Monday, May 26, 2008

நாடகம் பொழுதுபோக்கா..கலையா -சொற்போர் - பகுதி3

நடிகர்களிடையே பங்குபெறுபவர்கள் கலைஞர்கள்.நாடகக்கலை சிறப்புற இவர்கள் முழு ஒத்துழைப்பும் தேவை.
நடிகர்களிடையே ஒழுங்கும்..கட்டுப்பாடும் இருக்க வேண்டும்.நாடகத்தில் நடிகன் நவரசங்களையும்
காட்ட வேண்டும்.அதாவது சுபாவத்தில் சாதுவாக இருப்பவன்..நடிக்கும் போது..காதல்,வீரம்,சிரிப்பு,கோபம்,
வியப்பு,இழிப்பு,சோகம்,பயம்,சாந்தம் ..இப்படி நவரசங்களையும் காட்ட வேண்டும்.அந்தக் கலை அவனுக்குத்
தெரிந்திருக்க வேண்டும்.அதனால்தான் நாடகத்தை கலை என்கிறோம்.நாடகங்களின் தந்தை என போற்றப்பட்ட
பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் 'நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி' என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.
எங்கேனும் அப்புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள்.
பெர்னாட்ஷா...எப்போது உலகப் புகழ் பெற்றார் தெரியுமா?
நாடகங்கள் எழுதி செல்வாக்கு பெற்ற பின்னர்தான்..சிறுகதை,நாவல் எழுதுவதைவிட நாடகம் எழுதுவது கடினம்.
நாடகம் மக்களுக்கு அதிகப் பயனைத் தரக்கூடியது என்பது உண்மையான கூற்று.இவ்வளவு பெருமையான
நாடகக்கலையை வெறும் வேடிக்கை நிகழ்ச்சியாகக் கருதக்கூடாது.நல்ல நாடக நிகழ்ச்சிகள் உங்கள் உள்ளத்தை
உயர்த்திச் சென்ற கால சிந்தனைகளையும்,நிகழ்காலத்து உண்மைகளையும்,வருங்காலத்தின் வளமைகளையும்
எடுத்துக் காட்டுகின்றன.ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடகம்..உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அந்த நாடகத்தினுள்
ஒரு நாடகம் வரும்.தன் தந்தையைக் கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க எண்ணுகிறான் ஹாம்லட்.
அதற்கு நாடகம் தான் நல்ல வழி என்று எண்ணி ..உணர்ச்சி மிக்க நடிகர்களைக் கொண்டு தன் தந்தையின்
கொலை நிகழ்ச்சியை நாடகமாக்கி நடிக்க வேண்டும்.தன் சிற்றப்பன் கிளாடியசும்,தன் அன்னையும் அதை
பார்க்கவேண்டும்.அவர்கள் மன உணர்ச்சி எப்படி மாறுகிறது எனப் பார்க்க வேண்டும் என விரும்புகிறான்.
தானே, கதை எழுதி..நடிகர்களை நடிக்கச் சொல்கிறான்.நாடகம் பார்க்கும் சிற்றப்பன் முகம் மாற..
அவனே கொலையாளி என காண்கிறான் ஹாம்லட்.
நாடகத்தின் மூலம் ஒரு கொலையாளியையும் கண்டுபிடிக்கலாம் என்கிறார் ஷேக்ஸ்பியர்.
நம் நாடு சுதந்திரம் அடைய..நாடகங்கள் ஆற்றிய பணியை யாரும் மறுக்கவோ,மறக்கவோ முடியாது.
பேசும்படம் வந்த போது..நாடக மேடை இறந்துவிடும் என்றார்கள்.இன்றும் நாடகங்கள் அழிந்து வருகிறது
என்கிறார்கள்.ஆனால்..அது அழியாது..
நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டால்..அதை யாராலும் அழிக்கமுடியாது.
இனி..நடிப்புக்கலைப் பற்றிப் பார்ப்போம்...
(தொடரும்)

No comments: