Showing posts with label அம்மா - நிகழ்வு. Show all posts
Showing posts with label அம்மா - நிகழ்வு. Show all posts

Sunday, January 13, 2013

அம்மாவும்..பொங்கலும்..நானும்..




அம்மா...

அவளைப்பற்றி..எண்ணினாலே ..மனம் இனிக்கிறது..கண்களில் கொப்பளிக்கிறது கண்ணீர்.

ஒவ்வொருவரும் மண்ணில் ஜனிக்க காரணமாய் இருப்பது தாய்க்குலம். ஆண்டவன்..தனிப்பட்டு ஒவ்வொருவரையும் கவனிக்க முடியாது என்பதால்..அம்மாக்களை படைத்தான்..என்பது சரியென்றே சொல்லலாம்.

என் அம்மா....

அவளைப் பற்றி..எதைச் சொல்வது..எதை விடுப்பது.

எங்கள் மீது பாச மழை பொழிந்தவள்.என் தமிழ் ஆர்வத்திற்கு உரமிட்டவள். அவள் வேலைக்குப் போனதில்லை.ஆனால் முழு நேரமும்..தன் குழந்தைகள் மீது பாசமழை பொழிவதே அவள் வேலையாய் இருந்தது.குடும்ப நிர்வாகம் முழுதும் அவள் கைகளில்.கல்கியின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவள்..ஜெயகாந்தனின் எழுத்துக்களுக்கு அர்த்தம் சொன்னவள்.புதுமைப்பித்தன்,தி.ஜானகிராமன்.லா.சா.ரா.,சுந்தர ராமசாமி ஆகியவர்கள் அவளால் தான் எனக்குத் தெரியும்.

தனக்கு இல்லை என்றாலும்...இல்லை என வருவோர்க்கு வாரி வழங்கியவள்.அவளுக்கு கடவுள் பக்தி அதிகம்.,அதனால் தானோ என்னவோ..மண்ணுலக வாழ்வு அவளுக்கு அதிக நாட்கள் இல்லை.

1979ம் ஆண்டு.,வீட்டில் டி.வி., வாங்கிய நேரம்.,போகி முடிந்து..அடுத்த நாள் பொங்கலுக்கு தூர்தர்ஷனில் சிறப்புத் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றவள்...இரவு 12 மணி அளவில் என்னை எழுப்பினாள்.என் தோள்களில் சாய்ந்து..'உடம்பு ஏதோ செய்கிறது' என்றாள்.என் தம்பி மருத்துவரை அழைத்துவர சென்றான்.(அப்பொழுது வீட்டில் தொலை பேசி வசதி கிடையாது).ஆனால் அவர் வருவதற்குமுன்..என் தோள்களில் சாய்ந்த படியே உயிரை விட்டாள்.அவள் மறைந்த போது அவள் வயது 52 தான்.அவள் டி.வி.யில் பார்க்க நினைத்தபடம் 'பல்லாண்டு வாழ்க.'

ஆகவே..ஒவ்வொரு பொங்கலும்..என்னால்..முழு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவதில்லை.

ஆண்டுகள் பல கடந்தும்..இப் பதிவை எழுதும்போது..கண்களில் கண்ணீர்த்திரை..எழுத்துக்களை மறைக்கிறது.

(அம்மாவை..அவள்..என்று எழுதக் காரணம்..ஆத்திகர்கள் அம்மனை..அவள் என்று சொல்வதில்லையா?..அதுபோலத்தான்)

Monday, September 20, 2010

அம்மா- தன்னலம் கருதாத ஒரே உயிர்



சமீபத்தில் ஒரு வார இதழில் ஒரு பெண் மருத்துவர்..அம்மாவின் பாசத்தையே ஒரு கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.

சமீபகாலங்களாக இவர் எதை எழுதினாலும்..படிக்க, கேட்க ஆட்கள் இருப்பதாக எண்ணிக்கொண்டுள்ளார்.

ஆனால் சமீபத்திய அஸ்திரங்கள் யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இல்லை.

1) பத்து மாதம் சுமந்து பெற்றேன் என்றாலே..பையனுக்கு அம்மா சென்டிமென்ட் அதிகம் என்பதால் சரெண்டர் ஆகி விடுவானாம்.ஆனால் மகள் அப்படியில்லையாம்.காரணம் அவளும் பிற்காலத்தில் பிரசிவிப்பதால்தானாம்...
உண்மையில், நடைமுறையில்..பெண்கள் தான் தாயிடம் பாசமாய் இருக்கிறார்கள்..காரணம் அவர்கள் தான் வலியை உணர்கிறவர்கள்.
அம்மா சென்டிமென்ட் உள்ளவர்கள் அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் திறன் அற்றவர்களாம்..
என்னே..ஒரு கண்டுபிடிப்பு.

2)ஆண் குழந்தையை பெற்றெடுப்பது..அவளே செய்த சாதனையாக பெண்கள் நினைக்கிறார்களாம்..தன் மகனை அதனால் பொத்தி பொத்தி வளர்க்கிறார்களாம்..இப்படி நடப்பதால் பையன் முதிர்ச்சி இல்லாமல் ஆகிறானாம்.
ஐம்பது வருடங்களுக்குமுன்னர் இருக்கிறார் அவர்..
நிகழ்காலத்திற்கு வந்து..நாட்டு நடப்பைப் பார்க்கட்டும்..இருபது வயது எட்டுவதற்குள்ளேயே இன்றைய இளைஞன் தன் எதிர்கால வாழ்வை திட்டமிட்டுக் கொள்கிறான்.சென்ற தலைமுறையில் தான் முதிர்ச்சி இன்றி இருந்தனர்

3)குழந்தை வளரும் போது..தாய்,தந்தை பாசக்கதைகளை சொல்லி வளர்க்கிறாளாம்.இது தன் தாய் தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு உத்தியாம்..
என்ன கதை சொல்லி வளர்க்கிறாள் என்பது இருக்கட்டும்..இன்றைய காலகட்டத்தில்..பெண்கள்..யார் கையையும் எதிர்பார்ப்பதில்லை.ஏன்..கணவனைக் கூட என்று சொல்லலாம்.அவள் வேலைக்குப் போகிறாள்.மற்ற ஆண்களைப் போல.இன்னும் சொல்லப் போனால், குடும்பத்தையே பல இடங்களில் பெண் தன் சம்பாத்தியத்தில் நடத்துகிறாள்.
இவர் சொல்வதைப் பார்த்தால், பெண், கடைசிவரை ஆணாதிக்கத்தில் கட்டுப்பட்டு இருப்பது போல உள்ளது.
நல்ல கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும்..அவற்றில் நீதி இருக்க வேண்டும்.அது, எந்த கதையாய் இருந்தால் என்ன.
இவர் சொன்னது போல காந்தியின் தாய், ஹரிசந்திரன் கதையையும் சொல்லி வளர்த்ததால்..கடைசிவரை உண்மை பேச வேண்டும் என்ற எண்ணம் பிள்ளைப்பருவத்தில் இருந்தே காந்தியின் மனதில் படிந்ததை ,சௌகரியமாக மறந்து விட்டார்.

4)ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறார்களாம்..
ஆணுக்கு நிகராக..இன்று பெண்ணை படிக்க வைக்கிறார்கள்..
திருமணத்திற்கு பெண் இன்று நிபந்தனை விதிக்கிறாள்.

தன் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள தாய் ஆணுக்கு அதிக முக்கியத்துவம்,சலுகைகள்,சொகுசுகள் தந்து அவனை வளர்க்கிறார்களாம்.தன் பாதுகாப்பை வளர்த்துக் கொள்ள தாஜா செய்கிறாளாம்.அதனால் மகன்கள் 'நம் மேல் இவளுக்கு எவ்வளவு ஆசை..இவளுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேனோ 'என எண்ணுவார்களாம்.என்ன ஒரு கண்டுபிடிப்பு..

அடடா..இவர் அம்மாக்களை என்னமாய் புரிந்து வைத்திருக்கிறார்!!!

அம்மாவிற்கு அனைத்து பிள்ளைகளும் சமம்..இன்னும் சொல்லப் போனால்..தான் துயரம் அடைந்தாலும்..ஆண் குழந்தையாய் இருந்தாலும், பெண் குழந்தையாய் இருந்தாலும் பாகுபாடின்றி பிள்ளைகள் நலம் நாடுபவள் அவள்.

5)ஆண்களுக்கு, சமையல், சலவை,வீட்டு துப்புரவு ஆகிய வேலைகளை சொல்லித் தருவதில்லையாம்.அவன் இதற்கெல்லாம் சுயமாய் பழகிவிட்டால்..அவளை விட்டுவிடுவானோ என எண்ணி.அவர்கள் நிரந்தரமாக தன்னை நம்பி வாழ வேண்டியவர்களாக மகனை ஆக்கிவிடுகிறார்களாம்.கட்டுரையாளர், ஜாக்கிரதையாக இந்த இடத்தில் சில தாய்மார்கள் என்று எழுதிவிட்டார்.

அவர்களுக்கு வீட்டு வேலையெல்லாம் சொல்லித்தராதது..தாய் அல்ல..சமுதாயத்தின் ஆணாதிக்கம்..
அதுவும் சில காலமாக மாறி வருகிறது.இன்று பல வீடுகளில் அனைத்துப் பொறுப்பையும் இரு பாலாரும் கவனித்துக் கொள்கின்றனர்.
நாளடைவில் முற்றிலும் மாறிவிடும்.

தாய், அன்பெனும் ஆயுதத்தை பயன்படுத்தி மகனை அடிமையாக்கிவிடுகிறார்களாம்.இது தெரியாமல்'எங்க அம்மா மாதிரி வருமா?' என கண்மூடித்தனமாக ஆண் நினைக்கிறானாம்..

அபூர்வ கண்டுபிடிப்பு..

தாயின் அன்பிற்கும், பாசத்திற்கும் காரணம்..அவள் சுயநலம் என்னும் அர்த்தத்தில் கட்டுரையை முடிக்கிறார் இவர்.

இவர் தாயையும், அவர் அன்பையும் புரிந்துக் கொண்டதில் ஏதோ ..தவறிழைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.