Showing posts with label தமிழ் - இலக்கியம். Show all posts
Showing posts with label தமிழ் - இலக்கியம். Show all posts

Sunday, September 12, 2010

காதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் தமிழ் - 21




(132- புலவி நுணுக்கம் தொடர்ச்சி)

முந்தைய பதிவிற்கு

எதற்கெடுத்தாலும்..சந்தேகப் படுகிறாளே..இவள் நம் மீது சந்தேகப் படக்கூடாது, அதே நேரம் அவளை மகிழ்விக்கவும் வேண்டும்..என்ன செய்வது என எண்ணிய காதலன்..'உன்னை நினைத்தேன்' என்கிறான்..

ஆகா..இவர் நம்மை நினைத்தாரே என காதலி மகிழ்வாள் என எண்ணுகிறான்..அவளோ..'அப்படியானால்..இவ்வளவு நாளாக என்னை மறந்திருந்தீரா..ஏன் மறந்தீர்? என அவனிடம் ஊடல் கொள்கிறாள்.காதலன் பாடு திண்டாட்டம் ஆகிவிடுகிறது..அந்த சமயம் அவனுக்கு தும்மல் வர..தும்முகிறான்..'யார் உன்னை நினைத்தார்கள்..என்னைவிட முக்கியமானவர் யார்..' என ஊடல் மாற அழத் தொடங்குகிறாள்.அவனுக்கு அடுத்த தும்மல் வர, எதற்கு வீண் வம்பு..என தும்மலை அடக்குகிறான்.அதைப் பார்த்த அவள்..'ஓஹோ..உமக்கு நெருக்கமானவர் உம்மை நினைப்பதை..என்னிடம் இருந்து மறைக்க..வரும் தும்மலை அடக்குகிறீர்களா..என்கிறாள்.

அவளை சமாதானப் படுத்த வேறு வழி அறியாத அவன் தன்நிலை இறங்கி, பணிந்து..அவள் ஊடலை நீக்கி..மகிழ்விக்க எண்ணுகிறான்..அப்போதும் அவனிடம்..'இப்படித்தான் மற்ற பெண்களிடமும் இப்படித்தான் அசடு வழிய நடந்துக் கொள்வீரா?' என்று கோபப் படுகிறாள்.

அவள் அழகில் மயங்கியவன்..அவளை இமைக் கொட்டாமல் பார்க்கிறான்..இதற்கும் கோபமுற்று..இப்படி என்னைப் பார்த்து..யாருடன் என்னை ஒப்பிடலாம் என என்னை இப்படி பார்க்கிறீர்..என கோபத்தின் உச்சிக்குப் போகிறாள்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள் -1316

('உன்னை நினைத்தேன்' என்று காதலியிடம் சொன்னதும்..'அப்படியாயின் நீர் என்னை மறந்திருந்ததால் தானே நினைத்திருக்க முடியும்?' எனக் கேட்டு "ஏன் மறந்தீர் ?" என்று அவள் ஊடல் கொண்டாள்)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று -1317

(தும்மினேன்.. என்னை வாழ்த்தினாள்..உடன் சந்தேகத்துடன்..'யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்' என்று அழத் தொடங்கினாள்)

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று -1318

(தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்தவள்..நீர் உள்ளத்தில் உள்ளவரை என்னிடம் மறைக்கிறீர் என அழுதாள்)

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று -1319

(தான் பணிந்து போனாலும் உடன் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடப்பீரா என்று கோபம் அடைகிறாள்)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று -1320

(அவளையே நினைத்து பார்த்தாலும்..யாருடன் ஒப்பிட்டு நோக்கினீர் என்று கோபம் கொள்வாள்)

இப்படிப்பட்ட சந்தேகமும்...கோபமும் கொண்ட காதலியுடன் (தலைவியுடன்) காதலன் (தலைவன்) எப்படி காலம் தள்ளுவான்...பாவம் அவன் நிலை

Monday, July 26, 2010

கம்பனும்..குரங்கும்..(கொஞ்சி விளையாடும் தமிழ் - 19)



நாம் அவமானப்படுத்தப் படுகிறோம்..

நம் எண்ணங்கள் எள்ளி நகைக்கப்படுகின்றன..

இந்நிலையில் நாம் என்ன செய்வோம்...

ஒன்று நம்மை புரியாதவர்களிடமிருந்து பிரிவோம்..

அல்லது..இவர்கள் எப்படிப் போனால் என்ன..நம்மை விரும்புபவர்களும் இருக்கிறார்களே..என மகிழ்வோம்..

அல்லது..இவர்களிடமிடுந்து விலகி..இவர்கள் கண் காணா இடத்திற்கு செல்வோம்..

கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது.சோழ மன்னனிடம் ஏற்பட்ட சிறு பிணக்கு காரணமாய்..அவனால் அவமானப் படுத்தப்பட்டு..அந்த நாட்டை விட்டே போக எண்ணிய கம்பன்..மன்னனைப் பார்த்து..கீழ் கண்ட பாடலைப் பாடுகிறான்..

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதுவோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு



நீயும் ஒரு மன்னனா..இந்த நாடு உனக்கு சொந்தமா..நீ இருக்கிறாய் என்ற எண்ணத்திலா நான் தமிழ் பாடும் கவிஞன் ஆனேன்..கவிஞனான என்னை எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்நாட்டு மன்னர்கள் விரும்பி வரவேற்பார்கள்..எப்படி..ஒரு குரங்கை..மரத்தின் சிறு கிளையும் தாங்குகிறதோ..அதுபோல மன்னர்கள் என்னை தாங்குவர்..என்கிறான்.
..


இதையே ஔவையார் மூதுரையில் இப்படிச் சொல்கிறார்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு

ஒரு நாட்டு மன்னன், கல்வி அறிவு படைத்தவன்..இவர்களில் யார் சிறந்தவன் என்று பார்த்தால்..கற்றவனே சிறந்தவன்..ஒரு நாட்டு மன்னனுக்கு அவன் நாட்டில்தான் மதிப்பு, சிறப்பு..அந்நாட்டை விட்டு வெளியேறினால்..மன்னன் சாதாரணமானவன்.ஆனால்..கல்வி அறிவு படத்தவனுக்கு ,அவன் எந்த நாட்டில் இருந்தாலும், எந்த இடத்திற்குச் சென்றாலும் சிறப்புடையவனாகக் கருதப் படுவான்

Sunday, July 4, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 18

பாரதியைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர்..பாரதியின் பால் கொண்ட ..பக்தியால்..பெயர் மாறி பாரதிதாசனாக ஆன கனகசுப்பு ரத்தினம்..பாரதியை 'பைந்தமிழ்ப் பாகன்,செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை,கவிக்குயில், என்றெல்லாம் பாடிப் புகழ்ந்துள்ளார்.

பின்னர் பல ஆண்டுகள் கழிந்து...புதுக்கவிதையினால் வைரமுத்து அந்த மீசைக் கவிஞனைப் பாடியுள்ளார்.

ஒரு சிறிய வீரியம் மிக்க விதை நிலத்தில் முளைக்கையில் வெற்றி கொள்கிறது.ஒரு சிறிய விதைக்கான ஆற்றல் இப்படி இயலும் எனில் பாரதியை ஈன்ற அன்னையின் கருப்பை நெருப்பைச் சுமப்பதும், ஒரு தீக்குச்சி எரிமலையைச் சுட்டெரிப்பதும் இயலும்.இதையே வைரமுத்து...

அது எப்படி?
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த் கருப்பை?
அது கூடச் சாத்தியம்தான்
ஆனால்- இது எப்படி
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?

என்கிறார்...

தவிர்த்து பாரதியின் எளிமை, இனிமையை.. தமிழன்னை விரும்பினாள்..ஆகவேதான் அவனின் 'கிழிசல் கோட்டில் தஞ்சம் புகுந்தாளாம் ..

உன் பேனா
தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல் கோட்டு
கவிதா தேவிக்குப்
பீதாம்பர மானது

என்கிறார்.

(கவியரசு வைரமுத்துவின் 'நிலத்தை ஜெயித்த விதை' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ள வைர வரிகள் மேலே குறிப்பிட்டுள்ளவை)

Wednesday, May 5, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 16


கணவன் பொருளீட்ட மனைவியைப் பிரிந்துச் செல்கிறான்..மனைவிக்கு கணவனின் பிரிவை தாங்க முடியவில்லை..தன் நிலை குறித்து கணவனுக்கு சேதி அனுப்ப வேண்டும்..அப்போதுதான் அவன் உடன் திரும்புவான்..என எண்ணுகிறாள்..

யாரைத் தூது அனுப்புவது...என்ற கேள்வி எழுகிறது?..யார் அந்தக் காரியத்தைத் திறம்படச் செய்வர் என அறியாது மனதில் குழப்பம்..

தன்னிடம் வேலை செய்யும் பெண்ணை அனுப்பலாமா..? வேண்டாம் அது நன்மை பயக்காது

தான் வளர்க்கும் கிளியைத் தூது அனுப்புவோமா? ஆனால்..அதுவும் தன் தூதுப் பணியை திறம்படச் செய்யாது..

தன் தோழியை அனுப்பலாம் என்றாலோ..அவள் சென்று திரும்ப நாளாகலாம்..உடன் செயல்பட முடியாது..

அவன் நினைவை நெஞ்சிலிருந்து அகற்றி..பசலை நோயிலிருந்து விடுபட்டு தெய்வ வழிபாட்டில் மனதை செலுத்தலாம் என்றாலும் அது தீதில் முடியலாம்..

சரி..இதற்கு என்ன தான் வழி...ஒரே வழி..

அவன் திரும்பும் வரை அவன் பெயரை எண்ணி..மகிழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும்..என எண்ணுகிறாள்..

இதைத்தான் காளமேகப் புலவரின் இப்பாடல் கூறுகிறது

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

(அடிமைப்பெண் மூலம் அனுப்பும் தூது நன்மை பயக்காது..கிளியோ தூதுப் பணியில் திறம்பட செயலாற்றாது.தோழியின் தூதோ நாளைக் கடத்தும்..ஆகவே பூந்தளிர் போன்ற தேமல்கள் என் மேல் படராது தெய்வத்தை வழிப்பட்டுத் தொடர்தலும் தீதாகும்..தித்திப்பாய் இனிக்கும் அவன் பெயரை ஒதிக் கொண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை)

கண்ணதாசன் தான் தயாரித்த வானம்பாடி படத்திலும்..நாயகன்..நாயகிக்கான பாட்டுப் போட்டியில் இப்பாடலை வைத்திருப்பார்.

காளமேகம் பற்றி சொல்லிவிட்டு..வள்ளுவன் பற்றி சொல்லவில்லையெனில் எப்படி...

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

என்கிறார்...உள்ளத்திலேயே காதலர் குடியிருக்கையில்..நெஞ்சே வெளியே அவனை நினைத்து எவரிடம் தேடி அலைகிறாய்?

Wednesday, April 7, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 15

பணம் வாழ்வில் முக்கியமில்லை குணம் தான் முக்கியம் என்றெல்லாம் நாம் சொன்னாலும்..நம்மிடம் செல்வம் இல்லையெனில் மற்றவர்களால் சற்று இகழ்ச்சியுடனேயே பார்க்கப் படுகிறோம் என்பதே நடைமுறை உண்மை.

செல்வத்தின் சிறப்பை நன்கு உணர்ந்தவர் திருவள்ளுவர்..அருளும் பொருளும் மனிதனின் இன்றியமையாதத் தேவைகள்.ஆயின்..இவை இரண்டிடிலும் பொருளின் அவசியத்தை மறக்கமுடியாது...மறுக்கவும் முடியாது..பொருளில்லாமல் இவ்வுலகில் இன்பமாக வாழ முடியாது என்பது உண்மை..ஆனால் வள்ளுவனோ..மேலும் ஒரு படி அதிகம் சென்று..

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு - என்கிறார்

பொருளின் பெருமை இது..அருள் என்பது அன்பின் வழித்தோன்றலாகும்..தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் பற்று அன்பு எனப்படும்..தொடர்பில்லாதவரிடம் கொள்ளும் பற்று அருள் ஆகும்.இவை இரண்டும் உலக மாந்தர்க்கு வேண்டிய பண்புகள்..ஆனால் அன்பும்..அருளும் உடையவரிடத்து பொருள் இல்லையேல் என்ன பயன்?

அதே போல் பொருளுடையவரிடம், அன்பும்..அருளும் இருப்பின் அது சுற்றத்தாருக்கும்...பிறருக்கும் பயன்படும்..

பொருளின் சிறப்பை மற்றுமொரு இடத்தில் சொல்கிறார்....

அன்பு என்பது ஒரு நல்ல தாயைப் போல..அந்தத் தாயின் குழந்தையே அருள் ..அந்த அருள் குழந்தையை வளர்க்க ஒரு செவிலித்தாய் வேண்டும்..அவள் வறுமை மிக்கவளாய் இருந்தால்..குழந்தை எப்படி நன்கு வளரும்..ஆகவே அப்படிப்பட்ட செவிலித்தாய் செல்வம் மிக்கவளாய் இருக்க வேண்டும்..

அன்பு என்னும் தாய்ப் பெற்ற அருள் என்னும் குழந்தை வளர பொருள் என்னும் செவிலித்தாய் வேண்டும்.. அப்போதுதான் அது ஓங்கி வளர்ந்து புகழ்ப் பெற்று வாழும்..இந்த உலக வாழ்க்கையின் உண்மையையே

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

என்கிறார் வள்ளுவர்.

Sunday, December 13, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் -11 (அழுகையில் நகை)

நகையும்..அழுகையும் ஒன்றோடொன்று மாறுபட்ட சுவைகள் ஆகும்.பிற சுவைகளோடு நகைச்சுவை கலத்தல் அரிதாகும்.ஆயின் அழுகைச் சுவையோடு..நகைச்சுவையைக் கலந்து கொடுப்பது இலக்கியச்சுவை ஆகும்.இரு முரண்பட்ட சுவையை கம்பர் சித்தரிக்கிறார்.ராமன் சிரித்ததை எண்ணி, அசோகவனத்தில் சீதை அழும் காட்சி.

ராமன்..ஏன் சிரித்தான்..எங்கு சிரித்தான்..

ராமனும் , சீதையும் லட்சுமணன் தொடரக் காடு செல்கின்றனர்.வழியில் ஏழி எளியவர்க்கு வேண்டியவற்றை வாரி வழங்கிய படி செல்கிறான் ராமன்.

ராமனிடம்..வேண்டுவோர்..வேண்டியதைப் பெரும் தருணம்..திரிசடன் என்னும் முனிவன் வெளியே போயிருந்தான்.நீண்ட நேரம் கழித்து இல்லம் திரும்பிய அவனை..அவன் மனைவி..'காடு செல்லும் ராமனிடம்..எல்லோரும் எல்லாம் பெற்று செல்கின்றனர்..நீ எங்கே போனாய்..நீயும் அவனைத் தேடிப்போய் எதாவது வாங்கிக்கொண்டு வா..' என துரத்துகிறாள்.

ராமன் செல்லுமிடம் அறிந்து முனிவனும் விரைந்து ராமன் முன் நின்று..'எல்லோருக்கும் எல்லாம் தருகிறாயே..எனக்கும் ஏதேனும் ஈ.' என ஈ என இளிக்கிறான்.

ராமன் காடு செல்வது பற்றி அவனுக்குக் கவலை இல்லை..தனக்கு ஏதேனும் கிடைக்க வேண்டுமென்ற கவலை.'அங்கே அரண்மனை பசுக்கள் ஆயிரக்கணக்கில் மேய்கின்றன..அவற்றுள்..இரண்டு அல்லது மூன்று பசுக்களை எடுத்துச் செல்' என்கிறான் ராமன்.

ஆனால் பேராசை முனிவனோ..தன் கையிலுள்ள தடியைச் சுற்றி எறிந்தால் அது எங்கு சென்று விழுகின்றதோஅதுவரையில் உள்ள பசுக்களை எனக்குக் கொடு..என்கிறான்.

மண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றை ஒழித்ததாகக் கூறும் முனிவன் மாட்டாசை பிடித்து அலைகிறான்.ராமனும்..உன் ஆசையை நிறைவேற்றிக் கொள் என்கிறான்.

முனிவன் முற்கி..முனைந்து முழு வீச்சில் கைத்தடியை வீச..ஐநூறு பசுக்களுக்கு அப்பால் சென்று விழுந்தது தண்டம்.அப்போதும் ஆசை தீராது..எல்லாப் பசுக்களையும் கவரும் வலி தனக்கில்லையே என வெறுத்துக் கொண்டான் முனிவன்.முற்றும் துறந்தவன்.

ஆனால்...இப்போது நாட்டையும்..அரசையும்,முடியையும் துறந்து பற்றற்று நிற்கும் உண்மை முனிவனான ராமன் ,.ஐநூறு பசுக்களைப் பெற்றும் ஆசை ஒழியா போலி முனிவனின் நிலைக் கண்டு வாய் விட்டு சிரித்தான்.இந்த அரியக் காட்சியை..

பரித்த செல்வம் ஒழியப் படருநாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவன்
கருத்தின் ஆசைக் கரையின்மை கண்டிறை
சிரித்த செய்கை நினைந்தழும் செய்கையால்
(கம்ப ராமாயணம்..சுந்தர காண்டம்)

என்று தன் கவியில் காட்டுகிறார் கம்பர்.ராமன் சிரித்த காட்சியை எண்ணி சீதை அழுதாலும்..கம்பரின் இக்காட்சி..அழுகைக்கிடையே நமக்கு சிரிப்பைத் தருகிறது..அழுகைச் சுவையோடு.நகைச்சுவை கலந்த அழகுக் காட்சி இது.