Wednesday, March 13, 2013

நீங்கள் மேடைப் பேச்சாளராக வேண்டுமா?...




நமக்கெல்லாம்..மேடையில் பேச வேண்டும் என்றும்..நாம் பேசுவதை நான்கு பேர் கேட்டு பாராட்ட வேண்டும் என்றும் உள்ளூர ஒரு விருப்பம் இருக்கும்.

பேசுவது என்பதே ஒரு கலை.அதற்காக பேசுவதையெல்லாம் கலை என்று சொல்லிவிட முடியாது.அதுவும்..மேடையில் பேசுவது என்பது...!!! எளிய நடையில் பலர் முன் நின்று மேடையில்..உயர் கருத்துகளைச் சிறந்த முறையில்..கேட்போர் உள்ளத்தில் அழகாக பதிய வைப்பதே ஆகும்.

மேடைப்பேச்சை 'சொற்பொழிவு' என்பர்.சொற்களைத் தேடிப் பிடித்து..எளிய நடையில்..அமைதியாக பொழிவது தான் சொற்பொழிவு.

மழை பொழிகிறது என்கிறோம்....மழை நீர்த் துளிகள்..ஒன்றன் பின் ஒன்றாக சீராக..நேராக..அமைதியாக பெய்வது தான் 'பொழிதல்' எனப்படுவது.அழகாக ஒன்றன் பின் ஒன்றாக வரம்பு மீறாமல் இருப்பதுதான்.வரம்பு கடந்தால் மழை பொழிதலும்..மழை அடித்தல், மழை கொட்டல் என்றெல்லாம் ஆகிவிடும்.

அதுபோலவே தான் சொற்பொழிவும்..வரம்பு கடந்தால்..மக்களிடமிருந்து..கிண்டல்,கத்தல்,திட்டுதல் என்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டு விடும்..

ஒருவர் பேசும் சொற்கள் அனைத்தும் நல்ல சொற்களாக, பண்பட்டவைகளாக இருந்தாக வேண்டும் என்ற கவலை சொற்பொழிவாற்றுவோருக்கு இருக்க வேண்டும்.சொற்கள் பற்றி வள்ளுவன்
சொல்வன்மை என்ற அதிகாரத்தையே வைத்துள்ளார்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லிங்கட் சோர்வு

ஆக்கமும், அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால்..எந்த ஒரு சொல்லிலும் குறைபாடு நேராது கவனமாக இருக்க வேண்டும்...என்கிறார்.

நாம் சொல்வதை பிறர் எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.எவ்வளவு நேரம் பேசினோம் என்பதை விட..நாம் என்ன பேசினோம் என்பது மக்களுக்குப் புரிகிறதா என்பதே முக்கியம்.

நாம் கற்றதை ..பிறர் உணரும் வண்ணம் சொல்லத் தெரியாதவர்..கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லா மலருக்கு ஒப்பாவர்..(யாருக்கும் பயன் தரா மலர்) என்கிறார் வள்ளுவர்.

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்

ஒருவனின் உண்மைத் தோற்றத்தைக் காட்டுவது அவன் வாய்ச் சொற்களே..மற்ற அனைத்தும் போலித் தோற்றங்கள்.ஆகவே..பிறரிடம் பேசும்போது..அதிலும் குறிப்பாக மேடையில் பேசும்போது மிக விழிப்புடன் இருக்க வேண்டும்..இல்லையேல்..நமக்கு வீழ்ச்சியே ஏற்படும்.

எதைக் காப்பாற்றாவிடினும் நாக்கை காப்பாற்ற வேண்டும்..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும்..நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவரது துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.


நல்ல கருத்துகள் சொற்பொழிவுக்கு அவசியம்.நாம் பேசுவது மக்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால்..அவை நல்ல கருத்துகள் கொண்டதாய் இருக்க வேண்டும்.பண்பற்ற..பயனில்லா சொற்களை மறந்தும் பேசக் கூடாது.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

பயனற்றதும்..பண்பற்றதுமான சொற்களை பலர்முன் சொல்வது மகிழ்ச்சியைக் குலைத்து..நன்மையை மாய்க்கும்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

பேச்சுக்கு கருத்துகளை எப்படி அமைப்பது.அதற்கு ஒரு வழி..

முதலில்..இன்று நாம் எதைப்பற்றி பேச வேண்டும்..என்னென்ன பேச வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.முதல் கேள்விக்கான விடை தலைப்பாகவும்..அடுத்தக் கேள்விக்கான பதில் கருத்தாகவும் அமையும்.

அதை ஒரு சிறு அட்டையில் குறித்துக் கொண்டு 1, 2 என இலக்கமிட்டு முறைப்படுத்தி மனனம் செய்துக் கொள்ள வேண்டும்.பின் மேடை ஏறியதும் மனப்பாடம் செய்ததை வரிசைப் படுத்தி பேச வேண்டும்.இது வெற்றிகரமான பேச்சாக அமையும்.ஆரம்ப பேச்சாளர்கள்..இரண்டு அல்லது மூன்று கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு..ஐந்தாறு நிமிடங்களுக்குள் பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் இது நமக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.

குறிப்புகள் எடுக்கையில் பேச வேண்டிய கருத்துகள் ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு சொற்களுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.அதுதான் மனதில் பதியும்.மனதில் பதிந்ததைப் பேசி முடித்ததும்..நம் குறிப்பை எடுத்து..எல்லாம் பேசி விட்டோமா என்று பார்க்கலாம்.ஏதேனும் விட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை.ஏனெனில் நம் பேச்சை கேட்டவர்களுக்கு அது தெரியப் போவதில்லை.
தொடக்கப் பேச்சாளர்கள்..எழுதியிருக்கும் குறிப்பை இடையிடையே பார்த்து பேசலாம்..ஆனால் இதுவே பழகிவிடக் கூடாது.

மேடைப் பேச்சில் எழுதிப் படிக்கிறார்களே பொறுப்பானவர்கள் என்று கேட்கலாம்..பொறுப்பான பதவியில் உள்ளவர்கள்..வேறு ஏதும் பேசிவிடக் கூடாதே என்பதற்காக கையாளும் முறை இது.ஆனால் பேச்சாளர்களுக்கு ஏற்றதல்ல இது.பார்த்து படிப்பது படிப்பதாகவே இருக்குமேயன்றி..அது பேச்சாக இராது.அதில் உணர்ச்சியும் இராது..

இப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்களாக ஆகவே முடியாது


(டிஸ்கி - இது சற்று நீண்ட பதிவு..அபி அப்பா மன்னிப்பாராக)


Tuesday, March 12, 2013

விஸ்வரூபம்..இரண்டாம் பாகம்..




விஸ்வரூபம் படம் பல சர்ச்சைகளில் சிக்கி, கமலுக்கு பலர் அறிவுரைகளைக் கூறி, தமிழக அரசுடன் பேசி, இஸ்லாமிய சகோதரர்களுக்காக ஒலிப்பதிவை மியூட் செய்து.., கடன்காரர்களின் அச்சுறுதல் என சொல்லின.ஒருவழியாக வெளிவந்து , இன்னமும் சில அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிரது.

இதனிடையே வசூல் 200 கோடிகளை தாண்டி விட்டது என்றும் கூறப்படுகிறது. கமலும், படத்தின் மூலம் லாபம்தான் என்றுள்ளார்.

இப்போது கமல், விஸ்வரூபத்தில் விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம் என்றுள்ளார்.

இரண்டாம் பாகத்தில், காதல், தாய்..மகன் பாசம் மற்றும் போர்க்களக் காட்சிகள் இருக்குமாம்.

இன்னமும் சில காட்சிகளைச் சேர்த்து, போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் முடிந்துவிட்டால், படம் வெளியிடத் தயாராம்.

இரண்டாம் பாகமாவது சுமுகமாக வர வேண்டுமானால்..கமல் பெருமாளை பழிப்பது நிறுத்தட்டும் என ஆன்மீகவாதிகளும்...

நம்மைப் பற்றி எது சொன்னாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தாலே போதும் என சம்பந்தப் பட்ட சமூகத்தினரும்..

இன்னொருமுறை வீட்டை அடகு வைக்க மாட்டார் என ஃபைனான்சியர்களும்..பேசிக்கொள்ளக் கூடும்.

சராசரி ரசிகனுக்கோ..பால் விலை அதுவரை ஏறாமல் இருந்தால் போதும் என்று மட்டுமே கவலை இருக்கக்கூடும்.



Monday, March 11, 2013

வாய் விட்டு சிரிங்க...


1.காதலன்-நான் நேர்மையானவன்..என் அலுவலகத்திலே நான் மட்டும் தான்..லஞ்சம் வாங்காதவன்
காதலி-..நல்லவேளை..இப்பவாது சொன்னீங்களே..பிழைக்கத் தெரியாத உங்களை..கல்யாணம் பண்ணிக்க இருந்தேனே

2.அந்த டாக்டர்..இப்பவெல்லாம் யாருக்கும் ஷாக் டிரீட்மெண்ட் கொடுக்கறதில்லை
ஏன்,..
இப்பவெல்லாம் தான்..எப்பவும் கரண்ட் கட் இருக்கே

3.அந்த ஓட்டல்ல மட்டும்..'ஆம்லெட்' ரொம்ப சீப்பா தர்றாங்களே..எப்படி?
ஓட்டல் முதலாளி..ஒரு அரசியல்வாதியாம்..அவர் கூட்டங்கள்லே பேசறப்ப..அவர் மேல வீசப்படற முட்டைகளை பொறுக்கி எடுத்து வந்துடுவாராம்

4.அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..
அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.

5.கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம்
மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு..
கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்

6.அரசியல்வாதி-(கூட்டத்தில் பேசும்போது)என்னை வெற்றிபெறச் செய்தால்..இந்த தொகுதியை மேம்படுத்துவேன்..தவறினால்...நீங்கள் என்னை தூக்கிலிடலாம்..
கூட்டத்தில் ஒருவன்- தலைவா...இந்தா கயிறு

Saturday, March 9, 2013

சொத்தைக் காக்கத் தெரியாதவரா கமல்...




தன் வீட்டை அடமானம் வைத்து..'விஸ்வருபம்' எடுத்ததாகவும், அது வெளிவாராவிடில் தன் வீடு போகும் அபாயம் உள்ளதாகவும்..பட வெளியீட்டுக்கு முன் கமல் கூறியிருந்தார்.

பிறகு...விஸ்வரூபம் வெளியாகி, ஓரளவு வசூலும் பெற்றுவிட்டதால்..வீட்டை மீட்டு விட்டதாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில், கமலை சந்தித்த ரஜினி, "வீட்டை பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துவிடுங்கள்..'என்றும், இனி, "வீட்டை வைத்து படமெடுக்கிறேன் ' என்று சொல்லாதீர்கள்..என்று சொன்னதாகவும், இணையத்தில் செய்திகள் வந்துள்ளன.

ஆரம்ப காலம் முதல்..பெரிய பெரிய தயாரிப்பாளர்கள்...தனது வயது தளர்ந்த காலத்தில்..இருந்ததையெல்லாம் இழந்து...வாழ்க்கையை ஓட்டவே துன்பப்பட்டதெல்லாம் நாம் அறிவோம்.

ரஜினி, அப்படி சொல்லியிருந்தது உண்மையானால்...
கமலும், தான் சம்பாதித்த பணத்தை, அந்தத் துறையிலேயே முதலீடு செய்பவர்.அவருக்கும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என ரஜினி விரும்பினாரோ என்னவோ தெரியவில்லை. அதனால் தான் இந்த அறிவுரை போலும்.

எது எப்படியோ, கமலின் அந்த பிரஸ் மீட்..அவரை சற்று தரம் தாழ்த்திவிட்டதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.கமல் அதை தவிர்த்திருக்கலாமோ..என்று தோன்றுகிறது.

Thursday, March 7, 2013

மங்கையராய் பிறந்திடவே.....

           



பெண் குழந்தை - சாதாரணமாக மகனைவிட, மகளுக்கே தந்தையிடம் அதிகம் பாசம் இருக்கும்.சற்றே வளர்ந்ததும்..நாம் தாயை இழந்திருப்போம்...மனைவிக்கு வயதாயிருக்கும்...அப்போது..'தாயினும் சாலப் பரிந்து:' நம் மீது பரிவு காட்டுபவள் மகளே..

மனைவி - மனைவி அமைவதெல்லாம்..இறைவன் கொடுத்த வரம்..என்பார்கள்.உண்மைதான்...இல்லாள் சரியாக அமைந்தால்..அவன் இல்லானாக ஆகவே மாட்டான்.மனைவி சரியாக அமைய கொடுப்பினை வேண்டும்.ஒருவன் மனைவியை நேசிக்கிறது...பெரிசல்ல..அதை வெளிப்படுத்தணும்.
 ஒருத்தனோட வாழ்க்கையில் முதல் பாதிலே துணையாக வருபவர் தாய்..பின் பாதியிலே வருபவர் மனைவி.தாய் மறைந்தும் தாரம் இருப்பதால் தான்..அந்த இழப்பை நம்மால் சமாளித்துக் கொள்ள முடிகிறது.ஆனா..தாரத்தையும் இழந்தபின் அவன் கிட்டத்தட்ட அனாதை ஆகிறான்.அப்படிப்பட்ட உறவு மனைவி.

தாய் - இவரைப் பற்றி என்னத்தை சொல்ல...இறை மறுப்பு கொள்கை உள்ளவனும்..காணும் கடவுள் இவள்தான்.தனக்கென வாழாது..தன் குழந்தைகளுக்காக, கணவனுக்காக வாழும் தியாக தீபம் இவள்.

சாதாரணமாக..ஒரு பெண் வாழ்நாளில் ..எல்லா நாட்களிலும்..யாரேனும் ஆணைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவர்..

ஆனால்..உண்மையில்..ஒரு ஆண்மகன் தான்...பெண்ணை சார்ந்திருக்கிறான்..இதுதான் யதார்த்தம்..

மகளிர் தினத்தில்..அனைத்து மகளிருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.


உன்னோடு வாழ்தல் அரிது..(ஒரு பக்கக் கட்டுரை)





பராசக்தி படத்தில்..எஸ்.எஸ்.ஆர்., பர்மாவிலிருந்து இந்தியா வந்து இறங்கியதுமே..கேட்கிற முதல் குரல்..'ஐயா..பசிக்குது..'ங்கற பிச்சைக்கார குரல் என்பார்.

எல்லாமே வயத்துக்குத்தான்..வயிறு..இதனால்தான் இனச்சண்டை..ஏற்றத்தாழ்வு, லஞ்சம்,சுரண்டல் எல்லாம்..இரண்டாம் உலகப் போர் முடிந்ததும்..நாட்டில் எங்கும் பஞ்சம்..உண்ண உணவில்லை..ரேஷன் முறை அறிமுகப் படுத்தப்பட்டு..கோதுமை வழங்கப்பட்டதாம்..அதைத்தான் அப்போது ஒரு படத்தின் பாடலில் கூறும் விதமாக...

ஒரு ஜான் வயிறே இல்லாட்டா..இந்த உலகினில் ஏது கலாட்டா..உணவுப் பஞ்சமே வராட்டா..உயிரை வாங்குமா பரோட்டா...என்று பாடியிருக்கிறார்கள்.

பசி வந்திட பத்தும் போம்..என்பது பழமொழி...கல்யாண வீடுகளில்..பந்திக்கு முந்திக் கொள்..என்பார்கள்..பிந்திக் கொண்டால்..முன்னால் முந்தியவர்கள் மீதம் வைத்திருந்தால் உண்டு.கலைகளில் சிறந்தவன் ராமன் என்பார்கள்..அதுபோல் சாப்பிடுவதில் எக்ஸ்பர்ட் சாப்பாட்டு ராமன் ஆவான்.

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

வயிற்றுப் பிரச்னைதான் எல்லா நோயின் மூலகாரணமாயும் அமைகிறது..நல்ல ஜீரண சக்தி வேண்டும்.நம் மார்புக்கும்..வயிற்றுக்கும் இடையே உள்ளது உதரவிதானம்..இது ஒரு தசை..இதன் கீழ் உணவுக்குழாயில் இருந்துதான் வயிறு ஆரம்பிக்கிறது.அதன் கீழ் மறுமுனை சிறுகுடலில் இணைகிறது.வயிற்றுக்குள் உணவு வந்ததுமே..அது இயங்க ஆரம்பித்து விடுகிறது.அதில் சுரக்கும் அமிலம் சத்துக்களை பிரித்தெடுத்து..நம் நம் உடலின் தேவையான உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

முறையான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களுக்கு நெஞ்சு எரிச்சல்,அஜீரணம்,வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் வந்து உணவுப்பாதையை பாதிக்கும்..உடலில் சுறு சுறுப்பு இருக்காது..

அளவுக்கு மீறிய உணவு,ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை,கண்ட நேரத்தில் உணவு உண்ணும் வழக்கம்..ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்றை மட்டும்தான் திருப்தி படுத்த முடியும் எனக் கூறுவார்கள்.ஒரு வேளைக்கு அதிகமான உணவை அது ஒரே சமயத்தில் எதிர்ப்பார்க்காது..அதனால் தான்..ஔவை ஒரு பாடலில் கூறினார்..

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும்
எந்நோய் அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது

இன்று நல்ல உணவு கிடைக்கிறது..நாளைக்கு கிடைக்குமோ..கிடைக்காதோ..அதற்கும் சேர்த்து உண்டுவிடலாம் என்றால் முடியாது.சரி இன்று உணவுகிடைக்கவில்லை..பொறுத்துக்கொள் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றால் பொறுத்துக்கொள்ளாது.எனது நிலை அறியாமல்..எனக்கு துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் என் வயிறே..உன்னுடன் வாழ்வது மிகவும் கடினம்..என்று பொருள் படும்.

Wednesday, March 6, 2013

+2 வும்...மடி நெருப்பும்


+2 வும்...மடி நெருப்பும்

இன்று 29-சி பேருந்தில் பயணித்தேன்..

இரு பெண்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.நான் அதை ஒட்டுக் கேட்கவில்லை.பஸ் ஒடும் சத்தத்தையும் மீறி உரக்கப் பேசியதால்...என் விருப்பமில்லாமல் அந்த உரையாடல் காதுகளில் விழுந்தது.

இனி அவர்கள் உரையாடல்..

பொண்ணு +2 பரீட்சை எழுதறா..

என்ன மார்க் வருமாம்..

900 வரும்னு சொல்றா..

பரவாயில்லை..நம்ம மாதிரி ஆட்களுக்கு அது அதிகம் தானே

நீ வேற..அவளை காலேஜ்ல சேர்க்க..உதவி கேட்டு ஒருத்தர் கிட்ட அழைத்துப் போனேன்..அவர் சொன்னார்..'960 மார்க் வாங்கினால்..நான் ஃபீஸ் கட்றேன்னு...

அதுக்கு உன் பொண்ணு என்ன சொல்றா..

அம்மா..பணக்கார வீட்டு பசங்களால நிறைய மார்க் வாங்க முடியும்..என்னால 900 ஏ கஷ்டம்ங்கறா..

நீ என்ன சொன்னே..

அப்படி சொல்லாதே..போன வருஷம்..நம்ம அடுத்தத் தெருவில செருப்பு தைக்கிறாரே..அவர் பொண்ணு 1100 வாங்கலன்னு.அதுக்கு சொல்றா..'போம்மா ..முதல்ல என் பரீட்சையை..பயம் இல்லாம எழுதவிடுன்னு..


இதனால் நாம் அறிய வருவது என்னன்னா..
(1)மக்களிடையே படிப்பு அறிவு வளரணும்னு எண்ணம் ஏற்பட்டிருக்கு..ஆனா அதுக்கான வசதி இன்னும் வரல்லே.

(2) மாணவர்களின் திறமையை..வாங்கும் மதிப்பெண்கள் மட்டுமே தீர்மானிக்கின்றன

3) +2 பரீட்சை எழுதும் மாணவர்களின் வீடுகளில்...மனக் குழப்பமே உள்ளது..

கடைசியாக ஒரு ஜோக்..

டாக்டர் _ உங்க அடி வயத்துல எப்படி இவ்வளவு தீக்காயம் ஏற்பட்டது.
 நோயாளி- என் பையன் +2 எழுதறான்..நல்லா படைக்கணும்னு மடில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருந்தேன்

Tuesday, March 5, 2013

வாய் விட்டு சிரிங்க..




1) இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியா இருக்கிற நீங்க..அவங்களுக்கு ஏதேனும் சொல்ல ஆசைப்படுகிறீர்களா?
அவங்க விலாசங்களைத் தெரிவிச்சா..அவங்க கனவில நான் வர்ற நேரத்துக்கான என் கால்ஷீட் பணத்தை வாங்க சௌகரியா இருக்கும்

2)தலைவர் பேசும்போது.நடுவே..நடுவே..மீட்டர்..மீட்டர்னு சொல்றாரே ஏன்.
அவர் எதையும் அளந்து தான் பேசுவாராம்.

3)ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு கவர்னர்...இதே போல ஒரு வாக்கியம் சொல்..
ஆட்டுக்கு தாடி போல..ஆட்டோவிற்கு மீட்டர்


4) அந்த டாக்டர் முன்னால துணிக்கடை வச்சிருந்தார்னு எப்படி சொல்ற?
ஆடித் தள்ளுபடி..அறிவிச்சிருக்கார்..ஒவ்வொரு பேஷண்டும்..இன்னொரு பேஷண்டைக் கூட்டிக்கிட்டு வந்தா..ஒருத்தருக்கு வைத்தியம் இலவசமாம்

5)நம்ம பையன் நாலணாக் காசை விழுங்கிட்டான்..
சரி..சரி..டாக்டர் கிட்ட ஐந்து ரூபா காயினை விழுங்கிட்டான்னு சொல்லு..நாலணா ன்னா நம்மைப் பத்தி கேவலமா நினைப்பார்

6) சம்பந்தமில்லாமல் பெயரை வைச்சிருக்காங்க
எந்த படத்துக்கு சொல்றீங்க?
படத்துக்கு இல்ல....இவ்வளவு ஒல்லி ஊசிக்கு குண்டூசின்னு பெயர் வைச்சாங்களே அவங்களைச் சொல்றேன்

Monday, March 4, 2013

விவாகரத்துகள் ஏன் (ஒரு பக்கக்கட்டுரை)




 சாமான்யர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி காத்திருக்கிறார்கள் தெரியுமா?இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர் பார்த்து நடத்திய திருமணங்கள்.

விவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும் இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்.அந்த எதிர்ப்பார்ப்பில் சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படுகிறது.நாளடைவில் அந்த ஏமாற்றமே ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

சரியான புரிதலில்தான் வாழ்க்கை இன்பமயமாகிறது..அடுத்து விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்.இது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என எண்ண வேண்டாம்..ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம் கூடாது.நம்மை நம்பி வந்தவள் அவள்..அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது...அவள் உறவையெல்லாம் விட்டு..நம்முடன் ஏற்பட்ட உறவை பிரதானமாக்கி நம்முடன் வருகிறாள்..என்பதை எல்லாம் உணர்ந்து..அவளை நடத்த வேண்டும்..அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..பணம் மட்டுமே வாழ்வில் பிரதானமில்லை..பணம் சம்பாதிக்க வேண்டும்தான்..ஆனால் வாழ்வில் மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போதுதான் இல்லறம் நல்லறமாகிறது.

அதற்கு..நம் நேரத்தை குடும்பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க வேண்டும்..மனைவி,மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனைக் கேட்க வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் ..எப்போது பார்த்தாலும் பணம்..பணம் ..என அலைபவர்..தனது இருபது வயது மகளுக்கு திருமணம் செய்து வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்றார்..நான் அவரிடம்'அவளை நன்கு படிக்க வையுங்கள்.திருமணத்திற்கு அவசரம் இல்லை' என்றேன்..நண்பரோ பிடிவாதமாக இருந்தார்.அவர் மனைவியிடம் நான் பேசினேன்..அவர்'எனக்கும் என் மகள் படிக்க வேண்டும்..நல்ல வேலையில் சேர வேண்டும்..என்றெல்லாம் ஆசை இருக்கிறது..ஆனால் அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக்கூடாது.அவர் நினைப்பதுதான் எங்க குடும்பத்தில் நடக்கும்' என்றார்.அந்த அம்மாளின் வாயிலிருந்து சாதாரணமாக அந்த வார்த்தைகள் வந்தாலும்..அதில் தோய்ந்திருந்த வேதனையை உணர்ந்தேன்.

ஆணின் துணையின்றி பெண்ணும்..பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது அல்ல.ஆனால் அது இயற்கைக்கு முரணானது.ஒன்று மட்டும் போதும் என்பதல்ல..இயற்கை தருவது எல்லாமே இரண்டு..இரண்டுதான்.

இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,பிறப்பு-இறப்பு,சிரிப்பு-அழுகை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண்.இந்த இரண்டின் இணைப்பிலேயே ஒன்று உருவாகமுடியும்.கணவன் ,மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு மட்டுமல்ல..உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்து விடும்.

தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும்.

அமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே!

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

(நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

(நற்பண்பு பெற்றவனைக் கணவனாக பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்)

Sunday, March 3, 2013

படித்ததில் பகிர எண்ணியவை...



1. அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயா..உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..

'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.

2.ராமாயணத்தில்..ராமனின் இளவல் லட்சுமணன் என நமக்குத் தெரியும்.ஆனால்..மகாபாரதத்திலேயும்..ஒரு லட்சுமணன் வருவது..நம்மில் பலருக்குத் தெரியாது.துரியோதனின் மகன் பெயர் லட்சுமணன்.பாரதப் போரில் 13ம் நாள்..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிடம் போரிட்டு மாண்டான் அவன்.

3.the sufferings of the past and the fears of the future shouldnot be allowed to disturb the pleasure of the present.

4.பொன்னை எறிந்தாலும்...பொடிக்கீரையை எறியாதே! பொன்னால் அழகு சேர்க்க முடியும்.ஆனால்..பொடிக்கீரையால் ஆரோக்கியத்தையே அடைய முடியும்.அதிலும் பொன்னாங்கனி கீரை மிகவும் நல்லது.

5.ஆண்களுக்கு முடி கொட்ட..சிகரெட் பிடிப்பதும்..ஒரு காரணமாம்.அமெரிக்க நிபுணர்கள் சொல்கின்றனர்.சிகரெட் பிடிப்பதால், தலையில் முடி வளர காரணமான மூலக்கூறுகளை உருவாக்கும் சுரப்பி
இயங்குவதற்கான திறனை குறைக்கிறதாம்.இது 40 வயது வரை தெரியாது.40க்குப் பின் வழுக்கை நிச்சயம்.

6.விலை மகளிரைப் பற்றி..நா.காமராசனின் ஒரு புதுக்கவிதை
நாங்கள்
நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக!



Friday, March 1, 2013

வாய் விட்டு சிரிங்க..




1.மன்னா..நீங்க சொன்னபடி நம்ப எதிரி நாட்டு மன்னனின் படை ரகசியத்தை தெரிஞ்சுக் கிட்டு வந்துட்டேன்
சொல்லுங்கள் மந்திரியாரே
அவர்கள் தங்கியுள்ள பகுதியில் கொசு தொந்தரவு தாங்காமல் சொறிஞ்சு..சொறிஞ்சுதான் படை வந்திருக்காம்.

2.தலைவருக்கு எப்பவும் தங்க ராசி உண்டு..
எப்படிச் சொல்றே
முதல் மனைவி பெயர் 'தங்கம்' இரண்டாம் மனைவி பெயர்'பவுனு'மூணாவது மனைவி 'சொர்ணம்"

3.ஜன்னல் வழியே எலி புகுந்துடுத்து
அப்புறம் என்ன பண்ணினே
டைலர் கிட்ட ஜாக்கெட்டை கொடுத்து ஜன்னலை மூடச் சொல்லிட்டேன்.

4.அந்த கவர்ச்சி நடிகையை கல்யாணம் பண்ணினப் பின்னாடி தெரிஞ்சுது
ஏன் முன்னாடி தெரியலையா?
முன்னாடிதான் பல படங்கள்ல பார்த்திருக்கேனே..

5.பிரசவத்துக்கு பின் உன் வயிற்றிலே இருந்த சுருக்கங்கள் எங்கே?
என் கணவர் தண்ணீர் தெளிச்சு இஸ்திரி போட்டுட்டார்.

6.(நடுவானில்) பிளேன் நகராமல் திடீரென நின்னுப்போச்சு..யாராவது பத்து பேர் இறங்கி தள்ளுங்க.


Tuesday, February 26, 2013

வாய் விட்டு சிரிங்க.





1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.

2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.

3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.

4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..

5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..

6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?


Monday, February 25, 2013

வெற்றியை அடையும் வழி..(ஒரு பக்கக் கட்டுரை)




எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.

எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும்.

ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள்.

கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்..

என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள்.

ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும்.

எடுத்தக் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது.

எந்த வழியைப் பற்றியேனும் வெல்ல வேண்டும் என எண்ணினால்..அப்படிப்பட்ட வெற்றியைக் காணும் உடன் இருப்போர் மெல்ல மனம் மாறி நம்மை விட்டு விலகும் அபாயம் உள்ளது.இப்படிப்பட்ட வெற்றி உதறித் தள்ள வேண்டும்.

வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இருக்க வேண்டும்.சிறந்த வழியின் மூலம் கிடைக்கும் பலன் சிறிதானாலும்..அது ஞாலத்தின் மாணப் பெரிதாகும்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை

(புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்)

பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.

வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.அதனால் தான் வள்ளுவனும்..

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார்.


Sunday, February 24, 2013

மெய் சிலிர்க்கவைக்கும் ஆஜீத் பாடல்



சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத்தின்..இப்பாடல் இன்று கேட்டேன்..மறுமுறை..

மெய் சிலிர்க்க வைத்தது..

இது போன்ற ஞானம் அனைவருக்கும் வருவதில்லை..

இயற்கை..அளித்த வரம்..

வாழ்க..வளர்க...இதைத் தவிர ஏதும் சொல்லத் தெரியவில்லை.

Saturday, February 23, 2013

நான் படித்த அருமையான வரிகள்




1.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

2.உங்க கோபம்..எல்லோரையும் ..உங்க கிட்டே இருந்து அந்நியப்படுத்தி விடும்.

3.எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.

4.தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.

5.வளைஞ்ச மூங்கில் பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில் பாடையாகும்.

6.நமக்கு தேவையில்லாததை வாங்க ஆரம்பிச்சா..நம்ம கிட்டே இருக்கிற தேவையானதை விற்க வேண்டி இருக்கும்

7.வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..செலவுக்கு ஏத்த வரவுன்னு அலையக் கூடாது.

8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டு பிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிடுங்கள்.

9.லட்சியத்தை மறந்துட்டு..மனுஷ உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

10.எல்லாம் உனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்...ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.

இவற்றை எழுதியவர்களுக்கு நன்றி...


Friday, February 22, 2013

சிரிப்போம்..சிரிக்க வைப்போம்..(ஒரு பக்கக் குறிப்புகள்)




வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

(பதிவு பிடித்திருந்தால்..ஆதரவு வாக்களிக்கவும்)

Thursday, February 21, 2013

வாய் விட்டு சிரிங்க...




தயாரிப்பாளர்-பொங்கல் படங்களிலேயே உங்க படம் தான் பார்க்கிறார் போல இருக்கு
நடிகர்-அப்படியா
தயாரிப்பாளர்-ஆமாம்..மற்ற தியேட்டர்களில் எல்லாம் மக்கள் கூட்டம்தான் பார்க்க முடியுது.உங்க பட தியேட்டர்ல தான் யாருமில்லை

2)தலைவர் சுடுகாட்டில என்ன பண்றார்..
அவர் ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்கச் சொன்னாராம் டாகடர்..அதைத்தேடிக்கிட்டு இருக்கார் பிடிக்க

3)தலைவர் போலீஸ் நிலயத்திற்கு எதற்குப் போனார்..
அவரது துணைவியின் கொடுமை தாங்கலையாம்

4)தயாரிப்பாளர்-ஒவ்வொருவர் தன் படம் ஓட போட்டியெல்லாம் வைக்கறாங்க..அது போல நாமும் ஒரு போட்டி வைக்கலாம்
இயக்குநர்-என்ன போட்டி வைக்கலாம்
தயாரிப்பாளர்-நம்ம படத்தின் கதை என்னன்னு கண்டுபிடிக்கறவங்களுக்கு பரிசு கொடுக்கலாம்

5)துறவி 1- நீங்க துறவியானதற்கு காரணம்
துறவி 2-.........நடிகரைப் போட்டு படமெடுத்தது தான் காரணம்..ஆமாம்..நீங்க..
துறவி1- என்னை உங்களுக்குத் தெரியல..அந்த படத்தை இயக்கியவன் நான்

6)நிருபர்-மக்களுக்கு உங்கள் பொங்கல் செய்தி..
தலைவர்-என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய் போவார்கள்..கெட்டு அலைவார்கள்..நாட்டை விட்டு ஓடுவார்கள் என்ற என் பொங்கல் வாழ்த்தை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

7)அந்த மருத்துவர்தான் தலைவரின் கரத்தை பலப்படுத்தியவர் என்கிறார்களே
ஆமாம்..தலைவரின் கை எலும்பு முறிந்த போது அவர்தான் சிகிச்சை செய்தாராம்.


Wednesday, February 20, 2013

தேவையற்றதை பேசாதீர்கள்....(.ஒரு பக்க செய்திகள்)




அவன் வேலைசெய்யும் நிறுவனம் பெரியது.ஆனாலும் நான் இல்லாவிடில் அந்த நிறுவனமே இயங்காது..என்பான்.
ஏதேனும் விவரம் அவனைக் கேட்டால்..அதற்கு பதில் சொல்வதற்கு..தேவையில்லாமல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு..நாம் கேட்ட விவரத்தை சரியாக சொல்ல மாட்டான்.
தான் அதி புத்திசாலி..மற்றவர்கள் முட்டாள்கள் என்பது அவன் எண்ணம்.
ஒருமுறை அவன் வேலைசெய்யும் நிறுவனத்தின் அதிபர்..ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து..நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கான காசோலையை வாங்கிவரச் சொல்லி அவனை அனுப்பினார்.அவனும்..பயனில்லாமல்..தேவையில்லா இடங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு..அந்த வாடிக்கையாளர் இருப்பிடம் சேர்ந்த போது..அவர் நீண்ட நேரம் இவனுக்காகக் காத்திருந்துவிட்டு வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
நிறுவன அதிபர் இவனை நீ எப்போது அங்குப் போனாய்? என்றார்.
இவனும் நேரத்தைச் சொன்னான்.
நான் உன்னைக் காலையிலேயே போகச் சொன்னேனே..என்றவரிடம்..இவன் ஊர் சுத்திய உண்மையைக் கூற முடியுமா? அதனால்..
"அது சார்..காலைலேயே கிளம்பினேனா..அண்ணா சாலையில் ஒரு அரசியல் கட்சி ஊர்வலம்..டிராஃபிக்ல மாட்டிக் கிட்டேன்.அங்கிருந்துத் தப்பி ராயப்பேட்டை போனேனா அங்கு ஒரு ஆக்ஸிடெண்ட்..டிராஃபிக் திருப்பி விட்டாங்க..மந்தவெளிக்கு ராஜா அண்ணாமலைபுரம் வழியா வந்து சேர்ந்தேன்.." இப்படி சொல்லிக் கோண்டே போனான்..
எது எப்படியோ..நிறுவனத்திற்கு வர வேண்டிய பணம் வரவில்லை.அந்தக் கோபத்தில் இருந்த அதிகாரி..இவனது பயனற்ற சொற்களை கெட்க விரும்பவில்லை.அவனை ஒரு உபயோகமற்றவன் என்று முடிவெடுத்தார்.
அவன் அவரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான்.

சொன்னக் காரியத்தை முடிக்காமல் பயனற்றவற்றைகளைப் பற்றி ஒருவன் பேசிக் கொண்டிருப்பானாயின் அது அவனையே பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

தவிர்த்து..பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவனை எல்லோரும் இகழ்வர்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்


Tuesday, February 19, 2013

பொன்விழா கண்ட கமல்..

                               


தமிழ் திரை உலகில்..நடிப்பு ஒன்றையே முழு மூச்சாய் எண்னிய நடிகர் திலகத்திற்கு அடுத்து கமல்ஹாசன் ஒருவரைத்தான் சொல்லமுடியும்.களத்தூர் கண்ணம்மா படத்தில் 50 வருஷங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமலஹாசன்..சிறுவன் கமலுக்கு ஏ.வி.எம்., சந்தர்ப்பம் கொடுத்தது என்றால்..அவரை நடன இயக்குநர் ஆக்கியது டேன்ஸ் மாஸ்டர் தங்கப்பன் அவர்கள்.அவர் வாலிப வயதை அடைந்ததும்..பாலசந்தர் அவர்களால் அரங்கேற்றம் படத்தில் சாதாரணமான ஒரு பாத்திரம் தரப்பட்டது.பின்..கமலின் திறமையை உணர்ந்த பாலசந்தர் தொடர்ந்து அவருக்கு..அவர்கள், மன்மத லீலை,அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள் ,மூன்று முடிச்சு என பல படங்களில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்து அவர் திறமையை வெளிக் கொணர்ந்தார்.பின்..கமலுக்கு எறுமுகம் தான்.

16 வயதினிலே சப்பாணி,கல்யாணராமன்,எல்லாம் இன்ப மயம்,கைதியின் டயரி,சிகப்பு ரோஜாக்கள்,வறுமையின் நிறம் சிவப்பு,சகலகலாவல்லவன்,மூன்றாம் பிறை, ராஜ பார்வை,இளமை ஊஞ்சலாடுகிறது,அவள் அப்படித்தான்,நாயகன்,மீண்டும் கோகிலா,வாழ்வே மாயம் என பல படங்களில் தன் திறமையைக் காட்டினார்.மறக்கமுடியா படங்கள் அவை.

ஆனாலும்..கமல் என்னும் நடிகரை நான் முழுமையாக ரசித்த படங்கள்..

சலங்கைஒலி - தனது நாட்டிய திறமையயும் இப்படத்தில் காட்டினார்.கிளைமாக்ஸ் காட்சியில்..கிணற்றின் மேல் நடனமாடும்..இவர் ..எங்கே கிணற்றில் விழுந்து விடுவாரோ என மனம் பதைபதைக்க வைத்தார்.

மகாநதி-கமலின் மாஸ்டர் ஃபீஸ் படம் இது..இன்று நினைத்தாலும் கல்கத்தாக் காட்சி கண்முன்னேயே நிற்கிறது.

அபூர்வ சகோதரர்கள் அப்புவை மறக்கமுடியுமா?

அன்பே சிவம்-இப்படத்தில் கமலின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது..வார்த்தைகளே இல்லை..விபத்தில்..முகமே மாற இழுத்து..இழுத்து பேசும் போது நமக்கு வாய் வலிக்கும்.கமல் நீ ஒரு பிறவி நடிகன் என்பதைச் சொன்ன படம் இது.

தேவர்மகன்- சிவாஜி பெரியதேவராக நடிக்க..கமல் கதாநாயகன்..குறை சொல்லமுடியா நடிப்பு..சொந்த குரலில் கமல் பாடிய..இஞ்சி இடுப்பழகி...கமலை சகலகலாவல்லுநராக ஆக்கியது.

விருமாண்டி-இப்படத்தை வெளியிடுவதற்குள்..எத்தனை இடையூறுகள்..எல்லாம் தாண்டி விருமாண்டியாக கண் முன்னே நின்றார்.

ஒரு படத்தின் நாயகன் பாதி படத்திற்கு மேல் பெண் வேடம் தாங்கி அதை வெற்றி படமாகவும் ஆக்கினார் எனில் அது கமல் மட்டுமே..படம் அவ்வை சண்முகி

இந்தியனையும்..இந்திய தாத்தாவையும் மறக்கமுடியுமா?

படம் முழுதும் வசனமே இன்றி..ஊமைப்படங்களாக முதன் முதல் திரைப்படங்கள் உருவானது என்பதை நாம் அறிவோம்..ஆனால்..கலைமேதை கமல் அவர்கள்..படம் முழுதும் வசனமே இல்லாது..ஆனால்..படத்தின் பெயரை பேசும்படம் எனக் கொடுத்து..வெற்றியடைய வைத்தார்.

மற்றும் நாயகன்,புன்னகை மன்னன்,ஆளவ்ந்தான்,சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் கமலின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்

கமல்..பல பரீட்சார்த்த படங்களை எடுத்து..கையை கடித்துக் கொண்டவர்.உதாரணத்திற்கு ஹே ராம்...குணா,நம்மவர்கள்.. சொல்லலாம்.

வசூல்ராஜா..மருத்துவர்களின் போராட்டங்களுக்குப் பின் வெளியானது.இப்படம் ஹிந்தியில் வந்த போது..கண்டனம் சொல்லாத மருத்துவர்கள்..தமிழில் வரும் போது வெகுண்டு எழுந்தது..கமலின் துரதிருஷ்டமே.

ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் சேர்ந்து ..மூன்று முடிச்சு,அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது போன்று 17 படங்களில் நடித்துள்ளார்.

கமல் தன்னால் நகைச்சுவை படங்களிலும் பிரகாசிக்க முடியும்..என பல படங்களில் நிரூபித்திருந்தாலும்..சமீப காலங்களில் வந்த..மைக்கேல் மதன காமராஜன்,பம்மல் கே.சம்பந்தம்,பஞ்சதந்திரம்,மும்பை எக்ஸ்பிரஸ்,தெனாலி,சிங்காரவேலன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

கமலின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல் தசாவதாரம்..10 வேடங்களில் நடித்தார்.ஃபிளச்சரும்,பல்ராம் நாயுடுவும் இன்றும் நம் கண்முன்னே நிற்கிறார்கள்.

கமல் படங்களையும்..அவர் நடிப்பையும் பற்றி எழுதிக் கொண்டிருந்தால்...அதற்கு முடிவே இருக்க முடியாது..

அப்படிப்பட்ட உயர்ந்த மாபெரும் கலைஞன் மலையாளம்,ஹிந்தி படங்களிலும் திறமையைக் காட்டியுள்ளார்.

இன்று அக்கலைஞன் நடிக்க வந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன.

நேற்று சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் 1952ல் நடிக்க ஆரம்பித்து 1999 படையப்பாவரை 47 ஆண்டுகள் நடித்தார்.

இன்று கமல் என்ற கலைஞன் 1959ல் சிறுவனாக நடிக்க ஆரம்பித்து இன்று பொன்விழா கொண்டாடுகிறார்.

இரு மாபெரும் கலைஞனும் நம் காலத்தில் வாழ்ந்ததற்கு நாம் பெருமைப் படுவோம்.

கமல் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..

இந்தியாவில் கலைஞர்கள் வாழும் போது சரியாக போற்றப்படுவதில்லை..என்ற கூற்றை பொய்யாக்கி..கமலின் திறமையை அரசு மதித்து..அவருக்கு உரிய மரியாதையை தரட்டும்..

வாழ்க கமல்..வளர்க அவர் கலைப்பணி..

(இப்பதிவிடும்போது நினைவிற்கு வந்த படங்களே பட்டியலிடப்பட்டுள்ளன..)

2009ல் இல் இட்ட பதிவு..

(மீள் பதிவு)

Monday, February 18, 2013

தமிழுக்கு அமுதென்று பெயர் -12



பாரதியைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர்..பாரதியின் பால் கொண்ட ..பக்தியால்..பெயர் மாறி பாரதிதாசனாக ஆன கனகசுப்பு ரத்தினம்..பாரதியை 'பைந்தமிழ்ப் பாகன்,செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை,கவிக்குயில், என்றெல்லாம் பாடிப் புகழ்ந்துள்ளார்.

பின்னர் பல ஆண்டுகள் கழிந்து...புதுக்கவிதையினால் வைரமுத்து அந்த மீசைக் கவிஞனைப் பாடியுள்ளார்.

ஒரு சிறிய வீரியம் மிக்க விதை நிலத்தில் முளைக்கையில் வெற்றி கொள்கிறது.ஒரு சிறிய விதைக்கான ஆற்றல் இப்படி இயலும் எனில் பாரதியை ஈன்ற அன்னையின் கருப்பை நெருப்பைச் சுமப்பதும், ஒரு தீக்குச்சி எரிமலையைச் சுட்டெரிப்பதும் இயலும்.இதையே வைரமுத்து...

அது எப்படி?
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த் கருப்பை?
அது கூடச் சாத்தியம்தான்
ஆனால்- இது எப்படி
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?

என்கிறார்...

தவிர்த்து பாரதியின் எளிமை, இனிமையை.. தமிழன்னை விரும்பினாள்..ஆகவேதான் அவனின் 'கிழிசல் கோட்டில் தஞ்சம் புகுந்தாளாம் ..

உன் பேனா
தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல் கோட்டு
கவிதா தேவிக்குப்
பீதாம்பர மானது

என்கிறார்.

(கவியரசு வைரமுத்துவின் 'நிலத்தை ஜெயித்த விதை' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ள வைர வரிகள் மேலே குறிப்பிட்டுள்ளவை)