Showing posts with label நகைச்சுவை -தீபாவளி. Show all posts
Showing posts with label நகைச்சுவை -தீபாவளி. Show all posts

Wednesday, October 22, 2008

தீபாவளி ..சுப்பு தாத்தா சொன்ன கதை..

இந்த வருஷம் தீபாவளியை அமெரிக்கவில் ,தன் மகனுடன்..சுப்பு தாத்தா கொண்டாட(!!!) நேர்ந்துள்ளது.மகனும்..மருமகளும் வருந்தி அழைத்ததால்..ஆறு மாதம் ஸ்டேட்ஸ் வந்திருக்கிறார்.
அவர் தன் பேரனிடம் 'ம்..இந்தியாவில் இருந்தா..தீபாவளியை அமர்க்களமா கொண்டாடுவேன்..'என்று கூறப்போய்..அவனும் ஆவலுடன் தீபாவளின்னா என்ன தாத்தா'என்றான்.

தன்னை மதித்து(!!??) தன் பேரன் கேட்பதால் சொல்ல ஆரம்பித்தார்.

"முன்னொரு காலத்திலே..நரகாசூரன்..நரகசூரன்னு ஒருத்தன் இருந்தான்..அவன் மக்களை எல்லாம்..ரொம்ப கொடுமை படுத்தி வந்தான்..அந்த கஷ்டத்தை தாங்காத மக்கள் எல்லாரும்..பூமாதேவி கிட்ட சொல்ல..அவ அவனை வதம் பண்ணினா..சாகறப்போ நரகாசூரன் ..இவ்வளவு நாள் நான் மக்களை எல்லாம் ரொம்ப கொடுமைப் படுத்திட்டேன்..அதனால..நான் சாகிற இந்த நாளை அத்தனைப்பேரும் சந்தோஷமா..புது டிரஸ் போட்டுண்டு..பட்டாசு எல்லாம் வெடிச்சு..ஸ்வீட் எல்லாம் சாப்பிட்டு கொண்டாடட்டும் என்றான்"
அதுதான் தீபாவளி...என்றார்.

'போ..தாத்தா..நீ சொல்றதே புரியலை..அசுரன்னா என்ன..வதம்ன்னா என்ன..பூமாதேவிக்கு என்ன வேலை..ஒரேயடியா குழப்பறே..தாத்தா..'என்றான் பேரன்.

'சரி..உனக்கு புரியறமாதிரியே சொல்றேன்..'என்ற தாத்தா..DVD யில் அவன் சில தமிழ் படங்கள் பார்த்த ஞாபகம் வர..சொல்ல ஆரம்பித்தார்.

'நரகாசூரன்னு ஒரு தாதா இருந்தான்..அவன் கிட்ட நிறைய அடி ஆட்கள்..அவங்களை வைச்சு..ஜனங்களை அடிக்கிறது..கொள்ளையடிக்கிறது..கொலை செய்யறதுன்னு கொடுமைகள் செஞ்சுக்கிட்டு இருந்தான்..பூமாதேவின்னு ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தா..ஜனங்க அவ கிட்டப் போய் முறையிட்டாங்க..அவங்க நரகாசூரனைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் நடக்கக்கூடாதுன்னு சொன்னாங்க..அவனோ கேக்கலை...ஒருநாள் அவன் தப்பு செஞ்சப்போ..பூமாதேவி பாத்துட்டாங்க..அவனும் இவங்களைப்பார்த்து ஓட ஆரம்பிச்சான்.உடனே அவங்க என்கவுண்டர்ல
அவனை சுட்டுட்டாங்க...அவன் செத்துப்போறப்ப..நான் எல்லாரையும் ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன்.அதனாலே..நான் சாகிற இந்த நாள மக்கள்..fire works,cookkie,new dress னு
கொண்டாடட்டும்ன்னான்...அதுதான் தீபாவளி..இப்ப புரியுதா?'என்றார்.

'ஓ..புரிஞ்சிடுத்து..ரஜினி,விஜய்,கமல்..எல்லாம் பூமாதேவி மாதிரி.. அப்பறம்..சுமன்,பிர்ம்மானந்தம்.ஃப்ளச்சர் இவங்க எல்லாம் நரகாசூரன் மாதிரி..சரிதானே'என்றான்.

தாத்தாவும் ஏமாற்றத்தை மரைத்துக்கொண்டு 'ஆம்' என்பது போல தலையை ஆட்டினார்.


பதிவர்கள்..அவர்களது நண்பர்கள்..பின்னூட்டம் இடும் அன்பர்கள் எல்லோர்க்கும் சுப்பு தாத்தா மூலமா எங்க தீபாவளி வாழ்த்துக்கள்.