Showing posts with label சிந்தனைகள் - பொதுவானவை. Show all posts
Showing posts with label சிந்தனைகள் - பொதுவானவை. Show all posts

Thursday, November 4, 2010

பயனில சொல்லற்க

நாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள்..
என்ன ஒன்று..சிந்தனை என்பது நபருக்கு நபர் மாறுபடும்.
எனக்கு சரி என நான் நினைப்பது..மற்றவருக்குத் தவறாக இருக்கக் கூடும்.அதனால் அவர் சிந்திக்கத் தெரியாதவர்..நானே புத்திசாலி என்று எண்ணக்கூடாது.
அவர் நினைப்பது..நான் நினைப்பதற்கு மாறுபாடாய் உள்ளது..மனிதப் பிறவியா இவர் என்ற எண்ணம் இருந்தால்..நீங்கள் மட்டுமே உலகில் சிந்திக்கத் தெர்ந்தவர், நீங்கள் மட்டுமே அறிவாளி என எண்ணுவதாக அமையும்.
நாம் எதைப் பேசினாலும்..அளந்து, மற்றவர் புண்பட பேசக்கூடாது.
அதே போல பயனற்ற வார்த்தைகளையும் பேசக் கூடாது..
அப்படி பயனற்ற பேச்சைப் பேசுபவனைத் தான் மனிதன் என்று சொல்வதைவிட பதர் என்று சொல்லலாம் என்கிறார் வள்ளுவர்.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்

ஆகவே நாம் கூடியவரை மற்றவர் மனம் புண்படாது நம் கருத்தைச் சொல்ல வேண்டும்.அதை ஏற்பதும், ஏற்காததும் கேட்பவரின் விருப்பம்.பயனுள்ள சொற்களைக் கூறினால் அனைவரும் விரும்பி ஏற்பர்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனதில் பதிந்து பயனளிக்கக்கூடிய சொற்களையே கூற வேண்டும்.

Monday, June 7, 2010

வெற்றியை அடையும் வழி..

எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.

எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும்.

ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள்.

கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்..

என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள்.

ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும்.

எடுத்த காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது.

எந்த வழியைப் பற்றியேனும் வெல்ல வேண்டும் என எண்ணினால்..அப்படிப்பட்ட வெற்றியைக் காணும் உடன் இருப்போர் மெல்ல மனம் மாறி நம்மை விட்டு விலகும் அபாயம் உள்ளது.இப்படிப்பட்ட வெற்றி உதறித் தள்ள வேண்டும்.

வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இருக்க வேண்டும்.சிறந்த வழியின் மூலம் கிடைக்கும் பலன் சிறிதானாலும்..அது ஞாலத்தின் மாணப் பெரிதாகும்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை

(புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்)

பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.

வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.அத்னால் தான் வள்ளுவனும்..

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார்.

Friday, April 30, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி ..சுண்டல்(30-4-10)

நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்..அவர்களில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ஜீவாவும் ஒருவர்.'அன்பும் அரசியலும் வேறு வேறல்ல..உலகம் முழுமைக்கும் அன்பும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்பதே உண்மையான அரசியல் தத்துவமாகும்.ஆகவே..அன்பினை அழிக்கக்கூடிய எதுவும் அரசியலாக இருக்கமுடியாது.'இதுதான் ஜீவாவின் அரசியல் தத்துவம்.

2)மக்கள் தொகை அடிப்படையிலான செல்ஃபோன் இணைப்புகளின் எண்ணிக்கையில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.அதாவது 100 நபருக்கு 150 இணைப்புகள் உள்ளன.100 க்கு 167 என்று தில்லி முதல் இடத்திலும்,100க்கு 137 என மும்பை மூன்றாவது இடத்திலும்..100க்கு 114 என கொல்கத்தா 4ஆம் இடத்திலும் உள்ளது.

3)மோனலிசா என்ற உலகப் புகழ் பெற்ற ஒவியத்தில் அந்தப் பெண்ணிற்கு புருவங்கள் வரையப் படவில்லையே...ஏன்..அதற்கான காரணம்..இந்தக் கால பெண்கள் தங்கள் புருவங்களை Trim செய்வது போல..15,16 ஆம் நூற்றாண்டில் பெண்கள் தங்கள் புருவங்களை நன்கு மழித்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததாம்.

4)தக்காளிச் சாற்றிலே சர்க்கரையைப் போட்டால் ரத்தச் சிவப்பாக மாறுகிறது..சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டால் வெளுத்துப் போகிறது.இனிமையான பேச்சு மேலும் உன்னை அழகுள்ளவனாக்குகிறது.கடுமை உன் முகத்தைச் சோகையாக்குகிறது. -கண்ணதாசன்

5) ஐந்து வயது வரை அரசனைப் போலவும்..பதினைந்து வயதுவரை தாசனைப் போலவும் பதினாறாம் வயது முதல் நண்பனைப் போலவும் நினைத்து ஒரு தந்தை தன் மகனை நடத்த வேண்டும்.

6)இதயம் சீராக இயங்கி நோய்களை தவிர்க்க..ரத்தத்தில் இன்சுலின் அதிகரித்து டயாபடீஸ் ஆபத்தை குறைக்க திராட்சை சாப்பிடச் சொல்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்

7)கொசுறு- ஒரு ஜோக்

சாப்பிடும் போது அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு..அப்புறம் சாப்பிட்டதை வாய்க்குக் கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன் டாக்டர்
இந்த நேரத்திலே எப்படி என் கிளினிக்கிற்கு வந்தீங்க
கால்நடையாகத்தான்