மன்னராட்சிக் காலத்தில்...மன்னனை வாழ்த்திப் பாடி பொன்னும், பொருளும் பெறுவர் தமிழ்ப் புலவர்கள்.
அந்த காலம் மீண்டும் திரும்பியுள்ளதோ என்று நினைக்க வைக்கிறது இந்த செய்தி
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. இந்த விழாவில் கட்சி சார்பற்று முழுக்க முழுக்க தமிழறிஞர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் பேசியவர்கள் அரசியலைத் தொடத் தவறவில்லை.
பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசுகையில், ஒரு குழந்தை பிறந்தால் பெற்றோருக்கும் உற்றார்-உறவினர்களுக்கும்தான் மகிழ்ச்சி. ஆனால் 59 வயது இளைஞரின் பிறந்த நாளை ஊரே உறவாடி கொண்டாடி மகிழ்கிறது. ஒருவரை மக்கள் எளிதில் பாராட்டி விடமாட்டார்கள். அதற்கான தகுதி இளைஞர்களை வழிநடத்தும் தளபதியிடம் உள்ளது. தந்தையின் தடத்தில் எப்படி நடப்பது என்பதை இன்றும் படித்து பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.
கருணாநிதி ஆட்சியில் அள்ளி கொடுக்கிறாருங்க.... ஓய்வு பெற்ற பேராசிரியரான எனக்கு ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா? மாதம் ரூ. 33 ஆயிரம். வாங்கிட்டு போ... சந்தோஷமா வாழு என்று தமிழக மக்களை வாழ வைக்கிறவர் அவர். தந்தைக்கு பெருமை சேர்ப்பவர் தளபதி. பேசுவதை விட செயல் திறன்தான் நாளைய வெற்றிக்கு அடையாளம். அப்படிப்பட்டவர் மு.க. ஸ்டாலின்.
இளைஞர்கள்தான் இந்த நாட்டின் மாற்றத்தை உருவாக்குபவர்கள். இளைஞர்களை வழி நடத்துபவர் மு.க.ஸ்டாலின். கலைஞரும், தளபதியும் மனிதர்களை நேசிப்பவர்கள். தமிழகம் வளர கருணாநிதி ஆட்சி தொடர வேண்டும், என்றார்.
விழாவில் திண்டுக்கல் லியோனி பேசுகையில், தமிழ் காப்பாற்றப்பட வேண்டும். ஒரு மொழி அழிந்து விட்டால் இனம் அழிந்து விடும். தமிழ் வாழ, தமிழகம் வளர கருணாநிதி ஆட்சி தொடர வேண்டும் என்பது தமிழறிஞர்கள் ஆசை. இளைஞர்கள் தடம் மாறாமல் அணிவகுக்க வேண்டும், என்றார்.