Showing posts with label பொங்கல் வாழ்த்து. Show all posts
Showing posts with label பொங்கல் வாழ்த்து. Show all posts

Saturday, January 14, 2012

இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்..




சுழன்றும் ஏர் பின்னது உலகம்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை..

மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் விவசாயி

இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? அந்த விவசாயி நமக்கு உணவு படைத்துவிட்டு அவன் வறுமையில் வாடலாமா?

அவன் நிலங்களை பறித்துக் கொண்டு காங்கிரீட் கட்டிடங்களாகவும்..தொழில் நகரங்களாகும் உருவாகும் நிலை தொடரலாமா?

வறுமை தாங்காது..மக்களுக்கு உணவு வழங்கிய ஒரே காரணத்திற்காக அவன் தற்கொலை செய்து கொள்ளலாமா?

மென் பொருள் துறையினரால்..அரசுக்கு அந்நியச் செலவாணி வருவாய் இருந்தாலும்...தொழில்களால் வேலை வாய்ப்புகள் கூடினாலும்  அடிப்படை எது என எண்ணினால்..விவசாயியின் கைகள் தான்.

அரசு இலவச மின்சாரம், மானியம் என்று வழங்கினாலும்..அதெல்லாம் அவனுக்குப் போய் சேருகிறதா?

இயற்கையின் சீரழிவுகள் அவனை எவ்வளவு பாதிக்கின்றன...ஒரேயடியாக..அவன் வாழ்வாதாரமே பாதிக்கப் படுகிறதே...

இந்தியா விவசாய நாடு என்பது சிறிது சிறிதாக மாறிவரும் நிலை தோன்றுகிறதே!

என்று விவசாயிகள் வறுமை மறைகிறதோ..அன்றுதான் நாடு சிறக்கும்..

அதுவரை ஏட்டளவிலே தான் அவன் பெருமையை பேசிக்கொண்டிருக்க வேண்டும்..

நிலைமை மாறுமா???

மாறும்..மாற வேண்டும் என்னும் நம்பிக்கையுடன் பொங்கலிடுவோம்..

அனைவருக்கும் மங்கலம் நிறைந்த இனிய பொங்கல்தின நல்வாழ்த்துகள்

Friday, January 14, 2011

எனக்கு 'பொங்கல்' பிடிக்கும்



பச்சரிசி,பாசிப்பருப்பு சரியான விகிதத்தில் கலந்து உப்பிட்டு,நெய்யில் முந்திரி,மிளகு, சீரகம் வறுத்துப் போட்ட பொங்கல் எனக்குப் பிடிக்கும் என்பதால் இத் தலைப்பிடவில்லை.

எனக்குப் பிடித்தப் பண்டிகை 'பொங்கல்' என்பதால் இடுகைக்கு இப்பெயர்.

நம் பண்டிகைகள் பல..கடவுள்கள் அவதரித்த தினமென்றும்,அரக்கர்களை அழித்த தினம் என்றும்..இதிகாசம், புராணங்களை மேற்கொள்காட்டி..கொண்டாடப்படுபவை.இவற்றில் மெய்யைக் காட்டிலும்..கற்பனைகளே அதிகம்.

சிலமிகைப்படுத்திச் சொல்லப்படுபவை. (அதனால் என்ன..நடிப்பு, அரசியல் எல்லாவற்றிலும் ஒரு இந்தியனுக்கு மிகைப்படுத்துதலே பிடித்திருக்கிறது..என்பது வேறு விஷயம்)

சரி..தலைப்புக்கு வருகிறேன்..

பொங்கல்..முதலில் தமிழ்ப் பெயர்..அதனால் பிடிக்கும்.

தமிழர் திருநாள் என்பதால் பிடிக்கும்

சாதி, மத பேதமின்றி அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடும் பண்டிகை என்பதால் பிடிக்கும்.

இயற்கை நாம் உயிர் வாழ..நெல்,கரும்பு,பருப்பு.இஞ்சி,மஞ்சள் என ஏராளமாய் படைத்துள்ளது.இது பஞ்சபூதங்கள் என்னும் இயற்கையின் அன்பளிப்பு மனிதர்களுக்கு.அந்த இயற்கையை வழிபடும் நாள் இது என்பதால் பிடிக்கும்

இயற்கைதான் கடவுள் என தெள்ளத் தெளிவாய் விளக்கும் பண்டிகை என்பதால் பிடிக்கும்

இயற்கையின் படைப்பான வயலில் ..நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி..மண்ணிலே நெல் முத்தை விளைவிக்கும் அந்த உழைப்பாளி உழவரின் திருநாள் என்பதால் பிடிக்கும்.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது.எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

இந்நாளில் விவசாயியின் வாழ்வு செழிக்க பிரார்த்திப்போம்..

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

Wednesday, January 13, 2010

இனிய பொங்கல் வாழ்த்துகள்

திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

ஒருவர் தனக்கு செய்த சிறு உதவியையும் பெரிய உதவி ஒன்றாகக் கருதுவது தமிழனின் பண்பு.இது அவனுடனே பிறந்த குணம் எனலாம்.(அதனால்தான் அவனை எளிதாக ஒருவரால் ஏமாற்ற முடிகிறது என்பது வேறு விஷயம்)

தட்சிணாயனம் என்ற தனது தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு சூரியன் வடதிசை நோக்கி தன் உத்தராயணப் பயணத்தை மேற்கொள்ளும் நாள் தை முதல் நாள்.

சாதி மதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் பண்டிகை பொங்கல்.பிற பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ,இனத்தையோ மையமாகக் கொண்டு நடைபெறுவது.ஆனால் உழைப்பையும்,இயற்கையையும் மையமாக வைத்து வழிபடும் ஒரே பண்டிகை பொங்கல் மட்டுமே! தமிழர்கள் எங்கெங்கு உள்ளனரோ அங்கெல்லாம் பொங்கல் உண்டு.

உயிர் வாழ தேவையான உணவுப் பொருள் அரிசி.அது .. சூரியன், பூமி, மழை,காற்று ..ஆகிய இயற்கையின் கொடையால் கிடைக்கிறது.(கரும்பு,இஞ்சி,மஞ்சள்,காய்கறிகள்,பருப்பு ஆகிய பொங்கல் தேவைகளையும் இயற்கை அளிக்கிறது)

நம் வாழ்வில் வளம் அளிக்கும் அந்த இயற்கையை வழிபடும் தினமே பொங்கல்.

அரிசியை விளைவிக்கும் விவசாயிக்கு பெரிதும் உதவி..மனிதனுக்கு தேவையான அரிசியை தந்துவிட்டு...அதிலிருந்து கிடைக்கும் தவிட்டையும்..கடலை,எள் ஆகியவற்றிலிருந்து எண்ணெய்யை மனிதனுக்குக் கொடுத்து விட்டு..அவற்றிலிருந்து கிடைக்கும் சக்கையான தவிடு,புண்ணாக்கு ஆகியவற்றை தான் உண்ணும் தியாக உருவங்கள் மாடுகள்.அந்த மாடுகளையும்...மாட்டுப்பொங்கல் ..என பொங்கலுக்கு அடுத்த நாளை ஒதுக்கி நாம் நன்றிக் கடனைத் தெரிவிக்கிறோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்