இரு திரைப்படமான நாடகங்கள் வந்தன.(அந்நாடகங்கள் பெயரைச் சொல்ல மனம் ஒப்பவில்லை).இரண்டு படங்களும் படு தோல்வி.

அதனால், பதினைந்து நாட்கள் கழித்து ஃபைனாசியரைச் சந்தித்த போது அவர்கள் சாதகமான பதிலைக் கூற தயங்கினர்..மேற்குறிப்பிட்ட திரைப்படங்கள் தோல்வியால்.

ஆக, திரையுலக முயற்சி வெற்றிகரமான (!)தோல்வியில் முடிந்தது.

எல்லாமே நல்லதற்குத்தான் என்று மனதைத் தேற்றிக் கொண்டோம்.

Monday, August 13, 2018

நாடகப்பணியில் நான் - 27

எங்களது 3ஆவது தயாரிப்பிற்கு புதுமையாக ஏதேனும் செய்ய எண்ணினோம்.அது என்ன? என சொல்வதற்கு முன்..
எனக்கு நண்பர்கள் கொடுத்த அதிர்ச்சியைச் சொல்கிறேன்.

"புதியதோர்" வெற்றிக்குப் பின்...என்னுடன் சேர்ந்து குழுவினைத் தொடங்கிய ஸ்ரீனிவாசன், நடித்து வந்த ஷங்கர், நாராயணன் ஆகியோர், அடுத்த நாடகத்தை பிரம்மாண்டமாய் தயாரிக்க எண்ணினர்.

ஏற்கனவே சபாவில் ஜேசுதாஸ் நிகழ்ச்சி மூலம் அனுபவப்பட்டிருந்த நான் அகலக்கால் வைக்க இசையவில்லை.ஆகவே அவர்கள் என்னை விட்டு பிரிந்தனர்.

நான் சற்று வருத்தப்பட்டாலும், அதிகமும் செலவில்லாமல் புதுமையாக தரமான நாடகத்தினை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

முன் நாடகங்களில் நடித்த மணிபாரதி, ராம்கி மட்டுமே என்னுடன் இருந்தனர்.ராம்கி திறமையான நடிகர்.அவர் திறமையை வெளிக் கொணர ஆசைப்பட்டேன்.

பரத், அவர்களுடன் ஆலோசித்தேன்.."வீரபாகு" என்ற பாத்திரத்தினை மையப் படுத்தி ஒரு நாடகத்தை எழுதினார் பரத்.

வீரபாகு பாத்திரத்தை "ராம்கி" ஏற்றார்.நாடகத்தின் பெயர் "நெஞ்சங்கள் வாழ்த்தட்டும்"

பார்த்த நெஞ்சங்கள் அனைத்து வாழ்த்தின.

நாடகத்தின் அரங்க அமைப்பு எக்ஸலன்ட் மணி.ஒரு காலனியில்..தனித்து தனித்து மூன்று வீடுகள் செட்டில்.அடடா..இன்று நினைத்தாலும் அந்த அரங்க அமைப்பு என் கண்முன்னே என்னை ஆச்சரியப்பட வைத்தது.

ராம்கி,மணிபாரதி, நான் என அனைவருமே குறை சொல்ல முடியா நடிப்பு.

ஆனந்தவிகடனில் வீயெஸ்வி அவர்கள், விமரிசனம் எழுத தயாராய் நாடகத்தின் பெயரை வைத்த குழுவினரை நெஞசம் வாழ்த்துகிறது என எழுதியதுடன்..அனைத்து நடிகர்கள் நடித்திருந்தாலும் ராம்கி தனித்து நிற்கிறார் என்றும் மனம் திறந்து பாராட்டினார்.

நாடகம் 100 காட்சிகளைக் கடந்தது.

அடுத்து இந்நாடகம் திரைப்படம் ஆனால் சிறப்பாய் இருக்குமே! என்று சில நண்பர்கள் தூண்ட, எதைப்பற்றியும் எண்ணாத நானும் ,பரத்தும் திரைப்படமாக்க முடியுமா? என யோசித்தோம்..

அதற்கான எங்களது முயற்சி நிறைவேறியதா? அல்லது விழலுக்கு இறைத்த நீராயிற்றா? அடுத்த பதிவில் 

Sunday, August 12, 2018

நாடகப்பணியில் நான் - 26

"புதியதோர் உலகம் செய்வோம்" நாடகம் வெற்றி நாடகமா? என சொல்வதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா? இப்போது சொல்கிறேன் படியுங்கள்...

நாடகம் பார்த்த அனைவருமே நாடகத்தைப் பாராட்டினர்.இம்முறை கோபு பாபு இசை.லைட்டிங்க் கோம்ஸ், அரங்க அமைப்பு எக்ஸலன்ட் மணி.மணிபாரதி,ஷங்கர், நாராயணன், ராம்கி, கமலா காமேஷ் உட்பட அனைவரின் அற்புத நடிப்பு.

ஆனால்..உடனடியாக தேதிகள் வரவில்லை.

நாடகம் பார்த்த கோமல்சுவாமிநாதன் அவர்கள் என்னிடம் "ராதா! இந்த நாடகத்திற்கு ஆதரவு இல்லையெனில் நீ இனிமேல் நாடகமே போடவேண்டாம்' என்றார் ஆதங்கத்துடன்.

டி எஸ் சேஷாத்திரி அவர்கள் நாடகக்குழு ஆரம்பித்ததும் உதவி செய்தார் என முன்னமே சொல்லியிருந்தேன் அல்லவா? அவர் செய்த உதவி...அவர் நாடகம் நடந்த சபாக்களில் எல்லாம் என் நாடகத்தைப் புகழ்ந்து கூறி ..ஆதரவு அளிக்கச் சொன்னார்.கிட்டத்தட்ட் ஒரு பி ஆர் வோ வேலையைச் செய்தார்

இந்நிலையில், குமுதம் அலுவலகத்தில் ஜ ரா சுந்தரேசன் அவர்களை சந்தித்து நாட்கத்தை விமரிசிக்க முடியுமா? என்றேன்.அவர் நாடகத்தில் வரும் ஜோக் ஒன்றைக் கூறு..என்றார்.சொன்னேன்,.

அடுத்த இதழ் குமுதத்தில் அதை வெளியிட்டு , "புதியதோர் உலகம் செய்வோம்" நாடகத்திலிருந்து என எழுதினார்.

"இதயம் பேசுகிறது" இதழில் துணை ஆசிரியராய் இருந்த தாமரைமணாளன், நாடகம் பற்றி எழுதினார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.தேதிகள் குவியத் தொடங்கின.இந்நாடகத்திற்கு மட்டும் தான்  சபா காரியதரிசிகளே என் வீடு தேடி வந்து தேதி கொடுத்தனர்.இது மிகை அல்ல.உண்மை.

நாடக வெற்றிக்கு  பரத்,ஸ்ரீனிவாசன், சேஷாத்திரி, கோமல்,கச்சாலீஸ்வரர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உதவியை நன்றியுடன் இப்போது நினைக்கின்றேன்.

நாடகம் கிட்டத்தட்ட 115 முறை மேடையேறியது.

பின்னாளில், நடிகர் திலகம் நடிக்க "ஆனந்த கண்ணீர்" என்ற பெயரில்  திரைப்படமாய் வந்தது.

இப்போது சொல்லுங்கள்..இது வெற்றி நாடகமா? இல்லையா ? என்று.

எங்கள் அடுத்த நாடகத்தையும் பரத் எழுத செட்டில் புதுமையைச் செய்தோம்.அது என்ன?
அடுத்த பதிவில்

(தொடரும்)

Saturday, August 11, 2018

நாடகப்பணியில் நான் - 25

எங்களது இரண்டாவது நாடகத்திற்கு புது எழுத்தாளர் ஒருவரை அறிமுகப்படுத்த எண்ணினோம் என்று சொன்னேன் அல்லவா? அவர் யார் ?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், எஸ்பளனேட் கிளையில் சேதுராமன் என்பவர் வேலை செய்து வந்தார்.அவரைப் பற்றி அறிந்து அவரை நண்பனாக்கிக் கொண்டோம்.பின் அவர் ஒரு நாடகம் எழுதித் தயாராய் வைத்திருப்பதாகவும், அதை மேடையேற்ற ஒரு குழுவினைத் தேடுவதாகவும் அறிந்தோம்.

அவர் , ஒருநாள் மாலை 5 மணிக்கும் மேல் வந்து எங்களை அலுவலகத்தில் சந்தித்தார்.

அவரிடம் இருந்த ஸ்கிரிப்ட் "புதியதோர் உலகம் செய்வோம்".சிறந்த வசனங்களும், நிறைய நடிப்பிற்கான தேவையும் அந்த ஸ்கிரிப்டில் இருக்க அதையே மேடையேற்றத் தீர்மானித்தோம்.

அந்த சேதுராமன், பின்னாளில் மிகவும் புகழ் வாய்ந்த எழுத்தாளர் ஆன பரத் (இன்று ka.பரத்) ஆவார்.

எங்களது முந்தைய நாடகத்தில் நடித்தவர்களில் ஒருவிரல் கிருஷ்ணா ராவ் தவிர்த்து மற்றவர்கள் இதிலும் நடித்தனர்.ஆனால் தந்தையாக நடிக்க சரியான நடிகர் கிடைக்காமல் தேடினோம்.

அப்போதுதான் அந்த நடிகர் எங்கள் கண்களில் சிக்கினார்.
 அவர் எல் ஐ சி யில் வேலை செய்து வந்த சுப்ரமனியன் என்பவர்

இப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியாது.உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால்..
பல திரைப்படங்களில் தந்தை வேடத்தில் நடித்தவர்.துடிக்கும் கரங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, பாலைவனச் சோலை போன்ற படங்களில் நடித்தவர்.மணிபாரதி என கலையுலகினரால் அறியப்பட்டவர்

அவர் "புதியதோர் உலகம் செய்வோம்" நாடகத்தில் தந்தையின் வேடமேற்றார்
பின் அவர் சௌம்யா குழுவில் நிரந்தர உறுப்பினராக , எங்களது அடுத்தடுத்த நாடகங்களிலும் நடிக்கலானார்.

ஆமார், "புதியதோர்" நாட்கம் வெற்றி நாடகமா? அடுத்த பதிவில்

(தொடரும்)

Friday, August 10, 2018

நாடகப்பணியில் நான் - 24

1979ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள்..

எனது சௌம்யா நாடகக்குழுவினை ஸ்ரீபார்த்தசாரதி சபா அரங்கில் பிரபல நடிகர் அமரர் எம் கே ராதாஅவர்கள் குத்துவிளக்கினை ஏற்றித் தொடங்கி வைத்தார்.

டிசம்பர் 17 ஆம் நாள் முதல் நாடகம் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் ஆர் ஆர் சபா அரங்கில் அரங்கேறியது.

என்னுடன் பணிபுரிந்த நண்பரும் எஸ் வி சேகரின் குழுவில் நடித்து வந்த ஷங்கர் என்பவர் மற்றும் ரங்கராஜன் (ரங்காச்சு-பார்த்தசாரதி சபாவில் இன்றைய கமிட்டி உறுப்பினர்) ,பி எஸ் நாராயணன் (ரிசர்வ் பேங்) , ராமகிருஷ்ணன் (ராம்கி)  ஆகியோர் முக்கிய பங்கு ஏற்றனர்.

எங்களின் நண்பர் ஒருவர் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஒருவிரல் கிருஷ்ணா ராவை அறிமுகப்படுத்த அவரும், கமலா காமேஷும் முதல் நாடகத்தில் நடித்தனர்.காமேஷ்-ராஜாமணி இசை.

ஆமாம்..இதெல்லாம் சரி..கே கே ராமன் ஸ்கிரிப்ட் விஷயத்தில் அதிர்ச்சி அடைந்தோம் என்றீர்களே! அது என்ன ?என்ற வினாவிற்கு பதில் இல்லையே என் கிறீர்களா? சொல்கிறேன்..

தான் ஏற்கனவே ஒரு ஸ்கிரிப்ட் எழுதி அதை சிலமுறைகள் மேடையேற்றியுள்ளதாகவும், அதை மீண்டும் எங்களை மேடையேற்றிடச் சொன்னார்.


முதல்நாடகம்..ஏற்கனவே நடந்தது என சற்று யோசித்தோம்.ஆனால் ஸ்கிரிப்டைப் படித்ததுமே அதுதான் முதல் நாடகம் என தீர்மானித்து விட்டோம்.அவ்வளவு நகைச்சுவை

நாடகத்தின் தலைப்பை "யாரைத்தான் கொல்லுவதோ!" எனப் பெயரிட்டோம்.



பத்திரிகைகள், சபாக்கள் ஆதரவில் அந்நாடகம் 30 முறைகளுக்கு மேல் அரங்கேறியது.

அடுத்த நாடகத்தில் புது எழுத்தாளர் ஒருவரை அறிமுகப்படுத்த எண்ணினோம்..

அது முடிந்ததா..அந்த எழுத்தாளர் யார்? அடுத்த பதிவில்

Thursday, August 9, 2018

நாடகபப்ணியில் நான் - 23

எனது அம்பத்தூர் கல்சுரல் அகடெமி சபா மூடுவிழாவிற்குப் பிறகு..சில காலம் எதிலும் ஈடுபடவில்லை.

அந்தக் காலகட்டத்தில் என் தந்தையும், தாயும் ஒருவர்பின் ஒருவராக மரணத்தைத் தழுவினர்.
தன் வாழ்நாளில் அம்பத்தூரைவிட்டு வர மறுத்தவர் என் தந்தை.

அவரது மறைவிற்குப் பின் நான் மைலாப்பூர்வாசி ஆனேன்.
என் நண்பன் கணேஷ் பிரியதரிசினி என்ற நாடகக் குழுவை தன் நண்பர் பிரசன்னாவுடன் இணைந்து நடத்தி வந்தார்.
அவர் குழுவிற்கு கணேஷ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவ்வப்போது சென்று வந்தேன்.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸில் என் நாடகவுலக ஆசான் அமரர் ராஜகோபால் கேட்டுக்கொண்டதன் பெயரில் அங்கத்தினர் ஆனேன்.

என்னுடன் வங்கியில் திரு டி வி ஸ்ரீனிவாசன் என்பவர் அதிகாரியாய் இருந்தார்.அவரும் கார்த்திக்கில் அங்கத்தினர்.

ராஜகோபாலிடம் ஒருநாள், சென்னையில் மீண்டும் ஒரு சபா ஆரம்பிக்கும் எண்ணம் இருப்பதை ஒருநாள் தெரிவித்தேன்.

அதற்கு அவர்"உனக்குப் பைத்தியமா? ஏற்கனவே 150க்கும் மேல் சபாக்கள் இருக்கிறது..நாடகக்குழுக்கள் அதற்கேற்ற அளவிற்கு இல்லை..நீயே ஒரு குழு ஆரம்பித்து நாடகங்களை அரங்கேற்றம் செய்யேன்" என்றார். 
ஒருநாள் ராஜகோபால் என்னிடம் "ஏன்டா..உனக்குத்தான் நாடக அனுபவம் இருக்கிறதே, ஒரு நாடகக் குழுவை ஆரம்பியேன்" என்றார்.

அப்போது ஸ்ரீனிவாசனும் உடன் இருந்தார்.இருவரும் சேர்ந்து "சௌம்யா தியேட்டர்ஸ்:" என்னும் நாடகக் குழு ஒன்றினை ஆரம்பிக்க முடிவெடுத்தோம்.

முதல் நாடகம் யாரேனும் பிரபல எழுத்தாளருடையதாக இருந்தால் சிறப்பாய் இருக்கும் என எண்ணினோம்.அப்போது கே கே ராமன் எங்களுக்கு அறிமுகமானார்.

சிச்சுவேஷன் காமெடி எழுதுவதில் அரசனாய் இருந்த அவர் எங்களுக்கு ஒரு ஸ்கிரிப்ட் கொடுக்க இசைந்தார்.

ஆனால் கொடுப்பதாகச் சொன்ன ஸ்கிரிப்ட் கேட்டு நாங்கள் அதிர்ந்தோம்.

ஏன்? அடுத்த பதிவில்

(தொடரும்) 

Monday, August 6, 2018

நாடகப்பணியில் நான் - 22

எந்த ஒரு செயலுக்கும் ஆரம்பம் என்று ஒன்று இருக்கும் போது முடிவு என்று ஒன்றும் இருக்கும் அல்லவா?

அப்படி எனது சபாவும் மூடு விழாவினைக் கண்டது.

அது எப்படி என்று பார்ப்போம்...

அந்தச் சமயத்தில் ஜேசுதாஸ் அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி பரவலாக எல்லா இடங்களிலும் , எல்லா சபாக்களிலும் நடந்து வந்தது.மக்கள் அனைவரின் ஆதரவும் அமோகமாக இருந்தது அந்நிகழ்ச்சிகளுக்கு.

நானும் திரு டி வி கோபாலகிருஷ்ணன் மூலமாக ஜேசுதாஸின் மெல்லிசை நிகழ்ச்சியை அம்பத்தூரில் நடத்த தேதி வாங்கினேன்.

அம்பத்தூரில் நாடகங்கள் நடத்திவந்த அரங்கின் மேடையும், கொள்ளளவும் குறைவாக இருந்ததாலும், ஜேசுதாஸிற்கு அந்த நாளிலேயே 15000 சன்மானமாய் இருந்ததாலும், வெளியே திறந்தவெளி ஒன்றை அடைத்து, மேடையும் அமைத்து அதில் நிகழ்ச்சி நடத்தத் தீர்மானித்தேன்.இந்நிகழ்ச்சி மூலம் சபாவின் பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம் என எண்ணினேன்

எதிர்பார்த்ததிற்கு மேல் செலவு.டிக்கெட்டுகளும் விற்க ஆரம்பித்தேன்.பெரிய போஸ்டர்கள் அம்பத்தூரை அலங்கரித்தன.

அப்போதுதான்..நாம் நினைப்பதெல்லாம் நடப்பது இல்லை என இயற்கை எனக்கு உணர்த்தியது.

ஒரு அரசியல்கட்சி மலையாளிகள் என்ற பிரச்னையை அப்போது  கையில் எடுத்தது..அதற்குஜேசுதாசின் நிகழ்ச்சிகளும் விதி விலக்கல்ல.அவர் நிகழ்ச்சிகளில் விஷமிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர்.

இதனால் ஜேசுதாஸ் தான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை கேன்சல் செய்தார்.அதில் நானும் ஒருவன்.

இதன் மூலம் சபாவிற்கு மாபெரும் பின்னடைவு.சேமிப்பு எல்லாம் போயிற்று.தொடர்ந்து சில மாதங்களில் சபா நடத்தமுடியாமல் போயிற்று.

ஒருநாள்..

சபா நிர்வாகிகள் கூடி சபாவின் மூடுவிழாவினைத் தீர்மானித்தோம்.

எந்த ஒரு நேரத்திலும் அகலக்கால் வைக்கக்கூடாது என அந்நிகழ்ச்சி எனக்கு ஒரு படிப்பினையைத் தந்தது.

(தொடரும்)  

Sunday, August 5, 2018

நாடகப்பணியில் நான் - 21

இயக்குநர் ஸ்ரீதரின் "வெண்ணிறஆடை " திரைப்படம் மூலம் பல நடிகர்கள் அறிமுகமானார்கள்.

ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி (இதில் நிர்மலாவிற்கும், மூர்த்திக்கும் வெண்ணிறஆடை என்பது பெயருக்கு முன்னால் சேர்ந்தது பின்னாளில்) மற்றும் பிரபல நாடகநடிகர் டி எஸ் சேஷாத்திரி ஆகியோர் அறிமுகம்

இதில் சேஷாத்திரி அவர்கள் சாந்திநிகேதன் என்ற நாடகக்குழுவினை நடத்தி வந்தார்.

பிலஹரி என்னும் எழுத்தாளர் ஆனந்தவிகடனில் "நெஞ்சே நீ வாழ்க" என்று சிறுகதை ஒன்றை எழுதினார்.அச்சிறுகதையை முழுநேர நாடகமாக்கி அதற்கு "ஆலமரம்" என்று பெயரிட்டு அரங்கேற்றினார் சேஷாத்திரி.இந்நாடகம் மூலமே கோபு என்ற நடிகர் டைபிஸ்ட் கோபு என்று பிரபலம் அடைந்தவர்.

அந்நாடகம் "ஆலயம்" என்ற பெயரில் திரைப்படம் ஆயிற்று.மேடையில் சேஷாத்திரி ஏற்ற வேடத்தை திரையில் மேஜர் சுந்தரராஜன் ஏற்றார்.

நான் வேலை செய்து வந்த பேங்க் கட்டடத்திற்கு அடுத்த கட்டடத்தில்தான் சேஷாத்திரி வேலை செய்து வந்தார்.(அவர் குழுவில் நடித்து வந்த சைமன் என்னும் நடிகரும் அந்தக் கட்டிடத்தில் லிஃப்ட் மேனாக இருந்தவர்).அவரை மதிய உணவு இடைவேளையில் நான் அவ்வப்போது சந்தித்து பேசுவேன்.அக்கலைஞனுக்கு தான் ஏற்ற வேடத்தைத் தன்னால் திரையில் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் கடைசி வரை இருந்து வந்தது.இதை பலமுறை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டதுண்டு.

சேஷாத்திரி , நடிகர் ஏ வி ஏம் ராஜன், புஷ்பலதா நடிக்க பல நாடகங்களை மேடையேற்றினார்.அவர் நாடகங்களை நான் என் சபாவில் தொடர்ந்து நடத்தினேன்.

பின்னாளில் நான் சௌம்யா நாடகக்குழுவினை தொடங்கியபோது சேஷாத்திரி எனக்கு உதவினார்.அது எப்படி என பின்னர் சொல்கிறேன்.

இக்கலைஞனின் நட்பு  எனக்கு அவர் இறுதிகாலம் வரை தொடர்ந்தது

(தொடரும்)


Friday, August 3, 2018

நாடகப்பணியில் நான் - 20

பல பிரபலங்கள் நாடகங்களை எனது சபா மூலம் போட்டதில் பலர் நட்பினைப் பெற முடிந்தது.
130 க்கும் மேற்பட்ட சபாக்கள் இருந்த காலத்தில் ஃபெடெரேஷன் ஆஃப் சிடி சபாஸ் என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஆரம்பித்தனர்..அந்த நாளில் பிரபலமாய் இருந்த சபாக்களின் காரியதரிசிகள்.
சென்னை..கிழக்கு மெட்ராஸ், மேற்கு மெட்ராஸ், வடக்கு மெட்ராஸ்,தெற்கு மெட்ராஸ் என்று நாலு பிரிவாக்கி ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு செயலாளரும், ஒரு இணை செயலாளரும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

மேற்கு மெட்ராஸ் பகுதிக்கு நுங்கம்பாக்கம் செயலர் லயன் நடராஜனும், இணை செயலாளராக அம்பத்தூர் கல்சுரல் அகடெமியைச் சேர்ந்த நானும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

இந்த சங்கத்தின் முக்கிய பணி சபாக்களை கட்டிக்காத்து வளர்ப்பதே.

நாடகங்களை அரங்கேற்றும் ஒவ்வொரு குழுவும் இவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.ஒவ்வொரு குழுவிற்குமான சன்மானத்தொகையை இச் சங்கமே தீர்மானித்து, அனைத்து சபாக்களுக்கும் மாதம் ஒரு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கும்..

ஓ...சபாக்கள், நாடகங்களின் பொற்காலமான அக்காலம் திரும்புமா?

(தொடரும்)

Thursday, August 2, 2018

நாடகப்பணியில் நான் - 19

தமிழ்த் திரையுலகில் "பா" வரிசையில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க பல வெற்றி, வெள்ளிவிழா படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ பீம்சிங்.

அதில் படல படங்களுக்கு வசனம் எழுதியவர் எம்.எஸ் சோலைமலை என்பவர்.குறிப்பாக சொல்லவேண்டுமெனில் மாபெரும் வெற்றி காவியமான "பாவமன்னிப்பு" படத்தின் ,  கதை-வசனகர்த்தா எம் எஸ் சோலைமலை.

தயாரிப்பாளர் ஜி என் வேலுமணி, ஏ பீம்சிங் , எம் எஸ் விஸ்வநாதன், சோலைமலை இணைந்து ஆரம்பித்ததே புத்தா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம்.

சோலைமலை தயாரிப்பில் நகைச்சுவை சிகரம் ஆச்சி மனோரமா நாடகங்களில் நடித்து வந்தார்.

அவர் நடித்து, சோலைமலை கதை, வசனம்.,இயக்கத்தில் மேடையேறிய "கோல்டன் சிடி" நாடகத்தை அம்பத்தூரில் நடத்த அணுகியபோது, உடனடியாக ஒப்புக்கொண்ட சோலைமலை..சென்னையில் வழங்கும் சன்மானமே போதும் என வாங்கிக் கொண்டார்.தொழில்முறை கலைஞர்கள் அவர்கள்.ஆனாலும் பணம் பெரிதல்ல என்ற மனப்பன்மையைக் கொண்டிருந்தனர்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால்..பணத்தைவிட கலையை அதிகம் விரும்பியவர்கள் . அதனால்தான் இவர்களை இவர்கள் போற்றிய கலை கடைசிவரை கைவிடவில்லை.

கோல்டன் சிடி க்கு அடுத்து மனோரமா நடிக்க இவர் தயாரித்த நாடகம் "கமர்கெட் காத்தாயி". இந்நாடகமும் மாபெரும் வெற்றி நாடகம்.

சோலைமலையின் மகன் ராஜேந்திரன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.சோலைமலையின் மறைவிற்குப் பின் இவரும் மனோரமா நடிக்க பல நாடகங்களை நடத்தினார்.  

Wednesday, August 1, 2018

நாடகப்பணியில் நான் - 18

சென்னையில் அந்த காலகட்டத்தில் 150க்கும் மேற்பட்ட சபாக்கள் இயங்கி வந்தன..

சபாக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, "Federation of city Sabhas" என்ற அமைப்பினைத் தொடங்கினர்.நாடங்களுக்கு சன்மானம் தீர்மானம் செய்வது..சபாக்கள் எப்படி நடைபெறுகிறது, நாடகக் கலைஞர்களை பாராட்டுவது..போன்றவற்றை இந்த ஃபெடெரேஷன் கவனிக்கும்.

சென்னை நான்காக பிரிக்கப்பட்டது...வடக்கு, தெற்கு, கிழக்கு , மேற்கு என ஒவ்வொரு பிரிவிலும் 35க்கும் மேற்பட்ட சபாக்கள்.ஒவ்வொன்றிற்கும் ஒரு  செயலாளர், ஒரு இணைச்செயலாளர்.

மேற்கு சென்னைக்கு நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடெமி லயன் எஸ்.நடராஜன் செயலர்.நான் இணைச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.அப்படியெனில், அன்று என் சபா எவ்வளவு சக்தி வாய்ந்ததாய் இருந்தது என்பதை சொல்லவே இத் தகவலையும் தந்துள்ளேன்.

அடுத்து விஷயத்திற்கு வருகிறேன்..

1950களின் தொடக்கத்திலேயே வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார் ஒரு இளைஞர்.இது ஒரு செய்தியா? என வினவுவோருக்கு , கண்டிப்பாய் இது ஒரு முக்கிய செய்தியே! என்கிறேன்.

காரணம், அந்த நாளில் படித்தவர் அதிகம் ஈடுபடாதத் துறை நடிப்புத்துறை.அப்போதே முதுநிலை பட்டதாரியான இவர் (M.A.,) "ஏழை படும் பாடு" திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.இவர் அறியாத விஷயங்களே இல்லை எனலாம்.

நாடக வெறியரான இவர் தமிழ் நாடகங்களை மட்டுமல்ல, Madras Players என்ற பெயரில் பல ஆங்கில நாடகங்களையும் போட்டு நடித்தார்.

சென்னையில் ஒரு அரங்கை ஒருமாதம் வாடகைக்கு எடுத்து தினம் ஒரு நாடகம் நடத்தினார்.

ஆம்..அவர் வி கோபாலகிருஷ்ணன் என்பவர்.

அவர்தான் எங்களது சபாவை ஆரம்பித்து வைத்தார் என நான் முன்னதாகச் சொல்லியிருக்கிறேன் அல்லவா?

அவரது நாடகம் கே கே ராமன் எழுதிய ராஜயோகம்.அதை எங்கள் சபாவில் நடத்தினோம்.

நாடகத்தன்று மாலை 6-30 வரை அவர் வரவில்லை.இந்தநாள் போல தகவல் தொடர்பும் இல்லை.ரசிகர்கள் வர ஆரம்பித்து விட்டனர்.

6-45க்கு அவர் கார் வந்தது.ஷூட்டிங்கில் காலை முதல் மாட்டிக் கொண்டதாகச் சொல்லி தனது தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்தவர், "ராதாகிருஷ்ணன், எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா?காலையில் சாப்பிட்டது.நேரமாகிறது என சாப்பிடாமல் வந்துவிட்டேன்.ரொம்ப பசிக்கிறது.யாரையாவது அனுப்பி ஏதாவது டிஃபன் வாங்கி வரச்சொல்லமுடியுமா?" என்றார்.

என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு.

நாடகம் சற்று தாமதமாய் ஆரம்பித்தாலும் பரவாயில்லை என ஹோட்டலில் இருந்து டிஃபனை வரவழைத்து, அவர் சாப்பிட்டு முடித்ததுமே நாடகத்தைத் தொடங்கச் சொன்னேன்.