Wednesday, January 14, 2009

பொங்கலும்..அம்மாவும்...நாங்களும்..

அம்மா...

அவளைப்பற்றி..எண்ணினாலே ..மனம் இனிக்கிறது..கண்களில் கொப்பளிக்கிறது கண்ணீர்.

ஒவ்வொருவரும் மண்ணில் ஜனிக்க காரணமாய் இருப்பது தாய்க்குலம். ஆண்டவன்..தனிப்பட்டு ஒவ்வொருவரையும் கவனிக்க முடியாது என்பதால்..அம்மாக்களை படைத்தான்..என்பது சரியென்றே சொல்லலாம்.

என் அம்மா....

அவளைப் பற்றி..எதைச் சொல்வது..எதை விடுப்பது.

எங்கள் மீது பாச மழை பொழிந்தவள்.என் தமிழ் ஆர்வத்திற்கு உரமிட்டவள். அவள் வேலைக்குப் போனதில்லை.ஆனால் முழு நேரமும்..தன் குழந்தைகள் மீது பாசமழை பொழிவதே அவள் வேலையாய் இருந்தது.குடும்ப நிர்வாகம் முழுதும் அவள் கைகளில்.கல்கியின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவள்..ஜெயகாந்தனின் எழுத்துக்களுக்கு அர்த்தம் சொன்னவள்.புதுமைப்பித்தன்,தி.ஜானகிராமன்.லா.சா.ரா.,சுந்தர ராமசாமி ஆகியவர்கள் அவளால் தான் எனக்குத் தெரியும்.

தனக்கு இல்லை என்றாலும்...இல்லை என வருவோர்க்கு வாரி வழங்கியவள்.அவளுக்கு கடவுள் பக்தி அதிகம்.,அதனால் தானோ என்னவோ..மண்ணுலக வாழ்வு அவளுக்கு அதிக நாட்கள் இல்லை.

1979ம் ஆண்டு.,வீட்டில் டி.வி., வாங்கிய நேரம்.,போகி முடிந்து..அடுத்த நாள் பொங்கலுக்கு தூர்தர்ஷனில் சிறப்புத் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றவள்...இரவு 12 மணி அளவில் என்னை எழுப்பினாள்.என் தோள்களில் சாய்ந்து..'உடம்பு ஏதோ செய்கிறது' என்றாள்.என் தம்பி மருத்துவரை அழைத்துவர சென்றான்.(அப்பொழுது வீட்டில் தொலை பேசி வசதி கிடையாது).ஆனால் அவர் வருவதற்குமுன்..என் தோள்களில் சாய்ந்த படியே உயிரை விட்டாள்.அவள் மறைந்த போது அவள் வயது 52 தான்.அவள் டி.வி.யில் பார்க்க நினைத்தபடம் 'பல்லாண்டு வாழ்க.'

ஆகவே..ஒவ்வொரு பொங்கலும்..என்னால்..முழு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவதில்லை.

ஆண்டுகள் பல கடந்தும்..இப் பதிவை எழுதும்போது..கண்களில் கண்ணீர்த்திரை..எழுத்துக்களை மறைக்கிறது.

(அம்மாவை..அவள்..என்று எழுதக் காரணம்..ஆத்திகர்கள் அம்மனை..அவள் என்று சொல்வதில்லையா?..அதுபோலத்தான்)

7 comments:

நசரேயன் said...

உண்மைதான் ஐயா, தாய் பாசத்திற்கு இணை இல்லை இந்த உலகில்

சின்னப் பையன் said...

//தனக்கு இல்லை என்றாலும்...இல்லை என வருவோர்க்கு வாரி வழங்கியவள்.
அவளுக்கு கடவுள் பக்தி அதிகம்.,அதனால் தானோ என்னவோ..மண்ணுலக வாழ்வு அவளுக்கு அதிக நாட்கள் இல்லை//

இப்படிப்பட்ட நல்லவர்களைத்தான் கடவுள் உடனே கூப்பிட்டுக் கொள்கிறான் என்று சொல்வார்கள்.

:-((((

குடுகுடுப்பை said...

வருத்தத்தில் பங்கெடுக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி குடுகுடுப்பை

வருண் said...

***1979ம் ஆண்டு.,வீட்டில் டி.வி., வாங்கிய நேரம்.,போகி முடிந்து..அடுத்த நாள் பொங்கலுக்கு தூர்தர்ஷனில் சிறப்புத் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றவள்...இரவு 12 மணி அளவில் என்னை எழுப்பினாள்.என் தோள்களில் சாய்ந்து..'உடம்பு ஏதோ செய்கிறது' என்றாள்.என் தம்பி மருத்துவரை அழைத்துவர சென்றான்.(அப்பொழுது வீட்டில் தொலை பேசி வசதி கிடையாது).ஆனால் அவர் வருவதற்குமுன்..என் தோள்களில் சாய்ந்த படியே உயிரை விட்டாள்.அவள் மறைந்த போது அவள் வயது 52 தான்.அவள் டி.வி.யில் பார்க்க நினைத்தபடம் 'பல்லாண்டு வாழ்க.'

ஆகவே..ஒவ்வொரு பொங்கலும்..என்னால்..முழு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவதில்லை.***

பொங்கல் என்றாலே அம்மவின் மறைவுதான் உங்களுக்கு வரும். அதுவும் உங்கள் தோல்களில் சாய்ந்துகொண்டு...

உங்கள் துயரம் புரிகிறது.

Losing our mother.. Everybody has to go through this one day.

The "lucky ones" are one who dies before their mom passes away!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வருண்