Thursday, June 30, 2011

முதுநிலை டாக்டரும்..சர்ஜனும்..





படித்து பெறமுடியா

டாக்டர் பட்டம்

அரசியலில் நுழைந்ததும்

தேடி பெறப்பட்டது

பின்னர் பார்த்தால்

நடிகரும் டாக்டராம்

இயக்குநரும் டாக்டராம்

உடனடித் தேவை எனக்கு

முதுநிலை டாக்டர் பட்டம்

அல்லது

சர்ஜன் பட்டம்

Sunday, June 19, 2011

இந்த ஆண்டின் அதிசய நிகழ்ச்சி





தேவி வார இதழில் விஜி என்பவர் எழுதியிருந்த இச் செய்தி என்னைக் கவர்ந்தது.அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி.

இந்த ஆண்டு ஜூலை மாதம் , 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் நிகழவிருக்கிறது.

ஜூலை மாதத்தில் 5 வெள்ளிக்கிழமை,5 சனிக்கிழமை,5 ஞாயிற்றுக்கிழமை வர இருக்கின்றன..இந்த அபூர்வ நிகழ்ச்சியை கணித பாஷையில் 'மனிபேக்' என்பர்.

1-1-11, 11-1-11, 1-11-11, 11-11-11 போன்ற தேதிகளையும் இந்த ஆண்டுதான் பார்க்கமுடியும்.இதில் 1-1-11ம்,11-1-11ம் ஜனவரியில் வந்துவிட்டது.மற்ற இரு தேதிகளும் நவம்பரில் வர இருக்கின்றன.

இந்த ஆண்டில் 11, 111 என்ற எண்களின் அனுபவமும் நமக்கு கிடைத்துள்ளது.

நீங்கள் பிறந்த ஆண்டின் கடைசி இரண்டு எண்களையும், தற்போதைய உங்கள் வயதையும் கூட்டினால் விடை 11, அல்லது 111 வரும்.இது அனைத்து உலக மக்களுக்கும் பொருந்தும்.அது அதிசய கணித நிகழ்ச்சியாகும்.

Thursday, June 16, 2011

காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!







ஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் விஜய் கூறினார்.

ஷாங்காய் திரைப்பட விழா சீனாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் நடித்த காவலன் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில - சீன மொழி சப்-டைட்டிலுடன் காவலன் திரையிடப்பட்டது.

சீன மொழியைச் சார்ந்த அனைவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததுடன் காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என்று கூறினார் விஜய்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கினர். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடிந்ததும் அவர்கள் மத்தியில் விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம்.

நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.

ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். (பலத்த கைதட்டல்) நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்," என்றார்.

விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை வழங்கினார்.

(நன்றி தட்ஸ்தமிழ் )

Tuesday, June 14, 2011

இன்று தி.மு.க., விற்கு ஏற்ற பாடல்..



இந்த பாடலின் சில வாரத்தைகளை சற்றே மாற்றினால்..இன்று தி.மு.க., விற்கு பொருத்தமான பாடல்.

அண்ணன் என்ற இடத்தில் கலைஞரையும்..ஒரு தொண்டன் இப்பாடலைப் பாடுவதாகவும் கற்பனை செய்தபடியே இப்பாடலைக் கேளுங்கள்
 

Monday, June 13, 2011

இன்று கருப்பு ஆடுகள்





இன்று(14-6-11) மாலை 6-45க்கு எனது கருப்பு ஆடுகள் நாடகம் முத்ரா சபாவின் ஆதரவில் தியாகராயநகர் இன்ஃபோஸிஸ் ஹாலில் (ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி..ஜாய் ஆலுக்காஸ் எதிர் தெரு) நடைபெறுகிறது.

பதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

நாடகவிவரம்-



கருப்பு ஆடுகள்

நடைபெறும் இடம் - இன்ஃபோசிஸ் ஹால்

ராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூல் கேம்பஸ்

கிருஷ்ணா தெரு (ஜாய் ஆலுக்காஸ் எதிரில்)

தி.நகர், சென்னை



இந்நாடகம் கோடை நாடக விழாவில் எனக்கு சிறந்த கதாசிரியருக்கான விருதை பெற்றுத் தந்தது.

Sunday, June 12, 2011

ராமனைத் தெரிந்தும்..தாடகையை அறியாதவர்களுக்கு..





சுந்தன் எனும் யக்ஷனுடைய மனைவி தாடகையும், அவன் மகன் மாரீசனும் ஆவர்.

தாடகையும் மாரீசனும் இந்த தேசத்தை நாசம் செய்து கோர வனமாக்கிவிட்டார்கள்.

அந்த தாடகைக்கு பயந்து அந்த வனத்திற்கு யாரும் வருவதில்லை.தாடகை ஆயிரம் யானை பலம் கொண்டவள்.அவளுடைய உபத்திரவத்தைப் போக்கவே உன்னை அழைத்து வந்தேன்.ரிஷிகளை தொந்தரவு செய்யும் இந்த அரக்கி உன்னால் கொல்லப்படுவாள்' என்பதில் சந்தேகம் இல்லை என விஸ்வாமித்திரர் ராமனிடம் கூறினார்.

இது புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கலைஞர் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசுகையில்..'புராணத்தில், ராமாயணத்தில் ராமன்14 ஆண்டுகாலம் ஆட்சியிலே இல்லை.அவன் ஆட்சியிலே இல்லாத காலத்தில்தான் அவன் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என எழுதியுள்ளார்கள்.ஆகவே ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தவறுகளை சுட்டிக்காட்டவும்,நாட்டுக்கு வருகின்ற கேடுபாடுகளைக் களையவும் தடுத்து நிறுத்தவும் நாம் முயலவேண்டும் என்றுள்ளார்..

நம் சந்தேகங்கள்..

1) ஜெ தாடகை என்னும் அரக்கியா?

2) ஆயிரம் யானை பலம் கொண்டவரா? ஜெ

3)கலைஞர் ராமனா

4) அதனால் தான் தான் பொறியாளர் இல்லை என்பதால்...சேது பாலம் கட்டியதாக புராணத்தில் சொல்லப்படும் ராமன் ஒரு பொறியாளரா? என அன்று கலைஞர் கேட்டிருப்பாரோ?

5)இங்கு தாடகையை அறிமுகப் படுத்தியவர் யார்?

6)மீண்டும் ஆட்சிக்கு வர இவர்களுக்கும் 14 ஆண்டுகள் ஆகும் என்கிறாரா?

Friday, June 10, 2011

விலக மறுப்பதேன்



விலகிடுவேன்..

விலகிடுவேன் என்கிறாய்

ஆனாலும்

விலக மறுக்குது

உன் நிலைமை

நீயே விலகுவாய் என்ற

நிலையை எதிர்பார்த்து

நான்..

என்னுடனானது கூடாநட்பு

என அறிந்தும்

பிரிய மறுப்பதேன்

Wednesday, June 8, 2011

இன்டெர்னெட் காதல்





ராங் காலால் அவனது

ராணி ஆனாள்

மின்னஞ்சலால்

மிகுதியாய் போதை ஊட்டினாள்

எஸ்எம்எஸ் மூலம்

எழுச்சியூட்டினாள்

சாட் மூலம்

சாமரம் வீசினாள்

மணம் தீர்மானம் ஆனது

முகபுத்தகம் மூலம்

புகைப்படம் ஏமாற்றியது

புத்தகத்தில் - நேரில்

பார்த்த வேளையில்

பாகாய் உருகினான் -அவளோ

தன் கற்பனை நாயகன் கனவு

தடாலென வீழ்ந்ததை உணர்ந்தாள்

மணமுடிந்ததும்

மணமுறிவுதான் என

யார் அறிவார்



Monday, June 6, 2011

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு



ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், அயல் நாட்டு வங்கிகளில் போட்டு வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று கோரி யோகா குரு பாபா ராம்தேவ் மேற்கொண்ட உண்ணாவிரத்தை காவல் துறையினரைக் கொண்டு மத்திய அரசு சீர்குலைத்த நடவடிக்கை ஊழலைக் காப்பாற்றும் அதன் உண்மையை முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.



டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த டெல்லி காவல் துறையினரிடம் அனுமதி பெற்றே பாபா ராம்தேவ் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். போராட்டத்திற்கு முதலில் அனுமதி அளித்துவிட்டு, பிறகு அதனை இரத்து செய்துவிட்டு, நள்ளிரவில் காவல் படையினரை அனுப்பி, தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்திருப்பது ஜனநாயக உரிமைகள் மீது காங்கிரஸ் கட்சியும், மன்மோகன் சிங் ஆட்சியும் கொண்டிருக்கும் மரியாதைக்கு அத்தாட்சியாகும்.



நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது என்று மன்மோகன் சிங் அரசு தனது ஊடக பலத்தைக் கொண்டு பலமாக பரப்புரை செய்துக்கொண்டிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் அத்யாவசியப் பொருட்களின் விலையேற்றம் 10 விழுக்காடு அளவிற்கு தொடர்வதும், அதனால் ரூபாயின் வாங்கும் சக்தி குறைவதும், மக்களின் வாழ்வை சமநிலை இழக்கச் செய்துக்கொண்டிருக்கும் வேளையில், தன்னை தூயவர் என்று நிலைநிறுத்துக்கொள்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில்தான் இந்தியா வரலாறு காணாத ஊழலை சந்தித்துக்கொண்டிருக்கிறது.



நாட்டை உலுக்கிய காமல்வெல்த் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், எல்.ஐ.சி. பங்குச் சந்தை முதலீட்டு ஊழல், வீட்டுக் கடனிற்கு இலஞ்சம் பெற்ற ஊழல் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் ஊழல் நாற்றம் வீசிகிறது. ஆனால் நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் அரசும், காங்கிரஸ் கட்சியும் கூசாமல் பரப்புரை செய்கின்றனர். ஒரு வேளை இலஞ்சம், ஊழல் ஆகியவற்றில் நாடு வளர்கிறது என்று கூறுகிறார்களோ?


இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அயல் நாட்டு வங்கிகளின் கருப்புப் பணத்தின் அளவு நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமானது என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது. ஆனால், கருப்புப் பணத்தை வெறும் வரி ஏய்ப்பாக மட்டுமே காங்கிரஸ் அரசு பார்க்கிறதே தவிர, அது ஊழலில் சம்பாதிக்கப்பட்டு பணமாற்றம் செய்யப்பட்ட இந்த நாட்டின் சொத்து என்று கருதவில்லை. கருப்புப் பண வழக்கை விசாரித்த இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இது வெறும் வரி ஏய்ப்பு அல்ல, இந்த நாட்டின் சொத்து கொள்ளையடிக்கப்பட்டு அயல் நாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது. அவ்வாறு கூறுவதை இன்று வரை மன்மோகன் அரசு ஏற்கவில்லை. கருப்புப் பணத்தை அயல் நாட்டு வங்கிகளில் போட்டு வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட இன்று வரை மறுத்து வருகிறது மத்திய காங்கிரஸ் அரசு.

ஒரு பக்கம் விலைவாசியேற்றத்தால் நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே திணறிக்கொண்டிருக்கும் நிலையில், வரலாறு காணா ஊழல் இந்த நாட்டை தின்றுக்கொண்டிருக்கும் செய்தி, மக்கள் உள்ளத்தில் கோவக் கனலை உண்டாக்கியுள்ளது. இதனை உணர்ந்த - உண்மையான நாட்டுப் பற்றாளர்கள், மக்களுக்கு அறிமுகமான முகங்களை முன்னிறுத்தி ஊழலுக்கும், கருப்புப் பணத்திற்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதுதான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காந்திய சேவா சத்தியாகிரகப் படை எனும் அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்ட முதல் ஊழல் எதிர்ப்பு போராட்டம் ஆகும். 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத் தலைமையில் ஜனவரி 30ஆம் தேதி தொடங்கிய சாகும்வரை போராட்டம் மக்களை சென்றடையா வண்ணம் ஊடங்களை மிகச் சாமர்த்தியமாக பயன்படுத்தி அந்தப் போராட்டத்தை சாகடித்தது மத்திய அரசு.
அதன் பிறகுதான் அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலிற்கு எதிரான போராட்டம் தொடங்கப்பட்டது. அது லோக்பால் சட்ட வரைவு தொடர்பான உத்தரவாதத்தை பெற்று முடிந்தது. இப்போது கடந்த சனிக்கிழமை யோகா குரு பாபா ராம்தேவ தலைமையில் மீண்டும் ஒரு போராட்டம் தொடங்க, தனது ஊழல் முகம் நாட்டு மக்களிடம் பெரிதாக வெளிப்படுவதைத் தடுக்க, ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு, இரவோடு இரவாக அந்தப் போராட்டத்தை ஒடுக்க அராஜக வழியை கையாண்டுள்ளது. சட்டம் ஒழுங்கை(?) நள்ளிரவில் நடைமுறைப்படுத்த காவல் படைகளை ராம்லீலா மைதானத்தில் கொண்டு வந்து தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒடுக்குமுறையை கட்டவிழ்ந்துவிட்டுள்ளது.

ஜனநாயக நெறிமுறைகளை மதிக்கும் கட்சியாக தன்னை காட்டிக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் உண்மையாக முகம் இதன் மூலம் வெளிப்பட்டது மட்டுமின்றி, அது மறைத்துவரும் மற்றொரு முகமும் நேற்று வெளிப்பட்டது. அதுவே, பாபா ராம்தேவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக் விஜய் சிங் உதிர்த்த வார்த்தைகளாகும்.

பாபா ராம்தேவை ஒரு ‘முரடன்’ என்று திக் விஜய் சிங் வர்ணித்துள்ளார். சோனியாவின் முழு நேர ஊழியனாய், காங்கிரஸ் கட்சியின் அந்த முதல் குடும்பத்தின் விசுவாசமிக்க தொண்டனாய் திகழும் திக் விஜய் சிங், பாபா ராம்தேவ் யோகசனத்தை மற்றும் கற்றுக்கொடுக்க வேண்டும், அரசியலில் ஈடுபடக்கூடாது என்று உபதேசமும் செய்துள்ளார். அரசியல் அநாகரீகத்தின் உச்சகட்டம் அவருடைய பேச்சுகள்.

பாபா ராம்தேவ் ஒரு முரட்டுப் பேர்வழி என்றால் அவரிடம் மத்திய அரசு இத்தனை நாள் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்? யார் அரசியல் ஈடுபடவேண்டும் என்ற சொல்ல காங்கிரஸ்காரன் யார்? அதுமட்டமல்ல, தனது நடவடிக்கைகள் மூலம் இந்த நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகிறார் ராம்தேவ் என்று வேறு பேசியுள்ளார்.

ஊழலுக்கும், கருப்புப் பணத்திற்கும் உறுதுணையாக நிற்கும் கட்சிக்கு, அவைகளை ஒழிக்க முற்படும் நடவடிக்கைகள் தவறான வழிகாட்டுதல் என்றுதான் தெரியும். போபர்ஸ் பீரங்கி பேரத்தில் தரகு பரிமாற்றம் நடந்தது உறுதியான பிறகும் கூட, ஊழல் நடக்கவில்லை என்று சாதித்த கட்சியல்லவா காங்கிரஸ். எனவே அதற்கு ஊழல், கருப்புப் பணக் குவிப்பு ஆகிய அனைத்தும் தேச வளர்ச்சிக்கு உகந்த நடவடிக்கையாகத்தான் தெரியும்.

இன்னமும் இந்தக் கட்சியை இந்திய நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேதனையானது. இந்த நாட்டை, நாட்டின் வளத்தை பெரு நிறுவனங்களும், அயல் நாட்டு நிறுவனங்களும் முழுமையாக சுரண்டிக் கொண்டு செல்ல உறுதுணையாக இருந்து, அவைகள் கொடுக்கும் இலஞ்சப் பணத்தில் கொழுத்துக்கொண்டிருக்கும் ஒரு கட்சியை மீ்ண்டும் மீண்டும் தேர்வு செய்து ஆளவிட்டதன் பலன் இன்று உச்ச கட்ட ஊழலையும், கருப்புப் பண வளர்ச்சியையும் இந்த நாடு கண்டுக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸை ஒழிக்காமல் ஊழல் ஒழியாது என்பதையும், காங்கிரஸ் கட்சியை அரசியலில் இருந்த அகற்றாமல் கொண்டுவரப்படும் எந்த லோக்பாலும் இந்த நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்றாது என்பதையும் இந்த நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

(நன்றி -வெப்துனியா )

Sunday, June 5, 2011

கூடா நட்பு என கலைஞர் யாரைச் சொன்னார்..?



சமுதாய எழுச்சிக்காகவும் அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தங்களை

ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள்,

'கூடா நட்பு கேடாய் முடியும்!' என்ற பொன்மொழியை மறந்துவிடாமல்

பயணம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " .இது கலைஞரின் பிறந்த நாள்  செய்தி  உடன் பிறப்புகளுக்கு .



இந்நிலையில் இன்று திருவாரூர் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய கலைஞர்..கனிமொழி பற்றி பேசுகையில்..

திகார் ஜெயிலில் இன்று இருக்கிறார்..கலைஞர் டீ.வி., யில் பங்குதாரராய் இருந்த ஒரே காரணத்தால்..

இது மத்திய அரசு உத்தரவாலோ..அல்லது அவர்கள் அலட்சியத்தாலோ..அல்லது வேறு ஏதோ காரணத்தாலோ நடந்துள்ளது என்றுள்ளார்..



இதிலிருந்து கூடா நட்பு என யாரச் சொல்லியிருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.



டிஸ்கி-

கொடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்



(ஒருவர் கொலைக்கு ஆளாகும்போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கை விட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்)

Thursday, June 2, 2011

யாரேனும் உண்டோ..?

யாரேனும் உண்டோ..?



வானவூர்தி ஒலிக் கேட்டு

விண்ணைப் பாராதார்

மழை கொட்டுகையில்

மனதில் மத்தாப்பாய் ரசிக்காதார்

விபத்து நடந்ததும்

விரைந்து சென்று

வேடிக்கைப் பார்க்காதார்

கடந்து சென்ற அழகைக் காண

கழுத்து வலிக்க திரும்பாதார்

பேருந்து நிறுத்தத்தில்

சரியாக நிறுத்தும் ஓட்டுநர்

ஆளும் கட்சியின் நற்செயலையும்

குறைகூறா எதிக்கட்சியினர்
 

Tuesday, May 31, 2011

வைரமுத்துவும்..விருதும்..





பூங்காற்று திரும்புமா(முதல் மரியாதை),சின்னச் சின்ன ஆசை(ரோஜா),போறாளே பொன்னுத்தாயி(கருத்தம்மா),முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்(சங்கமம்),தெய்வந் தந்த பூவே(கன்னத்தில் முத்தமிட்டால்) ஆகிய பாடல்களுக்கு தேசியவிருதை ஐந்துமுறை பெற்றவர் வைரமுத்து ஆவார்.

ஆறாவது முறையாக தென்மேற்கு பருவக்காற்று படப் பாடலான, 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடலுக்கு இம்முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

இது பற்றி கல்கி பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து..



ஆறுமுறை விருது பெற்றவன் ஒரு பாடலாசிரியன் எனக் கருதினால் அந்த மகிழ்ச்சியில் எல்லை சுருங்கிவிடும்.ஆறுமுறை விருது பெற்றது தமிழ் மொழி என்று கொண்டால் அந்த எல்லை பன்மடங்கு விசாலப்படும்.அப்படித்தான் இந்த விருதை புரிந்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

ஆறு விருதுகள் வாங்க முக்கியமான காரணங்கள் உண்டு.ஆறு விருதுகள் வாங்கக் கூடிய அளவிற்கு நீண்ட பயணம் அமைய வேண்டும்.அந்தத் துறை செழிப்பாக இருக்க வேண்டும்,அதற்கு ஏற்ப படைப்பாளி ஈடு கொடுக்க வேண்டும். மாறுகிற தலைமுறையைப் புரிந்துகொண்டு, அந்தத் தலைமுறையோடு பயணம் செய்ய வேண்டும்.தன் உடல்,உள்ளம்,வாழ்வு மூன்றும் தாழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தன்னத்தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.இவ்வளவு தகுதிப்பாடுகள் இருந்தால் தான், திரையுலகில் ஒருவன் சாதனை நிகழ்த்தி இருக்க முடியும்.இது வைரமுத்துவிற்கு மட்டுமல்ல், எல்லோருக்கும் பொதுவான இலக்கணம்.இயற்கையின் கொடை,சமூகத்தின் நேசம் இவற்றால் நான் அந்தப் பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டு இருக்கிறேன் என்பதுதான் இங்கு முக்கியமான செய்தி.



ஆறாவது முறையாக விருதினைப் பெறுகிறபோது எனக்கு ஒரு பரவசம்.இந்திய மொழிகளில் திரைப்படப் பாட்டு என்கிற துறையில் தமிழ் முன்னணியில் இருக்கிறது என அறிந்து என் இதயம் இன்னும் விரிந்தது.தமிழ் செம்மொழியாகப் பெருமை பெற்ற காலகட்டத்தில், அதற்கான ஆதாரங்களுள் ஒன்றாக இந்த விருதும் அமைவதாகக் கருதிப் பெருமைப்பட வேண்டும்.



ஆறாவது முறையாக விருது பெற்ற தமிழனுக்கு வாழ்த்துகள்.

Monday, May 30, 2011

தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கக் காரணம்..தி.மு.க., வா?





நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தோற்கக் காரணம் என்ன என்பதை தமிழக வாக்காளர்கள் அனைவரும் அறிவர்.

இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் காங்கிரஸின் துரோகத்தை மறக்கமுடியுமா?

நோய்டாவில் விவசாயிகள் நிலம் கையகலப்படுத்தியதற்கு ஓடிய ராகுல்...தமிழகத்தின் அப்பாவி மக்கள் வேதனையையை ஏன் கண்டுக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்த்து...அடையாள அட்டை வழங்கினால் மட்டும் போதுமா?

நேற்று அப்படி திண்டுக்கல்லில் அடையாள அட்டை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் பேசுகையில்..'தமிழகத்தில்..எங்கள் கருத்துகளைக் கேட்டு மேலிடம் நடந்திருந்தால் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றிருக்கும் என்றார்.

அதாவது காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால்..வென்றிருக்கும் என்ற பொருள்பட.

அவர் மேலும் கூறுகையில் 'தி.மு.க. அமைச்சர்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை புரிந்திருந்த ஊழலால் காங்கிரஸ் தோற்றது என்றுள்ளார்.



டிஸ்கி- ஐந்து இடங்களில் அவர்களுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்த தி.மு.க., விற்கு..இதுவும் வேண்டும்..இன்னமும் வேண்டும்

தேசிய விருதும்..வாலியும்..





இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களின் பாடல்களில் பாதிக்கும் மேல் வாலியும், கண்ணதாசனுமே எழுதியிருப்பார்கள்.

தேசியவிருதுகளின் வயது ஐம்பத்தெட்டு.ஆனால் தமிழ்த் திரையுலகம் பாடலுக்காக எட்டு விருதுகளையே பெற்றுள்ளது.

பாரத விலாஸ் படத்தில்..'இந்திய நாடு என் வீடு..இந்தியன் என்பது என் பேரு' என்று வாலி எழுதிய பாடல் ஒன்று உண்டு.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடல் என்பதால், வாலிக்கு தேசிய விருது பரிந்துரைக்கப்பட்டு அவரைப் பற்றிய குறிப்புகள் கேட்டு ஃபிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.ஆனால் வாலியோ பதில் அனுப்பவில்லை..அதற்கான காரணம்..வாலி சொன்னது..

'எனக்கு விருது தர வேண்டுமென்றால் அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.இல்லை..அந்தப் பாடல் நன்ராக இருக்கிறெதென்றால் அதை யார் எழுதியிருந்தாலும் விருதை அறிவித்திருக்க வேண்டும்

இத் தகவலை பழநிபாரதி அவர்கள் குங்குமம் இதழில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சொல்கையில்..'சென்ற ஆண்டு பின்னணி இசைக்காக இளையராஜா அவர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. பழசிராஜா என்னும் படத்திற்காக.நான் ஒரு பூங்கொத்து வாங்கிக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன்..அவர் சிரித்தபடியே கேட்டார்..

'இசைக்கும் விருதுக்கும் என்னப்பா சம்பந்தம்'



டிஸ்கி..விருதுகள் நம்மைத் தேடி வர வேண்டும்..நாம் அதைத் தேடிச் செல்லக் கூடாது

Thursday, May 26, 2011

நீ யார்..நான் யார்





உன்னைப் பற்றிச் சொல்

என்றாய்....

உன்னைப் பற்றி உனக்குத் தெரியாதா?

என்றிட்டேன்!

என்னுள் நீ இருக்கையில்

என்னைப் பற்றி எனக்கென்னத் தெரியும்

என்கிறாய்...

நீ யார்? நான் யார்?

என்றேன்...

நானே நீ

நீயே நான்

புதிர் போன்றதொரு

விடை..

Sunday, May 22, 2011

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..(போஸ்ட் கார்ட் சிறுகதை)





தனது ஆறாவது வகுப்பு படிக்கும் மகன் ரமேஷ் தான் சொல்வதையெல்லாம் கேட்பதில்லை என அவனது தந்தை கருணாகரனுக்கு மன வருத்தம்.

ஒரு நாள் அவனை அருகில் அமர்த்தி வைத்துக் கொண்டு..'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்றும்..தந்தை சொல்லை குழந்தைகள் மதிக்க வேண்டும் என்றும்..தந்தை சொல் மிக்க மந்திரமில்லையென்றும்..அவரது சொல்படி கேட்டால் வாழ்க்கையில் நன்கு முன்னேறலாம்' என அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தான் கருணாகரன்.

ஆனால் அவன் சொல்லிக் கொண்டிருந்தானேத் தவிர மகன் ரமேஷின் கவனமெல்லாம்...டீ.வி.யிலேயே இருந்தது.

அப்படியென்ன டீ.வி.யி. என கருணாகரன் பார்த்தபோது ..டி.வி.யில் கலைஞர்..'சன் டீவி.பங்குகள் விற்று தயாளுவிற்கு வந்த பணத்தில்..கனிமொழிக்கு இரண்டுகோடி கொடுக்கப்பட்டது.அந்த பணத்தை ஒரு தந்தை என்ற முறையில் கலைஞர் டீவியில் முதலீடு செய்யச் சோன்னேன்.நான் அன்று சொன்னதை என் மகள் கேட்டதே..இன்று அவள் திகார் சிறைக்கு கொண்டுச் சென்றுவிட்டது' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

கருணாகரன் சொன்ன அறிவுரையைக் கேட்டுவிட்டு..இச் செய்தியையும் கேட்ட ரமேஷ்..தந்தை ஏறிட்டு நோக்க ..அந்த பார்வை பல அர்த்தங்களை தந்தையான கருணாகரனுக்கு உணர்த்தியது.

Thursday, May 19, 2011

கலைஞருக்கு மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டார்களா...





1967ல் தி.மு.க., காங்கிரசிடமிருந்து தமிழக ஆட்சியைக் கைப் பற்றியதும்..அன்றைய முதல்வர் பக்தவத்சலம்..'நாட்டில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன' என ஒரு அநாகரிக அறிக்கை அளித்தார்.

அந்த அளவிற்கு இல்லையாயினும்..கலைஞர் இம்முறை தேர்தல் முடிவுகள் வந்ததும்..'மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்துவிட்டார்கள்' என்று சொன்னதும் சற்று அநாகரிகமாகவே தெரிகிறது.

இந்தக் கேள்விக்கான பதிலுக்கு முன் 2001 சட்டசபைத் தேர்தலுக்குப் போனால்..

அன்று போட்டியிட்ட கலைஞர்..'இதுவே நான் நிற்கும் கடைசித் தேர்தல்' என்று போகுமிடமெல்லாம் சொல்லி ஆதரவைத் திரட்டினார்.ஆனாலும் அ.தி.மு.க., வே ஆட்சிக்கு வந்தது.கலைஞர் 'ஜெ' போலவே எதிர்க்கட்சி தலைவராகி..சட்டசபைக்குப் போவதையேத் தவிர்த்தார்.

பின் 2006ல் மக்கள் மீண்டும் கலைஞரிடம் ஆட்சியைக் கொடுத்தனர்.

இப்போது 2011 தேர்தல்..

இதுவே கடைசித் தேர்தல் என்று சொன்னவர் அதற்குப் பின் இரு தேர்தல்களைச் சந்தித்து விட்டார்.

ஆனால்..இம்முறை கலைஞர் ஆட்சிக்கு வரவேண்டிய கட்டாயம்..

இருப்பினும் சூழ்நிலைகள் காரணமாக 119 இடங்களிலேயே தி.மு.க., நின்றது.தகுதிக்கு அதிகமாகவே காங்கிரஸிற்கு 63 தொகுதிகள் ஒதுக்கியது.அதற்கான காரணம் உள்ளங்கை நெல்லிக்கனி.

ஆகவே மக்கள் தி.மு.க., வைத் தேர்ந்தெடுத்தாலும்..தனிக்கட்சியாய் இம்முறை ஆளமுடியாது.

இந்நிலையில்..என்றுமே புத்திசாலி வாக்காளர்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., வைத் தேர்ந்தெடுத்தனர்.

இனி தலைப்புக்கு வருவோம்..

பல அமைச்சர்கள் தோல்வியைத் தழுவிய போதும்..கலைஞருக்கு வழக்கம் போல தோல்வியைத் தர மக்கள் விரும்பவில்லை.சட்டசபையில் அவர் தொண்டு மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து..அவரை இதுவரை இல்லாத அளவிற்கு 50000 வாக்குகளுக்குமேல் வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பதவியில் இருந்தாலும் இல்லையாயினும் மக்களுக்கு தொண்டு செய்பவன் நான்..என அடிக்கடி சொல்லும் கலைஞர்..'மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்துவிட்டார்கள்' என சொல்லலாமா?

அப்படி மக்கள் நினைத்திருந்தால்..அவருக்கு வெற்றிக்கனியை தந்திருக்க மாட்டார்கள்.

ஆளும் கட்சியில் இருப்பதைவிட..எதிர்க்கட்சியாய் இருந்தால்..மக்கள் பிரச்னைகளை அதிகம் பேசலாம்..

ஆகவே..மக்கள் அதிகப் பொறுப்பையே உங்களுக்குத் தந்துள்ளனர்.

வழக்கம் போல சட்டசபையை புறக்கணிக்காமல்..கூட்டங்களுக்குச் சென்று மக்கள் தொண்டு ஆற்றட்டும் கலைஞர்.

ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம் என்பதை பழுத்த அரசியல்வாதியான அவருக்கு நாம் நினைவூட்ட வேண்டாம் என்றே தோன்றுகிறது.

Wednesday, May 18, 2011

114 எம்.எல்.ஏ.,க்கள் கோடீஸ்வரர் ஆவது எப்போது ..

தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 234 எம்.எல்.ஏ., க்களில் 120 பேர் கோடீஸ்வரர்களாம்.

அதாவது 52 விழுக்காடு கோடீஸ்வரர்கள் ஆவர்.

இந்த 120 கோடீஸ்வர எம்.எல்.ஏ., க்களில் தி.மு.க., வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 பேரில் 75 விழுக்காடு கோடீஸ்வரர்கள்.

அடுத்தபடியாக காங்கிரஸ் 5 பேரில் மூவர் கோடீஸ்வரர்கள்.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்களில் 146 பேரில் 55 விழுக்காடு கோடீஸ்வரர்களாம்.

பாவம்...234ல் 120 போக மீதம் 114 பேர்.

இவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவது எப்போது.

இவர்கள் பதவிகாலம் முடிவதற்குள்...அந்த இலக்கை எட்டுவார்கள் என எதிர்பார்ப்போம்.

Tuesday, May 17, 2011

தி.மு.க., தோற்றது யாரால்...



நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., அலை வீச வில்லை.

தி.மு.க., வின் அதிருப்தியாளர்கள் அ.தி.மு.க., விற்கு வாக்களித்துள்ளனர்.

புள்ளிவிவரங்கள் படி அ.தி.மு.க.,கூட்டணி இத்தேர்தலில் பெற்ற வாக்குகள் 1,90,84,139

தி.மு.க., கூட்டணி பெற்ற வாக்குகள் 1,45,29,501 வாக்குகள்.

வாக்கு வித்தியாசம் சுமார் 45,00,000.

இந்த வித்தியாசமே அ.தி.மு/.க., கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றியும்..தி.மு.க., கூட்டணிக்கு 172 தொகுதிகளில் தோல்வியையும் தந்துள்ளது.

இந்த 45,00,000 வாக்காளர்கள் யார்...

எந்த ஒரு கட்சியையும் சேராத பொதுவானவர்கள்..ஐந்தாண்டுகள் ஆட்சியை மனதில் கொண்டு, பொறுமையுடன் இருந்து..தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.

இம்முறை..ஊழல்,குடும்ப ஆட்சியைத் தவிர்த்து..

பலருக்கு காங்கிரஸ் கட்சியின் மீது கோபம் இருந்தது..இலங்கை தமிழர்கள் பிரச்னையில்...அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு வாளாயிருந்த கட்சியின் மீது கோபம்.

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது..வாளாயிருந்த கட்சியின் மீது கோபம்..

அதனால் தான் 63 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசால் 34லட்சத்திற்கு சற்று அதிகமான வாக்குகளே பெற முடிந்தது.

இந்நிலையில்..ஆட்சி மாற்றத்தைத் தீர்மானித்தவர்கள்...எக்கட்சியும் சாரா பொதுமக்கள்..

இவர்கள்தான் ஒவ்வொருமுறையும் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.

இங்கு வேறு ஒன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்..

தி.மு.க., போட்டியிட்ட தொகுதிகளில் சராசரியாக 42 விழுக்காடு வாக்குகள் வாங்கியுள்ளது.

ஆனால்..தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 35.6 விழுக்காடே வாக்குகள் வாங்கியுள்ளது.

ஏன் அப்படி?

தி.மு.க., வைக் கூட மன்னிக்கத் தயாராய் இருந்த மக்கள்..காங்கிரசை மன்னிக்க விரும்பவில்லை.தண்டிக்கவே விரும்பியுள்ளனர்.

Friday, May 13, 2011

மூக்கறுபட்ட காங்கிரஸ்...




தமிழ்நாட்டில்...நாங்கள் எந்த திராவிடக்கட்சியுடன் கூட்டணி வைக்கிறோமோ அவர்களே ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று..தனிப்பட்டமுறையில் தன்னால் ஏதும் முடியாவிடினும் , இப்படிச் சொல்வதில் மட்டும்..அனைத்து தமிழக கோஷ்டி காங்கிரஸ்காரர்களிடமும் ஒற்றுமை இருந்தது..

பலவேளைகளில் அது உண்மையோ..என சில அரசியல் தலைவர்களும் எண்ணியதுண்டு..

ஆனால்..இந்த முறை..

அந்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததாலேயே தி.மு.க., மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.

தி.மு.க., குடும்பக் கட்சியாகிவிட்டதும்..இலவசமாக அனைவருக்கும் டீ.வி.கொடுத்து..பாமரனும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அறியவைத்ததும்...தி.மு.க., வின் ஹிமாலயத் தோல்விக்குக் காரணமாகிவிட்டன.

இப்போதும்..தில்லித் தலைவர்கள்..தோல்விக்கு ஊழல் மட்டுமே காரணமல்ல என்கின்றனர்..

எது எப்படியோ...தமிழகத்தில்..தி.முக., அ.தி.முக., என இரு கட்சிகளைவிட்டால் மாற்று இல்லை.

அதன்படி அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்துள்ளது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் செய்த தவறுகளை உணர்ந்து...

தி.மு.க., விடம் மக்கள் என்ன குறையை உணர்ந்தார்கள் என அறிந்து..

தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து..

தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றாது..நல்லாட்சியை அ.தி.மு.க., இம்முறையேனும் தரும் என நம்புவோம்.

நம்பிக்கைதானே வாழ்க்கை.