Friday, February 26, 2016

வள்ளுவன் வாக்குநமக்கு நெருங்கிய உறவினர்..அவர் நம்மிடம் மிகவும் அருமையாக உறவுடன் இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், மனதிற்குள்..நம்மைப் பற்றி வன்மம் பாராட்டுகிறார்..இப்படியிருப்பதால் நமக்கு என்றேனும் ஒருநாள் அவரால் கேடு உண்டாகும்..இதற்கு உதாரணம் சொல்வதானால்...இப்போதெல்லாம்  தண்ணீர் பாக்கெட் கிடைக்கிறது.வெயிலில் அலையும் நாம் தாகத்திற்கு அதை வாங்கி அருந்துகிறோம்.அது பார்க்க தெளிவாக, இனிமையாகத் தெரிந்தாலும்..அந்த நீர் சாக்கடைக்கு அருகில் இருக்கும் குழாய் ஒன்றிலிருந்து அப்படியே பிடித்து அடைக்கப் பட்ட கிருமிகள் அதிகம் உள்ள நீர்.இதை அருந்துவதால் தீமைதான் உடலுக்கு உண்டாகும்.அதே போன்றதுதான் சுற்றத்தினர் உட்பகையும்..தீங்கு விளைவிக்கும்.

இதையே உட்பகை என்னும் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்கிறார்...

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்நீர் என இரு இடங்களிலும், இன்னா என்பது நான்கு இடத்திலும் சொல்லி சொல் விளையாட்டு விளையாடுகிறார் வள்ளுவர்.

இதன் பொருள்- இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும் கூடக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்..

Tuesday, February 23, 2016

இருந்தால் நன்றாயிருக்கும்...(சிறுகதை)தன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ்.
கிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர்
ஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி
செய்து..டாக்டர் பட்டம் வாங்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு
ஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
அவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா'
'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன்.
பிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்'
ஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான்
ஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக.
'சரி..உன் ஆசையைக் கெடுப்பானேன்..நீ முயற்சி செய்..ஆனால் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் இருந்து வரும்
நம்பிக்கை கடவுள் பக்தி.எந்த ஒரு காரியத்திற்கும்..அது முதல் நம்பிக்கை ஆகும்'
'இல்லை சார்..நீங்கள் சொல்லும் அந்த நூற்றாண்டுகளில்..அதைப்பற்றி அபிப்ராயபேதங்களும்..இருந்திருக்கின்றன'
'குமார்..எனக்குத் தெரிந்தவரை..சிவன் பெரியதா..சக்தி பெரியதா..சைவம் பெரியதா..வைஷ்ணவம் பெரியதா..இப்படித்தான்
அபிப்பிராய பேதங்கள் இருந்திருக்கின்றன.நீ சொல்லும்..அந்த அடிப்படையிலேயே மறுப்பு சென்ற நூற்றாண்டில்தான்
ஏற்பட்டிருக்கிறது என நினைக்கின்றேன்'
'சார்..இது சம்பந்தமாக அனேக புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.கடவுளை மறுத்த பெரியாரின்
சிந்தனைகளையும் படித்து வருகின்றேன்..நாயன்மார்கள்..ஆழ்வார்கள் சொன்னதை படிக்கிறேன்..'
பேச்சை..திசைதிருப்ப எண்ணிய பேராசிரியர்'சரி..இப்போ உன்னைப் பற்றி சொல்.உனக்கு திருமணமாகிவிட்டதா,
குழந்தைகள் உண்டா?'
'சார்..எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இது நாள் வரை குழந்தைகள் இல்லை..இப்போதுதான் என் மனைவி
7 மாத கர்ப்பம்'என்றான்.
'பாராட்டுகள்' என்றார் பேராசிரியர்.
'ஏன் சார்..நீங்கள் சொல்லும் கடவுள் இருந்திருந்தால்..அந்த ராமர் கடவுள்தானே..அவர் ஏன் சிவ பக்தனான ராவணனை
அழிக்க வேண்டும்.சிவ பக்தனான ராவணனுக்கு சிவன் ஏன் முதலிலேயே அறிவுறித்தி பிறன் மனை விழையாமையை
உணர்த்தி..அவனை சீதை மேல் ஆசை வராமல் தடுத்திருக்கலாமே'
'அது இதிகாசம்..மேலும்..ராமர்..சீதை இவர்கள் பூமியில் அவதரித்ததுமே மனிதர்கள்.இறைவன் இல்லை'
'சரி அது போகட்டும்.தன் மாமன் கம்சனைக்கொல்ல ..கிருஷ்ணன் அவதரித்தான்..பின் அவனே பாண்டவர்களுடன்
சேர்ந்து கௌரவர்களை அழித்தான்..திரௌபதியை துகில் உரித்தபோது உடன் காப்பாற்றவரவில்லை.நீ என்னை முற்றிலும்
நம்பாமல் கைகளால் மறைத்திக்கொண்டிருந்தாய்.எப்போது என்னை நம்பி..கைகளை உயர்த்தினாயோ அப்போது உதவிக்கு வந்தேன்
என்பது..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒரு sadist என்று ஆகவில்லையா?'
'கடவுளை முழுவதுமாக நம்ப வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது'
ஏன் சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..என்பதற்காக திரௌபதி அப்படி
செய்திருக்கலாம்..இல்லையா?'
பேராசிரியர் இதற்கு பதில் கூற வாயைத்திறந்த போது ..குமாரின் அலைபேசி ஒலித்தது.
அதை இயக்கினான் குமார்'என்ன..அப்படியா?..இப்போதே வருகிறேன்' என்றவன்..'சார் என் மனைவிக்கு திடீரென உடல்னலம்
சரியில்லை..அவள் வயிற்றில் கரு அசையவே இல்லையாம்..உடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.பிறகு சந்திக்கிறேன்'என
விரைந்தான்.
பேராசிரியர் தலை ஆட்டினார்.
**** **** **** ****
இரண்டு..மூன்று மாதங்கள் ஓடி விட்டன
திரும்ப ..ஒரு நாள் கிருஷ்ணகுமார் அவரைப் பார்க்க வந்தான்.தன் ஆராய்ச்சித் தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என
அறிந்துக்கொள்ள.
'அது இருக்கட்டும்..உன் மனைவி எப்படி இருக்கிறாள்?குழந்தை பிறந்து விட்டதா?'
'அந்த ஆச்சர்யத்தை ஏன் கேட்கிறீர்கள்?உங்களிடம் வந்த அன்று அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்.
வயிற்றில் இருந்த சிசுவிற்கு மூச்சே இல்லை.மருத்துவர்கள் இறந்துவிட்டது என்றனர்.ஆனாலும் ஒரிரு நாட்கள் பார்க்கலாம் என்றனர்
மருத்துவர்கள்.அழுதபடியே வீட்டிற்கு வந்தவள்..இளையராஜாவின் திருவாசகத்தை வி.சி.டி.யில் ஓட விட்டாள்.அது ஒலிக்க..ஒலிக்க..
சிசு அசையத்தொடங்கியது.மருத்துவருக்கு விஷயத்தைச் சொல்ல..ஆச்சர்யப்பட்ட அவர்..தினமும் என் மனைவியை அதைக்
கேட்கச் சொன்னார்.போன வாரம் சுகப்பிரசவம்.பையன்'என்றான் உற்சாகத்துடன்.
ஆச்சரியம் அடைந்தார்..பேராசிரியர்..'ஏம்ப்பா இது எதனால் என்று நினைக்கிறாய்?''இது கடவுளின் அருள் என்று உனக்குத்
தோன்றவில்லையா?கடவுள் காப்பாத்திட்டாரு'என்றார்.
'அப்போ அதற்கு முன்னால்..அந்த சிசுவிற்கு..அந்த நிலை ஏற்பட்டது யாராலே?'பதில் கேள்விக் கேட்டான்.
'குமார்..பிரபஞ்சம் தான் கடவுள்.நேற்று அறியாததை இன்று அறியலாம்.இன்று அறியாததை நாளை அறியலாம்.
ஆனால்..எப்போதுமே அறிய முடியாதது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்..அது பிரபஞ்ச ரகசியம்.புரிந்துக் கொள்'
என்றார்.சற்றே குழம்பியவன்..'சரி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..இறைவன் என்று ஒருவன் தானே இருக்க
முடியும்..நீங்கள் பல கடவுள்களை சொல்கிறீர்களே?'
'குமார்..நீ..ஒருவன்..ஆனால் உன் பேற்றோருக்கு நீ மகன்..மனைவிக்கு கணவன்..தம்பிக்கு அண்ணன்..அண்ணனுக்கு
தம்பி..இப்படி இருக்கும்போது..அந்த கடவுள் பலருக்கு பல பெயரில் இருப்பது என்ன தப்பு'
சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல்..யோசித்தான் அவன்.
அதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்'இப்ப நீ கடவுள் இருக்கிறதை நம்புகிறாய் இல்லையா'என்றார்.
'இருந்தால்..நன்றாயிருக்கும்'என்றான்.

Saturday, February 20, 2016

ஆதலினால் அன்புடன் இருப்பீராக!காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

Thursday, February 18, 2016

நலம்...நலம் அறிய ஆவல்பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகளிலே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்துடன் நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா.

Wednesday, February 17, 2016

அரசு ஊழியர் வேலைநிறுத்தம்சாதாரணமாகவே பொது மக்களிடம் அரசு ஊழியர்க்கு ஆதரவு கிடையாது.
எந்தக் காரியம் நடக்க வேண்டுமானாலும் சம்திங் சம்திங் கொடுக்க வேண்டும்.
இது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஒன்று.
கேட்டால் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களிடம் பலிக்காது.அப்படியே பலிக்கும் என்று சொல்பவர்கள் இருந்தால் ஒரு விழுக்காடு இருக்கலாம்.
இந்நிலையில், இந்த அரசின் காலம் முடியும் நேரத்தில், அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்களின் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் எல்லாம், தவறாகவே பார்க்கப்படும். இதனால் கொஞ்ச நஞ்ச ஆதரவு மக்களிடையே இருந்தாலும், அது மாறும்.
ஆகவே...அனைத்து சாராரும்...போராட்டங்கள் செய்வதையெல்லாம் நிறுத்திவிட்டு...இந்த அரசு பிடிக்கவில்லையெனில், ஜனநாயக முறைப்படி வரும் தேர்தலில் தூக்கி எறியட்டும்.
அதைவிடுத்து, போராட்டங்கள் செய்வதெல்லாம், அனுதாப அலைகளை உருவாக்கி, இந்த அரசுக்கு ஆதரவாகவே அமையும்  . 

Tuesday, February 16, 2016

பேசும் முன் யோசியுங்கள்


தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..

தவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...

உதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...

வழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றிவிட்டது.

அடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி?' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக்கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.

அடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை ஒரு ரூபாய் இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் ஒரு ரூபாயை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.

இப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.

முடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.

Monday, February 15, 2016

கருத்துக் கணிப்புகள்இந்தக் கருத்துக் கணிப்புகள்...துல்லியமாய் இருக்கும் என் சொல்லமுடியாது.

சுமார் ஐந்தரைக் கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அதில் 5000 பேரிடம் கருத்துக் கேட்டு, இந்தக் கட்சிக்கு ஆதரவு..அந்தக் கட்சிக்கு ஆதரவு என்றெல்லாம் சொல்வது மக்களை திசை திருப்புவது போலத்தான்.

பிகாரில், சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாபகம் இருக்கிறதா...

பிஜேபி யே வெல்லும் எனக் கருத்துக் கணிப்புகள் சொல்லியது.வாக்குகள் எண்ணத் தொடங்கி சில மணிகளில், பிஜேபி அதிக இடங்களில் முன்னணியில் இருந்ததால், அக்கட்சியினர் வெற்றி உறுதி என பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி வெற்றியைக் கொண்டாடினர்.

ஆனால்....வாக்குகள் எண்ணப்பட, எண்ணப்ப்ட ..பிஜேபி பரிதாபத் தோல்வியும், நிதீஷ்-லாலூ கூட்டணி மகத்தான வெற்றியும் பெற்றது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்....

கருத்துக் கணிப்புகள் எல்லாம், யாரையாவது திருப்தி படுத்தவே எடுக்கப் படுவதாகத் தோன்றுகிறது.

இது உண்மை என அத்தலைவர்களுக்கும் தெரியும்.

இதனால், மக்கள் நிலைப்பாட்டையும் மாற்றமுடியாது.  இதுவும் அவர்களுக்கு தெரியும்.

கடைசியாக யாரோடு யார் கூட்டணி வைத்தாலும்....எக்கட்சியும் சேராது...தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் மக்கள் கையிலேயே வெற்றி..தோல்வியைத் தீர்மானிக்கும் திறன் உள்ளது.

இதுதான் உண்மை 

Sunday, February 14, 2016

தி.மு.க.,. காங்கிரஸ் கூட்டணி


இது சரியா...தவறா என பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் சுட்டிக் காட்டி சில ஊடகங்களும், முகநூல் நண்பர்களும், டுவிட்டர் செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன.
இவர்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
எதிரிக்கு..எதிரி நண்பன் என்பார்கள்.
இப்போது அனைத்துக் கட்சிகளும் முதல் எதிரியாய் நினைப்பது அதிமுக வைத்தான்.அந்த எதிரியை வீழ்த்த கட்சிகள் அவரவர்க்கேற்ப வியூகங்களை வகுத்து வருகின்றன.திமுக ...காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் நிலைப்பாடை எடுத்துள்ளது.
வீம்புக்காவது, நான் தனித்து நிற்பேன்...வெல்லுவேன் என்பதெல்லாம் , காகிதத்தில் வெல்லம் என எழுதி, அது இனிப்பாய் இருக்கிறதா...என நக்குவதைப் போலத்தான்.
திமுக ஆதரவாளனான எனக்கும் ...திமுகவின் இந்த நிலைப்பாடு மனவலியைத்தான் கொடுக்கிறது.
ஆனால்...மீண்டும் ஆட்சியைக் கைப்பிடிக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட முடிவுகள் தவிர்க்க முடியாது.
அரசியல் கட்சி என்ற நிலைப்பாடு ஒன்றை எண்ணினால் கலைஞரின் இந்த முடிவு சரியானதாகத்தான் தோன்றும்.
(சிபிஎம் காங்கிரஸுடன் கூட்டணி மேற்கு வங்கத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இங்கு ஒரு நிலைப்பாடு...அந்த மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு.ஏன்?
அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப் படுகிறது அரசியல் கட்சிகளால்.திமுகவும் ஒரு அரசியல் கட்சிதானே!)

Wednesday, February 3, 2016

படித்ததில் பிடித்ததுஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப் பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.

அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன். 'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும் முயற்சிக்கிறேன்'னான். 'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட 'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?" ன்னாரு.

மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு "சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி தெரியலை' ன்னான்.

அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு தெரியலை' ன்னான்.

சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும் சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.

அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம் என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு, 'உன் அறிவை மெச்சுகிறேன்..இந்தா என்னுடைய விலையுயர்ந்த  முத்துமாலை' னு பரிசளித்தான்.

ஆனா மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத் தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு இப்போ தோணுது' என்றான்.

அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே இல்லையே.." என்றார்.

அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான்  இருந்தாலும் அந்த ஒளியைப் பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா? அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட உயர்வானதுன்னு தோணுது.

கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா? கிடைச்சாலும் தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட அதுதான் உயர்வானதுன்னு தோணுது..

தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்தி மலர்தான்.ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும் ஆடைகள்த்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில் மக்களுக்கு பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்

அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.