Tuesday, April 10, 2012

பேருந்து கட்டண உயர்வும்..பயணிகள் படும் பாடும்...




பல ஆண்டுகளாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவில்லையென...எல்லா ஆண்டுகளையும் சேர்த்து ஒரேயடியாக கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஒரு பக்கம் என்றாலும்..அப்பாவி மக்கள் நடத்துநர்களிடம் படும் அவஸ்தை இருக்கிறதே..அதைச் சொல்லி மாளாது.

கட்டண உயர்வுக்கு முன் நடத்துநர்கள் 50 காசு சில்லறையை பெரும்பாலும் கொடுத்ததில்லை.பயணிகளும் கேட்கத் தயங்கி விட்டுக் கொடுப்பதும் உண்டு.மீறிக் கேட்டால்..இறக்கி விட்டுவிடுவார்களோ என்ற பயம்.சில நடத்துநர்கள் பயணிகளை அர்ச்சனை செய்வதும் உண்டு.அப்போதெல்லாம் கட்டணத்தை 50 காசுக்கு பதிலாக ஒரு ரூபாய் என அமைத்தால் அதிகக் கட்டணம் அரசுக்காவது போகுமே என பெரும்பாலானவர்கள் சொன்னதுண்டு.

ஆனால் இப்போது எல்லாக் கட்டணமும்  ரூபாயளவிற்கு உயர்த்தப்பட்டாலும்..இப்போதும் சில்லறைப் பிரச்னை வேறு விதத்தில் தொடர்கிறது.

ஆறு ரூபாய் டிக்கட்டிற்கு 10 ரூபாய் கொடுத்தால்..நடத்துநர் ஒரு ரூபாய் இருக்கிறதா..என்கிறார்..அப்போதுதான் 5 ரூபாயாக திருப்ப முடியுமாம்.இல்லை என்றால் அர்ச்சனை தான்.அல்லது ஒரு 2 ரூபாயைக் கொடுத்துவிட்டு, இறங்கும் போது மற்ற ஒரு பயணிக்கு ஒரு ரூபாய் கொடுக்கச் சொல்லிவிடுகிறார்கள்.

தவிர்த்து..இது போன்ற அட்டூழியங்கள்...அதிகமாக..சென்ட்ரலிலிருந்து கிளம்பும் பேருந்துகளில் நடக்கிறது.பாவம்..பெட்டி படுக்கையுடன் ஏறும் பயணி மீதம் கேட்பதே இல்லை.

இதையெல்லாம் விடுங்கள் ஜம்பிங்க் ஸ்டேஜ் கேள்விபட்டிருக்கிறீர்களா...இல்லையா..இப்போது தெரிந்து கொள்ளுங்கள்..

உதாரணத்திற்கு..12நம்பர் பேருந்தில்..விவேகானந்தா காலேஜ் நிறுத்தத்தில் ஏறி..அடுத்த நிறுத்தமான வள்ளுவர் சிலை ஸ்டாப்பிற்கு..கட்டணம் 4 ரூபாய்..அடுத்த ஸ்டாப்பில் இறங்க நாலு ரூபாயா..என நடத்துநரிடம் கேட்டால்..லஸ் ஒரு ஸ்டேஜ் என்கிறார்.லஸ் தான் இந்த பஸ் போகாதே என்றால்..போகாதுதான்..ஆனால் அது ஒரு ஜம்பிங் ஸ்டேஜ் என்கிறார்,

பெசண்ட் நகர் சர்ச் ஸ்டாப்பிங்கில் 6டி பேருந்தில் ஏறி பீச் ஸ்டேஷன் டிக்கெட் வாங்கினால் (சொகுசு) முதல் நாள் ஒருவர் 13 ரூபாய் வாங்கினார்.அடுத்த நாள் வேறு ஒரு நடத்துநர் 15 ரூபாய் வாங்குகிறார்.

இதுபோல இன்னமும் பல வினோதங்கள் இந்த பஸ் கட்டண உயர்வில் நடைபெறுகிறது.

எதிர்த்து கேட்க பொதுஜனம் பயப்படுகிறது.

பேருந்து கட்டணம்

1 comment:

வவ்வால் said...

டி.வி சார்,

நேற்று தான் இந்த ஸ்டேஜ் கோல்மால் பற்றி ஒருப்பதிவில் பின்னூட்டம் போட்டேன்.

மாநகரப்பேருந்தில் ரூ 1,அ 2 என அடிக்கிறார்கள், தொலை தூரப்பேருந்துகளில் பல மடங்கு அடிக்கிறார்கள்.

அச்சிரப்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறினால் திண்டிவனம் -சென்னைக்கட்டணம் தான். ஸ்டேஜ் திண்டிவனம் தானாம். எதாவது கேட்டால் இங்கே நிறுத்தி ஏத்துனதே தப்பு இறங்கு என்று நடத்துனர் வானாளாவிய அதிகாரம் காட்டுவார்.

கி.மீ க்கு இவ்வளவு என்பதெல்லாம் கண் துடைப்பே.