Monday, July 14, 2008

சுப்பு தாத்தாவின் திரை விமரிசனம்

சுப்பு தாத்தா படம் பார்ப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆயிற்றாம்.அவரிடம் நீங்கள் பார்த்த கடைசி படம் என்ன?
என்று கேட்க ..அதைப்பற்றி ஒரு விமரிசனமே எழுதிக்கொடுத்து விட்டார்.
சமீபத்தில் வி.சி.கணேசன் நடித்து வெளிவந்த தூக்குத்தூக்கி என்ற படத்தில் திருவாங்கூர் சகோதரிகளான..லலிதா,
பத்மினி,ராகினி மூவரும் நடித்துள்ளனர்.கதாநாயகன் ஒரு நாள் அறிஞர்கள் சபையில் கீழ்கண்ட வற்றைகேள்விப்படுகின்றான்.
'கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்'
உடனே அவற்றை பொய் என நீரூபிப்பேன் என சூளுரைத்து கிளம்புகின்றான்.ஆனால் நடந்தது என்ன?
தந்தையால்..வீட்டை விட்டு வாளாயிருப்பதால் விரட்டப் படுகிறான்..தாயோ கண்ணீர் விடுகிறாள்.
தன் சகோதரிவீடு சென்றவன் அன்பாக வரவேற்கப்படுகின்றான்.வெள்ளித்தட்டில் சாப்பாடு.
ஆனால்..அவன் தனக்கு எந்த சீரும் கொண்டுவரவில்லை என்று எண்ணி அடுத்தாநாள் வாழையிலையில் சாப்பாடு.
அடுத்த நாள் மந்தார இலையில் என அவமானப்படுத்தப் படுகின்றான்.தான் கொண்டு வந்திருந்த பொருளைக்காட்டி,
அவளது குணத்தை ஏசி வெளியேறுகிறான்.
அவன் இல்லாத வேளையில் அவன் மனைவி லலிதாவிற்கு ஒரு பனக்கார மார்வாடி சிநேகம் ஏற்பட..அவனுடன் சேர்ந்து கணவனை கொலை
செய்ய திட்டமிடுகிறாள்.மார்வாடியாக வரும் டி.ஸ்.பாலையா...'ப்யாரி நிம்பல்கி நும்பல் மேல மஜா"என பாடி நடிப்பில் அட்டகாசப் படுத்துகிறார்.
பின் கதாநாயகன் மீது கொலை குற்றம் சாட்டப்படுகின்றது.ராஜ சபையில் வந்து..அவன் உயிரை காப்பாற்றுகிறான் அவன் நண்பன்.
கடைசியில் அறிஞர்கள் சொன்ன அனைத்தும் உண்மை என உணர்கிறான் .
மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில்..அனைத்து பாடல்களும் அருமை.டி.எம்.எஸ்.குரலில் ஒளித்த 'பெண்களை நம்பாதே'''ஏறாத மலைதனிலே"
'சுந்தரி சௌந்தரி'அபாய அறிவிப்பு" 'ஏலம்..ஏலம்"மற்றும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்'.
இப்ப்டத்தில் பத்மினி மிகவும் அழகாக இருப்பார்..என பொக்கை வாய் ஜொள்ளுவிட சுப்பு தாத்தா சொல்ல..இடையில் புகுந்த எச்சுமி பாட்டி
சிவாஜி மட்டுமென்ன சும்மாவா?குறு..குறுன்னு அழகாய் இருப்பார் என்றாள்.

8 comments:

சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்வ்.... வேணாம்... இத்தோட நிறுத்திக்குவோம்... அழுதுடுவேன்...

துளசி கோபால் said...

பாட்டுகளை எல்லாம் சொல்லாம விட்டுருவாரோன்னு நினைச்சுப் பயந்தேன்.

//இடையில் புகுந்த எச்சுமி பாட்டி
சிவாஜி மட்டுமென்ன சும்மாவா?குறு..குறுன்னு அழகாய் இருப்பார் என்றாள்.//

ஆமாம் அப்ப சுப்புத்தாத்தாவுக்கு எச்சுமிப்பாட்டியா?

நான் மீனாட்சிப் பாட்டின்னு தப்பா நினைச்சுக்கிட்டேனோ? :-))))

Kanchana Radhakrishnan said...

ச்சின்னைப்பையன் வேணாம்னு சொல்றார்னு சுப்பு தாத்தாகிட்ட சொன்னேன்..அவர் இதற்காகவே அடுத்து
ஒரு விமரிசனம் எழுதப்போறாராம்.

Kanchana Radhakrishnan said...

துளசி கோபால் அவர்களே..மீனாட்சி பாட்டி பற்றி கேட்டேன்.எச்சுமி பாட்டி பெயர் தான் மீனாட்சியாம்..அவரை கல்யாணம் பண்ணி வந்ததும் தாத்தாதான் லட்சுமின்னு பெயர் மாத்தினாராம்.
அதுவே எச்சுமின்னு ஆயிடுச்சாம்.அது எப்படி அவங்களுக்கு தெரியும்னு ஆச்சர்யப்பட்டுப்போனார்.

சகாதேவன் said...

தூக்குதூக்கி பற்றி ஒரு தகவல்.
சிவாஜி, சிதம்பரம் ஜெயராமனே பாட்டு எல்லாம் பாடவேண்டும் என்று எண்ணினாராம்.
இசை டைரக்டர் ஜி.ராமநாதன் அவரிடம், மதுரைப் பையன் ஒருவன் இருக்கிறான். அவன் பாடி ஒருமுறை கேளுங்கள். பிடித்திருந்தால் சொல்லுங்கள் என்றாராம். அப்படி பிரபலமானவர்தான் டி.எம்.செளந்தரராஜன்.
சகாதேவன்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சகாதேவன்..நீங்க சொன்னதை தாத்தா கிட்டே கேட்டேன்.உடனே பொக்கை வாய்ல சிரிப்பு.
ஜி.ராமநாதனை மறக்காத உங்களுக்கு நன்றி சொன்னார்.இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு?
திரைஉலகம் தன் தொண்டை(?!) என்றுமே சரியானபடி பாராட்டியதில்லை என்ற வருத்தம் டி.எம்.எஸ்.க்கு உண்டாம்.
அவர் பாடியகாலத்தில் சிவாஜி நன்றாகப்பாடினார்,எம்.ஜி.ஆர்.நன்றாகப்பாடினார் என்றுதான் ரசிகர்கள் கூறுவார்களாம்.
ஆனால் இன்றோ..ஹரிஹரன் பாடறார்..சங்கர் மஹாதேவன் பாடறார்னு சொல்றாங்களாம்.
தாத்தா சொல்றார்..எது எப்படியானாலும்..டி.எம்.எஸ்.மாதிரி வராதுன்னு.

thamizhparavai said...

இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதுன்னு தெரியல.. அந்தப் பக்கம் தசாவதாரம்ன்னா ,இந்தப் பக்கம் தூக்குத்தூக்கி.. என்ன கொடுமைங்க இதெல்லாம்....

Kanchana Radhakrishnan said...

ரொம்ப பேசினா தாத்தாவை ஹரிதாஸ் விமரிசனம் கேட்டுடுவேன்.
வருகைக்கு நன்றி