Monday, August 6, 2012

தொடர்கதை.. (சிறுகதை)


நுனி இலையில் சாதம் மலைபோல வெடித்து கொட்டப்பட்டிருந்தது. அதைச்சுற்றி விதவிதமான பதார்த்தங்கள்.ஆனால் எதிலும் உப்பில்லை.

லேமினேட் செய்யப்பட்டிருந்த..படத்தில்..மாலையுடன்..அந்த இலையையும்,அதனருகே ஏற்றிவைத்திருந்த குத்துவிளக்கையும் பார்த்துக் கொண்டிருந்தார் சபேசன்..

'சபேசனின் ஆவி வந்து..இந்த படையலை சாப்பிட்டுவிட்டு..போங்கடா..நீங்களும்..உங்க சாப்பாடும் என வெறுத்து பூஉலகை விட்டு ஒடிவிடும்..'என்று சாஸ்திரிகள் சொல்லியபடியே..'அம்மா..நீங்கக் கூட வந்து பரிமாறலாம்' என்றார் மதுரத்திடம்.

மாட்டேன்..என்று தலையை ஆட்டி..மறுப்பு சொன்ன மதுரம்..'என்னங்க..நான் எப்படி சமைச்சுப் போட்டாலும்..நல்லாயிருக்குன்னு..நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடுவீங்களே.. ..இப்படிப்பட்ட சாப்பாட்டை நான் போடமாட்டேன்'..ஆறடி சபேசனாக உலா வந்தவரான சபேஸனின்..ஓரடி படத்திடம் புலம்பினாள்.

சபேசனின்..காரியங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.சாஸ்திரிகள் யாருக்கும் புரியாத..சமஸ்கிருதத்தில்..மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்க..மகன்கள் இருவரும்..அரைகுறையாக அவற்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.அதற்குள்..சபேசன் பற்றி நாமும் சற்று தெரிந்துக் கொள்வோம்.

சபேசன்....ஒரு தனியார் நிறுவனத்தில்..எழுத்தராக வேலை செய்து வந்தார்.ஆண் குழந்தை ஒன்று..பெண் குழந்தை ஒன்று.போனால் போகிறது..வேண்டாம் என நினைத்தும்..கொசுறாக இன்னொரு மகனும் பிறந்தான்.

ஆக..மூன்று குழந்தைகளுடன்..அவருக்கு வரும் சொற்ப சம்பளத்தில்..வாய்க்கும்..வயிற்றுக்குமான சண்டையுடன் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.ஆனாலும்..தம்மால் குழந்தைகளுக்கு எந்த சொத்தும் வைக்க முடியாது..என்பதால்..கல்வி சொத்தையாவது கொடுக்கலாம்..என தன் தகுதிக்கு மீறி மூத்தவனை..இஞ்சினீரிங்க படிக்க வைத்தார்.

பி.ஈ., மூன்றாம் ஆண்டின் போதே..காம்பஸ் இண்டெர்வியூவில்..பெங்களுருவில் உள்ள மென்பொருள்துறை கம்பெனி ஒன்று..இவனைத் தேர்ந்தெடுத்தது.

கை நிறைய சம்பளம்..இனி வாழ்வில் சற்று வசதியாய் இருக்கலாம்..என அவர் எண்ணியபோது...அவனிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வந்தது.

அதில்..அவனுடன் வேலை செய்யும்..சுதாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும்..அவனை மன்னிக்கும் படியும் எழுதி இருந்தான்.மேலும்..இருவருக்கும் கிடைக்கும் சம்பளத்தை கணக்கிட்டு...அலுவலகம் அருகிலேயே..ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டதாகவும்..அதன் மாதாந்திர தவணைத்தொகையே 30000க்கு மேல் ஆவதால்..குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாக எழுதி இருந்தான்.

கடிதம் கண்ட மதுரம்..நிலைகுலைந்து விட்டாள்...சபேசனோ..'மதுரம் கவலைப்படாதே!..ஆண்டவன்..நமக்கு சோதனையைக் கொடுத்தாலும்...இரு கைகளையும் கொடுத்திருக்கிறான்..கடைசிவரை உழைக்க" என்றார்...மேலும்..'நம் கையிலேயே ஐந்து விரல்களும்..ஒன்றாகவா இருக்கின்றன..நம்ம கடமையைச் செய்தோம்..அதற்கு பலனை எதிர்ப்பார்த்தது தவறு'என ஆறுதல் கூறினார்.தன் மனவருத்தத்தை வெளிக்காட்டாது.

இப்போது..அவர் கவனம்..அடுத்த பையன் மீது சென்றது...அவனையும்..நன்கு படிக்கவைத்தார்.அவனும் ஐ.ஏ.எஸ்.,தேறினான்.தில்லியில் வேலை.ஆனால் அவன் நடத்தையும்..முதல் மகனே பரவாயில்லை என்பதாய் இருந்தது.

முதல் மகனாவது..கல்யாணத்திற்கு முன் தந்தைக்கு தெரிவித்தான்.ஆனால்..இவனோ..திடீரென ஒரு நாள்..ஒரு பஞ்சாபி பெண்ணுடன் வந்தான்.அவளைத் திருமணம் செய்துவிட்டதாகக் கூறி..அலுவலக வேலை நிமித்தம் சென்னை வந்துள்ளதாகவும்..உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறிவிட்டு , கிளம்பிவிட்டான்.

இந்நிலையில் சபேசன்..வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.தனது முடிவுக்கு முன்னால்..தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து..தனக்கு வந்த ஓய்வு ஊதியத்தில்..தன் மகளின் திருமணத்தை முடித்தார். 

பின்..தங்களில் எஞ்சிய வாழ்நாளை எப்படித் தள்ளுவது..என்ற கவலை ஏற்பட..ஒரு வக்கீல் இடத்தில் டைபிஸ்ட் வேலை கிடைத்தது.அதில் வரும் வருமானம்...இருவர் வாழ்க்கையை ஓட்டவே சரியாய் இருந்தது.

சிலநாட்களாக..சபேசனுக்கு..கண் மார்வை மங்க ஆரம்பிக்க..கண் மருத்துவர் ஒருவரிடம் சென்றார்.இவர் கண்களை பரிசோதித்துவிட்டு..கேடராட் இருப்பதாகவும்...உட்னே அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறினார்..அதற்கு சில ஆயிரங்கள் ஆகும் என்றும் கூறினார்.

கணவருக்குத் தெரியாமல்..இரு மகன்களுக்கும் கடிதம் எழுதினாள் மதுரம்..அதில்..உங்களுக்கு கல்வி ஒளி வழங்கியவருக்கு..கண்ணொளி வழங்குங்கள் என வேண்டினாள்.

வழக்கம் போல..இருவரும் ஏதேதோ சாக்கு கூறி..தங்களால் தற்போது இயலாது..என கூறிவிட்டனர்.

ஒருநாள் கண் சரியே தெரியாது..கத்திரி வெயிலில்..கால்கள் கொப்பளிக்க, வேக வேகமாக சாலையைக் கடக்கும் போது..வேகமாக வந்த பேருந்தில் அடிபட்டார்..மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே மரணம் அவரைத் தழுவியது.

அப்பா...உயிருடன் இருந்த போது..அவரை நல்லபடியாக..வைத்து காப்பாற்றத் தெரியாத..மக்கள்..அவர் இறந்ததும்..காரியங்களில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்று தீர்மானித்தனர்.

சபேசன் ஆவி போகும் வழியில்...தாகத்தால் தவிக்கக்கூடாது என கோ தானம் செய்யப்பட்டது..

வெயில் காலங்களிலும் வெறும் கால்களோடு நடந்தவரின் பாதங்களை கற்கள்..முற்களிடம் இருந்து காப்பாற்ற செருப்பு தானம் செய்யப்பட்டது.

உயிருடன் இருந்த போது கண்ணொளிக்கு உதவாதவர்கள்..போகும் வழியில் அவர் ஆவி தடுமாறக் கூடாது என விளக்குகள் தானம் செய்தனர்.

போகும் வழியில்..மழை ,வெயிலிலிருந்து காக்க..குடை தானம் செய்யப்படுகிறது..

போங்கடா..நீங்களும் உங்க தானங்களும்..எனக்கு ஏதும் தேவையில்லை..என படத்திலிருந்த அவர் சொல்வது மதுரத்திற்கு மட்டுமே கேட்டது.

இது போன்ற சபேசன் கதைகள்..என்றுமே தொடர்கதைகள்தான்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு படம் பார்த்த அனுபவம் கிடைத்தது...

நாட்டில் நடக்கும் உண்மை தான்...
நீங்கள் சொல்வது போல் தொடர்கதை தான்...

பகிர்வுக்கு நன்றி...

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

திண்டுக்கல் தனபாலன் said...

(T.M.2)

சாந்தி மாரியப்பன் said...

இருக்கும்போது கஞ்சி ஊத்தாம தவிக்க விட்டுட்டு இறந்தப்புறம் பாயசம் வெச்சுப் படைக்கற இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்யறாங்க..