தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும்வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவிகூறியது.)
பாலை திணை - பாடலாசிரியர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்
இனி பாடல்-
அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே
யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே
அன்ன ளளிய ளென்னாது மாமழை
இன்னும் பெய்ய முழங்கி
மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே.
-கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.
தோழி, தலைவர், கேடில்லாத உயர்ந்த செல்வத்தை, கொணரும் பொருட்டு, பச்சை இலைகளை உடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்; நான்--, தொகுதியார்ந்த விளக்கத்தைஉடைய வளைகள் நெகிழும்படி, கவலையுற்று, படுக்கையின் கண் வீழ்ந்து, துன்பம் மிக்கேன்; இவள் இரங்கத் தக்காள், என்று எண்ணாமல், மாமழை இன்னும்மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து, எனது இனிய உயிரைக் கொள்ளுதலைக்குறித்து, மின்னா நின்றது.
.
(கருத்து) கார்காலம் வந்தும் தலைவன் வராததால் நான் துன்புறு வேனாயினேன்.
No comments:
Post a Comment