Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, November 19, 2013

பொங்கல் நாளில் படம் வந்தால் அள்ளலாம் வசூலை...



பொங்கலுக்கு வெளிவரும் பட வரிசைகளில் முக்கிய நடிகர் நடிக்கும், நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படமும் உள்ளது.முக்கியமாக இந்நாளில் படத்தை வெளியிட பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்பது ஏன்?

இப்போதெல்லாம், பெரிய பட்ஜெட் படங்கள் சென்னை போன்ற நகரங்களில் மட்டும் ஒரே நாளில் 300 காட்சிகளுக்கு மேல் நடைபெறும் வண்ணம் திரையிடப்படுகின்றன.படம் தோல்வியடைந்தாலும், வசூலைக் குறி வைத்தே இப்படி நடக்கின்றன.

பொங்கல் சமயம் வந்தால்...

ஜனவரி 10ஆம் நாள் வெளிவரும் பட மென்றால், அன்று வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு அரங்கம் நிறைவது 'டப்பா' படத்திற்கும் நிச்சயம்.

தவிர்த்து, 13 நாம் நாள் போகி, அடுத்து மூன்று நாட்கள் பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல்...ஆகக் கூடி படம் வெளியாகி ஏழு நாட்கள் அரங்கு நிறைவது நிச்சயம்.

சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட பிரபல நடிகர் படம் என்றால் 2100 காட்சிகள்.வசூல் வேட்டை அபாரமாய் இருக்கும்.பிறகு பட வசூல் பற்றி , கவலை இல்லை..படம் ஓடினாலும், ஓடாவிடினும்.

பார்ப்போம்...இந்த ரேசில் யார் யார் ஜெயித்து படத்தை வெளியிடுகிறார்கள் என்று.

Sunday, October 7, 2012

சினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..


சினிமாவிற்கு எழுதப்படும் கதைக்கு மூன்று வடிவம் நிலைகள் இருக்கின்றன..

முதலாவது அந்தக் கதையின் சுயவடிவம்.இரண்டாவது அக்கதையைச் சினிமாவிற்காக பண்படுத்துதல் அல்லது மாற்றி அமைத்தல்.இதைத்தான் 'டிரீட்மென்ட்' என்கிறார்கள்.மூன்றாவது படங்களாகவே கதையை எழுதுவது.இதை 'சினாரியோ' என்றும் 'ஸ்கிரிப்ட்' என்றும் சொல்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும்..ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது.அதேபோல ஒவ்வொரு கதையிலுமொரு தனித் தத்துவம் அல்லது அடிப்படையான கருத்து அடங்கி இருக்கிறது.ராமாயணத்தில் 'ஆதர்ஷ புருஷனின் லட்சணங்கள்' ஒரு அடிப்படைத் தத்துவம்.மார்க்கண்டேயன் கதை 'விதியை மதியால்' வெல்லலாம்..என்னும் அடிப்படைக் கருத்தின் மேல் கட்டப்பட்டது.கண்ணகி கதை 'ஒரு கற்புக்கரசியின் கோபம் உலகையே எரித்துவிடும்' என்ற கருத்தின் மேல் எழுந்தது.

எனவே, சினிமாவிற்குக் கதை எழுதுகிறவர் முதலில் அந்தக் கதையின் அடிப்படைக் கருத்து என்ன என்பதை முதலில் நிச்சயம் செய்துக் கொள்ள வேண்டும்.அந்தக் கருத்தை விளக்கிச் சொல்வதற்காகத்தான் கதை எழுதப் படுகிறது.ஆகையால் கதையின் ஆரம்பம், வளர்ச்சி,முடிவு எல்லாம் அதை விளக்குவதற்காகவே அமைக்கப் பட வேண்டும்.

அதே போல.. கதை தங்குத் தடையின்றி மட மட என நகர வேண்டும்.அனாவசியமாக நிற்கக் கூடாது.ஒரு சம்பவத்திற்குப் பிறகு அடுத்தது...அதற்கடுத்தது என்று, நிற்காமல் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டும்.படத்தில், கதையை நேருக்கு நேர் நடப்பது போலவே பார்ப்பதால் அது வேகமாக நகராவிட்டால் சலிப்புத் தட்டிவிடும்.ருசி குறைந்துவிடும்

(சிறுகதை எழுத்தாளர்,நாடக ஆசிரியர், சினிமா கதை,வசனகர்த்தா ஆகிய பி.எஸ்.ராமையா எழுதிய சினிமா என்னும் நூலிலிருந்து...
இப்புத்தகம் இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை.யாரிடமாவது இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.தெரிவிக்கவும்.
பி.எஸ்.ராமையா நாலு வேலி நிலம், போலீஸ்காரன் மகள்..ஆகிய திரைப்படங்களின் கதைக்கு சொந்தக்காரர் ஆவார்)

Monday, October 31, 2011

7 ஆம் அறிவு.. என் பார்வையில்...




மனம் வருந்துகிறது..

தமிழன்..தமிழன்..என்று விட்டால் படம் ஹிட் ஆகிவிடும் என முருகதாஸிற்கு யார் கூறியது.

படத்தின் முதல் 20 நிமிடங்கள்..

ஒரு காலத்தில்..ஒவ்வொரு திரையரங்கிலும்...செய்தித் தொகுப்பு படம் ஆரம்பிக்கும் முன் போட வேண்டும் என்று கட்டாயம் இருந்தது.அந்த காலத்தை நினைவூட்டியது அந்த இருபது நிமிடங்கள்.குரல் கொடுத்தவரும் அதே போல ..'பீகாரில் வெள்ளம்' குரல் கொடுத்தார்.

போதிதர்மனை மன்னன் சைனாவிற்கு அனுப்பினாராம்..அங்கு அவர் அவர்களுக்கு வந்த மர்ம நோயைப் போக்கினாராம்..விரோதிகளிடமிருந்து காப்பாற்றினாராம்..பின் அந்த மக்கள் அவருக்கே விஷம் இட்டு..அவர் அதை அறிந்திருந்தும் உண்டு அங்கேயே இறந்தாராம்..இந்த இடத்தில் தமிழன் இ.வா., ஆகிறான்.

காலங்கள் கடந்து..இப்போது அதே மர்மக்காய்ச்சலை  இங்கு பரப்ப..தமிழ்நாட்டிற்கு (??!!!) வில்லன் வந்தானாம்..ஆண்டவா தலை சுத்துது.ஆமாம் அருங்காட்சியகத்தில் உள்ள போதி தர்மனின் குறிப்பேடு இம் மர்மக்காய்ச்சல் பற்றி ஏதும் சொல்லவில்லையா?மர்மக்காய்ச்சலுக்கு போதியின் பச்சிலை வைத்தியம் மட்டுமே இன்று போதுமா?ஆயிரக்கணக்கான இழப்பை பச்சிலை சரி செய்து விடுமா?


ஆமாம் அரவிந்தன் (சூர்யா) ஏன் சர்க்கஸ் தொழிலாளி ஆக்கினார்.குங்க்ஃபூ ஒரு கலை என்பதால்....அந்த போதி தர்மனின் டிஎன்ஏ 80 விழுக்கட்டுக்குமேல் ஒத்துப்போகும் அரவிந்தனையும் ஒரு கலைனாக சித்தரிக்க வேண்டும் என எண்ணி..அப்படி ஆக்கிவிட்டாரோ..முருகதாஸ்..

திரைக்கதையை ..முதல் இருபது நிமிடம் கழித்து எப்படி அமைக்கலாம் என்பதில் குழப்பமே அவருக்கு ஏற்பட்டிருக்கும் என எண்ணுகிறேன்.

போதி குதிரையில் போவதால்  அரவிந்தனை யானையில் போக வைத்தார் போலும்.

சூர்யா..இப்படத்திற்காக உழைத்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள்..கஜினியை விடவா? இன்னும் சொல்லப் போனால் அவருக்கு இதில் அதிக வேலையே இல்லை எனலாம்.

ஸ்ருதி ஹாசன்..பல காட்சிகளில் நன்றாகத் தெரிகிறார்..சில காட்சிகளில்..ஏன் இப்படி?

விஞ்ஞானிகள் கூட்டத்தில் தமிழில் பேசுபவரை சாடுவதை சாடுகிறார் தமிழில்..ஒருவேளை இவர் பேசும் தமிழை அவர்கள் சாடி இருப்பார்களோ என்று தோன்றுகிறது.

பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ்..படத்தி பார்ப்பதை விட வெளியில் கேட்க நன்றாய் இருக்கிறது.

ஆமாம்..அதெப்படி பார்வையாலேயே வில்லன்..போலீஸ் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லவைப்பாராம்..போலீஸ் அதிகாரிகள் மௌனமாய் இருப்பர்களாம்.இதைவிட காவல்துறையைக் கேவலமாய் வேறெந்த படத்திலும் காட்டவில்லை எனலாம்.

அளவிற்கு அதிகமாய்..பார்வையாலேயே..தெருவில் நடக்கும் ஆக்ஸிடெண்ட்கள்...மரணங்கள்...(வழக்கம்போல கதாநாயகனும்,நாயகிக்கும் சில முகக் கீறல்கள் மட்டுமே)

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்...அல்ல அல்ல கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்.

பல இடங்களில் ஒளிப்பதிவு..ஆகா..என சொல்ல வைப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

 கைதட்டல் வரவேண்டும் என்றே மஞ்சள், வீட்டு வாசல் கோலம்.,துரோகம்.என நுழைக்கப்பட்டுள்ள வசனங்கள்.


தமிழன் உணர்ச்சிவசப்படுபவன் தான்...அவனைப் பற்றியும்..தமிழைப் பற்றியும் கூறினால் மகிழ்ச்சியுடன் கைதட்டுவான்..

ஆனால்..வியாபார யுக்தி என்றால்..அதையும் புரிந்துக் கொள்வான்.

மொத்தத்தில்..படம் முடிந்து திரையரங்கு விட்டு வெளியே வருகையில்..தமிழன்..தமிழ் என தலை நிமிர்ந்து வருவான் என இயக்குநர் கூறியுள்ளது போல நடக்கவில்லை.வெளியே வருபவன்..முழம் முழமாய் காதில் சுற்றியுள்ள பூவை கழட்டி எறிந்து விட்டுத்தான் வருகிறான்.

டிஸ்கி-

புரஃபசர் ஆட்டோவில் ஏறியதும் மீட்டர் போடப்படுகிறது..இயக்குநர் எந்த காலத்தில் இருக்கிறார்..ஆட்டோ மீட்டர் போட்டு ஓட்டிய நாளெல்லாம் எப்போதோ ஓடிவிட்டது.

ஆமாம்..இப்படம் தெலுங்கு டப்பிங்கில் தமிழன் என்று வருமிடமெல்லாம் இந்தியன் என்று மாற்றிவிட்டாராமே..உண்மையா..
அப்படியாயின்...தமிழனுக்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு அல்ல..தமிழகத்தில் மட்டுமே சிறப்பு என்கிறாரா இயக்குநர்..
இந்த ஒரு செயலே இயக்குநரின் தமிழ் பற்றை சந்தேகிக்க வைக்கிறது.



Monday, October 11, 2010

தமிழ்ப்படங்கள் வெளியீடு ஏன் இல்லை

தமிழ்ப் படங்கள் புற்றீசல் போல வாரம் மூன்று வெளியாகிக் கொண்டிருந்தன.இவை பட்ஜெட் அதிக பட்சம் 10 கோடி என வைத்துக்கொள்வோம்.
அக்டோபர் ஒன்றாம் நாள் ரஜினியின் பிரம்மாண்ட படம் 'எந்திரன்' வெளியானது.இதற்கான செலவு கிட்டத்தட்ட 200 கோடிகள்.வேறு விதத்தில் கூற வேண்டுமாயின் 20 சாதாரண படங்கள் எடுக்க எவ்வளவு பணம் தேவையோ..அவ்வளவு பணத்தை இந்த ஒரு படம் முழுங்கியுள்ளது.
அதனால்தான் மூன்று வாரங்கள் எந்த புதுப் படமும் வெளீயிடுவது இல்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதா?
இதனால் எவ்வளவு சிறிய படத் தயாரிப்பாளர்கள் நசுக்கப்பட்டுள்ளார்கள்.குறிப்பாக நவராத்திரி விடுமுறைக் காலங்களில் ஓரளவு வசூல் செய்திருக்கும் இப்படங்கள் வெளிவந்திருந்தால்.
எந்திரனைப் பொறுத்தவரை பார்க்க நினைப்பவர்கள் அனைவரும் அதைப் பார்த்துவிடுவர்..அதனால் அதன் வசூல் இதனால் பாதிக்கப் படாது என்றே தோன்றுகிறது.
சின்ன மீன்களை விழுங்கித்தான் பெரிய மீன் வாழும் என்ற தத்துவம் இதற்கும் பொருத்தமே.
பாவம் இந்த தயாரிப்பாளர்கள்..இவர்கள் படங்கள் அக்டோபர் 22க்கு மேல்தான் வெளியிடப்படுமாம்.
எல்லோர் நலனையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டதாம்.
பணம் இருந்தால்..எந்த முடிவையும் எடுக்க வைத்துவிட்டு அவை ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவு என சொல்லிவிடலாம் போலிருக்கிறது.
'பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா" என்ற கண்ணதாசன் வரிகளே ஞாபகம் வருகிறது.

Monday, September 27, 2010

எந்திரன்..நொறுக்ஸ் - 2

1)ஐரோப்பாவில் பிரம்மாண்ட கொலோசியம் கினோ 1 திரையரங்கில் எந்திரன் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம்.கடந்த பத்து ஆண்டுகளில் இங்கு வெளியாகும் முதல் இந்தியப் படம் இதுதான்.இந்த அரங்கில் 975 இருக்கைகளாம்.நார்வேயில் மொத்த தமிழர்கள் எண்ணிக்கை 14000.அதில் 20 விழுக்காடு திரையரங்கில் படம் பார்ப்பவர்கள்.அதனால் சின்ன தியேட்டர்களில்தான் படங்கள் வெளியாகுமாம்.ஆனால்..இந்நிலையில் 'எந்திரன்' சிறப்பு காட்சி இங்கு வெளியாகிறது.பின்னர் இது சின்ன தியேட்டருக்கு மாற்றப்படுமாம்



2)எந்திரன் சென்னை உரிமையை தி.மு.க., வைச் சேர்ந்த அன்பழகன் வாங்கினாராம்.பின்னர் சில கோடிகள் அதிகமாக சேர்த்து சத்யம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு விற்று விட்டாராம்.



3)அண்ணாசாலையில் மட்டும் 12 தியேட்டர்களில் படம் வெளிவருகிறது.சென்னையில் 30 தியேட்டர்களில் வெளிவருகிறது.உலகம் முழுதும் ஒரே வாரத்தில் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் இருக்குமாம்



4)படம் வெற்றியா..தோல்வியா என்பது பிரச்னை அல்ல..(படம் வெற்றி படம் என்பது தெரிந்த விஷயம்)உலக அளவில் பிரம்மாண்டமாய் பேசப்படும் இப்படம்..அதிக பொருட் செலவில் தயாரிக்கப் பட்ட இப்படம்...ஒரு தமிழ்ப்படம் என்பதை நினைக்கையில்( எல்லாவற்றையும் தாண்டி )சற்று பெருமையாகத்தான் உள்ளது



 கேரளாவில் எந்திரன் படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.



கேரளாவி்ல் எந்திரன் படம் 125 தியேட்டர்களில் வெளியாகிறது. இது கேரள சினி்மா வரலாற்றில் புதிய சாதனை ஆகும். மலையாளத் திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் 100 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டதில்லை. முதல் முதலாக எந்திரன் தான் இந்த சாதனையை படைத்துள்ளது.



5)எந்திரன் பட முதன் முதல் ஷூட்டிங் மச்சு பிச்சு மலையில் 'கிளிமஞ்சாரோ' பாடலுக்கான நடனக் காட்சி எடுக்கப்பட்டதாம்.ஐஸ்வர்யா ராய் வருவதற்குள் மேக்கப் போட்டுக் கொண்டு ரஜினி 20,30 வரை நடன மூவ்மெண்டை ஒத்திகப் பார்த்தாராம்.

இதோ அந்த பாடல்

Thursday, July 22, 2010

களவாணி..- என் பார்வையில்


இந்த இடுகையை போடுவதா..வேண்டாமா..என பல நாட்களாக டிராஃப்டிலேயே வைத்திருந்தேன்..இன்று ஏனோ போடவேண்டும் எனத் தோன்றியது.

இந்தப் படம்..நல்ல பொழுபோக்கு படம் என்பதில் ஐயமில்லை. நகைச்சுவைக்கு நகைச்சுவை..கிராமத்துக் காட்சிகள் ..ரிகார்ட் டான்ஸ்..வெட்டு குத்து என எல்லாம் சரிவிகித கலவை.கஞ்சா கருப்பு வரும் காட்சிகள் எல்லாம் நரசிம்ம ராவ்களையும் சிரிக்க வைக்கும்.நாயக,நாயகி,நண்பர்கள் எல்லாம் இதிலும் உண்டு.இரண்டு மணி நேரம் படம் போனதே தெரியவில்லை.படத்தில் தொய்வென்பதே இல்லை..

இந்நிலையில்..இப்படம் கூறுவதென்ன..

அன்று பாரதிராஜா ஆரம்பித்து வைத்த அலைகள் ஓய்வதில்லை....யின் அலைகள் ஒயவில்லை.

இதே கதையம்சம் கொண்டு எவ்வளவு படங்கள்..காதல்,சுப்ரமணியபுரம் எல்லாம் இதே ரகம்தான்.

பால்ய விவாகம் என்பது..சட்டத்திற்கு விரோதமானது..ஆனால் இந்த படத்தில் எல்லாம் 10ஆம் வகுப்பு..11ஆம் வகுப்பு படிக்கும் பெண்கள்..சிறுமிகள் என்றே சொல்லலாம் ஏனெனில் வயது 16க்குள் தான் இருக்கும்..இவர்களுக்கு படிக்காமல்..ஊர் சுற்றி திரியும்..வம்பு சண்டைகளை விலைக்கு வாங்கி..வில்லனுடன் போராடி..இரு தரப்பிலும் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி..கடைசியில்..எவ்வளவு பெரிய காயங்களானாலும் அடுத்த காட்சியிலே ஜான்சன் பேன்டெய்ட் போட்டு வரும் நபருடன் காதல்.

பள்ளி சிறுவர், சிறுமியர் மனதில் இது போன்ற ஆசை நஞ்சை விதைத்து படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமா? என்பதே கேள்வி.

கட்டபொம்மன் என்றால் ,வ.உ.சி., என்றால்,கர்ணன் என்றால் பாரதி என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என அந்த நாளில் சிறுவர்கள் மனதில் வேரூன்ற வைத்தன படங்கள்..அன்றும் காதல் காட்சிகள் வந்தன..ஆனால் இளமைப் பருவத்தில்.. அப்படித்தான் சித்தரித்தன படங்கள்.

இன்று செய்தித்தாள்களைப் பார்த்தாலே..காதலன் காதலி ஓட்டம், கணவனைக் கொன்ற மனைவி,கள்ளக் காதல் காரணமா? வெட்டி கொலை, இப்படிப்பட்ட செய்திகளையே பார்க்க முடிகிறது.

அன்றும் படங்களைப் பார்த்து கொன்றேன் என கொலைகாரர்கள் கூறியதுண்டு..ஆனால் அவை சொற்பம்..

இன்றோ...நடைபெற்று வரும் பாதி குற்றங்களில்..குற்றவாளிகள்..சினிமாவைப் பார்த்துதான் அதுபோல செய்தோம் என்கின்றனர்.

இதைத் தெரிந்துக் கொண்டவர்கள் ..குற்றத்திற்கான் தண்டனையை நினைப்பதில்லை..

படத்தில்...ஆறு மாத தண்டனைக்குப் பிறகு..ஒரு வருடத்திற்குப் பிறகு என அடுத்தக் காட்சியிலேயே வரும்..வாழ்வில் அந்த தண்டனைக் காலம்..எதிர் கால வாழ்வையே பாதிக்கும் என்பதை இன்றைய இளைய சமுதாயம் உணரவில்லை.

இயக்குநர்களே..சினிமா ஒரு பவல்ஃபுல் மீடியா..அதில் ஈடுபடும் அதிர்ஷடம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது..சமூக பொறுப்புணர்வுடன் பணியாற்றி வெற்றிகளை குவியுங்கள்..

வெற்றி பெறுவது என்பதைவிட எப்படி வெற்றி பெற்றோம் என்பதே உண்மையான வெற்றியாகும்.

டிஸ்கி..இந்த இடுகைக்கு ஆதரவு..எதிர் ஒட்டு போடும் அனைவருக்கும் நன்றி

Monday, July 19, 2010

எந்திரனும்..திரையரங்க உரிமையாளர்களும்..


திரையரங்கு உரிமையாளர்கள் என்ன பாடு படப்போகிறார்களோ!!!

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள எந்திரன் படப்பிடிப்பு முடிந்து விட்டது..ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம்.

ஆனால் குறிப்பாக இப்படிப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது அவை மினிமம் கேரன்டி/விழுக்காடு அடிப்படையிலேயே வெளியாகும்.

படங்கள் திரையரங்குகளில் நான்கு வித ஒப்பந்தங்களில் வெளியாகிறது..

முதல் - மினிமம் கேரன்டி..இந்த தொகையை அதிகமாக எந்த தியேட்டர் கொடுக்கிறதோ..அவர்கள் திரையரங்கிற்கு படம் கொடுக்கப் படுகிறது.வசூல் குறைவாக இருந்தால் நஷ்டம் திரையரங்க உரிமையாளருக்கு.ஆனால் கேரன்டி தொகையை விட அதிகம் வசூல் அதிகமானால்..அதிகப்படியாக ஆகும் தொகையில் பாதி தயாரிப்பாளருக்கு..பாதி திரையரங்கிற்கு..

உதாரணமாக மினிமம் கேரண்டி 60 லட்சம் எனில்..வசூல் பத்து லட்சம்தான் என்றால் திரையரங்கிற்கு 50 லட்சம் நஷ்டம்
அதுவே 80 லட்சம் வசூல் என்றால் லாபம் 20 லட்சத்தில் 10 லட்சம் தயாரிப்பாளருக்குக் கொடுக்க வேண்டும்.பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களும்..பெரிய நட்சத்திரங்கள் படமும் இந்த அடிப்படையிலேயே திரையிடப்படுகின்றன..ஆகவே படம் தோல்வியடைந்தாலும்..எதிப்பார்த்த வசூல் செய்யவில்லை என்றாலும் நஷ்டம் திரையரங்கிற்கு மட்டுமே.

இரண்டு- விழுக்காடு அடிப்படை..70:30., 65:35.,60:40 இப்படி..70:30 எனில் 70விழுக்காடு தயாரிப்பாளர்களுக்கு 30 விழுக்காடு திரையரங்கிற்கு.... திரையரங்கிற்கு..திரையரங்கு விழுக்காடு மாறுபடும்

மூன்று-ஃபிக்ஸட் ரேட்..படத்திற்கு இவ்வளவு தொகை தியேட்டர் அதிபர்கள் விலை கொடுத்து வாங்குவார்கள்.தொடர்ச்சியாக படம் ஓட வேண்டும்.பின் பெட்டி தயாரிப்பாளரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

நான்கு-தியேட்டர் வாடகையை படத் தயாரிப்பாளர் முன் கூட்டியே தியேட்டருக்கு கொடுத்து விட வேண்டும்..சின்ன பட்ஜெட் படங்களுக்கு இது ஒத்து வராது.

மினிமம் கேரன்டி யில் பிரபலங்கள் படம் வருவதாலேயே சுறா,குசேலன் போன்ற படங்கள் நஷ்டத்தைக் கொடுத்தன..

எந்திரன் என்ன செய்யப்போகிறான் எனப் பார்ப்போம்

Sunday, April 25, 2010

முப்பதாயிரத்தில் திரைப்படம் எடுக்க முடியுமா?




கேபிள் சங்கரின் வலைப்பூவில் மேலே போட்டுள்ள விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்..

உண்மையில் 30000 ரூபாயில் படம் எடுக்க முடியுமா?

முடியும் என்று நிரூபித்துள்ளது ஏவிஎம் நிறுவனம்...அதுவும் முழுநீள நகைச்சுவைப் படத்தை 32000 ரூபாய் செலவில் எடுத்து..படமும் மாபெரும் வெற்றி பெற வைத்தனர்..

ஹி..ஹி..ஹி...

அந்தப் படம் டி.ஆர்.ராமசந்திரன்,காளி என்.ரத்தினம்,சாரங்கபாணி ஆகியோர் நடித்த 'சபாபதி' என்ற படம்.

அப்போது அந்த நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கதாநாயகனுக்கு படம் முடியும் வரை மாதச்சம்பளம் அறுபத்தேழரை ரூபாய்..கதாநாயகிக்கு நாற்பத்து ஐந்து ரூபாய்..

படம் வெளியான ஆண்டு 1942.

அதே போன்று 'நாம் இருவர்" படக் கதைக்கு இவர்கள் கொடுத்த பணம் 3000 ரூபாய்..ஆனால் அதில் இடம்பெற்றிருந்த பாரதியார் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட காப்பிரைட்டிற்குக் கொடுத்த பணம் பத்தாயிரமாம்

Tuesday, March 30, 2010

வசந்தபாலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்



(புகைப்படம்- நன்றி..சென்னை ஆன்லைன் .காம்)

இயக்குநர் வசந்த பாலனுக்கு,

வணக்கம்.

இன்னமும் வெயிலின் தாக்கம் தீராத நிலையில்..அங்காடித் தெரு சென்றேன்..

அடடா..என்னவொரு அற்புதமான அழகான தெரு..செதுக்கி..செதுக்கி..நகரசபையாலும்..நீர்வளத்துறையாலும்,தொலைபேசித் துறையினராலும்..தோண்டி அப்படியே போட்டுச் சென்ற தெருவாய் இல்லாமல்..வழ வழ என வழுக்கிச் செல்லும் தரமான தெருவாய் உள்ளது.

இன்னொரு உண்மைச் சொல்வதானால்..எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடோடு செயல்படும் இணைய தள பதிவர்கள் அனைவரையும் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்துடன் எழுதவைத்த சாதனையை உங்கள் அங்காடித் தெரு செய்துள்ளது.

இதுவரை எந்த ஒரு திரைக்கதை ஆசிரியனும்..இயக்குநரும் தொடாத களம் இது.

பல சமயம் இது போன்ற கடைகளுக்கு விஜயம் செய்துள்ள நாம் ..வாங்கும் பொருளிலேயே கவனம் செலுத்தியுள்ளோம்.இனி நம்மை கவனிக்கும் விற்பனைப் பெண்ணையோ ..பையனையோ கவனிக்க வேண்டும்..அவர்கள் கண்கள் சொல்லும் ஆயிரம் கதைகளை..என்றே தோன்றுகிறது.

திரைப்படத்தில்..சிறு வயதில் வேலைக்கு வந்து..நாள் முழுதும் நின்று..நின்று..கால்கள் பாதிக்கப்பட்டு கடை வேலையை இழந்த நபரின் கால்களைப் பார்க்கையில்..விழியோரம் கண்ணீர் கரை தட்டுகிறது

தன்னைக் காதலிப்பவன் அவன் வேலையைக் காத்துக்கொள்ள..பொய் சொல்லி இவளை நான் காதலிக்கவில்லை என்று கூற..'அந்தக் கடவுள்தாண்டா சாட்சி..அந்தக் கடவுள்தாண்டா சாட்சி' எனக் கதறியபடியே..மேலேயிருந்து கீழே விழுந்து மடியும் பெண்...கரை தட்டிய கண்ணீரை..சற்று வெளியேற்றுகிறாள்.அருமையான ஒரு நடிப்பு..ஒரு துணைப் பாத்திரமிடமிருந்து..

தன் அண்ணன் வேலை செய்யும் கடையின் பையை..கொண்டு செல்லும் தம்பதியரைத் தொடர்ந்துச் சென்று..'என் அண்ணன் வேலை செய்யற கடை..அந்தப் பையை தர்றீங்களா?" ன்னு..கேட்டு வாங்கி(நம்ம சென்னையானா போம்மா..போ..என விரட்டியிருப்பர் அந்த தம்பதிகள்)..அந்தப் பையை மார்போடு இணைத்து ஓடும் சிறுமி..கண்ணீரை முழுதும் நம்மிடமிருந்து வெளியேற்றுகிறாள்.

குள்ளனின் மனைவி..தனக்குக் குழந்தை தன் கணவன் போல பிறந்திருப்பதுக் கண்டு பேசும் வசனங்கள்..கூசாமல் வசை பாடும் நபர்களுக்கு ஒரு சாட்டையடி.



தன் தங்கையத் தேடி நாயகி..நாயகனுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் செல்வதும்..அவள் கௌஹாத்தி போகையில் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவிலும்.திரும்புகையில் ஷேர் ஆட்டோவிலும் நாயகி வருவது போலக் காட்டுவது..இயக்குநர்..எந்த ஒரு சின்ன இடத்திலும் கவனக் குறைவாக இல்லை என்பதைக் காட்டுகிறது.

பழையத் துணியை தோய்த்து..தேய்த்து..புதிது போல செய்து பத்து ரூபாய்க்கு விற்பவன்.......எப்படி இப்படி வசந்தபாலன்!!!!!!

இஸ்லாமிய நண்பர், கண் தெரியாதவர், பிச்சைக்காரன் போல அனைத்து பாத்திரங்களும் மனதில் நிற்பது..இயக்குநருக்கு வெற்றி.

'நீ யாருன்னு கேட்டா...சிரிச்சேன்' "விக்கத் தெரிஞ்சவந்தான் வாழத் தெரிஞ்சவன்'..அவன் என்.....கசக்கினான்..போன்ற இடங்களில் ஜெயமோகன் தெரிகிறார்.

கால்களை இழந்து நாயகி..மருத்துவ மனையில் படுத்திருக்கும் போது...காப்பகத்தில் சேர்க்க வருபவர்கள்..இவளிடமும் வருவார்கள்..அப்போது கணவன் நான் என நாயகன் சொல்வான்..என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த போது...சற்றென..நாயகன் 'நாம கல்யாணம் பண்ணிப்போம்' என சொல்லும் போது..அதில் கூட சின்ன டுவிஸ்ட்.

அண்ணாச்சியாய் நடித்தவர்.(பழ.கருப்பையா).இனி அரசியல் பேசாமல்..நடிப்பில் கவனம் செலுத்தலாம்.மேனேஜராய் நடித்த வெங்கடேஷ் கச்சிதம்.

ஆமாம் கதையில் குறையே இல்லையா? சிறு சிறு குறைகள் ஆங்காங்கு இருந்தாலும்...நிறைகள் அதிகம் இருப்பதால் மறக்கப்படுகின்றன.ஆனாலும்..திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு சிறிது தொய்கிறது..அதில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தின் ஆரம்பத்தில் கவிதை பாடும் கால்கள்...கடைசியில்..உஷ்..மனம் கனக்கிறது.

இதுபோல ஒரு கிளைமாக்ஸ் தேவையா? என்று சிந்திக்கையில்...

தேவை என்றே தோன்றுகிறது...சினிமேடிக்...என்று சொல்லமுடியாது. ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது.இனி மறைமுகமாக உழைத்து முன்னுக்கு வருவார்கள் வாழ்வில் எனக் கொள்ளவேண்டும்.

150 கோடி பட்ஜெட் படத்தை சன் டீ.வி.க்கு தாரை வார்த்துவிட்டு..குறைந்த பட்ஜெட்டில் இது போன்ற அருமையான படத்தை எடுத்த ஐங்கரன்..கருணாமூர்த்தி,அருண் பாண்டியன் பாராட்டுக்குரியவர்கள். இனி இது போன்று பல படங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வரட்டும்.

மொத்தத்தில்..படம்..அருமை..என்று சொல்வதைவிட..அதிகப்படியான பாராட்டுக்கு தமிழில் வார்த்தையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்..

கிடைத்ததும்...அஞ்சலிக்கும்,மகேஷுக்கும்,உங்களுக்கும்,ஜெயமோகனுக்கும் ,கலை இயக்குநருக்கும் தெரிவிக்கிறேன்..

அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..

அன்புடன்

T.V.ராதாகிருஷ்ணன்

Tuesday, March 2, 2010

இப்போதைய படங்கள் ஓடாதது ஏன்..?

இப்பொழுதெல்லாம்..வெளிவரும்..பெரும் செலவில் எடுக்கப்படும் படங்களும்..முதல் இரு வாரங்கள்..அதிக திரையரங்குகளில் ..அதிகக் காட்சிகள் திரையிடப் படுகின்றன.இரு வாரங்கள் கழித்து..கலெக்க்ஷன் குறைய ஆரம்பிக்க..அடுத்து வரும் படத்திற்கு இடம் கொடுக்க இவை எடுக்கப்படுகின்றன. சமீபத்திய உதாரணம்..ஆயிரத்தில் ஒருவன்,குட்டி,அசல்.,

பட சம்பந்தப் பட்டவர்கள் முதல் இரண்டு வாரங்களில் அசலை எடுத்தால் தான் உண்டு.

முன்பெல்லாம்..சில தயாரிப்பாளர்கள்..தங்கள் படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உண்டு என்பார்கள்..இப்போது அப்படியில்லை..ஒரு முறை பார்க்கும் ஆடியன்ஸ் கூட இல்லை.

படத்தின் பிரம்மாண்டத்தை விளம்பரப்படுத்தி..பணம் செலவழித்து விமரிசனங்கள் எழுதச்சொல்லி..மக்களுக்கு படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை எற்படுத்த முயற்சிக்கப் படுகிறது.

நன்கு விளம்பரப் படுத்தப் பட்டு..நல்ல கதையம்சம்..ஸ்டார் வேல்யூ..சிறந்த இயக்குநர் என்று இருந்தால் முதல் வாரம் கூட்டம் வருகிறது.பின் வாய்மொழிப் பரவுவதாலேயே படங்கள் ஓடுகின்றன.இது குறைந்த பட்ஜெட் படங்களுக்கும் பொருந்தும்..

போட்ட பணம் வந்தால்..சம்பந்தப் பட்ட படத் தயாரிப்பு நிறுவனம்..அடுத்த பட வேலைகளை ஆரம்பிக்கின்றனர்.

இங்கேயும்..முன்பு போல விநியோகஸ்தர்கள்..அட்வான்ஸ் கொடுப்பதில்லை.முன்னர் எல்லாம் பூஜை போட்டதுமே..எல்லா எரியாக்களும் விற்கப்பட்டு விடும்.இப்போது அப்படியில்லை.பலமுறை படம் போட்டுக் காட்டப்பட வேண்டியுள்ளது.காரணம் நூற்றுக் கணக்கான படங்கள் ஆண்டுதோறும் வந்தாலும்..வெற்றி பெறுபவை..விரல் விட்டு எண்ணும் அளவே ஆகும்.போதும் போதாதற்கு..மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்..மால்கள்..உணவகங்கள்..பனி விளையாட்டுகள் ..என படம் பார்க்கச் செல்பவர்கள் பர்ஸை இளைக்க வைக்கும் இடங்கள்.

ஒரு குடும்பத்தலைவன்..குறைந்த பட்சம் பத்தாயிரம் சம்பாதிக்கிறான் என்றால்..வார இறுதியில் குடும்பத்துடன் ஒரு படத்திற்குச் சென்றால்..குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது.தவிர்த்து..வீட்டை விட்டு வெளியே வந்து ஆட்டோ..பஸ்..என டிராஃபிக் நடுவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு..பெரும் பாடு பட்டு ..சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ள அவன் தயார் இல்லை.

ஆகவே தான் ஒரு காமன் மேன் அதிகபட்சம் அறுபது ரூபாய் செலவு செய்து குடும்பத்துடன் தன் வீட்டு டி.வி.முன்..புது பட டி.வி.டி.,யையோ, சி டி யையோ..அவை மழை பொழியும் பிரிண்ட் ஆனாலும்..பைரஸி பற்றிக் கவலைப் படாமல் பார்த்து விடுகிறான்.

படம் வெளிவந்து சில வாரங்கள் தங்கள் விருப்பம் போல திரையரங்குகள் டிக்கெட் விலையை ஏற்றுவதும்..சில வாரங்கள் கழித்து..கட்டணத்தைக் குறைக்கும் நேரம் அவன் படத்தை பார்த்து விட்டு..அடுத்த படம் பார்க்க தயாராய் ஆகி விடுகிறான்.

Wednesday, February 17, 2010

சிறு பட்ஜெட் படங்களை விழுங்கும் தமிழ்ப்படங்கள்

2010ம் ஆண்டு பிறந்து 45 நாட்களுக்குள் சில நல்ல தமிழ்ப் படங்கள் வந்துள்ளன.ஆனாலும் அவை எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை.அவற்றிற்கு பல காரணங்கள் சொல்லப் பட்டாலும்..முக்கியக் காரணமாக நான் நினைப்பது திரையரங்கங்கள் பற்றாக்குறை.படங்கள் வரும் அளவிற்கு திரையிட அரங்குகள் இல்லை.

அந்த நாட்களில் படங்கள் வந்தாலும்..சென்னையை பொறுத்த மட்டில்..ஒரு படம் அதிக பட்சம் நான்கு அரங்குகளிலேயே வெளியாகும்..வெளியான நான்கு தியேட்டரிலும் நூறு நாட்கள் ஓடும்..அரங்கு நிறைந்த 100 காட்சிகள் என்றெல்லாம் விளம்பரம் வரும்.

ஆனால் இப்போதோ..பிரபல தயாரிப்பாளர்கள்..நடிகர்கள் படம் பல முக்கிய தியேட்டர்களைப் பிடித்துக் கொண்டுவிடுகின்றன.தவிர்த்து..திரைக்கு வந்து சில நாட்கள் தினமும்..மொத்தத் தியேட்டரிலும் நாளொன்றுக்கு 100 காட்சிகள் ஓடுகின்றன..அதாவது..படம் தோல்வியுற்றாலும்..மக்களிடமிருந்து..அதிக பட்சம் பணம் சில நாட்களில் கறந்து விடுகிறார்கள்.சமீபத்திய உதாரணங்கள்..கந்தசாமி,வேட்டைக்காரன்,ஆயிரத்தில் ஒருவன்,குட்டி ஆகியவற்றைச் சொல்லலாம். சமீபத்தில் வந்த அசல்,தீராத விளையாட்டுப் பிள்ளை ஆகியவை இப்போது கிட்டத்தட்ட 70 காட்சிகள் தினம் நடைபெறுகின்றன.

இந்தப் போக்கால்..மீடியம் பட்ஜெட் படங்கள்..நன்றாக இருந்தாலும் தியேட்டர் கிடைப்பதில்லை.அப்படியே கிடைத்தாலும்..இப்படங்கள் அவற்றில் ஒரிரு காட்சிகளே ஒரு நாளைக்கு நடைபெறுகின்றன.இதற்கு உதாரணமாக போர்க்களம்,நாணயம் ஆகியவற்றைச் சொல்லலாம்.இவையும் நல்ல வரவேற்பு பெற வேண்டிய படங்கள்.சின்ன மீனை பெரிய மீன்கள் சாப்பிட்டு விட்டன.தவிர்த்து..ஒரு மினிமம் பட்ஜெட் படத்திற்கு பெரிய தியேட்டரில் 150 ரூபாய் கொடுக்க நம்ம ஆளுங்க தயாராய் இல்ல.

தீராத விளையாட்டுப் பிள்ளை பெரிய பேனர் என்பதால்.. சில படங்கள் வசூல் சற்று திருப்திகரமாக இருந்தும் அவற்றை எடுத்துவிட்டு இப்படம் போடப்பட்டுள்ளது.

ஜக்குபாய், தியேட்டர் கிடைக்காததால் பொங்கலன்று வெளியாகவில்லை..அன்று வெளியாகி இருந்தால்..இன்னும் சில லட்சங்கள் அதிகம் வசூலித்திருக்கும்..

தமிழ்ப்படம்..வெளிவந்த அன்று..அதற்கு வழிவிட குட்டி படம் சில தியேட்டர்களிலிருந்து எடுக்கப்பட்டது.

சமீபத்தில்..பண்டிகைகளில் நான்கு படங்கள் வரவேண்டும்..மாதம் இவ்வளவு படம் வரவேண்டும் என்றெல்லாம் தீர்மானித்த பட அதிபர்கள்..ஒரு படம் அதிக தியேட்டர்களை எடுத்துக் கொண்டு..மற்ற படங்களுக்கு தியேட்டர் இல்லை என்ற நிலையையும் மாற்ற வேண்டும்..

இல்லையேல்..இதே போக்கு நீடித்து..பெரிய பேனர்..நல்ல சேனல் விளம்பரம் உள்ள படங்கள் மட்டுமே..தரம் தாழ்ந்திருந்தும் வரும் நிலை ஏற்படும்.தரமுள்ள மீடியம் ,குறைந்த பட்ஜெட் படங்கள் வெளிவரா நிலை ஏற்படும்.

Sunday, January 31, 2010

தமிழ்(ப்)படம்...இது விமரிசனமல்ல


வலைப்பூ நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு மித்த பாராட்டுகளுடன்..சமீப காலங்களில் விமரிசித்துள்ள ஒரு தமிழ் படம்..'ப்' உண்டா இல்லையா என்று இவர்கள் தீர்மானம் செய்யவே நீண்ட நாட்கள் யோசித்திருப்பார்கள் போலும்..இப்படம் வெளியாகியுள்ள அனைத்து திரையரங்கிலும்..அரங்கு நிறைந்த காட்சிகளாகவே இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.கழகக் கண்மணிகளுடன் சேர்ந்து நாமும் இப்படத்தை ஒரு வெற்றி படமாக்குவோம்.இது ஒரு ஸ்பூஃப்படமாம் :-))

மல்லாக்கப் படுத்துக் கொண்டு..காரி உமிழ்ந்திருக்கிறார்கள்.

ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிப்பு..சிரிப்பு..சிரிப்புதான்..ஓவர்டோஸ் என்று கூட சொல்லலாம்.ஆடையின்றி போவோரைக் கூட பார்த்து சிரிப்பவர்கள் நாம்.

சாதாரணமாகவே..ஒருவர் தெருவில்..வாழைப்பழத்தோலால் வழுக்கி தெருவில் விழுந்தால் கூட..சாதாரண மனிதன் முதலில் சிரிப்பான்..பின்னர்தான் அடிப்பட்டவனுக்கு உதவப் போவான்.கிட்டத்தட்ட இப்பட இயக்குநர் அந்த வேலையைத் தான் செய்துள்ளார்.தமிழ்ப் பட உலகின்..லாஜிக் பற்றி கவலைப் படாத போக்கைக் காட்டி..நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.அப்படிப் பார்த்தால்..பெரும் பொருட்செலவில் தயாரிக்கப் படும்..பிரம்மாண்டப் படங்கள், அவை எந்த மொழிப் படங்களாக இருந்தாலும்..அவற்றுள் லாஜிக் இருக்கிறதா?

அமுதனின் இப்போக்கு கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவதற்கு சமம்.

முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்புக் கொண்ட..லாஜிக்குடன் ஒரு வெற்றி படத்தை..அமுதன் கொடுத்து விட்டு..அடுத்து இப்படி ஒரு படம் கொடுத்திருந்தால் கூட ரசித்திருக்கலாம்.அதைவிடுத்து..எல்லோருக்கும் தெரிந்தவற்றையே..அவர் சார்ந்துள்ள துறை பற்றி..கிண்டலுடனும்..கேலியுடனும் சொல்வதை என்னால் ரசிக்க முடியவில்லை.

பார்ப்போம்..அடுத்து இந்த அமுதன் என்ன செய்யப் போகிறார் என்று.

Saturday, January 16, 2010

பொங்கலுக்கு நான் பார்த்த படம்- விமரிசனம்



ஒவ்வொருவரும் பொங்கல் வெளியீடு படங்களைப் பார்த்து...தங்கள் விமரிசனங்களை பதிவில் ஏற்றிக் கொண்டிருக்க..ஊரோடு என்றும் சேர்ந்து வாழும் நான் அப்படி செய்யாதது மன வருத்தத்தைக் கொடுக்க..நான் காணும் பொங்கலன்று கண்ட படத்தை விமரிசிக்கிறேன்..

விஜய் டி.வி.யில் சனிக்கிழமை 10 மணிக்கு பிரகாஷ் ராஜிற்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த .'காஞ்சிவரம்' படம் ஒலி/ஒளி பரப்பானது.அப்படத்தை முன்னர் நான் பார்க்காததால்..இப்போது பார்க்க தீர்மானித்தேன்.இது என்ன தீர்மானிப்பது என்கிறீர்களா..பின்னே இல்லையா..இரண்டு மணி நேர படம்..நான்கு மணி நேரம் ஓடியது என்றால்...அதைப் பார்த்த நான் பொறுமைத் திலகம் அல்லவா?

நடுநடுவே ஐந்து நிமிடத்திற்கு ஒரு விளம்பர இடைவேளை..அடுத்து ஐந்து நிமிடத்திற்கு பிரகாஷ் ராஜ் பேச்சு..இப்படி நான்கு மணி நேரம் இடை இடையே படம் ஓடியது.

ஏழை நெசவாளிகள்..கம்யூனிசம் வருவதற்குமுன்..முதலாளித்துவத்தால் பட்ட துன்பங்களைப் படம் சொல்கிறது.பட்டு சேலை நெய்யும் ஒரு நெசவாளி..தன் திருமணத்திற்கு மனைவிக்கு பட்டு சேலை எடுக்க நினைக்க..அது முடியாது..தன் மகள் திருமணத்திற்குள் மகளுக்கு பட்டு சேலை எடுத்துவிடுவேன் என்கிறார்.அதற்காக தினசரி பட்டு நூலை சிறிது சிறிதாகத் திருடி..வீட்டில் மறைவான இடத்தில் தறி போட்டு நெய்கிறார்.இந்நிலையில் மனைவியின் மரணம் நேருகிறது.இதற்கிடையே..கம்யூனிச எழுத்தாளரை சந்திக்க..இவர் மனமும் அதை நாட..நெசவாளிகள் கோரிக்கைகளை எழுப்பச் சொல்லி தலைமை தாங்குகிறார்.ஒரு நாம் இவர் நூலைத் திருடிப் போகையில் மாட்டிக் கொண்டு சிறை செல்கிறார். அதனால் மகளுக்கு நடக்க இருந்த மணம் நின்று போகிறது.மகள் நோய் வாய்ப்பட ..பரோலில் வரும் அவர்..தன் கையால் மகளுக்கு விஷச் சோறு ஊட்டி..அவள் பிணத்தின் மீது..அதுவரை அரைகுறையாய் நெய்த பட்டை போர்த்துகிறார்.

பின்னர் நெசவாளிகளுக்கென Co op. society 1950ல் உருவானது என்ற கேப்ஷனுடன் முடிகிறது.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்ததை விட அற்புதமாக பல படங்களில் நடித்துள்ளார்.சமயங்களில் முன்னர் கொடுக்க முடியாது விடுபட்டால்..பின்னர் ஒரு நாள் வேறு எதற்காவது கொடுப்பது வழக்கம்.அப்படித்தான் இதற்கும் என்றே தோன்றுகிறது.

Starring: Prakash Raj, Shreya reddy

Direction: Priyadarshan

Music: M. G. Sreekumar

Production: Shailendra Singh

Saturday, January 9, 2010

ஜக்கு பாய் சி.டி.யும்., படத் தயாரிப்பாளர்களும்..

சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்திற்கான சி.டி., படம் வெளியாகும் முன்னரே வந்தது..திரைப்படத்துறையையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது.கமல்,ரஜினி என ஆளாளுக்கு மனதில் தோன்றியதை பேசிவிட்டார்கள்.முதல்வரையும் சந்தித்தனர் திரையுலகத்தினர்.முதல்வரிடம் பெட்டிசன் கொடுக்கப்பட்டது.இது சம்பந்தமாக சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

படம் வெளியாகப் போகிறது.15 கோடி முதலீடு என ராதிகா கண்ணீர்..எல்லாம் சரி..ஆனால் படத்தை இவ்வளவு நாள் டிஸ்ட்ரிபியூட்டருக்கு விற்றிருப்பார்களே..அவர்கள் தரப்பிலிருந்து ஏன் ஏதும் எதிர்க்குரல் எழும்பவில்லை.

தமிழகத்தில் 32 மாவட்டங்கள்..ஓவர்சீஸ் வெளியிடு,டிவி.டி.ரைட்ஸ்,ஆடியோ வெளியீடு, சேனல் ரைட்ஸ் இப்படி வியாபரம் இருக்கும் போது 15 கோடியை எளிதில் திரட்டிவிடலாமே! மேலும் இப்போதெல்லாம்..பட வெளிவந்து தோல்வியடைந்தால் என்ன செய்வது..என..அதிகத் தியேட்டர்களில்,அதிகக் காட்சிகள் என சில நாளிலேயே தோல்வி அடைய வேண்டிய படத்தையும்..வசூல் சாதனை என ஏற்படுத்தி விடுகிறார்களே..அப்படியெல்லாம் இருக்கும் போது 15 கோடி ஜுஜுபி ஆயிற்றே.

நம் சந்தேகம்..சொல்லப்பட்டுள்ள தொகை கணக்கில் காட்டும் தொகையாக மட்டுமே இருக்கக்கூடும்..மேலும் கறுப்புபணம் கணக்கில் சொல்லப்பட்டிருக்காது.

படத்தயாரிப்பு ராடன் ..மேலும் ராடன் ராதிகாவிற்கு மட்டுமே சொந்தமானதில்லை..பொதுத்துறை நிறுவனம் அது..ஆகவே அது மக்கள் பணம்.

படம் வெளிவரும் நேரம்..பிரச்னை பூதாகாரமாக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

இதன் உள்நோக்கம் அறிந்துதான் ரஜினியும்..படத்தை உடன் வெளியிடுங்கள்..நல்ல பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது என்றாரோ!

Thursday, December 31, 2009

2009ல் தமிழ் சினிமா..


2009ல் 124 நேரடி தமிழ்ப்படங்கள் வந்துள்ளன.இவற்றுள் எவை வெற்றி படங்கள்..எவை வசூல் சாதனை புரிந்தவை..எவை தோல்வி படங்கள் என்பதைப் பற்றி அல்ல இப்பதிவு.

படத்தயாரிப்பு, ஸ்டூடியோ தொழிலாளிகள்,திரையரங்க ஊழியர்கள் என ஆரம்பித்து போஸ்டர் ஒட்டுபவர்கள் என லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ள துறை இது.இதில் வெல்ல வேண்டும் என மெய் வருத்தம்,பசி பாராது கண்துஞ்சாது உழைக்கும் வர்க்கம் நிறைந்த துறை இது.இதன் ஒளி..பல விட்டில் பூச்சிகளை அழித்தது உண்டு..ஆனலும் இதன் கவர்ச்சியில் மயங்காதார் இல்லை எனலாம்.

முன்பெல்லாம் ஒரே ஹீரோ நடித்த6 அல்லது 7 படங்கள் வருவதுண்டு..அனால் இப்போது பெரிய நடிகர்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.இதுவே அதிகம் புதியவர்கள் நுழைய வழி வகுத்துள்ளது எனலாம்.

இந்த ஆண்டு மட்டும் 45 புது ஹீரோக்கள் அறிமுகமாகியுள்ளனர்.50 ஹீரோயின்கள் உருவாகியுள்ளனர்.69 புதிய இயக்குநர்கள் படங்கள் வந்துள்ளன.

பசங்க பட இயக்குநர் பாண்டிராஜ் இந்த வருட புது இயக்குநர்களில் வெற்றி இயக்குநராகத் திகழ்கிறார்.சமுத்திரக்கனி,அறிவழகன் போன்று சிலர் திறமை மிக்கவர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

45 புதிய இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளனர்.கருணாஸ்,ஸ்ருதி கமல் போன்றவர்கள் பாராட்டு பெற்றுள்ளனர்.

ஆனாலும் ஒரு செய்தி வருத்தத்தையே அளிக்கிறது.வெளிவந்த படங்களில் 10 சதவிகிதப் படங்கள் கூட வெற்றி படங்களாகத் திகழவில்லை.

காரணம்..புதிய சிந்தனை இல்லை.மாறுபட்ட சிந்தனைப் படங்கள் சில வெற்றி பெற்றுள்ளதே இதற்கு சான்று.மாறுபட்ட சிந்தனையுடன் குறைந்த பட்ஜெட்டில் வந்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வில்லை.

தமிழ்ப் பட உலகில் பல புது கதாசிரியர்கள் உருவாக வேண்டும்.அரைத்த மாவையே அரைத்த காலம் அல்ல இது.புதுப்புது சிந்தனைகள் வரவேண்டும்..அதுதான்..வீட்டு டிராயிங் ரூமிலிருந்து மக்களை திரையரங்கிற்கு இழுக்கும்.அப்படிப்பட்ட படங்கள் வந்தால்..யார் நடித்திருந்தாலும்..குறைந்த பட்ஜெட் படமானாலும் வெற்றி பெறும்.

.இந்த இண்டஸ்ட்ரியை நம்பி..லட்சக்கணக்கானோர் வாழ்வு பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது.அவர்கள் நலனுக்காவது நல்ல படங்கள் வரட்டும்...பல புது தயாரிப்பாளர்கள் உருவாகட்டும்.

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் சாதனைக்காரன்..

தமிழ்ப் படங்களில் ரஜினி படங்கள் வசூலில் சாதனைப் படைப்பது என்பது ஆச்சரியமில்லை.ஆனால்..சமீப காலமாக ஆதவன்,கந்தசாமி,அயன் ஆகியபடங்களும் வசூல் சாதனைப் படைத்தன.

அந்த நாட்களில் சிவாஜி,எம்.ஜி.ஆர்., படங்கள்..சென்னையில் வெளியிடப்பட்ட நான்கு தியேட்டர்களிலும் நூறு நாட்கள் ஓடினால்..அதை சாதனையாக விளம்பரப் படுத்தியது உண்டு,ஆனால் இப்பொதெல்லாம் ஒரு படம் நூறு நாட்கள் ஓடுவதோ..சில்வர் ஜூபிலி ஓடுவதோ சாதனையாக இருப்பதில்லை.கந்தசாமி நொண்டி..நொண்டிதான் கடைசியில் பகல் காட்சியாகி நூறு நாட்கள் ஓடியதாக கணக்கில் காட்டப்பட்டது.

படம் ஓடாமல்..வசூல் சாதனை எப்படி..என்று கேட்டால்..

இப்போதெல்லாம்..பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் 600 பிரிண்டுகள் போடப்படுகின்றன.ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப் படுகின்றன.வெளியான ஓரிரு வாரங்களில் நல்ல வசூலுடன் சாதனைப் படைப்பதுடன்..தயாரிப்பாளர்,விநியோகஸ்தர்,தியேட்டர் உரிமையாளர்கள் என எந்த அக்ரிமெண்டில் இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது லாபம் தரத் தொடங்குகின்றன.

வேட்டைக்காரனும் அதே வழியைப் பின்பற்றுகிறான்..

படத்தில் புதுமை ஏதும் இல்லை..சுமார் தான் என செவி வழிச் செய்திகள் கிடைத்தாலும்..600 பிரிண்டுகளுடன் உலகம் முழுதும் ஒரே நாளில் வெளியாகி உள்ள இப்படம்..சென்னையில் மட்டும்..ஒரே நாளில் 126 காட்சிகளுக்கு மேல்நடைபெறுகிறது.மாயாஜாலில் ஒரு நாளைக்கு 42 காட்சிகள்.

குறைத்து மதிப்பிட்டு..ஒரு காட்சிக்கு 50000 நிகர வருமானம் என வைத்துக் கொண்டாலும்..ஒரு வாரத்தில் சென்னயில் மட்டும் 4 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளும் என்று நம்பலாம்.

இதுவரை வசூல் சாதனைப் படைத்துள்ள படங்கள் எல்லாவற்றையும் தாண்டி வேட்டைக்காரன் வசூல் அள்ளுவான் என சென்னை நகரம்,சேலம் விநியோக உரிமை பெற்றுள்ள அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

விஜய் படத்திற்கு முன் எப்போதும் இல்லா அளவிற்கு இப்படம் ஓபனிங் கொடுத்துள்ளதாம்.

எல்லாருக்கும் தேங்க்ஸ்ணா என்கிறாரா விஜய்..

Wednesday, December 9, 2009

கலைஞரும்..குஷ்புவும்..அண்ணாசாமியின் சந்தேகமும்..

அதிபுத்திசாலி அண்ணாசாமிக்கு திரைப்பட விருது வழங்கு விழா நிகழ்ச்சிகள் குறித்து சில சந்தேகங்கள் ஏற்பட்டதாம்.அவை..அண்ணாசாமியே சொல்கிறார்..

2007 மற்றும் 2008 க்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.70க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு முதல்வர் விருதுகள் வழங்க..சிறந்த உரையாடலுக்கான விருதை கலைஞருக்கு ரஜினி,கமல்,வாலி,வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.அரசின் விருது..அரசில் சம்பந்தப் படாதவர்கள் வழங்குவது சரியா என தெரியவில்லை.

சரி..தலைப்புக்கு வருவோம்..விழாவில் கலைஞர் பேச்சில் ஒரு துளி...

உடலுக்கு, உயிருக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்படாது என்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.எனக்கு மருந்தாக அமைவது கலையுலகம்தான்.இங்கு விவேக் ஒரு கற்பனை நாடகத்தை நடத்தினார்.தமிழை காப்பாற்றியே தீருவோம் என்றார்.குஷ்பு பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழ் மொழியின் வல்லமை எத்தகையது என உணரலாம்.அத்தகைய சக்தி தமிழுக்கு உண்டு.உலகம் முழுதும் பரவிய மொழி தமிழ்.மற்ற மொழி போல ஆதிக்கம் செலுத்த வந்த மொழி இல்லை.அதுதான் நம் தாய் மொழி.செம்மொழி தமிழ்.இதை காப்பாற்ற பல போராட்டம் நடத்தி நாம் வென்றோம்.

இனி அவரின் சந்தேகங்கள்...

தமிழ் அழியாத மொழி என்றால் போராட்டம் நடத்தி வென்றோம் என்றால் ....கலைஞர் சொல்ல வருவது புரியவில்லை.

குஷ்பு தமிழ் பேசத் தெரியாதவர் என்றால்..அரசு விழாவில் தொகுத்து வழங்க அவரை ஏற்பாடு செய்தது யார்.

ஒரு வேளை ஜெயா டி.வி.,யில் குஷ்பு நிகழ்ச்சிகள் நடத்துவதால் அதை மறைமுகமாக கலைஞர் கிண்டல் செய்தாரா?

குஷ்பு பேசியே தமிழ் அழியாது என்றால்..படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைத்தால் வரிச்சலுகை ஏன்?

வரிச்சலுகையை நியாயப்படுத்தி பேசினால்..தமிழ்ப் படங்களில் தமிழ் நடிக..நடிகர்கள் நடித்தால் மேலும் சில சலுகைகளை அறிவிக்குமா அரசு.

இங்கு ஒரு லட்சம் அல்லது இரு லட்சம் தருவார்கள் அதை ஏழை எளிய மக்கள் வாழ்வதற்கும்..முதல்வர் நிவாரண நிதிக்கும் வழங்கலாம் என நினைத்தேன்.ஆனால் அப்படித்தராமல் தங்கப் பதக்கம் அணிவித்தனர்..என்று முதல்வர் பேசியுள்ளார்..தன் அரசு வழங்கும் விருது பதக்கமா..பணமா என்பது கலைஞருக்கு முன்னமே தெரியாதா?

Tuesday, October 27, 2009

Orphan ஆங்கிலப் படம்

தங்களின் மூன்றாவது குழந்தை இறந்தே பிறந்ததால்..9 வயது எஸ்தர் என்னும் ரஷ்யன் பெண்ணை தத்தெடுக்க முடிவெடுக்கின்றனர் அந்த தம்பதிகள்.ஆனால் அப்பெண் வீட்டிற்கு வருவதை மகன் விரும்பவில்லை.ஆனால்..வாய் பேசமுடியாத ,காது கேட்காத இளைய மகள் விரும்புகிறாள்.

ஆனால் எஸ்தர் பள்ளியில் யாருடனும் ஒட்டுவதில்லை.அவளால் உடன் படிக்கும் பெண் விழுந்து கால் காயம் எற்படுகிறது.அவள் போகும் இடமெல்லாம்..ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதால்..அதைப் பற்றி அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் கேட்க..அதன் தலைவி அதை ஒப்புக் கொண்டு..மேலும் சில தகவல் தர அவளை எஸ்தர் கொன்று விடுகிறாள்.பின் அவள் பற்றி ரகசியம் தெரியும் மகனை கொல்ல முயற்சிக்கிறாள்..ஒரு நாள் இரவு தந்தை கொல்லப்படுகிறார்.

பின் தாயும்..இளைய மகளையும் கொல்ல முயலுகிறாள்.

இந்த ஹாரர் திரில்லர் படத்தில் இதற்கு மேல் கதையைச் சொன்னால் பார்க்கும் இன்டெரெஸ்ட் போய் விடும்

படத்தின் கடைசிக் காட்சிகளில் சீட்டின் நுனிக்கு வந்து..நகைத்தை கடித்துக் கொண்டிருப்போம்..இது இயக்குநரின் வெற்றி.

கண்டிப்பாக படத்தை பாருங்கள்.

படத்தின் இயக்கம் jaune collet serra
இசை john ottman
ஒளிப்பதிவு jeff Cutter

வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு

படத்தில் எஸ்தராக நடித்த 12 வயது Isabella Fuhrman நடிப்பு சூப்பர்



Friday, October 23, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 5

1966ல் வந்த படம் அவன் பித்தனா...இசை ஆர்.பார்த்தசாரதி..எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தார்...'இறைவன் இருக்கின்றானா' என்ற பாடல் பிரசித்தம்.படத்தின் திரைக்கதை, வசனம் கலைஞர்.

1966ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் மறக்கமுடியுமா? கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்திருந்தார்கள்.முரசொலி மாறன் இயக்கம்.திரைக்கதை வசனம் கலைஞர்.படத்தின் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி..படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பாடல் ஒன்று தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.ராமமூர்த்திக்கு திருப்தி ஏற்படவில்லை.எப்படித்தான் வேண்டும்..என மாயவநாதன் கேட்க..சற்று கோபத்தில் இருந்த ராமமுர்த்தி..'மாயவநாதா..மாயவநாதா..மாயவநாதா..' ன்னு எழுது என்றாராம்.இதனால் மாயவனாதன் கோபித்துக் கொண்டு போய்விட..விஷயம் அறிந்த கலைஞர்..தானே அதே போல் பாடல் இயற்றினாராம்.அதுதான் பி.சுசீலா பாடி பிரபலமான 'காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல்.

1966ஆம் வருடம் வந்த படம்..மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.முன்னர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்த கதை.இசை சுதர்ஸனம்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்

1967ல் வந்த படம் தங்கத்தம்பி..ரவிச்சந்திரன்,பாரதி நடிப்பு.இசை கே.வி.மகாதேவன்..திரைக்கதை வசனம் கலைஞர்

1967ல் வந்த மற்றொரு படம் வாலிப விருந்து.மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம்.முரசொலி மாறன் இயக்கம்.ரவிச்சந்திரன்,பாரதி,சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.சந்திரபாபு பாடிய 'ஒன்றைக்கண்ணு டோரியா' என்ற பாடல் ஹிட்.

1970ல் மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம் எங்கள் தங்கம்..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.கலைஞர் கதை..கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்...இசை விஸ்வநாதன்.

மற்ற படங்கள் அடுத்த பதிவில்.

Monday, October 19, 2009

தேமதுரக் குரலோன் P.B.ஸ்ரீநிவாஸ்


ஏ.எம்.ராஜா..போன்றே..குரலையுடையவர் ஸ்ரீநிவாஸ்..கல்கண்டு போன்ற இனிமை.

ஆந்திராவில் காகிநாடாவில் 1930ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு தெலுங்கு,தமிழ்,மலையாளம்,ஹிந்தி,உருது,கன்னடா,சேன்ஸ்கிரிட் மற்றும் ஆங்கிலம் என்று எட்டு மொழிகள் தெரியும்.ஜாதகம் படம் மூலம் அறிமுகமானார் இவர்..பிரேமபாசம் படம்தான் இவரை அனைவருக்கும் வெளிக்காட்டியது.பாவமன்னிப்பு படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம் 'பாடல் இவருக்கு புகழை ஈட்டித்தர ஆரம்பித்தது.
இவர் குரல்..ஜெமினி,முத்துராமன்,பாலாஜி ஆகியோர்களுக்கு சரியாக இருந்தது.இவர் பாடி என் நினைவில் நிற்கும் சில பாடல்கள்.

ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்
என் அருகே நீ இருந்தால்-திருடாதே
பால் வண்ணம் பருவம் கண்டு-பாசம்
காற்று வெளியிடை கண்ணம்மா-கப்பலோட்டிய தமிழன்
இன்பம் பொங்கும் வெண்ணிலா-வீரபாண்டிய கட்டபொம்மன்
அழகிய மிதிலை நகரினிலே-அன்னை
ஆண்டொன்று போனால்-போலீஸ்காரன் மகள்
எந்த பருவத்து கேள்விக்கு - சுமைதாங்கி
ஒடிவது போல இடை இருக்கும்-இதயத்தில் நீ
மாம்பழத்து வண்டு-சுமைதாங்கி
யார்..யார்..அவள் யாரோ--பாசமலர்
அவள் பறந்து போனாளே-டி.எம்.எஸ்.உடன் சேர்ந்து பார் மகளே பார் படத்தில்
பொன் ஒன்று கண்டேன்-படித்தால் மட்டும் போதுமா
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்- ஊட்டி வரை உறவு
உங்க பொன்னான கைகள்-காதலிக்க நேரமில்லை
நிலவே என்னிடம் - ராமு
நேற்றுவரை நீ யாரோ-வாழ்க்கைப்படகு
அடுத்த வீட்டுப் பெண் படத்தில் 'கண்ணால பேசி பேசி' பாடலும், வாடாத புஷ்பமே பாடலும் கேட்கக் கேட்க திகட்டாதவை.

ஆமாம்..முக்கியமான ஒரு பாடலை விட்டுவிட்டேன் என்கிறீர்களா? இவர் பெயரைக் கேட்டதுமே வயது வித்தியாசம் இல்லாது அனைவரும் முணுமுணுக்கும் பாடல்...ஆம்..அதுதான்

சுமைதாங்கிக்காக இவர் பாடிய 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்'

சென்னை வுட்லண்ட்ஸ் டிரைவின் இருந்தவரை இவரை அங்கு பார்க்கலாம்..சட்டைப்பை நிறைய பேனாக்களுடன்..கையில் ஒரு டயரி வைத்துக் கொண்டு கவிதை எழுதிக் கொண்டிருப்பார்..இப்போது நாரத கான சபா வளாகத்தில் உள்ள வுட்லண்ட்ஸில் காணலம்.