Showing posts with label sambu Natarajan -TVR. Show all posts
Showing posts with label sambu Natarajan -TVR. Show all posts

Wednesday, October 31, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 5 (பகுதி - 2)



 ‘சாம்பு’ நாடகம் பிறந்த பின்புலத்தை விவரிக்கிறார் ‘சாம்பு’ என்.எஸ். நடராஜன். அவர் 1972-இல் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: 

திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் கிளப் மிகச் சிறந்த முறையில்  நாடகங்கள் நடத்திப் பேரும், புகழும் அடைந்ததற்கு முக்கிய காரணம் திரு.தேவன் எழுதிக் கொடுத்த ‘மைதிலி’, ‘கோமதியின் காதலன்’, மிஸ் ஜானகி’, ‘துப்பறியும் சாம்பு’, ‘கல்யாணி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘பார்வதியின் சங்கல்பம்’ நாடகங்கள் தாம். இந்த நாடகங்கள் சுமார் 500 தடவைகள் நடிக்கப்பட்டு ரசிகர்களால்  வெகுவாகப் பாராட்டப்பட்டவை. 

  அவர் எழுதிய உன்னதப் படைப்பான ‘துப்பறியும் சாம்பு’ தொடர்கதையை நாடகமாக்க முடியுமா என்ற ஐயம் தேவனுக்கு ஏற்பட்டு அவர் என்னிடம் யோசனை கேட்டார். நாங்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அதை நாடகமாக்க முடியும் என்று முடிவெடுத்தோம். ஆனால் அவர் எனக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, ‘சாம்பு’ பாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டுமென்பதுதான் . அதற்கு முதலில் நான் சம்மதிக்கவில்லை. காரணம், அந்த நாடகத்தை நல்ல முறையில் அரங்கேற்ற வேண்டுமானால், பயிற்சியாளன் என்ற முறையில் நான் அவர் எழுத்தோவியத்திற்கு உயிர் ஊட்டவேண்டும். அப்படியிருக்க, நானே பயிற்சியாளனாகவும், கதாநாயகனாகவும் பணியாற்ற முடியுமா என்று திகைத்தேன் ஆனால் அவர் என்னை ஊக்குவித்து அவர் விருப்பத்தைச் சாதித்துக் கொண்டார். எனக்குச் ‘சாம்பு’ என்ற பட்டமும் பெறக் காரணமாக இருந்து, நான் ‘சாம்பு’ நடராஜன் ஆனேன்

(நன்றி - http://s-pasupathy.blogspot.com)

அடுத்தவீட்டு ஜன்னல் - 5 (பகுதி -1)



நாகராஜனுடன் இணைந்து திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் ஆரம்பித்த சாம்பு நடராஜ ஐயர், ஒரு காலகட்டத்தில்
என் எஸ் என் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு குழுவினை ஆரம்பித்தார்,

இவரது குழுவில் ஜெயசங்கர், வீரராகவன் ஆகியோர் நடித்தனர்.

பின்னர் வீரராகவன், தன் உறவினர் சுந்தரராஜன் என்பவரை நடராஜனுக்கு அறிமுகப்படுத்த, அவரும் இக்குழுவில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த சுந்தரராஜன் தான் கே பாலசந்தரின் ராகினி ரெக்ரியேஷன்ஸ் குழுவில் மேஜர் சந்திரகாந்த்..நாடகத்தில் மேஜராக நடித்தவர்.பின்னாளில் மேஜர் என்ற அடைமொழி அவர் பெயருடன் சேர்ந்து "மேஜர்" சுந்தர்ராஜன் என அழைக்கப்பட்டு, திரையுலகிலும் புகழ் பெற்றவர் ஆவார் .

என் எஸ் என் தியேட்டரில் மேஜர் சுந்தரராஜன் நடிக்க ஆரம்பித்தார்.இவர் நடித்த "டைகர் தாததாச்சாரி" நாடகம் பெரிதும் பேசப்பட்ட நாடகம் ஆனது

நடராஜன் , மூப்பின் காரணமாக  நாடகத்துறையில் இருந்து ஓய்வு பெற அக்குழுவின் பொறுப்பை சுந்தரராஜன் ஏற்றார்.குழுவின் பெயரையும் "பத்மம் ஸ்டேஜ்" என்று மாற்றினார்.இவரது குழுவில் ஸ்ரீகாந்த், சிவகுமார் ஆகியோர் நடித்தனர்

அப்பாவி,சந்ததி,சொந்தம், கல்தூண்,அச்சாணி, தீர்ப்பு ஆகியவை இவர்கள் மேடையேற்றிய சில நாடகங்கள்

பின்னர் வியட்நாம்வீடு சுந்தரம் இக்குழுவிற்காக "ஞானஒளி" நாடகத்தை எழுதினார்.

இந்நாடகமே , பின்னர் மேஜர் ஏற்ற வேடத்தை சிவாஜி ஏற்க திரைப்படமானது (வீரராகவன் ஏற்ற இன்ஸ்பெக்டர் வேடத்தை மேஜர் திரையில் ஏற்றார்)

நாகராஜனும், நடராஜனும் நாடக உலகிற்கு பல திறமையுள்ள நடிகர்களை உருவாக்கித் தந்தனர் எனலாம்