Showing posts with label இலக்கியம் - குறள். Show all posts
Showing posts with label இலக்கியம் - குறள். Show all posts

Wednesday, August 25, 2010

காதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் தமிழ் - 20

(132-புலவி நுணுக்கம்)

சந்தேகம் ...தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்..அதுவும்..காதலன்பால்..காதலிக்கு வந்துவிட்டால்...

தன்னைத்தவிர அவனை வேறு யாரும் ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது என்ற 'பொசசிவ்னஸ்' உள்ள காதலியாய் விட்டால்..அவனது நிலை திண்டாட்டம்தான்..

காதலனை பெண்களெல்லாம் கண்ணால் கண்டு ரசிக்கின்றனர்..அவன் பரந்த மார்பை கண்களாலேயே உண்கின்றனர்..இதை காதலி பார்த்துவிட்டாள்..கோபம் தலைக்கேறுகிறது..காதலனைப் பார்த்து..இனி நான் உன்னைத் தழுவ மாட்டேன்..நீ கற்பு நெறி கெட்டவன் என்கிறாள்..அவனிடம் ஊடல் கொள்கிறாள்.

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

பெண்ணாக இருப்பவர்கள் எல்லோரும் ..உன்னை பொதுவாக எண்ணி கண்களால் உன்னை ரசிப்பதால்..நீ கற்பில்லாதவன் ஆகிறாய்..ஆதலின் இனி உன் பரந்த மார்பை நான் தழுவ மாட்டேன்..

இப்போது காதலனுக்கு தும்மல் வருகிறது..தும்முகிறான்..அவன் தும்மல் போலியானது என எண்ணுகிறாள் அவள்..இப்படி தும்முவதால் அவரிடம் உள்ள கோபம் நீங்கி..'நீடூழி வாழ்க" என அவரை வாழ்த்தி பேச ஆரம்பிப்பேன் என எண்ணுகிறார் என எண்ணுகிறாள்.இதிலும் சந்தேகம்..

ஊடி இருந்தேமாத் தும்மினார் யார்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து

(ஊடல் கொண்டிருந்தபோது தும்மினார்..ஊடலை விடுத்து அவரை 'நீடூழி வாழ்க' என வாழ்த்துவேன் என நினைத்து..)

காதலியை மகிழ்விக்க என்ன செய்யலாம்..என மண்டையைக் குடைந்துக் கொண்டு..மலர்மாலையை தான் அணிந்துக் கொண்டால் அவள் மகிழ்வாள் என எண்ணியவன்..பூமாலை ஒன்றை அணிந்து. அவள் முன் வருகிறான்..அவளோ அவன் எண்ணியதற்கு மாறாக..வேறொருத்திக்குக் காட்டவே அவன் அப்படி அணிந்ததாக எண்ணி மேலும் சினம் கொள்கிறாள்

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று

கிளையில் மலர்ந்த பூக்களை மாலையாய் கட்டி நான் அணிந்துக் கொண்டிருந்தாலும், வேறொருத்திக்காகவே அணிந்திருக்கிறீர் எனக் கூறி கோபம் அடைகிறாள்

அவள் சினம் தணிக்க காதலன் 'எல்லோரையும் விட நான் உன்னிடம் காதல் மிகுதியாய்க் கொண்டுள்ளேன்' என்கிறான்..உடனே அதையும் தவறாக எடுத்துக் கொண்டு யாரைக் காட்டிலும்..யாரைக்காட்டிலும் என ஊடல் அதிகம் கொள்கிறாள்.

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

யாரைக்காட்டிலும் உன்னிடம் நான் காதல் அதிகம் கொண்டுள்ளேன் என சாதாரணமாகச் சொன்னதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டு..'யாரைக் காட்டிலும்...யாரைக்காட்டிலும்..' எனக் கேட்டு மிகவும் ஊடல் கொள்கிறாள்

சரி..இவளிடம் என்ன சொன்னால் திருப்தி அடைவாள் என காதலன் யோசித்து..'இப் பிறவியில் உனை பிரியமாட்டேன்' என்கிறான்.உடனே..மறுபிறவி என்று இருந்தால்..அப்போது என்னைவிட்டுப் பிரிவாயா' என கண்ணீர் விடுகிறாள்...

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

'இப்பிறவியில் யாம் பிரியமாட்டோம்' என்று நான் சொன்னதும்..அவ்வாறாயின் மறு பிறப்பு என்று ஒன்று உண்டோ..அப்போது நம்மிடம் பிரிவு ஏற்படும் என்கிறாயா? என கண்ணீர் விடுகிறாள்..

காதலன் பாவம் என்ன செய்வான்..எதைச் சொன்னாலும் மாட்டிக் கொள்கிறான்..

அடுத்த பதிவில் மேலும் அவன் நிலையைப் பார்ப்போம்.

Tuesday, April 27, 2010

வள்ளுவனும்..இன்பத்துப்பாலும் - 5

மலரும்..மங்கையும் ஒரு ஜாதி என்றான் ஒரு கவிஞன்..மற்றவனோ மலர்களிலே அவள் மல்லிகை என்றான்..அடுத்தவன் ஒருவன் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப்பார்க்கையிலே என்றான்..

இப்படி ஒவ்வொரு கவிஞனும் போட்டிப் போட்டுக் கொண்டு பெண்களை மலர்களுக்கு ஒப்பிட்டனர்..

இவர்களின் முன்னோடி..பொய்யாமொழியான் மட்டும் சும்மா இருந்திருப்பானா..இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவன் பெண்களையும்..அவர்களின் அங்கங்களையும் என்னென்ன மலர்களுக்கு ஒப்பிட்டு இருக்கிறான் பாருங்கள்..

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

அனிச்ச மலர் மென்மையானதுதான்..ஆனால்..அதனினும் மென்மையானவளாம் அவனது காதலி..

மலர்களைக் கண்டால்..நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது, புத்துணர்ச்சி தோன்றுகிறது..ஆனால் கண்டால் வியக்கவைக்கும் மலர்கள் உளதா...இருக்கிறது என்கிறார் வள்ளுவர்..தன் காதலியின் கண்கள் பலரும் கண்டு வியக்கும் மலராம்..

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

மலர்களைக் கண்டு மயங்கும் நெஞ்சமே..இவளது கண்களைப் பார்..பலரும் கண்டு மயக்கும் மலராய் அது திகழ்கிறது

ஒரு மலர் தன்னைப் போன்ற இன்னொரு மலரைக் கண்டு..அது போன்ற அழகு தனக்கு இல்லையே என நாணித் தலைகுனியுமா....குனியும் என்கிறார்..

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

(என் காதலியை)குவளை மலர்கள் காண முடிந்தால்..'இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே' என தலைகுனிந்து நிலம் நோக்குமாம்..

ஒரு பெண்..தன்னை மற்ற அழகான ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு தான் அது போல இருப்பதாக எண்ணுகிறாள்..உண்மையில் அப்படி துளியும் இல்லை..ஆனால் அப்படி நினைப்பவள்..அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள முடியாமலும் இருக்கிறாள்..ஊரார் இவளை அழகாக இருப்பதாக நினைக்க இவள் என்ன செய்ய வேண்டும்..அந்த அழகானப் பெண்ணை நோக்கும் பலரும்..இவளைப் பார்க்காமல் கேள்வி ஞானத்திலேயே இருக்க வேண்டும்..இதைத்தான் இந்தக் குறள் மூலம் வள்ளுவர் கூறுகிறார்..

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

நிலவே..மலரனைய கண்களுடைய என் காதலிக்கு ஒப்பாக நீ இருப்பதாய் உனக்கு பெருமை இருக்குமேயாயின்..(அதை மற்றவர்கள் நம்ப வேணுமெனில்) அவர்கள் காணும்படி நீ தோன்றாது இருப்பதே மேல்...