Tuesday, October 27, 2009

உன்னுடன் வாழ்வது அரிது...

பராசக்தி படத்தில்..எஸ்.எஸ்.ஆர்., பர்மாவிலிருந்து இந்தியா வந்து இறங்கியதுமே..கேட்கிற முதல் குரல்..'ஐயா..பசிக்குது..'ங்கற பிச்சைக்கார குரல் என்பார்.

எல்லாமே வயத்துக்குத்தான்..வயிறு..இதனால்தான் இனச்சண்டை..ஏற்றத்தாழ்வு, லஞ்சம்,சுரண்டல் எல்லாம்..இரண்டாம் உலகப் போர் முடிந்ததும்..நாட்டில் எங்கும் பஞ்சம்..உண்ண உணவில்லை..ரேஷன் முறை அறிமுகப் படுத்தப்பட்டு..கோதுமை வழங்கப்பட்டதாம்..அதைத்தான் அப்போது ஒரு படத்தின் பாடலில் கூறும் விதமாக...

ஒரு ஜான் வயிறே இல்லாட்டா..இந்த உலகினில் ஏது கலாட்டா..உணவுப் பஞ்சமே வராட்டா..உயிரை வாங்குமா பரோட்டா...என்று பாடியிருக்கிறார்கள்.

பசி வந்திட பத்தும் போம்..என்பது பழமொழி...கல்யாண வீடுகளில்..பந்திக்கு முந்திக் கொள்..என்பார்கள்..பிந்திக் கொண்டால்..முன்னால் முந்தியவர்கள் மீதம் வைத்திருந்தால் உண்டு.கலைகளில் சிறந்தவன் ராமன் என்பார்கள்..அதுபோல் சாப்பிடுவதில் எக்ஸ்பர்ட் சாப்பாட்டு ராமன் ஆவான்.

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

வயிற்றுப் பிரச்னைதான் எல்லா நோயின் மூலகாரணமாயும் அமைகிறது..நல்ல ஜீரண சக்தி வேண்டும்.நம் மார்புக்கும்..வயிற்றுக்கும் இடையே உள்ளது உதரவிதானம்..இது ஒரு தசை..இதன் கீழ் உணவுக்குழாயில் இருந்துதான் வயிறு ஆரம்பிக்கிறது.அதன் கீழ் மறுமுனை சிறுகுடலில் இணைகிறது.வயிற்றுக்குள் உணவு வந்ததுமே..அது இயங்க ஆரம்பித்து விடுகிறது.அதில் சுரக்கும் அமிலம் சத்துக்களை பிரித்தெடுத்து..நம் நம் உடலின் தேவையான உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

முறையான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களுக்கு நெஞ்சு எரிச்சல்,அஜீரணம்,வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் வந்து உணவுப்பாதையை பாதிக்கும்..உடலில் சுறு சுறுப்பு இருக்காது..

அளவுக்கு மீறிய உணவு,ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை,கண்ட நேரத்தில் உணவு உண்ணும் வழக்கம்..ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்றை மட்டும்தான் திருப்தி படுத்த முடியும் எனக் கூறுவார்கள்.ஒரு வேளைக்கு அதிகமான உணவை அது ஒரே சமயத்தில் எதிர்ப்பார்க்காது..அதனால் தான்..ஔவை ஒரு பாடலில் கூறினார்..

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும்
எந்நோய் அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது

இன்று நல்ல உணவு கிடைக்கிறது..நாளைக்கு கிடைக்குமோ..கிடைக்காதோ..அதற்கும் சேர்த்து உண்டுவிடலாம் என்றால் முடியாது.சரி இன்று உணவுகிடைக்கவில்லை..பொறுத்துக்கொள் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றால் பொறுத்துக்கொள்ளாது.எனது நிலை அறியாமல்..எனக்கு துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் என் வயிறே..உன்னுடன் வாழ்வது மிகவும் கடினம்..என்று பொருள் படும் .

2 comments:

க.பாலாசி said...

//கண்தானம் தெரிவதற்கு முன்னால்..தானத்தில் சிறந்தது அன்னதானமாய் இருந்தது..//

இன்றும் சிறந்தது அன்னதானம்தான். அதில் மாற்றுகருத்தில்லை என்றே எண்ணுகிறேன்.

தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதிதான் சொல்லியிருக்கார்னு நினைக்கிறேன். அது மாதிரி உணவு என்பது மனிதனின் மிக முக்கிய அத்தியாவசிய தேவை.

ஒளவையார் பாடலும் அதற்கான தங்களின் விளக்கமும் அருமை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

இப்போது ஒலிக்கும் வாசகம் தானத்தில் சிறந்தது கண்தானம் என்பதாகும்...அதைச் சுட்டிக்காட்டவே அப்படி எழுதினேன்.