Wednesday, May 28, 2008

நாடகம் பொழுதுபோக்கா..கலையா - சொற்போர் -5

எந்த ஒரு நடிகரையும்,எந்த சமயத்திலும் காப்பி அடிக்கக்கூடாது.தனக்கென தனி பாணி வேண்டும்.காப்பியடிக்கும் கலை மட்டும் வேண்டாம்.
நாடகக்கலையை பொறுத்தமட்டில்..புதுமைக் கருத்து அல்லது மறுமலர்ச்சிக் கருத்து என்பது ரசிகர்களின் கை தட்டலின் வாயிலாக வெளிப்பட்டால் போதாது..பார்ப்பவர் உள்ளத்தில் அது பாய்ந்து நம் பண்புக்கேற்ற வகையில் அது செயலாக வெளிப்பட வேண்டும்.
கலை என்பது நன்மைக்காக வளர வேண்டும்.மனிதரின் அறிவை நல்ல வழியிலும் திருப்பலாம்.கெட்ட வழியிலும் திருப்பலாம்.நல்லதைவிட தீயதைத்தான் மனித மனம் விரைவில் ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது.ஆகவே பொழுது போக்கு என்ற பெயரில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் கூட மக்களின் நலன் கருதியே வரவேண்டும்.
நாடக கலாசாலைப்போல நல்ல கலாசாலை நீடுலகில் உண்டோ?என்றார் கவிமணி.ஆம்..நாடகத்தை நல்ல கலாசாலையாக அந்த கவிஞன் நினைத்தான்.
இக்கருத்தின்படி நாட்டில் நாடக நற்கலாசாலைகள் அமைக்க வேண்டும்..நடிப்புக்கலையை போதிக்க வேண்டும்.
அதன் மூலம் மக்களின் கண்களையும்,செவிகளையும் கவர்ந்து,அவர்களுடைய வாழ்வை வளமுடையதாக்க
வேண்டும்.தூய்மைப்படுத்த வேண்டும்.
புராண நாடகம்,இதிகாச நாடகம்,வரலாற்று நாடகம்,கற்பனை நாடகம்,பக்தி நாடகம்,இலட்சிய நாடகம்,சமுதாய நாடகம்,சமுதாய சீர்திருத்த நாடகம்,தேசிய நாடகம்,நகைச்சுவை நாடகம் என நாடகங்கள் நடத்தப்பட வேண்டும்.
நடிப்புக்கலைக்கு உரிய தனிச்சிறப்பு என்ன தெரியுமா?ஒரு ஓவியன்..தன் கலையை செய்து முடித்ததும்..அவன்
வேறாகவும்..அவன் வரைந்த ஓவியம் வேறாகவும் அமைந்து விடுகிறது.அதுபோன்றதுதான் சிற்பக்கலையும்.ஆனால்
நடிகன் நிலை முற்றிலும் மாறுபட்டது.நடிகன் வேறாகவும்..அவன் படைப்பு வேறாகவும் இருக்க முடியாது.நடிகன் படைக்கும் பாத்திரம் அவனுக்குள்ளேயே அடங்கிக்கிடக்கிறது.நடிகனும் அவனே..பாத்திரமும் அவனே..
இந்த சிறப்பை கலைஞர்கள் அனைவரும் உணர வேண்டும்.இது நடிப்புக் கலைக்கே உரிய தனி சிறப்பாகும்.
நாடகத்தில் சொல்லப்படும் கதை அழகோடு,கலையழகோடு..மனித குலத்தின் நல்வாழ்வுக்கும் வழிகோல வேண்டும்.



கலை வழியே-நாடகக் கலை வழியே
அன்பு வழி - அறவழி வளர வேண்டும் நம் நாட்டில்
நன்றி..வணக்கம்

(சென்னை முத்ரா சபாவில் நடைபெற்ற சொற்போரில் ..நாடகம் ஒரு கலைதான் என்று நான் ஆற்றிய
உரை இப்பகுதியுடன் நிறைவுப் பெறுகிறது)

No comments: