நான் தி.ஜானகிராமன் எழுத்தை விரும்பி படிப்பவன்.இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் என்னிடமிருந்து 'அம்மா வந்தாள்' புத்தகம் இரவல் வாங்கிச் சென்றார்.இரவல் கொடுத்துவிட்டால் நம்ம ஆட்களிடம் திரும்பி வருமா? மேலும் தமிழனைப் பொறுத்தவரை..இரவல் என்பதிலும் 'இ' இருப்பதால் இலவசம் என்று எண்ணிவிடுகிறார்கள் போலும்.
அந்த புத்தகம் போனதிலிருந்து..மீண்டும் அதை வாங்கிவிட வேண்டும் என எண்ணியிருந்தேன்.இந்த கண்காட்சியில் வாங்கியும் விட்டேன்.
வீட்டிற்கு வந்தது..அந்த புது புத்தக வாசனையுடன்..அந்த பழைய நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..அடடா...என்ன ஒரு எழுத்து..என்ன ஒரு வர்ணனை..இப்படி என்ன..என்ன..என சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு சில இடங்கள்..
பூணூல் போடுவது குறித்து..
'எந்த பிராமணன் சந்தி பண்றான் இப்ப?ஆவணி அவிட்டமாம்..காட்டில வாசம் பண்றபோது வச்ச வழக்கம்..எல்லாம் இன்னும் ஒட்டிண்டு இருக்கு.பூணுலுக்கு அர்த்தம் ஏது?டவாலி போட்டிக்கறவனாவது அர்த்தத்தோட போட்டுக்கறான்- தான் பியூன்னு காமிச்சுக்கிறதுக்கு.நம்ம டவாலிக்கு ஏது அர்த்தம்.சந்தி கிடையாது, ஜபம் கிடையாது,வேதம் கிடையாது,சாஸ்திரம் கிடையாது.பூணுலையே அறுத்தெறியணும்.இதுக்கு என்ன ஆவணி அவிட்டம்? அப்புறம் தலை ஆவணி, கால் ஆவணி' என்று கல்லூரி ஆசிரியர் படபடக்கிறார்.
இன்னொரு இடம்
பெட்ரூம் விளக்கின் ஒளி அவள் இடக்கன்னத்தில் மஞ்சள் பூசினாற் போல் விழுந்து வலக் கன்னத்தைக் கரியாக்கியிருந்தது.காதில் பூரித்த வைரத்தோடு இடக்கன்னத்தின் மஞ்சளுக்கும் இறங்கித்தழைந்த கரு மயிருக்கும் மேல் லேசாக நீலத்தைத் தெளித்தது.
பொழுது நன்றாக இறங்கிவிட்டது.கடற்கரை மணல் முழுதும் நட்சத்திரங்களைப் போல மனிதர்கள் முளைத்துக் கிடந்தார்கள்.அப்பு எழுந்து அலையண்டை போனான்,ஈர மணல்..நண்டுகள் அவனைக் கண்டதும் அப்படி அப்படியே மணலுக்குள் புதைந்து ஒழிந்தன.முன்னும் பின்னும் நகர்ந்தது போதாதென்று பக்கவாட்டிலும் நகரும் அவற்றைப் பார்த்துத் தலையில் மிதிக்க வேண்டும் போல இருந்தது.வெளிச்சம் நரைத்துக் கொண்டே வருகிறது.
அந்த வெள்ளைப் பாதங்கள், மார்பை விம்மிக்கொண்டு நீர்த் தொட்டியைச் சுற்றி சுற்றி வரும் வெள்ளைப் புறாபோல் இருந்தன.பாதத்திற்கு மேல் குதிரை முகம்,பின் சதையெல்லாம் பிலுபிலுவென்று
மின்னுகிற மயிர்.பெண்களுக்கு பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை.
இப்படி பல இடங்கள்.இன்றும் படிக்க புதிதாய்..
இப்புத்தகத்தை படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும்.
கிடைக்குமிடம்
ஐந்திணைப் பதிப்பகம்
172 பக்கங்கள்..விலை ரூ.90/-(தள்ளுபடி போக 81)